மழைத்துளி-24

IMG-20210619-WA0109-0305f727

மழைத்துளி-24

மழைத்துளி-24

மாதங்கள் அதன் போக்கில் கடந்திருந்தது யாருக்கும் காத்திருக்காமல்.
திவ்யபாரதிக்கு ஆறாம் மாதம் எட்டியிருந்தது.

ஒரு பெண் தாய்மை அடையும்போது அவள் தன்னை மட்டுமல்ல, தன்
குடும்பத்தையே மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறாள். புதுவரவின் மகழ்ச்சி
அனைவரையும் ஆவலிலும், ஆசையிலும் தள்ளுகிறது. சுமையையும்
சுகமாய் சுமக்கும் தருணம்.

குளித்துமுடித்து வந்த திவ்யபாரதி கண்ணாடியின் முன் நின்றிருந்தாள்.
ஆளுயரக் கண்ணாடியின் முன் நின்று தனது மேடிட்ட வயிற்றை
ஆசையாக வருடிக் கொடுத்தாள்.

ஒவ்வொரு தினமும் தவமாய் தவமிருந்து கொண்டிருக்கிறாள் தனது
மகவு உலகிற்கு வருகை தரும் தினத்திற்கு. ஆசையாய் உச்சிமுகர்ந்து,
அந்தப் பிஞ்சுக் கை கால்களுடன் முத்தமிட்டுக் கொஞ்சி
விளையாடுவதற்கு ஏங்கிக் கொண்டிருந்தாள். நான்கு வருடங்களுக்குப்
பிறகு அவள் ஆவலாய் எதிர்பார்த்துக் காத்திருக்கும் விஷயம் அவள்
குழந்தை.

அன்று இழந்த அதே குழந்தை இன்று திருப்பிக் கிடைத்ததைப் போன்ற
உணர்வு அவளுக்கு. ‘நம்மளே நம்ம பேபி பம்ப் பார்த்து கண்ணு
வச்சிடுவோம் போல’ நினைத்தவள் உடையை அணிந்துகொண்டு
ஆசுவாசமாக படுக்கையில் அமர்ந்தாள்.

அவள், ‘அதில் படுக்கப் பிடிக்கவில்லை’ என்ற அடுத்த நாளே
அப்பத்தாவிடம் பணத்தைக் கொடுத்து திவ்யபாரதிக்கு கட்டிலையும்
மெத்தையையும் வரவழைத்து, பழையதை அகற்றிவிட்டு புதியதை
அறையில் வைத்தான் வெற்றி.

கீழே வந்தவளிற்கு காலை ஆகாரங்கள் தயாராக இருக்க, திவ்யபாரதி
பூஜை அறைக்குச் சென்று கடவுளை கை கூப்பி வணங்கினாள்.
இடைப்பட்டக் காலத்தில் அறுந்திருந்த நம்பிக்கை குழந்தைக்காக
மீண்டும் வெளி வந்திருந்தது. மனமுருகி வேண்டியவள் விபூதியையும்
குங்குமத்தையும் வைத்துவிட்டு வந்து அமர்ந்தாள்.

அங்கு ஒரு ஃபோன் கிடப்பதைக் கண்ட திவ்யபாரதியின் முகத்தில்
குறும்பு கூத்தாடியது. அதைக் கையில் எடுத்தவள், “அப்பத்தா ஃபோன்”
என நீட்ட, “யாரு?” தையல்நாயகி.

“எனக்கென்ன தெரியும் ஓல்ட் லேடி” திவ்யபாரதி.

“அலோ…” தையல்நாயகி அதைக் காதில் வைத்த சமயம்,

‘தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா
சூடூடா சூடூடா எங்க பக்கம் சூடூடா’ அது கத்த திவ்யபாரதியோடு சேர்ந்து
வாசுவும் சிரித்தான்.

அது அதீதியின் பொம்மை ஃபோன். நேற்று திவ்யபாரதியும் அதீதியின்
சேர்ந்து அதற்கு வண்ணம் பூசி கொஞ்சம் பெரியவர்கள்
பயன்படுத்துவது போல மாற்றியிருந்தனர்.

