Niral mozhi 1.2

அரசு மருத்துவமனை… நேரம் 1:50

உள் நோயாளிகள் இருக்கும் பிரிவு. 

மருந்து நெடிகள்… நிறம் மங்கிய சுவர்கள்… இரவு நேரம் என்பதால் ஒன்றிரண்டு செவிலியர்கள்… 

அங்கே ஒரு அறையில், நிகில் மயக்க நிலையில் இருந்தான். 

ஆட்டோவில் மயங்கியவனை, ஆட்டோக்காரர் கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்திருந்தார்.

கத்தி கிழித்த இடத்தில் கட்டு போடப்பட்டிருந்தது. கால் முட்டியிலிருந்து கணுக்கால் வரை பெரிய பேண்டேஜ் ஒன்று சுற்றப்ப்பட்டிருந்தது. 

மேலும், சிறுசிறு இரத்தக் காயங்கள் மற்றும் இரத்தக் கட்டுகளுக்குக் களிம்புகள் போடப்பட்டிருந்தது. 

கொஞ்சம் கொஞ்சமாக நிகிலிற்கு மயக்கம் தெளிய ஆரம்பித்தது. கை விரல்கள் அசைந்தன. இமைகள் கஷ்டப்பட்டுத் திறக்க முயற்சித்தன. கருவிழிகள் இமைகளுக்குள் நகர்ந்தன.

சற்று நேரத்திற்கு முன் நடந்தவை எல்லாம், மூடிய இமைகளுக்குள் முட்டி மோதின. 

‘நிகில் நிகில்’ என்று கத்திக் கொண்டே போனவர்கள் நியாபகம் வந்ததும்… ‘ஜெர்ரி… மிலா… ஷில்பா’ என்று முணுமுணுத்தான். 

சட்டென்று கண் திறந்தான்!

‘தான் எங்கு இருக்கிறோம்?’ என்று பார்த்தான். எழுந்துகொள்ள முயற்சி செய்தான். 

இயலவில்லை! வலி!  

வயிற்றில் இருந்த காயத்தின் வலி, அவனை எழுந்து கொள்ள விடவில்லை. 

முயற்சி செய்து, லேசாகத் தலையைத் தூக்கி… “சிஸ்டர்… சிஸ்டர்” என்று அழைத்தான். 

அவனுக்குத் தெரிய வேண்டும்! அவர்கள் மூவருக்கும் என்னவாயிற்று என்று!

யாரும் வராததைக் கண்டு, “சிஸ்டர்… சிஸ்டர்” என்று கத்தினான். 

அவனது கத்தலில் செவிலியர் வந்துவிட்டார். 

“ஏன் கத்துறீங்க? மத்த பேஷன்ட்ஸ் தூங்குறாங்க” என்று கடிந்தும் கொண்டார். 

“சாரி! சாரி சிஸ்டர். நான் போகணும்” 

“போகணுமா! இருங்க, ஃபர்ஸ்ட் டாக்டரைக் கூட்டிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டுச் செவிலியர் சென்றார். 

இரண்டு நொடிகளில்… 

ஒரு மருத்துவரும், செவிலியரும் வந்தனர். 

“டாக்டர்… நான்… ” என்று ஆரம்பிக்கப் போனவனிடம், 

“வெயிட்… வெயிட்… இப்போ வலி எதுவும் இருக்கா?”

“அதெல்லாம் இல்லை டாக்டர். பட், நான் போகணும்” என்று வலியோடு எழுந்து அமர்ந்து, லேசாகக் காலை அசைத்தான். 

அவ்வளவுதான்! விண்விண்னென்று கால் முட்டி வலிக்க ஆரம்பித்தது. 

மீண்டும் படுத்துவிட்டான். கண்ணை மூடிக் கொண்டு, பல்லைக் கடித்தபடியே வலியைப் பொறுத்தான். ஒரு வினாடிக்குப் பின்னே வலி நின்றது. 

மெதுவாகக் கண் திறந்தான். 

“இங்க பாருங்க… இந்த மாதிரி இனிமே ட்ரை பண்ணாதீங்க. ரெண்டு நாளைக்கு கால அசைக்க கூடாது” என்றார் மருத்துவர்.  

அமைதியாக இருந்தான்.

“வேற ஏதும் பெயின் இருக்கா?”

‘இல்லை’ என்று தலை அசைத்தான்.

அதற்குள், அங்கே இரண்டு ஆட்கள் வந்தனர்.

“இனிமே நீங்க விசாரிச்சிக்கோங்க” என்று அவர்களிடம் சொல்லிவிட்டு மருத்துவரும், செவிலியரும் சென்றனர்.

இருவரும் நிகிலின் அருகே வந்து நின்றனர். 

