லவ் ஆர் ஹேட் 11

லவ் ஆர் ஹேட் 11
“இப்போ எதுக்கு எனக்கு கோல் பண்ண யாதவ்?” நடாஷா கோபமாக கேட்க, அவளுக்குக் குறையாத கோபத்தில், “ஏன் என் கோல் அ அட்டென்ட் பண்ண மாட்டேங்குற?” என்று கடுப்பாக கேட்டான் யாதவ்.
“ஏற்கனவே என்னை அவமானப்படுத்தினது போதாதா? யூ க்னோ பெட்டர், இதுவரைக்கும் இப்படி யாருமே என்னை ரிஜெக்ட் பண்ணது கிடையாது. உனக்காக தான் பேச வந்தேன். ச்சே!” என்று பேசிக் கொண்டே சென்றவள், “அப்பா சம்மதிச்சிட்டாரு நடாஷா.” என்ற யாதவ்வின் பதிலில் அப்படியே அமைதியானாள்.
“என்ன சொல்ற யாதவ்?” என்று நடாஷா அதிர்ந்து கேட்க, “அப்பா ஓகே சொல்லிட்டாரு.” என்று யாதவ் அழுத்தி சொல்லவும், “முதல்ல வேணாம்னு தானே சொன்னாரு. இப்போ எப்படி?” என்று சந்தேகமாக வந்து விழுந்தன அவளது வார்த்தைகள்.
“தெரியல. பட், இப்போ எவ்ரிதிங் இஸ் ஆல்ரைட்.” என்று அவன் சொல்லவும் லேசாக புன்னகைத்தவள், “ஓகே பேபி, நான் இன்னைக்கு நைட் லண்டன் கிளம்புறேன். சீக்கிரம் அம்மாவ கூட்டிட்டு வீட்டுக்கு வரேன். ஆனா…” என்று நிறுத்த, “ஆனா?” என்று கேள்வியாக இழுத்தான் அவன்.
“எனக்கு பயமா இருக்கு யாதவ். நான் வரும் வரைக்கும் எனக்காக காத்திருப்பியா?” என்று நடாஷா நம்பிக்கையில்லா குரலில் கேட்க, “என்ன? ஏன் இப்படி ஒரு கேள்வி?” என்று அதிர்ந்து, “வட்எவர்! நான் கண்டிப்பா காத்திருப்பேன்.” என்று பதிலளித்தவனுக்கு அடுத்த ஒரு மாதத்தில் நடக்கப்போவது தெரிந்திருந்தால் அப்படி ஒரு வாக்கை கொடுத்திருக்க மாட்டானோ, என்னவோ?
அடுத்த ஒரே மாதத்தில் அவனுடைய மொத்த வாழ்க்கையும் தலைகீழாக மாறும் என்று அவன் கனவிலும் நினைத்திருக்க மாட்டான்.
ஒருமாதம் கழித்து,
மஹாதேவன் வீட்டு வெளியிலும், உள்ளேயும் ஊரின் முக்கிய சில ஆட்கள் மட்டுமே நின்றிருக்க, அவர்களின் பலவிதமான பேச்சுக்கள் வீட்டாற்களின் காதில் விழத் தான் செய்தன.
“பாவம் டி இந்த புள்ள. என்ன பாவம் பண்ணிச்சோ? நல்ல பொண்ணு. இவளுக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்க கூடாது.”
“மஹாதேவன் ஐயாவுக்கு புத்தி மழுங்கி போச்சா என்ன? ஏன் இந்த கெட்டு போன பொண்ண அவரோட பையனுக்கு கட்டிக் கொடுக்க முடிவு பண்ணியிருக்காரு. ஒருவேள, பையனுக்கு ஏதாச்சும் குறை இருக்குமோ?”
“இந்த பொண்ணுக்கு அதிர்ஷ்டம் தான். மஹாதேவன் இந்த பொண்ணுக்கு என்ன உறவுன்னே தெரியல. மாமா மாமா ன்னு சொல்லிட்டு திரிஞ்சா. இப்போ, அவர் பையனையே இந்த நிலைமைக்கு அப்றமும் கல்யாணம் பண்ணுதே… அந்த பையன பார்த்தா தான் பாவமா இருக்கு. பையனோட விருப்பத்தை எங்க மதிச்சாரு அந்த மனுஷன்?”
என்ற பலவிதமான விமர்சனங்கள் அந்த வீட்டை சுற்றி.
