Ithayam – 41

அவளின் கற்பனைக்கு அழகாக உருவம் கொடுத்து கட்டிடத்தை அமைத்திருந்தான் அவளின் காதல் கணவன். அவள் முதல் முதலாக வடிவமைத்த வீட்டின் அமைப்பை கண்ணெதிரே பார்த்து திகைப்பும், அதிர்ச்சியுமாக சிலையென உறைந்து நின்றாள்.

அவளின் கட்டளை இல்லாமல் கால்கள் வீட்டை நோக்கி முன்னரே வீட்டின் முன்னாடி செங்கொன்றை மரமும், மஞ்சள் நிற சரக்கொன்றை மரமும் வானளவு உயர்ந்து நிற்க மரங்களில் இருந்து உதிர்ந்த பூக்கள் அவளுக்கு பாதை அமைத்தது.

அதன் வழியாக கார் செல்ல பாதை அமைக்கபட்டு இருந்தது. அதை கடந்து சென்றால் போர்டிகோவில் கார் நிறுத்தும் இடம். தேக்கு மரத்தால் ஆனா கதவுகளை பார்த்தும், “இந்த சாவி” என்றான் ஆதி.

அவள் சாவியை கொண்டு கதவை திறக்க வீட்டின் ஹாலில் ஆதித்யா – அபூர்வாவின் ஆளுயிர போட்டோ அலங்கரித்தது. அதன் கீழே சின்ன சின்ன போட்டோவாக அவர்களின் குழந்தைப் பருவம் புகைப்படங்கள் மாட்டபட்டிருந்தது.

ஹாலை சோபாக்கள் அலங்கரிக்க வலதுபுறம் சமையலறை, டைனிங் ஹால், ஸ்டோர் ரூம், பூஜையறை என்று அனைத்தும் இருக்க இடதுபுறம் நான்கு விருந்தினர் அறை இருந்தது.

மாடிபடிகளில் வேகமாக ஏறியவள் அங்கிருந்த அறைகளை எல்லாம் பார்த்தாள். தனித்தனியாக பால்கனியோடு கூடிய பெட்ரூம் என்று சகல வசதிகளும் அதற்குள் இருந்தது. அந்த அறையிலும் தனியாக இரண்டு அறைகள் இருந்தது.

அது எதற்காக என்று யோசித்தவளுக்கு விஷயம் புரிய சிரிப்புடன் வீட்டை சுற்றி வந்தாள். அத்தோடு இணைந்து இருந்த சிறிய அறையின் அருகே சென்றவள் யோசனையோடு கதவுகளைத் திறந்தாள். அங்கிருந்த கண்ணாடியின் வழியாக மரங்களை வேடிக்கைப் பார்க்க முடிந்தது.

அத்தோடு அவள் வரைய தேவையான உபகரணங்கள், படிக்க தேவையான புக்ஸ் என்று அனைத்தும் சேர்த்து அந்த அறையில் இருந்தது.

அவள் அந்த கண்ணாடியின் அருகே நின்று செங்கொன்றை மரத்தை வேடிக்கை பார்க்க அவளின் பின்னோடு வந்து அணைத்துக்கொண்ட ஆதியின் கரங்கள் அவளின் இடையை சுற்றி வளைத்தது.

அவளின் காதோரம் முடிகளை ஒதுக்கியவன்,“உன் முதல் வடிவமைப்பு நம்ம சொந்த வீடாக இருக்கணும்னு ஆசைப்பட்டேன். அதுதான் கட்டிடம் முடிக்கும் வரை உன்னைத் தேடி வரல. இல்லன்னா மேடம் கொல்கத்தாவில் இருந்து கிளம்பியதும் மதுரை வந்து உன்னை குண்டுகட்டாக தூக்கிட்டு வந்திருப்பேன்” என்று சிரித்தான் ஆதி.

தன் கனவுகளுக்கும் உயிர்கொடுக்கும் அவனின் நேசத்தை உணர்ந்த அபூர்வாவின் கண்கள் லேசாக கலங்கியது. ஏதோ தோன்ற அவளை தன்புறம் திருப்பிய ஆதி, “ஏன்டா” என்று காதலோடு கேட்டவனின் கரங்கள் அவளின் முகத்தை இரு கரங்களில் தாங்கியது.