தையல்நாயகி திவ்யபாரதியை முறைக்க, “2 அமுத்து அப்பத்தா”
என்றவள் இரண்டை அமுற்ற,

“அப்புடி போடு போடு போடு அசத்தி போடு கண்ணாலே
இப்புடி போடு போடு போடு இழுத்து போடு கையாலே” என்று ஓடியது.

திவ்யபாரதி சிரித்துக்கொண்டு இருக்க, “என்ன காலங்காத்தாலையே
இப்படியொரு சிரிப்பு?” அமர்ஷா பல்கிஸுடன் வந்தான்.

“ஹேய்! பல்கிஸ்” திவ்யபாரதி தோழி வந்தவுடன் தன்னை மறந்து
குஷியில் எழ,

“ஹேய்! திவ்யபாரதி… பார்த்து” என்றாள் பல்கிஸ்.

“இன்னிக்கு உன் பிரண்ட் உங்கூடத்தான்மா… கண்ணிலேயே
காமிக்கலேன்னு அப்புறம் கலாய்க்காத” அமர்ஷா சின்னக் கும்பிடோடு.
திருமணமானதில் இருந்து தோழியை இங்கு அழைத்து வருதில்லை
என்று அமர்ஷா வரும்போதெல்லாம், திவ்யபாரதி அவனை அவனின்
நிலைவேறு தெரியாமல் கேலிசெய்து கொண்டிருக்க இன்று அழைத்து
வந்திருந்தான்.

“ம்ம்! ம்ம்”, “இன்னிக்கு நைட்டும் எங்கூடத்தான் என் பிரண்ட்”
திவ்யபாரதி பல்கிஸை பார்த்து கண்களைச் சிமிட்ட,

‘ம்கூம், எங்கூட இருந்துட்டா மட்டும்…’ நினைத்தவனிற்கு பெருமூச்சு
வெளியே வர, அதை உணர்ந்த பல்கிஸோ சிரிப்பை அடக்கினாள்.

“வெற்றி எங்க?” அமர்ஷா வினவ, கையை பின்வாசல் வழி காட்டியவள்
பல்கிஸுடன் அமர்ந்து காலை உணவை உள்ளே தள்ள ஆரம்பித்தாள்.

அதீதியை பார்க்கும் சாக்கில் வீட்டிற்குள் நுழைந்த வெற்றியின் கண்கள்
திவ்யபாரதியைத் தேடியது. அதீதி ஓடிவர கைகளில் அள்ளி எடுத்தவன்,
“அத்தை எங்க?” காதில் கேட்டான்.

“பல்கி அத்தை வந்திருக்காங்க…” அதீதி அவனைப் போலவே அவன்
காதில் சொல்ல சிரிப்புடன் அதீதியின் கன்னங்களில் இதழைப்
பதித்தான்.

அப்பத்தாவைப் பார்ப்பதுபோல அதீதியுடன் டைனிங் ஹாலிற்குள்
நுழைந்தவன் சாய்ந்து அமர்ந்து ஒரு கரத்தை வயிற்றில் வைத்துக்
கொண்டு, சாப்பிட்டுக்கொண்டிருந்த மனைவியைக் காண அவனிற்குத்
தெவிட்டவில்லை.

“ம்கூம்!” அப்பத்தா, அமர்ஷாவின் குரலில் தன்னிலை உணர்ந்தவன்,
“அங்க காளான் முளைச்சிருந்துச்சு அப்பத்தா… அதான் உனக்குப்
பிடிக்கும்ன்னு தர வந்தேன்… இந்தா இதை குழம்பு வச்சிடு” இடது
கையில் இருந்த காளானிற்கு பதிலாக வலது கையில் இருந்த
அதீதியை அப்பத்தாவிடம் தந்தவன்,

“அதீதியைப் புடிடா” அமர்ஷாவின் கையில் காளானைத் தந்தான்.

திரும்பியவனிற்கு தனது செயல் மூளையில் உறைய நெற்றியைத்
தேய்த்துக்கொண்டு திரும்பினான். “அப்பத்தா! என்னை குழம்புல
போட்டிருவியா?” அதீதி பயத்துடன் தையல்நாயகியைப் பார்த்துக் கேட்க,
அனைவரும் சிரித்தனர்.

