ரகசியம் 13 💚

ரகசியம் 13 💚
“அம்மா என்ற வார்த்தைக்கு தகுதியே இல்லாதவங்க அவங்க” கயலின் இதழ்கள் விரக்தியாக புன்னகைக்க, யுகனுக்கும் ஏனோ அவளின் மனநிலையை புரிந்துக்கொள்ள முடிந்தது.
அவளின் மனநிலை தெரியாததால்தான் யுகனும் இத்தனைநாள் அவளிடம் விடயத்தைக் கேட்கவில்லை. இன்று கயல் தேனுவின் புகைப்படத்தைப் பார்த்ததும் வேறு வழியில்லாது கேட்டுவிட்டிருந்தான்.
புருவ முடிச்சுகளோடு அவன் அவளையே பார்த்தவாறு நிற்க, அப்போதுதான் ஞாபகம் வந்தவளாய் “உங்களுக்கு எப்படி”தயக்கமாக கயல் இழுக்க, “அது… சின்ன வயசுல நான் எப்போவும் ரேவதி அத்தைகூடதான் இருப்பேன். அவங்க எனக்கு இன்னொரு அம்மா மாதிரி. அவங்களுக்கும் ஒரு குடும்பம் இருக்கு அப்படின்னு எனக்கு தெரிஞ்சதும் எனக்கு தோனினது மொத்தமும் அவங்க கூட அத்தைய சேர்த்து வைக்கணும்னுதான். அப்போ உன் ஃபேமிலிய தேடிதான் உன் ஊருக்கு போனேன். அங்க என்னை உன் வீட்டுக்கு கூட்டிட்டு போனது உன் ப்ரென்ட் தேனுதான். ரொம்ப நல்ல பொண்ணு ஆனா என்ன, கொஞ்சம் வாயாடி. என்ட்…” ஏதோ சொல்ல வந்து நிறுத்தினான்.
கயலோ புரியாது நோக்க, “ஆங்… அது வந்து…” என்று தடுமாறிய யுகன் சட்டென்று பேச்சை மாற்றி, “அங்க போனதும்தான் நீ பண்ண காரியமும் தெரிஞ்சது. பார்த்தி மாமாவுக்கு என்ன ஆச்சுன்னும் தெரிஞ்சது. ஆனா, நான் கொஞ்சமும் நினைச்சு பார்க்காத ஒன்னு உன்னை என் வீட்டுலயே பார்ப்பேன்னு” அழுத்தமாக முடிக்க, முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை மறைக்க தலையை குனிந்துக்கொண்டாள் கயல்.
“உன் வாழ்க்கையில ஏதோ நடந்திருக்கு. நீ அப்படி ஒரு காரியத்தை பண்ணியிருந்தாலும் நீ நல்லா வாழ்ந்தா போதும்னு அவங்க நினைச்சாங்க. ஆனா… எனக்கு உன்னை பார்த்தா ஏதோ சரியா தோனல” யுகன் அவளை ஆராயும் பார்வை பார்க்க, “என் வாழ்க்கையில எனக்கு நடந்தது என் எதிரிக்கு கூட நடக்க கூடாது” கயலின் வார்த்தைகள் அத்தனை வலியோடு வர, யுகனுக்கு அவளின் வாழ்க்கையை அவளே சொல்லாத வரை கேட்கத் தோன்றவில்லை.
ஆனால், அவனுடைய யோசனை முழுக்க அவனின் அத்தையைப் பற்றிதான். “அத்தைய பத்தி நீ என்ன நினைச்சிக்கிட்டு இருக்கன்னு எனக்கு தெரியல. மொதல்ல உன் மனநிலையை தெரிஞ்சிட்டு அப்றம் சொல்லலாம்னு இருந்தேன். என்ட், அத்தைதான் உன் அம்மான்னு தெரியாதுன்னு நினைச்சதுதான் என் தப்பு. ஆனா, உனக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கு” யுகன் சொல்ல, “அம்மா போனதும் அவங்களோட ஞாபகம் வரக் கூடாதுன்னு அம்மாவோட எல்லா பொருளையும் அப்பா எரிச்சிட்டாரு. ஆனா, அவர் ரொம்ப காதலிச்சிருப்பார் போல! அம்மாவோட ஒரே ஒரு ஃபோட்டோ மட்டும் அவர் கூடவே வச்சிருந்தாரு. அது என்னோட கண்ணுல சிக்கணும்னு இருந்திருக்கு” கேலியாக சொல்லிக்கொண்டாள் கயல்.
