யாழ்-7

IMG-20210214-WA0021-6801b25d

யாழ்-7

யாழ்-7

அஷ்வினை, எங்கும் கவனம் சிதறாமல் மனதிற்குள் திட்டிக்கொண்டே வந்தவள், எதிரில் வந்த தேவாவை இடித்துவிட்டாள். இடித்து விட்டுத் தன்மேல் உள்ள தவறை உணர்ந்தவள்,

“சாரி” என்று நிமிர ஆச்சரியம் அவளுக்கே!

“தேவா ண்ணா!” ஆச்சரியத்தில் வாய்விட்டே கத்திவிட்டாள் ராஷ்மிகா.

ஆம்! தேவா, சரணுடைய ஒன்றுவிட்ட உறவு. ஆனால்,சரணும் தேவாவும் சிறிய வயதிலிருந்தே நெருக்கம். எந்தவொரு விஷயத்தையும் அண்ணனிடம் மறைக்க மாட்டான் சரண். அதனால் ராஷ்மிகாவைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தான் தேவா.

“ஹாய் மா, ராஷ்மிகா” என்றவன், “ஹாய் அங்கிள்! ஹாய் ஆன்ட்டி! எல்லாரும் எப்படி இருக்கீங்க?” என்று நலம் விசாரித்தான்.

“நல்லா இருக்கோம்பா.. வீட்டுல எல்லாரும் சௌக்கியமா?”விசாரித்தார் சக்திவேல். ஏனெனில், ராஷ்மிகாவுக்கு தெரிந்தவர்களை சக்திவேலிற்கு தெரியாமலிருக்க வாய்ப்பில்லை.

எந்த ஒளிவு மறைவும் இன்றித் தந்தையிடம் அனைத்தையும் ஒப்பிப்பவள் அவள். ஆனால் அஷ்வினைப் பற்றி மட்டும் சொல்ல மறந்தாள்.

விதி நன்றாக கால் மேல் காலிட்டு அமர்ந்து விளையாடத் தொடங்கியது ராஷ்மிகாவின் வாழ்வில்.

சிறிது நேரம் பேசிவிட்டு தேவா கிளம்ப, “கண்டிப்பா, ஒருநாள் வீட்டுக்கு அம்மா அப்பாவைக் கூட்டிட்டு வாப்பா” கல்யாணி சொல்ல,

“கண்டிப்பா ஆன்ட்டி! சீக்கிரம் இந்த வாலுக்கும் ஒரு கல்யாணம் வச்சிடுங்க. ஒரு வாரத்துக்கு முன்னாடியே வந்திடறோம் எல்லாரும்” என்றான் தேவா.

“சூப்பர்! சூப்பர்! நாளைக்கேனாலும் எனக்கு ஓகே” என்றவள், ஒரு ‘க்’
வைத்தாள்,

“பட், வீட்டோட மாப்பிள்ளையா பாருங்க. நான், என் அப்பா கூடவே இருப்பேன்” ராஷ்மி, நிமிர்ந்து நின்று சொல்ல, தேவாவும் கல்யாணியும் தலையில் அடித்துக் கொண்டனர்.

“இவளை நல்லா அடக்கிற மாதிரி ஒரு மாப்பிள்ளை பாக்கணும் தேவா. அப்பதான் அடங்குவா” கல்யாணி சொல்ல, “என்னையா?” என்று தோளைக் குலுக்கி அலட்சியமாய்க் கைகளைக் கட்டி நின்றாள் ராஷ்மிகா.

“சரி ஆன்ட்டி. நான் வரேன். வரேன் அங்கிள். பை ராஷ்மிகா. நல்லாபடி” என்று சிரித்த முகமாய் விடைபெற்றான் தேவா.

அவனுக்கு எங்கே தெரியப்போகிறது நண்பன் தன் தங்கை போல் எண்ணிய ராஷ்மிகாவின் வாழ்வில் சூறாவளியாய் புகப்போவதை.

“ஏன்டி? உண்மையாவே வீட்டோட மாப்பிள்ளை எதிர் பாக்கறியா?” கல்யாணி கேட்க, ராஷ்மிகாவோ மனதுக்குள் சிரித்தாள்.

இந்தக் காலத்தில் எவனும் வீட்டோடு வரமாட்டான் என்று தெரியும். இருந்தாலும் அன்னையை வெறுப்பேற்ற, “ஆமா!” என்று தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு முன்னால் நடக்கத் தொடங்க, மகளின் வார்த்தையில் கல்யாணிக்கு திக்கென்று இருந்தது.

