மழைத்துளி-1

IMG-20210619-WA0109-995f8228

மழைத்துளி-1

அற்றைத் திங்கள் மழைத்துளி

மழைத்துளி-1

சோழவந்தான்.
மதுரையில் இருந்து 23கி.மீ தொலைவில் வாடிப்பட்டி வட்டத்தில் உள்ள
பேரூராட்சி. இராமாயணத்தில் வரும் ஜனகரின் மகள் ஜானகியைப்
போற்றும் வகையில், முன்னால் ஜெனகபுரம் என்று அழைக்கப்பட்ட
ஊராகும். பாண்டிய நாடான இவ்வூருக்கு ஒருநாள் வருகை தந்த
சோழமன்னன் வயல்களையும் அதன் செழிப்பையும் கண்டு வியந்ததால்
‘சோழன் உவந்தான்’ என்று அழைக்கப்பட்டது. அதுவே காலப்போக்கில்
மருவி தற்போது சோழவந்தான் என்று அழைக்கப்படுகிறது.

வைகை ஆற்றுபடுக்கையில் அமைந்த இவ்வூர் நாகமலை மற்றும்
சிறுமலை பள்ளத்தாக்குகளுக்கு இடையில் அழகே உருவமாய்
காட்சியளிக்கிறது. தென்னை, கரும்பு, வெற்றிலை, நெல், வாழை என்று
அம்மண்ணில் குறைவில்லாமல் விளைய, திருவிழா போன்ற
சமயங்களில் நம் பாரம்பரிய விளையாட்டுகளான ஏறு தழுவுதல் மற்றும்
சேவற்சண்டைகளும் சிறப்பாக நடைபெறும். இன்னும் சில தினங்களில்
கோயில் திருவிழாவும் நடைபெற இருக்க அதற்குண்டான ராஜபோக
ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது பெரியவீட்டில் இருந்து.

காலை ஐந்தரை மணிக்கு விடியல் இந்த பூமிக்கு வருகை தந்து
கொண்டிருந்தது. புலர்ந்தும் புலராத அந்தக் காலைப்பொழுதில்
பறவைகள், ‘கீச்கீச்’ என்று தன் இசையை எழுப்பியபடி வானில் சிதற…
சூரியன் கம்பீரத்துடன் உதியமாகிக் கொண்டிருந்தான்.

அந்த இளங்காலைத் தென்றல் காலை ரம்யமாக வீச அந்த ஏழு ஏக்கர்
தென்னந்தோப்பிற்கு நடுவில் கம்பீரமாக மிடுக்குடன் வீற்றிருந்தது
பெரியவீடு. வீட்டை சுற்றி மதில் சுவர்கள் எழுப்பப்பட்டு அதைச் சுற்றி
முழுவதும் தென்னந்தோப்பிற்கு நடுவில் இருந்தது அரண்மனை
போன்ற வீடு. பரம்பரை பரம்பரையாக சோழவந்தானில் அதற்கும்
அவ்வீட்டில் இருப்பவர்களுக்கும் கிடைக்கும் மரியாதைக்கு எதுவும்
நிகரில்லை. எந்த ஒருமுடிவாக இருந்தாலும் அதை இங்கு கலந்து கேட்ட
பின்புதான் முடிவு செய்யப்படும். அப்படிப்பட்ட பெயர்போன குணமுள்ள
மனிதர்கள். வீட்டிற்கு வரும் உறவினர்களை அன்பாக உபசரிப்பதிலும்
சரி, உதவிதேடி வருபவர்களை மனநிறைவோடு அனுப்புவதிலும் சரி
பெரிய வீட்டுக்காரர்களுக்கு ஈடுஇணை கிடையாது.

அந்த காலைப்பொழுதில் குளித்துமுடித்து கோலமிட்டு, வீடே
சாம்பிராணி கமழ கடவுளின் முன் கண்மூடி வேண்டிக்கொண்டிருந்தார்
அந்த வீட்டின் குடும்பத்தலைவி விசாலாட்சி. சாம்பிராணி தூபக்காலை
கையில் எடுத்தவர் வீட்டின் முழுதும் பக்தியோடு சுற்றிவந்து, வீட்டிற்கு பின்னும் சென்று அவர்கள் வணங்கும் முதல்கடவுளான
அவர்களது கோமாதாகளுக்கு காட்டிவிட்டு மீண்டும் உள்ளே நுழைந்தார்.

வெளியே வந்தவர் இன்னும் வேலையாள் வராமல் இருக்க, தாங்கள்
வளர்க்கும் கோழி, ஆடு, பசு, எருமை அனைத்திற்கும் தீவனங்களை
எடுத்துப்போட ஆரம்பித்தார். அதில் ஒரு ஆட்டைக் கண்டவர் அதை
வாஞ்சையுடன் நீவிக் கொஞ்சி முத்தமிட்டு வயிற்றுப் பகுதியில் கை
வைத்துப் பார்த்தார். இன்னும் ஏழு நாட்களில் அது இன்னொரு உயிரை
பூமிக்கு கொண்டுவர உள்ளது.

