ரசவாச்சியே விழி சாச்சியே!

ரசவாச்சியே விழி சாச்சியே!

அத்தியாயம் – 1

“தன்யா… தன்யா வேணும்…” சிறு குழந்தையென அடம்பிடித்துக் கொண்டிருந்தான் ஆரியன்.

“இங்க என்ன சத்தம் ஆர்யன்?” கேட்டபடி மாடியில் இருந்து இறங்கி வந்தாள் ஆராதனா.

“நீ எங்க போன? இவ்ளோ நேரம் உன்னை காணும்?” இருகைகளையும் விரித்துக் காட்டினான் ஆரியன்.

“உன்னை பார்க்காம நான் எங்க போயிட போறேன்? சரி… சாப்டு…” அவனுக்கு தட்டில் இட்டிலியை வைத்து அவனுக்கு பிடித்த புதினா சட்னியை தொட்டுக் கொள்ள வைத்தாள் ஆராதனா.

“நீயும் சாப்டுதன்யா.” என்று இட்டிலியை பிட்டு, சட்டினியில் தொட்டு அவளுக்கு ஊட்டினான் ஆரியன்.

“இந்த கூத்து இன்னும் எத்தனை நாள் நடக்க போகுது ஆண்டவா” கைகளை மேல் நோக்கி வணங்கி அங்கே வந்தார் ஆண்டாள்.

“பாட்டி கொஞ்சம் அமைதியா இருக்கியா?” மெதுவாக சீறினாள் ஆராதனா.

“என் அப்புச்சியை இப்படி பார்க்க தாங்கலடி… ராசா கணக்கா இருந்தானே. அந்த சீமை சிறுக்கி பின்னாடி போய் சித்தம் கலங்கி இருக்கானே என் சாமி!” கலங்கிப் போனார் அவர்.

“அவன் முன்னாடி இப்படி பேசாதன்னு சொல்லிருக்கேன்தானே!” மீண்டும் அடிக்குரலில் சீறினாள் அவள்.

“இன்னும் எத்தனை நாளைக்கு இந்த நாடகம்?” அவளுக்கு மேல் சீறினார் ஆண்டாள்.

“இவனுக்கு சரியாகும் வரை. நீ உன் திருவாயை மூடிட்டு இவனை கூட்டிட்டு போ.” என்றவள், அவனுக்கு கை துடைத்து, மாத்திரையை கொடுத்து அவருடன் அனுப்பி வைத்தாள்.

“தன்யா இன்னைக்கு ஆபிஸ்ல இருந்து சீக்கிரம் வா.” என்ற வேண்டுதலுடன் அறை நோக்கி நகர்ந்தான் ஆரியன்.

அவன் அறைக்கு சென்றதை உறுதிப்படுத்திக் கொண்டவள், தன் முகத்தில் அணிந்திருந்த ரப்பர் முகமூடியை கழட்டி வைத்தவள். டைனிங்க் டேபிள் மேல் இருந்த உணவு பதார்த்தங்களை பார்வையிட்டாள்.

அங்கு இருந்த உணவு வகைகள் அவளுக்கு பிடித்தமானதாக இல்லை. முகத்தை சுழித்தவள்,

“மணி! மணி!” என்ற காட்டு கத்தலில், சமையல் கட்டில் இருந்து ஓடிவந்தார் மணி.

கோபமும், எரிச்சலும் சேர்ந்து மணியை செருக்குறுக்க, “மேடம்” தயக்கமாக அவளை ஏறிட்டார் அவர்.

“பிரேக் பாஸ்ட் எங்க?” சட்டமாக அமர்ந்து கையில் ஒரு ஸ்பூன் கொண்டு டேபிளில் தாளம் போட்டபடி கேட்டாள் ஆராதனா.

அவளின் கேள்விக்கு திருதிருவென விழித்தார் மணி.

இட்லி, வடை புதினா சட்னி, கார சட்னி என அவள் உண்ணும் மூன்று இட்லிக்கு அவர் தொட்டுக் கொள்ள வைத்திருக்கும் இரண்டு சட்னி மிக மிக அதிகமே! இதை அவளிடம் கூறிவிட்டு, அங்கு அவர் வேலைப் பார்க்கமுடியுமா என்ன? வாயை இறுக்க மூடிக் கொண்டார்.

