மழையில் நனையும் உயிரே – இறுதி பதிவு

4b69a483165018b02b060cb4c3010997-24b90351

மழையில் நனையும் உயிரே – இறுதி பதிவு

அத்தியாயம் – 25

அவன் அடித்ததைப் பொருட்படுத்தாமல், “சாரிடா” என்று சொல்லி அவனை ஆரத்தழுவிய முகிலனின் மீதான கோபத்தை இழுத்துப்பிடிக்க முடியாமல், கண்கள் இரண்டும் கலங்க அவனைக் கட்டியணைத்துக் கொண்டான்.

இருவரின் சண்டையும் முடிவிற்கு வரவே, குழந்தையைத் தூக்கிக்கொண்டு சிரித்தபடி மிருதுளா அறைக்குச் செல்ல, “நீங்க எல்லாம் நல்ல வருவீங்கடா” என்று சொல்லிவிட்டு சென்றான் நிரஞ்சன். சதாசிவம் – மகேஸ்வரி இருவரும் காலை உணவிற்கு என்ன செய்யலாம் என்ற  சிந்தனையில் இறங்க, மற்ற மூவரும் தனித்துவிடப்பட்டனர்.

“அண்ணா நீ சொன்னது எல்லாமே உண்மையா?” என்றவள் நம்பாமல் கேட்க, “உனக்காக நாலு சூர்கேஸ் நிறைய வாங்கிய பொருளை எல்லாம் இவன் காட்டவே இல்லையா?” என்றான் திவாகர்.

“அதை எல்லாம் சொல்லி உன் தங்கச்சிடம்  தனியாக பரிசு வாங்கலாம்னு நினைச்ச நினைப்பில் தான் ஒரு லோடு மணலைக் கொட்டிட்டியே! சரி அதைவிடு! அடுத்து என்ன செய்யலாம்னு இருக்கிற?” என்று விசாரித்தான்.

திவாகர் அங்கேயே ஒரு சொந்த கடை தொடங்குவதாக சொல்ல, “சீக்கிரம்  ஒரு கல்யாணம் செய்யும் வழியைப் பாரு” என்று முகிலன் சொல்ல, “ம்ம்” என்றான்.

அதற்குள் ராகுலும் அங்கே வந்துவிட, “இங்கே நான் எப்.எம்மில் பேசும் அனைத்தையும் அவருக்கு அனுப்பி இருக்கீங்க” என்றவள் அடிக்கத் துரத்த, “டேய் நண்பா காப்பாத்துடா” என்று ராகுல் நண்பனைத் துணைக்கு அழைத்தான்

“நீங்கள் அழைக்கும் நபர் இப்போது தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார். பிளீஸ் அடிவாங்கி முடிந்தபிறகு டயல் செய்யவும்” என்று திவாகர் சிரிக்காமல் சொல்ல, முகிலன் வாய்விட்டுச் சிரித்தான்.

அவர்கள் அனைவரும் சாப்பிட அமரும்போது ராஜசேகரன் – கனகவள்ளி மற்றும் சிந்து மூவரும் வருவதைக் கண்டு, “வாங்க” என்று புன்னகையுடன் வரவேற்றாள் சிற்பிகா.

அவளை அங்கே பார்த்ததும், “ஆறு வருஷம் இந்தப்பக்கமே வரல என்றாலும், வேலை செய்து படிப்பை முடித்து புகுந்த வீட்டுக்கு பெயர் வாங்கிக் கொடுத்துட்ட” என்று கணவனும், மனைவியும் இணைந்து பாராட்ட அவள் திகைப்புடன், நிரஞ்சனையும், மிருதுளாவையும் பார்த்தாள்.

“அவங்க முன்ன மாதிரி இல்லம்மா. இப்பவெல்லாம் ரொம்ப மாறிட்டாங்க” என்று மிருதுளா சொல்ல, குழந்தை அழுகும் சத்தம்கேட்டு சிந்து ஓடிச்சென்று குழந்தையைத் தூக்கினாள்.

“என்னோட செல்லத்தை யார் அடிச்சது சொல்லுங்க? அத்தை அவங்களை அடிச்சிடுறேன். ஐயோ இல்லடா குட்டி அழுகக்கூடாது” என்று அவள் குழந்தையை சமாதானம் செய்ய, அவளுக்குத் திருமணம் தள்ளிதள்ளி போவதை நினைத்து அனைவரும் வருத்தப்பட்டனர். அதே நேரத்தில் அங்கிருந்த ராகுலின் பார்வை சிந்துவின் மீது படிந்தது.