“ஆனா, அத்தைக்கு நீதான் அவங்களோட மகள்னு தெரியாது” அவன் சொல்ல, அடுத்தநொடி “தெரிய கூடாது” கயலின் வார்த்தை கோபமாக வெளிப்பட, “கயல் லுக், நீயே கொஞ்சம் யோசிச்சு பாரு. அத்தை தப்பு பண்ணாங்கதான் இல்லைன்னு சொல்லல்ல. ஆனா, நாம அவங்க பக்கமும் கொஞ்சம் யோசிச்சு பார்க்கலாம்ல, சிட்டியில பொறந்து வளர்ந்தவங்க. பார்த்தி மாமாவ காதலிச்சு பத்தொன்பது வயசுலயே உன் கிராமத்துக்கு வந்துட்டாங்க. அடுத்த வருஷமே ஒரு குழந்தை. கிராமத்து வாழ்க்கை. அவங்களால ஈஸியா ஹேன்டல் பண்ண முடியல. அதான்…” புரிய வைக்க முயன்றான் அவன்.
கயலோ ஒரு கேள்விதான் கேட்டாள். “நீங்க குழந்தையா இருக்கும் போது உங்க அம்மாவும் இதே மாதிரி அவங்களால இந்த வாழ்க்கைய சமாளிக்க முடியலன்னு உங்கள விட்டுட்டு சொல்லாம கொல்லாம போயிட்டு பல வருஷம் கழிச்சு அம்மான்னு சொல்லிக்கிட்டு உங்க முன்னாடி வந்து நின்னா உங்களால ஏத்துக்க முடியுமா?”
அந்த கேள்விக்கு பதில் யுகனுக்கே தெரியவில்லை. அவனுடைய அத்தையின் தவறை அவனுக்கு அவனே ஏதேதோ காரணங்கள் சொல்லி சமாளிக்க முயன்றாலும் ஏனோ கயல் இவ்வாறு கேட்டதும் திணற ஆரம்பித்துவிட்டான்.
“இல்லை கயல், அவங்களோட நிலமைய…” அவன் மேலும் ஏதோ சொல்ல வர, “அம்மா இல்லாம வளர்ந்திருந்தா அதோட கஷ்டம் புரிஞ்சிருக்கும்” அழுத்தமாகச் சொன்னவள், அங்கிருந்து நகர்ந்து சற்று முன்னே சென்று கலங்கிய விழிகளோடு திரும்பிப் பார்த்தாள்.
யுகனோ கேள்வியாக நோக்க, “தேனு கூட பேசணும்போல இருக்கு. ஆனா, என் வாழ்க்கையில நடந்தது தெரிஞ்சா கண்டிப்பா தாங்க மாட்டா. அவளோட குரல மட்டும் நான் கேக்கலாமா?” அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு கயல் கேட்க, அவனுக்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்திருக்க வேண்டும்.
ஆனால், என்ன நடந்திருக்குமென்ற கேள்விதான் அவனுக்குள்.
“தாராளமா, ஆனா இப்போ இல்லை, நாளைக்கு” அவன் சொல்ல, புன்னகையோடு தலையசைத்தவள், அங்கிருந்து நகர்ந்திருக்க, போகும் அவளையே பார்த்திருந்தவன், ‘அத்தைய சீக்கிரம் புரிஞ்சிக்குவ கயல். புரிய வைப்பேன்’ மனதில் அழுத்தமாகச் சொல்லிக்கொண்டான்.
அடுத்தநாள்,
எப்போதும் அறையிலேயே கிடக்கும் சத்யா அம்மாளை ஹோல் சோஃபாவில் கயல் அமர வைத்திருக்க, அவரும் பல நாட்கள் கழித்து பக்கத்திலமர்ந்திருந்த தன் இளைய மகனுடன் மனம்விட்டு பேசிக்கொண்டிருந்தார் என்றால், அவர்களின் மீது ஒரு கண்ணும் அங்கு உணவு மேசையில் பாத்திரங்களை அடுக்கிக்கொண்டிருந்த கயலின்மேல் மறுகண்ணையும் பதித்திருந்தார் ரேவதி.
