லவ் ஆர் ஹேட் 15

eiB193E14834-00caeef5

லவ் ஆர் ஹேட் 15

பின்னால் கேட்ட கண்ணாடி நொறுங்கும் சத்தத்தில் கண்களை அழுந்த மூடித் திறந்த ரித்வி, முயன்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தன்னவனை திரும்பிப் பார்த்தாள்.

அங்கு யாதவ்வோ நெற்றி நரம்புகள் புடைத்து, கண்கள் சிவந்து போய்,  கைமுஷ்டியை இறுக்கியவாறு நின்றிருக்க, அவளோ பயத்தில் எச்சிலை விழுங்கிக்கொண்டு அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

அடுத்கணம் டீபாயின் மேலிருந்த இன்னொரு கண்ணாடிப்பொருளை தரையில் தூக்கி எறிந்த யாதவ், ரித்வியை வேகமாக நெருங்கி அவளின் தோள்களை பற்றி சுவற்றில் அழுத்திச் சாத்த, ஆடிப்போய்விட்டாள் அவள்.

“உன்னால தான். உன்னால தான் டி என் வாழ்க்கையே போச்சு! என் ஆசை மொத்தத்தையும் சிதைச்சிட்ட!” என்று ஆவேசமாக கத்தியவாறு அவளை தரையில் உதறித்தள்ளியவன், “போச்சு! எல்லாமே போச்சு! நான் நடாஷாவை காதலிக்கிறேன்னு தெரிஞ்சும், உன்கிட்ட நான் அவ்வளவு சொல்லியும் அப்பாக்கிட்ட சம்மதம் சொல்லியிருக்க. அவ்வளவு தைரியம் தானே உனக்கு? லுக்! கல்யாணம் ஆகிருச்சி அப்படி இப்படின்னு என்கிட்ட மனைவின்னு உரிமை எடுத்துக்க பார்த்த… அவ்வளவு தான் நீ! என் முன்னாடியே வராத!” என்று ஒற்றை விரலை நீட்டி மிரட்டிவிட்டு அறைக்குள் நுழைந்து கதவடைத்துக்கொண்டான் அவன்.

அவன் தள்ளிவிட்டதில் தரையில் விழுந்திருந்தவளுக்கு கண்ணீர் மட்டும் நிற்காமல் ஓடியது. கஷ்டத்தின் போது எல்லாரும் நினைக்கும் அந்த கேள்வி தான் அவள் மனதில் அப்போது எழுந்தது. ‘நான் யாருக்கு என்ன பாவம் செய்தேன்? ஏன் கடவுளே எனக்கு மட்டும் இப்படி?’

கண்ணீரை அழுந்த துடைத்தவள் சிறிது நேரம் மூடியிருந்த தன்னவனின் அறைக்கதவை வெறித்துவிட்டு தனக்கான அறைக்குள் நுழைந்துக்கொண்டாள்.
அன்று முழுவதும் இருவருமே வெளியில் வரவில்லை.

அடுத்தநாள் தூக்கத்திலிருந்து விழித்தவளுக்கோ எழுந்ததுமே பசி வயிற்றை கிள்ளியது. எப்போதும் நேரத்திற்கு தவறாது சாப்பிடுபவள் நேற்று யாதவ் நடந்துக்கொண்ட விதத்தில் இரவு உணவையே சுத்தமாக மறந்திருந்தாள்.

குளித்து உடை மாற்றி யாதவ்வின் அறை முன் நின்றவளுக்கு நேற்று அவன் சொன்ன ‘என் முன்னாடி வராத!’ என்ற வார்த்தைத் தான் நியாபகத்திற்கு வந்தது. ஆனாலும், ‘திட்டினாலும் பரவாயில்லை. சோறு தான் முக்கியம்.’ என்ற ரீதியில் கதவை தட்டச் சென்றாள் ரித்வி.

தைரியமாக தட்டி அவனை அழைத்துவிட்டால் அது ரித்வி அல்லவே!

“ஹெலோ… ஹெலோ…” என்று அவளுக்கே கேட்காத குரலில் கதவை தட்டியவள் பயந்து போய் திரும்பி நிற்பதும் மீண்டும் தட்டச் செல்வதுமாக அறை வாசலில் தடுமாறிக்கொண்டிருக்க, வழக்கம் போல் சட்டென கதவை திறந்துக்கொண்டு வந்த யாதவ்வின் மார்பிலே மோதி நின்றாள்.