திடீரென திவ்யபாரதி, “ஹக்” என்க அனைவரும் அவளைப் பார்த்தனர்.
“குழந்தை அசையுது” என்றாள் வயிற்றில் கை வைத்தபடி. மகவின்
அசைவில் தாயின் முகம் பூரிப்பில் தத்தளித்தது.

“எங்க?” பல்கிஸ் திவ்யபாரதியின் வயிற்றைத் தொட, அவளால் உணர
முடியவில்லை.

“நமக்கு ஏழு முடிஞ்சாதான்தா தெரியும்” என்றார் தையல்நாயகி தனது
கையை வைத்துப்பார்த்தபடி.

ஒரு மின்னல் தையல்நாயகியின் மூளையில் வெளிச்சமடிக்க, “எய்யா
வெற்றி, உன் கையை கொண்டா… உனக்குத் தெரிஞ்சாலும் தெரியும்”
என்றவர் வெற்றியின் கையை எடுத்து திவ்யபாரதியின் வயிற்றில்
வைத்தார்.

பேரனின் ஏக்கங்களை உணர்ந்துகொண்டு தான் இருந்தார் அந்தப்
பெண்மணி. அதனால் தான் திடீரென தோன்றிய யோசனையை
எதார்த்தம்போல செய்துவிட்டார்.

வெற்றி கையை வைத்தவுடன் உள்ளே குழந்தை நன்கு அசையத்
தொடங்க திவ்யபாரதி இந்த உணர்வின் சுவையை ருசித்ததிற்கு
அளவில்லை. தந்தையின் கைபட்டவுடன் உள்ளிருந்த மகவோ
துள்ளியது. ஆழ்கடலில் உறைந்திருந்த முத்து தந்தையின் கைகளில்
அடக்கமாய் அதே சமயம் செல்லச் சீண்டல்களையும் தாயிற்கு தந்தது.

“உனக்கு ஏதாவது தெரியுதாய்யா” தையல்நாயகி வினவ,

“இல்லை அப்பத்தா” வெற்றி.

“உன் ப்ளான் எனக்குத் தெரியும் கிழவி” திவ்யபாரதி தையல்நாயகியை
பொய்யாய் முறைத்தாள்.

வெற்றியோ தாய்மையின் ஸ்பரிசத்தில் வீழ்ந்தான். மனைவியின் முக
மாற்றங்களை வேறு கவனித்தவனிற்கு கர்வமாகக்கூட இருந்தது.

அன்று மாலை பல்கிஸை அழைத்துப் போக, “இந்த புது மாப்பிள்ளை
எப்பப்பாரு என் பிரண்டை என்கிட்ட இருந்து பிரிக்கறதிலேயே இருக்கு”
திவ்யபாரதி கேலி செய்ய, ‘என் நிலைமை புரியாம சாவடிக்கறாங்களே
என்னைய எல்லோரும்’ மனதிற்குள் புலம்பியவன் திவ்யபாரதியிடமும்
அதீதியிடமும் வம்பளந்துகொண்டு மனைவியுடன் கிளம்பினான்.

பல்கிஸ் கிளம்பிய பின் வசீகரன் அவளிற்கு ஃபோன் செய்ய எடுத்து
காதில் வைத்தவளிற்கு, அவர் விஷயத்தை எடுத்துக் கூற திவ்யபாரதி
அதிர்ந்தாள்.

“என்ன சார் சொல்றீங்க?” திவ்யபாரதி.

“எஸ், ஷீ இஸ் டெட்” வசீகரன்.

“எப்படி சார்?”

“அந்தப் பொண்ணு குடிச்சிட்டுப் போய் விழுந்ததா சொல்றாங்க… பட்
நம்மள மாதிரி ஆளுகளும் இருக்காங்கள்ள டிபார்மெண்ட்ல…
கேட்டேன்… அவனுக தான்” என்றார்.

“எதுவுமே பண்ணமுடியாதா சார்” திவ்யபாரதி.

“எவிடென்ஸ் ஒண்ணு கிடைச்சா போதும்மா” என்றார் அவர்.

