மயங்கினேன் பொன்மானிலே – 4

பொன்மானிலே-4f14a6bc

மயங்கினேன் பொன்மானிலே – 4

அத்தியாயம் – 4

 சில மாதங்களுக்கு பின்…

         மிருதுளா பக்கவாட்டில் திரும்பி படுத்திருந்தாள். அவள் முகத்தில் அழகான புன்னகை. தன் வயிற்றை தடவி கொண்டாள். அவள் குழந்தை என்று கேட்டதும், பல விஷயங்களை பகிர்ந்து கொண்டான் வம்சி.

அவன் எதிர்பார்ப்புகள் என்று அவன் பலவற்றை கூறினான். அவை அனைத்தும் அவன் பக்க நியாயங்கள் என்று தோன்றினாலும், மிருதுளாவுக்கு முழுதாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருந்தாலும், அவனுக்காக ஏற்றுக் கொண்டாள்.

வம்சி அன்பையும் அக்கறையும் இவள் மேல் காட்டினாலும், அதற்கிடையில் பல வருத்தங்களும் அரங்கேறத்தான் செய்தன. அவள் எதையும் இப்பொழுது நினைத்து பார்க்க விரும்பவில்லை.

அவள் எண்ணங்கள் அதை மீண்டும் மீண்டும் சுற்றி வர, ‘இல்லை… நான் இனி அதை எல்லாம் நினைக்க கூடாது. நமக்குன்னு ஒரு குழந்தை வரப்போகுது. நான், என் குழந்தை, வம்சின்னு என் வாழ்க்கை நல்லாருக்கும்.’ அவள் புன்னகையோடு தன் வயிற்றை அழுத்திக் கொண்டாள்.

‘அம்மா, சொன்ன மாதிரி இனி எல்லாம் மாறும்.’ அவள் கண்களில் நம்பிக்கை கீற்று.

வம்சி அறைக்குள் நுழைந்தான். “நீங்க படுக்கலையா?” அவள் அவனை பார்த்ததும் எழ, “இ… இல்லை… நீ… நீ… படுத்துக்கோ” அவன் அவளை அக்கறையாக தோள் பிடித்து படுக்க வைக்க, அவளுள் பெருமிதம்.

‘அம்மா சொன்னது சரி தான். குழந்தை வந்தால் மாறிடுவாருன்னு சொன்னாங்களே. அக்கா, அக்கான்னு அங்கையே கிடப்பாங்க. இன்னைக்கு என் மேல் எவ்வளவு அக்கறை?’ அவள் முகத்தில் மலர்ச்சி.

அவன் அவள் தோள்களை பற்றியபடி குனிந்து நிற்க, அவள் அமர்ந்தபடி எம்பி அவன் கன்னத்தில் இதழ் பதித்து, “தேங்க்ஸ்…” என்று வெட்க புன்னகை புரிய,

“எ… எதுக்கு?” அவன் தடுமாறினான்.

“நான் நாள் தள்ளி போயிருக்குன்னு தான் சொன்னேன். உடனே, ஹாஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் எனக்கு செக் பண்ணிட்டு, மருந்து மாத்திரை எல்லாம் வாங்கி குடுத்து என்னை எவ்வளவு அக்கறையா பார்த்துக்கறீங்க?” அவள் கண்களில் காதல் மின்னல்.

அவன் இவளை ஆழமாக பார்த்தான். அவனுக்கு வார்த்தைகள் வரவில்லை. அவன் கண்களில் குற்ற உணர்ச்சி.

‘பங்காரு… நீ நல்லவ… ரொம்ப ரொம்ப அப்பாவி. ஆனால், நான்…’ அவனால் மேலும் அவள் முகத்தை பார்க்க முடியவில்லை. அவன் இதழ்கள் லேசாக வளைந்தது.

“பங்காரு…” அவன் அவள் கன்னம் தட்டி விலகி செல்ல எத்தனிக்க, “நீங்க எங்க போறீங்க?” அவன் அவள் கைகளை பிடித்து நிறுத்தினாள்.

அவன் அவள் முன் மெத்தையில் அமர்ந்தான். வழமையாக அவன் அக்கா, அக்கா குடும்பம் என்ற பேச்சை தவிர அவன் மிருதுளாவிடம் அன்பை மட்டும் தான் பொழிவான்.

