மாயவனின் மயிலிறகே 21

மாயவனின் மயிலிறகே 21

மாயவனின் மயிலிறகே 21

 

 

 

 

அபிஜித்தின் பேச்சைக் கேட்டு மாடியில் இருந்து தன் அறைக்கு அதாவது ஜனனியின் அறைக்கு வந்த மது சத்தம் வராமல் அழத்தொடங்கினாள்.  மருத்துவமணையில் கண்விழித்ததும் இடைப்பட்ட காலங்கள் நினைவில் வரவில்லைதான். ஆனால் காயத்ரி கூறவும் மெதுமெதுவாக நினைவுகளை மீட்கத் தொடங்கியிருந்தாள்.

 

 

 

 

அதில் பிரதானமாக இருந்தது அபிஜித்துடனான அவளது அந்யோன்யமும், நெருக்கமும். அதிர்ந்து போனாள்! அவள் மனதில் நின்றதெல்லாம், ‘என்னால் எப்படி அவருடன் மட்டும் அவ்வளவு நெருக்கமாக  பழக முடிந்தது’ என்பதுதான்.

 

 

 

 

தாய் தந்தையுடன் இருந்தபோதே அத்தை மகனாக புகைப்படத்தில் அறிமுகமான அவன் எப்போதும் அவள் ரசிப்புக்கு உரியவன்தான். தன் முறையின் மேல் வரும் இயல்பான ஈர்ப்பு அவளுக்கும் உண்டு. 

 

 

 

 

ஒருவேளை அந்த ஈர்ப்புதான் மனம் பிறழ்ந்த வேளையிலும் அவனை ஒட்டிக்கொள்ள காரணமோ? எதுவாகினும் என்ன, இத்தனை நாட்கள்  அவனுடன் ஒன்றி இருந்தாயிற்று, அப்போது அது தோன்றவில்லை. ஆனால் இப்போது? 

 

 

 

 

குழந்தையிலிருந்து குமரியாய் மனம் தெளியவும் மிகவும் சங்கடப்பட்டாள். அவன் ஒரு அந்நிய ஆடவன். அப்படிதானே? நினைவு தெரிந்தவரை போட்டோவில் மட்டுமே பார்க்கப்பட்டவன் அந்நிய ஆடவன்தானே!  அவனை ஒட்டி, உரசி, கட்டிப்பிடித்து முத்தமிட்டு, முத்தம் வாங்கி, மருத்துவமணையில் நடந்தது, அதன் பிறகு அவன் விலகியது, இவள் தேடி சென்றது, இறுதியில் கூர்க்கில் நடந்தது அவளது அசட்டுத்தனங்களின் உச்சமாக தோன்றியது.

 

 

 

 

 

அதன்பின்னும் கூட சில அந்தரங்கமான நிகழ்வுகள். அவை அனைத்தும் நினைவில் வர நடுங்கித்தான் போனாள். ‘என்ன காரியம் செய்துவிட்டேன். அவனை எப்படி எதிர்கொள்வேன். என்னைப் பற்றி என்ன நினைப்பான். தப்பாக எண்ணிவிடுவானோ? ‘ என தவித்தாள். 

 

 

 

 

பொதுவாக நாம் ஒரு செயலை செய்யும்பொழுதோ அல்லது பேசும் பொழுதோ அது மற்றவர்களால் எப்படி பார்க்கப்படுகிறது என்பதை கண்டுக்கொள்வதில்லை. ஆனால் அந்த நிகழ்வு முடிந்து சில மணிநேரங்கள் கழித்தோ அல்லது சில நாட்கள் கழித்தோ ‘ஐயோ! நாம் என்ன இப்படி செய்துவிட்டோம்.அவர்கள் நம்மை பற்றி என்ன எண்ணுவார்கள் ‘ என எண்ணித் தவிக்கும் சூழ்நிலைகள் வெகுவாக நடந்தேறியிருக்கும். மீண்டும் அவர்களைக் காணும் போது ‘அவர்களை எப்படி எதிர்கொள்வது’ என தர்மசங்கடத்திற்கு ஆளாகியிருப்போம்.

 

 

 

 

அதுபோலதான் மது முன்பு நடந்தவை அது அவள் சுயநினைவில் இல்லை என்றாலும் நடந்ததே… இனி அவனை எப்படி எதிர்கொள்வோம் என்ற தயக்கம் அவளை ஆட்டிப்படைத்தது .

 

 

 

 

இதைஎண்ணிக் கொண்டிருக்கும் போதுதான் ஷௌரியா வந்தது. அதில் இந்த எண்ணங்கள் சற்றே தூரம் போனது. 

