Oviya paavai 2

ஓவியம் 02

இடம்: கட்டுநாயக்க விமான நிலையம், இலங்கை.

நேரம்: அதிகாலை நான்கு மணி.

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸின் 506 இலக்க விமானம் சர்ரென்ற பேரிரைச்சலோடு ரன்வேயில் தரையிறங்கியது.

உள்ளே தனக்கான இருக்கையில் ரஞ்சன் பரபரப்பாக உட்கார்ந்திருந்தான். தன் கனவு தேவதையைப் பார்க்கப் போகும் மகிழ்ச்சி அவன் உடலை உள்ளும் புறமும் ஆட்டி வைத்தது.

இருக்கையில் அமர முடியாமல் ஏதோவொரு உணர்வு அவனை உந்தித் தள்ள மிகவும் பிரயாசைப் பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டான்.

விமான தேவதை இறுதியாக அவனுக்கு வணக்கம் வைக்க அதை ஒரு தலையசைப்போடு ஏற்றுக்கொண்டு வேக வேகமாக வெளியே வந்தான்.

காலை நேரக் குளிர் காற்று முகத்தில் ஜில்லென்று மோதியது. வானம் செக்கச் செவேலெனச் சிவந்து போயிருந்தது.

இருள் காதலன் பிரியப் போகும் வேதனையில் பனி சிந்தி அழுது புலம்பிய வானமகள் சோகத்தில் தன்னை முழுவதும் சிவப்பாக மாற்றிக் கொண்டாள்.

சட்டென்று தனது காமெராவை எடுத்த ரஞ்சன் அந்த அதிகாலைப் பொழுதின் அழகை அதற்குள் பத்திரப் படுத்திக் கொண்டான்.

முதன்முறையாக இப்போதுதான் இலங்கை வருகிறான் இளையவன். அவன் பெற்றோர்களின் பூர்வீகம் இலங்கைதான். ஆனாலும் அவர்கள் சிறுவயதிலேயே இங்கிலாந்து போய்விட்டதால் இங்கேயான தொடர்பு முழுவதுமாக விட்டுப் போனது.

சொந்த பந்தங்கள் என்று சொல்லிக் கொள்ள இங்கே யாருமேயில்லை. அதனால் இங்கே வந்து போவதுமில்லை.

“இப்ப எதுக்கு நீ இவ்வளவு அவசரமா ஸ்ரீலங்கா கிளம்புற ரஞ்சன்?” நேற்று அம்மா கோபப் பட்டதை மகன் கண்டு கொள்ளவேயில்லை.

“ஷாரதா! நீ கொஞ்சம் அமைதியா இரு.” சந்திர மூர்த்திதான் மனைவியை அடக்கினார்.

“நீங்க எதுக்கு இப்போ அவனுக்கு வரிஞ்சு கட்டிக்கிட்டு சப்போர்ட் பண்ணுறீங்க?”

“கொஞ்சம் பொறுமையா இரும்மா.”

“என்னத்தைப் பொறுமையா இருக்கிறது? என்னமோ ஓவியம், ஓவியம்னு ரெண்டு பேரும் மாரடிச்சீங்க, என்னமோப் பண்ணுங்கன்னு அதை விட்டா… இப்போ இவன் ஓவியத்துல வரைஞ்ச பொண்ணைப் பார்க்கப் போறேன்னு கிளம்புறான்?!”

“கொஞ்சம் மூச்சு விட்டுட்டுப் பேசு.”

“என்ன? அப்பாவும் மகனும் என்னைக் கேலி பண்ணுறீங்களா?”

“உன்னைக் கேலி பண்ணிட்டு இந்த வீட்டுல நாங்க வாழ முடியுமா ஷாரதா?”

“ப்ளீஸ்… நீங்க கொஞ்சம் வாயை மூடிட்டுச் சும்மா இருக்கீங்களா?” மனைவியின் கோபம் இன்னும் கொஞ்சம் ஏறவும் சந்திர மூர்த்தி அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

நேற்று முழுவதும் ஃபங்ஷன் முடிந்து வந்ததிலிருந்து சதா அந்தப் பெண்ணின் நேர்காணலையே லேப்டாப்பில் பார்த்துக் கொண்டிருந்த மகனை சந்திர மூர்த்தி கவனிக்கத் தவறவில்லை. ஒரு கட்டத்தில்,

“அப்பா… எனக்கு அந்தப் பொண்ணைப் பார்க்கணும் ப்பா.” என்று கண்ணில் மின்னல் தெறிக்கச் சொன்ன மகனை ஒரு கலைஞனாக, ஆண்மகனாக சந்திர மூர்த்தியால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் ஷாரதா அதற்கு உடன்படவில்லை.

