லவ் ஆர் ஹேட் 07

eiIY7PM94780-bec72ddb

லவ் ஆர் ஹேட் 07

“மாமா, நான் எப்படி இருக்கேன்.” என்று தலையில் மல்லிகை சரம் சூடி, அரக்கு நிற புடைவையிலிருந்த ரித்வி மஹாதேவனிடம் உற்சாகமாக கேட்க, இதழ் முழுக்க புன்னகையுடன், “ரொம்ப ரொம்ப அழகா இருக்க ரித்விமா.” என்றவர் அங்கிருந்த சகுந்தலாவிடம், “வந்ததும் புள்ளைக்கு சுத்தி போடு சகு, இன்னைக்கு ஊர் கண்ணு பூரா ரித்விமா மேல தான் இருக்கும்.” என்று சொன்னார்.

அவளோ தன் மூக்குக்கண்ணாடியை சரிசெய்தவாறு வெட்கப்பட்டு தலைகுனிந்து சிரிக்க, ‘க்கும்! ஊருல இருக்குற கண்ணு என்ன நொள்ள கண்ணா, இவள போய் பார்க்க? இதுல நம்மள போய் சுத்தி போட சொல்றாரு.’  என்று நொடிந்துக் கொண்டவாறு சகுந்தலா அங்கிருந்து நகர, வீட்டிலிருந்து வெளியேற எத்தனித்த ரித்வியை தடுத்தது மஹாதேவனின் குரல்.

“ரித்விமா, எப்படி போற? பசங்க யாரையாச்சும் துணைக்கு கூட்டிட்டு போ ம்மா!” என்று அவர் சொல்ல, “இல்லை மாமா, அதி வீட்டுக்கே வரல. சந்து, இந்து ஏதோ வேலை விஷயமா டவுனுக்கு போயிருக்காங்க. நான் ஆட்டோ பிடிச்சி போயிக்கிறேன்.” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வெளியே செல்வதற்காக தயாராகி மாடிப்படிகளில் வந்துக் கொண்டிருந்தான் யாதவ்.

ஒரு கையால் அலைப்பேசியை நோண்டியவாறு மறுகையால் நெற்றியில் புரண்ட முடிகளை வாரி தலையை கோதிக்கொண்டு அவன் இறங்கி வர, அவனைப் பார்த்தவளுக்கோ எப்போதும் போல் அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற உணர்வு!

அவன் முன் புடவையில் நிற்கிறாள்! அவனின் பார்வை தன் மீது விழாதா? என்ற ஏக்கம் வேறு அவளுக்கு!

ஓரக்கண்ணால் ரித்வி யாதவ்வை பார்க்க, அவனோ அவளை ஏறெடுத்தும் பார்க்காது வீட்டிலிருந்து வெளியேற போக, “கார்த்தி…” என்ற மஹாதேவனின் அழைப்பில் சற்று நின்று திரும்பி பார்த்தான்.

அப்போது தான் அவனுக்கு அங்கு நின்றிருந்த ரித்வி கண்களில் சிக்க, அவளை மேலிருந்து கீழ் ஒரு பார்வை பார்த்தவன் முகத்தில் எந்த உணர்ச்சிகளையும் காட்டாது மஹாதேவனை கேள்வியாக நோக்கினான்.

அவரோ ஒரு சிறு தயக்கத்துடனே, “கார்த்தி, இன்னைக்கு ரித்வி கூட படிச்ச புள்ளைக்கு நிச்சயதார்த்தம். புள்ளைய தனியா அனுப்ப பயமா இருக்கு. அந்த தேவகி வீட்டு பையன் கொஞ்சநாளா ரித்விமா பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கான். விஷேஷத்துக்கு அவனும் வர வாய்ப்பிருக்கு. நீ வேணா…” என்று கேட்க வர,

அதற்குள் அவனே, “சீக்கிரம், வெளில வெயிட் பண்றேன்.”  என்றுவிட்டு வெளியேறி இருக்க, மஹாதேவனுக்கு அதிர்ச்சியோ, இல்லையோ? ரித்விக்கு தான் அதிர்ச்சியுடன் கூடிய பயம், பதட்டம், வெட்கம் எல்லாம்…

