ரகசியம் 14 💚

ரகசியம் 14 💚
அடுத்தநாள் காலை,
கயல் சத்யா அம்மாளின் தலைமுடியை வாரி பின்னலிட்டுக்கொண்டிருக்க, தன்னெதிரேயிருந்த கண்ணாடி வழியாக தெரியும் கயலின் முகத்தையே யோசனையோடு பார்த்திருந்தார் அவர். நேற்று உண்டான ஆச்சரியம் அவருக்கு இன்றும் குறையவில்லை.
“உனக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கு. ஆனா…” அவர் பட்டென்று கேட்க, “ஆனா?” பதிலுக்கு கேள்வி கேட்டவாறு அவள் தன் வேலையிலேயே கண்ணாக இருக்க, அவரின் வார்த்தைகளோ “ஆனா மறைச்சிட்ட, அதாவது நீ இந்த வீட்டு பொண்ணுன்னு” கோபமாக வெளிப்பட்டன.
அதில் விழிகளை மட்டும் உயர்த்தி கண்ணாடி வழியாக அவரைப் பார்த்தவள், மீண்டும் குனிந்து “இங்க வந்த அன்னைக்கு அவங்கள பார்த்ததுமே தெரிஞ்சிருச்சு. ஆனா, பிடிக்கல. சீதாம்மாதான் என்னை இங்க அனுப்பிவிட்டாங்க. என் தனிப்பட்ட பிரச்சினையால அவங்களுக்கு கெட்ட பெயரு உருவாக்க நான் விரும்பல. சொல்லப்போனா, எனக்கு அவங்களோட பொண்ணுன்னு என்னை அடையாளப்படுத்த பிடிக்கல” அழுத்தமாகச் சொல்ல, சத்யா அம்மாளுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.
பக்கவாட்டாகத் திரும்பி அவளைப் பார்த்தவர், “இல்லை கயல், நான் என்ன…” அவளை சமாதானப்படுத்தும் விதமாக ஏதோ சொல்ல வர, அதற்குள் “ஹ்ர்ம் ஹ்ர்ம்…” என்ற செறுமலோடு கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தான் அபிமன்யு.
பெரியவரோ மகனை கேள்வியாக நோக்க, அவன் பாட்டிற்கு உள்ளே வந்தவன், “என் கூட வா!” கயலிடம் சொல்ல, அவளோ ‘ஙே’ என்று அவனை பார்த்தவாறு நின்றிருந்தாள் என்றால், ‘இவன் எதுக்கு இந்த பொண்ண கூப்பிடுறான்?’ புரியாது இருவரையும் விழிகளை விரித்துக்கொண்டு மாறி மாறிப் பார்த்திருந்தார் பெரியவர்.
“நா..நான் எதுக்கு? உங்..உங்க கூட” அவள் ஓரக்கண்ணால் பெரியவரை பார்த்தவாறுத் திணற, ‘ச்சே!’ வாய்விட்டு சலித்துக்கொண்ட அபி, வேகமாக வந்து அவள் கையைப் பிடித்து கதவு வரை தரதரவென இழுத்துச் சென்று, “என் அத்தைப்பொண்ண வெளியில கூட்டிட்டு போறது ஒன்னும் தப்பில்லையே!” இதழுக்குள் சிரிப்பை அடக்கியவாறு பக்கவாட்டாகத் திரும்பி சத்யா அம்மாளிடம் கேட்டுவிட்டு வெளியேறினான்.
ஆனால், பெரியவரின் நிலைதான் பாவம். அபியின் செய்கையில் உண்டான அதிர்ச்சியில் மலங்க மலங்க விழித்துக்கொண்டு அமர்ந்திருந்தார் அவர்.
இங்கு அறையிலிருந்து கயலை இழுத்துக்கொண்டே அபி வாசலை நோக்கிச் செல்ல, அங்கிருந்த வேலைக்காரர்கள் ஆவென வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்றால், அப்போதுதான் மாடியிலிருந்து அலைப்பேசியை நோண்டியவாறு வந்துக்கொண்டிருந்த யுகனுக்கு தூக்கி வாரிப்போட்டது.