“அடியாத்தி! என்னங்கமா நீங்க இந்த வேலையைப் பாத்துக்கிட்டு” என்று
ஓடி வந்து கையில் தீவனங்களை எடுத்தாள் சிட்டு. பெரியவீட்டில் நீண்ட
நாட்களாக வேலை செய்யும் நடுத்தர வயதுப் பெண்மணி.

“பின்னே, நீ வர வரைக்கும் இவிங்க வயித்தைக் காயப்போட முடியுமா
சொல்லு” என்று மென்மையான குரலுடன்,அதேசமயம் அவள்
தாமதமாக வந்ததிற்கு குற்றம் சாற்றும் தோரணையுடன் கேட்டார்
விசாலாட்சி.

“மன்னிச்சிடுங்கமா” என்ற சிட்டின் கன்னத்தில் இருந்த கைத்தடத்தை
கவனித்தார் விசாலாட்சி. “ஏஞ்சிட்டு. உன் வூட்டுக்காரன் அடிச்சானா?”
என்று நேரடியாகக் கேட்டார் அவர். பதில் பேசாமல் தலைகுனிந்து அப்பாவியாக நின்ற பெண்ணைப் பார்த்தவர், “அவனை சாயங்காலமா
ஐயாவை வந்து பாத்துட்டு போவச் சொல்லு” என்றவரை நிமிர்ந்து
பார்த்த பெண்ணின் கண்களில் கண்ணீர்.

“பொம்பளைப் புள்ளைக பொறுத்துப் போலாம் சிட்டு. ஆனா,
அவிங்ககிட்டஅடி வாங்கிபுட்டு சகிச்சிட்டு வாழணும்னு இல்ல” என்றவர்
உள்ளே சென்றுவிட்டார். கைகளைக் கழுவிக்கொண்டு உள்ளே
சென்றவர் மாமியார் குளித்துமுடித்து வருவதைக் கவனித்து, அவர் முன்
தீபாராதனைத் தட்டை நீட்டினார்.

காலை நேரத்தில் மங்களகரமாய் தன் முன் நிற்கும் மருமகளைப் பார்த்த
தையல்நாயகி, “உம் பொறுப்பு எனக்கே வராதுத்தா” என்று கைகளில்
திருநீரை எடுத்தவர் பட்டையாக அதைத் தன் நெற்றியில் தீட்டினார்.

“உன் வீட்டுக்காரன் எங்கே?” என்று தையல்நாயகி கேட்க, “அவுக நம்ம
வாழையைப் பாக்க போயிருக்காக அத்தை” என்றார்.

“பெரியம்மா எனக்கு…” என்றபடி ஸ்ருதி ஈரத் தலையைக் கட்டியபடி
பொலிவுடன் வந்தாள். “இன்னிக்கு நாந்தேன் பர்ஸ்டு” என்றார்
தையல்நாயகி ஸ்ருதியைப் பார்த்தபடி.

“போங்க அப்பத்தா. நான் அப்பவே கீழ வந்தேன். நீங்க உள்ளார இருந்தீக. பெரியம்மா இல்லனு மேல போயிட்டு வர்றதுக்குள்ளார நீங்க
வந்துட்டீக” என்று ஸ்ருதி வாதாட,

“அத்தை. நீங்க இந்தப் புள்ளகிட்ட வாயை கொடுக்காதீக. அப்புறம் உங்க
சத்து எல்லாம் அம்புட்டுதான்” என்று நடக்கவிருக்கும் விவாதமேடைக்கு
விசாலாட்சி கண்டனம் தெரிவித்துவிட்டு சமையல் அறைக்குள் புகுந்தார்.

“ஏன்டி. என் பேரனும் நண்டும் எழற நேரமாச்சு பாரு. வெரசா அவனுக்கு
செம்பருத்தி டீயும்… நண்டுக்கு பாலையும் எடுத்திட்டுப்போ” என்று
மூத்தவர் ஸ்ருதியை துரத்த, “அப்ப நாந்தேன் இன்னிக்கு மொத
எழுந்தேன்னு ஒத்துக்கங்க அப்பத்தா” என்று ஸ்ருதி கேட்ட விதத்தில்,
“ம்கூம்” என்று நொடித்த தையல்நாயகி, “நீதான் மொத. போதுமா
வாயாடி” என்று அவர் கழுத்தைத் திருப்பிக்கொண்டு செல்ல… ஸ்ருதி
சிரித்துக்கொண்டே கணவன் மகளுக்கு தேவையானதை
எடுத்துக்கொண்டு மேலே சென்றாள்.

சமையலை செய்து, சில வேலைகளை தன் மேற்பார்வையில்
வேலையாட்களிடம் வாங்கிய விசாலாட்சி வண்டி வரும் சத்தம் கேட்டு
யாரென எட்டிப் பார்த்தபடி வெளியில் வந்தார். “பெரியய்யா
இருக்காகளா?” என்றபடி ஒரு ஆள் டெம்போவிலிருந்து இறங்க,

“நீங்க யாரு?” என்று வினவினார்.