“இல்லை மாமா, நான் தனியா…” என்று அவள் திக்கித்திணறி சொல்ல வர, அவர் கேட்டால் தானே! அவரின் மனதின் ஆசையும் அது தானே! எப்படியோ பேசி, மிரட்டி அவளை யாதவ்வுடன் செல்ல அனுப்பி வைக்க, இவளுக்கு தான் அவன் பக்கத்தில் செல்வதற்கே கைகால்கள் நடுங்கிவிட்டது. அதுவும், அவன் பைக்கில் தயாராக அமர்ந்திருப்பதை பார்த்ததும் உச்சக்கட்ட அதிர்ச்சியாகிப் போனது அவளுக்கு!

பக்கத்தில் சென்று நின்றவள் என்ன செய்வது? ஏது செய்வது? என்று தெரியாது பெக்க பெக்கவென முழித்துக்கொண்டு நிற்க, இதில் அவள் கட்டியிருந்த புடவை வேறு அவளுக்கு அத்தனை அவஸ்தையாகிப் போனது.

சற்று நேரம் காத்திருந்தவன் ஒரு கட்டத்தில் முடியாமல், “தூக்கி பின்னாடி உட்கார வைக்கனுமா என்ன?” என்று திரும்பாது நேரே பார்த்தவாறு கேட்க, அதில் அதிர்ந்து விழித்தவள், “இல்லை, அது… எப்படி?” என்று திக்கித்திணற ஆரம்பித்தாள்.

கொடுப்புக்குள் சிரித்தவன், “என் தோளை பிடிச்சி வண்டியில ஏறு!” என்று சொல்ல, அவளுக்கோ வெட்கம் பிடுங்கி தின்றது. பதட்டத்தில் மூக்கிலிருந்து இறங்கிய மூக்குக்கண்ணாடியை ஏற்றி விட்டுக் கொண்டிருந்தவளுக்கு கைகால்கள் பயத்தில் உறைந்த நிலை தான்.

மெதுவாக அவன் தோள் பற்றி வண்டியின் பின்னால் அவள் ஏறி அமர, கண்ணாடி வழியாக அவளைப் பார்த்தவன் அடக்கப்பட்ட சிரிப்புடன் வண்டியை உயிர்ப்பித்து செலுத்த, அவன் சென்ற வேகத்தில் அவன் தோளை இறுகப்பற்றவும் முடியாமல், கைகளை விலக்கவும் முடியாமல் சிரமப்பட்டது ரித்வி தான்.

யாதவ் வண்டியை நிறுத்தியதும், ‘ஹப்பாடா! வந்தாச்சி. ஓடிரு ரித்வி!’ என்று தனக்குள் நினைத்தவாறு வண்டியிலிருந்து இறங்கி புடவையை சரிசெய்தவாறு நிமிர்ந்து பார்த்தவள், அங்கு நின்றிருந்த ஆரனையும் அவனின் மாமா மகள்கள் உத்ரா மற்றும் தாராவை பார்த்து உற்சாகத்துடன் ஒரு அடி முன்னே வைத்து, “ஆரா…” என்று அழைத்தவாறு செல்ல போக, அப்போது தான் யாதவ் இருப்பதே அவளின் மூளைக்கு உரைத்தது.

சட்டென திரும்பி அவள் யாதவ்வை பார்க்க, அவனோ அங்கு நின்றிருந்த ஆரனை தான் முறைத்துக்கொண்டு நின்றிருந்தான். ஆரனோ அவனின் முறைப்பை கண்டும் காணாது தன்னை பார்த்து உற்சாகமான ரித்வியை பார்த்து புன்னகைத்தான். உத்ராவும் ரித்விக்கு கையசைத்துவிட்டு மண்டபத்திற்குள் நுழைய, தாரா தான் ரித்வி மீதான ஆரனின் பார்வையை பார்த்து பொங்கிவிட்டாள்.