அடிக்கடி தன் கணவரின் சாயலை கயலிடம் உணருபவருக்கு தானாக மனம் அவளை நோக்கிச் செல்கின்றது. ரேவதியின் பார்வை தன் மீது படிவதை கயல் உணராமலில்லை. ஆனால், மனம் உந்தினாலும் திரும்பியும் பார்க்கவில்லை.
அப்போதுதான் ரேவதியை ஓரக்கண்ணால் கவனித்திருந்த யுகனுக்கு அவரின் விழிகளில் தெரிந்த ஏக்கம் புரிய, “அத்தை, இப்போ உங்க பொண்ணு உங்ககூட இருந்தா கண்டிப்பா கயல் மாதிரியே இருந்திருப்பா” சட்டென்றுச் சொல்ல, கயலோ பட்டென்று நிமிர்ந்து யுகனை முறைத்தாள் என்றால், ரேவதிக்கோ நினைவுகளில் விழிகள் கலங்க ஆரம்பித்துவிட்டது.
“யுகா, என்ன இது?” சத்யா அம்மாள் கண்டித்தாலும், ஒரு ஆர்வத்தில் “வயசு மட்டுமில்ல, ஏன் ரேவதி உன் பொண்ணு பெயரு கூட கயல்விழின்னுதானே சொன்ன?” தன் சந்தேகத்தை கேட்டுவிட, அவருக்கு என்ன பதில் சொல்வதென்று கூட தெரியவில்லை.
“உனக்கொன்னு தெரியுமா கயல், ரேவதி ஒரு கிராமத்தாளைதான் காதலிச்சு கல்யாணம் பண்ணா. அப்போ இவங்க அண்ணா, அதாவது என் புருஷனுக்கு பிடிக்கல. அவளா வாழ்க்கைய தேர்ந்தெடுத்து அவர் கூட போயிட்டா. அவங்க கூட எந்த போக்குவரத்தும் இல்லை. ஆனா, மூனு வருஷத்துலயே வாழ்க்கைய தொலைச்சிட்டு இங்க வந்துட்டா. ஆரம்பத்துல பேசாம இருந்த என் புருஷன் கூட தங்கச்சி வாழ்க்கைக்காக பேசிப் பார்த்தாரு. ஆனா, யாரையும் வற்புறுத்தி உறவு தங்க வைக்க முடியாதுன்னு ரேவதியோட புருஷன் சொன்னதும் இந்த பேச்சை விட்டுட்டாங்க. அவ தேர்ந்தெடுத்த வாழ்க்கை, நாங்க என்ன சொல்ல?” இத்தனை வருடமாக இருந்த தன் மனஆதங்களை கொட்டிக்கொண்டே சென்றுவிட்டார் சத்யா.
ரேவதியோ எதுவும் பேசவில்லை. “ஆனா ஒன்னும்மா, அன்னைக்கு அந்த வாழ்க்கைய வாழ முடியாம வந்துட்ட. ஒருநிமிஷம் உன் பொண்ண பத்தி நீ யோசிச்சிருக்கலாம், பெண் குழந்தை ஒரு வரம். நிஜமாவே கயல பார்க்கும் போது எனக்கு அவ நியாபகம்தான் வருது. எப்படி இருக்கா, எங்க இருக்கான்னு அதே யோசனைதான்” சத்யா சொல்லிக்கொண்டே போக, இத்தனைநேரம் கேட்டுக்கொண்டிருந்த கயலோ ஏளனமாக சிரித்துக்கொண்டாள்.
யுகன் பேச்சு வார்த்தை இவ்வாறு செல்லுமென சுத்தமாக எதிர்ப்பார்க்கவில்லை. ரேவதியின் மனநிலையை அறிந்துக்கொள்ளவே அவன் கயலை சாட்டிச் சொன்னது. ஆனால், இத்தனை வருடம் அடக்கி வைத்திருந்த ஆதங்கத்தை இப்படி தன் அம்மா கொட்டித் தீர்ப்பாரென அவனுக்கு தெரியாமல் போய்விட்டது.