அவன் சகோதரனைப் பற்றி அவனுக்கு தெரியாதா என்ன? ‘நிஜமாவே அபி அண்ணாவா இது?’ விழிகளைக் கசக்கி மீண்டும் அவன் நோக்க, வாசல் வரைச் சென்ற அபியோ சட்டென்று நின்று, “சீக்கிரம் வந்து காரை எடு!” பக்கவாட்டாகத் திரும்பி யுகனிடம் சொல்லிவிட்டுச் செல்ல, ‘நானா?’ உள்ளுக்குள் அதிர்ந்துவிட்டான் யுகன்.
வேகமாக வந்தவன், ஓட்டுனர் பக்கத்திலிருந்த இருக்கையில் அமர்ந்திருந்த தன் சகோதரன் தூக்கிப் போட்ட கார் சாவியை சரியாகப் பிடித்து, பின்சீட்டில் அமர்ந்திருந்த கயலிடம் விழிகளாலேயே என்னவென்று கேட்க, அவளோ பாவமாக உதட்டை பிதுக்கினாள்.
“உன்னை காரை எடுக்க சொன்னதா நியாபகம்” அழுத்தமாக அபியின் குரல் ஒலிக்க, பதட்டமாக ஓட்டுனர் இருக்கையில் வந்து அமர்ந்துக்கொண்ட யுகன், “எங்க போகணும் அண்ணா? என்ட், நா..நான் எதுக்கு?” தடுமாறியபடிக் கேட்க, அலைப்பேசியை எடுத்து நோண்ட ஆரம்பித்தான் அபிமன்யு.
அடுத்தநொடியே யுகனின் அலைப்பேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வர, “லொகேஷன் அனுப்பியிருக்கேன், பாரு!” என்று அபி சொன்னதும், அதையெடுத்து பார்த்தவனுக்கு அடுத்த அதிர்ச்சி.
அதிர்ந்த முகத்தோடு கயலை திரும்பிப் பார்த்துவிட்டு, “அண்ணா, அங்..அங்க எதுக்கு?” பதறியபடி யுகன் கேட்க, “போக வேண்டிய நேரம் வந்திருக்கு” இறுகிய குரலில் சொன்னவன், கண்ணாடி வழியாக கயலின் முகத்தை நோக்க, அவளோ முகம் சிவந்து அவனை முறைத்தவாறு அமர்ந்திருந்தாள்.
யுகனும் வண்டியைச் செலுத்த, அதற்குமேல் பொறுக்க முடியாது “சின்னய்யா, எங்க போறோம்னு நீங்களாச்சும் சொல்லுங்க. பெரியய்யா சொல்ல மாட்டேங்குறாரு” கயல் பின்சீட்டிலிருந்து கத்த ஆரம்பிக்க, அவ்வளவுதான். “ஏய்…” என்றொரு அதட்டல் போட்ட அபி, “அதான், மாமாப்பசங்கன்னு தெரியும்ல, அப்றம் என்ன ஐயா கொய்யா, ஒழுங்கு மரியாதையா மாமான்னு கூப்பிடு!” பதிலுக்கு மிரட்ட, யுகனுக்கு அபியின் செய்கையில் ஒருபக்கம் திகைப்பென்றாலும் மறுபக்கம் சிரிப்பு.
அவனின் மிரட்டலில் பற்களை கடித்துக்கொண்டவள், “நான் கல்யாணமானவ, இதை உங்ககிட்ட முன்னாடியே சொல்லியிருக்கேன். நீங்க பண்றது ஒன்னும் சரியில்லை” கோபமாகச் சொல்ல, “சரி இருந்துட்டு போ!” அலட்சியமாகச் சொல்லிவிட்டு கேலியான இதழ் வளைவுடன் மீண்டும் அவளை இமைக்காதுப் பார்க்கும் தன் தொழிலை அபி தொடர, அவளுக்குதான் ‘அய்யோ’ என்றிருந்தது.
சில மணிநேரங்கள் செல்லும் இடம் தெரியாது, கேட்கவும் விரும்பாது ஜன்னல் வழியே வெளியே வேடிக்கைப் பார்த்தவாறு அமர்ந்திருந்த கயல், ஒருகட்டத்தில் தூங்கியே இருக்க, “பாப்பா… பாப்பா…” என்ற அழைப்பில், “வீர்…” என்ற கத்தலோடு விழிகளைத் திறந்தாள்.
