Jeevan Neeyamma–Epi 5

171916099_840757923178210_3424615682123961255_n-f3bbbd5e

அத்தியாயம் 5

 

பேசிக் கொண்டேயிரு, இளையராஜாவின் இசையை விட மிக இனிமையாய் இருக்கிறது உன் குரல் என்பாள்! யாரவள்? என் ஜீவனவள்!

 

பாடத்தில் கவனமாக இருந்த ரஹ்மானை கதவு தட்டப்படும் ஓசை கலைத்தது. முன்னால் கரும்பலகையில் கணக்குப் போட்டுக் கொண்டிருந்த டீச்சர், கதவின் புறம் தன் கவனத்தைத் திருப்பினார். அங்கு நின்றிருந்தவளைப் பார்த்து என்ன வேண்டும் என மலாயில் கேட்டார் அவர்.

படக்கென நாற்காலியில் இருந்து எழுந்துக் கொண்டான் ரஹ்மான். ஆசிரியரிடம் தனக்கு தெரிந்தப் பெண் தான் என கூறிவிட்டு அவசரமாக மீனாட்சியை நோக்கிப் போனான்.

“என்னம்மா? என்னாச்சு?” என கேட்டவனைக் கண் கலங்கப் பார்த்திருந்தாள் மீனாட்சி.

அவளை அழைத்துக் கொண்டு காரிடரின் கடைசிக்கு சென்றவன்,

“என்னாச்சி மீனாம்மா?” என மீண்டும் கேட்டான்.

“எனக்கு என்னமோ ஆகிருச்சு ரஹ்மானு! வீட்டுக்குப் போகனும், பயமா இருக்கு” என சொல்வதற்குள் பல முறை தேம்பினாள்.

பதினைந்து வயது ரஹ்மானோ அவள் எதற்கு அழுகிறாள் என புரியாமல் கைகளைப் பிசைந்தான். என்னவோ அவள் அழுதால் மட்டும் இவனுக்குத் தாங்குவது இல்லை. அவன் அம்மா அமீனா அவனுக்கென்று பிரத்தியேகமாக தைத்துக் கொடுத்திருந்த கைக்குட்டையை யாராவது கவனிக்கிறார்களா என சுற்றும் முற்றும் பார்த்தவாறே பேண்ட் பாக்கேட்டில் இருந்து வெளியே எடுத்து அவளிடம் நீட்டினான். அந்த வயதில் கைக்குட்டை உபயோகப்படுத்தினால் நண்பர்கள் கேலி பேசுவார்கள். கைக்குட்டை எல்லாம் பெண்களுக்குத்தான் என்பது அவ்வயது ஆண் பிள்ளைகளின் மனநிலை. தாய் மனம் நோகக் கூடாது என பாக்கேட்டிலேயே சும்மா கிடக்கும் கைக்குட்டைக்கு இன்றுதான் வேலை வந்திருந்தது.

“இங்க பாரு மீனாம்மா! அழறத நிறுத்திட்டு என்னாச்சுன்னு சொன்னாதானே எனக்குப் புரியும்?”

முகத்தைத் துடைத்துக் கொண்டாலும் விடாமல் கண்ணீர் வழிந்தது. அழுதாளே தவிர வாயைத் திறந்து ஒன்றும் சொல்லவில்லை அவள்.

“பசிக்குதா? காசு வேணுமா?”

இல்லையென அவள் தலையாடியது.

“பேனாவ தொலைச்சிட்டியா?”

மீண்டும் தலையாட்டல்.

“டீச்சர் ஏசனாங்களா?”

“இல்ல!”

“அப்போ என்னான்னு சொல்லு மீனாம்மா!”

“அது வந்து ரஹ்மானு..அது..” என்றவள் பள்ளி பேக் வைத்து மறைத்திருந்த தனது பின் பக்கத்தைத் திருப்பி அவனிடம் காட்டினாள்.

அங்கிருந்த ரத்தக்கறையைப் பார்த்து பீதியாகிப் போனான் ரஹ்மான்.

