மிரட்டும் அமானுஷ்யம் 15
மிரட்டும் அமானுஷ்யம் 15
மிரட்டல் 15
நிஷா, அர்ஜுனிற்கு இருக்கும் ஆபத்து இந்த ஒரே நாளில் இல்லாமல் போகும் என்று கூறியதும் அர்ஜுன், “ஒரே நாள்ல என்ன மாறிட போகுது, நிஷு…?” என்று கேட்டான்.
“’அது’ உங்க தங்கச்சிய கொன்னு இத்தன வருஷ பகைய தீர்த்துக்க போகுது… உங்க தங்கச்சி இறந்துட்டா, உங்க குடும்பத்துல நீங்க மட்டுந்தான் இருப்பீங்க… நடந்த கொலைகளை எல்லாம் நீங்க கேள்விபடுறப்போ, உங்களுக்கும் நிம்மதி இல்லாம போயிடும். உங்க குடும்பத்தோட நிம்மதிய அழிக்கிறது தான் அதோட நோக்கம்… எனக்கு தெரிஞ்சு, உங்க தங்கச்சிய கொன்னதும், ‘அது’ இந்த உலகத்த விட்டு போயிடும்… இந்த சமயத்துல உங்கள இங்க பார்த்தா, கண்டிப்பா உங்களையும் கொல்ல நினைக்கும்… சோ ப்ளீஸ் இங்கயிருந்து போயிடுங்க…” என்றாள்.
“நிஷு நீ என்ன சொல்ற… என் தங்கச்சியா… ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி காணாம போன என் சித்தப்பா பொண்ணையா சொல்ற…?” என்றான் நம்ப முடியாதவானாக…
“ஆமா உங்க சித்தப்பா பொண்ணு ஜனனிய தான் சொல்றேன்… இப்போ அதப் பத்தி பேசுறதுக்கு டைம் இல்ல அஜு…” என்று அவசரப்படுத்தினாள்.
“எப்படி நிஷு நான் அப்படியே விட்டுட்டு போகணும்னு நெனைக்குற… அதுவும் என் தங்கச்சி ஆபத்துல இருக்கான்னு தெரிஞ்சும், பயந்து ஓடிப் போக சொல்றியா…?” என்று அர்ஜுன் நிஷாவிடம் கேள்வி கேட்க, அப்போது தான் அவள் எவ்வளவு சுயநலமாக, அங்கு அவர்களுக்கான ஆபத்து காத்திருக்கிறது என்று தெரிந்தும், அவர்களை அங்கு அனுப்பியதை உணர்ந்து, தன்னை தானே திட்டிக் கொண்டாள்.
“நிஷு… என்னாச்சு ஏன் அமைதியா இருக்க…? இப்போ ஜனனி எங்க இருக்கா..? உனக்கு தெரியுமா…?” என்று வினவினான் அர்ஜுன்.
“அஜு… ஜனனி அந்த ஊருக்கு, அவ பிரெண்ட்ஸ் கூட போயிருக்கா…” என்றாள் தயங்கியவாறே.
“வாட்… அங்க எதுக்கு போயிருக்கா..? அவளுக்கு அங்கிருக்கும் நிலைமை தெரியாதுன்னா, நீ எப்படியாவது தடுத்திருக்கலாம்ல…” என்று அவன் கேட்டதும் தான் நிஷாவிற்கு அவள் செய்திருக்கும் செயலின் வீரியம் புரிந்தது.
நிஷா ஏதோ சொல்ல தயங்கியவாறே நின்றிருந்ததை கவனித்த சதீஷ், “நிஷா என்ன சொல்ல தயங்கிட்டு இருக்க… எதுனாலும் சொல்லு…” என்றான். அர்ஜுனும் அப்போது தான் நிஷாவின் வாடிய முகத்தைக் கண்டான்.
“அது… நான் தான் அவங்கள அங்க போக வச்சேன்…” என்றாள் நிஷா.
அவளின் பதிலில் மற்ற இருவருமே அதிர்ந்தனர்.
“நிஷா என்ன சொல்ற…? எல்லாம் தெரிஞ்சும் நீ அவங்கள அங்க அனுப்புனியா…” என்று அதிர்ச்சியுடன் கேட்டான் அர்ஜுன்.
ஒரு பெருமூச்சை விட்டவள், “சாரி அஜு… எனக்கு அப்போ நீங்க தான் முக்கியமா தெரிஞ்சீங்க… உங்கள காப்பாத்த எனக்கு வேற வழி தெரியல…” என்றாள்.
அர்ஜூனால் அவள் கூறியதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. தான் ஒருவனால் இத்தனை பேர் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதை அவனால் சுலபமாக கடக்க முடியவில்லை.
