மயங்கினேன்.! கிறங்கினேன்.! 7

eiS8VZ63923-ff7f8f74

மயங்கினேன்.! கிறங்கினேன்.! 7

அத்தியாயம் 07

அதிகாலை ஐந்து மணிப்போல் இயற்கையின் அழகை இரசிக்க முடியாமல் வெறுமையான மனதுடன் வீடு வந்து சேர்ந்தான் வெற்றிமாறன்.

அவனுக்காகவே அந்த காலை நேரத்தில் விஜயசாந்தி விழித்து இருந்தார் போல , அவனின் வண்டி சத்தம் கேட்டதுமே வேகவேகமாக வந்து வெளி கதவை திறந்து விட்டார்.

அன்னையை கண்டதும் , வண்டியை அப்படியே நிப்பாட்டி அவரை முறைக்கலானான்.

‘ நான் உன்னோட அம்மா டா ‘ என்ற பார்வையோடு அவரும் அவனை பார்த்து முறைத்து வைத்தார்.

இருவரும் மாற்றி மாற்றி முறைப்பதை கண்ட , பரமசிவத்தின் விசுவாசியான சேவல் ‘ இதுங்கள் திருந்தாது ‘ என்பது போல் வண்டி மீது ஏறி சேவல் கூவியது.

அதில் இருவருமே முறைப்பை நிறுத்தினர்.

” வெளியவே , எத்தனை நேரம் நிக்கிறதா உத்தேசம் ” என அடக்கப்பட்ட கோபத்துடன் மகனிடம் கேட்க

“ஹான் , அரிசி மூட்டை நகுருற வரைக்கும் இங்கேயே தான் நிப்பேன் ” என அடக்கப்பட்ட சிரிப்போடு சீரியசாக கூற

” இங்க ஏது டா அரிசி மூட்டை எல்லாம் இருக்கு ” என்று புரியாதவராய் முதலில் கூறினாலும் , பின் புரிந்து கொண்டவர் அவனை முறைத்து ” உன்ன போய் பெத்துருக்கேன்ல , அதான் இப்படி அரிசி மூட்டை மாதிரி இருக்கேன் ” என்று வெற்றி மூக்கை உடைத்து விட்டவர் ,

“சீக்கிரமா வண்டியை நிப்பாட்டிட்டு வந்து சேரு ” என்று சொல்லி முகத்தை திருப்பிக் கொண்டு உள்ளே சென்றுவிட்டார் விஜயசாந்தி.

‘இதுக்கே இப்படி முகத்தை தூக்கி வச்சிக்கிறாங்களே , நான் உண்மைய சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்தும் போது என்ன நடக்குமோ ‘ என்று மனதில் நினைத்தவன் காரை‌ செஷிடில் விட சென்றான்.

வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே வர கால் வைக்க போன வெற்றியை பார்த்து ,” அங்கேயே நில்லு டா ” என கோபமாக சொன்னவர் சமையலறைக்குள் நுழைந்தார்.

‘ நீ தான் இன்னும் உண்மையை சொல்லவே இல்லையே டா . அதுக்குள்ளயே வெளிய அனுப்ப பிளான் பண்றாங்களே .அயோ கடவுளே.!இப்போ தான் வண்டி ஓட்டிட்டு வந்தேன் திரும்பவும் நான் போகணுமா ” என்று அவன் மனம் ஊளை இட தொடங்கியது .

“ம்மா.! ரொம்ப சோர்வா இருக்கு ம்மா .ப்ளீஸ் உள்ள விடேன்  ” என்று அன்னையிடம் கெஞ்ச 

“வாய தொறந்தேனா பாரு ” என்று உள்ளே இருந்து குரல் கொடுத்தவர் அவன் அடுத்து ஏதும் பேசும் முன்பே வெளியே வந்தார் .அவர் கூடவே பரமசிவமும் அறையில் இருந்து வெளி வந்தார் .

தந்தையை கண்டதும் மகனுக்கு கோபம் கனன்றது ‘இவரால் தான் தனக்கு இப்டி ஒரு நிலையென ‘நினைத்து .அதே சமயம் தந்தையும் மகனை ஒரு வெற்றி புன்னகையுடன் ‘ சாதித்துவிட்டேன் ‘ என்ற பார்வை பார்த்து வைத்தார்.

