மனதோடு மனதாக – 17

மனதோடு மனதாக – 17
17
மாலையில் ஆர்யனுக்காக காத்திருந்த வெண்ணிலாவின் அருகில் திலீபன் வந்து நின்றான். அவனைப் பார்த்துக் கையசைத்தவள், “என்ன அண்ணா? நீ இன்னும் வீட்டுக்குக் கிளம்பலையா? என்ன இங்க சுத்திட்டு இருக்க?” என்று கேட்க,
“நீ இன்னும் வீட்டுக்கு கிளம்பலையா?” விடைத் தெரிந்துக் கொண்டு, வேண்டுமென்றே திலீபன் பதில் கேள்வி கேட்க, வெண்ணிலா உதட்டைப் பிதுக்கினாள்.
“போகணும் அண்ணா.. மாமா இன்னும் வரல. ஏன்னு தெரியல.. எப்பவுமே நான் வெளிய வரதுக்கு முன்னயே மாமா வந்து வெயிட் பண்ணிட்டு இருப்பாரு.. வண்டியில வந்துட்டு இருப்பாரோன்னு போன் பண்ண யோசனையா இருக்கு.. ஆபிஸ்ல லேட் ஆகிடுச்சா என்னன்னு தெரியல.. அது தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..” அவள் சொல்லவும், தலையைத்து கேட்டுக் கொண்ட திலீபன்,
“சரி வா.. நான் உன்னை வீட்ல கொண்டு விடறேன்..” என்று அழைத்து வண்டியைக் கிளப்ப, வெண்ணிலா குழப்பத்துடன் அவனைப் பார்த்தாள்.
“நான் உன்கூட வந்துட்டா மாமா வந்தா என்னைத் தேட மாட்டாங்களா?” வெண்ணிலா கேட்கவும், திலீபன் தலையசைத்தான்.
“இல்ல.. மாமா தான் உன்னைக் கூட்டிக்கிட்டு வரச் சொல்லி மெசேஜ் அனுப்பினார். வா போகலாம்..” திலீபனின் பதிலில் அவள் குழம்பிப் போனாள்.
“என்ன? என்னை மாமா கூட்டிக்கிட்டு வரச் சொன்னாரா? ஏன்? என்கிட்டே சொல்லவே இல்லையே..” கேள்விகளை அடுக்கிக் கொண்டே தனது மொபைலை எடுத்துப் பார்த்தவளைப் பார்த்து முறைத்தவன்,
“ஏன் என் கூட எல்லாம் வர மாட்டியா? என்னவோ வான்னு சொன்னா வராம கேள்வி கேட்டுக்கிட்டு நிக்கிற? இப்போ கேள்வி கேட்காம வரப் போறியா இல்லையா? மணியாகுது..” அவன் அவசரப்படுத்தி வண்டியை உதைத்துக் கிளப்ப, அவனுடன் வண்டியில் ஏறியவள்,
“மாமா தானே எப்பவும் சாயந்திரம் கூட்டிட்டு போக வருவாங்க.. உன் கூட வரச்சொல்லி என்கிட்டச் சொல்லவே இல்லையே.. அது தான் கேட்டேன்.. அதுக்கு ஏன் கோபப்படற?” அவள் கேட்கவும், திலீபன் கண்ணாடியின் வழியாக அவளைப் பார்த்து, வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
“மாமாவுக்கு டயர்டா இருக்காம். அது தான் என்னை கூட்டிட்டு வரச் சொன்னார்.. உனக்கு மெசேஜ் அனுப்பலையா?” அப்பாவியாகக் கேட்க,
“எனக்கு ஒண்ணையும் சொல்லல.. வீட்டுக்குப் போய் இருக்கு இந்த மாமாவுக்கு.. எனக்கு மெசேஜ் அனுப்பாம உனக்கு அனுப்பி இருக்காங்க.. நான் தானே அவரோட பொண்டாட்டி?” என்று புலம்பியதைக் கேட்டு திலீபனுக்கு சிரிப்பு வந்தது..