“தென்னமட்டை எடுத்துட்டு வரச்சொல்லி மில்லுக்காரவ வீட்டுல இருந்து
அனுப்பி விட்டாக” என்று ட்ரைவர் சொல்ல,

“பெரியய்யா வெளிய போயிருக்காவ. நான் ஆளை அனுப்பறேன்”
என்றவர், “எலேய் வேலா… இங்கன வா” என்று அழைக்க அவனோ
கூப்பிட்ட வேகத்தில் மரியாதையுடன் ஓடி வந்தான்.

“இவுகள கூட்டிட்டு போய் தென்னமட்டை வண்டில எடுத்துப் போட்டுவிடு”
என்றவர் திரும்ப, “அம்மா… எம்புட்டு ஆச்சுன்னு…” டிரைவர் இழுக்க, “எம்
பேரன் தோட்டத்துல தான் இருக்கான். அங்க குடுத்திடுவே” என்றார்
தையல்நாயகி. பேரன் என்று சொல்லும்போதே தையல்நாயகிக்கு
பெருமை தாளவில்லை. இந்த ஊரே இப்போது அவன் சொல்பேச்சை
அல்லவா கேட்கிறது. “நம்ம பய சொன்னா சரியாத்தான் இருக்கும்”
என்று வயதில் மூத்தவர்களே அவன் கருத்தை ஆமோதித்து நடப்பதில்
அவ்வளவு ஒரு பெருமை இந்தப் பெண்மணிக்கு.

அவர்கள் கிளம்பி சென்றபின், “எத்தனை மணிக்கு எழுந்து போனான்?”
என்று மாமியாரிடம் விசாலாட்சி வினவ, “அதெல்லாம் காத்தால நாலு
மணிக்கே கிளம்பி போயிட்டான். அந்த அமுசா பையன் வேற
வந்திருந்தான்” அமர்ஷா என்ற பெயரை மாமியார் அமுசா என்று
சொல்லி கொலை செய்ய சிரித்தபடியே சமையல் அறைக்குள்
புகுந்துகொண்டார் விசாலாட்சி.

சேனாதிபதி-விசாலாட்சியின் மூத்த அருமைப் புத்திரனைப் பற்றித்தான்
இருவரும் பேசிக்கொண்டது. 28 வயதான வெற்றிவேந்தன். அவர்களது
வம்சம் தழைக்கப் பிறந்த அந்த குடும்பத்தின் மூத்தவாரிசு. சிறுவயது
முதலே குடும்பத்தின் அருமை பெருமைகளை அறிந்து வளர்ந்தவன்,
அதற்கு இழிவு செய்யும் வகையில் இதுவரை எதையும் கொண்டுவந்தது
இல்லை. சிறுவயதில் இருந்து புத்திக்கூர்மையும் அதிகம். அந்தப்
பரம்பரை வாரிசிற்கே உண்டான கம்பீரமும் ஆளுமையும் தேஜஸும்
உடையவன். விருப்பப்படி, ‘லா’ எடுத்துப் படித்தவன் தற்போது
அட்வக்கேட்டாக இருக்கிறான் மதுரை உயர்நீதிமன்றத்தில்.

அவனின் ஒரே தங்கை கவிநயா. சென்னையில் மருத்துவப் படிப்பின்
இறுதி ஆண்டான, “ஹவுஸ் சர்ஜனில்” இருக்கிறாள். சேனாதிபதியின்
தங்கையும் கணவரும் ஒரு விபத்தில் இருபது வருடங்களுக்கு முன்பு
மரித்துவிட, தங்கை மகன் வாசுதேவனை எடுத்து தன் மகன் போலவே
சேனாதிபதி வளர்த்தார். விசாலாட்சி ஒருபடி மேலே சென்று அவனிற்கு
தாய் தந்தை குறை இல்லாமல் பார்த்துக்கொண்டார். வெற்றியைவிட
மூன்று மாதங்களுக்கு மூத்தவன் வாசுதேவன். ஆனால், ஜாதகப்படி
இருபத்தைந்திலே வாசுவிற்கு மணமுடிக்க வேண்டும் என்று ஜோசியர்
ஒருவர் சொல்லிவிட அவனிற்கு அப்போதே மதுரைக்குள் இருந்து
ஸ்ருதியைப் பார்த்து மணமுடித்து வைத்தனர். ஸ்ருதி வாசுவின் தந்தை
உறவினர் வழியில் தூரத்து உறவு. ஜாதகம் ஒத்துப்போக வாசுவின்
விருப்பம் கேட்டு… அடுத்த முகூர்த்தத்திலேயே அவர்களது
திருமணத்தை நடத்தினர்.