அர்ஜுனின் அதிர்ந்த தோற்றத்தை கண்டவளின் உள்ளமும் கலங்கியது. தன்னவனின் துன்பத்தைப் போக்க இவையனைத்தும் செய்தவளே மீண்டும் அவனின் துன்பத்திற்கு காரணமானதை எண்ணி அவளும் தவித்தாள்.
சதீஷ் இப்போதும் கூட நிஷாவைக் கண்டு பிரமித்திருந்தான். அவள் செய்தது தவறாக இருந்தாலும், அவளின் காதலனுக்காக உயிரையும் கொடுத்து, அதன் பின்னும் அவனைக் காக்கத் துடிக்கும் அவளின் காதல் அவனை பிரமிக்க தான் வைத்தது.
“அஜு… நீங்க இப்போ போனா உங்க தங்கச்சிய காப்பாத்திடலாம்… அவங்க அந்த வீட்டுக்குள்ள போறதுக்குள்ள அவங்கள தடுத்துடலாம்…” என்று நிஷா கூறினாள்.
சதீஷும், “ஆமா அர்ஜு… வா போலாம்…” என்று கூறினான்.
“அஜு அதுக்கு முன்னாடி நீங்க பார்க்க வேண்டியது உங்க சித்தப்பாவ…” என்றாள் நிஷா.
“நிஷு உனக்கு எங்க சித்தப்பாவ தெரியுமா…?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான் அர்ஜுன்.
“ம்ம்ம்…” என்றாள் ஒற்றை வார்த்தையில். பின் ஒரு முகவரியைத் தந்தவள், அங்கு சென்று அவரை பார்க்குமாறு கூறினாள்.
“ஆனா நிஷா இப்போ ஏன் அவனோட சித்தப்பாவ பார்க்கணும்னு சொல்ற…?” என்றான் சதீஷ்.
“’அத’ அடக்க அவரு உதவியும் அவரோட நண்பரோட உதவியும் உங்களுக்கு தேவைப் படலாம்…” என்று அவள் கூறியதும் மற்ற இருவருக்கும் அவள் அவ்வாறு சொன்னதற்கான காரணம் புரிந்தது.
“ம்ம்ம்… சீக்கிரம் கிளம்புங்க…”
அர்ஜுனின் பார்வையோ அவளின் மேல் தவிப்புடன் படிந்தது. அவர்கள் இருவருக்கும் தனிமை கொடுக்க எண்ணி, சதீஷ் அங்கிருந்து வெளியே சென்றான்.
“நிஷு….” என்றான் அர்ஜுன் ஏக்கமாக…
அவனின் தவிப்பிற்கு கொஞ்சமும் குறையாமல் அவளின் மனநிலை இருந்தாலும், தான் செய்துள்ள பிழையை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், “அஜு… நான் எப்பவும் உங்களோட தான் இருப்பேன்… இப்போ உங்க தங்கச்சிய காப்பாத்தணும்… நமக்கு ரொம்ப நேரம் இல்ல…” என்று அவள் கூறிக் கொண்டிருக்க, அவளை மெல்ல நெருங்கியவன், அவளை அணைத்தது போல நின்றான்.
அவள் ஆத்மா தான்… அவளிற்கு உடல் இல்லை தான்… ஆனால் உண்மை காதல் உடலைக் கொண்டு வருவதில்லையே… உள்ளங்களை கொண்டல்லவா உருவாவது… அவ்வகையில் பார்த்தால், இங்கு அவர்கள் இருவரின் உள்ளங்களே பிரதானமாக இருந்தது.
நிஷாவின் நிலை தான் பரிதாபமாக இருந்தது. இதுவரை அவள் இறந்ததை எண்ணியோ, இவ்வாறு ஆவியாக திரிவதை எண்ணியோ அவள் வருத்தம் கொள்ளவில்லை. ஆனால் இன்றோ, அவளவனின் தொடுகையைக் கூட உணர முடியாத நிலையை எண்ணி வருந்தினாள்.
அர்ஜுனிற்கும் அதே மனநிலை தான். காற்றாகி போனவளின் வதனம் தீண்ட முடியாமல் இருக்கும் தன் நிலையை அறவே வெறுத்தான். ஆனாலும் தன் உணர்ச்சிகளை அவளிடம் கடத்த அவளை அணைத்தான். மேனிகள் தீண்டவில்லை என்றாலும், உள்ளங்கள் தீண்டின…
“எப்பவும் எங்கூட இருப்பன்னு எனக்கு ப்ராமிஸ் பண்ணு நிஷு…” என்றான் அர்ஜுன், இன்னும் அணைத்தவாறு நின்று கொண்டே…
“அப்போ நீங்க எனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணுங்க அஜு… எந்தவொரு சூழ்நிலைலயும் உங்க உயிர பணயம் வைக்கக் கூடாது…” – அன்று அவன் மயக்கமாக இருந்தபோது கேட்டதை இன்று மீண்டும் கேட்டாள்.