“என்னாச்சு மாமா நேத்து இருந்தே டயர்ட்ன்னு சொல்லிட்டு இருக்கார்? நேத்து சயந்திரம் வீட்டுக்கு வந்து தூங்கினவர் சாப்பிடக் கூட இல்ல.. காலையில எழுந்து ஆபிஸ்க்கு கிளம்பிட்டார். முதல்ல என்ன ஏதுன்னு பார்க்கணும்.. ரெண்டு நாள் ஆபீஸ்க்கு போகாம லீவ் போட்டு ரெஸ்ட் எடுக்கச் சொல்லணும்..” அவளது புலம்பல் தொடர, திலீபன் ஒரு பெருமூச்சுடன் அவர்களது வீட்டின் முன்பு வண்டியை கொண்டு நிறுத்தினான்.
ஆர்யனின் பைக் கீழே நிற்கவும், “மாமா வீட்ல தான் இருக்காங்களா?” என்று கேட்டுக் கொண்டே வீட்டிற்குச் சென்றவள், வீட்டின் கதவு தாழிடப்பட்டிருக்கவும், காலிங் பெல்லை அடிக்க கை வைக்க, அவளது கையைப் பிடித்துத் தடுத்தவன்,
“மாமா தூங்கிட்டு இருக்கப் போறாங்க.. நீ உன்னோட சாவியைப் போட்டுத் திற.. உள்ள போகலாம்..” திலீபன் அவளைத் தடுக்க, அவனை சந்தேகமாக பார்த்துக் கொண்டே தன்னிடம் இருந்த சாவியைக் கொண்டு திறந்து உள்ளே சென்று அவள் பையை வைப்பதற்குள், திலீபன் நேராக உறங்கிக் கொண்டிருந்த ஆர்யனிடம் சென்று அவனது நெற்றியில் கை வைத்துப் பார்த்தான்.
அவனது நடவடிக்கைகளைப் பார்த்த வெண்ணிலா, பதட்டத்துடன், “மாமாவுக்கு என்ன ஆச்சு? இந்த நேரத்துல இப்படித் தூங்கிட்டு இருக்காங்க?” குரல் நடுங்கக் கேட்கவும்,
“மாமாவுக்கு உடம்பு சரியில்லைன்னு மெசேஜ் அனுப்பி இருந்தார்.. உன்கிட்ட சொல்ல வேண்டாம்ன்னு சொன்னார்..” அவனது உறக்கத்தை கெடுக்காமல், மெல்லிய குரலில் சொல்ல,
“ஏன்? ஏன் என்கிட்டே சொல்லக் கூடாது?” பதட்டத்துடன் அவள் கேட்க, அவளது குரல் கேட்டதும் கண்களைத் திறந்த ஆர்யன்,
“தேனு..” என்றபடி அவளைப் பார்த்து புன்னகைத்தான்.
“மாமா.. என்ன ஆச்சு மாமா?” என்றபடி அவனது அருகில் அமர்ந்தவள், அவனது நெற்றியில் கை வைத்துப் பார்க்க, அவளது கையைப் பிடித்துக் கொண்டவன்,
“தேனு.. உடம்பு கொஞ்சம் முடியலைடா.. அது தான் என்னால காலேஜ்க்கு வர முடியல..” என்றவனின் கண்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே சொருக, அதைப் பார்த்தவளுக்கு பதட்டம் தொற்றிக் கொண்டது..
“என்ன மாமா உடம்பு இப்படிச் சுடுது? டாக்டர் கிட்ட போனீங்களா?” குரல் உடைய அவள் கேட்க,
“இல்லடா.. நேரா வீட்டுல வந்து படுத்துட்டேன். நீ ரொம்ப பக்கத்துல வராதே.. எங்கயாவது உனக்கும் வரப் போகுது..” என்று சொல்லவும், அவனைப் பார்த்து முறைத்தவள்,
“நீங்க முதல்ல வாங்க.. நாம டாக்டர் கிட்ட போகலாம்.. இங்க அபார்ட்மெண்ட் உள்ளேயே டாக்டர் இருக்காங்கன்னு அன்னைக்கு வாக்கிங் போகும்போது காட்டினீங்க இல்ல.. வாங்க அங்க போகலாம்..” அவனைப் பிடித்து எழுப்ப,
“தலை எல்லாம் ரொம்ப வலிக்குதும்மா.. நான் ஒரு மாத்திரை போட்டுட்டேன்.. போதும்.. நல்லா தூங்கி எழுந்தா சரியா போயிடும்.. சொன்னா கேளுடா பட்டு..” அவன் முடியாமல் சொல்லவும், அதுவரை இருவரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த திலீபன்,
“மாமா.. வாங்க நாம டாக்டர் கிட்ட எதுக்கும் ஒருதடவ போயிட்டு வந்துடலாம்..” திலீபனும் வற்புறுத்தி அழைக்க,
“ஆமா மாமா.. போயிட்டு வந்துடலாம்.. எனக்கும் நிம்மதியா இருக்கும்ல..” வெண்ணிலாவும் படபடக்க,
“ஏண்டா படுத்தற? சொன்னா கேளேன்டா பட்டு..” என்று சலித்துக் கொண்டவன், மெல்ல எழுந்துக் கொள்ள, வெண்ணிலா அவனைப் பிடித்துக் கொண்டாள்..