ஒருவர் உதவி ஆய்வாளர்!

மற்றொருவர் தலைமைக் காவலர்!! 

நிகில் இருவரையும் பார்த்தான்.

“பேரென்ன?” – உதவி ஆய்வாளர். 

“நிகில்” 

“என்ன நடந்ததுன்னு சொல்லுங்க?” 

நடந்ததைச் சொன்னான். தான், தற்காப்பிற்காகத் திருப்பி அடித்ததையும் சொன்னான். 

“எதுக்காக அடிக்க வந்தாங்கன்னு தெரியுமா?” 

“தெரியலை சார்” என்றான். 

யார் அனுப்பிய ஆட்கள், தன்னைத் தாக்கினார்கள் என்று தெரியும்! இருந்தும், நிகில் சொல்லவில்லை!! 

அவனைச் சந்தேகமாகக் பார்த்தவர், “நீங்க என்ன வேலை பார்க்கிறீங்க?” என்று கேட்டார். 

“காலமிஸ்ட்(columnist) ! மேகசின்ல கம்ப்யூட்டர் டெக்னாலஜி… லேட்டஸ்ட் டிவைஸ் இன்வென்ஷன் பத்தி… எழுதுவேன்”

“ஓ! ஃபர்ஸ்ட் கம்ப்ளைன்ட் ரெஜிஸ்டர் பண்ணுங்க. அப்பத்தான் பிராப்பர் இன்வெஸ்ட்டிகேஷன் ஸ்டார்ட் பண்ண முடியும்” 

“ம்ம்ம்” என்றான். 

ஆய்வாளர், காவலரைப் பார்த்து… “ஃபோன் நம்பர், அட்ரஸ் எல்லாம் வாங்கி… எஃப்.ஐ.ஆர் டாக்யூமென்ட் ரெடி பண்ணுங்க” என்றார். 

“சரிங்க சார்”

“அப்புறம் அவர்கிட்ட சைன் வாங்கி, எஃப்.ஐ.ஆர் லாட்ஜ் பண்ணிடுங்க” 

“சரிங்க சார்”

“எதுக்கும் அந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷன்-க்கு இன்பாஃர்ம் பண்ணிடுங்க” என்று காவலருக்கு வேலை பணித்து விட்டுச் சென்றார். 

காவலரும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய தேவையான விவரங்களைக் கேட்டறிந்து கொண்டு, கிளம்பப் போனார். 

“என் ஃபோன்… ” என்றான். 

“ஆங்! இந்தாங்க” என்று, ஒரு கவரில் போடப்பட்டிருந்த கைப்பேசியை எடுத்துத் தந்தார்.

மேலும், “தெரிஞ்சவங்களுக்கு இன்பாஃர்ம் பண்ணலாம்னு நினைச்சோம். பட், ஃபோன அன்லாக் பண்ண முடியலை” என்றார். 

“பரவால்ல, நான் சொல்லிக்கிறேன்” என்றதும், அவர் எஃப்.ஐ.ஆர் முறைகளைப் பார்க்கச் சென்றார். 

நிகில் கைப்பேசியைப் பார்த்தான். 

முதலில் ஷில்பாவிற்கு அழைத்தான். ஆனால், அவள் அழைப்பை ஏற்கவில்லை! 

சட்டென, ‘ஏன்? என்னாச்சு?’ என்று பயம், பதற்றம் வந்தது. 

முகம் வியர்த்தது! 

உடனே மிலாவை அழைக்கலாம் என எண்ணி, மிலாவின் கைப்பேசிக்கு அழைப்பை ஏற்படுத்தினான். 

நான்கைந்து ரிங் போனதன் பின்பு, “ஹலோ நிகில்” என்று மிலாவின் குரல் கேட்டது. 

நிகிலிற்குப் பதற்றம் போனது! பயம் குறைந்தது!!

வலியைத் தாங்கிக் கொண்டு, மெல்ல எழுந்து, சாய்ந்து அமர்ந்தான்.

“மிலா, எங்க இருக்கீங்க? ஷில்பாக்கு ஃபோன் பண்ணேன். அவ எடுக்கலை. சேஃபா இருக்கீங்களா?” என்று பதற்றத்துடன் கேட்டான். 

“போலீஸ் ஸ்டேஷன் போக முடியலை நிகில்” என்றாள் எடுத்தவுடன். 

“சரி, இப்போ எங்க இருக்கீங்க?” என்று மீண்டும் பயந்து போய்க் கேட்டான். 

“அதனால வீட்டுக்கு வந்திட்டோம்” என்று சொல்லும் போதே, மிலா அழ ஆரம்பித்தாள். 