“அந்தப் பொண்ணு ஸ்ரீலங்கா பொண்ணுதான்னு உனக்கெப்பிடித் தெரியும் ரஞ்சிம்மா? தமிழ்ல பேசினாங்கிறதுக்காக நீ இலங்கைப் பொண்ணுன்னு சொல்லுவியா?”

“இல்லைம்மா, அந்தப் பொண்ணு பின்னாடி சின்னதா ஒரு போர்ட் இருந்துது, அதுல ஸ்ரீலங்கா ன்னு எழுதி இருந்துது.”

“இதெல்லாம் தெரிஞ்சா அவங்க வீட்டாளுங்க சும்மா இருப்பாங்களா? ஒருவேளை கல்யாணம் ஆன பொண்ணா இருந்தா?!” ஷாரதாவின் கேள்வியில் நியாயம் இருந்தது. இப்போது ரஞ்சன் அப்பாவைத் திரும்பிப் பார்த்தான்.

“அம்மா கேட்கிறது நியாயமான கேள்விதானே ரஞ்சன்? நீ இதுக்குப் பதில் சொல்லித்தானே ஆகணும்?”

“அந்த போர்ட்ல யூனிவர்சிட்டி ன்னு போட்டிருந்துது, படிக்கிற பொண்ணும்மா.”

“படிக்கிற பொண்ணுன்னாக் கல்யாணம் பண்ணி இருக்கக் கூடாதா?”

“கேள்வி கேட்ட ஒருத்தர் ‘மிஸ்’ அப்பிடின்னு கூப்பிட்டாங்க… பெயர் கூட சுமித்ரா ன்னு சொன்னாங்க.”

“எப்போ?! இதெல்லாம் எங்கக் காதுல விழலையே?!”

“நீங்க சரியாக் கவனிக்கலை.” மகன் அத்தோடு பேச்சை முடித்துக் கொண்டான். அன்று இரவே அவசர அவசரமாக டிக்கெட் போட்டு இதோ இலங்கை வந்துவிட்டான்.

“ரஞ்சி… கவனம் ப்பா, எதுன்னாலும் அப்பாக்கு ஃபோன் பண்ணு, எந்த உண்மையையும் ஃபேஸ் பண்ண ரெடியா இரு.” அப்பாவின் பேச்சில் புன்னகைத்தான் மகன்.

“அவ எனக்குன்னு பொறந்தவப்பா.” ரஞ்சன் அவ்வளவுதான் பேசினான். அதன்பிறகு அப்பாவும் மகனும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

சந்திர மூர்த்தி தனது நண்பர் ஒருவரின் உறவினரை இலங்கையில் மகனுக்கு உதவியாக ஏற்பாடு பண்ணி இருந்தார். அந்த மனிதரே ஏர்போர்ட்டுக்கு வந்திருந்தார்.

“ஹாய்! ஐம் லலித்.” நாற்பதுகளில் இருந்த அந்த மனிதர் ஸ்நேகமான புன்முறுவலோடு தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார்.

நேராக ஏற்கனவே புக் பண்ணியிருந்த ஹோட்டலுக்கு போன ரஞ்சன் எந்தத் தாமதமும் இன்றி குளியலை முடித்துக் கொண்டு வந்துவிட்டான். எங்கேயும் எதற்காகவும் அவன் சிறிதும் தாமதிக்கவில்லை.

“கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாமே ரஞ்சன்!”

“இல்லை லலித், யூனிவர்சிட்டி போகலாம், ஃப்ளைட்ல நல்லாத் தூங்கினேன், அது போதும் எனக்கு.”

“ஓகே.”

கொழும்பு பல்கலைக்கழக வளாகத்தை அடைந்த போது உச்சி வெயில் சூரியன் மிகவும் அகோரமாக இருந்தது. ஆனால் அது எதையும் பொருட்படுத்தும் நிலைமையில் ரஞ்சன் இப்போது இல்லை.

அட்மினிஸ்ட்ரேஷன் பிரிவிற்குச் சென்று இவர்கள் தகவல் சொன்னபோது மாணவர்கள் பற்றிய எந்த விவரமும் கொடுக்க முடியாது என்று மறுத்து விட்டார்கள்.