இருவரும் ஒருவருக்கொருவர் சத்தியம் செய்த பின்னர், அர்ஜுன் அங்கிருந்து கிளம்ப ஆயத்தமாக, “அஜு இப்போ உங்க தங்கச்சி பேரு ஜான்வி… ‘அது’ கிட்ட மாட்டிட கூடாதுன்னு அவங்க பாட்டி அவ பேர மாத்திட்டாங்கன்னு நெனைக்கிறேன்…” என்றாள்.
அவள் கூறியதைக் கேட்டவன், ஒரு தலையசைவுடன் அவளிடம் விடைபெற்றான்.
******
“ச்சே இது என்ன இப்படி பாதிலேயே நிக்குது… அர்ஜுன் ஹோட்டல் வந்த நேரத்துல, இவ அவங்க மாமா வீட்டுக்கு வந்துட்டா… அதுக்கப்பறம் என்னாச்சுன்னு தெரியலையே… அவ எப்படி இறந்தானும் இதுல இல்லயே…” என்று பாதி கதையிலேயே முடிந்த சோகத்தில் சாக்ஷி கூறினாள்.
“அவ இறந்துக்கு அப்பறம், அவ எப்படி டைரி எழுத முடியும்…” என்று ஜானு வினவியதும், “ஐயோ ஆமால…” என்று இளித்தாள் சாக்ஷி.
“ஆனாலும் இவ்ளோ லவ் பண்ணிட்டு, இறந்து போனா… ப்ச் ரொம்ப கஷ்டமா இருக்கு… பாவம் நிஷா…” என்று சாக்ஷி கூற, ஜானு அதை ஆமோதித்தாள்.
ஜான்வி ஏதோ யோசனையில் இருப்பதைக் கண்ட சாக்ஷி, “ஹே ஜானு என்ன யோசிச்சுட்டு இருக்க…” என்று கேட்டாள்.
“அந்த நிஷா எதுக்கு நம்மள அங்கயிருந்து விரட்டுனான்னு யோசிக்கிறேன்… அவ டைரிய படிச்ச வரை, மத்தவங்கள பயமுறுத்தி சந்தோஷப் படுற மாதிரியோ, மத்தவங்கள பார்த்து பொறாமை படுற மாதிரியோ அவள நினைக்க முடியல…” என்றாள் ஜான்வி.
“ம்ம்ம் ஆமா… ஹே ஜானு இத கவனிச்சியா… நிஷா டைரில அவங்க மாமாவோட ஊரா சொல்லிருந்த குர்னிவாடிங்கிற ஊர் பேரும், நம்ம இப்போயிருக்க ஊர் பேரூ மாதிரியே இருக்குல…”
சாக்ஷி அப்படிக் கூறியதும், ஜான்விக்கு ஏதோ புரிவது போலிருக்க, “நம்ம இருக்க ஊர் பேரு என்ன..?” என்று கேட்டாள் ஜான்வி. இதை முதலிலேயே கேட்டிருக்க வேண்டும் என்று அவளின் மனச்சாட்சி கூறியது.
“ஓ உனக்கு அதுவே தெரியாதா… இந்த ஊரு பேரு பிம்ரிவாடி… நல்லா இருக்குல்ல…”
ஜான்வியோ, சாக்ஷி கூறிய ‘பிம்ரிவாடி’யிலேயே அதிர்ச்சிக்கு சென்று விட்டாள். நிஷா அவர்களை எதிலோ சிக்க வைத்திருக்கிறாள் என்பது அவளிற்கு புரிந்தது.
அவளின் அதிர்ந்த முகத்தை கண்ட சாக்ஷி, “ஹே ஜானு, ஏன் இப்படி இருக்க…?” என்று கேட்டாள்.
“அன்னிக்கு நிஷா அவளோட சொந்த ஊரப் பத்தி சொன்னான்னு சொன்னேன்ல… அந்த ஊரு பேரு பிம்ரிவாடி..” என்றாள் ஜான்வி.
“வாட்… நிஷா ஏன் மாத்தி சொல்லணும்…” என்று சாக்ஷி குழப்பத்துடன் கேட்க…
“அவ அந்த ஹாஸ்டல்லயிருந்து விரட்டுனதா நம்ம தான் தப்பா நெனச்சுருக்கோம் சாக்ஷி… அவ நம்மள இங்க போக சொல்லி தான் விரட்டிருக்கா…” என்றாள் ஜான்வி.
“அவ ஏன் நம்மள இங்க அனுப்பணும்…” என்று யோசித்த சாக்ஷி, “ஹே ஜானு… இங்க ஒரு பேய் வீடு இருக்குன்னு சொன்னாங்கள…” என்று சற்று அதிர்ச்சியுடனே கூறினாள் சாக்ஷி.