 

 

 

 

 

ஆனால் அது கொஞ்ச நேரம்தான், அபி வரவுமே அவனை நேரில் பார்க்கவுமே மீண்டும் அதிவேகத்தில் அந்த நினைவுகள் கண்முன் வர அவனைக்காண சங்கடப்பட்டுப் போனாள். 

 

 

 

 

 

ஆனால் அவனோ அனைவரையும் அசட்டை செய்து அவள் அருகில் அமர்ந்து தலைமுடி ஒதுக்கவும், அவன் கண்களை நேருக்கு நேர் சந்தித்த அந்த ஒரு நொடி அவன் கண்களில் வழிந்த நேசத்தில் மனம் தானாக அவன் தோள் சாய நினைக்க,  மனம்போகும் போக்கை கண்டு அதிர்ந்தவள் சட்டென்று பார்வையை தாழ்த்தி  அவன் கையை விலக்கிவிட்டாள். 

 

 

 

 

 மனம் அவனை வரவேற்க, மூளை அவனை நிராகரித்தது.அதனால்தான் அவன் நெருங்கும் சமயம் அவனை விலக்கியது.  ஆனால் அவன் முகம் சுருங்க விலகவுமே  இவளுக்கும் வருத்தமானது.  

 

 

 

 

அந்த நிமிடங்கள் மிகவும் கொடுமையாக இருந்தது மதுவிற்கு.  யாரிடம் எந்த உணர்வை காட்டுவது என திண்டாடிப்போனாள்.  அதை யாருக்கும் தெரியாமல் மறைத்ததுதான் அவள் சாமர்த்தியம். ஆனால் அவளின் தடுமாற்றத்தை ஷௌரியா கண்டுவிட்டான். 

 

 

 

 

 

பின்பு வீட்டிலும்கூட அபியை மறுத்து, அவன் கோபித்துக்கொண்டு செல்லவும் இவளுக்கு மனமே ஆறவில்லை. உறங்கும்முன் அவனைக் காண வேண்டும் என்ற மனதின் உந்துதலால்தான்  அவனைக்காண வந்தது. அவன் பேச்சையும் கேட்டது. 

 

 

 

 

அதில் தெரிந்ததெல்லாம் நேசம்… நேசம்…கொள்ளை கொள்ளையாய் அவள் மீதான நேசம். ஜித்து அவளை நேசிக்கிறான் என்பது ௐஅவன் பார்வையில் ஓரளவு தெரிந்தது, பேச்சில் மொத்தமும் புரிந்தது. 

 

 

 

 

சாதாரண மனநிலையில் இருந்திருந்தால் அவள் மகிழ்ந்திருக்கக் கூடுமோ என்னவோ? ஆனால் புதிய சூழ்நிலை, அதிர்ச்சி, குழப்பம், சங்கடம் என கலவையான மனநிலையில் இருந்தவள் தன்னுடைய செய்கை இத்தனை நாள் தன்னை அன்பாக பார்த்துக்கொண்டவனை வருத்தப்பட வைத்துவிட்டதையும் அறிந்து என்ன செய்வது ஏது செய்வது எனப் புரியாமல் கண்ணீருடன் அந்தஇடத்தை விட்டு வந்திருந்தாள்.

 

 

 

 

ஆனால் தப்பித்தவறி கூட தனக்கு அனைத்தும் நினைவிருக்கிறது எனக் கூற மனம் வரவில்லை.

 

 

 

 

 

பெண்களின் சில உணர்வுகள் நாசுக்கானவை. பெற்றோரிடமே கூறமுடியாத சில நிகழ்வுகளை அபிஜித்திடம் பகிர்ந்து கொண்டதை அவளால்அவ்வளவு  இயல்பாக எடுக்கமுடியவில்லை.

 

 

 

 

 அதனால் தனக்கு நினைவில்லை என்பது அப்படியே இருக்கட்டும். இதில் பெரிய மாற்றம் எதுவும் நிகழப்போவதில்லை. ஆனால் அவளுக்கு ஒருவித ஆறுதலாக இருந்தது.  அந்த மனநிலையுடனே உறக்கத்தை தழுவியிருந்தாள். அங்கு அவனும்! 

 

 

 

 

 

 

 

 

 

மறுநாளில் இருந்து அபிஜித் சாதாரணமாக எதாவது கேட்டாலும் நிலம் பார்த்து ஒரு வார்த்தையில் பதில் சொல்லி கடந்துவிடுவாள் மது. அதைக்கண்டவன், இப்போது இருப்பவளுக்கும் அவன் பாப்புவுக்கும் ஆயிரம் வித்தியாசங்களைக் கண்டான். அதனால் அவளுக்கான அழைப்பையும் வித்தியாசப்படுத்திக் கொண்டான். 

 

 

 

 

அன்றைக்கு பிறகு இவனும் “மது” என்றே அழைக்க பழகிக் கொண்டான். 