கலங்கிய கண்களை துடைத்துவிட்டு நெற்றியில் இதழ் பதித்தவன், “நம்ம பிரிந்து கஷ்டப்பட்டு அழுத காலம் எல்லாம் முடிஞ்சு போச்சுடா. இனிமேல் நீ எப்போதும் சிரிச்சிட்டே இருக்கணும்” என்று அவளை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

அவள் மெளனமாக அவனின் மார்பில் புதைய, ‘என் ஆதியை என்னிடமிருந்து பிரிக்க முடியாது. அதுக்கு நான் விடமாட்டேன்’ என்று உறுதியாக நினைத்தாள்.

“வீடு பிடிச்சிருக்கா” என்று கிசுகிசுப்பாக கேட்க, “உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு ஆதி” என்று அவனின் மார்பில் தஞ்சம் புகுந்தாள் பெண்ணவள். அவளின் செயலில் இருந்த காதலை உணர்ந்தவனின் இதழ்களில் மென்னகை அரும்பியது.

அங்கே அழகான மௌனம் குடிகொள்ள இருவரும் அந்த ஏகாந்த நேரத்தை ரசித்தனர். சட்டென்று அவனின் பிடியிலிருந்து விலகிய அபூர்வாவை அவன் அதிர்ச்சியோடு பார்க்க இரண்டடி பின்னாடி நகர்ந்தாள்.

அவன் அவளை நோக்கி முன்னேற, “ஆதி ப்ளீஸ் ஒரு நிமிடம் எனக்காக அங்கேயே நில்லு. நீ பக்கத்தில் வந்த நான் சொல்ல வருவதை மறந்துவிடுவேன்” என்று அவனை தடுத்தாள்.

ஆதி அவளை புரியாத பார்வை பார்க்க, “உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆதி. நீ என்னைவிட்டு எவ்வளவு தூரம் விலகிப் போனாலும், மனசளவில் உன்னைவிட்டு நான் ஒரு நொடிகூட விலகி இருந்ததில்லை. உன் காதல் நிஜமாவே அபூர்வமானது என்று இப்போ எனக்கு புரிஞ்சிகிட்டேன் ஆதி” என்றவளின் கண்கள் கலங்கிட அவளின் வார்த்தைகளில் மனம் உருகி நின்றான் அவளின் காதல் கணவன்.

“இந்த ஐந்து வருடமும் ஜடம் மாதிரி இருந்தவளை இப்படி உணர்ச்சிவசப்பட வைக்கிற நீயும், உன் காதலும் இல்லன்னா நான் என்னைக்கோ செத்து போயிருப்பேன் ஆதி” என்றதும், “ஏய் என்னடி பேசற” என்று அவளை கடிந்துகொண்டு அவன் அருகே வர நினைத்தான்.

“ஆதி ப்ளீஸ் இன்னைக்கு நான் பேசணும்” என்ற வார்த்தை அவனை நகரவிடாமல் கால்களை கட்டிபோட்டது. கண்களில் காதல் வழிய அவனை இமைக்கமறந்து பார்த்த அபூர்வாவின் விழிகளில் அவனின் தவிப்பு புரிந்தது.

“ஒரு முறை நீயும் நானும் பிரிவைப் பற்றி விளையாட்ட பேசினோம். அன்னைக்கு நீ சொன்னதை தான் நான் போலீஸ் ஸ்டேஷனில் செஞ்சேன். உன்னைவிட எனக்கு வேற எதுவும் முக்கியம் இல்லன்னு தோணுச்சு அதன் அப்படி பண்ணினேன். நீ என்னை முழுசாக வெறுத்து ஒதுக்கிடுவன்னு தெரிஞ்சுதான் அந்த முடிவெடுத்தேன். இந்த ஐந்து வருஷமும் அதை நினைத்து எத்தனை நாள் தூக்கத்தை தொலைச்சு இருக்கேன்னு தெரியுமா” என்றவள் கேட்கும்போது அவளுடைய மனவலியை புரிந்து அவனின் கண்கள் கலங்கியது.