ஆரம்பத்தில் இருந்த திமிரான குணம் எங்கோ மறைந்து போயிருக்க, அவளின் முகத்தில் தெரிந்த சோகம் அவனைப் பாதித்தது. அங்கிருந்தே சந்திராவிற்கு போன் செய்து அவன் விஷயத்தை சொல்ல, உடனே மகளை அழைத்துக்கொண்டு முகிலனின் வீட்டிற்கு வந்தார்.

அவருக்கு சிந்துவைப் பிடித்துப்போக, “உங்க பெண்ணை என் மகனுக்கு கல்யாணம் பண்ணி தரீங்களா?” என்று நேரடியாக கேட்க, நிரஞ்சனின் பார்வை தங்கையின் மீது படிந்தது.

“அண்ணா அவரிடம் நான் கொஞ்சம் பேசணும்” என்றாள் சிந்து தயக்கத்துடன்.

“நீங்க போய் பேசிட்டு வாங்க” என்று நிரஞ்சன் அனுமதி தரவே, சிந்து இருந்த அறையை நோக்கிச் சென்றான்.

அவர்களின் கண்ணுக்கு எதிரே நின்ற இருவரும் ஒருநொடி ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள, “நான் முகிலனை விரும்பியது உங்களுக்கு நல்லாவே தெரியும். ஆனால் அது நிஜமில்லை. அப்போ அண்ணியைப் பழிவாங்க ஏதாவது செய்யணும்னு அம்மா சொல்லுவாங்க. அப்போ முகில் வீட்டிற்கு வருவாரு. அவளைக் கல்யாணம் பண்ணினால்” என்றவள் தயக்கத்துடன் பாதியில் நிறுத்திவிட, அவள் சொல்லாமல் விட்ட விஷயத்தை புரிந்து கொண்டு அவன் தலையசைத்தான்.

“ஆனால் நாங்க இரண்டு பேரும் எல்லை மீறி பழகியது கிடையாது” என்றவள் உண்மையை ஒத்துக்கொள்ள, “அதுவும் தெரியும்” என்றான்.

“நாளைக்கு கல்யாணமான பிறகு இந்த விஷயத்தைச் சொல்லி நீங்க குத்திக் காட்டக்கூடாதுன்னு தான் சொல்லிட்டு இருக்கேன்” என்றவள் அவனது கண்ணைப் பார்த்து உண்மையைக் கூற, சரியென்று தலையசைத்தவன் திரும்பி அவளிடம் ஒரு விஷயத்தை மட்டும்தான் கேட்டான்.

“இப்போது பேசியதை இங்கேயே மறந்துவிடலாம். என்னை உனக்கு பிடிச்சிருக்கா?” அவன் நேரடியாக கேட்க, இப்போது தலையசைப்பது அவளது முறையானது.

அவன் பேச்சு முடிந்தது என்று அறையைவிட்டு வெளியேற நிரஞ்சனின் பார்வை தங்கையின் மீது படிய, அவள் புன்னகையுடன் ராகுலைப் பார்த்துவிட்டு, “எனக்கு சம்மதம் அண்ணா” என்றாள்.

அடுத்தடுத்து பேச்சு வார்த்தை சுமுகமாக முடிவிற்கு வர, பெண்கள் அனைவரும் சேர்ந்து சமைக்க, ஆண்கள் ஓரிடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

கொஞ்சநேரத்தில் ராகுலின் குடும்பம் அங்கிருந்து கிளம்பிவிட, மதிய உணவை முடித்ததும் நிரஞ்சன் மட்டும் மனைவியுடன் இருப்பதாக சொல்லிவிட, தங்களின் மகளை அழைத்துக்கொண்டு மற்ற மூவரும் கிளம்பிச் சென்றனர்.கடைசியாக திவாகரும் கிளம்புவதாக சொல்லி விடைபெற்று கிளம்பினர்.

அவர்கள் அனைவரும் சென்றதும், “சரிங்க உங்களுக்கு தேவையானது எல்லாம் எடுத்துகோங்க. நம்ம வீட்டுக்கு கிளம்பலாம்” என்றதும் சிற்பிகாவின் பார்வை கணவனின் மீது படிந்தது.

“அப்பா அம்மா பூர்வீக வீட்டில் தான் இருக்காங்க. அங்கேதான் போகப்போறோம்” என்றவன் விளக்கம் கொடுக்க, சரியென்று தலையசைத்தவள் தனக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து பேக் செய்து எடுத்துக்கொள்ள, மதியம் வெயில் தாள அங்கிருந்து காரில் கிளம்பினர். அவர்கள் அனைவரும் பூர்வீக வீடு போய் சேரும்போது மாலை ஐந்து ஆகிவிட்டது.