எதற்காக ரஞ்சன் அங்கே வந்திருக்கிறான் என்பதையும் அவர்களுக்கு எந்தத் தப்பான நோக்கமும் இல்லை என்பதையும் எவ்வளவு விளக்கிச் சொல்லியும் தோல்வியேக் கிட்டியது.

ஆனாலும் ரஞ்சன் சோர்ந்து போகவில்லை. சுமித்ராவின் வீடியோவை தனது ஃபோனில் காட்டி அங்கு நடமாடிய ஒன்றிரண்டு மாணவர்களிடம் கேட்டான்.

பலருக்கு நேற்று நடந்தது தெரிந்திருக்கவில்லை. ஆனால் ஒரேயொரு பையன் மட்டும்,

“ஃபைனல் இயர் பொண்ணுன்னு நினைக்கிறேன் சார், அவ்வளவுதான் தெரியும்.” என்றான்.

“எந்த ஊர்ன்னு தெரியுமா தம்பி?”

“இல்லை சார்.”

இவர்கள் அலைந்து திரிவதைப் பார்த்துப் பரிதாபப்பட்டு ஒரு ஊழியர் யாருக்கும் தெரியாமல் இவர்களிடம் வந்தார். வந்தவர் லலித்திடம் போய் எதுவோ சிங்களத்தில் பேசினார். ரஞ்சனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்ன சொல்றாங்க?” என்றான் அவர்கள் பேச்சு முடிந்ததும்.

“நேத்து நடந்த விஷயம் அவருக்குத் தெரிஞ்சிருக்கும் போல, ஹாஸ்டல்ல இருந்து படிக்கிற பொண்ணாம், நேத்தே சொந்தக்காரங்க வந்து கூட்டிக்கிட்டுப் போயிட்டாங்களாம்.”

“ஓ… பிரச்சினை ஏதாவது ஆகிடுச்சாமா?”

“அப்பிடித்தான் நினைக்கிறாரு, நீங்க உண்மையா எந்த நோக்கத்துக்காக வந்திருக்கீங்கன்னு கேட்டாரு, சந்தேகம் வர்றது நியாயம்தானே ரஞ்சன்?”

“கண்டிப்பா, நீங்க என்ன சொன்னீங்க?”

“எந்தத் தப்பான நோக்கமும் இல்லைங்க, அந்தப் பொண்ணு மேல எந்தத் தப்புமில்லை, அதை அவங்க வீட்டாளுங்களுக்குச் சொல்லணும், படிக்கிற பொண்ணு வேற, படிப்புக் கெட்டுப் போயிடக் கூடாது, எந்தப் பிரச்சினையும் எங்களால வராதுன்னு சொல்லி என்னோட அட்ரெஸ், ஃபோன் நம்பரெல்லாம் குடுத்தேன்.”

“ஓ…”

“அநேகமா ஹெல்ப் பண்ணுவாருன்னு நினைக்கிறேன்.”

இவர்களைக் கொஞ்ச நேரம் காக்க வைத்துவிட்டு அந்த மனிதர் கையில் சிறிய காகிதத் துண்டோடு வந்தார். அக்கம் பக்கம் பார்த்தபடி வந்தவர் லலித்தின் கையில் அந்தக் காகிதத்தை யாரும் அறியாமல் திணித்தார்.

“ஏதாவது பிரச்சினை வந்தா என்னோட வேலை போயிடும், ரொம்ப அலையுறீங்களேன்னுதான் உதவி பண்ணுறேன், ப்ளீஸ்… எந்தத் தப்பும் நடக்காமப் பார்த்துக்கோங்க.” என்றார் தணிந்த குரலில். ரஞ்சன் அவர் கையைப் பற்றிக் கொண்டான்.

“ரொம்ப தான்க்ஸ்.” நெகிழ்ந்து போய் ரஞ்சன் கூற, லலித் அந்த மனிதரின் கையில் நான்கைந்து நோட்டுகளைத் திணித்தார்.

“நோ நோ, நீங்கத் தப்பாப் புரிஞ்சுக்கிட்டீங்க, நான் இதுக்காக இந்த உதவியைப் பண்ணலை.” வந்த பிரதி உபகாரத்தை மறுத்துவிட்டு அந்த மனிதர் போய்விட்டார்.

லலித்தின் கையிலிருந்த பேப்பரை வாங்கிப் பார்த்தான் ரஞ்சன். சுமித்ராவின் முகவரி அதில் எழுதி இருந்தது.

“இந்த ஊர் எங்க இருக்கு லலித்?”