 

 

 

 

அன்று தாயுடன் மனம் விட்டு பேசவுமே ஒரளவு தெளிந்திருந்தான். அதன்பிறகு மதுவை நெருங்க முயற்சிக்கவேயில்லை. இதை அவளின் விருப்பமாக  எண்ணி ஏற்றுக்கொண்டான். அதற்காக விலகவும் இல்லை. 

 

 

 

 

அவன் போக்கில் அவன் இருக்க, பார்வைகள் மட்டும் அவ்வப்போது அவள் பார்க்காத பொழுது தொட்டு மீளும்.  அப்போது சில சமயங்களில் அவள் செய்கை இவனைக் குழப்பும்.  இவனைப் பார்ப்பதுபோல தெரியும். ஆனால் அடுத்த நொடி அவ்வாறு இருக்காது. 

 

 

 

 

 

ஜனனி மதுவுடன் நன்றாக ஒட்டிக்கொண்டாள்.தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, பொன்னம்மா என ஒரே பாசமழைதான் அவள்மீது. 

 

 

 

 

இதற்கிடையில் ஷௌரியா அவளை தன்னோடு வந்துவிடுமாறு அழைக்க, “நான் கொஞ்ச நாள் இங்க இருக்கேனே ஷ்ஷௌரி” என மறுத்துவிட்டாள். பெருமூச்சொன்றை வெளியிட்டவன், “சரி… உன் விருப்பம். ஆனா உனக்காக நாங்க எப்பவும் இருப்போம், அத மறந்துடாத ”  எனவும், அவனை அணைத்துக்கொண்டவள், “இத நீ சொல்லனுமா” என நெகிழ்ச்சியுடன் கூறவும், தனிமையில் சில நிமிடங்கள் பேசிவிட்டு மகிழ்ச்சியுடன் மும்பை சென்றிருந்தான். 

 

 

 

 

 

அடுத்து வந்த நாட்களில் உகந்த நாள் பார்த்து சீனிவாசனுக்கும் அமிர்தாவிற்கும்  ஐயரை அழைத்து முறைப்படி திதி கொடுத்தனர். அன்று மதுவிற்கு அவ்வளவு அழுகை தாய் தந்தையை நினைத்து. அழுதழுது முகமே வீங்கிப்போனது. யாரின் ஆறுதலும் அவளை தேற்றவில்லை.

 

 

 

 

எப்படி முடியும் தேறுதலுக்கு அவள் எதிர்பார்த்தது அவனை. அவள் ஜித்தனை.  ஆனால் அவனைதான் தள்ளி நிறுத்தியிருக்கிறாளே!  மனமோ, இப்போதே அவன் கைகளுக்குள்  அடங்கிவிடு என சண்டித்தனம் செய்ய அதுவும் முடியாமல்தான் அப்படியொரு அழுகை. நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருந்தும், அதை செயல்படுத்த முடியாமல் தன் மனமே முட்டுக்கட்டை போடுவதைக்கண்டு, இத்தனை இக்கட்டில் நிறுத்தி வைத்த விதியின்மேல் அப்படியொரு கோபம்.

 

 

 

 

 

இப்படியே அவளும் நெருங்காமல் அவனையும் நெருங்கவிடாமல் தள்ளிநிறுத்தி ஏனோ மனதளவில் மிகவும் சோர்ந்து போனாள் மது. மற்றவர்களுக்காக பேசி, உண்டு, சதா எந்நேரமும் ஏதோ யோசனையிலேயே உழன்றாள்.

 

 

 

 

காயத்ரி அனைத்து விசேஷத்திற்கும் இவளை அழைத்து சென்றுவிடுவார். சந்திரனும் தோப்பு நிலபுலன்கள்  என தினம் ஒரு இடமாய் சுற்றி காண்பிப்பார். பார்த்தசாரதியும், புவனாவும் கோவில் குளமென அழைத்து செல்வர். ஆக, இப்படி   பிஸியாக சுற்றுவதுதான் மதுவின் வேலை என்றானது. இதில் அபிஜித்தைப் பார்ப்பதே அரிதாகிப் போனது.  இடையில் யோசனைகள் வேறு!

 

 

 

 

மது அன்று காலையில் எழுந்து, குளித்துவிட்டு முடிஉலர்த்தும் போது, வாயிலில் ஏதோ சத்தம் கேட்கவும் என்னவென்று பார்க்க பால்கனிக்கு வந்திருந்தாள். சில இளைஞர்கள் கூட்டமாக நின்றிருந்தனர். இவர்கள் இந்நேரத்திற்கு இங்கு  என்ன செய்கிறார்கள் என எண்ணிக் கொண்டிருக்கும் போதே காலை ஓட்டப்பயிற்சிக்கு சென்றிருந்த அபிஜித் வந்தான்.