அவர்கள் காரை நிறுத்தியதும் இறங்கிய சிற்பிகாவின் பார்வை வீட்டின் மீது படிந்தது. வீட்டைச்சுற்றி தென்னை மரம், வாழை மரம், வேப்பமரம், கொய்யா மற்றும் மாம்பழ மரம் என்று அணிவகுத்து நின்றிருக்க, நடுநாயகமாக வீடு கம்பீரமாக வீற்றிருந்தது.

அந்த வீட்டிற்கு அப்போதுதான் முதல் முதலாக வரும் சிற்பிகாவின் பார்வை அந்த இடத்தை வளம் வந்தது. வீட்டின் வாசலில் ஒரு பக்கெட்டில் நீர் வைக்கப்பட்டு இருக்க அனைவரும் கால் கழுவிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தனர். வீட்டின் வேலையாட்கள் வந்து பெட்டியை எடுத்துச்செல்ல அனைவரையும் ஒன்றாக நிற்க வைத்து பூசணிக்காய் சுற்றி வீட்டிற்குள் அழைத்து சென்றார் மகேஸ்வரி.

அந்த காலத்து வீடு என்பதால் பெரிய தூண்களோடு அழகாக அமைக்கபட்டு இருந்தது. சொந்த பந்தங்கள் அமர்ந்து பேச வெளியே பெரிய திண்ணையும், பெரிய ஹாலில் சோபா போடப்பட்டு இருந்தது. சமையலறையில் இரண்டு பெண்கள் வேலைப் பார்க்க, வீட்டின் பின்னோடு மாட்டுத் தொழுவமும், காய்கறி செடிகளும் நடப்பட்டு பரமாரிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் கீழே பெரியவர்களின் தனியறை இருக்க மாடியிலும் இதுபோலவே அலுவலக அறையும், விருந்தினர் அறையும் இருந்தது. அத்துடன் முகிலனின் அறையும் இருந்தது. பக்கத்தில் அந்த காலத்து புத்தங்கள் அடுக்கபட்டு பெரிய நூலகமே இருந்தது.

அவளை மாடிக்கு அழைத்துச்செல்ல, கண்ணுக்கு எட்டிய தூரத்தில் மலைத்தொடர்கள் பசுமையாக காட்சியளிக்க, அதன் முகட்டின் மீது மேகக்கூட்டம் திரண்டு நின்றிருப்பதைப் பார்க்கும்போது அவ்வளவு அழகாக இருந்தது.

முகிலனும், சிற்பிகாவும் சிறிதுநேரம் அதை நின்று ரசித்தனர். பிறகு கீழிறங்கிச் சென்று ஒரு குளியல் போட்டு திரும்பிப் பார்க்கும்போது மணி எட்டாகிவிட அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். எல்லோரும் சாப்பிட்ட கையுடன் அவரவர்களின் அறைக்குச் செல்ல, முகிலன் உல்லாசமாக விசில் அடித்தபடி மாடியேறினான்.

“சரிங்க அத்தை நான் தூங்க போறேன்” என்று நகர்ந்தவளின் கரம்பிடித்து தடுத்த மகேஸ்வரி அவளின் கூந்தலில் மல்லிகை பூவை வைத்துவிட்டு, சூட்டாக காய்ச்சிய பாலை அவளின் கையில் கொடுத்துவிட்டு, தங்களின் அறைக்குச் சென்றார்.

அவள் கொஞ்சம் தடுமாறியபடி மாடியேறிச் சென்று அறைக்குள் நுழைய, முகிலன் சத்தமின்றி அறையின் கதவைத் தாழ்போட்டு திரும்பினான். அவளின் இதயம் படபடவென்று துடிக்க, அவன் கண்களில் தெரிந்த தாபம் அவளை பதற வைத்தது.

“இதுவரை உனக்காக காத்திருந்தது எல்லாம் போதும். இனிமேல் என்னால் உன்னை பிரிந்திருக்க முடியாது” என்றவன் அவளை நெருங்க, இரண்டடி பின்னே நகர்ந்தாள்.

அவள் எந்தவிதமான நகையும் அணியாமல் இருப்பதை கண்டவன், “ஒரு நிமிஷம்” என்று சொல்லி தன்னிடம் இருந்த நகையை ஒவ்வொன்றாய் அவளுக்கு அணிந்துவிட்டு, கடைசியாக பாதத்தில் கொலுசை போட்டு விட்டான்.