‘என்ன… நம்ம அத்தான் பார்வையே சரியில்லையே…’ என்று நினைத்தவள் ஆரனை சுரண்டி, “வீட்டுக்கு வாங்க, பாட்டிக்கிட்ட போட்டு கொடுக்குறேன்.” என்று பல்லைக்கடித்துக்கொண்டு சொன்னாள். அவனோ திரும்பி ஒற்றை புருவத்தை தூக்கி அவளை முறைக்க, ‘க்கும்!’ என்று நொடிந்துக் கொண்டவள், ‘நம்மள பார்த்தா எல்லாம் பொண்ணா தெரியல்லையா?’ என்று வாய்விட்டு முணங்கியவாறு அங்கிருந்து நகர்ந்தாள்.

யாதவ்வோ ஆரனின் பார்வையை தான் கவனித்துக்கொண்டு இருந்தான். அவனுக்குள் அத்தனை ஆத்திரம்! ரித்தியோ யாதவ்வை பார்த்துவிட்டு விட்டால் போதுமென்று விறுவிறுவென அங்கிருந்து நகர, வேகமாக வந்து அவளின் கைகளை யாதவ் பற்றியதும் அவளுக்கோ அத்தனை அதிர்ச்சி!

அதிர்ந்து அவனை நோக்கியவள் அவன் கையையும், அவனையும் மாறி மாறி பார்க்க, அவனோ சாதாரணமாக, “நானும் உள்ள வரலாம் தானே?” என்று மென்மையாக கேட்டவாறு மண்டபத்திற்குள் நுழைய, ரித்விக்கு தான் ‘பிரம்மையோ?’ என்றிருந்தது.

இதில் அவளின் புடவை வேறு சதி செய்ய, தடுமாறி விழச்சென்றவளின் இடையை வளைத்து யாதவ் தாங்கி நேரே நிற்க வைக்க, அவளுக்கு தான் வாயில் வார்த்தைகளே வரவில்லை. படபடக்கும் விழிகளுடன் அவள் அவனையே பார்த்திருக்க, “பார்த்து மெதுவா…” என்றுவிட்டு உள்ளே அவன் நுழைய, இது அத்தனையும் பார்த்திருந்த ஆரன் தான் கோபமாக காலை ஜீப்பின் கதவில் உதைத்தான்.

மண்டபத்தினுள் கால் மேல் கால் போட்டவாறு யாதவ் அமர்ந்திருக்க, அங்கு தன் தோழிகளோடு இருந்தவளின் பார்வையோ அடிக்கடி தன்னவனின் மேல் தான் படிந்தது. ஏன் யாதவ்வின் பார்வையும் கூட…

‘என்னாச்சு இவருக்கு? இவருக்கு அவ்வளவு மென்மையா பேச கூட தெரியுமா? இப்போ கூட பார்த்துக்கிட்டு இருக்காரே…’ என்று ரித்வி யோசித்தவாறு அடிக்கடி யாதவ்வை நோக்க, அவளை கவனித்த அவளின் தோழிகளோ கேலி செய்தே அவளை வெட்கப்பட  வைத்தனர்.

சற்று நேரம் அவளை கவனித்துக் கொண்டிருந்தவனுக்கு நண்பர்களுடன் நின்றிருந்த ஆரன் தென்பட, அவனை கேலியாக ஒரு பார்வை பார்த்துவிட்டு ரித்வியை அருகே அழைத்தான்.

அவளோ அவன் அழைத்ததும் பதறிக்கொண்டு அவன் பக்கத்தில் வந்து நிற்க, அவளை இழுத்து தன் பக்கத்திலிருந்த இருக்கையில் அமர வைத்த யாதவ், “ஆமா, உன் பேரு ரித்வி ரைட்?” என்று கேட்க, ‘ம்ம்.’ என்று தலையசைத்தவளுக்கு அவனின் கூரிய விழிகளை பார்பப்பதில் அத்தனை சிரமம்!