ரேவதியின் முகத்தை கவனிக்க, தலை குனிந்திருந்தவரின் முகமோ சிவந்து இறுகிப் போயிருந்தது. அதை கேலியான இதழ் வளைவுடன் நோக்கிய கயல், “அம்மா அப்படின்னா தெய்வத்துக்கு சமம்னு சொல்வாங்க. ஆனா, அந்த வார்த்தைக்கான தகுதி, மதிப்பு எல்லாருக்கும் கிடைச்சிராது. கிடைச்ச வாய்ப்பை தவற விட்ட முட்டாளுங்களும் இருக்கத்தான் செய்றாங்க. என்னோட அம்மா மாதிரி” ரேவதியைப் பார்த்தவாறுச் சொல்ல, “என்ன சொல்ற?” புரியாதுக் கேட்டார் சத்யா அம்மாள்.
யுகனுக்கோ இதயம் படபடக்க ஆரம்பித்துவிட்டது. “அது அம்மா… இப்போ எதுக்கு இதெல்லாம்? பழைய கதையெல்லாம் பேசினா மட்டும் நடந்தது மாறிடுமா என்ன? போதும் நீங்க இருந்தது, ரூமுக்கு போகலாம் வாங்க” யுகன் எழுந்துவிட, விடுவேனா என்ற ரீதியில் இருந்த கயலின் மனம் யுகனின் பார்வைக் கெஞ்சல்கள் எதையும் கண்டுக்கொள்ளவில்லை.
“ஏன் சின்னய்யா இம்புட்டு அவசரம்? கொஞ்சம் பொறுங்க, என் அம்மாவோட வண்டவாளத்தை நான் சொல்ல வேணாமா?” யுகனிடம் கேலியாகச் சொல்லிவிட்டு, “அது என்னன்னா சத்யாம்மா, எனக்கும் அம்மான்னு பெத்தவங்க இருந்தாங்க. எனக்கு இரண்டு வயசா இருக்கும் போதே கிராமத்து வாழ்க்கை பிடிக்காம பெத்த புள்ளைய விட்டுட்டு போயிட்டாங்க. இத்தனைக்கும் என் அப்பாவ காதலிச்சு கல்யாணம் பண்ணவங்க. காதலிக்கும் போது தெரியாதது கல்யாணத்துக்கு அப்றம்தான் தெரிஞ்சிருக்கு. ச்சு ச்சு ச்சு…” கயலின் வார்த்தைகளில் கேலி தெரிந்தாலும், விழிகள் கலங்கிப் போயிருந்தது.
யுகனோ பதட்டத்தில் நெற்றியை நீவி விட்டவாறு ரேவதியை நோக்க, ரேவதியின் மனநிலையை சொல்லவா வேண்டும்? கன்னத்தினூடே வழியும் கண்ணீரை துடைக்கக் கூட மனமின்றி கயலையே அதிர்ந்துப் பார்த்துக்கொண்டிருக்க, சத்யா அம்மாளின் பார்வையும் திகைப்போடு ரேவதியின் முகத்தில் படிந்து கயலிடம் சந்தேகமாகப் படிந்தது.
எச்சிலை விழுங்கிக்கொண்டவர், “உன் அப்பா பெயரு என்ன?” இதயம் படபடக்க அவர் கேட்க, தனதறைக்குச் செல்லவென சென்றுக்கொண்டிருந்தவள், அப்படியே நின்று பக்கவாட்டாகத் திரும்பிப் பார்த்து, “பார்த்திபன்” என்றுவிட்டு ரேவதியை அழுத்தமாகப் பார்த்துவிட்டு நகர, அவ்வளவுதான் முகத்தை மூடி அழ ஆரம்பித்துவிட்டார் ரேவதி.
யுகனோ அவரை சமாதானப்படுத்த முயல, சத்யா அம்மாவுக்கு அதிர்ச்சியிலிருந்து வெளியில் வரவே சில நிமிடங்கள் தேவைப்பட்டது.