‘ இன்னும் நான் அப்பெண்ணின் கழுத்தில் தாலி கட்டவில்லை . நாளைய விடியலை நோக்கி தான் யார் வென்றார்கள் என்று தெரியும் ‘ என்பது போல் அவன் பதில் பார்வை பார்த்து வைத்தான்.

இருவரின் பார்வை பரிமாற்றத்தையும் பார்த்த விஜயா , ” எப்போத்துல இருந்து ரெண்டு பேரும் காதலிக்க ஆரம்பிச்சீங்க.?” என்க

” என்ன.?” என்பது போல் இருவரும் விழிக்க

” அப்புறம் இப்படி மாத்தி மாத்தி பார்வையாலே பேசிக்கிட்டு இருந்தா வேற எப்படி சொல்வதாக்கும் ” என நொடித்து கொண்டார்.

“ஏன் மா நீ வேற காலங் காத்தால காமெடி பண்ணிக்கிட்டு இருக்க. இப்போ என்ன உள்ள விட போறியா இல்லையா “

” பொரு டா.. எல்லாத்துக்கும் உனக்கு அவசரம். பாவம் என்னோட மருமக அம்மு. உன்கூட எப்படி தான் காலத்தை தள்ள போறாளோ ” என நக்கலாக கூறியவர் அவனுக்கு சுற்றி போட ஆரம்பித்தார்.

” என்னா மா இது புதுசா  என்னவெல்லாமோ பண்ற..?? “

” டேய்! அவளோ தூரம் தனியா வண்டி ஓட்டிட்டு வந்து இருக்க டா நீ. காத்து கருப்பு ஏதாவது அண்டி இருக்க போகுது. அதான் திருஷ்டி கழிக்கிறேன் ” என்ற அன்னையின் சொல்லில் தானாக அந்த அராத்து இனியா அவனின் ஞாபகத்திற்கு வந்தாள்.

” அச்சோ அது காத்து கருப்பு இல்ல மா அது இனியா ” என முணுமுணுக்க

” என்ன டா இப்போ எதாவது சொன்னியா.?”

” இல்லையே மா ” என்றவன் பையை தூக்கிக் கொண்டு உள்ளே சென்றான்.

தன்னை தாண்டி உள்ளே நுழைந்த மகனை ஆராய்ச்சி பார்வை பார்த்து வைத்தார் பரமசிவம்.

அவருக்கு மகனின் ஆசையை நிறையாசையாக்குகிறோம் என்ற வருத்தம் இருந்தாலும் , அம்முவின் சிரிப்பில் அதனை ஒதுக்கி வைத்து விட்டார்.

அவருக்கு தோன்றியது அம்மு தான் இவனுக்கான சரியான ஜோடி என்று…

இவனின் குணத்திற்கு அவளின் குணம் தான் பொருந்தும். இப்போது வேண்டுமானால் அவனுக்கு அப்பெண்ணை பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் பின்பு அவளை பற்றி புரிந்து கொண்ட பின்பு இவர்களே சிறந்த ஜோடியாக விளங்குவார்கள் என்று அவர் மனம் சொன்னது.

அதனாலே தான் இவர் அவனின் வார்த்தைகளுக்கு செவிசாய்க்கவில்லை.‌ அவனை மிரட்டியே காரியத்தை சாதிக்க தொடங்கினார். இருந்தாலும் ஒரு மூலையில் அவருக்கு பயமாக இருந்தது எங்கே மணமேடையில் வைத்து திருமணம் வேண்டாம் என்று சொல்லி விடுவானோ என்று அச்சம் கொண்டார்.

விதி வலியது. யாருக்கு யார் என்று நாம் முடிவெடுப்பதில்லை. மேலே ஒருவன் இருந்து நம்மை ஆட்டி படைக்க ஆடும் பொம்மைகளாக நாமும் ஆடுகிறோம். அவனின் முடிவே இறுதியில் வெல்லும்.

வீட்டிற்குள் நுழைந்த வெற்றிக்கு வீட்டின் அலங்காரம் அவனை கவலை கொள்ள வைத்தது.

நடக்காத திருமணத்திற்கு இத்தனை அலங்காரம் தேவையா என்றிருந்தது.