யுகனோ, “கயல் என்னாச்சு?” என்று பதற, அபியோ அவள் சொன்ன பெயரில் ‘ச்சே!’ வாய்விட்டு சலித்தவாறு, “உதவாத புருஷன்மேல உனக்கு அம்புட்டு லவ்வா?” என்று எரிச்சலாகக் கேட்க, அவனை உக்கிரமாகப் பார்த்துவிட்டு நெற்றியை நீவி விட்டவாறு வெளியே பார்த்தவளுக்கு விழிகள் சாரசர்போல் விரிந்தன.
கூடவே, அவள் விழிகள் காணும் காட்சியில் கலங்க, கண்ணாடி வழியாக அவளின் முகபாவனையை மர்மப் புன்னகையுடன் பார்த்தவாறு அமர்ந்திருந்தான் அபிமன்யு.
“இது.. இது என்…” அவள் முழுதாக சொல்லிமுடிக்கவில்லை, “உன் ஊரு கயல்” என்ற அபி, யுகனிடம் “மாமா வீட்டுக்கு வண்டிய விடு!” என்க, அவனும் கயலின் சந்தோஷத்தில் கலந்த விழிநீரை புன்னகையோடு பார்த்தவாறு பார்த்திபனின் வீட்டை நோக்கி வண்டியை விட்டான்.
அடுத்த சில நிமிடங்களில் அந்த பாரம்பரிய பெரிய வீட்டின் முன் கார் நிற்க, “அப்போவும் சரி, இப்போவும் சரி இந்த வீட்டுமேல எனக்கொரு கண்ணுப்பா” சோம்பல் முறித்தவாறு சொல்லிக்கொண்டே அபி காரிலிருந்து இறங்க, கயலுக்கோ மனம் சந்தோஷம், தயக்கம், பயம், அழுகை என பல உணர்ச்சிகளின் மத்தியில் அல்லோலப்பட்டுக்கொண்டிருந்தது.
அவளின் பக்கமிருந்த கதவை திறந்துவிட்டு, “மகாராணி கதவை திறந்தாதான் இறங்குவீங்களோ?” கேலித்தொனியில் அபி கேட்க, அவளுக்கோ அவன் பேசுவது எதுவும் காதில் விழவில்லை. அவள் மனம் முழுவதும் பார்த்திபனுடனான நாட்களையும் அவரின் இறுதிநாளில் நடந்த சம்பவத்தையும் நினைவுக் கூர்ந்து குற்றவுணர்ச்சியில் தவித்துக்கொண்டிருந்தது.
ஏனோ அபிக்கும் யுகனுக்கும் அவளின் மனநிலை புரிந்தது போலும். அவளாக சுயநினைவுக்கு வரும் வரை அவளையே பார்த்தவாறு இருவரும் நின்றுக்கொண்டிருக்க, அவளை நடப்புக்கு கொண்டு வர அந்த ஒரு குரல் போதுமானதாக இருந்தது.
“கண்ணம்மா…” என்ற கர்ணாவின் அழைப்பு.
விருட்டென நிமிர்ந்தவள், கலங்கிய முகத்தோடு நின்றிருந்த தன் சித்தப்பாவை பார்த்த அடுத்தநொடி காரிலிருந்து இறங்கி அவரின் காலில் விழுந்து ஒவென்று கதறியழ ஆரம்பிக்க, அவரும் அவளை எழுப்பிவிடவில்லை. அந்த பெரியவரின் விழிகளிலிருந்தும் விழிநீர் வழிய, சிலைபோல் அப்படியே நின்றிருந்தார்.
யுகன்தான் கர்ணாவின் தோளில் கை வைத்து கயலை விழிகளால் காட்ட, தோளிலிருந்த துண்டால் விழிநீரை துடைத்துவிட்டு, கயலை தூக்கி நிறுத்தினார் அவர்.
“அன்னைக்கு சித்தப்பா பேசினது தப்புதான்டா, என்னை மன்னிச்சிடு!” அவர் தழுதழுத்த குரலில் சொல்ல, “அய்யோ! சித்தப்பா, நான்தான் ஆயுசுக்கும் மன்னிப்பு கேக்கணும். மன்னிக்க முடியாத பாவம் அது!” என்று கதறியழுதளின் அழுகையைப் பார்த்து சுற்றியிருந்தவர்களுக்கே பாவமாகிவிட்டது.