“ஐயயோ, ரத்தம்! எங்கயாச்சும் கீழ விழுந்து அடிப்பட்டுருச்சா?” என பதட்டமாகக் கேட்டான்.

“இல்ல!! அதுவா வருது!”

“அதுவா எப்படி வரும்? கண்டிப்பா கீழ விழுந்துருப்ப! படில ஏறி இறங்கறப்ப பார்த்துப் போன்னு எத்தனை தடவ சொல்லறது உனக்கு!” என திட்ட ஆரம்பித்தவன், அவள் இன்னும் வேகமாய் தேம்பவும் கப்பென வாயை மூடிக் கொண்டான்.

“சரி அழாதே! வா உன் கிளாஸ் டீச்சர் கிட்ட போய் சொல்லலாம்! அவங்க மருந்து எதாச்சும் குடுப்பாங்க” என அவளை வகுப்பு ஆசிரியையிடம் அழைத்துப் போனான் ரஹ்மான்.

விஷயத்தை கேட்டு அறிந்துக் கொண்ட வகுப்பு ஆசிரியை, மீனாட்சியை சமாதானப்படுத்தி இதெல்லாம் பெண்களுக்கு இயற்கையாய் வருவதுதான் என கற்றுத் தந்து, நேப்கின் கொடுத்து எப்படி பயன்படுத்துவது எனவும் சொல்லித் தந்தார். சற்றுத் தள்ளி நின்றிருந்த ரஹ்மானுக்கு அவர்கள் இருவரும் பேசிக் கொண்டது நன்றாகவே கேட்டது. ஆசிரியர் மாதா மாதம் இது போல் வரும் என விளக்கி இருக்க, ஒவ்வொரு மாதமும் சில நாட்கள் உடம்பு சரியில்லை என தங்களோடு தொழுகைக்கு வராமல் இருக்கும் தாயின் நினைவு வந்தது ரஹ்மானுக்கு. அந்த நாட்களில் இரவு உணவு அப்துல்லா சமைக்க, இவன் தன் ஆயாவுக்கு(அப்பா) உதவி செய்வான். அதையும் இதையும் சம்பந்தப்படுத்திப் பார்த்தவன், இது பெண்களுக்கு மட்டும் வரும் கடுமையான மாதாந்திர நோய் என நினைத்துக் கொண்டான்.   

பதிமூன்றில் இருந்து பதினைந்து வயது வரை உள்ள பெண் பிள்ளைகள் பல சமயங்களில் பள்ளி வளாகத்திலேயே பூப்பெய்தி விடுவதால் தேவையான பொருட்களை பள்ளி ஆசிரியர்களே கைவசம் வைத்திருப்பார்கள் அப்பள்ளியில். அங்கே படிக்க வரும் முக்கால்வாசி மாணவர்கள் எஸ்டேட்டில் இருந்து வருபவர்கள். இவர்களுக்கு இந்த மாதிரி விஷயங்கள் பெரும்பாலும் வீட்டில் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை. வயதுக்கு வருவது, சடங்கு சுற்றுவது என பெண் பிள்ளைகளிடம் சொல்லப்பட்டாலும், அந்த நேரத்தில் என்ன மாற்றங்கள் வரும் என பெரும்பாலானாவர்கள் முற்று முழுதாய் கற்றுக் கொடுக்க மாட்டார்கள். (இது அந்தக் காலகட்டத்த பத்தி சொன்னேன். இப்போலாம் எவ்வளவோ அட்வாண்ஸா இருக்கோம். ஒரு ஆர்டிகள் படிச்சேன்! பெண் பிள்ளைங்க எப்போ வயசுக்கு வர போறாங்கன்னு நம்மால ஓரளவு கணிக்க முடியும்னு சொல்றாங்க. மார்பகம் வரது, ப்ரைவெட் பார்ட்ல, அக்குல்ள முடி முளைக்கிறது, லேசா வெள்ளைப் பட ஆரம்பிக்கறது இதெல்லாம் தெரிஞ்சதுனா இன்னும் ஆறு மாசத்துல இருந்து ஒரு வருஷத்துல வயசுக்கு வந்துடுவாங்க! அந்த மாதிரி சிம்டஸ் இருக்கறப்போ, ஜிப்லோக் பையில புது பேண்ட்டீஸ், சேனிடரி நாப்கின் எல்லாம் போட்டு அவங்க ஸ்கூல் பேக்ல, வெளிய போற பேக்ல எல்லாம் கண்டிப்பா வைங்க. எப்படி யூஸ் செய்யறதுன்னும் சொல்லிக் குடுங்க!)   