அதிலும் அன்னையின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியை கண்டவனுக்கு நெஞ்சம் பிசைய செய்தது.

ஆனாலும் அவனுக்கு இது தன் இசைக்காகவும் காதலுக்காகவும் தானே செய்யப் போகிறேன். இதில் தவறேதும் இல்லையே என்றே எண்ணி மனதை தேற்றிக் கொண்டான்.

அத்தனை குடும்பத்தினர் முன்பு ஒரு பெண்ணின் திருமணம் முறிந்தால் அவளின் நிலையென என்பதை முற்றிலுமாக யோசிக்க மறந்தான்.

காதல் வந்தால் சுயநலமும் வந்துவிடுமோ…

ஆம் என்று சொல்வது போல் தான் அவனின் எண்ணவோட்டங்கள் இருந்தது.

அவனை பார்த்து மற்ற உறவினர்கள் சிரிப்பதை கண்டு வேகமாக அறைக்கு செல்ல காலடி எடுத்து வைத்தவனை அவனின் சொந்தங்கள் சூழ்ந்து கொண்டது.

” ஏன்டா பா யாரோடவோ கல்யாணத்துக்கு வர மாதிரி உன்னோட கல்யாணத்துக்கே , முதல் நாள் வந்து இறங்குறியே ” என ஒரு குண்டு பெண்மணி கேட்க

‘ நடக்கிற கல்யாணம்னா சீக்கிரமே வரலாம். நடக்காத கல்யாணத்துக்கு எதுக்கு சீக்கிரமே வரனும்’ என மனதோடு பதில் கூறியவன் வெளியில் ,

“கொஞ்சம் வேலை இருந்தது பெரியம்மா . அதான் வர முடியல. அது மட்டும் இல்லாமல் நான் பாக்குற வேலைக்கு ஒரு ஆல் போட்டு வரனுமே . உங்கள மாதிரியா எங்க கூப்பிட்டாலும் டக்குனு கிளம்பி வர ” என கேள்வி கேட்ட பெரியம்மாவின் முக்குடைத்தான்.

“வாலு பையன் டா நீ. சின்ன வயசுல இருந்தே நீ இப்படி தான் ” என அவன் தோளில் அடி போட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

விட்டால் போதும் என்று நினைத்த வெற்றி தன் அறைக்குள் புகுந்து கொண்டான்.

ஆசுவாச மூச்சொன்றை இழுத்து விட்டவனுக்கு , நாளை நடக்க இருக்கும் திருமணத்தை எப்படி நிறுத்துவது என்று யோசிக்கலானான்.

ஆனால் அவனை யோசிக்கவிடாது  அவனது அன்னை வெளியே இருந்து அழைத்தார்.

‘ சுதந்திரமே இல்லாம போச்சி . இதில் அந்த பெண் மட்டும் வீட்டிற்கு வந்தால் , என் நிலைமை என்னாவது ‘ என்று யோசித்த மனசாட்சியை அனல் தெறிக்க பார்த்து வைத்தான்.

‘ அச்சோ இவனோட மனசாட்சியா இருந்துட்டு இப்படி நினைச்சிட்டேனே ‘ என அவனிடமிருந்து வெளியே வந்து கண்ணத்தில் தப்பு போட்டு கொண்டது.

அதில் மேலும் வெற்றிக்கு கோபம் வர , ” நீ பண்ணியது பத்தாதா என்ன . இன்னும் ஏன் டா என்னைய சாவடிக்கிற‌. நானே கல்யாணத்தை எப்படி நிறுத்தன்னு பார்த்தா என்னோட மனசாட்சியா இருந்துக்கிட்டு எனக்கே துரோகம் பண்றியே “

” நிறுத்து டா வெற்றி! அப்படி என்ன நான் உனக்கு துரோகம் பண்ணிட்டேன் சொல்லு “

” நீ என்ன பண்ணல , இப்போ எதுக்கு அந்த பொண்ணை பற்றி நினைச்ச “

” அடேய் கிராதகா! நான் நினைச்சா அது நீ தானே டா. அப்போ நீ ஏன் அந்த பொண்ணை பற்றி நினைச்ச”

” டேய்!” என வெற்றி பல்லை கடிக்க

” வெற்றி கதவை திற ” என விஜயா வெளியே இருந்து அழைக்க

” ஹான் மா ” என்றவன் மனசாட்சியை துரத்தி விட்டுட்டு கதவை திறந்தான்.