“கண்டிக்கு பக்கத்துல ரஞ்சன், நைஸ் ப்ளேஸ், ஒரு த்ரீ அவர்ஸ்ல போயிடலாம்.”

“ஓ…” அவளைப் பார்க்க இன்னும் மூன்று மணித்தியாலங்கள் காத்திருக்க வேண்டுமா?!

அந்த ஊர் றத்தோட்ட என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

‘எங்கேயிருந்த என்னை எங்கே வர வைத்திருக்கிறாள் இந்த ஏந்திழை?!’ மனதுக்குள் சிலிர்த்துக் கொண்டான் ரஞ்சன்.

“இன்னைக்கேக் கிளம்பலாமா லலித்?”

“நோ ப்ராப்ளம், நான் ரெண்டு நாள் ஃப்ரீதான்.”

“ஓ… தான்க் யூ… எனக்கு அதே ஊர்ல ஒரு வீடு வேணும் லலித்.”

“ஷ்யூர் ரஞ்சன், ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க, சொன்னா சட்டுன்னு ஹெல்ப் பண்ணுவாங்க, ஸ்ரீ லங்கன் கரன்சி வச்சிருக்கீங்களா, இல்லை எடுக்கணுமா?”

“ஏர்போர்ட்ல எடுத்துட்டேன்.”

“அப்போ ஓகே.”

மதிய உணவை முடித்துக்கொண்டு இரண்டு பேரும் பயணத்தைத் தொடங்கி விட்டார்கள். கொஞ்சம் களைப்பாக இருந்ததால் ரஞ்சன் லேசாகக் கண்ணயர்ந்தான். ஆனால் சிறிது நேரத்திலேயே லலித் இவனை உலுக்கி எழுப்பினான்.

“சொல்லுங்க லலித்? கொஞ்சம் தூங்கிட்டேன்.”

“கண்டியை நெருங்கிறோம் ரஞ்சன், இனி உங்க ஓவியக் கண்ணுக்கு நிறைய நிறைய அழகழகான விஷயங்கள் தென்படும், அதுதான் எழுப்பினேன்.”

“ஓ…” நிமிர்ந்து உட்கார்ந்த ரஞ்சன் தனது காமெராவையும் தயார் படுத்திக் கொண்டான். நேரம் மாலை ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது. இருள் பரவ ஆரம்பித்த அந்த நேரத்தில் கண்டி மாநகரம் விளக்குகளால் ஒளிபெற்று அழகுற காட்சி அளித்தது.

மெல்லிய குளிர் உடலைத் தீண்டிய போது அன்றைக்கு முழுவதும் தன்னை வாட்டிய வெப்பம் விடைபெறுவது போல உணர்ந்தான் இளையவன்.

‘உன்னை நான் நெருங்கும் போதே இதமான குளிர் என்னைத் தீண்டுகிறது பெண்ணே!’ காரின் கண்ணாடியைத் திறந்து அவளைச் சார்ந்த ஈரக்காற்றைச் சுவாசித்தான் ரஞ்சன்.

வழிநெடுகிலும் மஞ்சள் குமிழ் விளக்குகள் ஒளியை உமிழ வீதியோரக் கடைகள் அந்த அந்தி வேளையிலும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தன.

ரஞ்சன் தனது காமெராவிற்கு ஓய்வே கொடுக்காமல் முழுதாக வேலை வாங்கிக் கொண்டிருந்தான். கார் சட்டென்று நிற்கவும் திரும்பிப் பார்த்தான்.

“சூடா ஒரு டீ குடிக்கலாம் ரஞ்சன், ட்ரைவிங் ல பார்க்கிற இடமில்லை இது, ரசிச்சுப் பாருங்க, சுமித்ராவை யாரும் தூக்கிட்டுப் போயிட மாட்டாங்க.” கேலியாகச் சொன்ன லலித்தை பார்த்துச் சிரித்துவிட்டு ரஞ்சனும் காரை விட்டு இறங்கிக் கொண்டான்.

வீதியைத் தாண்டி அதல பாதாளமும் அதை அடுத்தாற் போல மலைகளும் தெரிந்தன. ஆனால் அவை எதையும் பொருட்படுத்தாமல் மக்கள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு ரோட்டோர கடைகளில் பொருட்களை வாங்கிய படி வாழ்க்கையை ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

கனவில் அவன் வாழ்ந்து முடித்த அவள் இப்போது இங்கே அவனோடு இருந்தால் இன்பமாக இருக்கும் என்று நினைத்தான் ரஞ்சன். ஒரு நொடி அவனை வசை பாடிய அந்த இதழ்கள் அவனுக்கு ஞாபகம் வந்தன.