“தேனு.. எனக்கு ஒண்ணும் இல்லடா.. நார்மல் ஜுரம் தான்..” அவனது சமாதானத்தை ஏற்றுக் கொள்ளாமல், அவள் தலையசைக்க, ஆர்யன், அவளது கன்னத்தை வருடி,
“நீ இப்போ தானே காலேஜ்ல இருந்து வந்திருக்க.. ரெப்ரெஷ் ஆகு.. நான் அவன் கூட போயிட்டு வரேன்.. நீ காபி போட்டு ரெடியா வை.. நாங்க போயிட்டு வந்ததும் குடிக்கலாம்.” என்றவன், திலீபனுடன் கிளம்பிச் செல்ல, அவனது தளர்ந்த நடையைப் பார்த்த வெண்ணிலாவின் கண்களில் கண்ணீர் இறங்கியது. அவன் சென்றதும், தனது அன்னைக்கு போன் செய்தவள், ‘ஓ’ என்று அழத் துவங்கினாள்.
போனை எடுத்ததும் வெண்ணிலாவின் அழுகுரலைக் கேட்டவர், “என்னம்மா? என்ன ஆச்சு? ஏன் இப்படி அழற?” பூரணி பதறிக் கேட்க,
“அம்மா.. மாமா.. மாமா..” அவள் விசும்பவும், பூரணிக்கு பதட்டத்தில் தலைசுற்றத் துவங்கியது..
“என்னடி ஆச்சு? என்னன்னு அழாம சொல்லு?” அவர் அதட்டவும்,
“மாமாவுக்கு.. மாமாவுக்கு.. உடம்பு முடியலைம்மா.. ரொம்ப ஜுரமா இருக்கு.. அண்ணா டாக்டர் கிட்ட கூட்டிட்டு போயிருக்கான்.. ஒழுங்கா நடக்கவே முடியல..” ஒருவழியாக விசும்பலுக்கு இடையில் சொல்லி முடிக்க, பூரணி அவள் அழுகையைக் கேட்டு பதறி, அவனுக்கு ஏதோ உடம்புக்கு மிகவும் முடியவில்லை என்று நினைத்து,
“சரி.. நீ அழாத.. தைரியமா இரு.. நான் இதோ உடனே வரேன்..” என்றவர், அடித்துப் பிடித்து, அவர்கள் வீட்டிற்குக் கிளம்பினார்..
ஹால் சோபாவில் அமர்ந்து வெண்ணிலா அழுதுக் கொண்டிருக்க, காலிங் பெல் சத்தம் கேட்கவும், ஓடிச் சென்று கதவைத் திறந்த வெண்ணிலாவின் முகத்தைப் பார்த்த ஆர்யன் பயந்தே போனான்.
“என்னடா தேனு.. என்னடா ஆச்சு? ஏன் இப்படி கண்ணு வீங்கற அளவுக்கு அழுது இருக்க?” அவனது உடல் நிலையையும் மீறி அழுதுக் கொண்டிருந்த அவளைக் கேட்கவும்,
“மாமா.. டாக்டர் என்ன மாமா சொன்னாங்க?” அழுகையில் உதடு துடிக்க அவள் கேட்கவும்,
“மொதல்ல நகர்ந்து வழியை விடு நிலாக் குட்டி.. மாமா உள்ள வரட்டும்..” என்ற திலீபன், அவள் ஆர்யனைப் பார்த்துக் கொண்டே நகர்ந்து வழி விடவும், அவளது கன்னத்தைத் தாங்கியவன்,
“தேனு பட்டு.. எனக்கு சாதாரண வைரல் பீவர் தாண்டா.. பாரு தொண்டை வலியோ, சளி கூட இல்ல.. தலைவலி தான் இருக்கு.. அது ஜுரத்துக்கு இருக்கறது தானே.. ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்தா சரியா போயிடும்ன்னு சொல்லி இருக்காங்க.. வேணும்ன்னா திலீப் கிட்டயே கேளு…” அவளை சமாதானப்படுத்த, கண்களைத் துடைத்துக் கொண்டே,
“எனக்கு ரொம்ப பயமா போச்சு மாமா..” என்றபடி தனது கன்னத்தின் மீது இருந்த அவனது கையைப் பிடித்துக் கொண்டவளை மெல்ல தனது தோளோடு அணைத்துக் கொள்ள, திலீபன் மெல்ல அங்கிருந்து நழுவினான்.