” கதவை திறக்க உனக்கு இவ்வளவு நேரமா டா ” என்ற கேட்ட அன்னையை பார்த்து முறைத்தான்.

” ஏன் மா, நானே நைட்டெல்லாம் கஷ்டப்பட்டு வண்டி ஓட்டிட்டு வந்து இருக்கேன். களைப்பில் கொஞ்சம் படுத்தேன். அதுக்குள்ள நீ கூப்பிட்டுட்ட “

” உன்னை யாரும் இங்க கஷ்டப்பட்டு வண்டியை ஓட்டிட்டு வர சொல்லல. சொகுசா ஏசி பஸ்ல தான் வர சொன்னது. நீ தான் பெரிய இவனாட்டம் வண்டில வந்த “

” சரி விடு மா. வந்த விஷயத்தை சொல்லு “

” நீ இங்க இருந்திருந்தின்னா எல்லா சடங்கையும் சரியா செஞ்சிருக்கலாம். ஆனா என்ன துரைக்கு அந்த வேலை தானே முக்கியமா போச்சி ” என வெட்டியவர் தான் வந்ததை சொன்னார்.

” மூன்று நாளைக்கு முன்னாடியே பந்தக்கால் நட்டிருக்கனும். ஆனா நீ இல்லாதனால அதை இப்போ செய்ய வேண்டியதா போச்சி. சோம்பேறித்தனமா படுத்து உருலாமா சீக்கிரமா குளிச்சு ரெடியாகு.” என்று மகனிடம் கூறிவிட்டு வெளியே வந்தவர் ,

” எதுல ரெண்டு பேரும் ஒத்துமையா இருக்க போறிங்களோ இல்லையோ . இந்த ஒரு விஷயத்துல ஒத்து போறீங்க ” என தலையில் அடித்து கொண்டார்.

” ஏன் மா அப்படி  சொல்றீங்க..? நானும் அந்த பொண்ணும் எந்த விஷயத்துல ஒத்து போனோம்.?”

” ம்ம் . இப்படிக்கு வேலையை கட்டிக்கிட்டு கல்யாணத்துக்கு மொத நாள் வந்து இறங்குறதை தான் சொல்றேன். அவளும் விடிய காலைல தான் ஊருக்கு வந்திருக்கா.” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

இவனுக்கு வேலைக்கு செல்பவள் என்றால் , தன் காதலை அவளால் புரிந்து கொள்ள முடியும். எப்படியேனும் அவளிடம் பேசி இந்திருமணத்தை நிறுத்த நினைத்தான்.

நல்ல நேரம் காலை எட்டு மணிக்கு என்பதால் , பந்தக்கால் நடுவதர்கான வேலைகள் நடைபெற்றன.

முதலில் கல்யாண முருங்கை மரத்தில் ஒரு கிளையை வெட்டி அதில் உள்ள இலைகளை அகற்றிவிட்டு அந்த மரத்தின் நுனியில் ஐந்து மாவிலைகளை மஞ்சள் பூசிய கயிறால் கட்டி, இடையில் ஒரு மஞ்சள் பூசிய வெள்ளைத் துணியில் ஒரு செப்புக்காசு முடிந்து கட்டி வைத்தனர் வீட்டின் பெரியோர்கள்.

அதன்பின் அக்கம்பக்கத்தினர் திருமணத்திற்கு என வந்த சொந்த பந்தங்கள் எல்லாம் நிகழ்ச்சியை தொடங்கினர்.

வீட்டில் உள்ள பெரியவர் நட வேண்டிய இடத்திற்கு பந்தக்காலை கொண்டு வந்து வைத்து ,பின் அதற்கு தேங்காய் உடைத்து சாம்பிராணி கற்பூரம் காட்டி பூஜை செய்து ,அதனடியில் நவதானியத்தோடு நீர் மற்றும் பால் ஊற்றி மரத்திற்கு திருநீறு, சந்தனம், குங்குமம் வைத்து மனமாற சாமி கும்பிட்டு அதை நட்டு வைத்தனர்.