ஈஸ்வரியும், பெரும்பாலும் அவர்கள் குடும்பப் பெண்கள் பதினைந்து வயதில் தான் பூப்படைவார்கள் என்பதால் இவளுக்கு அதற்குள் கற்றுக் கொடுத்து பீதியாக்க வேண்டாமென ஒன்றும் சொல்லிக் கொடுத்திருக்கவில்லை. அதனால்தான் பயந்துப் போய்விட்டாள் பதின்மூன்று வயது மீனாட்சி.

டீச்சர் சொன்னது போல டாய்லேட் போய் செய்ய வேண்டியதை செய்து விட்டு வந்தவள், ரஹ்மானின் அருகில் வந்து அவன் கையைப் பற்றிக் கொண்டாள்.

“வீட்டுக்குப் போவனும் ரஹ்மானு! வயித்த வலிக்குது” என மெல்லியக் குரலில் முனகினாள்.

“போயிடலாம்! இரு வரேன்!” என்றவன் அவளது ஆசிரியையிடம் அனுமதி கேட்டு, பள்ளி போனிலிருந்து அவனது அப்பாவின் ஆபிசுக்கு போன் செய்தான். இன்னும் செல்போன் உபயோகம் பரவலாக வந்திருக்காத காலமது.

“ஆயா! ஈபூவுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாம போகுமே அதே மாதிரியே மீனாட்சிக்கும் இப்போ உடம்பு சரியில்லாம போச்சு. வீட்டுக்கு போகனும்னு அழறா! நீங்க ஸ்கூலுக்கு வாங்க” என்றான்.

அமீனாவைப் போல உடம்பு சரியில்லையா என குழம்பியவர், என்ன ஏது என விசாரிக்க, இவனுக்கு அதற்கு மேல் சொல்லத் தெரியவில்லை. ஆசிரியையிடம் போனைக் கொடுத்தான் ரஹ்மான். அவர் அப்துல்லாவுக்கு விளக்கமளிக்க, மீனாட்சியைப் பத்திரமாக பார்த்துக் கொள்ள சொன்னவர், உடனே கிளம்பி வருவதாக போனை வைத்தார்.

ரஹ்மானையும், தன்னிடம் பேசிய அப்துல்லாவையும், ரஹ்மானின் கையைப் பற்றியப்படி நின்ற மீனாட்சியையும் நினைத்து ஆச்சரியமாக இருந்தது அந்த சீன ஆசிரியைக்கு. மற்ற இனத்தவருக்குள் சகஜமாகப் பேசிக் கொள்வது என்பது சாதாரணமான விஷயம்தான். ஆனால் இவர்களின் அந்நியோன்யம் அவருக்கு அதிசயமாகத்தான் இருந்தது.

மரணத்தின் வாசலைத் தொட்டிருந்த தங்கள் குலக் கொழுந்தை காப்பாற்றி தந்தவள் மீனாட்சி என்றதால் அவளை ஆராதித்தனர் அப்துல்லா குடும்பத்தினர். தங்கள் கண்ணின் மணியை காப்பாற்ற மரணத்தின் வாசல் வரை சென்று வந்தவன் ரஹ்மான் என்பதால் அவனை அரவணைத்துக் கொண்டனர் அழகுவின் குடும்பத்தினர். அன்றிலிருந்து இரு குடும்பத்துக்குமிடையில் கண்ணுக்குத் தெரியாத ஒரு நுண்ணிய பந்தம் ஒன்று உருவாகியிருந்தது.

