வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா…!

வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா…!

வஞ்சம் – 15

இன்று

தன் அறைக்கு வந்து படுத்திருந்த அகில் மனதோ சோளகாட்டை சுற்றி வந்தது. அதே நேரம் அன்று தேஷி அவனிடம் கூறியதும் நினைவில் வந்து தொலைத்தது.

அவனை, அவளது அறைக்கு அழைத்து சென்ற தேஷி, “என்ன சொல்லணுமோ அதை மட்டும் சொல்லுங்க. அனாவசிய பேச்சு வேண்டாம்” முகத்தை அந்தப் பக்கமாகத் திருப்பிக் கொண்டாள்.

அவனுக்கும், விஷ்ணுவுக்கும் இடையில் உள்ள கடந்த காலத்தைக் கூற ஆரம்பித்தான் அகில்.

  அன்றுதான் அகில் அவனின் தொழிற் படிப்பை முடித்து அவனின் வீட்டிற்கு வந்தான். ஸ்வேதாவுடன் அமர்ந்து படிக்கும் பொழுது நடந்த கலாட்டாவை கூறி இருவரும் சிரித்துக் கொண்டிருந்தனர்.

“அம்மா வாங்க அப்படியே அங்கிளையும், ஆன்ட்டியையும் பார்த்து விட்டு வருவோம்” ஸ்வேதாவை அழைத்தான்.

அவர் அமைதியாக இருப்பதைக் கண்டு, “மாம்” என மீண்டும் அழைத்தான்.

“மூர்த்தி எங்க இருக்கான்னு தெரியலடா அகில்” என்றவர், அவர்களே, அவரின் வாழ்க்கைக்கு எதிரியா மாறிவிட்டதை வருத்தமாகக் கூறினார்.

“மாம், ஆன்ட்டி தப்பா புரிஞ்சுகிட்டு இருக்காங்க, நான் அவங்களுக்குப் புரியவைக்கிறேன்” என அந்த நொடியே கிளப்ப,

“வேண்டாம் அகில், நான் ஏற்கனவே பேசி மனம் நொந்து போய்ட்டேன்டா”

சிறிது யோசித்தவன், “மாம், நான் அவங்க கம்பெனியில் ஜாயின் பண்ணி, அவங்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரியவைக்கிறேன்மா”

“அது சரி வருமாடா?”

“அதெல்லாம் சரி வரும் மாம்”

“காரிகை ரொம்ப மாறிட்டா அகில். வீட்டுக்குள்ளையே உன்னை விடமாடாடா ”

“என்னை அவங்க பார்க்கலைதானே. பிறகு என்னமா நான் பாத்துகிறேன்” என்றவன் அன்றே கிளம்பிவிட்டான்.

மேலும் வீட்டில் இருந்தால், ஒருவேளை விஷ்ணுவிற்குத் தெரிந்து பெரிய பிரச்சனை ஆகாமல் இருக்க உடனே கிளம்பினான்.

அந்த நேரம் விஷ்ணு ஆபிஸ் பி,ஏ பதவிக்கு ஆள் எடுக்க, நேரம் பார்த்துச் சரியாக உள்ளே நுழைந்தான் அகில்.

விஷ்ணுவுக்கும், யாருக்கும் அவனை தெரியவில்லை. அப்படியே அங்கு அந்த வேலையில் மூழ்கிக் கொண்டான்.

“மூர்த்தி அங்கிளை நான் அவங்க பையன் கூட சேர்த்து வைக்கணும் அதுக்காகத்தான் நான் அவன் சொன்னதை செய்ய வேண்டிய சூழ்நிலை” கூறி முடித்தவன் அவளைப் பார்த்தான்.

“இதெல்லாம் ஏன் என்கிட்ட சொல்லுற?”

“உங்க ஊரை அழிக்கிறேன்னுதானே நீ என்னை மேரேஜ் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லுற”

“அப்படி உனக்கு யாரு சொன்னா?”

“அது சொல்லிதான் தெரியணுமா?”