இது அத்தனையும் அவனது காதில் விழ, உச்சகட்ட ஆத்திரம், கையாலாகாத தனத்தில் உண்டான கோபத்தில் மந்திரங்களை கூட உச்சரிக்காது சிவந்து கண்களுடன் ஹோமகுண்டத்தின் முன் அமர்ந்திருந்தான் யாதவ்.
அவனுடைய பார்வையோ தன் பக்கத்தில் இருந்தவளை ‘உன்னால தான் டி எல்லாமே…’ என்று குற்றம் சுமத்தும் பார்வையுடன் பதிய, அவன் பக்கத்தில் இருந்த ரித்வியோ உணர்ச்சிகள் துடைத்த முகத்துடன் இறுகிப்போய் அமர்ந்திருந்தாள்.
அவளுடைய பார்வையோ தன் முன்னால் எரிந்துக்கொண்டிருந்த அக்னியை வெறித்துக் கொண்டிருக்க, ‘தானும் இதில் விழுந்து இறந்துவிடக் கூடாதா?’ என்று குமுறிக் கொண்டிருந்தது அவள் மனம்.
அவளுடைய நினைவுகளோ ஒரு மாதத்திற்கு முன் நடந்த அந்த கொடூர சம்பவத்தை மீட்டின.
ஒரு மாதத்திற்கு முன்,
மஹாதேவன் யாதவ்வின் காதலுக்கு சம்மதித்ததை கேள்விப்பட்ட சகுந்தலா, அடுத்தநொடி போர்கொடியை தூக்கிக்கொண்டு மஹாதேவனின் அறையின் முன் நின்றுவிட்டார்.
“இது உனக்கே நியாயமா இருக்கா அண்ணா? என் பொண்ணை தான் யாதவ் கட்டிப்பான்னு அத்தனை ஆசையில இருந்தேன். இப்போ வந்து என் பொண்ணுக்கு இல்லைன்னா என்னால எப்படி ஏத்துக்க முடியும்?” என்று சகுந்தலா கத்த,
தன் தங்கையை நிதானமாக ஏறிட்டவர், “அவன் அந்த பொண்ண காதலிக்கும் போது என்னால என்ன பண்ண முடியும்? அவன் வாழ்க்கை அவன் விருப்பப்படி அமையட்டும். உன் புள்ளைக்கு நானே ஒரு நல்ல மாப்பிள்ளைய பார்க்குறேன்.” என்று சொன்னார்.
அதில் பதறியவர், “ஏன் நம்ம அதிபனுக்கு என்ன குறைச்சல்? அவனும் உங்க பையன் தானே?” என்று சொல்ல, பக்கத்திலிருந்த வைஷ்ணவியோ தன் அம்மாவை கையெடுத்து கும்பிடாத குறை தான். ‘வாழ்க்கையில இன்னைக்கு தான் சரியா பேசியிருக்க தெய்வமே…’ என்று கண்கள் மின்ன சகுந்தலாவை பார்த்தாள் அவள்.
ஆனால் அதிபனோ, “என்னால முடியாதுப்பா.” என்று பட்டென்று சொல்லவும், “என்னாலயும் எதுவும் பண்ண முடியாது சகு.” என்று மஹாதேவன் கைகளை விரித்து சொல்லிவிட்டு நகர, அப்பா மகன் இருவரையும் ஏகத்துக்கும் முறைத்துத் தள்ளினர் அம்மாவும் பொண்ணும்.
அதிபனோ இருவரையும் கொஞ்சம் கூட கண்டுக்காது தேடிச்சென்றது என்னவோ ரித்வியை தான். வழக்கம் போல அவள் இருக்கும் இடம் தெரிந்து அவன் மாடித்தோட்டத்திற்குச் செல்ல, சரியாக அவன் எதிர்ப்பார்த்தது போல வானத்தை வெறித்தவாறு நின்றிருந்தாள் ரித்வி.
அவளைப் பார்த்த அதிபனுக்கு அவளுடைய தற்போதைய உணர்வுகளை புரிந்துக்கொள்ள முடியுமாகத் தான் இருந்தது.
“வெல்கம் டூ காதலால் பாதிக்கப்பட்டோர் சங்கம்.” என்ற கேலியான குரலில் திடுக்கிட்டு திரும்பிய ரித்வி, எதிரிலிருந்த அதிபனை புருவத்தை சுருக்கிப் பார்த்தவாறு, “காதலா? அப்படி எல்லாம் எதுவுமில்ல அதி.” என்று சாதாரணமாக சொன்னாள்.