சிற்பிகா பதுமைபோல அமைதியாக இருக்க, “உனக்கு கண்ணாடி வளையல்தானே பிடிக்கும்” என்றவன் அதையும் எடுத்து கொடுக்க, அவனது விருப்பத்திற்கு மறுப்பு சொல்லாதபோதும் ஒருவிதமான பயம் நெஞ்சைக் கவ்வியது.

ஒரு கையால் அவளைப் படுக்கையில் தள்ளிவிட்டு சிற்பிகாவின் மீது பரவி படர்ந்தான். அவளின் உச்சியில் தன் இதழை மெல்ல தனது ஊர்வலத்தை தொடங்கினான். அவன் விரல் தீண்டல் உடலை சிலிர்க்க வைக்க, “எனக்கு ரொம்ப பயமாக இருக்கு முகில்” என்றாள் திணறலோடு.

அவளின் இதழில் இதமாக முத்தமிட்டு முன்னேறியவன், “நான் இருக்கும்போது உனக்கு என்னடி பயம்?” என்றவன் விரல்கள் செய்த மாயத்தில் அவள் தன்னையே மறக்க,பெண்ணின் உடலில் அவனது கரம் சுதந்திரமாக வலம்வந்தது.

கடைசியாக அவளின் நாணத்தை உடைத்து முன்னேறிய முகிலனின் வேகம் அவளை துவண்டுபோக வைத்தது. அவளின் கண்ணாடி வளையோசையுடன், கால் கொலுசும் சேர்த்து அமைத்த இசையில் இனிமையான இல்லறம் அழகாக தொடங்கியது. கூடல் முடிந்ததும் அவளை இழுத்து அணைத்து முன் உச்சியில் இதழ் பதிக்க, அவன் மார்பினில் புதைந்து உறக்கத்தைப் போனாள் சிற்பிகா.

வெகுநாட்களுக்குப் பிறகு நன்றாக உறங்கிய இருவரும் அதிகாலை நேரத்தில் கண்விழித்தனர். எங்கோ ஒரு கோவிலில் ஓடிய சுப்பிரபாதம் மனதிற்கு அமைதியைக் கொடுக்க, இருவரும் ஒருவரையொருவர் இமைக்காமல் பார்த்தனர்.

தன்னவளின் நெற்றியில் இதழ்பதித்த முகிலன், “இந்த மாதிரி ஒரு விடியல் என் வாழ்க்கையில் இனி வர வாய்ப்பே இல்லையா என்று எத்தனை நாள் ஏங்கினேன் தெரியுமா?” என்று சொல்ல அவளின் முகம் நாணத்தில் சிவக்க, சட்டென்று அவனைவிட்டு விலகி எழுந்தாள்.

அவளின் கரம்பிடித்து இழுத்ததும் தடுமாறி விழுந்தவளை இரண்டு கரங்களால் வளைத்துக்கொண்டு, “ஒவ்வொரு முறையும் ஆண்கள்தான் காதலை சொல்வார்கள். ஆனால் நம்ம வாழ்க்கையில் என்னை அதிகம் விரும்பியது நீதான். சோ நீதான் காதலை சொல்லணும்” என்று அவன் கட்டளையிட, அவள் உதட்டைக் கடித்தபடி மறுப்பாக தலையசைத்தாள்.

அவன் முகம் வாடிவிட அதைக் காண பொறுக்காமல், “எனக்காக காத்திருந்தது நீங்கதான். சோ நீங்கதான் சொல்லணும்,  நான் சொல்ல மாட்டேன்ப்பா” என்றவளின் கன்னத்தைக் செல்லமாக கடித்தான்.

“என்னைக்குமே காதலிப்பதைவிட, காதலிக்கப்படுவது என்பதே தனி சுகம்தான். அதை எனக்கு உணர்த்திய நீதான் காதலைச் சொல்ல தகுதியானவள்” என்றவன் மெல்ல அவளின் கன்னம் வருடினான்.

“அதெல்லாம் முடியாது. காதலிப்பது, காதலிக்கப்படுவது இரண்டையும்விட காத்திருப்புதான் பெருசு. எனக்காக அதிகம் காத்திருந்தது நீங்கதான். அது மட்டும் இல்லாமல் இடையில் நான் செய்த முட்டாள்தனமான செயலை எல்லாம் மன்னித்து என்னை ஏத்துகிட்டீங்க. செய்த தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்பவன் மனிதன் என்றால்  அவனை மன்னிப்பவன்  அதைவிட பெரிய மனிதன். சோ இதுக்கெல்லாம் தகுதியானவர்” என்றவளின் வெண்டை விரல்கள் அவனின் மார்பைத் தொட்டது.