அதைப் பற்றி மேலும் சிலதைக் கேட்டவள் முழு யோசனையுடன்
அமர்ந்தாள். சிறிதுநேரம் வயிற்றைத் தடவியபடி அமர்ந்தவளுக்கு
காலை வெற்றி கை வைத்தவுடன் குழந்தை சுறுசுறுப்பாக அசைந்தது
நினைவு வந்தது.

தன் கையை வைத்துப் பார்த்தவளுக்கு இப்போது எதுவுமே
தெரியவில்லை. மீண்டும் மீண்டும் வைத்துப் பார்த்தவள், “உன் அப்பா
தொட்டா தான் பிடிக்குமா?” வயிற்றில் செல்லமாக அடித்தவள் எழுந்து
வெற்றியைப் பார்க்கச் சென்றாள்.

அப்பத்தாவிடம் திவ்யபாரதி வெற்றியை பார்த்து வருகிறேன் என்று
சொல்ல அவளை தோட்டத்திற்குள் தனியே அனுப்ப மனமில்லாதவர்
அவளிற்குத் துணையாய் அவளுடன் நடந்து சென்றார். கிணற்றருகே
வந்தவர் அவளை விட்டுவிட்டுச் செல்ல வெற்றி தக்காளியை
நறுக்கியபடி வெளியே வரவும் சரியாக இருந்தது.

“உன்கிட்ட பேசணும்” புரியாமல் தன்னைப் பார்த்தபடி நிற்பவனிடம்
திவ்யபாரதி சொல்ல,

“ம்ம்” வெற்றி. “சரி ,உள்ள போலாம்” அவள் சொல்ல,

“இல்ல இல்ல வேணாம்… இங்கனயே பேசலாம்” அவசரமாய்
மறுத்தவனை சந்தேகமாய்ப் பார்த்தாள். ‘எதுக்கு இப்படித்
தலையாட்டறான்… நமக்குத் தெரியாம எதாவது செகண்ட் சேனல்
ஓட்டறானா’ குறும்பாக அவள் மனம் நினைக்க அவள் முகத்தை வைத்தே
கணித்தவன்,

“அம்புட்டு வொர்த் எல்லாம் இல்ல”, “உள்ள ஃபேன் கம்மியாதான் ஓடும்…
இங்கனயே தோட்டத்துக் காத்துல உக்காரலாம்னு சொன்னேன்”
என்றவன் வெளியே அவன் உறங்கும் கயிற்றுக் கட்டிலைப் போட அதில்
உட்கார்ந்தவள் பேச்சை ஆரம்பித்தாள்.

“நான் உன்மேல இருக்க கேஸை வாபஸ் வாங்கறேன்… நீ” திவ்யபாரதி
சொல்ல, “இல்ல வேணாம்” என்றான் இடையில்.

“என்னை முழுசா பேசவிடறியா?” திவ்யபாரதி கேட்க மௌனமானான்.

“நீயும் அமர்ஷா அண்ணாவும் பழனி பைபாஸ்ல ஒரு பொண்ணை
காப்பாத்துனீங்க ஞாபகம் இருக்கா? கல்யாண ப்ளவுஸ் தைக்க
குடுத்துட்டு வரும்போது” அவள் கேட்க, “ம்ம்” வெற்றி.

“அந்தப் பொண்ணு இப்ப இல்ல… கொன்னுட்டாங்க” அவள் சொல்ல
அதிர்ந்தான்.

“அன்னிக்கு நீ அடிச்சேல்ல.. அவன்தான் ஆனந்த்” திவ்யபாரதி சொல்ல,
“தெரியும்” என்றான்.

“எப்படி?” திவ்யபாரதி கேட்க, “விசாரிச்சேன்” வெற்றி.

“ஓ!”, “அவனுக நிறைய பொண்ணுங்களை ஏமாத்தி கூட்டிட்டு வந்து
கேங் ரேப் பண்ணியிருக்காங்க… பணம் கேட்டு அப்புறம்
மிரட்டியிருக்காங்க… இதெல்லாம் காதால வந்த உண்மையான
விஷயம்… பட் சாட்சி இவ்ல” என்றாள்.