கண்களை இறுக மூடி அந்தக் குங்கும இதழ்களை மனக்கண்ணில் கொண்டு வந்தான் ரஞ்சன். சுற்றுப்புறத்தின் அழகையும் தாண்டி அவளது மோகன எழிலுரு அவன் சிந்தையை மயக்கியது. அதற்கு மேலும் அங்கு தாமதிக்க அவன் விரும்பவில்லை.

“லலித் கிளம்பலாமா?” என்றான் பொறுமையற்று.

“ஓகே… ரஞ்சனுக்கு பொறுமை ரொம்பக் குறைவோ?!” கேலி பேசினாலும் அதற்கு மேல் பயணத்தைத் தாமதிக்கவில்லை லலித்.

அந்த ஊரை அடைந்தபோது இரவு எட்டு மணி. சுற்றுப் புற அழகையெல்லாம் இருள் மறைத்திருக்க பக்கத்தில் இருந்த கெஸ்ட் ஹவுஸில் அன்றைய இரவை இருவரும் கழித்தார்கள்.

லலித்திற்கு வேண்டப்பட்டவர்கள் அருகாமையில் இருந்த போதும் அவர்களுக்குத் தொல்லைக் கொடுக்க ரஞ்சன் பிரியப்படவில்லை.

“கெஸ்ட் ஹவுஸ் போதும் லலித், வீடு பார்க்கிறதுக்கு அவங்க ஹெல்ப் பண்ணட்டும், அது போதும்.” என்று முடித்துவிட்டான்.

இரவு உணவை முடித்த பிற்பாடு ரஞ்சனால் அவ்வளவு சீக்கிரத்தில் உறங்கிவிட முடியவில்லை. இவ்வளவு அருகாமையில் அவளை வைத்துக் கொண்டு அவனால் தூங்க இயலவில்லை.

ஆனால் இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்திருக்கும் நண்பனையும் அவன் தொல்லை செய்ய விரும்பவில்லை. குறுக்கும் நெடுக்குமாக நடைபயின்ற படி இருந்தான்.

“ரஞ்சன்!” இது லலித்.

“சொல்லுங்க லலித்.”

“இன்னும் தூங்கலையா நீங்க?”

“எங்க ஊர்ல இப்பதான் ஈவ்னிங், அவ்வளவு சீக்கிரத்துல தூக்கம் வராதுன்னு நினைக்கிறேன்.”

“அது மட்டுந்தான் காரணமா?” அந்தக் கேலியில் ரஞ்சனின் முகம் சிவந்து போனது.

“ஒரு ட்ரைவ் போய்ட்டு வரலாமா?” லலித் கேட்டதுதான் தாமதம், ரஞ்சனின் கண்கள் பளிச்சிட்டன.

“முடியுமா உங்களால? இவ்வளவு தூரம் ட்ரைவ் பண்ணி இருக்கீங்க?!”

“லைவ்வா ஒரு லவ் மூவி பார்க்கிற மாதிரி இருக்கு, ஹா… ஹா… கிளம்புங்க கிளம்புங்க.” அதற்கு மேலும் தாமதிக்க ரஞ்சன் ஒன்றும் முட்டாள் அல்லவே!

முகவரியை எடுத்துக்கொண்டு இருவரும் கிளம்பி விட்டார்கள். அவர்கள் தங்கி இருந்த கெஸ்ட் ஹவுஸுக்கு அத்தனைத் தொலைவில் இருக்கவில்லை அவர்கள் தேடிய முகவரி.

பிரதான வீதியிலேயே இருந்தது அந்த வீடு. பாரம்பரிய வீடு போலும். பழைய பாணியிலேயே இன்னும் பேணப்பட்டு இருந்தது.

வீட்டுக்கு முன்னால் நிறையவே இடம் இருந்தது. அரைவட்ட வடிவில் ஏதோ செய்குளம் போலத் தெரிந்தது.‌ வீட்டுக்குள் இன்னும் நடமாட்டம் தெரியவே ரஞ்சன் கூர்ந்து பார்த்தான்.

“வீடு ரொம்பப் பெருசா இருக்கு, கொஞ்சம் பெரிய ஃபேமிலியோ ரஞ்சன்?”

“தெரியலையே லலித், வீட்டுக்குள்ள‌ நடமாட்டம் தெரியுதில்லை?”