“நிஜமா ஒண்ணும் இல்ல தானே மாமா?” உறுதிப்படுத்திக் கொள்ள அவள் கேட்க,
“இல்லடா தேனு.. எனக்கு ஒண்ணும் இல்ல.. பயப்படாதே..” என்று அவளைத் தேற்றியவன், அவளது கண்களைத் துடைத்து, நெற்றியில் மென்மையாக இதழ் ஒற்றி,
“காபி போட்டியா? திலீப் வந்திருக்கான் இல்ல. நீ தானே அவனை கவனிக்கணும்? உட்கார்ந்து அழுதுட்டு இருக்க? எனக்கு உடம்புக்கு ஒண்ணும் இல்ல.. சரியா.. எனக்கும் காபி வேணும்.. ஏதாவது சாப்பிடணும் போல இருக்கு. நான் வந்த உடனே படுத்து தூங்கிட்டேன்..” எனவும்,
“இதோ மாமா.. ஒரு ரெண்டு நிமிஷம் வரேன்..” என்றவள், வேகமாக அடுக்களைக்குள் செல்ல, வழமை போல அவளுடன் மாலைக் காபியைக் குடிப்பதற்காக சோபாவில் அமர்ந்து சாய்ந்துக் கொண்டவன், மீண்டும் காலிங் பெல் அடிக்கவும், எழ முயல,
“இருங்க மாமா.. நான் பார்க்கறேன்..” என்று வேகமாக வந்தவள், கதவைத் திறக்க, அங்கு நின்றுக் கொண்டிருந்த பூரணியைப் பார்த்ததும் கட்டிப்பிடித்து மீண்டும் அழத் துவங்கினாள்.
பூரணி அவளை சமாதானப்படுத்த, “மாமா நேத்து இருந்து தூங்கிட்டே இருந்தார்ம்மா.. இன்னைக்கு உடம்பு அப்படி சுடுது.. அதான் பயந்து அழுதுட்டேன்..” அழுகையினூடே சொல்ல, அவளது முதுகைத் தடவிக் கொடுக்க, சோபாவில் அமர்ந்துக் கொண்டிருந்த ஆர்யன், அவரை ‘வாங்கத்தை..” என்று அழைக்கவும், அவனைப் பார்த்து,
“என்னாச்சு மாப்பிள்ளை? ஏன் திடீர்ன்னு உடம்பு முடியல?” பூரணி விசாரிக்க,
“ஒண்ணும் இல்லைத்தை.. க்ளைமேட் சேஞ் தான்..” என்று சொல்லவும்,
“அதெல்லாம் இல்லம்மா.. நான் அவரை ஒழுங்கா பார்த்துக்கலம்மா.. அவருக்கு எதுவும் ஒழுங்கா செஞ்சித்தரல. நான் தான் அவரை வேலை வாங்கறேன்.. அது தான் முடியாம போயிடுச்சு..” என்று கண்ணீர் விட,
“வெண்ணிலா..” ஆர்யன் அதட்ட, உதடு துடிக்க அவனைப் பார்த்தாள்.
“நீ எனக்கு என்ன செஞ்சித் தரல? சொல்லு.. நான் ஒண்ணு செஞ்சா நீயும் கூடச் சேர்ந்து செய்யற தானே.. நேத்து செஞ்ச சட்னி அவ்வளவு டேஸ்டியா இருந்தது.. இதை விட நீ காலேஜ்க்கும் போயிட்டு வந்து என்னம்மா செய்யணும்?” அவனது குரலில் வருத்தம் இருக்க,
“நான் பாட்டுக்கு காலேஜ் போயிடறேன்.. நீங்க தான் நான் வந்து செய்யறேன்னு சொல்றதைக் கேட்காம வாஷிங்மெஷின் போட்டு.. உணர்த்தி.. பாத்திரம் தேச்சு, சமையல் எல்லாம் செய்யறீங்க.. கேட்டா நான் வீட்ல இருக்கேன் சைட்ல செய்யறேன்னு சொல்றீங்க.. அப்பறம் உங்க உடம்பு இப்படித் தானே முடியாம போகும்.” அவளது கேள்விக்கு, ஆர்யன் பூரணியைப் பார்த்தான்..