அதற்குப் பிறகு இரண்டு நிமிடம் இடைவெளி விட்டவள், “என் பர்த்டே
அன்னிக்கு ஏதாவது வேணுமான்னு கேட்டில்ல?” கேட்க, வெற்றிக்கும்
ஞாபகம் வந்தது. குழந்தை உருவான அடுத்த நாளே அவள் பிறந்தநாள்
என்று அப்பத்தாவிடம் அவன் சொல்லி, அன்று அவளிற்கு பிடித்த
அனைத்தையும் செய்ய வைத்தான்.

வாழ்க்கையில் தனக்கென்று எதுவும் வேண்டாதவன் அன்று
கோவிலிற்குச் சென்று, அவனின் மனையாளுக்கு இனி எந்தத் தீங்கும்
நடக்கக்கூடாது என்று வேண்டிவந்தான். வந்தவன் திவ்யபாரதியிடம்,
“உனக்கு ஏதாவது வேணுமா?” அவன் கேட்க, “எதுவும் வேணாம்… நீ
ஏதாவது என் கையுல குடுத்தா நீ காசு குடுத்த ஞாபகம்தான் எனக்கு
வரும்” என்று நகர்ந்தாள். அவனும் அதில் நொந்தாலும் வெளியே
காட்டிக்கொள்ளவில்லை.

அவள் சொன்ன ஒரே நொடியில் அன்றைய தினம் ஞாபகம் வந்துபோக,
“ம்ம், கேட்டேன்” வெற்றி.

“நான் ஒண்ணு கேப்பேன்… எனக்காக அதை செய்வியா?” தலையை
ஆட்டி திவ்யபாரதி கேட்ட விதத்தில் வெற்றியின் தலை தன்னால்
அசைந்தது.

“உன்னால அவனுகளை உள்ள தள்ள முடியுமா கேஸ் போட்டு…
பொதுநல வழக்குமாதிரி மாதிரி…” என்றாள்.

ஏற்கனவே அவள் ஏதாவது கேட்பாளா கேட்பாளா என்று காத்திருந்தவன்,
அவள் கேட்டவுடன் மறுப்பானா?

“கண்டிப்பா செய்யறேன் பாரதி” என்றான்.

“ஆனா, ஒரு கன்டிஷன்” திவ்யபாரதி சொல்ல, “என்ன?” என்றான்.
திவ்யபாரதி விஷயத்தைச் சொல்ல ஒரு நொடி யோசித்தவன், “சரி”
என்றான் தீர்க்கமாக.

இருவருக்கும் பிறகு என்ன பேசுவது என்று தெரியவில்லை.
ஒருவரையொருவர் பார்க்காமல் வேறுபக்கம் பார்த்து அமர்ந்திருந்தனர்
இருவரும். மணி ஆறைத் தொட்டிருக்க தென்னந்தோப்பின் தென்றல்
இருவரையும் தழுவியது.

வெளிர் மஞ்சள் நிறத்தில் கணுக்கால் வரை இருந்த ஃபுல் கவுனில்
மேடிட்ட வயிறுடன் ஒரு கையை கட்டிலில் வைத்து, மற்றொரு கையே
கையை வயிற்றில் வைத்திருந்த மனைவியை அவளறியாமல் அவளின்
தாய்மையை ரசித்துக் கொண்டிருத்தான்.

அவளோ அங்கிருந்த குருவிக் கூட்டை பார்த்துக் கொண்டிருந்தாள். “நீ
கை வச்சப்பதான் பேபி நல்லா ஆக்டிவா அசஞ்சுது ஆதி” என்றாள்.

திடீரென அவள் பேசுவதில் அவளிடம் இருந்த பார்வையை
திருப்பியவன், “என்ன பாரதி… புரியல” வினவ,

“நீ கை வச்சப்ப தான் பேபி நல்லா ஆக்டிவா அசஞ்சுது” என்றாள்
வயிற்றில் கை வைத்தபடி.

அவன் அமைதியாய் புன்னகைக்க, “அந்த ஃபீல் எனக்கு அகைன்
வேணும் ஆதி…” என்றவள் அவனருகில் அமர்ந்து அவன் கையை
எடுத்து வயிற்றில் வைக்க தந்தையின் அருகாமையிலும்
தொடுகையிலும் உள்ளிருந்த சின்னஞ்சிறு உயிரோ அன்னையை
குஷிப்படுத்தியது.