“ஓஹோ… சாருக்கு நான் சொல்லாமலே எல்லாம் தெரியும் போல”

“என்ன தேஷி இப்படி பேசுற”

“பின்ன எப்படி பேச சொல்லுற…. லவ் பண்ணுற மாதிரியே சுத்தி சுத்தி வருவியாம். லவ்வும் சொல்லுவியாம். ஒருநாள் சொல்லாம கொள்ளாம ஓடுவியாம். இதெல்லாம் நான் கண்டுக்காம இருந்துட்டு பல வருசம் கழிச்சு நீ வந்ததும் உன் பின்னாடியே ஓடி வரணுமோ” முறைக்க,

“அப்படி இல்லை தேஷி. அது அவசரம் அதுதான் உடனே போனேன்.”

“அதுதான் சொல்லுறேன். உனக்கு அவசரம்னா விட்டுட்டு போவ… நாளைக்கு இப்படி கல்யாணம் ஆனாலும் இதே வேலைதான நீ செய்வ. எனக்கு உன்னை பிடிக்கல…. பிடிக்கல… தயவு செய்து போய்டு” 

“தேஷி”

“இன்னொரு தரம் என்னை அப்படி கூப்பிடாதே” கடுப்புடன் கூறியவள் கதவை திறந்து வெளியே சென்றாள்.

‘அவன், உன்னை  விட்டு சென்றதில் இருந்து அவனுக்காக காத்திருந்துவிட்டு இப்போ இப்படி பேசுறது சரி இல்ல தேஷி’ அவளது மனம் எடுத்துரைக்க,

‘மூர்த்தி அங்கிள் பையன் தானே அகில்… அங்கிளே இனி பார்த்துப்பாங்க… அதுக்காக அவன் வந்து பேசினதும் ஈஈ… ன்னு இழுச்சுகிட்டு அவன் பின்னாடியே போக நான் ஒன்னும் சொரணை இல்லாதவள் இல்லை’ சாடிவிட்டு வெளியே சென்றாள்.

மூர்த்திக்கும், அந்த ஊருக்கும் சாயப்பட்டறையை தாண்டிய ஒரு பந்தம் உண்டு. அடிக்கடி அவர் இங்கு வந்து செல்வதும் உண்டு.

இங்கு இருப்பர்வர்கள் மேல் அதிக பாச உண்டு. அதிலும் தேவ் மேல் அதிக பாசம் உண்டு அதனாலையே இங்கு அடிக்கடி அவர் வருவார்.  தேவ் மனைவி கீர்த்தி மேல் உயிரையே வைத்திருந்தார் என்றுதான் சொல்லவேண்டும்.

அதனால்தான் தேவ் இறந்த கொஞ்ச நாளிலே அவளை அழைத்துக் கொண்டு சென்னை சென்றார்.

அகிலிடம் முறைத்துக் கொண்டு வெளியே வந்த தேஷி எல்லாரையும் பார்க்க, அங்கிருந்தவர்களோ அவளுக்கு பின்னே அகில் வருகிறானா என்றுப் பார்த்தனர்.

“என்ன சொல்லுறான் அவன்” தேஷி வெளியயே வந்ததும் அவளைப் பார்த்து கேட்டார் மூர்த்தி.

“இதோ… இதோ கிளம்பிடுறேன் பாஸ்” போனில் பேசியபடியே வெளியே வந்தான் அகில் தேவ்.

“மாம்… நான் உடனே கிளம்பணும். நீங்க அங்கிள் கூட வாங்க” என்றவன் மறக்காமல் தேஷியைப் பார்த்து, “அர்ஜென்ட் வொர்க் தேஷி… நான் உடனே கிளம்பணும்” அவளிடம் கூறி, எல்லாரிடமும் விடை பெற்று காரை நோக்கி சென்றான்.

செல்லும் அவனையே பார்த்திருந்தாள் தேஷி.

“என்னமா?”

“நத்திங் அங்கிள்” என்றவள் வீட்டின் உள்ளே செல்ல,

“என்னம்மா கீர்த்தி… இவ ஒண்ணுமே சொல்லாம போறா?” அவர் கேட்க, எல்லாரும் அதே கேள்வியைத்தான் கண்களில் தாங்கி நின்றனர்.