 

 

 

 

அவனைக் கண்டதும் அந்த இளைஞர்கள் அவனிடம் ஏதோ பேசினர்.  அவனும் ஏதோ கூறிக் கொண்டிருக்க அவன் கை காற்றில் அலைவது, முடி கோதுவது, தன் பேண்ட் பாக்கெட்டை நிரப்புவது என அவனின் செய்கைகளையே தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள் மது. 

 

 

 

 

சில நாட்களாக அவனே அறியாமல் பார்வையால் அவனைத்தொடரும்  இந்த கண்ணாமூச்சி ஆட்டம் மதுவிற்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் இவள் பார்ப்பதை அபியும் அறிவான் என்பதை இவள் அறியவில்லை. இப்போதும் கண் எடுக்காமல் அவனையே  பார்த்திருந்தாள், அதை எதேர்ச்சையாக  காரின் கண்ணாடி வழியாக பார்த்திருந்தான் அபி.

 

 

 

 

‘நேரில் பார்த்தால் பேசுவதற்குக்கூட பஞ்சம். பார்வை மட்டும் ஆகாயம் வரை நீளுது’ என சுணங்கினாலும் புன்னகை பூத்ததுஅவனுக்கு. 

 

 

 

 

அவர்களிடம் பேசி அனுப்பியவன் சட்டென்று இவள்பக்கம் திரும்பினான். இவன் அப்படி செய்வான் என எதிர்பார்க்காதவள்  அதிர்ந்து அவனைப் பார்த்தவாறே நின்றிருக்க, அங்கிருந்தே ‘என்ன?’ என  புருவம் உயர்த்தினான். 

 

 

 

 

திருதிருவென முழித்து ஒன்றுமில்லையென தலையாட்டிவிட்டு உள்ளே ஓடவும் இவனும் சிரித்தவாறே  அங்கிருந்து நகர்ந்தான்.அதன்பிறகு, அன்று முழுவதும் மது அவன் கண்ணில் படவில்லை. 

 

 

 

 

 

இப்படி தன் செய்கைகள் மூலம், ‘அவளுக்கு நம்மை பிடித்திருக்கிறதா? இல்லையா?’ என அபியை ஒரு குழப்பத்திலேயே வைத்திருந்தாள் மது. 

 

 

 

 

 

அன்று காயத்ரியுடன் ஒரு திருமணத்திற்கு அலங்காரத்துடன் சென்றுவிட்டு வீட்டிற்குள் வரும்போதே யாரோ வந்திருக்கிறார்கள் என வெளியில் நின்றிருந்த காரின்மூலம் அறிந்திருந்தனர். 

 

 

 

 

 

ஆம், விருந்தினர்கள்தான். பார்த்தசாரதியின் நண்பரும் டாக்டருமான செழியன் அவர் மகன் மருமகள், பேரன் சகிதம் வந்திருந்தார்.  ஆனால் அவர்கள் வந்த விசயம்? 

 

 

 

 

நண்பர்கள் இருவரும் சுவாரசியமாக பேசிக் கொண்டிருக்கும்போது உள்ளே வந்த மகளையும், பேத்தியையும் கண்டதும், புவனா மதுவை வாவென அழைத்து, அவளை தன்அருகில் அமர்த்தி, “இவதான் மது. எங்க பேத்தி.” என அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்களுக்கு வணக்கம் வைத்தவளை கண்டு புன்னகைத்த பெரியவரின் மருமகள்,  “எங்களுக்கு தெரியும்மா… பாப்பாவ நாங்க ஒரு கல்யாணத்துல பார்த்திருக்கோம் ” எனக்கூறியவர் மதுவிடம் பேசிக் கொண்டிருந்தார். அவரது மகனோ மதுவை ரசிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

 

 

 

 

 

காயத்ரி அவர்களை முறையாக கவனிக்க, சில நிமிடங்களில் சந்திரனும் வந்துவிட்டார். சில நிமிடங்கள்  பொதுவாக பேசினர். பிறகு அந்த பெரியவர் தன் பேரனுக்கு மதுவை பெண்கேட்க அமைதியானது இடம்.