பூரணியும் அவனை யோசனையுடன் பார்க்க, “இப்படி அழாதடா தேனு.. உனக்கு நான் வேலை செய்யறது கஷ்டமா இருந்தா நாம வேணா வேலை செய்ய ஆள் வச்சுக்கலாமா? ஆனா. எனக்கு நாம பேசிட்டே வேலை செய்யறது தான் பிடிச்சிருக்கு..” ஆர்யன் சொல்லவும், அவனைப் பார்த்த பூரணி தான் பார்த்துக் கொள்வதாக சைகை செய்துவிட்டு, அவளது முதுகைத் தடவிக் கொடுத்தார்..
“நான் கொஞ்சம் படுக்கறேன் வெண்ணி.. நீ காபி போட்டுட்டு சொல்லு..” என்றவன், பூரணியிடம் அவளை விட்டு அறைக்குள் செல்ல,
“ஹையோ மாமா காபி குடிக்கணும் போல இருக்குன்னு சொன்னாரு..” என்றவள், வேகமாக அடுக்களைக்குள் செல்ல, அவளைப் பார்த்து சிரித்த பூரணி அவளுடன் சென்றார்.
“இங்கப் பாரு மாப்பிள்ளையை கஷ்டப்படுத்தாதே. அவர் தான் இவ்வளவு சொல்றார் இல்ல.. அதனால இப்படி எல்லாம் ஃபீல் பண்ணி அழாதே. அவருக்கு முகமே ஒரு மாதிரி ஆகிடுச்சு.. இப்போ க்ளைமேட் கண்டபடி இருக்கு.. அதுனால ஜுரம் வந்து இருக்கலாம்.. நீ அழக் கூடாது என்ன? வேணும்ன்னா நம்ம வீட்ல கொஞ்ச நாள் வந்து இருங்க..” என்று அவளை ஆறுதல் படுத்த, சிறிது சமாதானமானாள்.
“நீ அழுத அழுகையில பயந்து தான் ஓடி வந்தேன்.. போய் சீக்கிரம் மாப்பிள்ளைக்கு காபி கொடு.. எனக்கும் கொடு..” என்று பூரணி சொல்லவும்,
“நீங்க முகம் கைக் கால் கழுவிட்டு வாங்கம்மா. நான் காபி போட்டு கொண்டு வரேன்..” என்றவள், பூரணியை அனுப்பிவிட்டு, காபி போட, திலீபன் பூரணியைப் பார்த்து கேலியாக புன்னகைத்தான்.
காபியை போட்டு எடுத்துக் கொண்டு வந்து பூரணியிடமும், திலீபனிடமும் கொடுத்தவள், “நான் மாமாவுக்கு காபி கொடுத்துட்டு வரேன்..” என்றபடி, தனது கப்பையும் எடுத்துக் கொண்டு ஆர்யனிடம் செல்ல, கட்டிலில் சாய்ந்து அமர்ந்தபடி அவளுக்காக காத்திருந்தான்..