ஜான்வியும் அதை தான் யோசித்துக் கொண்டிருந்தாள். “நம்ம இங்க போறது நிஷாக்கு எப்படி தெரிஞ்சுருக்கும்…” என்று ஜான்வி கேட்க…
“எப்படி தெரிஞ்சுருக்கும்… இந்த ட்ரிப்ப பிளான் பண்ணதே ஆதர்ஷும் விஷ்வாவும் தான…”
“சாக்ஷி, ஒருவேள இந்த ட்ரிப்ப பிளான் பண்ணது நிஷாவா இருந்தா…”
“என்னது நிஷாவா…? அது எப்படி…” என்று சாக்ஷி கேட்க, “எங்கூட வா…” என்று அவளை அழைத்துக் கொண்டு, பக்கத்து அறைக்குச் சென்றாள்.
********
நிஷா கொடுத்த முகவரிக்கு சொந்தமான வீட்டை அடைந்தனர் அர்ஜுனும் சதீஷும். அழைப்பு மணியை அடித்துவிட்டு காத்திருந்தனர்.
உள்ளிருந்து வந்த கங்காதர் அவர்களைக் கண்டு, “யாரு வேணும்..?” என்று ஹிந்தியில் வினவினார்.
“நாங்க மிஸ்டர். விக்னேஸ்வரனை பார்க்க வந்திருக்கோம்…” என்று அர்ஜுன் கூறியதைக் கேட்ட கங்காதர் ஒரு நொடி அவர்களை அதிர்ந்து நோக்கினார்.
மறு நொடியே சுதாரித்தவர், “அப்படி யாரும் இங்கில்லை…” என்று கதவை அடைக்கப் பார்த்தார்.
“அவரு இங்க தான் இருக்காருன்னு எங்களுக்கு தெரியும் மிஸ்டர். கங்காதர்… பிளீஸ் சிஷுவேஷனோட சீரியஸ்நெஸ புரிஞ்சுக்கோங்க…” என்று அர்ஜுன் கெஞ்சினான்.
“மிஸ்டர் நீங்க என்ன சொன்னாலும், அவர பார்க்க முடியாது…” என்று கங்காதர் திட்டவட்டமாக மறுத்தார்.
“ஓ அப்போ அவரு பொண்ணோட உயிரு ஆபத்துல இருக்குன்னு சொன்னா கூட அவர பார்க்க முடியாதா…” என்று அர்ஜுன் முடிக்க கூட இல்லை, உள்ளிருந்து ஒரு குரல், “கங்கா, அவங்கள உள்ள வர சொல்லு…” என்று கூறியது.
உள்ளே சென்ற அர்ஜுனும் சதீஷும் கண்டது, நாற்காலியில் ஓய்வாக அமர்ந்திருத்த அர்ஜுனின் சித்தப்பா விக்னேஸ்வரனை தான்.
அவரைக் கண்டதும் சிறுவயது நியாபகம் வர, “விக்கிப்பா…” என்று அழைத்தான் அர்ஜுன்.
அர்ஜுனைக் கண்ட நொடியில், ஏதோ சொந்தமான உணர்வு தோன்றியது விக்னேஸ்வரனிற்கு. அவனின் ‘விக்கிப்பா’வில் அவன் யாரென்று அறிந்தவர், “அர்ஜு…” என்று பாசமாக அழைத்து, நாற்காலியிலிருந்து எழுந்தார். அதற்குள் அவரருகே சென்றவன், அவரை அணைத்துக் கொண்டான்.
தந்தைக்கும் மகனிற்கும் பாசப் போராட்டம் அங்கு நிகழ்ந்தது. இத்தனை வருட பிரிவின் தவிப்பை அவர்களின் அணைப்பில் காட்டினர்.
“நீங்க உயிரோட இருக்குறதே எங்களுக்கு தெரியாது விக்கிப்பா… நீங்க ஏன் இவ்ளோ நாளா எங்கள வந்து பார்க்கல…” என்று அர்ஜுன் கேட்டதும், விக்னேஸ்வரனின் முகம் இறுகியது.
“நான் உங்கள பார்த்திருந்தா, ‘அது’ உங்கள உயிரோட விட்டிருக்காது அர்ஜு…” என்று கூறினார்.
********
ஆதர்ஷ் மற்றும் விஷ்வாவின் அறைக் கதவு திறந்து தான் இருந்தது. உள்ளே இருவருக்கும் இடையே வாக்குவாதம் நிகழ்ந்து கொண்டிருந்தது.