“என்ன?” ஸ்பூனை வேகமாய் தட்டி அவரிடம் கேட்க,

சுதாரித்த மணி, “இதோ எடுத்துட்டு வாரேன் மேடம்” என சமையல் கட்டை நோக்கி ஓடினார்.

‘நீ என்னத்தை எடுத்துட்டு வாரேன்னு நானும் பாக்குறேன்யா’ கேலியாக அவரை பார்த்தாள் அவரது மனைவி கனகு.

ஆரியனை சமாளிக்க முடியாமல் கனகு திண்டாடிக் கொண்டிருப்பதை கண்டு, கேலியாக சிரித்து வேடிக்கைப் பார்த்ததின் பலன்தான் இந்த வன்மம்.

அவள் ஒன்றும் அப்படி பார்த்து பார்த்து சாப்பிடும் ரகமல்ல. இட்லி என்றால் சாம்பார் தவிர வேறு எதுவும் அவளுக்கு இறங்காது. இன்று காலையில் ஆரியன் செய்த குளறுபடியில் அவர் சாம்பாரை மறந்து விட்டிருந்தார்.

“நான் இவங்களை வேலைக்கு வச்சிருக்கேனா? இல்ல அவங்க என்னை வேலைக்கு வச்சிருக்காங்களா? ஒண்ணும் தெரியல எல்லாம் இந்த டாடி குடுக்கிற இடம்” வெளியில் நின்ற கனகு காதில் விழ வேண்டும் என்று சத்தமாகவே முணுமுணுத்தாள்.

“குட் மார்னிங் ஆரா” புன்னகை முகமாக அவள் முன் வந்தமர்ந்தார் அசோகன்.

கோவை நகரின் அசோகா நிறுவனத்தின் முதலாளி. அசோகா நிறுவனத்தின் கீழ், காட்டன் மில் மற்றும் கார்மெண்ட்ஸ் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

முதலாளி அசோகனுக்கு மிகவும் பரந்த மனது. அதே போல் அவரது தொழிலும் பரந்து விரிந்து காணப்பட்டது. இவருக்கு இரண்டு மக்கள்.

மூத்தவன் ஆரியன், இளையவள் ஆராதனா. மூத்தவன் அமைதி என்றால் இளையவள் அடாவடி.

அன்பு, பாசம், நேசம் எல்லாம் ஒருங்கே அமைய பெற்றவன் ஆரியன். சில மாதங்களுக்கு முன் நடந்த விபத்தில் சித்தம் கலங்கி தன்னை இழந்தவன்.

ஆராதனா பெயருக்கேற்ற போல் ஆராதிக்கும் அழகு முகமும், ஆளுமையும் நிறைந்தவள்.

கோபம், அகங்காரம், ஆணவம் எல்லாம் ஒருங்கே அமைய பெற்றவள். இப்பொழுதான் படிப்பை முடித்துவிட்டு தமையனுக்கு பதிலாக தொழிலை கையில் எடுத்திருக்கிறாள்.

வியாபார நுணுக்கம் அறிந்து தொழிலாளர்களை சரியாக கணித்து வைத்திருப்பவர் அசோகன். சிநேகமாய் ஒரு புன்னகையால் ஊழியர்களை தன்வசபடுத்தி வைத்திருப்பவர்.

ஊழியர்களின் குடும்ப விவரம் வரை தெரிந்து, ஞாபகத்தில் வைத்திருப்பவர்.

‘என்ன சாமி. உன் பொண்ணு படிப்பு எப்படி போகுது. பணம் ஏதும் வேணும்னா தயங்காம கேளு.’ என்ற அவரின் ஒற்றை வார்த்தையில் ஊழியர்களின் மனம் குளிரும்.

திடீரென்று மில்லுக்கு வருவார், ஊழியர்களுடன் அமர்ந்திருந்து பஞ்சை ஆராய்வார். சில சமயம் அவர்களுடன் அமர்ந்திருந்து, அவர்கள் உணவை வாங்கி உண்பார். இப்படியான அவரின் செயலில் ஊழியர்கள் தங்கள் வேகம் எல்லாம் வேலையில் காட்டுவார்கள்.

யாரை எப்படி அணுக வேண்டும் என்ற அறிவுகூர்மை அவரிடம் அதிகமாகவே உண்டு.