“ஆமா… என்ன படிச்சிருக்க?” என்று அவன் கேட்க, “அது… எம்எஸ்சீ கம்ப்யூட்டர் சயன்ஸ்.” என்று ரித்வி நேர்முகத்தேர்வுக்கு பதில் சொல்வது போல் ஒருவித பதட்டத்துடன் சொல்ல, “ஓஹோ!” என்று அவளை மேலிருந்து கீழ் ஒரு பார்வை பார்த்தவன் அவளின் மூக்குக்கண்ணாடியை சரிசெய்தவாறு, “ரொம்ப அழகா இருக்க.” என்று சொன்னான்.

“தேங்க்ஸ்.” என்று மெதுவாக சொன்னவளுக்கு கன்னங்கள் குப்பென்று சிவந்து போனது. அவளின் முகபாவனைகளில் முட்டிக்கொண்டு வந்த சிரிப்பை அடக்கியவன் சற்றும் யோசிக்கவில்லை. தான் ஒரு பெண்ணின் உணர்வுகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்று…

யாதவ்வின் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருந்த ஆரனுக்கு கோபத்தோடு சேர்த்து குழப்பமும் சூழ்ந்துக் கொண்டது.

அதன்பிறகு வந்த நாட்கள் ரித்வியை யாதவ் அடிக்கடி பார்ப்பதும், புன்னகைப்பதுமாக இருக்க, ரித்விக்கு தான் வெட்கம், படபடப்பு, சங்கடம் என உணர்ச்சிகள் முட்டி மோதின.

அதுவும், யாதவ்வின் பார்வை தன் மேல் விழும் போது இவள் பார்வையை திருப்புவதும், அவன் பார்க்காத போது இவள் அவனை பார்ப்பதுமாக இருக்க, இதை மற்ற நான்கு இளசுகளும் கவனித்துக் கொண்டு தான் இருந்தனர்.

அன்றொரு நாள்,

தன்னவனையே நினைத்தவாறு ரித்வி மாடித் தோட்டத்தில் பூச்செடிகளுக்கு நீர் ஊற்றிக் கொண்டிருக்க, துள்ளி குதித்து, “சோடாபுட்டி…” என்று கத்தியவாறு ரித்வியிடம் ஓடி வந்தான் இந்திரன். ரித்வியின் முன் வந்து மூச்சுவாங்கியவாறு நின்றவன், “டொன்டொடொய்ன்…” என்று தற்போது வெளியான புதிய திரைப்படத்திற்கான நுழைச்சீட்டை ஆட்டி ஆட்டி காட்ட, அதைப் பார்த்தவளுக்கோ சற்றும் உற்சாகம் இல்லை.

அவளின் முகத்தில் எதையோ தேடி கிடைக்காது ஏமாற்றமடைந்தவன், “என்னாச்சு சோடாபுட்டி?” என்று புரியாது கேட்க, “இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்க போறோம் இந்திரா? இது தான் வாழ்க்கையா? போலியான கேலிக்கைகளும், விளையாட்டுக்களும். இப்போவாச்சும் திருந்துவோம். மாமா நம்ம நல்லதுக்கு தானே சொல்றாங்க. நமக்கும் வயசாகிகிட்டே போகுது. நாம பல பேருக்கு நல்ல முன்மாதிரியா இருக்க வேணாமா?” என்று ஏதேதோ தீவிரமாக பேசிக்கொண்டே போக, இந்திரன் தான் ‘ஙே’ என பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளின் நெற்றி, கழுத்தை புறங்கையால் தொட்டுப் பார்த்தவன், “நல்லா தானே இருக்க. உடம்புக்கு எதுவும் இல்லை தானே? ஒருவேள, டப்பா கிப்பா ஏதாச்சும் தலையில விழுந்திருச்சா?” என்று அவளின் தலையை ஆராய, ஏகத்துக்கும் அவனை முறைத்தவள் அவனை  தள்ளிவிட்டு மீண்டும் தன் வேலையை தொடர்ந்தாள்.

சட்டென, “நான் வேணா அந்த டிக்கெட்ஸ் அ யூஸ் பண்ணிக்கவா?” என்ற யாதவ்வின் குரலில் இருவருமே சட்டென திரும்பி பார்த்தனர். அங்கு மொட்டை மாடிக்கு  நுழையும் வாசலின் கதவு நிலையில் சாய்ந்தவாறு யாதவ் நின்றிருக்க, இருவருமே அவனை புரியாது பார்த்தனர்.