“ஹே ஆது… எனக்கு இப்படி ஒரு ஊரு இருக்குறதே தெரியாது டா… நான் எப்படி டா இந்த ட்ரிப்ப பிளான் பண்ணிருப்பேன்…”
“அப்போ நான் பொய் சொல்றேனா… நீ தான் டா நெட்ல இந்த ஊரப் பத்தி பார்த்து இங்க போகணும்னு சொன்ன… அந்த பேய் வீட்ட பத்தி கூட சொன்னேல டா… அங்கலாம் போகக் கூடாதுன்னு சொல்லி தான நான் இந்த ட்ரிப்புக்கே ஒத்துகிட்டேன்…” என்று ஆதர்ஷ் கூறினான்.
“அடேய் நான் எதுக்கு டா பேய் வீட்டுக்கு போகணும்னு சொல்லப் போறேன்… நானே பயந்த புள்ள… ஏதோ உங்ககிட்ட தைரியமா காமிச்சுக்க பேய் படம் பார்த்தேன், பிசாசு கூட டூயட் ஆடுனேன்னு சும்மா சொல்லிட்டு இருப்பேன் டா…” என்று விஷ்வா சொல்லிக் கொண்டே வாசலைப் பார்க்க, அங்கு ஜான்வியும் சாக்ஷியும் நின்றிருந்தனர். சாக்ஷியின் பார்வை, ‘இவ்ளோ தானா நீ…’ என்று கேலியாக கூறுவதைப் போல் இருந்தது.
‘ச்சே… இவ முன்னாடி நம்ம மானம் போச்சே…’ என்று உள்ளுக்குள் வருந்தினான்.
அப்போது ஜான்வி, “விஷ்வா சொல்றது உண்மை தான் ஆதர்ஷ்…” என்றாள்.
“ஜானு, அப்போ நான் சொல்றது பொய்னு சொல்றியா…” என்றான் ஆதர்ஷ் சிறு கோபத்துடன்…
“இல்ல நான் அப்படி சொல்லல… நீங்க அந்த ட்ரிப் பிளான் பண்ணப்போ என்ன நடந்துச்சுன்னு சொல்றியா…” என்றாள் ஜான்வி.
“அன்னிக்கு உன் சந்தேகத்த தீர்க்க நம்ம போன்ல பேசிட்டு இருந்தோம்… அது முடிஞ்சதும் இதோ இந்த பக்கி தான் யூட்யூப்ல அந்த ‘மரவீடு’ பத்தின வீடியோ காமிச்சு, நம்ம எல்லாரும் பாரானார்மல் கோர்ஸ் முடிச்சுருக்கோம்… சோ இந்த மாதிரி இடத்த நாம ஆராயனும்னு ஏதோ உலறிட்டு இருந்தான்… நான் அப்போ கூட சார் சொன்னத சொல்லி, தனியா நம்மளா அங்க போகக் கூடாதுன்னு சொன்னேன்… இவன் ஏதேதோ சொல்லி என்ன கன்வின்ஸ் பண்ணிட்டான்… அப்போ கூட அந்த வீட்டுக்கு போகக் கூடாதுன்னு சொல்லி தான் இந்த ட்ரிப்புக்கு ஒத்துகிட்டேன்… அப்பறம் என்ன கேப் புக் பண்ண சொல்லிட்டு டீ குடிக்க போயிட்டான்…”
“டேய் மச்சான் நீ கடைசியா சொன்னயே, அது மட்டும் தான் டா உண்மை… நான் டீ குடிக்க தான் போனேன்… ஆனா அது நீ ஜானு கூட கட… ஸ்ஸ்ஸ்… பேசிட்டு இருந்தீயே அப்போ போனேன்… அப்பறம் நான் ரூமுக்கு வந்தப்போ நீ ஏதோ கேப் புக் பண்ணிட்டேன்னு சொன்னதும், எனக்கு ஒண்ணும் புரியல… நீ ஏற்கனவே சொன்னத நான் தான் கவனிக்கல போலன்னு அப்போதைக்கு சமாளிச்சேன் மச்சான்…” என்று விஷ்வா கூறினான்.
இவர்கள் கூறியதைக் கேட்ட ஜான்வியும் சாக்ஷியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
பின் ஜான்வி பேசினாள். “நீங்க ரெண்டு பேரு சொல்றதும் உண்மை தான்…” ஜான்வி கூறியதைக் கேட்ட ஆதர்ஷும் விஷ்வாவும் முழித்தனர்.
“ஆதர்ஷ் எங்கூட போன்ல பேசுனப்போ, விஷ்வா வெளிய போனத ஆதர்ஷ் பார்க்கலங்கிறத தெரிஞ்ச யாரோ தான், விஷ்வாவ மாதிரியே தன்னோட உருவத்த மாத்தி, ஆதர்ஷ் கிட்ட அந்த வீட்ட பத்தி பேசி இந்த ட்ரிப்ப பிளான் பண்ணிருக்கணும்…” என்று ஜான்வி கூறினாள்.