 

 

 

 

மீண்டும் அவரே பேசினார், ” ஒரு கல்யாணத்துல மதுவ பார்த்ததுல இருந்து என் மருமகளும், பேரனும் உங்கள பத்தி தெரிஞ்சிகிட்டு பொண்ணு கேட்டு போலான்னு ஒரே அடம்.    உனக்கே என்னை பத்தி, என் குடும்பத்தை பத்தி தெரியும். பையன், மருமக, பேரன்னு எல்லாருமே டாக்டர்… அதுலயும் என் பேரன் ஒரு “பீடியாட்ரீஷியன்”. குழந்தைகளோடவே  பழகி  அதிர்ந்து பேசவே வராது.  உன் பேத்திய குழந்தையாட்டம் பாத்துப்பான், ஐ ப்ராமிஸ்.  நாங்களும் அப்படிதான். யோசிச்சு சொல்லுங்க உங்களுக்கும், மதுவுக்கும் விருப்பம்னா இந்த ‘ப்ரிட்டி’ எங்க வீட்டுக்கு வர நாங்க குடுத்துவச்சிருக்கோம். யோசிச்சு நல்ல முடிவா சொல்லுங்க” என இயல்பாக தங்களது கருத்தை கூறியவர்கள் விடைபெற்று சென்றுவிட்டனர்.

 

 

 

 

 

இதைக்கேட்ட  ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர். காயத்ரியும் சந்திரனும் அபியைதான் நினைத்தனர். அவனது மதுவின் மீதான விருப்பம் இவர்களையும், ஜனனியையும் தவிர வேறு யாருக்கும் தெரியாதே! அவனே கூறாமல் இருக்க இவர்கள் எப்படி அதுகுறித்து பேச முடியும். அதிலும் மது அவளது விருப்பம் முக்கியமல்லவா?  அவள் இந்த சம்பந்தத்தை மறுத்து ஒன்றும் கூறாதிருக்க, ஒன்றும் செய்ய இயலா நிலை.

 

 

 

 

 

 வயதுப்பெண் இருக்கும் வீட்டில் திருமணத்திற்கு கேட்டு வரன்கள் வரத்தான் செய்யும்.அதை தவறென்று கூற இயலாதே!

 

 

 

 

சாரதியும் புவனாவும் யோசனையில் இருந்தனர் இது சரிவருமா என்று. தாங்கள் நன்றாக இருக்கும்போதே தன் பேத்திக்கு ஒரு நல்லதை செய்து பார்த்துவிட வேண்டும் என நினைத்தனர். ஆனால் அவளிடம் விருப்பத்தைக் கேட்க மறந்தனர்.  

 

 

 

 

 

 

மது, முதலில் அவர்கள் பெண்கேட்டதே அவளுக்கு அதிர்ச்சிதான். பின் பெரியவர் ‘குழந்தையாட்டம் பாத்துப்பான்’ என கூறியதும் உண்மையாகவே தன்னை குழந்தை போல பார்த்துக்கொண்ட அவள் ஜித்துவை நினைத்துக் கொண்டது மனம்.

 

 

 

 

அந்த நினைவுடனே அவள் எழுந்து அறைக்கு சென்றுவிட்டாள். அறைக்கு வந்தவள் கட்டிலில் அமர்ந்து யோசிக்கத்தொடங்கினாள்.

 

 

 

 

அவளுக்கு ஜித்துவை பிடிக்கும்… மிகமிக பிடிக்கும். ஆனால் இதுவரை  திருமணம் வரை யோசித்ததில்லை. ஆனால் திருமணம் என்ற பேச்சு வரவுமே அவனைத்தாண்டி எதுவும் தோன்றவில்லை.

 

 

 

 

ஜித்துவுடன் திருமணம் நடந்தால்?  அந்த எண்ணத்திலேயே  சந்தோஷப்பட்டவள், இதை தாத்தா பாட்டியிடம் எப்படிக் கூறுவது என எண்ணிக் கொண்டிருந்தாள். 

 

 

 

 

‘அட மது நீ ஏன் கவலைப்படற எப்படியும் விசயம் கேள்விப்பட்டதும் ஜித்து,  நான் இருக்கையில மதுவுக்கு வேற மாப்பிள்ளை எதுக்குன்னு உன்னை தூக்கிட்டு போயிடுவான் நீ கவலைப்படாம சந்தோஷமா இரு’ என எடுத்துரைக்க , “அதான ஜித்து இருக்கயில கவலை எதுக்கு” என வாய்விட்டுக் கூறியவள் கனவுகளில் ஆழ்ந்தாள்.

 

 

 

 

ஆனால் மது ஒன்றை உணரவில்லை. இவள்  தனது எண்ணத்தை, அவன் மீதான பிடித்தத்தை சிறிதேனும் வெளிப்படுத்தாதவரை அபிஜித் இவளை நெருங்கப்போவதில்லை என்பதை.  இவள் அவ்வப்போது  பார்ப்பதை  மட்டும் வைத்து அவன் என்ன உணருவான். 

 

 

 

 

காதலை சொல்லவில்லை என்றலும் உணர்த்த வேண்டும். உணர  வேண்டும். அந்த வகையில்  அபியின் காதலை உணர்ந்த மது அவனுக்கு உணர்த்த தவறினாள். 