வயிற்றைப் பார்த்து புன்னகைத்தவள், “செம ஆக்டிவா இருக்கு பாப்பா”
என்றவள் நிமிர வெற்றியின் கண்களோ அவளை இமைக்காமல்
பார்த்துக் கொண்டிருந்தது. அவளைத் தாங்க வேண்டும் என்று
அவனிற்கு ஆசையும் ஏக்கமும் போட்டி போட்டது.

ஆனால், முதல்முறையாக மனைவி கேட்ட ஒன்றை அவளிற்காக நடத்தி
முடித்துவிட்டுத் தான் மனைவியையும், குழந்தையையும் தங்கத் தட்டில்
தாங்கவேண்டும் என்ற குறிக்கோள், அவனை இப்போது அமைதி காக்க
வைத்தது.

“ஆதி” திவ்யபாரதி அழைக்க நடப்பிற்கு வந்தவன், “ம்ம், என்ன கேட்ட?”
வெற்றி.

“நான் எதுவும் கேக்கலை… என்ன யோசனை?” திவ்யபாரதி.

“இல்ல, கேஸ் பத்தி” வெற்றி.

“ஓ! எனக்குப் பசிக்குது” என்றவள் அலைபேசியில் மணியைப்
பார்த்துவிட்டு, “எதாவது செஞ்சிருக்கியா?” திவ்யபாரதி.

அவள் கேட்டவுடன் திருட்டு முழி விழித்தவனை, “என்ன?” என்றாள்.

“சப்பாத்தி, பெப்பர் சிக்கன்” வெற்றி சொல்ல அவனை முறைத்தவள்,
“எனக்கு வேணும்” என்றாள் எங்கோ பார்த்தபடி.

அவளின் செயலில் வந்த சிரிப்பை அடக்கியவன், “இன்னும்
முக்கால்மணி நேரமாவது ஆகும் பாரதி” என்றான்.

“பரவாயில்லை”, “எனக்கு ஒரு பில்லோ மட்டும் எடுத்து தந்துட்டுப்போ”
என்றாள்.

தலையணையை வைத்துவிட்டு வெற்றி உள்ளே சென்று பாதியில்
நிறுத்தியிருந்த சமையலைத் தொடங்கினான். திவ்யபாரதி கயிற்றுக்
கட்டிலில் படுத்துக்கொண்டு அலைபேசியில் டாக்கிங் டாம் விளையாடிக்
கொண்டிருந்தாள்.

பிறகு, போர் அடித்தவளாய் அலைபேசியை வைத்துவிட்டு வானத்தைப்
பார்க்க மாலை மங்கி திவ்யபாரதியை மயக்கிக் கொண்டிருத்தது.
நட்சத்திரங்கள் ஆங்காங்கே மின்னிக் கொண்டிருக்க நிலவு மகள்
கொஞ்சம் கொஞ்சமாக எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள் மதியம் தூங்காத
காரணத்தினாலும், தோப்பு தந்த இதத்திலும் கண் அயர்ந்தாள்.
சமைத்துவிட்டு வெளியே வந்த வெற்றி, திவ்யபாரதி உறங்கிக்
கொண்டிருப்பதைக் கண்டு முறுவலித்தான். அகமும் புறமும் நீண்ட
நாட்களுக்குப்பின் ஓய்வாகியிருக்க திவ்யபாரதி தூக்கத்தை
நிம்மதியுடன் மேற்கொண்டிருந்தாள்.

ஒருபக்கமாகத் திரும்பி ஒரு கையை கன்னத்தில், மற்றொரு கையை
வயிற்றில் வைத்திருந்து உறக்கத்தில் இருந்தவளின் கையை
மென்மையாகப் பற்றியவன் அவளது உள்ளங்கையில் முத்தமிட்டான்.
அவளின் மகத்துவத்தை அவன் ஒவ்வொரு நொடியும் உணர்ந்து
உணர்ந்து கொண்டிருக்கிறான்.

அவளை மெதுவாக அழைத்து எழுப்பியவன், “ரெடி ஆயிடுச்சு…
முகத்தைக் கழுவிட்டுவா” என்றான்.