இருவரின் அருகில் வந்தவன் இந்திரனின் கையிலிருந்த நுழைவுச்சீட்டை பறித்து, “நைட் ஷோவா? நோ ப்ரோப்ளம்.” என்று சொல்ல, “யாதவ் நீயா?” என்று அதிர்ந்து கேட்ட இந்திரன், “போகலாமே… பெரிப்ஸ்க்கு தெரியவே கூடாது. அவர் போக விட மாட்டாரு. சுவரேறி குதிச்சி தான் போகனும். யூ க்னோ ஹவ் சுவரேறி குதிக்கிறது? டோன்ட் வொர்ரி, நான் கத்து தரேன். அதுமட்டுமில்ல, இங்க சில பேரு திமிர் பிடிச்சி அலையுறாங்க. அவங்க சவகாசமே நமக்கு வேணாம்.” என்று ஓரக்கண்ணால் ரித்வியை பார்த்தவாறு தெனாவெட்டாக சொன்னான்.

அவனை ஒரு மார்கமாக பார்த்த யாதவ், “உன்னை யாரு கூப்பிட்டா?” என்று கேட்டுவிட்டு ரித்வியிடம், “என் கூட வர்றீயா?” என்று கேட்க, அவளுக்கோ அத்தனை அதிர்ச்சி! பதில் சொல்லாது யாதவ்வையே விழிவிரித்து அவள் பார்த்துக்கொண்டிருக்க, மீண்டும், “வர்றீயா?” என்று அழுத்தி கேட்டதும் திடுக்கிட்டவள், “வர்றேன். வர்றேன்.” என்று பூம்பூம் மாடு போல் தலையாட்டினாள்.

“குட்.” என்று புன்னகைத்துவிட்டு அவன் அங்கிருந்து நகர, இந்திரன் தான் ‘என்ன டா நடக்குது இங்க?’ என்ற ரீதியில் இருவரையும் மாறி மாறி பார்த்தான்.

அவளோ ஓரக்கண்ணால் இந்திரனை பார்த்து அவனின் பார்வையில், “ஆத்தீ!” என்று ஓடிப் போக, அவளை எட்டி பிடித்தவன், “என்ன சிம்ரன் இதெல்லாம்? அப்போ என்கிட்ட பேசினதெல்லாம் நடிப்பா?” என்று நடிகர்கள் பாணியில் கேட்க, “ஹிஹிஹி… சும்மா அவர் கூட…” என்று சமாளிக்க முயன்றாள் அவள்.

“அவரா?” என்று விழித்தவன், “உங்க இரண்டு பேரோட போக்கே சரியில்லையே… பெரிப்ஸ்…” என்று கத்த போக, அவனின் வாயை எட்டிப் பொத்தியவள், “மாமாகிட்ட சொன்ன, அப்றம்…” என்றுவிட்டு, “சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னால்…” என்று ஆரம்பித்தாள்.

அதில் அதிர்ந்தவன், “தெரிஞ்சிருச்சா?” என்று பாவம் போல் கேட்க, ‘தெரிஞ்ச மாதிரியே நடிப்போம்.’ என்று நினைத்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவள் கண்களை அழுந்த மூடித் திறக்க, “அதிபா…” என்று பல்லைக்கடித்தான் இந்திரன்.

அன்றிரவு,

வீட்டிலிருந்த பெரியவர்கள் தங்களின் அறைக்குச் சென்றதும் நேரத்தை பார்த்துவிட்டு தன் அறையிலிருந்து கதவிடுக்கின் வழியே வெளியே எட்டிப்பார்த்த ரித்விக்கு நிஜமாகவே அத்தனை படபடப்பாக இருந்தது.