“ஏய்…” என்று கத்தியவாறு அவன் அவளை முறைத்துப் பார்க்க, “சோரிங்க!” என்று பதட்டமாக சொன்ன ரித்வி, “அது… அது வந்து எனக்கு பசிக்குது. ஆனா, கிட்ச்சன்ல தோசைமாவு, ரவை எதுவுமே இல்லை.” என்று தட்டுத்தடுமாறி சொல்லி முடிக்க, “அதுக்கு நான் என்ன பண்ண?” என்று சலிப்பாக வந்து விழுந்தன அவனது வார்த்தைகள்.

அவன் பாட்டிற்கு அவளை கண்டுக்காது வீட்டிலிருந்து வெளியேறவும், ‘என்ன இப்படி கேட்டுட்டு போறாரு? அய்யோ!’ என்று உள்ளுக்குள் புலம்பியவாறு  அதே  இடத்தில் கைகளை பிசைந்தவாறு நின்றிருந்தாள் ரித்வி.

வெளியிலிருந்து தனக்கான உணவை மட்டும் வாங்கிக்கொண்டு வந்த யாதவ், உணவு மேசையில் வைத்து சாப்பிட ஆரம்பித்தான். தன்னையே பாவமாக பார்த்துக் கொண்டிருந்தவளை ஒரு பொருட்டாகவே கருதவில்லை அவன்!

வாங்கி வந்த பாண் துண்டுகளில் ஜேம் போட்டு சாப்பிட்டவன், கொஞ்சத்தை மீதமாக வைத்துவிட்டு அவன் பாட்டிற்கு அறைக்குள் நுழைந்து அலுவலகம் செல்வதற்காக தயாராக, இவளுக்கு தான் என்ன செய்வது? ஏது செய்வதென்றே தெரியவில்லை.

‘அய்யோ! என்ன இவரு என்னை கண்டுக்காம போறாரு? பசி வேற வயிற்றை கிள்ளுதே! நமக்கு வேற இந்த பாணு, நூடில்ஸ் எல்லாம் ஒத்துக்காதே… மறுபடியும் போய் பேசி பார்ப்போமா? இல்லை இல்லை வேணாம்!’ தனக்குள்ளேயே பேசியவாறு அவனுடைய அறையையே உதட்டை பிதுக்கி பார்த்துக் கொண்டிருந்தாள் ரித்வி.

டிப்டாப்பாக தயாராகி வெளியே வந்த யாதவ், அவளை ஒரு ஜீவனாக கூட மதிக்காது வீட்டிலிருந்து வெளியேறியிருக்க, தலையில் கை வைத்து தூணில் சாய்ந்து நின்றவளுக்கு வேறுவழியே தெரியவில்லை. அவன் மிச்சம் வைத்திருந்த சில பாண்துண்டுகளை சாப்பிட்டு வயிற்றை சமாதானப்படுத்தியவளுக்கு அது கொஞ்சமும் போதவில்லை.

இருக்கும் போது தெரியாத அருமை இல்லாது போகும் போது தான் தெரியும் என்று சும்மாவா சொன்னார்கள்? ‘இதுவே ஊரிலிருந்தால் காலையிலேயே தடல்புடலான சாப்பாடு! வயிறு நிறைய சாப்பிட்டிருக்க முடியும்.’ என்ற தன் வீட்டு நினைவிலே அவளுக்கு கண்கள் கலங்கிவிட்டது.

சரியாக, ஆரனிடமிருந்து அவளுக்கு அழைப்பு வர, அழைப்பை ஏற்று காதில் வைத்தவள், “அத்தான்…” என்று மெல்லிய குரலில் அழைக்க, “எப்படி இருக்க ரித்வி?” என்ற ஆரனின் கேள்வியில் ஒருபக்க விழியிலிருந்து ஒருசொட்டு விழிநீர் கன்னத்தினூடே உருண்டு வந்து தரையை தொட்டது.

கண்ணீரை அழுந்த துடைத்தவள், “என்னக்கென்ன அத்தான்? நான் நல்லா இருக்கேன்.” என்று ஏதோ அவன் நேரிலே இருப்பது போல் வரவழைத்த புன்னகையுடன் சொல்ல, ஆனால், யாதவ்வை பற்றி அறிந்தவனுக்கு இவளுடைய நடிப்பு தெரியாமல் இருக்குமா என்ன?