“ஹாய்டா மச்சி!” அமர்ந்திருந்தபடியே அஷ்வின் கையை ஸ்டைலாக ஆட்ட,

“ஹாய்டா அஷ்வின். ஸாரிடா! கொஞ்சம் லேட்.ட்ராஃபிக் அண்ட் கீழ தெரிஞ்ச ஃபேமிலிய பாத்தேன். டென் மினிட்ஸ் போயிடுச்சு” தேவா சொல்ல அஷ்வினின் புருவங்கள் சுருங்கியது.

“யாருடா?”

“என்ன யாருடா?” புரியாமல் கேட்டான் தேவா. ஏனெனில், அஷ்வின் யாரைப் பற்றியும் அவ்வளவாக விசாரிக்கமாட்டான். தனக்கு தேவை என்றால் மட்டுமே அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்வான். அதனால் தான் தேவா புரியாமல் கேட்டான்.

“அதான். ஏதோ ஃபேமிலிய பாத்தேன்னு சொன்னியே?” அஷ்வின் கேட்க, அதற்குள் ஆர்டர் எடுக்க வந்தான் ஒருவன்.

இருவரும் ஆர்டர் கொடுக்க, அந்தப் பையன் பவ்யமாய்க் கேட்டுக் கொண்டு போனான்.

பின் அது அஷ்வினுடைய ரெஸ்டாரன்ட் அல்லவா?

“ஓ அதுவா. என் கசின் சரண் பத்தி சொல்லியிருக்கேன் ஞாபகம் இருக்கா? அவனோட பிரண்ட் ராஷ்மிகா ஃபேமிலி” விளக்கம் சொல்ல அஷ்வினிற்கு மூளையில் மின்னல் வெட்டியது. சரணின் முகமும் ஏதோ ஞாபகத்தில் வந்தது. ஆனால், எதையும் அவன் மூச்சுவிடவில்லை ராஷ்மிகாவைப் பற்றி தேவாவிடம்.

“ஓஓ!” அஷ்வின் பேச்சை வேறு திசைக்கு மாற்றினான்.

“அஷ்வின் எனக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகிடுச்சுடா” தேவா சொல்ல அஷ்வினுக்கோ ஷாக்தான்.

திடீரென வந்து, ‘பிக்ஸ் ஆகிடுச்சுனு’ சொன்னால், உயிர்த்தோழன் யாருக்குத்தான் அதிர்ச்சியாக இருக்காது.

“டேய் என்னடா ஷாக் தர்ற?” வாய்விட்டே கேட்டவன், “கங்கிராட்ஸ் தேவா” என்று வாழ்த்தினான் அஷ்வின்.

“பொண்ணு யாரு? நந்தினி தானே?” அஷ்வின் கேட்க, தலையை ஆட்டிய நண்பனைக் கண்டு சிறிது நிம்மதியாய் இருந்தது அஷ்வினிற்கு.

ஏனெனில், அவனின் செட்டில் எவனும் காதலித்த பெண்ணை திருமணம் செய்யவில்லை. கல்லூரி முடித்து வரும்போதே ப்ரேக்அப் என்று வந்தார்கள். அவர்களுக்கு மத்தியில் தேவாவை நினைத்து நிம்மதியாகவும் பெருமையாகவும் இருந்தது அஷ்வினிற்கு.

“உனக்கு எப்படா அஷ்வின்?” தேவா தொடங்க,

“இப்பதான தேவா டுவென்டி சிக்ஸ். பார்க்கலாம். கொஞ்ச நாள் போகட்டும்” என்றான் அஷ்வின் கூலாக. இருவரும் சாப்பிட்டுவிட்டு எழ கைகளை கழுவிக்கொண்டு வந்து அமர்ந்தனர்.

“நம்ம மினிஸ்டர் பொன்னுரங்கம் பொண்ணுக்கு உன்னைக் கேட்டதா அன்னிக்கு சொன்னியேடா?” தேவா கேட்க,

“யெஸ், கேட்டாங்க! நான் இப்போதைக்கு அந்த ஐடியா இல்லைனு சொல்லிட்டேன்” என்றவனை ஓரக்கண்ணால் பார்த்த தேவா அடுத்தக் கேள்வியை வீசினான்.