தனது காலை வணக்கத்துக்கு பதில் கூறாமல், முறைத்துக் கொண்டிருந்த செல்ல மகளை ஏறிட்டுப் பார்த்தார் அசோகன்.

தங்க தகட்டால் வடிவமைக்கப்பட்ட தங்க சிலை போல் ஜொலிப்பான முகம், தாறுமாறாக வெட்டப்பட்ட கூந்தல் முதுகில் பரவிக் கிடந்தது. வட்ட முகம், திருத்தப்பட்ட புருவம் என்று அத்தனை அழகாக இருந்தாள்.

ஒரு சாதாரண வியாபாரியாக இருந்தவரை கோடிஸ்வரனாய் மாற்றியது அவரது செல்ல மகளின் பிறப்புதான்.

மகள் பிறந்த சில நாட்களில் மனைவி மறைய, மகளை காரணம் காட்டினர் உறவினர்கள். அது அவருக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்த ஜோசியரை அணுகினார் அசோகன்.

‘இரண்டாவது பிறந்த செல்ல மகளின் அதிர்ஷ்டத்தால்தான் நீ கோடிகளை காணப் போகிறாய். உன் மகள் உன் அருகில் இருக்கும் வரை எல்லாம் கை கூடும். அந்த மஹாலக்ஷ்மியே செல்வப் பானையுடன் உனக்கு மகளாக பிறந்திருக்கிறாள்.’ என ஜோசியர் கூற அன்றில் இருந்து இன்று வரை அந்த செல்வப் பானையை இறக்கி வைக்கவில்லை அந்த மஹாலக்ஷ்மி.

அன்றில் இருந்து அந்த வீட்டில் அவள் வைத்ததுதான் சட்டம் என்பது போல் மாறிப் போனது. ஆரியன் தங்கை என்ன சொன்னாலும் அப்படியே கேட்கும் பழக்கம் உள்ளவன். மிகவும் நல்லவன்.

ஆனால் ஆராதனா அப்படி இல்லை. உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை கர்வம் கொண்டவள். அப்பாவின் செல்ல மகள். பாட்டி ஆண்டாளின் செல்ல சிங்காரி.

இதெல்லாம் அவளை ஆணவக்காரியாய் மாற்றியிருந்தது. என்னதான் ஆணவக்காரியாய் இருந்தாலும், வீட்டில் உள்ளவர்களுக்காய் உயிரையும் விடும் பாசக்காரி.

தன் அண்ணனின் காதலி, அவனை இந்த நிலமையில் விட்டு செல்ல, அவளை மட்டுமே நினைவில் சுமந்து அறியா சிறுவனாய் தனித்து நிற்கும் அவனுக்காய், அவன் காதலியின் உருவ முகமூடியை அணிந்து அவனை மகிழ்விக்கிறாள்.

தன் அண்ணனை, இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை அழிக்கும் வரை இவள் ஓயமாட்டாள். இது அவள் மட்டும் அறிந்த உண்மை!

“என்னாச்சு ஆரா?” மகளது முகத்தில் வெடித்த கடுகு அவர் மேல் பட்டு தெறிக்கவும், அவளை பார்த்து கேட்டார் அசோகன்.

“பின்ன என்ன டாட். இவங்க பண்ணுறது சரியா?”

“யாரை சொல்லுறம்மா பாட்டியையா?” என்றார் கேலியாய்.

மகளின் மரியாதை வார்த்தை, ‘இவங்க’ என்பதில் கொஞ்சம் அதிசயித்துப் போனார்.

“அதான பார்த்தேன். ஏன் எல்லாரும் இப்படி இருக்காங்கன்னு. எல்லாம் நீங்க குடுக்கிற இடம்.” முறைக்க,

“மேடம்” என்றபடி வந்து நின்றான் மணி.

“என்ன?” இவள் கடுகடுக்க,

“இட்லி, சாம்பார்”

“அப்படியே என் தலையில கொட்டு, வச்சுட்டு போகாம ஏன் இப்படி நிக்குற” முறைக்க, டேபிள் மேல் வைத்தவன் விட்டால் போதும் என்று ஓடிப் போனான்.

அவளிடம் சொல்லாமல் வைத்தால், ‘என்ன நாய்க்கு சோறு போடுறியா?’ என்ற வார்த்தை அவளிடம் இருந்து பறந்து வரும் என்று பயந்துதான், அவளை அழைத்தான்.