“வாட் உருவத்த மாத்தியா… யாரு இப்படி பண்ணனும்… இதுனால அவனங்களுக்கு என்ன யூஸ்…” என்று குழப்பத்ததுடன் கேட்டான் ஆதர்ஷ்.
“நிஷா… அவ தான் இத பண்ணிருக்கணும்…” என்று கூறிய ஜான்வி, நிஷாவைப் பற்றியும், ஹாஸ்டலில் அவர்களுக்கு நடந்ததைப் பற்றியும் கூறினாள்.
“லூசா நீங்க… இவ்ளோ நடந்துருக்கு, ஏன் இதப் பத்தி ரெண்டு பேரும் எங்ககிட்ட சொல்லல…” என்று கோபத்துடன் கேட்டான் ஆதர்ஷ்.
அவனின் கோபத்தில் சற்று பயந்த ஜான்வி, “இல்ல ஆது… ஹாஸ்டல் விட்டு கிளம்புனா நிஷாவோட தொல்லை இருக்காதுன்னு நெனச்சோம்… அதான் உங்களையும் ஏன் டென்ஷன் ஆக்கணும்னு சொல்லல…” என்று கூறினாள் ஜான்வி.
ஆதர்ஷின் பெயரை சுருக்கி கூறியதை ஜான்வி உணரவில்லை. ஆனால் அதை உணர்ந்த ஆதர்ஷின் கோபம் சூரியனைக் கண்ட பனி போல கரைந்து தான் போனது.
இந்த நாடகத்தை பார்த்துக் கொண்டிருந்த விஷ்வா, ஆதர்ஷின் காதருகே சென்று, “டேய் எல்லாரும் ஹாரர் மூட்ல இருந்தா, உனக்கு மட்டும் ரொமான்ஸ் மூட் கேக்குதா…” என்று முணுமுணுத்தான்.
விஷ்வாவை முறைத்த ஆதர்ஷ், பெண்களிடம் திரும்பி, “இனி இங்க இருக்குறது சேஃப் இல்ல… இந்த நைட் நேரத்துலயும் நம்ம இங்கிருந்து போக முடியாது… சோ நாளைக்கு காலைல இங்கிருந்து கிளம்பிடலாம்…” என்று கூறினான்.
இவனின் திட்டத்தை கேட்ட ‘அது’, “உங்கள அவ்ளோ சீக்கிரம் போக விட்டுடுவேனா… முதல இன்னிக்கு நைட்ட கடக்குறீங்களான்னு பாப்போம்…” என்று கேலியாக கூறியதை, இவர்கள் நால்வரும் அறியவில்லை…
********
“சித்தப்பா என்ன சொல்றீங்க…” என்று அதிர்ச்சியுடன் கேட்டான் ஆதர்ஷ்.
“ஆமா அர்ஜு… உங்க சித்திய கொன்ன ‘அது’ என்ன ஏன் உயிரோட விட்டிருக்கு தெரியுமா… உங்க சித்தி இல்லாத உலகத்துல நான் பைத்தியமா திரியனும்னு தான்… நானும் அப்படி தான் பைத்தியமா திரிஞ்சேன்… அதை உங்க அப்பா பார்த்து என்ன டாக்டர்ட கூட்டிட்டு போனாரு… ஆனா அடுத்த நாளே உங்க அப்பாவ ‘அது’ கொன்னுருச்சு… அப்போ தான் முடிவு பண்ணேன், நான் சரியானத வெளியுலகத்துக்கு காட்டிக்க கூடாதுன்னு… அதே மாதிரி என்னால நம்ம குடும்பத்துல வேற யாரும் இறக்க கூடாதுன்னு தான் நம்ம குடும்பத்த தேடி வரல… நான் ரெண்டு வருஷமா அந்த மென்டல் ஹாஸ்பிடல்ல தான் இருந்தேன்… அப்போ தான் என் பிரெண்ட் கங்காதர அங்க பார்த்தேன்… அவன் எனக்கு உதவி பண்றதா சொன்னான்… அப்போயிருந்து இப்போ வரை அவன் தான் எனக்கு உதவியா இருக்கான்…” என்று கங்காதரை நட்புடன் பார்த்தார்.
“இப்படியே போயிட்டு இருந்தப்போ தான், நீ அதுகிட்ட மாட்டி இறந்துட்டதா செய்தி வந்துச்சு… நான் ரொம்ப உடஞ்சு போயிட்டேன் அர்ஜு…” என்று அவனின் கைகளை இறுக்கி பிடித்துக் கொண்டார்.
“ஆனா நீ எப்படி தப்பிச்ச…” என்று அவர் கேட்க, அர்ஜுன் நிஷாவைப் பற்றியும், அவன் சிங்கப்பூருக்கு சென்றது பற்றியும் கூறினான்.