“பட், மினிஸ்டர் பொண்ணு ஷிவானிக்கு, உன்ன புடிக்கும் போலயேடா. உன்னையே ஒரு பார்ட்டில பாத்துட்டு இருந்ததா என் காதுக்கு வந்துச்சே?” கிண்டல் சிரிப்புடன் கேட்க,

“பாரு. அவ பாத்துட்டு இருந்ததா தான் சொல்லிருக்காங்க. நான் பாத்ததா சொல்லலை” ஒற்றை புருவத்தைத் தூக்கி இறக்கினான் அஷ்வின். அதில் வாயடைத்துத்தான் போனான் தேவா.

“மச்சா.. நெக்ஸ்ட் வீக் என்கேஜ்மென்ட் டா. வீட்டுக்கு அம்மா அப்பா
வருவாங்க சொல்ல. நானும் வரேன். கண்டிப்பா வந்திடுங்க எல்லாரும்” என்றவன்,

“முக்கியமா பிசினஸ்மேன், நீங்க அன்னிக்கு என்ன மீட்டிங் இருந்தாலும் கேன்சல் பண்ணிடுங்க” நண்பனின் ப்ரோக்கிராம்ஸ் பற்றி அறிந்ததால் தேவா சொன்னான்.

“சரிங்க!” நக்கலாய் அஷ்வின் பதில் அளிக்க, இருவரும் சிறிதுநேரம் பேசிவிட்டு, மணி பதினொன்று ஆகவே கார் பார்க்கிங்கிற்கு சென்றனர்.

தேவா கிளம்ப, காரை வந்து எடுத்த அஷ்வினிற்கு, “என் இடத்துல உக்காந்துட்டு என்னையே முறைக்கற” ராஷ்மிகாவை நினைத்து ஏளனமாய் இதழ் பிரியாமல் புன்னகைத்தான்.

இவன் கண் அடித்தவுடன் கோபத்தில் சிவந்த அவளது விழிகள் இன்னும் அவன் கண் முன் தெரிந்தது.

வீட்டிற்கு வந்து காரை நிறுத்தியவன், உள்ளே செல்ல, தந்தையின் அலுவலக அறையில் இன்னும் லைட் எரிவதைக் கண்டு யோசனையுடன் அங்கே சென்றான்.

தந்தையின் அறை முன் நின்றவன் கதவைத் தட்ட, “வா குமரா!” என்றார் நாகேஷ்வரன். இந்நேரத்தில் மகனைத் தவிர வேறு யாரும் கதவைத் தட்ட மாட்டார்கள் என்று அவருக்குத் தெரியும்.

“என்னப்பா, இன்னும் தூங்கலையா?” அக்கறையாக வினவ, இடமும் வலமும் தலையை ஆட்டினார் அவர்.

“ஏன், ஒரு மாதிரி இருக்கீங்க?” என்றவன் அவரின் எதிரில் அமர்ந்தான். தந்தையின் முகச்சோர்வு அவனை ஆதீத யோசனையில் ஆழ்த்தியது. இது நாள் வரை அவன் அவரை அப்படிக் கண்டதில்லை.

“நம்ம ஸ்டீல் பேக்டரில தொழிலாளர் சங்கத்தோட லீடர் பிரச்சினை பண்றான் பா” என்றார் நெற்றியில் கைவைத்தபடி.

“யாரு ராஜபாண்டி தானேப்பா?” என்றவன், “விடுங்கப்பா! அவன் எல்லாம் ஒரு ஆளுன்னு, ஏன் இந்த சின்ன விஷயத்துக்கு எல்லாம் ரொம்ப ஃபீல் பண்றீங்க?” மகனாக ஆறுதல் சொன்னவன் அஷ்வின் அதற்கான முடிவையும் மனதுக்குள் எடுத்தான்.

“குமரா! நமக்கு எவ்வளவோ தொழிலிருக்கு. ஆனா,உனக்கு புடிச்ச தொழில் எது?” சம்மந்தமே இல்லாமல் கேட்டார் நாகேஷ்வரன்.

தந்தை காரணமில்லாமல் எதையும் கேட்க மாட்டார் என்று அறிந்தவன், “இதுல என்னப்பா டவுட்? எனக்கு நம்ம கன்ஸ்ட்ரக்ஷன் தான் பிடிக்கும்” என்று சொல்ல, அவரோ புன்னகையை உதிர்த்தார்.

“நமக்கு எத்தனை தொழில் இருந்தாலும், நமக்கு ரொம்ப புடிச்சதுல பிரச்சனை சின்னதா வந்தாக்கூட நம்மளால நிம்மதியா இருக்க முடியாதுப்பா” என்றார் மனவேதனையை அடக்கியபடி.