“என் மனைவியிடம் பேசி ஜெய்க்கலாம். வக்கீல் அம்மாவிடம் வாதாடி ஜெய்க்க முடியாதும்மா. ஆனால் நானாக காதலை சொல்ல மாட்டேன்” என்றவன் பிடிவாதம் பிடிக்க, “அதையும் பார்க்கலாம்” என்று சவால் விட்டாள் சிற்பிகா.

அவர்கள் இருவரும் குளித்து தயாராகி கீழே வந்தனர். முகிலனின் கண் சிவப்பும், சிற்பிகாவின் வெக்கமும் ஆயிரம் கதை சொல்ல, “ஒரு கப் காபி போட்டு தா” என்றவுடன் மறுப்பு சொல்லாமல் சரியென்று தலையசைத்துவிட்டு சமையலறை நோக்கிச் சென்றாள்.

அங்கிருந்த மகேஸ்வரி, “என்ன வேணும்?” என்று கேட்க, “அவர் காபி கேட்டார் அத்தை” என்றாள்.

“நாங்க எல்லோரும் குடிச்சிட்டோம். நீங்க இருவரும் போட்டு குடிங்க” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அவள் காபி போட்டு கொண்டுபோய் கொடுக்க, அவளைப் பார்த்து குறும்புடன் கண்சிமிட்டிச் சிரித்தான்.

அவள் சுற்றிலும் கண்ணைக் காட்டிவிட்டு, ‘உதை வாங்குவ படுவா’ என்று விரல்நீட்டி எச்சரித்தபடி காபியைப் பருகினாள்.

அன்று மாலை முழுவதும் ஆளுக்கொரு வேலையைப் பார்க்க மாலையானதும் இயற்கை அழகினை ரசிக்க சிற்பிகா மொட்டை மாடிக்குச் செல்ல, அவளின் பின்னோடு சென்ற முகிலனைக் கண்டு வீட்டினர் புன்னகைத்தபடி அங்கிருந்து நகர்ந்தனர்.

மலைத்தொடர்களை தொட்டுச் செல்லும் மேகக்கூட்டத்தை இமைக்காமல் ரசித்தபடி அவள் நின்றிருக்க, அவளை நெருங்கி நின்ற முகிலன் மனைவியின் இடையோடு கைபோட்டு வளைத்துக் கொள்ள, “இங்கே நிறையப்பேர் இருக்காங்க முகில்” என்று மெல்லிய குரலில் எச்சரித்தாள்.

அதற்குள் சில்லென்ற காற்று இருவரின் உடலையும் தழுவிச்செல்ல, “அவங்க வேலை டைம் முடிஞ்சிது. இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லோரும் போயிடுவாங்க. சோ நீ உன் ரசனையை கண்டினியூ பண்ணு” என்று சொல்லி அவளின் கன்னத்தில் முத்தமிட்டான்.

சூரியனின் வெப்பம் ஒருப்பக்கம் இருக்க, எந்தவிதமான சத்தமும் இன்றி வானில் மழை பொழிய, “இன்னைக்கு இந்த கிளைமேட் ரொம்ப நல்லா இருக்கு” என்று சொன்னவளுடன் சேர்ந்து அவனும் நனைந்தான்.

 “என்னுடைய குணம் கோபம் போல சூரியன் சுட்டெரிக்க, உன்னுடைய குணம்போல சில்லென்ற மழைத்துளி மனதை நனைக்கிறது” என்றவன் அவளின் காதில் கூற,

“சிற்பிகளின் சோலையில் கல்லாக இருந்த என்னை காதல் மழையால் நனைத்துவிட்டாயே முகிலின் அரசனே” என்றவளின் விழிகளில் தெரிந்த காதல் அவனை என்னவோ செய்தது.

“ஐ லவ் யூ” என்றவன் அவள் இதழை அவன் சிறை செய்ய, சிற்பிகாவின் கரங்கள் அவன் கழுத்தில் மாலையாக கோர்த்தது. அவளின் கண்களைப் பார்த்தபடி இதழ் நோக்கி குனிந்தான் முகிலரசன்.

அவளிடம் தோற்று அவளையே வெற்றியடைய வைக்கிறான் அந்த காதல். இனி ஈருடல் ஓர் உயிராக மாறிப்போன அவர்களுக்கு நடுவே பிரிவு என்ற சொல்லிற்கு இடமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!