அவர்களது காதல் வாழ்க்கைக்கு ஸ்ருதியின் மணி வயிற்றில் உதித்த
மொட்டே அதீதி வாசுதேவன். தற்போது துள்ளிக் குதித்து
அனைவரையும் தன் சிரிப்பால் கவரும் இரண்டரை வயது
நண்டு. தையல்நாயகியின் கணவர் (சேனாதிபதியின் தந்தை) பத்து
ஆண்டுகளுக்கு முன்பே இறைவனடி சேர்ந்துவிட தற்போது அவருக்கும்
இந்தக் குடும்பமே உலகமாகிப் போனது.

கிராமத்தில் இருந்தாலும் மதுரை சிட்டியில் படித்துக்கொண்டு வந்த நம்
வெற்றிவேந்தனுக்கு சில மறைமுகமாக பெண் விசிறிகளும் இருந்தனர்.
எப்போதும் ஒரு அயர்ன் செய்த சட்டை, ப்ளூ ஜீன்ஸ், மேல் பட்டன்
கழன்று இருப்பதால் தெரியும் அவனது புலிப்பல் வைத்த தங்கச்சங்கிலி.
நெடுநெடுவென உயரமாக, மாநிறத்திற்கும் குறைவாக இருக்கும்
அனைவரையும் வசீகரிக்கும் தோரணை.

மேலும் அவன் ஊர்ப் பெண்களுக்காகவும் அவர்களது கல்விக்காகவும்
செயல்பட அதற்கே ஒரு பட்டாளம் அவனை விடாமல் சைட் அடித்துக்
கொண்டிருந்தது. அதில் அவன் மாமன் மகள் சத்யாவும் ஒருத்தி.

வெற்றிவேந்தனின் கோபமும் அப்படித் தான். சுள்ளென்று வரும்.
கோபம் வந்து தப்பென்று தெரிந்தால் கைவைத்து விடுவான்.
இப்போதும் அப்படித்தான் தோட்டத்தில் வெற்றிவேந்தன் கொடுத்த
அறையில் அந்த இளவட்டக் கும்பலில் ஒருவன் சுருண்டு விழுந்தான்.
வெற்றிவேந்தனின் ஆஜானுபாகுவான தோற்றித்தில் அறை
வாங்கியவன் மிரண்டு போய் கன்னத்தில் கையை வைத்தபடி
நின்றிருந்தான். “என்னடா… பொம்பளைப் புள்ளைக காலேஜ்
போயிட்டு வந்தா இளக்காரமா இருக்கோ. போயிட்டு வார புள்ளைக
கிட்ட லந்தா கொடுக்கற” என்று ஒருவனின் சட்டையை
கொத்தாய் வெற்றி பிடிக்க,

“மாப்ளே… இவனுக புள்ளைகக்கிட்ட ‘அப்படி என்னத்த காலேஜுக்கு
போய் கிழிக்கப்போறீக. எப்படியும் படிச்சதுக்கு அப்புறம் கல்யாணம்
பண்ணிப் புள்ளக் குட்டியை பெத்துப் போடறதுதான உங்க வேலைனு’
பேசிற்காய்ங்க” என்று வெற்றியின் ஆருயிர் தோழனான
அமர்ஷா எடுத்துக்கொடுக்க வெற்றிக்கோ கோபம் தலைக்கேறியது.

“ஏன்டா இப்பத்தான் நம்ம ஊருப் புள்ளைக தைரியமா வெளிய வந்து
படிக்குதுக… அதையும் வம்புக்கு இழுத்து மறுபடியும் அடுப்படியில தள்ள
பாக்கறீகளோ கூட்டு சேர்ந்துட்டு” என்று அங்கிருந்த நான்கு
பசங்களைக் கண்டிக்கும் தொணியில் கேட்க
அவர்களோ மென்று விழுங்கினர்.

இப்போதுதான் வெற்றி தன் ஊரில் இருக்கும் பெண்குழந்தைகள் பள்ளி
முடித்தவுடன் வேலைக்கு அல்லது திருமணம் செய்வதைத் தடுத்து
நிறுத்தி, ஒவ்வொருவரையும் இளங்கலை படிக்க வைக்க முயற்சித்துக்
கொண்டிருக்கிறான். ஒவ்வொரு பெண்ணாக கல்லூரி செல்ல
ஆரம்பிக்க அதிலும் தடைகளாய் சில துள்ளும் இளைஞர்கள். கேலி
செய்வது பின்னாலேயே சென்று பேச்சுக்கொடுத்து தொந்திரவு
செய்வது என சிலர் ஹீரோயிசம் செய்வதை வாடிக்கையாக
வைத்திருக்க… அதை யார் மூலமாகவோ அறிந்துகொண்ட அமர்ஷா
நேற்று இரவே நண்பனின் காதில் மந்திரம் ஓத, இன்று தோட்டத்தில்
அவர்களுக்கு பூஜை நடந்து கொண்டிருந்தது.