மெதுவாக நடந்துச் சென்று யாதவ்வின் அறை வாசலில் நின்றவள், “ஹெலோ… ஹெலோ…” என்று எப்போதும் போல் ஹஸ்கி குரலில் மெதுவாக அழைத்து பின் திரும்பி நின்று, ‘அய்யோ! ஒருவேள, அவங்க சும்மா சொன்னதை நான் தான் சீரியஸா எடுத்துக்கிட்டு ரெடியாகி வந்து நிக்கிறேனோ? நம்மள திட்டிட்டா என்ன பண்றது?’ என்று கதவை தட்டச் செல்வதும், திரும்புவதுமாக அறை வாசலில் தனக்குள்ளேயே பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்தாள்.

சரியாக திரும்பும் போது அவள் ஒரு இடத்திலே மோதி நிற்க, “ஆஆ…” என்று நெற்றியை தடவிவிட்டவாறு நிமிர்ந்தவள் எதிரே சுவிங்கத்தை சப்பியவாறு நின்றிருந்த யாதவ்வை பார்த்து விழிவிரித்து, “அது… அது வந்து…” என்று தடுமாற, “சீக்கிரம் வா!” என்றுவிட்டு அவனோ அவன் பாட்டிற்கு முன்னே நடந்தான்.

‘ஆத்தீ! என்ன பண்றாரு இவரு?’ என்று பதறியவள், ஓடிச்சென்று அவனை வழிமறைத்து நின்றவாறு, “இந்த பக்கம் இல்லைங்க, பின்னாடி சுவரேறி குதிச்சி…” என்று முடிக்கவில்லை, “இவ்வளவு பெரிய முன்வாசல் இருக்கும் போது எதுக்கு வீணா சுவரேறி குதிச்சி கைகால்ல உடைச்சிக்கிட்டு! பயந்து டைம் வேஸ்ட் பண்ணாம சீக்கிரம் வா!” என்றுவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினான்.

‘கடவுளே! என்னை காப்பாத்து!’ என்று சுற்றி முற்றி பார்த்தவாறு அவன் பின்னாலே ஓடியவள், அவன் வண்டியில் உட்கார்ந்து வாசற்கதவை தாண்டியதும் தான், ‘ஹப்பாடா!’ என்று நிம்மதி பெருமூச்சுவிட்டுக் கொண்டாள்.

அதேநேரம் மொட்டை மாடியிலிருந்து யாதவ் ரித்வியை அழைத்துச் செல்வதை இந்திரன் புருவத்தை சுருக்கி பார்த்துக் கொண்டிருக்க, ‘நிஜமாவே இது யாதவ் தானா? என்ன டா நடக்குது இங்க?’ என்று அவனுக்கு இருபக்கமும் நின்றவாறு சந்திரனும், வைஷ்ணவியும் அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

“ஒருவேள, யாதவ் அவள லவ் பண்றானோ?” என்று சந்திரன் கேட்க, “எத? அவன் வந்து ஒரு மாசம் கூட முழுசா முடியல. அதுக்குள்ள லவ்வா? ஆனா, எனக்கும் சந்தேகமா தான் இருக்கு.” என்று வைஷ்ணவி சொல்லவும், “சேம் ஹியர். இவன் அவளை பார்க்குறதும், அவ என்னடான்னா அவன் பார்க்காத நேரம் அவனை விழுங்குற மாதிரி பார்த்துட்டு அவன் பார்க்கும் போது வெட்கப்பட்டு திரும்பிக்கிறதும்… சம்திங் ரோங்.” என்றான் இந்திரன் தீவிர முகபாவனையுடன்.

“டேய்! இந்த ஹிட்லர் ரொம்ப தான் திமிர் பிடிச்சவன், அழுத்தக்காரன். இவன் எப்படி இந்த மாதிரி? ரொம்ப குழப்பமா இருக்கு. ஆமா… இதெல்லாம் அதிபாவுக்கு தெரியுமா?” என்று வைஷ்ணவி கேட்க,

“கண்டிப்பா ரித்வி சொல்லியிருக்க மாட்டா. அவன் வீட்லேயும் இல்லை. சோ, தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை.” என்று சந்திரன் சொல்லவும், “கவலை வேண்டாம். நாங்க எதுக்கு இருக்கோம். பத்த வச்சிரலாம்.” என்றான் இந்திரன் வில்லத்தனமாக.