அழைத்ததுக்கு தனி திட்டு, ‘மேடத்தை எந்த லிஸ்ட்ல எப்போ எப்படி சேர்க்கணும்னே தெரியல முருகேசா’ புலம்பிக் கொண்டு சென்றான் மணி.

“என்னாச்சு ஆரா?” மகளது கோப முகத்தைப் பார்த்துக் கேட்டார் அசோகன்.

“ஒண்ணும் இல்லை டாடி. இன்னைக்கு மில்லுக்கு போகணும்னு நினைச்சேன். ஆனா பாருங்க லேட் ஆகிட்டு.” புலம்பியபடி வேக வேகமாய் இட்லியை உள்ளே அடைத்தாள்.

“இன்னைக்கு இல்லனா நாளைக்குக்கூட போகலாம் ஆரா.”

“இல்லப்பா நாளைக்கு கார்மெண்ட்ஸ் போகணும்”

“அங்க நான் பாத்துக்கிறேன்”

“மில் போய் ரெண்டு மாசம் மேல ஆகுதுப்பா. உங்களை பார்த்தா யாரும் வேலை பார்க்கமாட்டாங்க.” என்றாள் கடுப்பாய்.

“ஓஹோ… வீட்டுல யாரும் ஒழுங்கா வேலை செய்யலையா?” என்றார் புன்சிரிப்புடன்.

“தெரிஞ்சா சரிதான்.” என்றவள், கை கழுவி, அவரிடம் விடைப்பெற்று வெளியேச் சென்றாள்.

செல்லும் அவளையே பார்த்தவர், தானும் எழுந்துக் கொண்டார்.

“சாப்டியாடா?” ஹால் ஷோபாவில் அமர்ந்திருந்த ஆண்டாள் வினவ,

“ஆமாம்மா. ஆரியன் தூங்கிட்டானா?”

“ஆமாடா தூங்குறான். இப்படியே எப்பவும் தூங்க வைக்கிறது நல்லாவா இருக்குது. அவனை வெளிய எங்கையாவது கூட்டிட்டு போ அசோகா.”

“எங்க கூட்டிட்டு போக சொல்லுற. அவன் வெளிநாட்டுல படிக்க போயிருக்கான்னு எல்லாரும் நம்பிக்கிட்டு இருக்காங்க. இப்போ இவனை இப்படி வெளிய கூட்டிட்டு போக சொல்லுற?”

“வேற என்னதான் பண்ண போற?”

“ஏதாவது பண்ணுறேன்மா. அவனை நீ நல்லா பார்த்துக்கோ. சீக்கிரம் ஒரு நல்ல வழி பிறக்கும்… பிறக்கணும்” என்று அவருக்கும், தனக்குமாக சொல்லியவர் ஆரியனை பார்க்க சென்றார்.

எந்த சிந்தனையும் இல்லாமல் குழந்தையாக ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் ஆரியன்.

அவனைக் காணும்பொழுதெல்லாம் மிகவும் மனம் வலிக்கும் அவருக்கு. பெரும்பாலும் அவன் விழித்திருக்கும் சமயம் அவனை பார்க்கமாட்டார். அவன் தனையறியாமல் சில சமயம் செய்யும் செயல்கள் இவருக்கு ரத்த கண்ணீரை வரவைக்கும்.

மெலிந்து போய் இருந்த மகனின் முகத்தை வருடியவர், நெற்றியில் ஆழ்ந்த முத்தம் ஒன்றை வைக்க, “தன்யா ” என்றபடி புரண்டு படுத்தான் மகன்.

அந்த பெயரில் முகம் ரத்தமென சிவக்க, அறையை விட்டு வேகமாய் வெளியே வந்தார் அசோகன்.

“என்னாச்சுடா?” வேகமாய் வெளியே வந்ததைப் பார்த்து கேட்டார் ஆண்டாள்.

“ஒன்னும் இல்லம்மா.” என்றபடி வெளியே செல்ல, மகள் கார் இவருக்காய் நின்றிருந்தது. முகத்தை சாதரணமாய் மாற்றியவர் அவளை நோக்கிச் சென்றார்.

“அவனை எங்கே?” காரில் டிரைவர் இல்லாததை பார்த்துக் கேட்டார் அசோகன்.

“அவனை நான் இப்போதைக்கு வீட்டுக்கு அனுப்பிட்டேன்.”