“ஓஹோ! அப்போ நேத்து ராத்திரி இங்க அழுதுக்கிட்டு இருந்தது இந்த மேடம் கிடையாதா? நிஜமாவே பேய் தானோ?” என்று பொய்யான ஆச்சரியப் பாவனையுடன் அதிபன் கேட்க, திருதிருவென விழித்தவள், “அது அம்மா, அப்பா நியாபகத்துல…” என்று வழக்கமாக சொல்லும் அதே வசனத்தை சொன்னாள்.
“பொய் சொல்லாத ரித்வி! உன்கிட்ட ஒரு சின்ன மாற்றம் ஏற்பட்டாலும் என்னால உணர முடியும். என்கிட்ட நடிக்காத! யாதவ் மேல உனக்கு காதலா? ஈர்ப்பான்னு எனக்கு தெரியல. பட், இப்போ நீ ரொம்ப காயப்பட்டிருக்கன்னு மட்டும் எனக்கு புரியுது.” என்று அழுத்தமாக வந்து விழுந்தன அதிபனின் வார்த்தைகள்.
அவனுக்கு தெரிந்துவிட்டதை அறிந்து சங்கடமாக, “அது… அது வந்து… ஐ அம் சோரி. வரம்புக்கு மீறி ஆசைப்பட்டுட்டேன். அது புரியுது.” என்ற ரித்வியின் வார்த்தைகள், “அறைஞ்சேன்னா…” என்ற அதிபனின் கோபக்குரலில் சட்டென்று நின்றன .
“என்ன பேசுற ரித்வி? அப்பா கூட உன்னை தான் யாதவ்க்கு துணையா அமைச்சிக் கொடுக்கனும்னு ஆசைப்படிருக்காரு. தப்பு என் மேல தான். யாதவ் யாரோ ஒரு பொண்ண காதலிக்கிறான்னு ஏற்கனவே எனக்கு ஒரு சந்தேகம் இருந்திச்சி. அப்போவே உன்கிட்ட சொல்லியிருக்கனும்.” என்று அதிபன் தன்னை தானே கடிந்துக்கொள்ள, விரக்தியாக புன்னகைத்தாள் அவள்.
“சரி விடு அதி, ஏதோ ஆசைப்பட்டேன். அவருக்கு அந்த பொண்ணு தான் கரெக்டா இருப்பா. எனக்கு இப்போ எந்த கவலையும் இல்லை. ஐ அம் சோ ஹேப்பி! எனக்குன்னு ஒருத்தன் வராமலா போயிருவான். மீரா கிருஷ்ணன் எழுதுற கதையில வர்ற ஹீரோ மாதிரி எனக்காக அவன் வருவான்.” என்று சிரித்தவாறு சொன்ன ரித்வியின் வார்த்தைகளின் பின்னாலிருந்த வலியை அதிபன் உணராமலில்லை.
மென்புன்னகையுடன் அவளின் மூக்குக் கண்ணாடியை சரி செய்தவன் குறும்பாக, “ரித்விமா, பேசாம நீ என்னை கட்டிக்கிறியா?” என்று அடக்கப்பட்ட புன்னகையுடன் கேட்க, “அய்ய…” என்று முகத்தை சுழித்தவாறு சொன்னவள் பின் சட்டென்று சிரித்து, “பண்ணலாமே… உனக்கு ஏதும் ஆட்சேபனை இல்லையே வைஷூ?” என்று அதிபனுக்கு பின்னால் எட்டிப் பார்த்து கேலியாக கேட்டாள்.
ஆனால், நிதானமாக திரும்பிப் பார்த்தவனோ தன்னவள் தன் பின்னால் வந்ததை உணர்ந்து தான் அவ்வாறு சொன்னதே.
அங்கு வைஷ்ணவியோ இடுப்பில் கைக்குற்றி தன்னவனை முறைத்துக்கொண்டு நிற்க, “பார்த்து பக்குவமா வைஷூ, பொத்தி பொத்தி வளர்த்த புள்ள நம்ம அதி.” என்று மேலும் தன் தோழியை உசுப்பேற்றிவிட்டு ரித்வி அங்கிருந்து ஓடிவிட, வைஷ்ணவியை ஏற இறங்க பார்த்த அதிபன், “என்ன டி முறைப்பு?” என்று ஒற்றை புருவத்தை உயர்த்திக் கேட்டான்.