“நீங்கதான் படிச்சு முடிச்சிட்டு சொன்னதைக் கேக்காம ஊரைச் சுத்தீட்டு
திரியறீக. படிக்கற புள்ளைகள ஏன்டா தொந்திரவு பண்றீக” என்று
மிரட்டலாக வினவி அதட்டியவன், “இனி இந்த சோலியப் பாத்துட்டு
திரிஞ்சீகனு எங்காதுக்கு வந்துச்சு. உரிச்சு உப்புக்கண்டம்
ஆக்கிடுவேன்” என்று எச்சரித்து வெற்றி அனுப்பி வைக்க
அவர்களும் தப்பித்தோம் என்று நினைத்தபடி ஓடினர்.

“ஏன் மாப்ளே… இன்னும் இரண்டு அடி போடுவேனு நினைச்சேன்.
போவச் சொல்லிட்ட?” அமர்ஷா வினவ, “இளந்தாரி பயலுவடா. அப்படி
இப்படி தான் இருப்பானுவ. செத்த மிரட்டுனா அடங்கீருவானுக” என்றான்.

அதற்குள் வண்டியில் வந்து இறங்கிய வேலனைக் கண்டவன்
கேள்வியான பார்வையை வீச, “தென்னமட்டை எடுக்க மில்லுக்காரவ
வூட்டுல இருந்து வந்திருக்காக சின்னய்யா. பெரியாத்தா தான் நீங்க
இங்கன இருக்கீங்கனு எங்கள அனுப்பிவிட்டாக” என்று வேலன்
விளக்கமளிக்க, அனைத்தையும் எடுத்து வண்டியில் ஏற்றச் சொன்னான்
வெற்றி.

ஏற்றிய பிறகு அதற்குண்டான தொகையை கணக்கிட்டவன்
சேனாதிபதியின் வலதுகை அங்கு வர, “சங்கரு அண்ணே! இதோ
தென்னமட்டைக் கணக்கு. காசை வாங்கிட்டு மத்த கணக்கும் பாத்துட்டு
ஐஞ்சுமணிக்கு வந்து அம்மாகிட்ட தந்துடுங்க” என்றவன் நண்பனோடு
மதுரை கிளம்பினான்.

மாலைவரை மதுரையில் உள்ள தங்கள் வக்கீல் அலுவலகத்தில்
வேலையை பார்த்த நண்பர்கள் இருவரும் அவரவர் வீட்டுக்கு கிளம்ப,
“மாப்ளே… வானத்தைப் பாத்தா மழை அடிச்சு ஊத்தப்போகுதுனு
நினைக்கறேன்” என்று அமர்ஷா சொல்ல,

“சீக்கிரம் வீட்டுக்கு போயிட்டு மெசேஜ் அனுப்பு மாப்ளே” என்று வெற்றி
சொல்ல இருவரும் அவரவர் வீட்டிற்குக் கிளம்பினர்.

•••

நள்ளிரவு பண்ணிரெண்டு மணி.

மின்னலின் ஒளி நடுவானில் இருந்து விரிசலாய் கீழே இறங்க இடியின்
முழக்கம் ஒய்யாரமான சத்தத்துடன், ஆக்ரோஷமாக மதுரை மண்ணைத்
தொட கூடவே ஆகாயத்தின் அழுகுரலாய் மழைத்துளிகள். மதுரையைத்
தாண்டி 4கி.மீ தொலைவிலுள்ள அந்த பழனி செல்லும் நெடுஞ்சாலை
(பைபாஸ் ரோடு) ஒளியற்ற அண்டமாய் இருள் சூழ்ந்து காட்சியளித்தது.
நெடுஞ்சாலையில் ஓடிக் கொண்டிருக்கும் சில லாரி, பேருந்தின்
சக்கரத்தின் சத்தங்கள் தவிர எந்தவொரு ஆரவாரமும் இல்லாமல்,
மனிதர்கள் நடமாட்டமும் இல்லாமல் காட்சியளித்துக் கொண்டிருந்தது
அந்த இடம்.

அந்த நெடுஞ்சாலையின் பக்கமாக உள்ளே சென்ற, ஒரு குறுகலான
மண்வழி சாலையைக் கண்ட காற்றும் பயந்து பின் வாங்கியது.
காற்றின் வேகத்தில் மரத்தின் இலைகள் தந்த சப்தத்தங்கள் ரசிக்கும்
வண்ணம் இல்லாமல்… இலைகள் சொன்ன செய்தி காற்றையும்
உறையச் செய்துவிடுவதாய் இருந்தது. தயங்கித் தயங்கி இரண்டு
கிலோ மீட்டர் அதே வழியில் பயணித்த காற்று அந்த தோப்பின் நடுவில்
ஒற்றை அறைமட்டும் கொண்ட சிறிய ஓட்டு வீட்டின் சன்னலை பயத்துடன் எட்டிப் பார்த்து அழுதது. உள்ளே மயக்கத்தில் கிடந்த இளம்
பெண்ணவளைக் கண்ட காற்று தன்னால் முயன்று வேகமாய் வீச,
மழையோடு அது கலந்ததில் மழைச் சாரலாய் அந்த சன்னல் வழியே
சென்று… உள்ள மயங்கி இருந்த பெண்ணவளின் முகத்தில் அடித்தது.