“உனக்காக உயிரையும் குடுத்துறுக்கா…. ரொம்ப நல்ல பொண்ணு அர்ஜு… ஆனா உனக்கு தான் அவ கூட வாழ குடுத்து வைக்கல… ஹ்ம்ம் நம்ம குடும்பத்துக்கே உண்டான சாபம் போல…” என்று கவலையாக கூறினார்.
அர்ஜுனிற்கோ மனதில் வேறொரு கவலை… இப்போது நிஷாவைப் பற்றி இவ்வளவு உயர்வாக பேசும் அவனின் சித்தப்பா, அவரின் மகளை இறப்பின் வாயிலில் விட்டிருப்பதும் அதே நிஷா தான் என்பது தெரிந்தால்… தன்னவளை யாரும் தவறாக நினைக்கக் கூடாது என்ற கவலை அவனிற்கு…
“அர்ஜு ஜனனிக்கு ஏதோ ஆபத்துன்னு சொன்னீயே… அவ எங்க இருக்கான்னு தெரிஞ்சுதா… அவள பாத்தீயா… என் நிலைமையை பார்த்தியா அர்ஜு… சொந்த பொண்ணயே தொலைச்சுட்டு, அவள தேடக் கூட முடியாம இருக்கேன்… உனக்கு தெரியுமா நம்ம கங்கா வேலை பாக்குற காலேஜ்ல ஒரு பொண்ணு படிச்சா… அவ பேரு கூட ஏதோ… ஹான் ஜான்வி… அவள பார்த்தா எனக்கு நம்ம ஜனனி பார்த்த மாதிரியே இருந்துச்சு… அவ பார்வை, நடை எல்லாமே ஜனனி மாதிரியே இருந்துச்சு… ஆசையா அவகிட்ட பேச போனப்போ தான், ‘அத’ப் பத்தின நியாபகம் வந்து, அந்த பொண்ணுகிட்டயும் பைத்தியம் மாதிரி நடந்துக்கிட்டேன்… இங்க இருந்தா அந்த பொண்ணுக்கும் அதால ஆபத்து வந்திடுமோன்னு தான் கங்காதர் கிட்ட சொல்லி அந்த பொண்ண உடனே அவ ஊருக்கு போக சொல்லிட்டேன்… ஹ்ம்ம் இப்போ நம்ம ஜனனி எங்க இருக்காளோ…”
மகளைக் காணாத தவிப்பினால் சோர்ந்தவரின் கைகளை ஆதரவாகப் பற்றிக் கொண்டான் ஆதர்ஷ். அப்போது தான் அவனிற்கு நிஷா கூறியது நினைவிற்கு வந்தது.
உடனே, “விக்கிப்பா, ஜான்வி தான் நம்ம ஜனனி…” என்றான்.
அதைக் கேட்டவர் கண்களில் கண்ணீருடனும் உதட்டில் சிரிப்புடனும், “அர்ஜு நீ சொன்னது உண்மையா..? ஜான்வி தான் ஜனனியா… என் பொண்ணு ஜனனியா… கங்கா அர்ஜு சொன்னத கேட்டீயா… நான் அன்னிக்கே சொன்னேன்ல…” என்று அர்ஜுனிடம் ஆரம்பித்து கங்காதரிடம் முடித்தார்.
“நித்துமா… நம்ம பொண்ண கண்டுபிடிச்சுட்டேன் டா… உனக்கு தெரியுமா, நான் அவ கூட பேசிருக்கேன்…” என்று மானசீகமாக தன் மனைவியுடன் உரையாடினார்.
பின் அர்ஜுனிடம், “அர்ஜு வா நம்ம இப்போவே என் பொண்ண பார்க்க போகலாம்…” மகளை கண்டுகொண்ட சந்தோஷத்தில், அர்ஜுன் அவளுக்கு ஆபத்து என்று கூறியதை மறந்து விட்டார் அந்த தந்தை.
“அது விக்கிப்பா… அவ இங்க இல்ல…” என்று திக்கியவாறு கூறினான் அர்ஜுன்.
“ஓ அவ ஊருக்கு போயிட்டாளா… சரி வா நாமளும் அங்க போவோம்…” என்றார்.
“அவ ஊருக்கு போகல விக்கிப்பா… பிம்ரிவாடிக்கு போயிருக்கா…” என்று அர்ஜுன் கூறியதும், நாற்காலியிலிருந்து அதிர்ச்சியுடன் எழுந்தார் விக்னேஸ்வரன். கங்காதருக்குமே அதிர்ச்சி தான்.
“எ.. என்…என்ன சொல்ற அர்ஜு… அவ எதுக்கு அங்க போனா… ஐயோ என் பொண்ணையும் ‘அது’ கொன்னுடுமே…” என்று வேதனையுடன் கூறினார்.