‘பங்காரு… பங்காரு…’ என்று அவளை தான் சுற்றி வருவான். அவளுக்கு அவனை பிடிக்கும். அவளின் பிடித்தம் என்ற சொல் அவனின் குறைகளை அறிந்து குறைநிறைகளோடு அவனை அவளுக்கு பிடிக்கும்.

பல அவமானங்களை சகித்தும் இருக்கிறாள். அது அவன் மீது அவள் கொண்ட காதலின் உன்னதம்மா? இல்லை அக்கா என்ற சொல்லையும் தாண்டி அவன் அவள் மீது காட்டும் பரிவும், பாசமும், அக்கறையுமா? அவளுக்கே தெரியவில்லை.

அவனை திட்டி தீர்க்க வேண்டும் என்ற பொழுதுகள் கூட அவன் பேச்சில், அவன் தீண்டலில் காணாமல் போயிருக்கிறது என்பது தான் அவளாலே நம்ப முடியாத நிஜம். அவள் கண்களில் அவன் மீதான அன்பு மட்டுமே. அவள் மனம் முழுதும் அவன் மீதான காதலும் அன்பும் மட்டுமே.

ஆனால், அவன்!

அவன் மனசாட்சி அவனை கொன்றது. ‘பங்காரு, நான் உனக்கு செய்தது உனக்கு தெரிந்தால்… ம்… கொஞ்ச நேரத்தில் தெரிந்துவிடும்…’ அவன் இதய துடிப்பு எகிறியது.

“நான் உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திருக்கேன் இல்லை?” அவன் குரல் வழக்கத்திற்கு மாறாக குழைந்தது.

‘அட, குழந்தை வந்துவிட்டால், ஒரே நாளில் இப்படி மாறுவாங்களா என்ன?’ அவளே அதிசயித்து போகும் அளவுக்கு அவன் இறங்கி பேசினான்.

“கஷ்டம்முனு சொல்ல மாட்டேன். ஆனால், வருத்தம் தான். நீங்க என்ன வேணுமின்னா பண்றீங்க? உங்களுக்கு சரின்னு தோணுது செய்யறீங்க” அவளின் சந்தோஷ மனநிலையில் அவள் எதிர்காலத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையில் அவள் அனைத்தும் மறந்து அவள் அவனுக்காகவே பேசினாள்.

அவள் அவன் கைகளை அழுத்தமாக பற்றிக்கொண்டான். “பங்காரு, நான் ஏதாவது செய்தால் சரியா இருக்குமுன்னு நீ நம்புற தானே?” அவன் அவள் கைகளில் இதழ் பதிக்க அவன் கண்களில் நம்பிக்கையின் மின்னல்.

“உங்களுக்கு சரியா இருக்கும். எனக்கு இருக்குமுன்னு நான் நம்ப மாட்டேன்” அவள் சிரித்தாள். அவள் சிரிப்பு அவள் மனநிலையை கூற, அவனுக்கு பக்கென்று இருந்தது.

“உனக்கு சரியா இல்லைனா என்னை மன்னிப்ப தானே?” அவன் விடாமல் தயக்கத்தோடு கேட்டான்.

“எல்லா தப்புக்கும் மன்னிப்பு கிடையாது” அவள் அவன் தலையை குலைத்து விளையாடி, அவன் மார்பில் சாய்ந்து கன்னத்தை இழைத்துக்கொண்டு செல்லம் கொஞ்சினாள்.

அவன் அவளை ஆரத்தழுவிக் கொண்டான். நடக்க போகும் விபரீதம் அறிந்தவன் போல் அவன் கண்களில் கண்ணீர். அவளறியாமல் உள்ளிழுத்துக் கொண்டான்.

“பங்காரு…” அவன் அவளை இடையோடு தழுவி அன்பாக அழைக்க, “ம்…” அவள் குரல் இனிய கானமாக ஒலித்தது.

“நீ என்னை பாவான்னு கூப்பிடவே இல்லையே?” அவன் குரல் இப்பொழுது கெஞ்சியது. கொஞ்சியது.