அந்த நாள், மீனாட்சியின் ஓலம் கேட்டு பதறி ஓடி வந்தார் அழகு. அங்கே அவர் கண்ட காட்சி உயிரையே உலுக்கிவிட்டது. தனது பாரம் தாங்காது மீனாட்சியும் இழுப்பட்டவாறே குளத்தில் விழ இருந்த நேரம் பட்டென பாவாடையை விட்டான் ரஹ்மான். அழகுவின் கண் எதிரேயே அவன் தண்ணீரின் உள்ளே போக, பாய்ந்து அவனை பிடித்து வெளியே இழுத்தார் அவர்.

“ஈசு! ஏ புள்ள!” என கத்திக் கொண்டே, ரஹ்மானை கீழே தரையில் கிடத்தி அவனுக்கு வேண்டிய முதலுதவி செய்தார். மெல்ல கண் விழித்தவனை பாய்ந்து கட்டிக் கொண்டார் அழகு.

“ஒன்னுமில்லைய்யா! என் ராசா, ஒன்னுமில்ல!” என்று அவனைத் தேற்றியவருக்கு கண்கள் கலங்கி விட்டது.

இருமிக் கொண்டே,

“மீனாட்சி?” என அவன் கேட்க, அவனை மீண்டும் படுக்க வைத்தவர் நகர்ந்துப் போய் மயங்கியிருந்த மகளைக் கையில் தூக்கிக் கொண்டார். அவள் கன்னங்களைத் தட்டி,

“அம்மாடி! செல்லம்மா! என் கண்ணு” என அரற்ற மெல்ல கண் விழித்தவள்,

“யப்பா, யப்பா! ரஹ்மானு, செத்துப் போயிட்டான். என்னாலத்தான் செத்துப் போயிட்டான்” என கதறினாள்.

மகளைத் தேற்றியவர்,

“இல்லடாம்மா! தோ பாரு! உசுரோடத்தான் இருக்கான் ரஹ்மானு!” என மகளின் முகத்தைத் திருப்பிக் காட்டினார்.

அவன் படுத்தப்படியே அவளைத் திரும்பிப் பார்க்க, தன் தகப்பனைக் கட்டிக் கொண்டாள் சின்னவள்.

“சாகல! ரஹ்மானு சாகல” என்றவள் இன்னும் தேம்பினாள்.

சத்தம் கேட்டு எல்லோரும் இவர்களைத் தேடிக் கொண்டு வந்தனர். மகளின் நிலையையும் ரஹ்மானின் நிலையையும் கண்ட ஈஸ்வரி கதறிவிட்டார். ஆறுமுகம் பாய்ந்து நண்பனைக் கட்டிக் கொள்ள, ராக்குதான் நிலைமையைக் கையில் எடுத்தார்.

“ஏட்டி! அழறத நிறுத்திட்டு துணி எதாச்சும் இருந்தா புள்ளக்குக் கட்டிவிடு! ட்ராயரோட நிக்கிறா பாரு” என்றவர்,

“பையன கொட்டாயிக்கு(கொட்டகை) தூக்கி வாப்பு! அங்க பழய சட்டைத் துணி இருக்கும். மாத்தி விடலாம்” என அழகுவிடம் சொன்னார்.

அழகு ரஹ்மனைத் தூக்க முயல, கூச்சத்தில் மறுத்தான் அவன். பிறகு முருகனும், ஆறுமுகமும் கைத்தாங்கலாக அவனை அழைத்து வந்தனர்.

“எலே பெரியவனே, அந்த பிளாஸ்க்க கழுவிட்டு, மூலைக்கடையில போய் சூடா கருப்பு காபி வாங்கிட்டு வா ஓடு! அப்படியே வடை போட்டிருந்தா, அதையும் எல்லாருக்கும் வாங்கிக்க. இந்த மலாயி பையனுக்கு பன்னு வாங்கிக்க! வடைலாம் சாப்புடுவானோ என்னமோ!” என தன் சுருக்குப் பையில் இருந்து பணம் எடுத்துக் கொடுத்தார் ராக்கு.