“தெரியல மாமா… ஆனா ஒன்னு அவ அகிலை தவிர யாரையும் கல்யாணம் பண்ண மாட்டா”

“அதுவும் சரிதான். நானும் பார்த்துட்டுதானே இருக்கேன். எந்த பையனை பார்த்தாலும் வேண்டாம் சொல்லுறது. கேட்டா பதில் சொல்லாம போறது. இப்போ பார்த்தாதான் தெரிது காரணம் அகில்னு” அவர் கூறவே,

“என்ன?” என்றபடி கீர்த்தியை தவிர, வீட்டில் எல்லாரும் அதிர. ஓரளவு தான் கணித்த விஷயத்தை கூறினார்.

மேலும் பல விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தவர்கள், உணவை உண்டு செந்தூருடன் வயலைப் பார்க்க கிளம்பினார் மூர்த்தி.

ஸ்வேதாவை, கையேடு அழைத்த கீர்த்தி தன்னறைக்கு சென்றாள்.

“என்ன கீர்த்தி”

“அகில்  உங்க பையனா? ஏன் என்கிட்ட இவ்ளோ நாள் சொல்லல”

ஸ்வேதாவுக்கும், மூர்த்திக்கும் இடையில் உள்ளவற்றை கூறியவர்… அகில், விஷ்ணு ஆபிஸ் சென்றதையும் கூறினார்.

அவர் கூறியதைக் கேட்டு முடிக்கவும், ரிஷி போன் செய்து, ரிஷிபாவின் நிச்சயவிழாவை கூறவும், மீண்டும் சென்னை வந்திறங்கினாள் கீர்த்தி.

***

மண்டபத்தை விட்டு வீட்டுக்கு வந்த விஷ்ணுவின் முகம் பயங்கர யோசனையில் இருந்தது.

‘அவள் ஏன் அப்படி பார்த்துட்டு போனா?’ இது மட்டும்தான் அவனது மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

‘நான் தவறு செய்கிறேனா?’

‘அதைதான் அவ சொல்லிட்டு போனா?’

‘ஏன் அப்படி சொல்லிட்டு போறா?’

‘யாருக்கு தெரியும்… ஆனா ஒன்னு அவ உன்னால் ரொம்ப பாதிக்க பட்டிருக்கா?’

‘அதுதான் தெரியுமே. அவ என்கிட்ட வேலை பார்க்கும் போது அவளை ரொம்ப கஷ்டபடுத்திட்டேன் போல.’

‘ரொம்ப கஷ்டம் மட்டும் இல்ல… அவளை நீ கேவல படுத்தின’

‘அவ மட்டும் அப்படி நடக்கலாமா? பொண்ணுங்களுக்கு மானம் மரியாதை முக்கியம் இல்லையா?’

‘ஏன் அது உனக்கு இல்லையா? அவளுக்கு மட்டும்தான் இருக்கனுமா?’

‘நான் ஆண்… அப்படி… இப்படிதான் இருப்பேன். அவளும் அப்படி செய்திருக்க கூடாது’

‘ஏன் ஆணுக்கு மட்டும் மானம் இல்லையா?’

‘அதெல்லாம் யாரும் கண்டுக்கமாட்டங்க. அப்படிதான் அம்மா எனக்கு சொன்னாங்க… நான் அப்படிதான் இருப்பேன்’

‘அப்போ அவளும் அப்படிதான் இருப்பா?’

‘அதனாலதான் அவளை நான் ஹோட்டல் கூப்ட்டேன்… ஓவராத்தான் சீன் போட்டுட்டு போனா… இவ்ளோ நாள் மூர்த்தி பின்னாடி சுத்தினா… இப்போ அந்த ரிஷி கூட சுத்துறா.’

‘அவளைப் பார்க்க அப்படியா தெரிது?’

‘அதுதான் எனக்கு டவுட். எப்படி ஒருத்தியால இப்படி ரெண்டு வேஷம் போடமுடியும்?’

‘அன்னைக்கு முதல் முறையா என்ன பார்த்து ஏதோ சொல்லி என்னை கட்டி பிடிக்கிறா? இப்படி முன்ன பின்ன தெரியாத ஒருத்தனை கட்டி பிடிச்சா அவ என்ன பொண்ணு’

‘ஏன் அப்படி பண்ணுனான்னு… நீ அவகிட்ட கேட்டியா?’

‘ஏன் கேட்கணும். எனக்கு தெரியாதா? எத்தனை பொண்ணுங்களை நான் பார்த்திருக்கேன்.’

‘எல்லாரையும் போல அவளை நினைச்சுதான் ஹோட்டல்க்கு கூப்பிட்டியா?’