‘அமைதியானவள்… பொறுமையானவள்… நல்லவள்… ஆனால், அதே நேரம் அழுத்தக்காரியும்… பிடிவாதாக்காரியும் கூட’ இந்த சில நாட்களில் அவளை பற்றி அவனும் அறிந்து வைத்திருந்தான்.

“எனக்கு கூப்பிடமுன்னு தோணும். ஆனால், முழுசா இன்னும் வரலை” அவள் மறுப்பாக அவன் மீதே சாய்ந்து தலை அசைக்க, அவள் ஒவ்வொரு அசைவும் அவன் மார்பை தீண்ட, அவன்,”பங்காரு… பங்காரு…” என்ற அழைப்பு அவள் செவிகளை தீண்டியது.

அவளை மேலும் தொந்திரவு செய்ய விரும்பாதவனாக, “நீ ரெஸ்ட் எடு” அவன் அவளை படுக்க வைத்து போர்வையைச் சரி செய்து விலகி சென்றான்.

அவள் கண்மூடி உறங்க எத்தனிக்க, அவன் அறைக்கு வெளியே சுவரில் சாய்ந்து காத்திருந்தான்.

திடிரென்று, “வீல்…” என்ற சத்தம். அவள் அலறலில், அவன் இதய துடிப்பு நின்றது.

தன் தலையில் அடித்து கொண்டு அழுதான். இழப்புக்காக அழுதானா, இல்லை தன் மனைவியின் வலியை தாங்க முடியாமல் அழுதானா அவனுக்கும் புரியவில்லை.

“பங்காரு…” அவன் உள்ளே செல்ல, “முடியலைங்க… ரொம்ப ரொம்ப வயிறு வலிக்குது” அவள் அவன் சட்டையை இறுக பற்றினாள்.

“பங்காரு… ஒண்ணுமில்லை… எல்லாம் சரியாகிரும்” அவன் எதிர்பார்த்திருந்தவன் போல் அவளுக்கு ஆறுதல் கூறினான்.

அடுத்தடுத்ததாக இரத்த கறைகள் என நிஜத்தை அவளுக்கு உணர்த்த, அவள் தலையில் அடித்து கொண்டு அழுதாள்.

“நான் ஹாஸ்பிடல்க்கு போகணும்.” அவள் குரல் மயக்கத்தில் உளற, “பங்காரு…” அவன் அவளை கைகளில் ஏந்திக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றான்.

மருத்துவமனையில்.

அவள் வலியில் துடிக்க, அவன் அவளருகே இருந்தான்.

“குழந்தை இல்லையோ? குழந்தை… கு…” அவள் அவன் முகம் பார்த்து அப்பாவியாக கேட்க, “பங்காரு…” அவன் அவளை அணைத்துக்கொண்டான்.

அவள் கண்களில் கண்ணீர் தாரைதாரையாக வழிய, அவன் கண்களிலும் கண்ணீர்.

“பாவா…” அவள் இதழ்கள், அவன் கேட்ட அழைப்பை அழைத்தது.

வலியோடு! வருத்தத்தோடு! ஏக்கத்தோடு! இயலாமையோடு! அவனால் ஏதாவது செய்து விட முடியாதா என்ற எதிர்பார்ப்போடு!

அவன் அவள் அழைப்பில் நிலைகுலைந்து போனான். ‘என்னை நம்பி அழைக்கிறாள்.’ அவன் மனசாட்சி அவனை குத்தி குதறியது.

அந்த அழைப்போடு உடலில் தெம்பில்லாமல் அவள் மயங்கி சரிந்தாள். அதன் பின் மருத்துவமனை சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பினாள் மிருதுளா.

அவள் எதுவும் பேசவில்லை. எதுவும் சாப்பிடவில்லை. தீவிர சிந்தனையில் இருந்தாள்.

“பங்காரு, ஏதாவது சாப்பிடு” அவன் கூற, அவளிடம் மௌனம்.

“கொஞ்ச நாள் கழித்து நமக்கு குழந்தை வரும்.” அவன் சமாதானம் கூற, “எதுக்கு நீங்க திரும்பவும் நல்லவர் வேஷம் போட்டு என் குழந்தையை கொல்லவா?” அவள் கேட்க, அவன் அதிர்ந்து நின்றான்.