“அபூர்வா” இருகரம் நீட்டி அழைக்க மறுப்பாக தலையசைத்தவள், “இடைபட்ட இந்த ஐந்து வருடமும் நீ இல்லாமல் நான் தவிச்ச தவிப்பு உனக்கு புரியணும் ஆதி. அப்போதான் இன்னொரு முறை எனக்கு பிரிவு என்ற கொடுமையான தண்டனையைப் பரிசாக கொடுக்க மாட்டா” அவளின் கண்ணீரை கண்டு அவனின் இதயம் வலித்தது.

“ஸாரிடி” என்று சொல்ல, “உன்னை தேடி நான் கொல்கத்தா வந்தேன். அங்கே நடந்த விஷயங்கள் இறுதியா நான் கிளம்பி வந்த சூழ்நிலை எல்லாமே என்னை ரொம்ப கோழை ஆகிருச்சு” என்று சொல்லும்போது தன்னை கட்டுபடுத்த முடியாமல் தேம்பி அழுதாள்.

அவன் அவளின் வார்த்தைக்கு கட்டுபட்டு நின்றிருக்க, ‘இவளை இங்கே இப்படி தவிக்க விட்டுட்டுப்போனது என் தவறுதான். அன்னைக்கு நான் என்னைப் பற்றி மட்டும் யோசிச்சு சுயநலமான முடிவெடுத்துட்டேன். யாரோ செய்த தவறுக்கு இவளுக்கு தண்டனையை கொடுத்துட்டேனே’ என்று மனதிற்குள் புலம்பினான்.

தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்த அபூர்வா, “நீ என்னைத் தேடி திரும்ப வந்தபோ உன் மேல் இருந்த கோபம் எல்லாமே எங்கோ ஓடி போயிருச்சு. நீ இல்லாமல் தனியாக வாழ முடியாதுன்னு புரிந்ததால் தான் கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்” என்றாள்.

சட்டென்று அவன் எதிர்பாராத நேரத்தில் அவனின் முன்னே மண்டியிட்டவள், “ஆதி நான் பண்ணிய பாவத்துக்கு உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்னை மன்னிச்சிடு. இன்னொரு முறை என்னைவிட்டு பிரிஞ்சு மட்டும் போயிராத ஆதி அதை தாங்குகின்ற சக்தி என்னிடம் இல்ல” என்று அழுதவள் சட்டென்று நிமிர்ந்து அவனின் முகம் பார்த்தாள்.

அவனோ உயிரை கண்ணில் தேக்கி அவளைப் பார்க்க, “இனிமேல் உன்னை யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுகொடுக்க மாட்டேன். பிகாஸ் ஐ லவ் யூ சோ மச்..” என்ற மறுநொடி அவளின் முன்னே மண்டியிட்டவன் அவளின் முகத்தை இரு கரங்களில் தாங்கி முத்தமழை பொழிந்தான்.

அவளை இழுத்து நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டவன், “நான்தான்டி உன்கிட்ட மன்னிப்பு கேட்கணும். உன்னை இங்கே விட்டுட்டுப் போனது நான் செஞ்ச தப்புதான். இல்ல இனிமேல் உன்னை பிரிந்து இருக்க மாட்டேன். என் அபூர்வா காதல் முன்னாடி என் காதல் தோத்துப் போச்சு” என்று கதறிய ஆதி அவளின் தோளில் முகம் புதைத்து ஆறுதல் தேடினான்.

“இன்னொரு முறை பாவமன்னிப்பு கேட்கிற மாதிரி இப்படி பண்ணாதே. நீ என் வாழ்க்கையில் வந்தபிறகுதான் நான் சந்தோஷத்தை அனுபவிக்க ஆரம்பிச்சேன். நான் அனுபவிச்ச காயத்துக்கு எல்லாம் மருந்துபோட்ட உன்னை என் பிரிவு இவ்வளவு தூரம் காயபடுத்தும் என்று தெரியாத முட்டாளாக இருந்துட்டேன் அபூர்வா” என்று ஒவ்வொரு வரியையும் வலியோடு கூறிய ஆதியின் மனம் முழுமையாக அவளிடம் தஞ்சமடைந்தது.