ஆனால், இது அத்தனையையும் மாடியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த அபிக்கு அடுத்து நடக்கப் போவது தெரிந்தது போலும்! வேகமாக கயலின் அறையை நோக்கி அவன் செல்ல, அங்கு அவன் நினைத்தது போலவே மூச்சுக்காக திண்டாடிக்கொண்டிருந்தாள் அவள்.
வேகமாக அவளருகேச் சென்றவன், அவளை இழுத்து தன்மேல் சாய்த்து தலையை தடவிக்கொடுக்க, கயலும் கையிலிருந்த இன்ஹலரை அவன்மேல் சாய்ந்த வண்ணமே உபயோகிக்க ஆரம்பித்தாள்.
மெதுவாக ஆசுவாசமடைந்தவள், அவனை விட்டு விலக மனமில்லாது அப்படியே அவனை அணைத்த வண்ணம் இருக்க, அபியும் அவளை விட்டு விலகவில்லை. ஆனால், கயலோ விழிகளை மூடியிருந்தாலும் மனதிற்கும் மூளைக்குமிடையே தத்தளித்துக்கொண்டிருந்தாள்.
அது வீரஜல்ல அபியென மூளை சொல்லி அவளை விலகச் சொல்லி எச்சரிக்க, மனமோ அந்த அணைப்பு அவளுக்கு அப்போது தேவையென உந்திக்கொண்டே இருந்தது. அவளுக்கும் ஏனோ அபியின் இந்த அணைப்பு புதிதல்ல. அதே பழக்கப்பட்ட உணர்வு. மீண்டும் மீண்டும் அவளுக்கு அபியின் அணைப்பு அவளவனை ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தது.
‘இது எப்படி சாத்தியம்?’ மனம் ஒருபக்கம் கேள்வி கேட்டாலும், அவளுடைய கரங்கள் தானாக அபியை தன்னவனாக நினைத்துக்கொண்டு இறுக அணைத்துக்கொள்ள, விழிகளை இறுக மூடிக்கொண்டாள் கயல். அபியும் அவளை தனக்குள் புதைத்த வண்ணம் அவள் நெற்றியில் இதழை ஒற்றிய வண்ணம் விழிகளை மூடி அமர்ந்திருந்தான் அமைதியாக.
சில நிமிடங்கள் இருவரிடத்திலும் அசைவில்லை. ஆனால், முதலில் சுதாகரித்தது என்னவோ கயல்தான். ‘உன்னை தேடி நான் கண்டிப்பா வருவேன் பாப்பா’ என்ற வீரஜின் வார்த்தைகளும் அவனின் விம்பமும் அப்போது சட்டென அவள் மனக்கண் முன் தோன்ற, விழிகளை பட்டென்று திறந்தவள், முகத்திற்கருகேயிருந்த அபியின் முகத்தைப் பார்த்ததும் பதறியடித்துக்கொண்டு விலகியமர்ந்தாள்.
‘பிள்ளையாரப்பா! என்ன காரியத்தை பண்றேன்?’ உள்ளுக்குள் தன்னைத்தானே கடிந்துக்கொண்டவாறு அவள் அவனின் முகத்தைப் பார்க்க, அங்கு அபியின் முகமோ அவளின் விலகலில் சிவந்து இறுகிப்போயிருந்தது. அதைப் பார்த்ததும் விழி விரித்த கயல், இதழை நாவால் ஈரமாக்கியவாறு மெல்ல அங்கிருந்து நகர எத்தனிக்க, அவன் விட்டால்தானே!
வேகமாக அவளின் முழங்கையைப் பிடித்திழுத்தவன், அவளின் தாடையை இறுகப் பற்றி தன் விழிகளுக்கு நேராக அவள் விழிகளை கொண்டு நிறுத்த, பயத்தில் எச்சிலை விழுங்கிக்கொண்டவளுக்கு வாயில் வார்த்தைகள் வரவில்லை.