“பங்காரு…” அவன் அழைக்க, “என் பெயர் மிருதுளா.” அவள் கூற, “ப…” அவன் அழைக்க ஆரம்பிக்க, அவள் அருகே இருந்த பொருளை தூக்கி சுவரில் அடித்தாள்.

“மிருதுளான்னு கூப்பிடனும்” அவள் குரலில் கர்ஜனை இருந்தது.

“…” அவன் சற்று அரண்டு போனான்.

“உனக்கு எல்லாம் தெரியும். அப்படித்தானே?” அவன் கேட்க,

“நடந்த விஷயத்தில் நீங்க கொஞ்சம் கூட அதிர்ச்சி அடையவே இல்லை. எதிர்பார்த்து இருந்தீங்க. ரொம்ப இயல்பா ஏத்துக்கிட்டிங்க. சந்தேகம் வந்து நான் ஹாஸ்பிடலில் எல்லாம் கேட்டு தெரிஞ்சிகிட்டேன்.” அவள் மறைக்க எதுவும் இல்லை என்பது போல் பேசினாள்.

“நீ இவ்வளவு புத்திசாலியா இருந்திருக்க வேண்டாம் பங்காரு” அவன் கூற,

“நான் புத்திசாலியா தான் இருந்தேன். ஆனால், உங்களை கல்யாணம் செய்த பிறகு தான் என் மூளை மங்கி போச்சு. எனக்கு மூளை இருந்திருந்தால், உங்களை நம்பி இருப்பேனா? நீங்க காட்டிய பாசத்தை என் மேல் காட்டிய பாசம்முன்னு நம்பி இருப்பேனா? என் குழந்தை மேல காட்டிய அக்கறைன்னு நம்பி ஏமாந்திருப்பேனா?” அவள் கண்களில் கண்ணீர் மல்கியது.

“நான் உன் மேல் காட்டிய பாசம் நிஜம்.” அவன் வார்த்தை உறுதியாக வெளி வந்தது.

‘இவனை அடித்து கொன்றால் என்ன?’ என்ற வெறி அவளுள் கிளம்பியது.

“ஓ… அது தான் என் குழந்தையை அழிச்சிடீங்களா?” அவளுக்கு காரணம் தெரிய வேண்டும்.

“அழிக்கிறது உனக்கு தெரியாம இயல்பா நடக்கணும்னு நினச்சேன்.” அவன் கூற, “ஓ… அது தான் அக்கறை போல் ஏமாத்தி, எனக்கு மாத்திரையை மாத்தி கொடுத்து என் பிள்ளையை சாவடிச்சிடீங்க?” அவள் கேட்க, அவனிடம் மௌனம்.

“எத்தனை பசப்பு வார்த்தைகள். நீயெல்லாம் ஒரு மனுஷனா?” அவள் அருவருப்பாய் முகத்தை சுளிக்க, “ரொம்ப பேசாத. எனக்கும் வலி தான். எனக்கும் கஷ்டமா தான் இருக்கு. ஆனால், எனக்கு வேற வலி தெரியலை.” அவன் வேதனையோடு கூறினான்.

அவள் கண்கள் இடுங்கியது.

“அம்மா, அப்பா என்னை பார்த்துக்க வரேன்னு சொன்னாங்க. நான் வந்ததும், அவங்க கூட கிளம்புறேன்.” அவள் கூற,

“பங்காரு…” அவன் குரல் இப்பொழுது உடைந்தது.

“என் பக்க நியாயத்தை நீ கேட்க கூடாதா?” அவன் அவள் முன் நின்று மன்றாடினான்.

“…” அவள் எதுவும் பேசவில்லை. அவள் கேட்கும் மனநிலையிலோ, பேசும் மனநிலையிலோ இல்லை.

அவள் மௌனத்தை சாதகமாக எடுத்துக்கொண்டு, அவன் பேச ஆரம்பித்தான்.

“அக்கா, ரொம்ப நாளைக்கு அப்புறம் இரண்டாவது குழந்தை உண்டாக்கிருக்காங்க. உன்னை பார்த்துக்க அம்மா, அப்பா எல்லாம் இருக்காங்க. அக்காவுக்கு யாருமே இல்லையே” அவன் குரல் விளக்க முற்பட,

அவள் அதிர்ந்து அமர்ந்தாள்.