“எவ்வளவு தைரியம் இருந்தா வேற பொண்ண கல்யாணம் பண்ணுறதா சொல்லுவீங்க? அப்போ என் நிலைமை?” என்று அவள் உதட்டை சுழித்தவாறு கோபமாக கேட்க, “பழம் நீயப்பா… ஞான பழம் நீயப்பா…” என்று அவளுடைய நிலையை திருமணமாகாத ஔவையாருக்கு ஒப்பிட்டு அவன் கேலியாக பாடியவாறு நகர, “மாமா….” என்று கோபத்தில் தரையை உதைத்தாள் அவள்.
அடுத்தநாள்,
தனதறையில் கையில் புத்தகத்தை வைத்துக்கொண்டு அதில் பார்வையை பதித்திருந்த ரித்வியின் சிந்தனைகள் மட்டும் வேறெங்கோ இருந்தன. மனமும் விடாது ஏதோ ஒன்றை உறுத்திக் கொண்டிருக்க, அடுத்தநொடி எதுவும் யோசிக்காது யாதவ்வின் அறைக்கு முன் சென்று நின்றவளுக்கோ ஒரு தயக்கம்!
எப்போதும் போல் அவனின் அறை வாசலில் நின்று கதவை தட்டச்செல்வது, திரும்பிக் கொள்வதுமாக தடுமாறிக் கொண்டிருந்தவளின் மனமோ, ‘இன்னைக்கு அவர் கூட பேசியே ஆகனும்.’ என்று மட்டும் சொல்லிக் கொண்டது.
மீண்டும் முயன்று தைரியத்தை வரவழைத்து கதவை தட்டச் சென்றவள் கதவை திறந்துக் கொண்டு எதிரில் வந்தவனின் மேலேயே மோதி நின்றாள்.
‘அய்யோ! மறுபடியுமா?’ என்று நெற்றியை தடவியவாறு நிமிர்ந்த ரித்வி, எதிரில் தன்னை முறைத்தவாறு நின்றிருந்த யாதவ்வை மிரட்சியாக பார்க்க, “கண்ண என்ன பிடறியில வச்சிக்கிட்டு நடக்குறியா? இல்லை, கண்ணாடி போட்டும் கண்ணு தெரியல்லையா?” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்டான் யாதவ்.
“அது… நான் உங்ககிட்ட கொஞ்ச பேசனும். அதான்…” என்று தயக்கமாக இழுத்தவளை அவன் கேள்வியாக புருவத்தை சுருக்கி பார்க்க, “அது எனக்கு… எனக்கு நிஜமாவே மாமா அப்படி சொல்லுவாருன்னு தெரியாது. நானும் எதிர்ப்பார்க்கல.” என்று திக்கித்திணறி சொன்னாள் அவள்.
ஆனால், “ஆஹான்!” என்ற அவனின் ஏளனப் பார்வையில் அவளுக்கோ முகமே கறுத்துவிட்டது.
“அது… ஏதோ என்னை மீறி ஆசைப்பட்டுட்டேன். தப்பு தான். நிஜமாவே நான் உங்களுக்கு பொருத்தமில்ல. என்னை தப்பா எடுத்துக்காதீங்க. காதல் கூட ஒரு உணர்வு தானே, அதை எப்படி எனக்குள்ளேயே வச்சிக்க முடியும்? அதான் அன்னைக்கு…” என்று சொல்ல வந்தவள் சற்று நிறுத்தி, “சோரி…” என்று தலைகுனிந்த வண்ணம் சொன்னாள்.
ஆனால், அவனுடைய முகத்தில் எதையும் கண்டறிய முடியவில்லை. அவளையே அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தன அவனுடைய விழிகள்.
அவளும் அவனுடைய முகத்தில் உணர்வுகளை தேடி களைத்துப் போய், “அப்போ நான்…” என்று ஏதோ சொல்ல வந்த ரித்வி, சரியாக அவளுடைய அலைப்பேசியில் வந்த பிரத்யேகமான பாடலில் பதறியேவிட்டாள். அது அவள் ஒரு எண்ணிற்காக வைத்திருந்த பிரத்யேகமான பாடலாச்சே!
திடுக்கிட்டு யாதவ்வை நிமிர்ந்து பார்த்தவள், அவன் பார்வையின் கூர்மையை உணர்ந்து, “அப்போ நான் வரேன்.” என்று அவசரமாக சொல்லிவிட்டு அறைக்கு ஓடிவிட, போகும் அவளை சந்தேகமாக பார்த்து வைத்தான் யாதவ்.