“பாட்டி எப்படி இருக்காங்க? தங்கச்சிங்க, மாமா, அத்தை எல்லாரும் நல்லா இருக்காங்களா?” என்று தன் கஷ்டத்தை மறைத்து பேசிக்கொண்டே போனவள், “ஆரா, யாரோ கத்துர சத்தம் கேக்குதே…” என்று யோசனையுடன் சொல்ல,

அவனும் அவள் மறைக்க நினைக்கும் கஷ்டத்தை பற்றி கேட்டு அவளை சங்கடப்படுத்த விரும்பாது, “எல்லாரும் நல்லா இருக்காங்க. உனக்கு ஒரு வீடியோ அனுப்பியிருக்கேன். கொஞ்சம் போய் பாரு!” என்றான்.

‘வீடியோவா?’ என்று யோசித்தவாறு அவனுடைய எண்ணிலிருந்து வந்திருந்த காணொளியை பார்த்தவளின் விழிகள் அதிர்ச்சியில் விரிய, கைகால்களோ நடுங்க ஆரம்பித்துவிட்டது ரித்விக்கு. கண்ணீர் ஆறாக ஓட, கையிலிருந்த அலைப்பேசி நழுவிவிடுமோ? என்ற பயத்திலே அலைப்பேசியை இறுகப் பிடித்துக் கொண்டவளுக்கு வாயில் வார்த்தைகள் வந்தால் தானே!

அலைப்பேசியை காதில் வைத்து, “ஆரா…” என்று நடுங்கும் உதடுகளால் அவள் அழைக்க, “என்னை மன்னிச்சிடு ரித்வி, இந்த ஆட்டோ ட்ரைவர் அ தான் என்னால பிடிக்க முடிஞ்சது. அதுவும், உன் கையால இவன் சாவு இருக்கனும்னு நினைச்சேன். பரவாயில்லை விடு! இன்னும் மூனு பேர் மிச்சம் இருக்கானுங்க தானே! அவனுங்களுக்கு உன் கையால சமாதி கட்டிரலாம். பாட்டி கூட பக்கத்துல இருக்காங்க.” என்ற ஆரனின் வார்த்தைகள் அத்தனை சந்தோஷத்தோடு வந்து விழுந்தன.

ஆம், அந்த காணொளியில் ரித்வியின் இந்நிலைக்கு காரணமான அந்நால்வரில் ஒருவனான ஆட்டோ ஓட்டுனரோ ஆரனின் காலடியில் குத்துயிரும் கொலையுயிருமாக கிடந்திருந்தான். பக்கத்தில் தேவகி பாட்டி அமர்ந்திருக்க, அந்த காணொளியில் ஆரனிடமிருந்து வாங்கிய சவுக்கடியில் இறுதி மூச்சுக்களை இழுத்து விட்டவாறு கிடந்திருந்தான் அவன்.

“ஏன் ஆரா? என… எனக்கு பயமா இருக்கு.” என்று ரித்வி அழ, “நீ ஏன் ரித்வி அழுகுற? இவனுங்க போலிஸ்கிட்ட சிக்கியிருந்தா மட்டும் தண்டனைய அனுபவிச்சிடுவாங்களா என்ன? சாகும் போது கூட துடிச்சி துடிச்சி சாகனும். அதனால தான் அவனோட உறுப்பையே அறுத்துட்டேன்.” என்று ஆவேசமாக சொன்ன ஆரனின் குரலையும் தாண்டி அந்த ராட்சசனின் அலறல் கேட்டது.

அந்த அலறலை கேட்க முடியாது ரித்வி கண்களை அழுந்த மூடிக்கொள்ள, அவளுடைய மனநிலையை புரிந்துக் கொண்டவன், “ரித்வி, எப்போவும் உனக்காக நான் இருப்பேன். என்ன நடந்தாலும் உனக்காக இங்க ஒரு குடும்பம் இருக்குறதை எப்போவும் நியாபகத்துல வச்சிக்கோ!” என்றுவிட்டு அழைப்பை துண்டிக்க, வாய்விட்டு அழுதவளுக்கு தன்னை நிதானப்படுத்திக்கொள்ளவே அரைமணி நேரம் தேவைப்பட்டது.

முகத்தை கழுவி தன்னை சமன்படுத்தியவள் அடுத்து நேரத்தை கடத்துவதற்காக இருக்கும் வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்ய ஆரம்பித்தாள். உடைகளை அலுமாரியில் அடுக்குவதும், கொண்டு வந்த நாவல் புத்தகத்தை வாசிப்பதுமாக நேரத்தை கடத்தினாள்.