“என்..என்னை விடுங்க!” கஷ்டப்பட்டு தேடிப்பிடித்து இந்த இரண்டு வார்த்தைகளை அவள் சொல்லி விடுபட முயற்சிக்க, தாடையிலிருந்த தன் கையில் மேலும் அழுத்தத்தைக் கூட்டியவாறு “என்னடி, இவ்வளவு நேரம் என்னை கட்டிப்பிடிச்சிட்டு சும்மாதானே இருந்த, இப்போ மட்டும் தீ சுட்ட மாதிரி விலகி போற?” அடக்கப்பட்ட கோபத்தோடுக் கேட்க, “அது.. அது வந்து…” திக்கித்திணறியவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.
அவனின் அணைப்பில் அவளின் மனநிலையை எப்படி அவனிடம் விபரிப்பாள் அவள்? விபரித்தால் மட்டும் புரிந்துக்கொள்வானா என்ன?
ஆனால், அவள் அறியாத ஒன்று, அவளின் மனதை அவனொருவனைத் தவிர வேறு யாராலும் அறிய முடியாது. அவள் விழிகளையே ஆழ்ந்து நோக்கியவனுக்கு ஏனோ கயலின் விழிகளில் தெரியும் பதட்டத்தையும் அவளின் திணறலும் ஏனோ பிடித்துப் போக, அடுத்து அவனின் பார்வை படிந்தது அவளின் இதழில்தான்.
தாடையிலிருந்த கரத்தை இதழுக்கு மாற்றி இதழைக் குவித்த அபி, “உனக்கு ரொம்பதான்டி தைரியம்! முன்னாடியெல்லாம் உன்னை ஒருத்தர் கஷ்டப்படுத்தினாலும் அவங்க மனச புரிஞ்சி அவங்கள காயப்படுத்த யோசிப்ப, ஆனா இப்போ உன் அம்மாவ அதாவது என் அத்தைய அழுக வச்சிட்டு இங்க வந்து என்னை கட்டிப்பிடிச்சிட்டு இருக்க? நீயும் முன்னாடி மாதிரி இல்லை கயல்” அவளின் இதழைப் பார்த்தவாறே சொல்ல, ‘முன்னாடியெல்லாமா? ஏதோ என் கூட பல வருஷம் பழகின மாதிரி பேசுறாரு’ உள்ளுக்குள் சந்தேகமாக நினைத்துக்கொண்டாள் அவள்.
ஆனாலும், அவனின் வார்த்தைகளில் உண்டான கோபத்தில் “உங்க அம்மா இப்படி பண்ணியிருந்தா உங்களுக்கு புரிஞ்சிருக்கும்” பட்டென்றுச் சொன்னவளுக்கு அப்போதுதான் அவனின் கடந்தகாலம் ஞாபகத்திற்கு வந்தது. விழிகளை அழுந்த மூடிக்கொண்டவள், ஒரு விழியை மட்டும் திறந்து மன்னிப்பு யாசிக்கும் விதமாகப் பார்க்க, அபிக்கோ அவளின் செய்கையில் சிரிப்புதான் வந்தது.
“வாய் கொழுப்பு கூடிப் போயிருச்சு, குறைச்சே ஆகணுமே…” கேலியாகச் சொன்னவாறு அவளிதழை நோக்கி அவன் செல்ல, அதில் அதிர்ந்து விழித்தவள், முகத்தை பட்டென்று திருப்பிக்கொண்டாள். “நான் கல்யாணம் ஆனவ, நீங்க பண்றது கொஞ்சமும் சரியில்லை” அவள் அழுத்தமாகச் சொல்ல, அபிக்கு இப்போது கோபத்திற்கு பதில் சிரிப்புதான் வந்தது.
“பத்தினிதான், இல்லாத புருஷனுக்கு உண்மையாதான் இருக்க” கேலியாகச் சொன்னவாறு எழுந்து வாசற்கதவு வரை சென்றவன், “அவனும் உன்கிட்ட உண்மையா இருந்திருக்கலாம், காலம் கடந்தப்றம் யோசிச்சு பயனில்லை” இறுகிய குரலில் சொல்லிவிட்டுச் செல்ல, விழிகள் கலங்க அப்படியே சிலைப்போல் அமர்ந்திருந்தாள் கயல்விழி.
ஆனால், அடுத்தநாளே அபிமன்யு அவளுக்கு கொடுத்த அதிர்ச்சியில் ஆடிப்போய்விட்டாள் கயல்.