அபியின் முகத்திலோ அத்தனை இறுக்கம். கை முஷ்டியை இறுக்கி விறைப்பாக அவன் நின்றிருந்த விதமே உணர்ச்சிகளை அவன் கட்டுப்படுத்துவதை எடுத்துக்காட்டியது.
சரியாக, “கயலு…” என்றொரு குரல். அதைக் கேட்ட மறுநொடி “தேனு…” விழிகளை சுழலவிட்டு அங்குமிங்கும் தன் தோழியை தேடியவளின் பார்வைக்குச் சிக்கினாள் அங்கு ஓரமாக வியர்த்து விறுவிறுத்து நின்றிருந்த தேன்மொழி. கயல் வந்திருக்கும் செய்தியை அறிந்து ஓடி வந்திருப்பாள் போலும்!
கயலோ அவளைப் பார்த்ததும் புன்னகையோடு, “தேனு… தேனு…” என்று அழ ஆரம்பிக்க, கயலை நோக்கி வேகமாக அடியெடுத்து வைத்தவள், தன்னைப் பார்த்ததும் எங்கேயோ பார்ப்பதுபோல் பாவனை செய்தவாறு திருட்டு முழி முழித்துக்கொண்டிருந்த யுகனை முறைப்பாக ஒரு பார்வைப் பார்த்துவிட்டு தன் தோழியை ஓடிச்சென்று அணைத்துக்கொண்டாள்.
இரு பெண்களுமே பிரிவின் துயரை அடுத்த சிலநொடிகள் அழுதே தீர்த்தனர்.
“எம்புட்டு வருஷம்டி உன்னை பார்த்து? அப்போ அப்பா உன்னை பார்க்க வரும்போது நானும் வரேன்னுதான் சொன்னேன். ஆனா அவங்கதான்…” என்றுவிட்டு தேனு தன் தந்தையை முறைக்க, “நீங்க பண்ண காரியத்துக்கு ஒரு வருஷம் வயசு கம்மியா இருந்திருந்தா சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளியில சேர்த்திருப்பாங்க. நாடோடிகள் சசிகுமார் என்ட் கோன்னு நினைப்பு!” யுகன் அவள் காலை வார, விட்டால் அவனை எரித்துவிடுவேன் என்ற ரீதியில் ஒரு பார்வை பார்த்தாள் தேனு.
ஆனாலும் அவள் மனம் அவளை குற்றம் சாட்டத்தான் சேய்தது. அந்த வயதில் தோழிக்கு உதவுகிறேன் பேர்வழியென்று அவளை அனுப்பி வைத்தவளுக்கு பிறகு அவள் வாழ்க்கையைப் பற்றி கேள்விப்பட்டதிலிருந்து குற்றவுணர்ச்சி முள்ளாக இதயத்தை கிழிக்க ஆரம்பித்துவிட்டது.
யுகனின் வார்த்தைகளை கேட்டு, “ஐயா நீங்க…” என்று பரிந்து பேச வந்த கயலை குறிக்கிட்டு, “அவர் சொல்றது சரிதானே கயலு, அன்னைக்கு நான் உன்னை அனுப்பியிருக்க கூடாது. எம்புட்டு பெரிய தப்பு. நான் உன்னை தடுத்திருந்தா உன் வாழ்க்கை இப்படி ஆகியிருக்காது” இறுகிய குரலில் சொன்னவள், “ஆனாலும்…” என்று அபியை பார்த்தவாறு ஏதோ சொல்ல வர, அடுத்தநொடி அபியின் விழிகளில் தெரிந்த எச்சரிக்கை பாவனையில் வாயை மூடிக்கொண்டாள்.
அபியோ விழிகளாலேயே வேண்டாமென்று சொல்ல, அதை ஒருகணம் புரியாதுப் பார்த்தவள், பின் “ஹ்ர்ம் ஹ்ர்ம்…” என்று தொண்டையை செறுமியவாறு, “அது கயலு, ஆனாலும் இப்போ உன்னை நான் பார்த்துட்டேன்ல, ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஏதோ ஒரு இடத்துல இத்தனைநாள் நீ பாதுகாப்பா இருந்திருக்க” என்று எப்படியோ பேச்சை மாற்ற, கயலுக்கு ஏனோ தேனுவின் தடுமாற்றம் ஒருதுளி சந்தேகத்தை உதிக்கத்தான் செய்தது.