‘என்னால் முடிந்தவரை செய்துவிட்டேன் இனி உன் சாமர்த்தியம்’ என்று
நினைத்த காற்று மௌனமாய் மருகிக்கொண்டு இனி நடக்கவிருப்பதை
பார்க்க மனமில்லாமல் அங்கிருந்து வேறொரு திசைக்குப்
பறந்தோடியது.

மழைச்சாரல் முகத்தில் அடித்த வேகத்தில் மயங்கிக் கிடந்தவளின்
மயக்கம் தெளிய ஆரம்பித்தது. சுமார் அரை நாளிற்கு மேல் மயக்கதில்
இருந்தவளுக்கு மழையின் உதவியால் மெல்ல மெல்ல நினைவு
திரும்பியது.

“ம்மா…” என்ற முனகலுடன் எழுந்தவளுக்கு தனக்கு கொடுத்த
மருந்தின் வீரியத்தால் தலை கனத்து பார்வை மங்கலாகத் தெரிந்தது.
இருளுடன் சூழ்ந்த இடத்தைக் கண்டவளுக்கு காலையில் இருந்து
நடந்தது நினைவு வர மனதில் பயம் கொஞ்சம் கொஞ்சமாக துளிர்விட
ஆரம்பித்தது.

நெஞ்சம் படபடவென்று அடித்துக்கொள்ள மயக்கம் தந்த தலைவலியில், தலையை ஒரு பக்கமாகப் பிடித்துக்கொண்டு தரையில் நிமிர்ந்து
அமர்ந்தவளுக்கு கண்ணீர் வழிந்தது.

தள்ளாடியபடியே எழுந்தவள் இருட்டில் தேடிக் கதவைத் திறக்கப் பார்க்க
அதுவோ வெளியில் பூட்டப்பட்டு இருந்தது. சன்னலின் பக்கம் சென்று
வெளியே கையை நீட்டி மழைநீரை கைகளில் ஏந்திப் பிடித்து முகத்தில்
அடித்தாள். இரு முறை முகத்தில் தண்ணீரை அடித்தவள் அடுத்து
தாகத்தை தணிக்க ஆரம்பித்தாள். தாகத்தைத் தணித்தவளுக்கு
மீண்டும் தன்னைச் சுற்றியுள்ள நிசப்தம் உறைக்க சன்னலின் மேலேயே
சாய்ந்து நின்ற பெண்ணவளுக்கு நெஞ்சம் கனத்தது. கண்ணீர் சுரந்து
மெல்ல மெல்ல விசும்பலாக உருவெடுக்க ஆரம்பித்தது.

மனபாரம் தாங்கமால் நின்றவளை வெகு நேரம் காத்திருக்க
வைக்காமல், அந்த இருட்டு அறையின் மின்விளக்கிற்கு உயிரூட்டினான்
உள்ளே பூனைபோல மெதுவாக நுழைந்தவன். வெளிச்சம் வந்ததை
உணர்ந்தவள் மின்னல் வேகத்தில் திரும்ப அவள் காதலன் என்று நம்பி
வந்த ஆதி தான் நின்றிருந்தான். அவன் நின்றிருந்த தோரணையே
அந்தப் பெண்ணின் மனதில் குளிர் பரவச் செய்தது.

கண்கள் சிவப்பேறி தலை கலைந்து பரதேசியாய் முழு போதையில்
நின்றிருந்தான் அவன். காதலித்த இரு மாதத்தில் வெளியே செல்லலாம்
என்று நல்லவன் போல நடித்து அழைத்து வந்தவன், இங்கே வந்தவுடன்
பெண்ணின் பின்னால் இருந்து அவளது மூக்கையும் வாயையும் மயக்க
மருந்து தடவிய துணியால் அழுத்தி அவளை மூர்ச்சை ஆக்கியிருந்தான்.

அந்த மயக்கமே இன்னும் தனக்குள் இருக்க, “ஆ… ஆ… ஆதி நான்
போகணும்” என்றாள் சுவற்றோடு பயத்தில் ஒடுங்கியபடி.

“போகலாம்” என்றவன், “ஆனா, நாம வந்த சோலி இன்னும்
முடியலையே” என்று போதையில் தள்ளாடியபடி அவளருகில் அவன் வர
பெண்ணவளிற்கோ தூக்கிவாரிப் போட்டது. அவனது வார்த்தைகள்
புரியாமல் இருக்க அவள் ஒன்றும் சிறுபிள்ளை அல்லவே!

“ஆதி! நான் அந்த மாதிரி இல்லடா. ப்ளீஸ், என்னை விட்ரு ஆதி. நான்
போயிடறேன்” என்று பெண்ணவள் கெஞ்சத் துவங்கி பின்னால் நகர,
அவனோ அவளது சொல்லை காதில் வாங்காமல் அவளை
நெருங்கினான். ஆதி முன்னால் மந்திரியின் ஒரே மகன். தற்போது
எதிர்க்கட்சி. அவ்வளவு பெரிய இடத்துப் பையன் என்று தெரிந்தும்,
அவன் சரியில்லை என்று சிலர் எச்சரித்தும், அவனை நம்பி வந்தத் தன்
மடமையை இப்போது நினைத்து பெண் மருகினாள்.