அவரை ஆதரவாக பற்றியவன், “கவலப்படாதீங்க விக்கிப்பா… ஜனனிய எப்படியாவது காப்பாத்திடலாம்… அதுக்கு தான் உங்க உதவி வேணும்… நம்ம இப்போவே கிளம்புனா சரியா இருக்கும்…” என்று கூறினான்.
“ஆமா… என் பொண்ணா எப்படியாவது காப்பாத்தணும்…” என்று கூறியபடி வேகமாக எழுந்தார்.
அப்போது அவரைத் தடுத்த கங்காதரோ, “நானும் வரேன் விக்கி… ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு சில விஷயங்கள் தெரியணும்…” என்று அர்ஜுனை நோக்கி திரும்பினார்.
“உன் சித்தப்பா இங்க தான் இருக்காருன்னும், ஜான்வி தான் ஜனனினும் உனக்கு எப்படி தெரியும்..?” என்றார்.
அவரின் கேள்வியில் ஒரு நொடி அதிர்ந்தவன், பின் ஒரு பெருமூச்சு விட்டு, “நிஷா தான் சொன்னா…” என்றவன், அவன் எவ்வாறு அதை அறிந்தான் என்றும் கூறினான்.
அவன் கூறியதும் அங்கு பலத்த அமைதி நிலவியது. தன் சித்தப்பா நிஷாவை தவறாக நினைத்து விட்டாரோ என்று அவரின் முகம் கண்டான். அவரின் முகமோ எந்தவித பாவத்தையும் காட்டவில்லை.
அவரின் கைகளைப் பற்றியவன், “விக்கிப்பா, நிஷா எனக்காக… அப்படி செஞ்சுட்டா… அவள தப்பா நினைக்காதீங்க… நான் கண்டிப்பா ஜனனிய காப்பாத்துவேன்…” என்றான் கெஞ்சல் குரலில்.
அவனின் தோளில் தட்டியவர், “ஜனனிய நீ காப்பத்துவன்னு எனக்கு தெரியும் அர்ஜு… நான் இப்போ யோசிச்சது நிஷாவ பத்தி தான்… உனக்கு தான் அவ கூட வாழ குடுத்து வைக்கல…” என்றார்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே காரை ஸ்டார்ட் செய்திருந்தான் சதீஷ். மூவரும் ஏறியதும் அந்த வண்டி பிம்ரிவாடியை நோக்கி பறந்தது.
ஏற்கனவே அங்கிருக்கும் நால்வர் கூட்டணியோடு இவர்களும் அங்கே செல்கிறார்கள்… யார் யாரை பாதுகாக்க போகிறார்கள்… இவர்கள் எட்டு பேரும் உயிருடன் திரும்புவரா… அடுத்த அத்யாயத்தில்….
அமானுஷ்யம் தொடரும்…
இன்றைய அமானுஷ்ய இடம்…
டுமாஸ் கடற்கரை (Dumas beach, Gujarat)
அரபிக் கடலோரம் அமைந்துள்ள அழகிய கடற்கரை தான் டுமாஸ் கடற்கரை. இந்த கடற்கரை இரு விஷயங்களுக்கு பிரபலமானது. ஒன்று அங்கிருக்கும் கருமண்… மற்றொன்று அங்கு நிகழும் அமானுஷ்ய நிகழ்வுகள்.
அங்கு நிகழும் அமானுஷ்யங்களுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது, முன்பொரு காலத்தில் அக்கடற்கரை, இறந்தவர்களை புதைப்பதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
காலையில் சூரத்தின் முக்கிய சுற்றுலா தலமாகத் திகழும் டுமாஸ் கடற்கரை, மாலை வேளையிலேயே வெறிச்சோடிக் காணப்படுகிறது. இரவு நேரத்தில் அங்கு இருப்பதற்கு யாரும் தயாராக இல்லை. அப்படியே இரவு நேரத்தில் அங்கு உலவ செல்லும் தைரியமிக்கவர்கள் அடுத்த நாள் காணாமல் போவதாக சொல்கிறார்கள்.
அங்கிருந்து உயிருடன் திரும்பியவர்களிடம் அவர்களின் அனுபவத்தைப் பற்றி கேட்கும் போது, அங்கு மனித நடமாட்டமே இல்லாத வேளையிலும் பேச்சுக் குரல்கள் கேட்பதாகவும், திடீரென்று சிரிப்பு சத்தமும், அழுகை சத்தமும் கேட்பதாகவும் கூறுகின்றனர்.
ஆயிரக்கணக்கில் ஆவிகள் அங்கு இரவு நேரத்தில் உலவுவதாகவும் அங்கிருப்பவர்கள் நம்புகின்றனர். பலரின் உடலை எரித்த சாம்பல் அந்த கடற்கரை மணலில் கலந்ததால் தான் அந்த மண் கருநிறமாக இருக்கிறதென்று ஒரு நாட்டுபுறக் கதையும் அங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.