“மாமா காபி..” என்றவள், அவனது அருகில் சென்று அமர,
“தேனு.. நீ அழறதைப் பார்த்தா என்னவோ நான் தப்பு பண்ணினா போல இருக்கு..” என்று சொல்லவும், அவனது தோள் சாய்ந்தவள்,
“சாரி மாமா.. உங்களை அப்படிப் பார்க்கவும், நான் தான் ரொம்ப பயந்துட்டேன்.. உங்களுக்கு ஒண்ணுன்னா நான் என்ன ஆவேன் சொல்லுங்க.. எனக்கும் நாம பேசிட்டே வேலை செய்யற நேரம் எல்லாம் ரொம்ப பிடிக்கும் மாமா.. நமக்கு நடுவுல யாரும் வேண்டாம்.. இனிமே நான் இப்படி செய்ய மாட்டேன்..” என்று சொல்லவும், அவளது நெற்றியில் மென்மையாக இதழ் ஒற்றியவன்,
“பக்கம் வந்து உனக்கும் ஒட்டிக்க போகுதுடா.. அடுத்த வாரம் இருந்து எக்ஸாம் வேற இருக்கு..” என்று சொல்லவும், அவனை முறைத்தவள்,
“அப்படி எல்லாம் தள்ளி உட்கார முடியாது போங்க..” என்று அவனது கையோடு கைக் கோர்த்துக் கொண்டு, எப்பொழுதும் போல நகர்ந்து அமர்ந்தவள்,
“ஏன் மாமா உங்களுக்கு உடம்பு சரி இல்லன்னு எனக்கு மெசேஜ் செய்யல?” குறையாக அவள் கேட்க, அவளது மூக்கைத் தட்டியவன்,
“சொன்னா என்ன செஞ்சிருப்ப? இப்போ நீ அழுதது போல காலேஜ்ல ஊரைக் கூட்டி அழுதுட்டு வந்திருப்ப? பாவம் அத்தை என்னவோ ஏதோன்னு ஓடி வந்திருக்காங்க போல.. இப்படியாடி பண்ணுவ?” அவளைக் கேலி செய்தவன்,
“பட்டு.. எங்க அம்மாவுக்கு எல்லாம் கால் பண்ணி சொல்லலையே..” பதட்டமாகக் கேட்க, அவர்களது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த பூரணி மற்றும் திலீபனின் இதழ்களில் புன்னகை விரிந்தது..
“இல்ல மாமா.. இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துட்டு கால் பண்ண..லாம்..ன்னு இருந்தேன்..” தலையை சொறிந்துக் கொண்டே அவள் இழுக்க, ஆர்யன் தலையிலேயே அடித்துக் கொண்டான்.
“நல்லவேளை சொல்லல.. நீ அழுதுக்கிட்டே சொல்லிருந்த அடிச்சு பிடிச்சு ஓடி வந்திருப்பாங்க..” என்று கேலி செய்தவன், காபியை குடித்து முடித்து,
“நான் கொஞ்ச நேரம் தூங்கறேன்டா பட்டு.. நீ அத்தை கூட பேசிட்டு இரு.. நைட்க்கு வெளிய ஆர்டர் செய்துக்கலாம்.. இந்தா மொபைல்..” என்றுவிட்டு தனது மொபைலை கொடுத்துவிட்டு படுத்துக் கொள்ளவும், அவனது நெற்றியில் மென்மையாக இதழ் பதித்து,
“சீக்கிரம் சரி ஆகி வாங்க மாமா.. நீங்க இப்படி இருந்தா எனக்கு ஒரு மாதிரி இருக்கு. ரொம்ப போர் அடிக்குது.. ஐம் மிஸ்ஸிங் யூ..” அவனது கன்னத்தைத் தாங்கிச் சொல்லிவிட்டு,
“அதெல்லாம் ஆர்டர் செய்ய வேண்டாம்.. நான் உங்களுக்கு சூடா ரசம் வச்சுத் தரேன்.. கொஞ்சம் சாப்பிடுங்க.. ஒரே நாளுல வாடி போயிட்டீங்க..” எனவும்,
“அடுத்த வாரம் எக்ஸாம் இருக்கு. சொன்னா கேளேன்.. ரசம் சாம்பார் எல்லாம் நீ லீவ்ல எனக்கு செஞ்சித் தருவியாம்.. இப்போ ஆர்டர் செய்துடேன்.. உட்கார்ந்து பேசாம படி..” போர்வையைப் போர்த்தியவளைப் பார்த்து அவன் சொல்ல, இடுப்பில் கையை வைத்துக் கொண்டு அவனை முறைத்தாள்.
“நான் சொல்றதை தான் நீங்க கேட்கணும்.. பேசாம தூங்குங்க.. சாப்பிட எழுப்பறேன்.. சொன்ன பேச்சே கேட்காம அடம் செஞ்சீங்க.. அவ்வளவு தான் சொல்லிட்டேன்.. ஹ்ம்ம்.. கண்ணை மூடுங்க..” என்று மிரட்டியவள், அவன் கண்ணை மூடிக் கொள்ளவும், அவனது கன்னத்தைத் தட்டிவிட்டு, இரவு விளக்கை ஒளிர விட்டு, சோபாவில் அமர்ந்திருந்த பூரணியின் மடியில் படுத்துக் கொண்டாள்..