எழுந்து சோம்பலை முறித்தவள் கிணற்றின் அருகில் இருந்த
தொட்டியில் முகத்தை கழுவிவிட்டு வர, சப்பாத்தியையும் பெப்பர்
சிக்கனையும் எடுத்து வந்து நீட்டினான்.

அவன் ஊட்டமாட்டானா என்று அவள் மனம் அவளையும் மீறி நினைக்க,
அவள் ஊட்டிவிடக் கேட்கமாட்டாளா என்று அவன் மனமும் ஒருசேர
ஏங்கியது. அவன் கையில் இருந்த தட்டை வாங்கியவள், “நீ
சாப்பிடலையா?” வினவ,

“லேட் ஆகும்” என்றான். ஏனோ சாப்பிடும்போது தன்னையறியாமல்
அவளிற்கு கண்கள் கலங்குவதுபோல் இருக்க அவளால் ஒரு வாய் கூட
எடுத்து வைக்க முடியவில்லை. அன்றைய நினைவு எழுந்து அவளை
ஏதோ செய்தது.

கண்ணீரை உள்ளிழுத்தவள் தட்டில் கோலம்போட அவளின் முகத்தை
வைத்தே மனவோட்டத்தை கணித்த அவளவன் அவள் கையிலிருந்த
தட்டை வாங்கி அவளிற்கு ஊட்ட ஆரம்பித்தான். அவன் ஊட்டிவிட
எதுவும் பேசாமல் சாப்பிட்டவள் அவன் முகத்தையே பார்த்திருந்தாள்.
அவனோ முகத்தில் எதையும் காட்டாமல் இருந்தான்.

“போதும்… இதுக்கு மேல முடியாது” திவ்யபாரதி சொல்ல,

“நானும் உன்னைவிட அதை மறக்கத்தான் பாரதி ட்ரை பண்றேன்…
உனக்கு செஞ்சதுக்கு என்னால மன்னிப்புன்னு ஒரு வார்த்தைல முடிக்க
முடியாது… அதுனால தான் அதைக்கூட இன்னும் கேட்கலை நான்…
என்னை மன்னிக்கனும்னு சொல்ல வரலை நான்… அதையே நினைச்சு
கஷ்டப்படாத” என்றவன் கைகளைக் கழுவினான்.

கைகளைக் கழுவி வந்தவனிடம், “ஆதி, நீ என்ன குழந்தை வேணும்னு
நினைக்கற?” அவள் வினவ,

“பையன்” என்றான்.

“ஏன்?” திவ்யபாரதி வினவ,

“வேணாம் பாரதி… உனக்குப் பண்ணதுக்கு அது எனக்குப் பொண்ணு
பிறந்து பாதிச்சிருமோன்னு பயமா இருக்கு” என்றான் மனதை
மறைக்காமல்.

“நீ என்ன நினைக்கற?” வெற்றி.

“பையன் தான்” திவ்யபாரதி சொல்ல புன்னகையையே பதிலாகத்
தந்தான்.

“இப்ப நீ எதுக்கு ஸ்மைல் வித் பெயின் ட்ரை பண்ணிட்டு இருக்க?”
வினவியவள், “நான் ஒண்ணும் நீ சொன்ன ரீசனுக்கு பொண்ணு
வேணாம்னு சொல்லலை”.

“என் பையனை எப்படி வளத்தறேன் பாரு… பொண்ணுங்களை
மதிக்கறவனா… அன்டர்ஸ்டான்ட் பண்றவனா… ஈக்குவலா ட்ரீட்
பண்றவனா… அந்த மாதிரி” என்றவளை உதட்டை வளைத்து
மெச்சினான் வெற்றி.

“சரி, நான் கிளம்பறேன்” என்றவள் எழ வீடு வரை அவளுடன்
சென்றுவிட்டு வந்தவன் உடனே வசீகரனிற்கு அழைத்தான்.

அவருக்குத் தேவையானது அவனிடம் ஏற்கனவே இருந்தது. அதற்கான
சமயம் பார்த்து பதுங்கியிருந்தவன் இப்போது பாயத் தயாராய் இருந்தான். அடுத்த நாள், “நிஜம் ரிப்போர்ட்ஸ்” மூலம் வெளியான
செய்தி தமிழ்நாட்டையே உலுக்கியெடுத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!