“அழாத மிலா. வீடுதான் சேஃப். அங்கேயே இருங்க” என்றான், மீண்டும் பயம்… பதற்றம் குறைந்த குரலில். 

“ம்ம்ம்! நீ எங்க இருக்க? உனக்கு என்னாச்சு? ரொம்பக் கஷ்டமா இருக்கு நிகில். உன்னைப் பார்க்கனும்” என்றாள் நடுங்கும் குரலில். 

“ஹாஸ்பிட்டல்ல இருக்கேன். வொரி பண்ற மாதிரி எதுவும் இல்லை. டு டேய்ஸ் ரெஸ்ட் எடுக்கணும். அவ்வளவுதான்! கவலைப்படாத, சரியா?”

“ம்ம்ம்! ஆனா, எனக்கு உன்னைப் பார்க்கனும் நிகில்” என்று மீண்டும் அழுதாள். 

“மிலா ப்ளீஸ்! வீட்லயே இருங்க! அதான் சேஃப். வெளியே வராதீங்க. ஃபர்ஸ்ட் எல்லா டோரையும் லாக் பண்ணிக்கோங்க” என்று அறிவுறுத்தினான். 

அவள் அமைதியாக இருந்தாள். 

“ஷில்பாகிட்ட ஃபோன் கொடு. நான் அவகிட்ட சொல்றேன்”

“டயர்ட்ல தூங்கிறா நிகில்! எழுப்பவா?”

“வேண்டாம்! ஜெர்ரி தூங்கிட்டானா??”

“ம்ம்ம்”

“சரி, நீயும் தூங்கு!”

“பயமாயிருக்கு நிகில்! உன்னைப் பார்க்கனும்” என்று மீண்டும் கேட்டுப் பார்த்தாள். 

“மிலா புரிஞ்சிக்கோ. இப்போ நீங்க வெளியே வர்றது சேஃப் கிடையாது” என்று அழுத்தமாகச் சொன்னான். 

“ம்ம்ம்”

“டைம் இப்போ…” என்று கைப்பேசியைப் பார்த்தவன், “மிலா, டைம் இப்போ 2:15. ஒரு பைவ் அவர்ஸ் பொறுத்துக்கோ. ப்ளீஸ்”

“இப்போ வர முடியாதா நிகில்?”

“வர வேண்டாம்னு சொல்றேன் மிலா. அது ரிஸ்க்… புரிஞ்சிக்கோ. இப்போ ஹெவி ரெயின். வெகிக்கிள் கிடைக்காது. நீங்க தனியாவும் வர வேண்டாம். சரியா?” என்று எடுத்துச் சொன்னான். 

“ம்ம்ம், சரி”

“காலையில வெகிக்கிள் அரேஞ்ச் பண்றேன். இப்போ தூங்கு மிலா” என்று பொறுமையாகச் சொன்னான். 

“ம்ம்ம்”

“அம்மா, அண்ணிங்ககிட்ட எதுவும் சொல்ல வேண்டாம். காலையில சொல்லிக்கலாம்” 

“ம்ம்ம்”

“தூங்கு மிலா, ஃபோன் வச்சிடறேன்?”

“ம்ம்ம்” என்று சொன்னதும், அழைப்பைத் துண்டித்தான். 

இரண்டு நிமிடங்களில்… 

“வீட்டுக்குப் பேசியாச்சா?” என்று கேட்டுக் கொண்டே காவலர் உள்ளே வந்தார். 

“ம்ம்ம்” 

“இப்போ வருவாங்களா?” 

“இல்லை, மழை அதிகமா இருக்கு. சின்ன பையன் வேற இருக்கான். ஸோ, காலையில வருவாங்க” 

“ஓ” என்றவர், “நீங்க வேலை பார்க்கிற மேகசின் நேம், அப்புறம் ஆபீஸ் அட்ரஸ்… இது ரெண்டும் வேணும்” என்றார். 

அவர் கேட்ட விவரத்தைக் கொடுத்தான். அதை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார். 

மீண்டும், உடலைச் சாய்த்துக் கொண்டு, அப்படியே கண்களை மூடிக் கொண்டான். 

ஒரு நிம்மதி! மூவரும் பத்திரமாக இருக்கிறார்கள் என்ற செய்தி தந்த நிம்மதி, அது! 

கண்களை மூடினாலும்… அசதி இருந்தாலும்… வலித்தாலும்… உறக்கம் வரவில்லை. 

உறக்கம் வரப் போவதுமில்லை! 

கண்கள் மூடிய நிலையில்… மிலா, தன் வாழ்வில் வந்ததை நினைத்துப் பார்க்க ஆரம்பித்தான்! 

மனம் டெல்லிக்குச் சென்றது!!