‘ஆமா, அவளும் வந்தாள்தானே… எப்படி வந்தா தெரியுமா? என்னமோ கட்டின புருஷன் போல தோள்ல சாஞ்சிட்டு வந்தா. எப்படி எல்லாம் என்னை மயக்க பார்த்திருக்கா பார்த்தியா?’

‘ஏன் நீ அவ மேல மயங்கலியா?’

‘அதெல்லாம் இல்லை…’

‘என்ன இல்லை? உன்னை பத்தி தெரியாதா?’

‘என்ன தெரியும்?’

‘அப்ப மயங்கல… ஆனா இப்போ நல்லா மயங்கி இருக்க நீ?’ இத்தனை நேரம் மனசாட்சியுடன் வாதிட்டவன்,  போன் எடுத்துக் கொண்டு பால்கனியை நோக்கி சென்றான்.

ரொம்ப நேரம் போனை காதில் வைத்திருந்து, அங்கும் இங்கும் நடை பயின்றுக் கொண்டிருந்தான் விஷ்ணு.

‘என்னடா பண்ணுறா இவ? வேணும்ன்னே காலை அட்டென் பண்ணாம இருக்காளோ?’

‘ச்சே…ச்சே… அப்படிலாம் கீர்த்தி இருக்கமாட்டா?’ மீண்டும் மீண்டும் அவளுக்கு அழைக்க, அழைப்பு எடுக்கப் படவேஇல்லை.

‘என்னவா இருக்கும்’ யோசித்தவன், அகிலை அழைத்தான்.

“பாஸ்?”

“எங்க இருக்க அகில்”

“பிளாட்லதான் பாஸ்… ஆபிஸ் போகணுமா?”

“இல்லை… இல்லை” என்றவன் யோசனையாக புருவத்தை வருடிக் கொண்டான்.

‘அவனிடம் கேட்க வேண்டுமா?’ என்ற யோசனையும் வந்தது.

‘சரி கேட்டுதான் பார்ப்போமே’ முடிவெடுத்துக் கொண்டான்.

“அகில் நான் ஒரு நம்பர் தாரேன். நீ அந்த நம்பர்ல யாரவது அட்டென் பண்ணுறாங்களான்னு பார்த்து சொல்லு”

“ஓகே பாஸ்”

“நம்பர் வாட்சப்ல அனுபிட்டேன்” என்றவன் அழைப்பை நிறுத்தி அங்கும் இங்கும் நடந்தான்.

 விஷ்ணு அனுப்பிய நம்பர் டயல் செய்ய, ட்ரூ காலரில் ‘மனோ கீர்த்தி’ என வரவும், அவன் முகம் யோசனையில் சுருங்கியது.

அதேநேரம் அங்கு கீர்த்தி வீட்டில் பார்த்த, ‘தேவேந்திரன்’ முகம் கண்ணில் வந்துப் போனது. அவனுடன் சிரித்துக் கொண்டிருந்த கீர்த்தி முகமும் மனதில் வந்துப் போனது.

‘மூவருக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா?’ என்ற எண்ணம் மனதில் வந்தது.   

அவனுக்கும், இவனுக்கும் சம்மந்தம் இருக்குமா? என்று கொஞ்சமும் அகில் எண்ணிப் பார்க்கவில்லை. அவன்தான் விஷ்ணுவை சின்ன வயதில் இருந்து அறிந்திருகிறானே.

‘எதுவோ சரியில்லை’ யோசித்தவன், இப்பொழுது விஷ்ணு கூறியதற்காக அவளுக்கு அழைப்பு விடுத்தான். ரிங் போய் கொண்டே இருந்தது. எடுக்கத்தான் இல்லை.

மீண்டும் விஷ்ணுவுக்கு அழைக்க,

“அவ போன் எடுத்தாளா?” ஒரு ரிங்கில் போன் அட்டென் செய்த விஷ்ணுவின் இந்த கேள்வியை அகில் எதிர் பார்க்கவில்லை.

‘என்னாச்சு இவருக்கு?’ இவன் யோசித்துக் கொண்டிருக்க,

“டேய்… அகில்” அந்த பக்கம் கத்தினான் விஷ்ணு.