பின்னால் நகர்ந்தவள் கட்டிலில் இடித்து தட்டுத்தடுமாறி அதில்
விழப்போனவள் எழ, அவளின் தோளைப் பிடித்து அமர
வைத்தான் ஆதி. அவனின் கையைத் தட்டிவிட்டவள், “ஆதி, ப்ளீஸ் என்னை விட்டுடு. நான் போயிடறேன்” என்று பெண்ணவள்
கண்ணீரோடு கேட்க அந்த காமூகனிற்கோ அதெல்லாம் காதில்
விழவில்லை.

“நாங்க சொல்றதைக் கேட்டா போகலாம்” என்று பெண்ணை நோக்கி
அவன் குனிய அவனது முகத்தைத் தள்ளிவிட்டவள், “வேணா ஆதி. நான்
போகணும் விட்ரு” என்று அழுக ஆரம்பித்தாள். அவன், ‘நாங்க’ என்று
கூறியதை அப்போதும் அவள் கவனிக்கவில்லை.

பெண்ணவளின் கன்னத்தில் அவள் தள்ளிவிட்ட கோபத்தில்
அறைந்தவன் மீண்டும் அருகில் செல்ல, “ப்ளீஸ் ஆதி விட்ரு. லூசா நீ”
அழுகையைத் தாண்டிய கேவலுடன் பெண் கேட்க,

“ஜஸ்ட் ஒரு ராத்திரி தானே” என்று அறிவிழந்த நாயோ பேசினான்.

“நீ என்னை லவ் பண்ற தானடா. உன்னை நம்பித்தான நானும் வந்தேன்.
எதுக்கு என்னை இப்படி பண்ற ஆதி” என்று பெண் அழுகையுடனே நம்பி
வந்தவன் பொய்த்துப் போனதின் ஏமாற்றம் தாங்கமால் கேட்க, அவனோ
அவனது சட்டையை கழற்றிவிட்டு தனது ஃபோனில் உள்ள வீடியோவை
ஆன் செய்து ஒரு இடத்தில் அவளும் அவனும் தெரியுமாறு நிற்க
வைத்தான்.

“என்ன பண்ற ஆதி?” அதிர்ச்சியில் உறைந்து பெண்ணவள் கேட்க…
அதற்கோ அந்தப் பிறவி எதுவும் சொல்லவில்லை.

திடீரென வந்த மின்னல் வெளிச்சத்தில் அந்த சிறிய ஓட்டு வீட்டின்
கதவின் முன் இருந்த மூன்று நபர்களைக் கண்ட பெண் அடுத்த
அதிர்ச்சிக்கு சென்றாள். ஆதியின் நண்பர்கள் ஆனந்த், பிரதீப், சபரி
மூவரும் உள்ளே நுழைந்தனர். ஆனந்த்தும் எதிர்க்கட்சி முன்னால்
எம்.பியின் மகன். அடுத்தடுத்து தன்னை சுற்றி நடக்கும் அதிர்ச்சியில்
பேதையவளின் மனம் கிலி பிடித்து ஆரம்பித்து நடுங்கியது.

அவளது அழுகை, விசும்பல், கேவல் எல்லாம் இப்போது கதறலாக மாறி
இருந்தது. உள்ளே நுழைந்த அனைவரிடமும் வந்த மதுவின் நெடியை
உணர்ந்த பெண் தப்பிக்க முயற்சிக்க எல்லாம் வீணானது. “அண்ணா!
ப்ளீஸ்ணா விட்டுருங்கண்ணா” என்று பெண்ணவள் மீதம்
இருந்தவர்களைப் பார்த்துக் கெஞ்சத் துவங்க அதைக் கேட்கும்
நிலையில் நால்வருமே இல்லை.

இருவர் தங்களது அலைபேசியில் பெண்ணை படம்பிடிக்க ஆரம்பிக்க
இன்னொரு மனசாட்சி இல்லாத மிருகமோ பெண்ணவளின் உடையை
அகற்றச் சொன்னான். அதிர்ந்து போய் நின்ற பெண்ணவள், “ஆதி,
உன்னை நம்பித்தான வந்தேன். ஏன்டா இப்படி பண்ண. என்னை
விட்ருடா. நான் வெளிய யாருகிட்டையும் சொல்ல மாட்டேன்” என்று
கைகளைக் கூப்பி பெண்ணவள் கெஞ்சத் துவங்க, அதை அவனோ
சட்டை செய்யவே இல்லை.