ஆனால், அவளை யோசிக்க விடாது கர்ணாவே, “எம்புட்டு நேரம் வெளியில நிக்க போறீங்க? மொதல்ல உள்ள வாங்க” புன்னகையோடுச் சொல்ல, தன் மாளிகை வீட்டை நிமிர்ந்துப் பார்த்தவளுக்கு விழிகள் கலங்கிவிட்டது. எத்தனை வருடங்கள் கழித்து வந்திருக்கின்றாள்?
அன்று பின்வாசல் வழியாக வெளியேறியவள், அப்பாவின் சம்மதத்தை பெற்றதும் முன்வாசல் வழியாக ஆரத்தி வரவேற்புடன் தன்னவனுடன் இந்த வீட்டிற்கு வர வேண்டுமென்று அத்தனை கனவுகளோடு காத்திருந்தாள். ஆனால் நடந்தது மொத்தமும் விதியின் விளையாட்டாகிப் போனது.
இன்று தன்னுடன் இல்லாத தன் தந்தையினதும் தன்னவனினதும் நினைவுகளை சுமந்துக்கொண்டு கயல் பல வருடங்கள் கழித்து வீட்டிற்குள் நுழைய முதல் அடி வைக்கப் போக, அதைத் தடுப்பது போல் ஒரு வலிய கரம் அவள் கரத்தைப் பற்றியது.
கயல் அதிர்ந்து நோக்க, அவள் கையை பற்றியிருந்த அபியோ முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாது அவன் பாட்டிற்கு வலது காலை வைத்து கயலோடு வீட்டிற்குள் நுழைந்தான். அவனின் செய்கையில் அவளுக்கு அதிர்ச்சி என்றால், அதை கண்டும் காணாததும் போலிருந்த கர்ணாவைப் பார்த்ததும் உச்சக்கட்ட அதிர்ச்சி.
‘என்ன நினைச்சிக்கிட்டு இருக்காரு இவரு? ஏதோ புதுசா கல்யாணமான மாப்பிள்ளை, கட்டின பொண்டாட்டி கைய பிடிச்சு மாமியார் வீட்டுக்குள்ள நுழையுற மாதிரி வர்றாரு. அதை சித்தப்பா வேற பார்த்தும் பாக்காத மாதிரி இருக்காரு. எதுவுமே சரியா படல. என்னை சுத்தி எனக்கே தெரியாம ஏதோ இருக்கு’ உள்ளுக்குள் தனக்குத்தானே பேசிக்கொண்டவளின் மனம் அடுத்து ஒருதிசையைப் பார்க்கச் சொல்லி உந்த, சட்டென மனம் சொன்ன திசைக்கு பார்த்தவளின் பார்வையோ சுவற்றில் ஆளுயர புகைப்படமாக இருந்த பார்த்திபனின் முகத்தில் நிலைக்குத்தி நின்றது.
அவளுடைய உதடுகள் அழுகையில் துடிக்க, புகைப்படத்தினருகே சென்ற கயல், தரையில் மண்டியிட்டு அமர்ந்து, “என்னை மன்னிச்சிடுங்கப்பா, உங்கள காயப்படுத்தினதுக்கு கடவுள் ரொம்ப பெரிய தண்டனைய கொடுத்துட்டாரு, ஆனாலும் நான் பண்ண பாவத்துக்கு நீங்க தண்டனை கொடுங்கப்பா, என்கிட்ட வாங்கப்பா” நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கதறியழ, சுற்றியிருந்தவர்களுக்கே விழிகள் கலங்கிவிட்டது.
“கயலு…” அவளை சமாதானப்படுத்த எண்ணி தேனு செல்லப் போக, அவளை தடுத்து நிறுத்தி, “போகாத, அவ அழட்டும்” என்றுவிட்டு தானும் கண்ணீர் விட்டவாறு நின்றிருந்தான் அபி. கயலின் அழுகையை பரிதாபமாக பார்த்த யுகனுக்கு ஏனோ மனதில் ஏகப்பட்ட அதிர்ச்சிகள் ஆச்சரியங்கள், அதுவும் அபியைத் தழுவி.
தன் சகோதரன் தேனுவிடம் விழிகளால் எச்சரிக்கைச் செய்ததிலிருந்து கயலின் கையைப் பிடித்து வீட்டிற்குள் சென்று பின் அவளின் அழுகையில் தானும் கண்ணீர் வடிப்பது வரை பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றான்! ‘இவருக்கும் கயலுக்கும் என்ன சம்மந்தம்?’ அந்த ஒரு கேள்வி அவனுக்குள்.