“சிந்து பிறக்கும் பொழுது கூட, எங்களுக்கு அம்மா அப்பா இல்லையா? அக்காவை அத்தான் வீட்டில் தான் பார்த்துக்கிட்டாங்க. இரண்டாவது குழந்தை பிறக்கும் பொழுது அக்காவையும் குழந்தையையும் நாம பார்த்துக்கணும்னு நினச்சேன் பங்காரு. நமக்கும் இப்ப குழந்தை வந்தா அக்காவை எப்படி பார்த்திக்கிறது?” அவன் பரிதவிப்போடு கேட்டான்.

‘இவனுக்கு தான் செய்தது தப்பு என்று புரியவில்லையா?’ அவள் கண்களை இடுக்கி அவனை பார்த்தாள்.

“என்னை அம்மா, அப்பா மாதிரி வளர்த்த அக்காவுக்கு நான் என்ன கைமாறு செய்வேன்?” அவன் கண்களில் கண்ணீர் பெருகியது.

“உங்கிட்ட சொல்லாமல் நான் அப்படி பண்ணது தப்புத்தான். ஆனால், சொன்னா நீ ரொம்ப வருத்தப்படுவ. இது இயல்பா நடந்த மாதிரி இருக்கும். நமக்கு வயசும், காலமும் இருக்கு எப்ப வேணும்ன்னாலும் குழந்தை பெத்துக்கலாமே?” அவன் அவள் முகத்தை கைகளில் ஏந்தி விளக்கமளித்தான்.

“நான் எவ்வளவு ஏமாளியா இருந்திருக்கேன் இல்லை? உங்க அக்கா குடும்பத்துக்கு தேவை ஒரு வேலைக்காரி. அதுக்கு நான் வேணும். அந்த வேலை எல்லாம் முடிச்ச பிறகு உங்களுக்கு ஒரு பொண்டாட்டி வேணும்…” அவள் சட்டென்று தன் பேச்சை நிறுத்தினாள்.

“வேண்டாம். நான் பேசலை. எனக்கு சண்டை போட மனசும் இல்லை. அதுக்கு என் உடம்பில் தெம்பும் இல்லை. நான் அம்மா, அப்பா கூட கிளம்புறேன்.” அவள் முடித்துவிட,

“நீ போக கூடாது பங்காரு” அவன் குரல் உயர்ந்தது.

“எந்த அக்கா குழந்தையை பார்த்துக்க என் குழந்தை வேண்டாமுன்னு சொன்னீங்களோ? அந்த அக்கா குழந்தையை நீங்க தனியா பாருங்க, இல்லை என்னமும் பண்ணுங்க. அதே மாதிரி உங்க சுயநலத்துக்கு தீனி நான் கிடையாது” அவள் குரலும் உயர்ந்தது.

“பங்காரு… நான் பண்ணது தப்புனா உன் காலில்…” அவன் இறங்க, “போதும்….” அவள் கைகள் உயர்ந்தது.

“நீங்க சங்கை பிடிச்சாலும் சரி, காலை பிடிச்சாலும் சரி… ஒரு பொண்ணு தனக்கு அவமானம் ஏற்படும் பொழுது பொறுமையா இருப்பா. மன்னிப்பா… ஆனால், தன் குழந்தைக்குனு வரும் பொழுது மன்னிக்க மாட்டா.” அவள் குரல் அவனை விட அழுத்தமாக இருந்தது.

“அதே மாதிரி, உங்களை திருத்தி உங்களுக்கு உண்மையை புரிய வைக்க தான் நாங்க பொறந்திருக்கோமா என்ன?” அவள் கேள்வி சாட்டையடியாக இறங்கியது.

மேலே என்ன பேசுவது என்று தெரியாமல் அவன் மௌனமாக வெளியேறி விட்டான்.

‘இவளை எப்படி தடுத்து நிறுத்துவது?’ என்ற கேள்வியை அவன் சிந்தை எழுப்ப, ‘பங்காரு, இல்லாமல் நான் எப்படி வாழுவேன்?’ என்ற கேள்வியை அவன் மனம் எழுப்பியது.

மயங்கும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!