“கழட்டுடி” என்று ஆதி கத்த, ஒருவன் தனது பெல்ட்டை கழற்றி
பெண்ணை அடிக்கத் துவங்க அந்தப் பெண்ணோ துடிதுடித்துப்
போனாள். மாட்டை அடிப்பது போல அந்த மிருகம் பெண்ணை அடிக்க
வலியில் துடித்த பெண்ணோ முதலில் சற்றும் அசையவில்லை.
அடுத்தடுத்து விழுந்த அடிகளில் உடல் கன்றி இரத்தம் வர…
பெண்ணவளோ நம்பி வந்தவன் ஏமாற்றிய வேதனையிலும் யாரோ
தெரியாத ஒருவன் கையில் அடிபட்டு இரத்தம் வருவதையும் கண்டு,
“என் பொண்ணை அடிக்காதே. யாரும் அடிக்கக் கூடாது” என்று தாயிடம்
தந்தை ஒரு நாள் வாதிட்டது நினைவில் வர ஓவென்று கதற
ஆரம்பித்தாள்.

அடுத்தடுத்து விழுந்த அடிகளில் வலி தாங்காமல், “அண்ணா
அடிக்காதீங்கண்ணா…” என்று உடலின் வலியில் நடுங்கியபடிக்
கெஞ்சத் துவங்க அவனோ மேலும் இரண்டு அடிகளை பெல்ட்டால் வீசி
உடையை அகற்றச் சொன்னான்.

“நான் கழட்டறேண்ணா… அடிக்காதீங்கண்ணா…” என்று நடுங்கிய
குரலில் நெஞ்சம் அதிர வலி தாங்காமல் கூறிய பெண்ணைக் கண்டு
ஈவு இரக்கம் இல்லாமல் சிரித்தது அந்த ஈனப் பிறவிகள். வாயால் உறைத்ததை பெண்ணின் கைகள் செயல்படுத்த முடியாமல், தான் பட்ட
இந்த இழிநிலையை நினைத்து மூளை மரத்து அரைமயக்கத்திற்குச்
செல்ல அவளின் தோளை அப்படியே பற்றிய மிருகமோ அவளை
இழுத்துவந்து படுக்கையில் கிடத்த பெண்ணின் பாதி மூடியிருந்த
விழிகளில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

ஒவ்வொரு ஓநாய்களாக பெண்ணை நெருங்கி நாசம் செய்யத் துவங்க
அவளின் கண்ணீரைக் கண்ட வான்மகளோ ஓலமிட்டு அழ மழையோ
மதுரை மண்ணில் அடித்து ஊற்றியது.

மதுரை மீனாட்சி அம்மன் பெண் தெய்வமாய் இருக்கும் இம்மண்ணில்
யார் விட்ட சாபமோ வெறிநாய்களின் காமப் பசிக்கு பெண் இறையாகிக்
கொண்டிருந்தாள். உணர்வும் அறிவுமாககுணமாக பெற்றோர்களால்
வளர்க்கப்பட்டப் பெண் இன்று ரத்தமும் சதையுமாக காட்டு
மிராண்டிகளுடன் போராடித் தோற்றுவிட்டாள்.

‘அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்று
சொல்வார்களே… இதைப் பார்த்துவிட்டு ஏன் இன்னும் சிலையாய்
இருக்கிறாய்?’ என்று பெண்களை தெய்வமாக வணங்கும் தன்
மண்ணிலேயே நடக்கும் இரக்கமற்ற செயலில், இரத்தக் கண்ணீர்
வடித்துக் கொண்டிருந்த மீனாட்சி அம்மனிடம் காற்று கேட்டது.

மீனாட்சி அம்மனும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறாள். இந்த
நான்கு காட்டுமிராண்டிகளுக்கும் இதுதான் பிழைப்பு. அப்பன் காசில்
தின்றுவிட்டு ஊர் சுற்றுவது. மது மாதுவில் புரள்வது. கடந்த ஐந்து
வருடங்களாக வாட்டசாட்டமாக மிடுக்காக உடையை உடுத்திக்கொண்டு
பெண்களை காதல் என்ற வலையில் அழைத்து வந்து சீரழிப்பதும்,
அதை படம் எடுத்து அவர்களை மிரட்டி பணம் பறிப்பதும். அதில் ஆதியும்
ஆனந்த்தும் கை தேர்ந்த நரிகள். நம்பி வந்து ஏமாந்து வாழ்க்கையைத்
தொலைத்த பெண்கள் ஏராளம்.

பதில் பேசாமல் இருந்து அம்மனிடம், “நீயும் இவர்கள் தட்சணையாகத்
தரும் பணம் பக்கம் சாய்ந்துவிட்டாயா?” காற்று புயலாக உருவெடுத்து
வினவ,

“அரக்கர்களின்…. ” என்ற முழு வாக்கியத்தை அம்மன் அழுத்தமாக
கனீரென்று சொல்லி முடித்து, சபதமிட்ட விதத்தில் அந்த பிராகரமே
நள்ளிரவில் அதிர… அங்கிருந்த பறவைகளும் அம்மனின் சினத்தில்
நடுநடுங்கியது.

Leave a Reply

error: Content is protected !!