 

 

 

 

 

மாலை அபி வந்த சிறிது நேரத்தில் அவனுக்கு விசயம் சொல்லப்பட பலமாக அதிர்ந்தான். உடனே அங்கிருந்த மதுவைப் பார்க்க, அவளோ இவன் என்ன சொல்வான் என எதிர்பார்ப்போடு அவனைப் பார்த்திருந்தாள்.  அவள் மறுத்து பேசுவாள் என்று நினைத்தவன் அவள் ஒன்றும் கூறாமல் இருக்கவும் அவளில் இருந்து பார்வையை விலக்கியிருந்தான். ஏமாற்றம் அவன் விழிகளில்.

 

 

 

 

 

  சாரதி திருமணம் முடிவானது  போலவே பேச புவனாவைத் தவிர அனைவருக்குமே அவரது வேகம் கண்டு அதிர்ச்சிதான்.

 

 

 

 

காயத்ரி,”என்னப்பா அதுக்குள்ள முடிவே பண்ணிட்டீங்களா? விசாரிக்க வேண்டாமா.  மதுவுக்கு சம்மதமான்னு கேக்க வேண்டாமா?” மகனின் முகம் கசங்குவதை காண இயலாமல் படபடப்புடன் கேட்டார். அவன் விருப்பம் அறிந்தவரல்லவா!

 

 

 

 

 

“ஏம்மா,  என்ன குறைச்சல் அவங்களுக்கு, நல்ல குடும்பம், நல்ல பையன். மதுவுக்கு நாங்க நல்லதுதான செய்வோம், என்னடா மது” என அவளையும் இழுக்க அவளோ அபிஜித் எதாவது சொல்லுவானா? என மீண்டும் அவன் முகத்தையேப் பார்த்திருந்தாள்.

 

 

 

 

அவனோ கைகள் இறுக அவளைப் பாராமல், அவள் வார்த்தைக்காக காதை பட்டை தீட்டிக் காத்திருந்தான். ‘ஜித்து ஏன் பேசாம இருக்க? மதுவ நான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லு…’ என மனதுள்  தவித்தபடி அவள் அமர்ந்திருக்க புவனாவோ, “ஏங்க மதுவுக்கு சம்மதம்தான் போல எப்படி சொல்றதுன்னு தெரியாம அமைதியா இருக்கா”  எனப் பேசவும் சரேலென மதுவை ஒருநொடி பார்த்தான், அவளுக்குமே தன் மௌனம் இப்படி புரியப்படும் என எண்ணவில்லை அவள் திகைத்து ஏதோ சொல்ல வரும் முன்னே அபிஜித் எழுந்து   சென்றிருந்தான். 

 

 

 

 

 

அவனது செயலில் மதுதான் பலமாக அதிர்ந்தாள். ஏன் அவன்  பேசவில்லை? ஒரு வேளை  அவனுக்கு என்மீது விருப்பம் இல்லையா? நாம்தான் அதிகமாக கற்பனை செய்து கொண்டோமா? இல்லையே அவன் பார்வை , அன்று அவன் சொன்ன வார்த்தைகள் என மாறிமாறி யோசித்தவள் அவன் சென்ற திசையையே பார்த்திருந்தாள்.

 

 

 

 

 

 

 பெரும்தவிப்பு அவளிடத்தில் யாரிடம் என்ன சொல்லி இந்த திருமண பேச்சை நிறுத்துவது என்று. 

 

 

 

 

 

 

அனைத்து உறவுகளும் இருந்தும் , உரிமை இருந்தும் அங்கு அனாதையாய் அவள்! இப்போதைக்கு உயிர் உறவாய் நினைக்கும் அவனும் அவளுடன் இல்லை… ஒன்றும் செய்ய முடியாத இயலாமை, அவன் விட்டு சென்ற கோபம்,   இனி என் விருப்பம் என்னவாகும் என நினைக்க கண்களில் மெல்லிய நீர்ப்படலம்!

 

 

 

 

 

 

நீ இல்லை என்றால் எனக்கென யாரும் இல்லையே

 

 

 

 

 

ஏன் இதை செய்தாய் எனக்கென யாருமே இல்லையே…. 

 

 

 

 

 

 

எதற்கென்னை மறுக்கிறாய் இதயம் வலிக்குதே எப்படி தாங்குவேன் என்னிடம் வா…

 

 

 

 

அபியை நினைத்து மனதோடு கலங்கினாள்.

 

 

 

 

 

 

 

 

 

தன் அறைக்கு வந்த அபிக்கு மனமே ஆறவில்லை. ஆக, மதுவுக்கு இந்த கல்யாணத்துல சம்மதம். என் நேசத்தை அவள் உணரவே இல்லையா? 