“பாஸ்… அவங்க போன் எடுக்கல” இவன் கூறிய அடுத்த நொடி, மாடியை விட்டு வேகமாக இறங்கியிருந்தான் விஷ்ணு.

“பாஸ்… பாஸ்” இவன் இங்கிருந்து கத்திக் கொண்டிருக்க, அவனிடம் இருந்து பதில் இல்லாமல் போகவும் போனை கையில் எடுத்துப் பார்க்க, அழைப்பை நிறுத்தியிருந்தான் விஷ்ணு.

“பாஸுக்கு இன்னைக்கு என்னா ஆச்சு” யோசனையுடன் போனையே பார்த்திருந்தான் அகில்.

“டேய் விஷ்ணு! எங்க இவ்ளோ வேகமா போற?”

 “கொஞ்சம் அர்ஜென்ட் வொர்க் மாம்”

“இன்னைக்குதான் நிச்சயம் ஆகிருக்கு விஷ்ணு. வெளிய எங்கையும் போக கூடாது… அவசர வேலைன்னா நீ அகில் கிட்ட சொல்லு அவன் பார்த்துப்பான்.

“நோ மாம்… நான்தான் போகணும்” என்றவன் அவரது பதிலை எதிர்பார்க்காமல் காரை நோக்கி ஓடினான்.

“விஷ்ணு சொன்னா கேளுப்பா” என்றபடி காரிகை அவனின் பின்னே செல்ல,

எதையும் கேட்காமல், காரை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டான்.

***

விழாவில் இருந்து மிகவும் கவலையாக சென்ற கீர்த்தியின் முகம், ரிஷியை சுற்றி சுற்றி வர, மனது கேளாமல் அவளுக்கு அழைத்தான்.

வெகு நேரம் அழைத்தும், அழைப்பை அவள் ஏற்காமல் போக, ‘என்னாச்சு கீர்த்திக்கு? இங்க வச்சே ரொம்ப டயர்டாதான் போனாங்க. சாப்ட வேற இல்லையே? என்ன பண்ணலாம்?’ யோசித்தவன், தன் காரை எடுத்துக் கொண்டு அவளது அப்பார்ட்மென்ட் நோக்கி சென்றான்.

அவளது வீட்டுக்கு சென்று கதவில் கையை வைக்க, கதவு தானாக திறத்துக் கொண்டது.

‘என்ன இப்படி திறந்து போட்டுட்டு இருக்காங்க?’ யோசனையுடன்,

“கீர்த்தி… கீர்த்தி” அழைத்தபடியே உள்ளே வந்தான் அவன்.

வீட்டின் அமைதி அவனை கலக்கம் கொள்ள வைக்க, ஹால் எதிரே தெரிந்த அறையை தட்ட கையை வைக்க, அதுவும் திறந்துக் கொண்டது.

கதவை திறந்துக் கொண்டு உள்ளே செல்ல, சுவற்றைப் பார்த்து திரும்பி கட்டிலில் படுத்திருந்தாள் கீர்த்தி.

அவளது அருகில் சென்று, “கீர்த்தி என்னாச்சு?” அவள் முன் நின்று கேட்க,

அவளிடம் பதில் இல்லாமல் போனது.

“கீர்த்தி” வேகமாக அவளது கை தட்டி அழைக்க,

மெதுவாக திரும்பினாள் அவள். இவனை காணவும் பதறி எழ, தலை பாரமாக இருக்கவும், தலையை பிடித்தபடி எழுந்தவள். அவனைப் பார்த்து விழித்தாள்.

அவளது கண்கள் சிவந்து, கன்னத்தில் கண்ணீர் தடம் தெரிய, அவனுக்கு யோசனையாகியது.

“என்னாச்சு ரிஷி?” இவள் அவனிடம் கேட்க,

“இத நான்தாங்க உங்கக்கிட்ட கேட்கணும் என்னாச்சு உங்களுக்கு… போன் போட்டா எடுக்கலை. என்னாச்சுன்னு வந்துப் பார்த்தா கதவை எல்லாம் திறந்துப் போட்டு தூங்கிட்டு இருக்கீங்க என்னாச்சுங்க?”