இதையெல்லாம் மேலிருந்து பார்த்த வெற்றிக்கு சங்கோஜமாக இருந்தது. இவர்களின் ஆசையை கெடுக்க போறேமே என்று வருத்தமாகவும் இருந்தது.

இதே முறைப்படி அங்கே அம்முவின் வீட்டிலும் நடந்தது. என்ன ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால் இங்கே வெற்றி முகத்தை உம்மென்று வைத்திருக்க , அங்கே அம்முவோ சந்தோஷத்தில் துள்ளி குதிக்காத குறைதான்.

பூங்கோதை பிள்ளை பெற்றவளாக அன்னையின் வீட்டில் இருந்தாள். அவளை பிரிந்து இருக்க முடியாத காரணத்தினால் மணிமாறன், வார இறுதியில் அவளுடன்  இருந்து விட்டு வருவான்.

மூகூர்த்தகால் ஊன்றிய பின்பு மதியம் போல் மணமக்கள் இருவரது வீட்டிலும் குலதெய்வ வழிபாடு செய்தனர்.

அதாவது வீட்டில் உள்ள பூஜை அறையில் ஒருபீடம்பலகையின் மேல் தலைவாழையிலையில், கல்யாண காரியத்திற்கு வாங்கிய புதிய நகைகள், மாங்கல்யம், ஆடைகள் போன்றவற்றை மூட்டையாகக் கட்டி வைத்து, மூன்று இலைகளில் உணவு பொருட்கள் இட்டு குலதெய்வத்தை வழிபாடு செய்வதாகும்.

சாமி கும்பிட்டு சாப்பிட்டு விட்டு , மாலை நல்ல நேரம் பார்த்து முதலில் பெண் வீட்டார் மண்டபத்திற்கு சென்றுவிட்டனர்.

அம்முவிற்கு அத்தனை சந்தோஷம் , தான் ஆசைப்பட்ட மணவாளனின் சரிபாதியாவதை நினைத்து.

திருமண பேச்சை எடுத்த நொடியிலிருந்து பெண்ணால் மாப்பிள்ளையை பார்க்க முடியவில்லை.

இது அவர்களது குடும்ப சம்பரதாயமாம். பூ வைத்து விட்டால் அடுத்து திருமணத்தன்று தான் பார்க்கவே முடியும். இதேபோல் தான் பூங்கோதை திருமணத்திலும் நடந்தது. ஆனால் என அன்றைய மணமகனான மணிமாறன் அத்தனை பேருக்கும் டிமிக்கி காட்டிவிட்டு பெண்ணை திருட்டுத்தனமாக சந்தித்து காதல் செய்தான்.

ஆனால் இன்றைய மணவாளனோ அவளது அழைப்பை கூட ஏற்க மாட்டேன் என்கிறான்.

அதில் பெண்ணின் முகம் சிறிது வருத்தத்தை காட்டியது.

மணமகள் அறையில் தனியாக அமர்ந்திருந்த அவளுக்கு நாளைய பொழுதில் நடக்க இருக்கும் நிகழ்வுகளை நினைத்த பெண்ணின் முகம் செம்மையுற்றது.

அந்த நேரம் பார்த்து உள்ளே வந்த பூங்கோதை தங்கையின் முகத்தினை பார்த்து ஒரு நமட்டு சிரிப்பு சிரித்தவள் , அவளை அப்படியே ஃபோட்டோ பிடித்தாள்.

” அம்மு ”  அவளிடமிருந்து பதிலில்லை..

” அம்மு மா..” என தோள் தொட

ம்ஹூம் பெண் அவன் நினைவில் எங்கோ சென்றுவிட்டாள் போல.

“அடியேய் அம்மு!” என பூங்கோதை அவளின் காதில் கத்த , சட்டென தன்னை நினைவிலிருந்து மீட்டெடுத்தவள் தன் அக்காளை கண்டு முறைத்தாள்.

” என்ன டி முறைப்பு வேண்டி கிடக்கு உனக்கு.?”

” இப்படி காதுல வந்து கத்துன்னா முறைக்காம கொஞ்சவா செய்வாங்க “

” நான் எவ்வளவு நேரமா உன்னை கூப்பிடுறேன்னு தெரியுமா உனக்கு. நீ பாட்டுக்கு என் கொழுந்தன் கூட டூயட் பாடிட்டு இருக்க “

” ச்சீ போ க்கா..” என சிணுங்கினாள் பெண்.