அவளின் கற்பனைக்கு அவன் உருவம் கொடுக்க அவளோ அவனின் காதலுக்கு உயிர்கொடுத்து அவனின் முன்னே மண்டியிட்டு மன்னிப்பு வேண்டினாள். யாரோ செய்த தவறால் தன் காதலியை புரிந்துகொள்ளாமல் தண்டனை கொடுத்துவிட்டதை நினைத்து அவன் மன்னிப்பு கேட்டான்.

காதலுக்காக அவனிடம் பாவமன்னிப்பு கேட்கும் காதலியின் முன்னே அவனின் ஆணென்ற கர்வம் அடிபட்டுப்போனது. இடைபட்ட காலத்தின் பிரிவினால் அவள் அனுபவித்த கஷ்டங்களை இனிமேலும் அவளுக்கு தரக்கூடாது என்று முடிவெடுத்தான். அவனே சகலமும் என்று அவனிடம் சரணடைந்த அபூர்வாவின் மனம் இப்போது தெளிந்திருந்தது

இருவரும் கரைகாணாத காதலில் கசிந்துருகி காணாமல் போயினர். அவளின் காதலுக்கு உயிர் கொடுத்துவிட்ட கம்பீரத்துடன் மிளிர்ந்தது அந்த வீடு.

இருவரின் காதலுக்கு ஆதியும், அந்தமுமாக வருங்களாக சுக துக்கங்களை பகிர்ந்து கொண்டு அவர்கள் வாழும் காதல் வாழ்க்கைக்கு இன்றே அஸ்திவாரம் அமைத்தனர். மீண்டும் அவர்களின் காதல் அங்கே துளிர்விட தொடங்கியது.

அபூர்வாவை நேரில் சந்தித்த கோபத்தை யாரிடமும் காட்ட முடியாமல் காரின் கதவுகளை அறைந்து சாத்திய சாருலதா வேகமாக படியேறி வீட்டிற்குள் நுழைந்தாள்.

அவளின் கோபத்தை கண்ட மேனகா, “என்னாச்சு சாரு” என்றாள் இயல்பாக.

நேராக சென்று ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தவள், “இன்னைக்கு அபூர்வாவை பார்த்தால் செம மூட் அவுட் அம்மா. அவ அண்ணாவை கல்யாணம் பண்ணிட்டு கண்ணுக்கு முன்னாடி வந்து திமிருடன் பார்த்தும் என் கோபம் உச்சிக்கு ஏறிவிட்டது” மனதை மறைக்காமல் எரிச்சலோடு பேசிய மகளை நினைத்து மேனகாவின் தலை கர்வத்துடன் உயர்ந்தது.

இதற்கு தாயிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று அவள் நிமிர்ந்து தாயைப் பார்க்க, “அபூர்வா ஆதியை கல்யாணம் பண்ணிட்டேன்னு ரொம்ப திமிரு பண்ணுவாள். இப்போ நீயும், சிந்துவும் என்னோடு இருப்பதால் கண்டிப்பா அவளிடமிருந்து ஆதியை நான் பிரித்துவிடுவேன்” என்ற தாயை அவள் அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்தாள்.

“அதுதான் அம்மா நானும் அவளிடம் சவால்விட்டு வந்து இருக்கேன்” என்ற மகளின் கன்னத்தில், ‘பளார்’ என்று அறைந்தார் ஜெகன்நாதன்.

அவள் கன்னத்தை பிடித்துகொண்டு தந்தையை நிமிர்ந்து பார்க்க, “சாரு உன்னிடமிருந்து இப்படியொரு செயலை நான் எதிர்பார்க்கல. உன்னோட

அண்ணனுக்கு நீ நல்லது பண்ணல என்றாலும் பரவல்ல. இவ பேச்சைக்கேட்டு கெடுதல் பண்ணாதே” என்று விரல்நீட்டி எச்சரித்தார்.