அவர் அருகில் சென்றவன், தோள்மேல் கை வைத்து, “என்னால
புரிஞ்சுக்க முடியுதுப்பா. நான் என்னனு பாக்கறேன். கவலைப்படமா போய்த் தூங்குங்க” என்றவன் அவரை அறைக்கு அனுப்பி வைத்தான்.

தனது அறைக்குச் சென்றவன் நிரஞ்சனிற்கு ஃபோன் செய்து, ஸ்டீல் பேக்டரியில் உள்ள ராஜபாண்டியின் தகவல்களை எடுத்து வைக்கச் சொன்னான். ஃபோனை டேபிளில் வைத்தவன் குளிக்கச் செல்வதற்காக தனது ரோலக்ஸ் வாட்சை கழற்றிவிட்டு, பாண்ட்டில் ஏதாவது இருக்கிறதா என்று கை வைக்க, ஏதோ கைக்குத் தட்டுப்பட அதை எடுத்தான். ராஷ்மிகாவுடைய ஃபோன்தான்.

ஃபோனை எடுத்தவன் முகத்தில் விஷமப்புன்னகை பரவ, விரைவாகக் குளித்துவிட்டு வந்தவன், ராஷ்மிகாவின் ஃபோனை எடுத்து பவர் பட்டனை அழுத்தினான். லாக் அல்லது பாஸ்வோர்ட் வைத்திருப்பாள் என அவன் நினைத்திருக்க, அதுவோ ‘இந்தா பாத்துக்கோ’ என்று ‘பப்பரப்ப’ என்றிருந்தது.

உள்ளே சென்றவன் அதை முழுதாக ஆராய ஆரம்பித்தான். பொதுவாக இது போன்ற குணங்கள் அவனிடம் கிடையாது. ஆனால், அவளின் செய்கையில், அவளின் முறைப்பில் அவனின் குணங்கள் அவளிடம் மாறிப்போனது.

சிறிது நேரம் சென்றபின் தான் அஷ்வின் கவனித்தான், சிம் டீஆக்டிவேட் ஆகியிருப்பதை. சரணுடன் மாலை வரும்போதே டீஆக்டிவேட் செய்து விட்டாள் ராஷ்மிகா.

‘நல்லா விவரமாதான் பெத்து வச்சிருக்காங்க’ என்று நினைத்தவன் கேளரிக்குள் சென்றான்.

அதிலிருந்த ஃபோட்டோவைப் அவன் ஆவலாகப் பார்க்கப் பார்க்க மணி ஒன்றரையே தாண்டியது.

கொட்டாவியை வெளியிட்டவன் வெளியில் வர நினைக்க, திடீரென அந்த ஃபோட்டோ அவன் கண்ணில் சிக்கியது விதிசெய்த சதிதான்.

இதை அறியாத ராஷ்மிகாவோ தனது அறையில் இரவு உண்ட உணவின் திருப்தியில் கும்பகர்ணியாக மாறி உறக்கத்தைக் கட்டித் தழுவி இருந்தாள்.

இருநொடி கண்ணிமைக்காமல் பார்வையைத் திருப்ப முடியாமல் அதைப் பார்த்தவன், தலையை சிலுப்பிக்கொண்டு தன்னை சமநிலை படுத்த, பால்கனிக்கு சென்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

வந்தவன் அவளுடன் தான் எடுத்த செல்பியை தன்னுடைய டேப்பில் ஏற்றி வைத்தான்.

அவனுடைய ஃபோனை அடிக்கடி தங்கை எடுத்து ஏதாவது நோண்டுவது தெரியும். அதனாலேயே அவனுடைய பெர்சனல் டேப்பில் அதை ஏற்றி வைத்தான்.

அடுத்தநாள் வழக்கம்போல எழுந்த ராஷ்மிகா கிளம்பி கீழே வந்து, “அம்மா! பெரியப்பா வீட்டுக்கு சாயிந்திரம் போயிட்டு வந்திடறேன்” என்று சொல்ல கல்யாணி ஆரம்பித்தார்.

“ஓ’ பெரியப்பா வீட்டுக்கு போன நீ இங்க வந்திடுவ. அங்கயே டேரா
போட போறன்னு சொல்லு” என்றவர், “போய் என் மகனை வம்புக்கு இழுக்காம இருடி” என்று சொல்ல அன்னையை முறைத்தாள் ராஷ்மிகா.