” பாரு டா என் தங்கச்சிக்கு வெக்கம் எல்லாம் வருது “என கிண்டல் செய்ய

“அட போக்கா ! அதுவே என்னைக்காவது ஒருநாள் தான் வருது. அதயேன் கேடுப்பானேன் “

” எனக்கு இப்போ தான் ரொம்ப சந்தோஷமா இருக்கு டி. எங்க சித்தி உன்னைய உன் மாமா பையன் அந்த துரைபாண்டிக்கு கட்டி வச்சிடுவாங்களோன்னு பயந்துட்டே இருந்தேன். ஆனா இப்போ தான் சந்தோஷமா இருக்கேன் தெரியுமா “

” நானுமே பயந்துட்டு தான் இருந்தேன் கா. எப்படியோ எனக்கும் அத்தானுக்கும் கல்யாணம் நடக்க போகுது ” என்றாள் சந்தோஷத்துடன்.

” நீ உண்மையிலே ரொம்ப லக்கி அம்மு. அதான் உனக்கு வெற்றி புருஷனா கிடைக்க போறான். அவனை மாதிரி ஒரு நல்லவனை பார்த்ததே இல்லை ” என்றாள் உள்ளார்ந்து.

” ம்ம் தெரியும் க்கா…” என்றவள் புன்னகைத்து கொண்டு கனவுலகில் மிதக்க தொடங்கினாள்.

இங்கே மாப்பிள்ளை வீட்டில் எல்லாரும் கிளம்பி வெளியே வர , வெற்றி மட்டும் வெளியே போகக்கூடாது என்று உள்ளுக்குள்ளே இருந்து சிறுபிள்ளை போல் அழிச்சாட்டியம் பண்ணிக் கொண்டு இருந்தான்.

” நல்ல நேரம் ஆரம்பிக்க போகுது . இன்னும்மா உன் பையன் கிளம்பாம இருக்கான். போ போய் அவனை கூட்டிட்டு வா ” என்று மனைவியிடம் சிடுசிடுத்தார் பரமசிவம்.

“இதோ போறேன் ” என்றவர் மகனின் அறை முன்பு நின்று கத்தினார்.

” வெற்றி கதவை திற ” என தட்ட

” இதோ மா..” என்றவன் கதவை திறந்தான் வெற்றிமாறன்.

வெள்ளை வேட்டி சட்டையில் தாடியை வலித்து மீசையை முறுக்கி நெற்றியில் திருநீறு வைத்து பார்க்கவே அத்தனை அழகையும் ஒத்திகைக்கு எடுத்தது போல் ஆணழகனாய் மின்னிய மகனை பார்த்து கண் படக்கூடாது என்று நினைத்தார்.

” என் கண்ணே பட்டுடும் போல வெற்றி ” என அவனுக்கு நெட்டி எடுத்தவர் கீழே அழைத்து வந்தார்.

அதன்பின் மாப்பிள்ளை அழைப்பு முடிந்து , வெற்றியை மணமகன் அறைக்கு அனுப்பி வைத்தவர் நிச்சயத்திற்க்கான  ஏற்பாடுகளை  செய்தனர்.

மணமகன் அறைக்குள் இருந்த வெற்றிக்கு நிச்சயம் முடிந்ததும் பெண்ணிடம் பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டு அந்த நேரத்திற்காக காத்திருந்தான்.

இரவு ஏழு மணிப்போல் இரு குடும்பத்தாரும் மணமக்கள் முன்னிலையில் நிச்சய தாம்பூலம் மாற்றிக் கொண்டனர்.

அந்த நேரத்தில் எல்லாம் மணப்பெண்ணான அம்முவின் பார்வை மொத்தமும் வெற்றியின் மீது தான்.

ஆனால் அவனோ அவளை கண்டுக்கொள்ளாது குனிந்த தலை நிமிராது மணப்பெண் செய்ய வேண்டிய அனைத்தையும் இவன் செய்தான்.