அவளின் மனதிற்கு நிம்மதியை கொடுப்பதே அவளுக்கு பிடித்த கதையாசிரியரின் வரிகள் தான். ஆனால், அந்த கதையாசிரியரிடமிருந்து எந்தவிதமான புதிய பதிவுகளும் இல்லாமலிருக்க, அவளுடைய முகமே வாடிவிட்டது.

“மேம், ஏன் இன்னும் கதையின் அத்தியாயத்தை பதியவில்லை. உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கும் உங்கள் வாசகர்.” என்று அந்த தளத்தில் மீரா கிருஷ்ணனுக்கு தனிப்பட்ட குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு சற்றுநேரம் அவள் தூங்கி எழ, நேரமோ மதியநேரத்தை தொட்டுவிட்டது.

அங்கு சமையலறை கபோர்ட்டில் தேடி எடுத்த பேக்கட் நூடில்ஸ்ஸை சமைத்து சாப்பிட்டவளுக்கு தன் அத்தை ஆண்டாளின் நியாபகம் தான் வந்தது. கூடவே, அவர் செய்யும் சாம்பாரும், காரமான பொறியலும்…

சாப்பிட்டு முடித்து ஏற்கனவே சுற்றிப் பார்த்த வீட்டை பத்து தடவைக்கு மேல் சுற்றியவள் மறந்தும் கூட பால்கெனி பக்கம் செல்லவில்லை. அவளுக்கு தான் உயரம் என்றாலே கைகால்கள் உதற ஆரம்பித்துவிடுமே!

சரியாக மகாதேவனிடமிருந்து அழைப்பு வர, அவருடன் மட்டுமன்றி வீட்டிலிருந்த மொத்த பேருடனும் மாறி மாறி பேசி முடிக்கவே ஒருமணி நேரம் கடந்திருக்க, ‘வீட்டை சுத்தப்படுத்துகிறேன் பேர்வழி’யென்று துடைத்த இடத்தையே மீண்டும் மீண்டும் துடைத்து மாலை வரை நேரத்தை கடத்தினாள் அவள்.

புதிதாக திருமணமான எல்லா பெண்களையும் போல கணவன் வீடு திரும்பும் நேரத்திற்காக காத்திருந்த ரித்வியோ வாசல் கதவையும், நேரத்தையும் மாறி மாறி பார்த்தவாறு அமர்ந்திருந்தாள். ஆனால், அவளுக்குள் ஒரு வருத்தம்! ‘தான் சாப்பிட்டேனா? இல்லையா?’ என்று கூட தன்னவன் கேட்கவில்லையென்று…

அவன் வருகையை எதிர்ப்பார்த்தே இவள் சோர்ந்துப் போக, அவனோ எட்டு மணியை தாண்டி தான் வீடு வந்து சேர்ந்தான்.

அழைப்பு மணி சத்தத்தில் ஓடிச்சென்று கதவை திறந்தவளுக்கு தரையை வெறித்தவாறு தள்ளாடியபடி நின்றிருந்த தன்னவனை பார்த்ததும் திக்கென்றானது. பயத்தில் எச்சிலை விழுங்கியவாறு, “என்னங்க…” என்று மெதுவாக ரித்வி குரல் கொடுக்க, நிமிர்ந்து பார்த்த யாதவ்வுடைய விழிகளோ போதையின் பிடியில் சிவந்து போயிருந்தன.

‘அய்யோ கிருஷ்ணா! என்ன இவரு ஒரு மாதிரி இருக்காரு? குடிச்சிருக்காரா? இவருக்கு இந்த பழக்கம் எல்லாம் கூட இருக்கா? கிருஷ்ணா என்னை காப்பாத்து!’ என்று உள்ளுக்குள் அலறியவள், மெதுவாக அவனின் கையிலிருந்த மடிக்கணினி பையை எடுக்க போக, அவளின் கையை தட்டிவிட்டவன் தள்ளாடியபடியே நடந்துச் சென்று சோஃபாவில் அமர்ந்தான்.

புயலுக்கு முன் வரும் அமைதியோ? என்றிருந்தது ரித்விக்கு அவனது செயல்களை பார்க்கும் போது…

கண்களை மூடி தலையை பின்னால் சாய்த்து சோஃபாவில் யாதவ்  அமர்ந்திருக்க, சிறிதுநேரம் அவனையே கலங்கிய கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்த ரித்வி பின் முயன்று தைரியத்தை வரவழைத்து, “என்னங்க, தண்ணீர் கொண்டு வரவா?” என்று தயக்கமாக கேட்டாள்.