சில நிமிடங்கள் கயலை மனம்விட்டு அழவிட்டு பார்த்துக்கொண்டிருந்த அபியின் தோளில் கர்ணா கையை வைக்க, ஆழ்ந்த மூச்செடுத்து கயலை நோக்கிச் சென்றவன், அவள் தோளில் கை வைத்ததும்தான் தாமதம், இத்தனைநேரம் ஆறுதலாக அணைப்பிற்கு ஏங்கிய குழந்தைப்போல் அடுத்தநொடி அவன் முகத்தைக் கூட பார்க்காது அவன் மார்பில் புதைந்திருந்தாள் அவள்.
அவனும் அவளை லேசாக அணைத்து தட்டிக்கொடுக்க, சில நிமிடங்கள் கழித்து அழுகையை நிறுத்திய கயலுக்கு, முகத்தை அங்குமிங்கும் புரட்டி அவன் சட்டையை முழுதாக கண்ணீரால் ஈரமாக்கி பிறகுதான் தான் செய்யும் காரியமே புரிய, வெடக்கென்று விலகியமர்ந்தாள்.
அபியோ தோளை குலுக்கிவிட்டு எழுந்துச் செல்ல, சுற்றியிருந்தவர்கள் கண்டும் காணாததுபோல் இருந்தாலும் அவளுக்கு அத்தனை சங்கடம். கூடவே, அவனை அணைத்த போது தான் உணராத வேற்றுமை தன்மையில் ஆச்சரியம்.
ஆனால், அவளை மேலும் சங்கடத்திற்குள் உள்ளாக்காது தேனு கயலிடம் வளவளவென்று இத்தனை வருடங்கள் சேர்த்து வைத்த மொத்தத்தையும் பேச ஆரம்பிக்க, அதில் ஐக்கியமானவளுக்கு கர்ணாவும் ‘கண்ணம்மா கண்ணம்மா’ என்று பேச ஆரம்பித்ததில் தனக்கான இடத்தில் அடைந்த உணர்வு.
இதில் கயலின் வருகை காரணமாக தடல்புடலாக மதிய உணவு வேறு ஏற்பாடு செய்திருக்க, தட்டில் முகத்தைப் புதைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்த அபியை பார்த்தவளுக்கு ‘இவர் நம்ம அத்தைப்பையனா இருக்குறதாலதானோ நம்ம மனசு ஏதோ பல வருஷம் பழகின மாதிரி உணருதோ? இல்லைன்னா, நமக்கு ஏன் அப்படி இருக்கப் போகுது? ஒருவேள, அத்தைப்பையன்னு தெரிஞ்சதாலதான் சித்தப்பா கூட பார்த்துட்டு இருந்தாரோ?’ மனம் கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றது.
அவளின் பார்வையை அவன் உணர்ந்தானோ என்னவோ? விழிகளை மட்டும் உயர்த்தி ஒற்றைப் புருவத்தை தூக்கி என்னவென்று அபி கேட்க, அதில் அதிர்ந்தவள் பார்வையைத் தாழ்த்திக்கொண்டதுதான் நிமிரவே இல்லை.
அன்று மதிய உணவை முடித்தபிறகு யுகன், தனக்குள்ளிருந்த கேள்விகளுடன் கொள்ளைப் புறத்தில் நின்றுக்கொண்டிருக்க, “ஹ்ர்ம் ஹ்ர்ம்…” என்றொரு செறுமல். அதிலேயே அது யாரென அவனுக்கு புரிந்துவிட்டது.
‘அய்யோ இவளா?’ நெற்றியை நீவி விட்டவாறு மெல்ல அவன் திரும்ப, அவன் பார்வை தன் மீது படிந்த அடுத்தநொடி, “நானும் பலதடவை கேட்டுபுட்டேன், நீங்களும் எனக்கு ஒத்து வர்ற மாதிரி தெரியல. கடைசியா கேக்குறேன், என்னை பிடிச்சிருக்கா, இல்லையா?” தாவணி முந்தானையை இடுப்பில் சொருகி மிரட்டும் தோரணையில் கேட்டாள் தேனு.
அவளின் அதிரடியில் எப்போதும்போல் ஆடிப்போய்விட்டான் யுகன்.