அப்பொழுதுதான் எல்லாம் நினைவு வர, “ஒன்னும் இல்லை ரிஷி. லேசா தலைவலி அதுதான் அப்படியே தூங்கிட்டேன் போல” அவனிடம் கூறிக் கொண்டே அவள் எழ,

 மடியில் இருந்த போட்டோ  அவன் கண் முன்னே விழுந்தது. அதைப் பார்த்த ரிஷி அதை ஊன்றி கவனிக்கும் முன், அதை எடுத்து மேஜையில் வைத்து வெளியே வந்தாள்.

“என்ன ஆச்சு கீர்த்தி?” அவளிடம் கேட்டுக் கொண்டு அவள் பின்னே வந்தாலும்,

அந்த போட்டோ கீர்த்தி கல்யாண போட்டோவா? மாலை போட்டு இருந்தாளே? பக்கத்துல இருந்தது யாரு? பார்த்தமாதிரி இருக்குதே?’ என்ற யோசனை ஒரு புறம் ஓடிக் கொண்டிருந்தது.

அருகில் இருந்த அறையை திறந்துக் கொண்டு, அவள் உள்ளே செல்ல, இவன் அவளது அறைக்கு சென்று அந்த போட்டோவை பார்த்தவன் அதிர்ந்தேப் போனான்.

‘என்னடா இது?’ அவன் மேலும் யோசிக்கும் முன் கதவு திறக்கும் சத்தத்தில், வெளியே வந்தவன் அவள் முகத்தையேப் பார்த்து இருந்தான்.

“வந்து நேரம் ஆச்சா ரிஷி” கேட்டவள் இப்பொழுது முகத்தை கழுவிய வந்திருந்தாள்.

“இல்லை… இப்போதான் வந்ததேன்… நீங்க உக்காருங்க தலைவலின்னு சொன்னீங்கதானே… சூடா காபி போட்டு தாரேன்” என்றபடி ஹால் அருகில் இருந்த கிட்சன் பக்கம் இவன் நகர,

“வேண்டாம் ரிஷி நான் பாத்துக்கிறேன்” இவள் தடுக்க,

“ஜஸ்ட் ஹெல்ப் கீர்த்தி” என்றவன் அவளது பதிலை எதிர்பார்க்காமல் பாத்திரத்தை எடுத்து கேசை பற்ற வைத்திருந்தான்.

தலையை தாங்கி அப்படியே ஹால் ஷோபாவில் அமர்ந்துவிட்டாள் கீர்த்தி. ‘இப்போ இவன் ஏன் வந்தான்? மச்சானை பார்த்திருப்பானோ? பாத்ரூம் விட்டு வெளியே வரும்போது யோசனையாய் பார்த்தானே?’ பல எண்ணம் சுழல அப்படியே அமர்ந்திருந்தாள்.

அடுத்த கொஞ்ச நேரத்தில் காபியை ஆற்றியபடி அவள் முன் வந்தான் ரிஷி. அந்த நேரம் ஹாலிங்க் பெல் அடிக்க, ரிஷி திறக்க வர,

“நீங்க இருங்க ரிஷி” என்றபடி இவள் கதவை திறக்க,

“ஏன் போன் அட்டென் பண்ணல?” கோபத்துடன் அவளை முறைத்தபடி அவன் உள்ளே நுழைய,

கையில் காபியை ஆற்றியபடி ரிஷி இவனைப் பார்க்க,

ரிஷியை இங்கு எதிர்பார்க்காத விஷ்ணு அதிர்ந்து நின்றான். இவனுக்கு மேல் அதிர்ந்து நின்றான் ரிஷி.

இவரின் அதிர்ச்சியையும் கண்டுக் கொள்ளாமல், ரிஷி கையில் இருந்த காபியை வாங்கி ஷோபாவில் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்த கீர்த்தி,

இருவரையும் மாறி மாறிபார்த்துபடி ஒவ்வொரு மிடராக காபியை அருந்திக் கொண்டிருந்தாள்.

வெல்வாள்…

வலி அதை ஒழி புது வழி பிறந்திடும் மாற்றம் உறுதி
தடை அதை உடை புது சரித்திரம் படை நாளை நமதே
வலி அதை ஒழி புது வழி பிறந்திடும் மாற்றம் உறுதி
நூறாக படை நூறாக தொட்ட இடமெல்லாம் தூளாக
நேராக வழி நேராக வெல்லலாம் தாறுமாறாக

 

 

 

Leave a Reply

error: Content is protected !!