‘க்கும்!’ என்று வைஷ்ணவி நொடிந்துக்கொள்ள, இந்திரனோ எப்போதும் போல் குறும்பாக, “ரோஸ்மில்க், அத்தான கொஞ்சம் கவனிக்க வேண்டியது!” என்று சொல்ல, “எடு அந்த வெளக்குமாத்த!” என்று தாவணி முந்தானைனை உதறி இடுப்பில் சொருகினாள் அவள்.

“இந்த நேரம் ஏன் ம்மா வீட்டை பெருக்க போற?” என்று எதுவும் அறியாதவன் போல் கேட்ட இந்திரன், அவள் எதையோ தீவிரமாக தேடுவதை பார்த்து அங்கிருந்து ஓடிவிட, சந்திரனும் “பஞ்சுமிட்டாய்…” என்று  ஏதோ சொல்ல வந்து அவள் முறைத்த முறைப்பில் அங்கிருந்து ஓடியே விட்டான்.

தியேட்டருக்கு வந்த யாதவ், ரித்வியை இறக்கிவிட்டு வண்டியை நிறுத்த செல்ல, சரியாக அவள் கண்களில் சிக்கினான் அவன்.

இங்கு வண்டியை நிறுத்திவிட்டு ரித்வி இருந்த இடத்திற்கு வந்த யாதவ், அங்கு ரித்வியை காணாது சுற்றி முற்றி தேட, சரியாக அவள் யாருடனோ பேசிக் கொண்டிருப்பது அவன் கண்களுக்கு தென்பட்டது.

வேகமாக சென்றவனுக்கு அவளுடன் பேசிக்கொண்டிருந்தவனை பார்த்ததும் கோபம் உச்சத்தை தொட, “ரித்விகா…” என்று அவன் கத்தவும்,  திடுக்கிட்டு திரும்பியவளுக்கு தூக்கி வாரிப்போட்டது. அவள் பேசிக்கொண்டிருந்தது வேறு யாருடனும் அல்ல! ஆரனே தான்.

அவளும் இதை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. ஆரனை கண்டதும் எதுவும் யோசிக்காது அவனருகில் ஓடிச் சென்றவள் கிட்டதட்ட யாதவ்வுடன் வந்ததை மறந்தே போயிருந்தாள்.

எப்போதும் இந்திரன் அல்லது சந்திரனுடன் ரித்வி திருட்டுத்தனமாக திரைப்படம் பார்க்க வருவதை அறிந்திருந்த ஆரன் கூட யாதவ்வை எதிர்ப்பார்க்கவில்லை தான். அவனோ யாதவ்வையும், ரித்வியையும் மாறி மாறி பார்க்க,

ரித்வியின் முழங்கையை பிடித்து தனக்கருகில் இழுத்த யாதவ், ஆரனை முறைத்துவிட்டு எதுவும் பேசாது அவளை தன் கைக்குள் அடக்கியவாறு அழைத்துச் செல்ல, ரித்வி தான் தன் தோளிலிருந்த அவன் கையை பார்த்துவிட்டு யாதவ்வை அதிர்ந்து நோக்கினாள்.

ஆரனோ கோபத்தில் பற்களை நரநரவென கடிக்க, இதை எதிர்ப்பார்த்து செய்த யாதவ்விற்கு அவனின் கோபமே அத்தனை சந்தோஷத்தை கொடுத்தது. ஆரன் வருவதை அறிந்து தானே அவன் ரித்வியை அழைத்துக்கொண்டு வந்ததே!

ரித்வி ஆரனுடன் பேசிக்கொண்டிருந்ததை கண்டுக்காது விட்டவனுக்கு ஆரனை வெறுப்பேற்றுவது மட்டுமே குறியாக இருந்தது.

ஆனால், இது எதையும் அறியாத அந்த பாவையோ அவனின் கைக்குள் வைத்தே அவன் மீதான தன் காதலை உணர்ந்திருந்தாள். கூடவே, அவனின் நடவடிக்கைகளையும் காதல் என்று தவறாக புரிந்துக் கொள்ள ஆரம்பித்தாள்.

ஷேஹா ஸகி

Leave a Reply

error: Content is protected !!