“யாரு அவனா? விட்டா நீங்க அவனைக் குழந்தைன்னு சொல்லிடுவிங்க” என்றவள், “படிக்கிறது செகன்ட் இயர் பேசறது இரண்டாயிரம் பொண்ணுங்க கிட்ட” என்றாள் ராஷ்மிகா.

“ஏய்! வீணா பையன் மேல பழிபோடாத” மகளை கல்யாணி எச்சரிக்க, சாப்பிட்டுக்கொண்டு இருந்த சேரில் இருந்து பின்னால் சாய்ந்தவள்,

“ஆஹான்! பையனுக்கு எதுமே தெரியாதோ. ஒருநாள் எல்லாம் தெரியும்” என்றே சாப்பிட்டுக்கொண்டு இருந்தாள்.

“ராஷ்மிம்மா!” என்ற குரலில் வாயெல்லாம் பல்லாகத் திரும்பினாள் ராஷ்மிகா.

“ஹை பெரியப்பா!” அவள் எந்திரிக்க, “டேய் டேய்! உக்காரு” என்றவர் வந்து தம்பி மகள் அருகில் உட்கார்ந்தார்.

“ராஷ்மி, பெரியம்மா எல்லாம் கண்ணுக்குத் தெரிலையா?” குறையாகக் கேட்டபடி விஜயலட்சுமி வர, “அச்சோ! ஐ மிஸ் யூ டெட்டிம்மா” அவரது தாடையை இடது கையால் பிடித்துக் கொஞ்சினாள் அவள்.

அவர் கொஞ்சம் வெயிட். அதற்காகவே அவரை டெட்டி என்று செல்லமாக அழைப்பாள் அவள்.

“ராஷ்மி ஆ காட்டு..” சிவக்குமார் சொல்ல, ராஷ்மிகா வாயைத்திறக்க, திருப்பதிலட்டை வாயில் போட்டார் அவர்.

“நேத்து கூப்பிடனே ராஷ்மி. ஏன் ஃபோன் எடுக்கலை” சிவக்குமார் கேட்க,

“அ.. அது. ஃபோன் தொலைஞ்சிருச்சு பெரியப்பா” என்று தலைகுனிந்து உதட்டைக் கடித்தபடி சொன்னாள்.

“இப்ப புது ஃபோன் வாங்கிட்டியா? இல்லனா சொல்லுடா, ஈவ்னிங் போய் வாங்கலாம்” சிவக்குமார் சொல்ல,

“இப்படியே நீங்களும் உங்க தம்பியும் நல்லா செல்லம் குடுங்க. இன்னும் நல்லா என்கிட்ட வாய் அடிக்கட்டும்” என்றபடியே கல்யாணி வர, பெரியப்பா தோளில் சலுகையாய் சாய்ந்து கொண்டு, ராஷ்மிகா பழிப்புக் காட்டி, அதற்கு தவறாமல் அன்னையிடம் ஒரு கொட்டும் வாங்கிக் கொண்டாள்.

“ஹர்ஷா எங்க பெரியம்மா?” ராஷ்மிகா தனது சகோதரனின் ஞாபகம் வந்தவளாய் வினவ,

“அவனுக்கு, ஏதோ இன்டர்னல்ஸ்ன்னு காலையிலயே சீக்கிரம் கிளம்பிட்டான் ராஷ்மி!” விஜயலட்சுமி சொல்லி முடிக்க சரண் வந்து சேர்ந்தான்.

காலை கோயிலிற்கு சென்றிருந்த சக்திவேலும் வர, அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினாள் ராஷ்மிகா.
“டேய்! நேத்து தேவா அண்ணாவைப் பாத்தேன்” என்றாள் செல்லும் வழியில்.

“அண்ணாவையா? எங்க பாத்த?” சரண் வினவ, நேற்று நடந்ததைக் கூறினாள் ராஷ்மிகா.

“ஓ! சரி சரி. ஆக்சுவலி அண்ணாக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிருக்குடி” சரண் சொல்ல,

“வாவ்! வாவ்! யாரு நந்தினின்னு சொல்லுவியே அவங்களா” குஷியுடன் கேட்டாள் ராஷ்மிகா.