“ஆமா…” லலித் சொல்லிக் கொண்டிருக்கும் போதே காரிலிருந்து இறங்கினான் ரஞ்சன். வீட்டுக்குள் இருந்து யாரோ வெளியே வருவது போலத் தெரிந்தது.

அந்தப் பெண்ணைப் பற்றி விசாரிக்கும் போது இன்றைக்கு ரஞ்சன் காட்டிய ஃபோட்டோவை லலித்தும் பார்த்திருந்தான். இப்போது வீட்டை விட்டு வெளியே வருவது அந்தப் பெண்தான் என்பது லலித்துக்கு உறுதி.

ரஞ்சன் ஒரு கணம் அசையாமல் அப்படியே நின்றான். வீட்டை விட்டு விட்டு வெளியே வருவது இத்தனைக் காலமும் அவனது கனவை அலங்கரித்த தேவதைதான்.

சாதாரண நைட்டியில் இயல்பாக இருந்தாள். பெருமட்டிற்கு வீட்டின் விளக்குகள் அணைக்கப் பட்டிருந்ததால் முழுதாக அவளை மற்றவர்களால் பார்க்க முடியாது. ஆனால் ரஞ்சன் அவளை அணு அணுவாக ரசித்தான்.

“சுமீ…” யாரோ உள்ளிருந்து அழைத்தார்கள்.

“ஆங்… இங்கதான் இருக்கேன் அண்ணீ…” நேற்று முழுதும் அவனைக் கொன்று புதைத்த குரல் இப்போது சங்கீதம் பாடியது. ரஞ்சன் ஒரு நொடி கண்களை மூடித் திறந்தான்.

“பனியில எதுக்கும்மா நிற்கிறே?” அக்கறையோடு மீண்டும் உள்ளிருந்து அதே குரல்.

“கொஞ்ச நேரம் அண்ணீ… ப்ளீஸ்…” அவள் குரல் இப்போது கொஞ்சியது. ரஞ்சன் சிரித்துக் கொண்டான்.

“இல்லையில்லை, உடம்புக்கு முடியாமப் போனா உங்கண்ணன் கிட்டத் திட்டு வாங்க என்னால முடியாது, உள்ளே வா.” அதிகாரமான அழைப்பு, அன்போடு அக்கறைக் கலந்து வந்தது.

“ம்…” விருப்பமே இல்லாமல் முகத்தைச் சுருக்கிக் கொண்டு அந்த ராங்கிக்காரி உள்ளே போவது தெரிந்தது. நடையில் கூட அவள் மனதின் எண்ணத்தை வெளிப்படுத்திய படி போய்க் கொண்டிருந்தாள்.

“ரஞ்சன்… போகலாமா? தரிசனம் போதுமா?” திடுக்கிட்டு நிஜத்திற்கு வந்த அந்த ஓவியன் சிரித்தபடி காரில் ஏறிக் கொண்டான்.

“அப்போ… பொண்ணுக்கு அண்ணா ஒருத்தன் இருக்கான்…” லலித் லேசாக இழுக்க ரஞ்சன் சிரித்தான்.

“வில்லன் ஏற்கனவே ரெடின்னு சொல்றீங்களா லலித்?” இருவரும் சிரித்தபடி கெஸ்ட் ஹவுஸ் வந்து சேர்ந்தார்கள். தந்தைக்கு அப்போதே ஃபோனை போட்டு அன்றைக்கு நடந்தது அனைத்தையும் சொல்லி முடித்தான் ரஞ்சன்.

மனது நிறைந்தாற் போல ஒரு உணர்வு தோன்ற கட்டிலில் விழுந்தவன் அப்படியே தூங்கிப் போனான். என்றைக்கும் வரும் கனவு அன்றைக்கு வரவில்லை. கனவில் சதா வருபவள் இன்று வரவில்லை. நிஜத்தில் வந்ததேப் போதுமென்று நினைத்திருப்பாள் போலும்!

விடிந்தும் விடியாததுமான அந்தக் காலைப்பொழுதில் ரஞ்சன் விழித்துக் கொண்டான். லலித் நல்ல உறக்கத்தில் இருக்கவே அவனைத் தொந்தரவு செய்யாமல் தனது காலைக் கடன்களை முடித்த இளையவன் வெளியே வந்தான்.

சுற்றுப்புறம் பார்க்க இப்போது அத்தனை ரம்மியமாக இருந்தது. அந்த அழகில் சிறிது நேரம் சிந்தையைப் பறி கொடுத்தவன் அவசர அவசரமாக அந்த வீட்டை நோக்கி நடந்தான்.