இத்தனை நாளும் தன்னை கண்டிந்து பேசியிராத தந்தை இன்று கைநீட்டி அடித்ததில் கோபம் கொண்ட சாரு, “எனக்கு எங்க அம்மாதான் முக்கியம். அவங்க என்ன சொன்னாலும் கண்ணை மூடிட்டு செய்வேன். அதை தட்டிக்கேட்க உங்களுக்கு உரிமை இல்லப்பா” என்று அவரையே எதிர்த்து பேசிவிட்டு அவள் அங்கிருந்து சென்றுவிட்டாள்.

பிடிவாதம் பிடிக்கும் மகளை நினைத்து மனம் வருந்தியவர் இதற்கெல்லாம் காரணமான மேனகாவின் மீது அவரின் கோபம் திரும்பிட, “நீதாண்டி துக்கு எல்லாம் காரணகர்த்தா. அவளையும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிற இல்ல. இதுக்கு எல்லாம் ஒருநாள் நீ நல்ல அனுபவிக்க போற” என்றார்.

அதற்கு எல்லாம் பயந்தால் அவர் மேனகா இல்லையே..

“அதையும் பார்க்கலாம் நானா? இல்ல அவளான்னு? அடுத்தவாரம் நம்ம மகளை பெண் பார்க்க வராங்க. அதை நினைவில் வச்சுக்கிட்டு மற்ற வேலையை கவனிங்க. இன்னொரு முறை அவளை அடிக்கற வேலை வச்சுக்காதீங்க” என்று கணவனை மிரட்டிவிட்டு சென்றார்.

அவளின் செயலை நினைத்து மனம் வெறுத்தவராக, “ச்சீ இவளை எல்லாம் என்ன செய்தால் தகும்? இப்போதான் அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணி இருக்கான். அதுக்குள் அவளை நிரந்தரமாக பிரிக்க நினைக்கிறாளே” என்று புலம்பியவர் தன் வேலையை கவனிக்க சென்றார்.

தன் அறைக்கு சென்ற சாருமதி தந்தை அடித்ததை நினைத்து வருத்தபடாமல் கம்பெனி நிர்வாகத்தின் பைல்களை எல்லாம் புரட்ட தொடங்கினாள். அந்த பைல்களின் மூலமாக தாய் எந்தளவுக்கு மோசமானவர் என்று புரிந்துபோனது.

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற விஷயத்தை தெளிவாக திட்டமிட தொடங்கியது அவளின் மனது. அதுவரை ஆக்ரோசமாக கொந்தளித்தது அவளின் மனம். உடனே யாருக்கோ அழைத்து ஏதேதோ விஷயங்களை பேசிவிட்டு போனை வைத்தவளின் மனம் மெல்ல அமைதியானது.

அடுத்தடுத்து வந்த நாட்கள் மின்னல் வேகத்தில் சென்று மறைய சாருவின் நிச்சயதார்த்தம் சிறப்புடன் நடந்து முடிந்தது. தாயின் சொல்லை தட்டாத பிள்ளையாக அவள் நடந்து கொள்வதை நினைத்து பூரித்துப்போனார் மேனகா.

இரவு மாடியில் நின்று இருளை வெறித்த சாருவின் அருகே வந்த சிந்து, “அக்கா நீயா இப்படி இறுகிப்போய் இருக்கிற?” என்று கேட்டாள்.

வெகு அருகில் கேட்ட தங்கையின் குரலில் தன்னை மீட்டெடுத்துக் கொண்டவளாக, “என்ன பண்றது சிந்து சில நேரத்தில் இப்படித்தான் இருந்தாகணும். வேற வழி இல்ல. ஒருபக்கம் அம்மா, இன்னொரு பக்கம் தொழில் என்று அனைத்தையும் கடந்து வர என்னை நானே கட்டுபடுத்திட்டு இருக்கேன்” என்றவளின் குரல் லேசாக கரகரத்தது.

அவளின் மன உணர்வுகளை படித்த சிந்து, “எல்லாமே சீக்கிரம் சரியாகும் அக்கா” என்று தமக்கையைத் தேற்றினாள் சின்னவள். இத்தனை நாளாக தங்கைக்கு தாயாக இருந்தவள் இன்று அவளுக்கு சேயாக மாறிப் போனாள். தங்கை அணைத்து அவளின் தோளில் முகம் புதைத்தவள் அமைதியாக நின்றாள்.