 

 

 

 

 

 

அவ்வப்போது  அவள் கண்ணில் கண்ட நேசம் மாயையா? எனக் குழம்பினான்.

இனி என்ன செய்வது! எனத் தலையை  தாங்கியபடி அமர்ந்தான். 

 

 

 

 

 

 

 

‘ அவள் விருப்பத்தை தடை செய்யாதே அபி’ என மனம் வாதிட, 

 

 

 

 

 

 

 

‘அது முடியாது, எப்படி விடுவேன் என்னோட பாப்புவ…’  என கலங்கினான்.

 

 

 

 

 

‘அவ இப்ப உன் பாப்பு இல்ல’

 

 

 

 

 

 ‘ஆமால்ல அவ இப்ப  என்னோட பாப்பு இல்ல’ என விரக்தியுடன் நினைத்தவன் அதையே எண்ணியவாறு சாப்பிட கூட செல்லவில்லை.

 

 

 

 

 

அவன் சாப்பிட வருவான் என எதிர்பார்த்த மதுவிற்கு அவன் வராதது பெரும் வேதனையாக இருந்தது.ஏதோ பெயருக்கு தட்டில் இட்டதை விழுங்கியவள் அறையில் முடங்கிக்கொண்டாள். 

 

 

 

 

 

 

 அபி வராததால் காயத்ரி அவனுக்கு  சாப்பாடு எடுத்து சென்றவர் , “கண்ணா நான் வேணா தாத்தாட்ட பேசி பார்க்கட்டா” எனவும் எதை கூறுகிறார் என அறிந்ததும், பேச வேண்டியவ பேசவில்லையே என நினைத்தவன் , “வேண்டாம்மா,என்ன நடக்குதோ நடக்கட்டும்… ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு என் பாப்பு என்கிட்ட வந்துடுவா. ஒரு வேள அப்படி நடக்கலன்னாலும்…” இதைச் சொல்லும் போதே ஈட்டி பாய்ந்த வலி அவன் கண்ணில்… சற்று நேரம் தன்னை சமன்படுத்தியவன், “நான் என்னை சமாளிச்சுக்க முயற்சி பண்ணுவேன். கஷ்டம்தான்… ஆனா நம்மளோட எல்லா விருப்பமும் நிறைவேறுனும்ன்னு இல்லையே…”  எனக் கூறிவிட்டான். காயத்ரி ஒன்றும் கூறாமல் அவன் கன்னங்களை வருடியவர், ” நல்லதே நடக்கும்னு நம்புவோம். அதுக்கும்மேல இறைவன்  விட்ட வழி. நீ சாப்பிடுப்பா…” என்றவர் அவனுக்கு பரிமாற அவர் மனது கஷ்டப்படக்கூடாது என சிரமப்பட்டு அதை விழுங்கியவன், அவர் மடியிலேயே படுத்துக் கொண்டான். அத்தனை மனவேதனையிலும் சிறிது நேரத்தில்  உறங்கியும்விட்டான். அன்னை மடி அனைத்தையும் மறக்க வைக்கும் சொர்க்கமல்லவா! 

 

 

 

 

 

 

 ஜனனியும் காலையில் வந்து,  “மதுகிட்ட பேசவாண்ணா. அவங்க முகமே சரியில்ல. அழறாங்க போல… எதுக்கும் ஒருதடவ பேசிப் பார்க்கலாமே ? ” என கேட்கும்போது கூட , “அவளுக்கு விருப்பமில்லாதது எதுவும் இங்க நடக்காதுடா…பாத்துக்கலாம் விடு ” வெகுவாக சமாதானப்படுத்தி  அனுப்பியிருந்தான். 

 

 

 

 

 

 

அடுத்து மடமடவென வேலைகள்ஆரம்பித்தது. இருவீட்டாரும் பேசி இரு வாரங்களில் வரும் நன்னாளில் நிச்சயத்திற்கு ஏற்பாடு செய்தனர்.

 

 

 

 

 

 

இதை மதுவால் தடுக்க இயலவில்லை. கேட்க, சொல்ல உரிமை இருந்தும் இல்லாத நிலை அவளுடையது. அபியோ தடுக்க நினைக்கவில்லை. நான் உனக்கு வேண்டாமென்றால் போ… உன்னை தடுக்க மாட்டேன் என்பதாய்…

 

 

 

 

 

 

ஆனால் ஏதோ ஒரு நம்பிக்கை அவள் தன்னிடம் வந்துவிடுவாள்  என்று, அது அவனை தொய்ந்து போகச்செய்யவில்லை. 