உள்ளம் முழுவதும் குடியிருந்தவளின் உறைவிடத்துக்குக் கால்கள் இயல்பாக வழிகாட்டின அவனுக்கு. ஆர்ப்பரிக்கும் மனதோடு நடந்து கொண்டிருந்தான் ரஞ்சன்.

அவள் வீட்டை அடைவதற்கு முன்பாக ஒரு ரயில்நிலையம் இருந்தது. அதைத் தாண்டித்தான் அவள் வீட்டுக்குப் போக வேண்டும். ரயில் தண்டவாளங்களைத் தாண்டிக் கடந்தவன் கால்கள் சட்டென்று வேலை நிறுத்தம் செய்தன.

‘அதோ அவள்!’ உள்ளம் கூக்குரல் போட ரஞ்சனின் கண்கள் நிலைக்குத்தி நின்றன. புகையிரத நிலையத்தில் கண்கள் அலைப்புற வண்டிக்காகக் காத்திருந்தாள் அந்த அப்சரஸ்.

காத்திருக்கும் பொறுமைக் கூட அவளுக்கு இல்லைப் போலும். அங்கும் இங்கும் நடை பயின்று கொண்டிருந்தாள். தூரத்தே தண்டவாளக் குயிலின் ஓசை கேட்கவும் ரஞ்சன் சட்டென்று முடிவெடுத்து அவளை நோக்கிப் போனான்.

ரயிலில் மயில் ஏறிக் கொள்ள கூடவே இவனும் ஏறிக் கொண்டான். அத்தனைக் கூட்டம் இருக்கவில்லை. ஒவ்வொரு பெட்டியிலும் இரண்டொரு மனிதர்களே அமர்ந்திருந்தார்கள். ரஞ்சன் மகிழ்ந்து போனான்.

அவள் அமர்ந்திருந்த இருக்கைக்கு எதிரே ஒரு வயதான மாது அமர்ந்திருந்தார். ரஞ்சன் எதுவும் பேசாமல் அவளைப் பார்ப்பதற்குத் தோதாக ஓரிடத்தில் அமர்ந்து கொண்டான்.

வண்டி சிறிது தூரம் கடந்திருக்கும். இயல்பாக இவன் புறம் திரும்பிய அவள் பார்வைச் சட்டென்று நின்றது. பார்வையைக் கூர்மையாக்கி இவனை உற்றுப் பார்த்தது பெண்.

ஓவியத்தைப் பார்த்த பெண் அதை வரைந்தவனையும் தேடிப் பிடித்துப் பார்த்திருக்கும் என்று ரஞ்சன் எதிர்பார்த்திருக்கவில்லை. முகத்தை ஜன்னலுக்காகத் திருப்பிக் கொண்டான்.

“ஏய்!” அவளின் ஒற்றை வார்த்தை இவனை உலுக்கிப் போட்டது. எதிரே அமர்ந்திருந்த அந்த வயதான மாதும் இப்போது திடுக்கிட்டு நிமிர்ந்தார். ரஞ்சன் சட்டென்று எழுந்து அப்பால் நகர்ந்தான்.

“எக்ஸ்கியூஸ் மீ!” அவள் அவனை விடுவதாக இல்லை. ரஞ்சன் ரயிலின் யாருமற்ற கதவருகே போய் நின்று கொண்டான்.

“ஹலோ!” கொஞ்சம் காட்டமாக இவனை அழைத்த பெண் இவனைத் தேடி கதவருகே வந்தது. ரஞ்சன் எதுவும் பேசவில்லை.

“நான் கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன், நீங்க போய்கிட்டே இருந்தா என்ன அர்த்தம்?!” இப்போது அவள் குரலில் கோபம் இருந்தது. எந்த பயமும் இன்றி அவனுக்கு நேர் எதிரே வந்து நின்றது பெண். ரஞ்சன் தன்னை வெகுவாகக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

“ஏங்க, நீங்கெல்லாம் என்ன மாதிரி மனுஷங்க? உங்களுக்கெல்லாம் அக்கா, தங்கை இல்லையா?” அந்த உதடுகள் நேற்றைக்குப் போல் இன்றைக்கும் தன் இஷ்டத்துக்குப் பேச ஆரம்பித்திருந்தன.

“நடந்தது என்னன்னு உங்களுக்குத் தெரியாது.” ரஞ்சன் மிக நிதானமாகத் தன் நிலையை விளக்க எண்ணினான்.