“ஆமா ஆமா! அதுசரி நீயேன் இவ்வளவு குஷி ஆகற?” ஓரக்கண்ணால் ராஷ்மிகாவைப் பார்த்தபடி அவன் கேட்க,

“டேய்! லவ் மேரேஜ்லாம் கல்யாணம் வரைக்கும் போறது எவ்வளவு பெரிய விஷயம். ஃபர்ஸ்ட் கப்பில்ஸ்குள்ள ஒரு புரிதல் இருக்கணும்டா. எந்த சண்டை வந்தாலும் யாராவது விட்டுக் குடுத்து போய், அப்புறம் பேரண்ட்ஸ்கிட்ட சொல்லி. அப்பப்பா எவ்வளவு பெரிய விஷயம்” ராஷ்மிகா சொல்ல வாயைப் பிளந்தான் அவன்.

“ஓஹோ, நான்கூட உன்ன என்னமோ நினைச்சேன். எவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்க” சரண் வியக்க,

“டேய் சரண். இதெல்லாம் பேஸிக்டா” என்று தலையில் அடித்துக் கொண்டாள்.
“ஓஹோ. சரி, சரி” என்றான். அவனின் மனதில் அவள் விளையாட்டுப் பெண் தானே. பத்தாவது படிக்கும் காலத்தில் இருந்து பார்க்கிறானே. வெளியில் தைரியமாக அவள் இருந்தாலும், அவளின் வெகுளித் தனமும், முந்திரிக் கொட்டைத் தனமும், முன் கோபமும அவன் அறிந்ததே.

“இங்க பாத்தியா. புது மொபைல்” கல்லூரி வந்தவுடன் புது மொபைலை அவன் முன் ஆட்டினாள் ராஷ்மிகா.

கரெக்டாக கார்ப்பார்க்கிங் அப்போது வந்து அடைய, காரை நிறுத்தியவன் க்ளாஸிற்கு இன்னும் டைமிருக்கு என்று நினைத்து ராஷ்மிகாவின் புது மொபைலை வாங்கிப் பார்த்தான்.

“ஹே நல்லா இருக்குடி. உன்னோட ஃபேவ்ரட் கலர்லயே அங்கிள் வாங்கி இருக்காரு பாரேன்” என்றான் கண்கள் விரிய.

“அப்பாக்குத் தெரியும்டா. எனக்கு இந்த கலர்தான் பிடிக்கும்ன்னு” என்றிட, ராஷ்மிகா தந்தையின் மேலுள்ள பாசத்தில் பேச, சரணிற்கு சிறிது பொறாமையாக இருந்தது.

ஏனெனில், அவன் வளர்ந்த விதம் அப்படி. பிசினஸ், பிசினஸ் என்று ஓடிக்கொண்டு இருக்கும் தந்தையிடம் ஏதாவது கேட்டால் காசைத் தருவாரே தவிர, உடன்வந்து வாங்கித் தரும் பழக்கம் அவருக்கில்லை. அவனிற்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பு என்றால், அதில் அவனின் அன்பு அன்னையால் மட்டுமே.

இருவரும் கார் பார்க்கிங்கில் இருந்து இறங்கி நடக்க, அவர்களுக்கு சிறிது தூரம் தள்ளி ஒரு கார் வந்து நின்றது.
அஷ்வின்தான் தங்கையை விட வந்திருந்தான். முதலில் இவர்கள் கவனிக்கவில்லை. ஆனால், கீர்த்தனா இறங்க யாரென்று தெரிந்து விட்டது ராஷ்மிகாவிற்கும் சரணிற்கும்.

கீர்த்திக்கு அண்ணனின் செய்கை தெரியாது. அவளோ ராஷ்மிகாவைப் பார்த்து சிறிதாக புன்னகைக்க ராஷ்மிகாவின் முறைப்பே பதிலாக வந்தது.

“தர்ஷு! க்ளாஸ் டைமாச்சு. கிளம்பு” காரின் உள்ளே இருந்து அண்ணனின் குரல் கேட்க கீர்த்தி அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

கார் கண்ணாடியை இறக்கிய அஷ்வின், ராஷ்மிகாவைப் பார்க்க அவளோ நேரான பார்வையில், அவனின் மேல் ஒரு வெற்றுப்பார்வை வீசிவிட்டுக் கடக்க, காரின் உள்ளிருந்தே அவனுடைய விழிகள் மட்டும் இடமிருந்து வலம் வரை அசைந்து தன்னைக் கடக்கும் அவளை பார்வையாலேயே துளையிட்டுக் கொண்டிருந்தது.

‘எப்படி பாக்கறான் பாரு’ என்று நினைத்தவளுக்கு உடம்பிலுள்ள ரோமங்கள் சிலிர்த்தெழுந்தன.