 

 

 

 

 

 

மதுதான் நோயுற்றவள்போல நடமாடிக் கொண்டிருந்தாள். நிச்சய நாள் நெருங்க நெருங்க பெரும் தவிப்பு அவளுள். பலமுறை அபியிடம் பேச அவன் அறை வாயில் வரை வருபவள் பேசாமலேயே சென்றுவிடுவாள்.  பிறகென்ன மனதோடுதான் அவனுடன் பேச்சு, அழுகை எல்லாம்… வீட்டில் நிச்சயத்திற்கு நடக்கும் அலங்கார வேலைகளை வெறுமையுடன் பார்த்துக் கொண்டாள். 

 

 

 

 

 

 

இதோ அடுத்த நாள் நிச்சயம்  என்ற நிலையில் பெரியவர்கள் கோவிலுக்கு சென்றிருக்க, மதுவும் ஜனனியும் வீட்டில் இருந்தனர். இன்று எப்படியாவது ஜித்துவிடம் பேசிவிட வேண்டும் என்ற உறுதியுடன் மது அவன் வரும் நேரமறிந்து கீழே வந்தாள்.

 

 

 

 

 

இவள் படியிறங்கும் போதே அவனும் வந்திருந்தான். இருவரும் மற்றவரைக் கண்டதும் நடையை நிறுத்தினர். 

 

 

 

 

மெல்லிய கருவளையத்துடன் பொலிவிழந்த விழிகள் அவனை ஏக்கத்துடன் தழுவி வாதம் செய்தது,

 

 

 

 

“கலங்கரை விளக்கமும் அணைந்து போனாலே… கடலினில் சுழலினில் எங்கு போவேன் நான்… 

 

 

 

 

இனைந்த கை விலகினால் என்ன ஆவேன் நான்” 

 

 

 

என்னை இப்படி விட்டுவிட்டாயே…இனி என்ன செய்வேன் என மனதோடு உரையாடினாள்.

 

 

 

 

அவனோ, நாளை நிச்சயம் என்ற நிலையில்,  அவள் அதை தடுக்கவில்லையே என அவள் மீதான  ஒருவித கோபமும்,  என்னை புரியவில்லையே என்ற காயமும் சரிவிகிதத்தில் தாக்க, மெதுவாக அதைக் கண்களில் பிரதிபலித்தவாறே அவளை நெருங்கினான்.  

 

 

 

 

அருகில் வரவர அவன் தவிப்பும் துல்லியமாக அவளைச் சென்றடைந்தது.  

 

 

 

 

இத்தனை நாள் புரியாத, புரிந்து கொள்ள நினைக்காத ஒன்றை இப்பொழுது இருவர் மனமும் உணர்ந்து கொள்ளத் தொடங்கியது. 

 

 

 

 

அபி அருகில் வந்தவன் அவள் கண்ணில்தெரிந்த பரிதவிப்பையும், ஏக்கத்தையும் கண்டு  ஒரு உந்துதலில் அவனையும் அறியாது அவள் கன்னங்களை இரு கை கொண்டு தாங்கியிருந்தான்.

 

 

 

 

உனக்கென உருகினேன்… உயிரில் கரைகிறேன்… அனலென எரிகிறேன்..அலையாய்  உடைகிறேன்

 

 

 

 

 

என அவளுக்கான அவன் தவிப்பை, காதலை அவளுக்கு கண்களின் மூலம் கடத்தினான்.

 

 

 

 

அவன் கண்கள் காட்டிய பாவனையில் ஒரு ஆசுவாசம் இவளிடம், அதை அனுபவித்தவாறு கண்களை மூட, உணர்வுகளின் மயக்கத்தில் அவளையே கண்ணெடுக்காமல் கண்டிருந்தவன் ஏதோ சத்தம் கேட்கவும், நாளை அவளுக்கு நிச்சயம் என்பது நினைவில் வர, என்ன செய்து விட்டேன் என நினைத்துப் பட்டென கைகளை எடுத்துக் கொண்டு, அவளை கடந்து செல்ல முயன்றான். 

 

 

 

 

 

அவன் கைகளை  எடுக்கவுமே கண்விழித்த மது அவன் செல்லவும் சட்டென அவன் சட்டையின் பின்புறத்தை பற்றி இழுத்திருந்தாள்.

 

 

 

 

அவன் அப்படியே நிற்கவும்… பின்புறமிருந்து அவனுள் புதைந்து விடுபவள் போல, அவனை இறுக்கமாக அணைத்திருந்தாள் மது. 

 

 

 

 

அவளது செயலில் ஒருநிமிடம்  உரைந்தவன் அடுத்து அவள் தொண்டை அடைக்க மெல்லிய குரலில் கூறிய, “என்னை விட்டுடாத… ப்ளீஸ்” ல் மெய்சிலிர்க்க இன்பமாக அதிர்ந்தான். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!