விஜயா பெண்ணின் புகைப்படம் அனுப்பிய போதும் பார்க்கவில்லை. இதோ இப்போது சிறு இடைவெளி விட்டு அமர்ந்திருக்கும் அம்முவையும் பார்க்கவில்லை.

‘மணப்பெண் யாரென்று தெரியாமலே இவன் எப்படி அவளிடம் சென்று பார்த்து பேசப்போறானோ ‘ என மனசாட்சி புலம்பல் விட

அதை கேட்ட வெற்றிக்கு அப்போது தான் இவ்விடயம் புத்தியில் உறைத்தது.

சரி என்று சிறிது தலை உயர்த்தி பார்க்க , அவளது முதுகு புறம் மட்டுமே தெரிந்தது. பூங்கோதை அவளை உள்ளே அழைத்து சென்றாள்.

‘ சரி , இனி எப்படி இருந்தாலும் மணப்பெண்ணை அந்த அறையை விட்டு அனுப்ப மாட்டார்கள்.அங்கே சென்று பார்க்கவேண்டியது தான்’ என்று நினைத்த வெற்றி அவனது அறைக்கு சென்றான்.

சிறிது நேரத்திலே அவனது அறைக்குள் வந்த காந்திமதி வெற்றியிடம் ஏதேதோ பேச , அவனும் அதற்கு மறுப்பு தெரிவித்தபடி இருக்க அடுத்த சில நிமிடங்களில் இருவருக்குமான  இறுக்கமான பேச்சுக்கள் தளர்ந்து சுமுகமான முறையில் முடிந்தது.

அதில் இருவருக்கும் பரம திருப்தி என்றால் , தன் மணாளனை பார்க்க வேண்டி திருட்டுத்தனமாக வந்த அம்முவிற்கு அவர்களின் பேச்சினை கேட்டு இடிந்து போய் அறைக்கு திரும்பிவிட்டாள்.

அத்தனை நேரம் இருந்த இலகு தன்மை மாறி , அவளிடம் ஒரு இறுக்கத்தை கொடுத்திருந்தது.

அந்த நேரத்தில் மணிமாறன் குழந்தை அஷ்வத்தை தூக்கி கொண்டு , கோதையை தேடி அறைக்கு வந்த மணிக்கு அம்முவின் சோக முகமே காட்சியாய் கிடைத்தது.

” அம்மு என்னாச்சி உனக்கு.? எதுக்கு சோகமா இருக்க சொல்லு ” என குழந்தையை கட்டிலில் படுக்க வைத்தான்.

” அதெல்லாம் ஒன்னும் இல்லை அத்தான் ” என அவன் முன்பு சிரிக்க முயன்றாள்.

” இந்த அத்தான் கிட்டயே பொய் சொல்றீயா நீ.? அந்த துரைபாண்டி ஏதாவது வம்பு பண்ணின்னா என்ன” என கோபத்தில் கேட்டான்.

” அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை அத்தான். நாளைக்கு அப்பா அம்மாவ பிரிய போறதை நினைச்சு கொஞ்சம் கவலையா இருந்தேன் அவ்வளவு தான் ” என்று பெரிய அத்தானிடம் தன் அத்தானை பற்றி கூறாமல் வேறு ஒன்று கூறி அவனை சமாதான படுத்தினாள்.

“இதுக்கா ஃபீல் பண்ற , உன் வெற்றி அத்தானை நினைச்சுக்கோ எல்லாமே மறந்து போயிடும் உனக்கு ” என கிண்டல் செய்ய

” போங்க அத்தான்…”

” சரி டா மா. குழந்தை தூங்கிட்டான் அதான் கோதை கிட்ட விட்டு போகலாம்னு வந்தேன். நீ பார்த்துக்கோ அவ வர வரைக்கும் ” என்று நகர்ந்து விட்டான்.

அடுத்த ஒருமணி நேரத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்க , பூங்கோதையாக இருக்கும் என நினைத்து கதவை திறந்த அம்முவிற்கு வெற்றி அங்கு நிற்பான் என்று சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.

அதையும் விட அவனுக்கு, அங்கே அவன் முன்பு நின்றிருந்த பெண்ணை பார்த்ததும் அவனின் இரண்டு விழிகளும் அதிர்ச்சியில் விரிந்து ” இனியா ” என்று அவளின் பெயரை உச்சரித்தது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!