அவளின் குரலில் நிதானமாக நிமிர்ந்து கண்களை திறந்து அவளை ஒரு பார்வை பார்த்தவன்,  அலைப்பேசியில் ஒரு குரல்பதிவை ஒலிக்கவிட்டு மீண்டும் கண்களை மூடிக்கொள்ள, அதைக் கேட்டவளுக்கோ கண்களில் நிற்காது கண்ணீர் பெருக்கெடுத்தது.

அது நடாஷாவும், யாதவ்வும் பேசும் குரல்பதிவு தான். அதில் யாதவ் நடந்ததை விளக்குவதும், அவளோ அவனின் எந்த விளக்கத்தையும் ஏற்காது மறுத்து பேசுவதுமாக இருவருக்கிடையில் வாக்குவாதம்!
அதை கேட்டவளுக்கு யாதவ் பேசியதை கேட்டதும் மனம் சுக்குநூறாக சிதறியது.

“எனக்கு அவளை பிடிக்கல நடாஷா. சீக்கிரம் அவள டிவோர்ஸ் பண்ணிக்கிறேன். நாம கல்யாணம்…” என்று யாதவ் இழுக்க, அதற்கு நடாஷாவோ, “இன்னொருத்தி புருஷன் மேல ஆசைப்படுற சீரியல் வில்லிங்க மாதிரி என்னை நினைச்சியா யாதவ்? என்னால உனக்கு இரண்டாந்தரமா எல்லாம் வர முடியாது. அவ்வளவு தான் யாதவ், குட் பை!” என்றுவிட்டு அழைப்பை துண்டித்திருந்தாள் .

அத்தனையும் கேட்டவளோ அவனின் முகத்தை பார்க்க, ஆனால், அவனுடைய முகத்தில் எதையும் ஆராய முடியவில்லை அவளால்.

‘தன்னால் தானே தன்னவன் ஆசைப்பட்ட வாழ்க்கை அவனுக்கு கிடைக்கவில்லை.’ என்று பரிதாபமாக அவனைப் பார்த்த ரித்வி, வேலியில் சென்ற ஓணானை வேட்டியில் விட்ட கதையாக, “நான் வேணா அவங்க கூட பேசிப் பார்க்கவா? கண்டிப்பா ஒத்துக்குவாங்க. மாமாக்கிட்டயும் நான் சொல்லிக்கிறேன். அவங்க கூட…” என்று முடிக்கவில்லை, அடுத்தநொடி அந்த அலைப்பேசி சுவற்றில் எறியப்பட்டு துண்டுத் துண்டாக சிதறியது.

மின்னல் வேகத்தில் எழுந்து நின்றவன், “ச்சே! அவ என்ன சொன்னா பார்த்தியா? இதுக்கெல்லாம் யாருடி காரணம்? கல்யாணத்துக்கு அப்றம் வாழுற வாழ்க்கைய பத்தி எனக்குன்னு இருந்த ஆசை, கனவு எல்லாம் போச்சு!
அம்மா என்னை விட்டு போனதும் அவங்க பாசத்தை இழந்தேன். அப்பாவால பத்து வருஷம் தனியா கிடந்தேன். இப்போ…” என்று ஆவேசமாக போதையில் குளறியபடி கத்த,

அவளுக்கோ ஒருபக்கம் பயம்! இன்னொருபக்கம் வேதனை! கன்னத்தினூடே கண்ணீர் ஓட அவனையே பார்த்திருந்தாள் ரித்வி.

அவனுள் அடக்க முடியாத கோபம்! வேகமாக அவளை நெருங்கி, “இதுக்கு மேல என் முன்னால நிக்காதடி! வெளில போ!” என்று அவளின் முழங்கையை பிடித்து தரதரவென இழுத்துச் சென்றவன் ரித்வியை வெளியே தள்ளி கதவை அறைந்து சாத்திவிட, முதலில் அவன் செயலில் அதிர்ந்தவள், பின்னரே, “ப்ளீஸ், கதவை திறங்க. என்னங்க பயமா இருக்கு. ப்ளீஸ்ங்க…” என்று அழுதவாறே கதவை தட்டியவண்ணம் நின்றிருந்தாள்.

அடுத்த அரைமணி நேரத்திற்கு கதவையே திறக்கவில்லை அவன்! அவளின் கெஞ்சல்களும், கத்தலும் அவனிடத்தில் காற்றில் கரைந்த கற்பூரம் தான்.

ஷேஹா ஸகி

Leave a Reply

error: Content is protected !!