‘கடவுளே! இனி இவனை என் வாழ்க்கைல பார்க்கவே கூடாது.’ அவள் கடவுளை வேண்ட, விதி தன் வேலையைக் காட்ட தயாராக இருந்தது.

அன்று மாலையே சரணின் வீட்டிலிருந்து நிச்சய அழைப்பு வந்து சேர்ந்தது ராஷ்மிகாவின் வீட்டிற்கு.

***

நிச்சயநாள்.

ஆகாய நீல நிறத்தில், வெள்ளி நிற வேலைப்பாடுகள் செய்த சல்வார் கமீஸ் மற்றும் அதற்கு பொருத்தமான நகை ஒப்பனைகளோடு ரெடியாகி, “ம்மா!” என்று கத்திக்கொண்டே தனது அறையிலிருந்து வந்தாள் ராஷ்மிகா.

“என்னடி எதுக்கு கத்தற?” கல்யாணி மகளை அதட்ட,

“என்னோட ஐ லைனர் கரெக்டா இருக்கா பாரு” கண்களை மூடி அன்னையின் முன் நிற்க கல்யாணிக்கு கடுப்பாகிவிட்டது.

பின்னே மூன்றுமணி நேரமாக ரெடியானாள் யாருக்குத்தான் கோபம் வராது. கல்யாணி கிளம்பி உட்கார்ந்தே ஒருமணி நேரம் ஆகிவிட்டது.

“ம்மா, அப்பா எப்ப வருவாரு” ராஷ்மிகா கேட்க,

“ராஷ்மி, அப்பாக்குத் திடீர்னு ஒரு லோட் இறங்குதாம். டிரைவரை அனுப்பறனு சொல்லிட்டாரு” என்று சொல்ல ராஷ்மிகா முகம் சுருங்கினாள்.

சிறிது நொடிகளில் தனக்குத்தானே சமாதானம் ஆனவள், “ஓகே ம்மா” என்றாள்.
“சித்தி!” என்றபடியே உள்ளே வந்தான் ஹர்ஷவர்தன்.

“வாடா. என்ன பொண்ணுங்க யாரையும் பின்னால காணோம்” என்று தேடுவதுபோல ராஷ்மிகா பாவனை செய்ய, அக்காவை முறைத்தவன், “வாங்க சித்தி. நம்ம போவோம். சித்தப்பாகிட்ட சொல்லிட்டேன். ட்ரைவர் வரமாட்டார். நானே ட்ரைவ் பண்ணிடுவேன்” கல்யாணியின் கையைப் பிடித்து அழைக்க,

“டேய்டேய், என்னை விட்டுட்டு எங்க போறீங்க?” ராஷ்மிகா அவசரமாகக் கேட்க,

“தேவா ண்ணா நிச்சயதார்த்ததிற்கு” ஹர்ஷா.

“நீ எதுக்குடா அங்க?” ராஷ்மிகா கேட்க,

“தேவா ண்ணா எனக்கும் ப்ரண்ட்தான்” காலரைத் தூக்கி விட்டவன்,

“வேணா எங்ககூட வாயேன்!” என்று ராஷ்மிகாவை சீண்டியவன், “போனா போகுது சித்தி. கூட்டிட்டு போலாம்” என்று வம்பிழுக்க தம்பியை பிடித்தடித்தாள் ராஷ்மிகா.

“என்ன இவ்வளவு மேக்கப்? என்ன காலையில ஜஞ்சுமணில இருந்து பெயின்ட் பண்ணியா? எக்கா உனக்கு கல்யாணம் இல்ல, தேவா அண்ணாக்கு நிச்சயம்” மேலும் வம்பிழுக்க,

“என் கல்யாணத்துக்கு எல்லாம், மேக்கப் ஸ்டைலிஸ்ட், அடுத்து ஹேர் ஸ்டைலிஸ்ட்னு, தனித்தனியா வருவாங்க” கெத்தாக ராஷ்மிகா கூற, உதட்டை லேசாக மேலாகத் தூக்கி மெச்சினான் ஹர்ஷவர்தன்.

அக்காவையும் தம்பியையும் அழைத்துப் போவதற்குள் ஒரு வழியாகி விட்டது கல்யாணிக்கு.

கொஞ்சம் பெரிய இடத்து நிச்சயம் என்பதால், பெரிய ஹாலாகவே இருந்தது. வரவேற்பில் தேவாவின் தாய், தந்தையிடம் வணக்கத்தைத் தெரிவித்துவிட்டு கல்யாணி மகளைக் கூட்டிக்கொண்டு உள்ளே சென்றார்.