“ஏன்?” என்றார் எப்பொழுதும் போல் சிரிப்புடன்.

“எங்க போகணும்னு கேட்பான். அப்புறம் டயர்ல காத்து இருக்கான்னு பார்த்துட்டு வாரேன் மேடம்னு இறங்கி போய் அங்க மில்லுல வேலை செய்றவங்களுக்கு, மேடம் இன்னைக்கு அங்கதான் வாராங்கன்னு ஃபோன் போட்டு சொல்லுவான். உடனே அவனுங்களும் வேலை செய்யுற மாதிரி நடிப்பான்க. அதுதான் இன்னைக்கு அவனை வர வேணாம்னு சொல்லிட்டேன்.”

“சரி. நகரு நான் ஓட்டுறேன்.”

“இல்ல… நான் ஓட்றேன்.” என்றவள் காரை ஸ்டார்ட் செய்ய, முன்னால் ஏறி அமர்ந்தார் அவர்.

“அந்த பொண்ணு பத்தி ஏதாவது தெரிஞ்சதா டாடி.”

“எந்த பொண்ணு?”

“அதுதான்ப்பா நம்ம ஆரி தன்யா… தன்யான்னு சொல்லுறான்ல அந்த பொண்ணுதான்.”

“அது பத்தி இப்போ என்ன பேச்சு.”

“என்ன டாடி இப்படி சொல்லுறீங்க. அவன் எப்படி இருக்கான்னு பார்த்தீங்கதானே?” முறைக்க,

“விடு… எல்லாம் சரியாகும்”

“நீங்க இப்படி இருக்கதினாலதான் அவன் இப்படி இருக்கான்.” முறைத்தவள் கையில் கார் வேகமெடுத்தது.

‘அவ எங்க இருந்தாலும் சும்மா விடமாட்டேன்.’ இருவர் மனதும் விளம்பிற்று.

                                              ***

ஊழியர்கள் பேக்கிங் பகுதியில் மும்முரமாக வேலைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பேக்கிங் முடிய முடிய, குடோனில் கொண்டு சேர்த்தனர் மற்றவர்கள். அப்பொழுது வாசலில் பெரும் பரபரப்பு.

“யார்?” என ஒருவரை ஒருவர் பார்த்திருந்தனர்.

அசோகன் வந்தால், இத்தனை பரபரப்பு இருக்காது என்பதால், எல்லார் முகமும், ‘வந்திருப்பது யார்?’ என்ற யோசனையுடன் வாசலைப் பார்ப்பதும், வேலையை செய்வதுமாக இருந்தனர்.

“அசோகைய்யா கார் வந்திருக்கு.” யாரோ கூறிக் கொண்டிருந்தனர். எதையும் காதில் வாங்காமல், பேக்கிங் வேலையை சரிபார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

காரை விட்டு இறங்கிய அசோகன், அங்கு நின்றிருந்த ஊழியர்களுடன் பேசியபடியே நடக்க, அவரை விட்டு விரைந்து முன்னால் நடந்தாள் ஆராதனா.

வேகமாய் உள்ளே வாசலில் நின்றவள் அங்கிருந்தவர்களை பார்வையால் ஆராய்ந்தாள்.

“மேடம் வந்திருக்காங்க.” அவன் அருகே யாரோ கூற, பார்வையை அவளை நோக்கி திருப்பினான்.

அதே நேரம், அவளும் அவனைத்தான் பார்த்தபடி வந்துக் கொண்டிருந்தாள். ‘புதுசா இருக்கானே. இவனை எங்கையோ பார்த்திருக்கேன்?’ என்ற எண்ணம் மனதில் ஓடியது.

அதேநேரம், ‘ஆஃப்டர்ஆல் ஒரு வேலைக்காரன். இவனை இவ்ளோநேரம் இப்படி பார்த்ததே அதிகம்.’ என்ற எண்ணம் மனதில் உதிக்க, உதட்டில் கேலிப் புன்னகையுடன், அவனை ஒரு பார்வை பார்த்துச் சென்றாள்.

செல்லும் அவளைத்தான் உக்ரமாக, ஆங்காரமாக பார்த்துக் கொண்டிருந்தான் இல்லை சுட்டெரித்துக் கொண்டிருந்தான் அவன்.

சைத்தன் உமேரா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!