தனதறைக்கு ஓடி வந்தவள், அழைப்பை ஏற்று காதில் வைத்து, “ஹெலோ…” என்று பேச ஆரம்பிக்க, மறுமுனையில் சொன்ன செய்தியில் “ஆத்தீ!” என்று பதறிவிட்டாள் ரித்வி.
“என்ன சொல்றீங்க? அது எப்படி என்னால வர முடியும்? வாய்ப்பேயில்லை.” என்று ரித்வி மறுக்க, மறுமுனையில் என்ன சொன்னார்களோ?
“அய்யோ! ப்ளீஸ் என்னை புரிஞ்சிக்கோங்க. நான் இப்படி நடந்துக்குறது தெரிஞ்சாலே மாமா ரொம்ப வருத்தப்படுறாரு. என்னால மாமா எப்போவும் கஷ்டப்பட கூடாது.” என்று புரிய வைக்க முயன்றவளுக்கோ தோல்வி தான்.
மறுமுனையில் கேட்ட கெஞ்சல்களில் சற்று மனம் மாறி, “சரி சரி… நான் வர ட்ரை பண்றேன். கண்டிப்பா.” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தவளுக்கு அடுத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை.
‘கடவுளே! எனக்கு ஏன் இத்தனை சோதனை?’ என்று உள்ளுக்குள் புலம்பிய ரித்வி, மஹாதேவனிடன் என்ன பொய் சொல்லி வெளியில் செல்வதற்கு அனுமதி வாங்கவென தீவிரமாக திட்டத்தை போட ஆரம்பித்தாள்.
ஆனால், இந்த பயணமே அவளது வாழ்க்கையை சூனியமாக்க போகிறது என்று அவள் அப்போது அறிந்திருக்கவில்லை.
அன்றிரவு,
எல்லாரும் உணவு மேசையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, உணவை அளந்தவாறு மஹாதேவனை ஓரக்கண்ணால் பார்ப்பதும், ஏதோ சொல்ல வந்து தயங்குவதுமாக இருந்த ரித்வியை யாதவ்வை தவிர மற்ற இளசுகள் ஒரு மார்கமாக பார்த்து வைத்தனர்.
மஹாதேவனோ நிமிராது சாப்பிட்டவாறே, “ரித்விமா, மாமாகிட்ட ஏதாச்சும் சொல்லனுமா?” என்று கேட்க, திடுக்கிட்ட ரித்வி, “அது வந்து… அது…” என்று திணறி, “ஆமா மாமா, ஒன்னு சொல்லனும்.” என்று பட்டென்று சொல்லிவிட்டு திருதிருவென விழிக்க, அவரோ அவளை கேள்வியாக நோக்கினார்.
“மாமா, நாளைக்கு ஃப்ரென்ட் வீட்டுல விருந்துக்கு அழைச்சிருக்காங்க. நான் போகவா?” என்று அவள் கேட்டதும், “இது என்ன கேள்விம்மா? தாராளமா போ! ஆனா, பசங்க யாரையாச்சும் கூட்டிட்டு போம்மா!” என்று மஹாதேவன் சொல்லவும், ‘கிருஷ்ணா!’ என்று உள்ளுக்குள் பதறினாள் ரித்வி.
“இல்லை மாமா, அது ஆர்த்தி என் கூட வர்றேன்னு சொன்னா. அவ கூடவே போயிக்கிறேன். எதுக்கு இவனுங்க?” என்று ரித்வி சமாளிக்க முயல, மூன்று ஆடவர்களும் அவளை புருவத்தை சுருக்கி சந்தேகமாக பார்த்தனர்.
“ஓஹோ! ஆனா, பொண்ணுங்கள எப்படிம்மா தனியா அனுப்புறது? அது சரி வராது. நீ யாரையாச்சும் துணைக்கு கூட்டிட்டு போ ரித்விமா.” என்று மஹாதேவன் அப்போதும் அவளுக்கு அதை வலியுறுத்த, “அய்யோ மாமா! அதான் அவ என் கூட வர்றாளே…” என்று சிணுங்கியவள், எப்படியோ தன் மாமாவை சமாளித்து தனியாக செல்ல அனுமதி வாங்கினாள்.
அவரும் இறுதியில், “கவனமா போயிட்டு வாம்மா.” என்று அரை மனதாகவே சொல்லிவிட்டு எழுந்துச் செல்ல, ‘ஹப்பாடா!’ என்று நிம்மதி பெருமூச்சுவிட்ட ரித்வியின் பாவனைகளை யாதவ் தான் புரியாது சந்தேகமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
–ஹேஹா ஸகி