என்னதான் பெரிய இடம் என்றாலும், இன்னும் பாரம்பரியத்தைக் கடைபிடிப்பவர்கள் அவர்கள். சாப்பாடுகூட கேட்டரிங்க் பசங்களை விடாமல், நாமே பார்த்துபார்த்து செய்ய வேண்டுமென்று இருந்தனர்.

உள்ளே நுழைய சரணின் அம்மா, கல்யாணியின் கண்ணில் சிக்கினார். ஹர்ஷாவும் யாரையோ கண்டவுடன் எழுந்து செல்ல, ராஷ்மிகாவால் ஒரு இடத்தில் உட்கார முடியவில்லை.

தனது அம்மாவிடம் இருந்து நைசாக கழன்றவள், அங்கிருந்த ஒரு காரிடாரில் வந்து காற்றாட நின்றாள். ஐந்து நிமிடம் காற்று வாங்கியவள் ஃபோனை எடுத்து சரணிற்கு அழைத்தாள்.

“டேய் சரண் எங்கிருக்க? நான் வந்துட்டேன்” ராஷ்மிகா கேட்க,

“நான் இங்கதான் மாப்பிள்ளை ரூம்ல இருக்க ராஷ்மி” சரண் சொல்லச் சொல்ல இடையில் புகுந்தாள் ராஷ்மிகா.

“அப்ப நானும் அங்க வரேன்” என்றவள், அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதைக்கூட கேட்காமல் மாப்பிள்ளையின் அறைக்கு விரைந்தாள்.

மாப்பிள்ளை அறைக்குச் சென்று, கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைய, முதலில் அங்கு நின்றிருந்த சரணைப் பார்த்தவள், “ஹாய் டா. தேவா அண்ணா எங்கே?” என்றபடி முன்னால் சென்றவள் அங்கிருந்தவனைக் கண்டு, அவனின் பார்வையைக் கண்டு அப்படியே நின்றாள்.

சிரித்திருந்த முகம், மாறி இறுக்கத்தைத் தத்தெடுத்திருந்தது.

“அட, ராஷ்மியா. ராஷ்மி இங்க வா” தேவா அழைக்க, முகத்தை முடிந்த அளவு புன்னகையாய் வைத்துக்கொண்டு தேவா அருகில் சென்றாள் ராஷ்மிகா.

“ராஷ்மி! இவன்தான் என் பெஸ்ட் ப்ரண்ட் அஷ்வின்” என்று சொல்ல, அவனை நேரம் ஆகிறது என்று வந்து அழைத்துவிட்டனர்.

சரணையும் எதற்கோ அழைக்க தேவாவுடன் சென்றான் வேறு வழியின்றி சரண். இருவரும் சென்ற பின்னரும் அப்படியே நின்று இருந்தாள் ராஷ்மிகா. தைரியமாக. அஷ்வினை அசட்டை செய்யாமல்.

அஷ்வினோ அவளின் எதிரில் அவளையே தான் நோக்கிக் கொண்டிருந்தான்.

ராஷ்மிகாவின் தைரியம் அவனை ஏதோ செய்தது. அவன் அன்று அத்தனை மிரட்டியும் அவளிடம் கண்ணீர் இல்லை. மற்ற பெண்ணாக இருந்திருந்தால் கண்டிப்பாக அவனின் நடந்து கொண்டதில் அழுது இருப்பாள்.

ஆனால், இவளோ பயத்தைக்கூட காட்டவில்லையே. ஒருவேளை நடிக்கிறாளோ என்றுகூடத் தோன்றியது அவனிற்கு.

ராஷ்மிகா அறையைவிட்டு வெளியே செல்லத்திரும்ப, அவள் சல்வாரின் முதுகுபுறம் இருந்த நாட் முடிச்சை, தன் விரலால் கொக்கி போல வைத்து அஷ்வின் பிடிக்க, ராஷ்மிகா அதிர்ந்து அப்படியே மூச்சடைக்க நின்றுவிட்டாள்.

கோபம் தலைக்கேற திரும்ப நினைத்தவளின் காதின் அருகில் நெருக்கமாக குனிந்து, தனது மூச்சுக்காற்று அவளின் செவியில் பட, அஷ்வின் சொன்ன வார்த்தைகள், அவளை சிலைபோல உறைய வைத்துவிட்டது.

Leave a Reply

error: Content is protected !!