அவள் மிரட்டியதைக் கேட்டுக் கொண்டிருந்த திலீபனோ, “இந்த ஆழாக்கு என்ன மிரட்டு மிரட்டுது பாருங்க சித்தி.. அவரும் என்னவோ இது சொல்றதைக் கேட்டுக்கிட்டு இருக்காரு..” என்று கிண்டலடிக்க, அவள் மீது அக்கறை கொண்டு ஆர்யன் பேசியவைகளைக் கேட்ட பூரணிக்கு மனம் நிறைவதாய்..
“இவ அழுத அழுகையில நான் நிஜமா அப்படி பயந்து போயிட்டேன்..” திலீபனிடம் சொன்னவர்,
“இனிமே இப்படி எல்லாம் அழக் கூடாது நிலாக்குட்டி.. எல்லாமே தைரியமா பேஸ் பண்ணனும் என்ன?” என்று கேட்கவும், தான் அழுததை நினைத்து தலையில் தட்டிக் கொண்டவள், பூரணியின் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு,
“சாரிம்மா.. நிஜமாவே எனக்கு மாமா அப்படி இருக்கவும் ரொம்ப ஒரு மாதிரி பயம் ஆகிருச்சு.. நேத்து இருந்தே டயர்ட்ல தூங்கிட்டே இருக்கார். மாமா பேசாம எனக்கு ரொம்ப கஷ்டமா அழுக அழுகையா வருது.. நான் என்ன செய்வேன்?” என்று கேட்டவளின் தலையைக் கோதியவர்,
“நான் உனக்கு ரசம் எப்படி வைக்கிறதுன்னு சொல்லித் தரேன். நீயே செய் என்ன? கூடவே பருப்பு துவையலும் சொல்லித் தரேன்.. அவருக்கு வாய்க்கு கொஞ்சம் ருசியா இருக்கும்..” பூரணி சொல்லவும், பட்டென்று எழுந்து அமர்ந்தவள்,
“சரிம்மா.. சொல்லிக் கொடு.. மாமாவுக்கு நான் செஞ்சித் தரேன்.. ஆனா.. ஹோம்வர்க் செய்யாம, படிக்காம நான் சமையல் ரூம்க்கு போனா என்னை பிச்சுடுவார்.. அதனால ஒரு மணி நேரம் படிச்சிட்டு செய்யலாமா? உனக்கு வீட்டுக்குப் போகனுமா?” திலீபனைப் பார்த்துக் கொண்டே பரிதாபமாக அவள் கேட்க, அவளது தலையை வருடியவர்,
“நீ படி.. நான் உனக்கு செஞ்சிக் கொடுத்துட்டு வீட்டுக்கு போறேன்.. என்ன?” என்று கேட்கவும், அவரது கன்னத்தில் இதழ் பதித்தவள், திலீபனைக் கேள்வியாகப் பார்க்க,
“நான் ஏற்கனவே அம்மாக்கிட்ட சொல்லிட்டேன் சித்தி.. அம்மா மாமாவை பார்த்துட்டு வரச் சொன்னாங்க.. நானும் இவ கூட உட்கார்ந்து படிக்கறேன்.. நாம அப்பறம் கிளம்பலாம்..” என்று சொல்லிவிட்டு, தனது பையை எடுத்துக் கொண்டு அமர,
“நானும் அக்காக்கிட்ட இங்க தான் இருக்கேன்னு சொல்லிட்டு வரேன்.. இல்ல என்னைக் காணும்ன்னு கவலைப்படுவாங்க..” என்றபடி போனை எடுத்துக் கொண்டு செல்ல, வெண்ணிலா படிக்க அமர, திலீபன் அவளது தலையைத் தட்டி, அவளது அருகில் அமர்ந்து,
“தினமும் இப்படித் தான் செய்வீங்களா?” என்று கேட்க, ‘ஆம்’ என்று தலையசைத்து,
“மாமா ஏதாவது அவரோட வேலைக்கு ஏத்தாமாதிரி படிச்சிட்டு இருப்பாரு.. நானும் அவர் பக்கத்துல உட்கார்ந்து படிப்பேன்.. அப்பறம் ரெண்டு பேருமே சேர்ந்து போய் டிபன் பண்ணி சாப்பிட்டு, கொஞ்ச நேரம் பேசிக்கிட்டே வீட்டு வேலை எல்லாம் செஞ்சிட்டு தூங்க போவோம்..” தங்களது அன்றாட வாழ்வைச் சொன்னவள், அடுத்த வார பரீட்சைக்காக படிக்கத் துவங்கினாள்..