“இதைச் சொல்ல உங்களுக்கு வெட்கமா இல்லை? ஒரு பொண்ணோட உங்க உருவத்தையும் ஒன்னா இப்பிடி வரைஞ்சு வெச்சிருக்கீங்களே, இதெல்லாம் ஒரு பொழைப்பா?”

“இங்கப்பாரு பொண்ணே!” ரஞ்சன் ஆரம்பிக்கவில்லை, அவளுக்கு அத்தனைக் கோபம் வந்தது.

“என்ன?! எதுக்கு இப்போ எகிறிகிட்டு வர்றீங்க? பண்ணுறதே மானங்கெட்ட பொழைப்பு… சொல்லவே வெட்கமா இருக்கு… ச்சீ…” முகத்தில் அத்தனை வெறுப்பைச் சுமந்து கொண்டு அவள் சொன்ன ‘ச்சீ’ என்ற ஒற்றை வார்த்தை ரஞ்சனை சீண்டியது.

“பொண்ணுங்களோட பொறக்கலையோ?! அப்பிடிப் பொறந்திருந்தா இந்தப் புத்தி வந்திருக்குமா?! ஏன்… அக்கா தங்கையோட மூஞ்சை இப்பிடி வரைய வேண்டியதுதானே?!” அவள் தன்னால் முடிந்தவரை அவனைத் திட்டித் தீர்த்தாள்.

 

ரஞ்சனுக்கு இப்போது அவள் வார்த்தைகள் காதில் சிக்கவில்லை. மாறாக, வார்த்தைகளை உதித்த அந்தப் பழரச இதழ்கள் விழிகளில் சிக்கின.

தான் கனவில் சுவைத்த சுகம்! இப்போது கண்ணெதிரே, ஓரடி தூரத்தில் அவனை வைது கொண்டு இருந்தது. அவ்வளவுதான், அந்த வாயாடியின் வார்த்தைகள் அத்தோடு நின்று போயின!

திமிறத் திமிற அவள் கைகள் இரண்டையும் சேர்த்துப் பிடித்தவன் இதுவரை சுதந்திரமாக இருந்த அந்த இதழ்களுக்கு விலங்கிட்டான்!

தன் முழு பலத்தையும் பிரயோகித்து அவனைத் தள்ளிவிடத் துடித்தவளை இலகுவாக அடக்கினான் ரஞ்சன். ஆனால் அவளா அடங்குபவள்?! திமிறிக் கொண்டு எதிர்த்தது அந்த மதம் பிடித்த யானை!

ரஞ்சனுக்கு அந்தத் தீண்டல் அவ்வளவு ருசிக்கவில்லை. முதல் தீண்டல்! இன்று வரை பெண்களின் பக்கமேத் தலை வைத்துப் படுக்காதவன் அவன்! ஓவியத்தில் வரைந்த தன் கற்பனைக் காதலியோடு மாத்திரமே கனவில் கூட உலா வந்தவன்!

அவனையும் மிஞ்சிய அவள் திமிறல்கள் அவனுக்குக் கோபமூட்ட தன் பிடியை மெதுவாகத் தளர்த்தினான். அவ்வளவுதான்! அந்த உதடுகளும் நாவும் அவனைத் தூக்கி அடித்தன!

“யூ ஸ்கௌன்ட்ரல்! பாஸ்டர்ட்! ச்சீ…” இன்னும் அவன் கைச் சிறைக்குள் இருந்த படி பயமே இல்லாமல் மீண்டும் திட்ட ஆரம்பித்த உதடுகளுக்கு மீண்டும் சிறைவாசம்!

ரஞ்சன் இந்த முறைப் பின்வாங்கவில்லை. முழுதாக முன்னேறினான். முத்தம் என்றால் என்னவென்று தானும் கற்றுக்கொண்டு அவளுக்கும் கற்றுக் கொடுத்தான்.

இறுகப் பற்றியிருந்த அந்த கைகளின் விரல்களுக்குள் இப்போது விரல் கோர்த்து விளையாடினான். இதுநாள்வரை உயிரோடு உரசியவள்! முதல்முறையாக அவள் உடலோடு உரசினான்!

“இப்போ என்ன சொல்லுறே பொண்ணே?!” நிதானமாகக் கேட்டான் ஓவியன். அவன் ஓவியப் பாவை இப்போது ஒன்றும் பேசாமல் நின்றிருந்தது!