கொட்டகையின் ஒரு மூலையில், ப்ளாஸ்டிக் பைப் போட்டு பிள்ளைகளுக்கு மாற்று உடைகளைக் கட்டி வைத்திருப்பார் ஈஸ்வரி. அந்த துணிகளில் முருகனின் அளவு ரஹ்மானுக்கு சரியாக இருக்கும் என்பதால் பெரியவனின் டீஷர்ட்டும் அரைக்கால் ட்ரசுசர் ஒன்றும், துண்டும் எடுத்துக் கொடுத்தார். தேம்பிக் கொண்டிருந்த மகளை மறைவாய் அழைத்துப் போய் தான் அணிந்திருந்த கைலியாலேயே அவள் உடம்பு துடைத்து வேறு உடை அணிவித்து விட்டார். நடுங்கிக் கொண்டிருந்த மகளை இறுக்கி அணைத்துக் கொண்ட ஈஸ்வரி,

“ஒன்னும் இல்லடி கண்ணு! அந்த அம்மன் உனக்கு என்னிக்குமே துணை இருப்பான்னுதான் உனக்கு அவ பேரையே வைச்சிருக்கோம். எப்போவும் என் செல்லத்துக்கு எந்த கஸ்டம் வந்தாலும் அந்த ஆத்தா காவலா இருந்து காப்பாத்துவா! அழாதேடி ராசாத்தி” என சமாதானப்படுத்தினார்.

“நான் குளத்துல விழுந்துருப்பேன். ரஹ்மானு தான் என்னை பிடிச்சு தள்ளி விட்டு காப்பாத்துனான். அப்போ ரஹ்மானுதான் என்னைக் காக்க வந்த அம்மனா?”

மகளின் கேள்வியில் வாயடைத்துப் போனது ஈஸ்வரிக்கு. அவர்களின் பின்னால் வந்து நின்ற அழகு,

“ஆபத்து அவசரத்துக்கு உதவி செய்யற மனுஷங்க எல்லாரும் கடவுளோட அவதாரம்தான்மா செல்லக்குட்டி.” என்றவர் மகளைத் தூக்கி உச்சி முகர்ந்தார்.

வாங்கி வந்த காபியை அருந்தி வடையையும் சாப்பிட்டார்கள் அனைவரும். சின்னவர்கள் இருவரிடமும் மெல்ல பேச்சுக் கொடுத்து என்ன நடந்தது என அறிந்துக் கொண்டார்கள் பெரியவர்கள். ரஹ்மான் சோர்ந்துப் போய் தெரிய, அவனை வீட்டில் கொண்டு போய் விட சைக்கிளில் ஏற்றிக் கொண்டார் அழகு. பாதி வேலை அப்படியே நிற்க, மற்றவர்கள் வேலையைப் பார்க்க போக ஈஸ்வரி மகளை மடியில் படுக்க வைத்துக் கொண்டார். அவளும் ரஹ்மான் குளத்தில் விழுந்ததைப் பற்றி கதை கதையாக சொல்லிக் கொண்டே உறங்கிப் போனாள்.

அன்றிரவு எல்லோரும் தூங்கிய பின்,

“ஏய்யா! இன்னும் உறக்கம் வரலியா?” என கணவரைக் கேட்டார் ஈஸ்வரி.

“உனக்கு ஏன் உறக்கம் வரலியோ அதே காரணத்துக்குதான் எனக்கும் உறக்கம் புடிக்கல”

“இந்தப் புள்ளையாலே என் ஈரக்குல நடுங்கிப் போச்சுய்யா” என்ற ஈஸ்வரி நடுவில் படுத்திருந்த மகளின் கன்னத்தை வாஞ்சையாகத் தடவினார்.

அழகும் மகளின் நெற்றியைத் தடவிக் கொடுத்தார்.

“அந்தப் பையன் ரஹ்மான நெனைச்சா எனக்கு அப்படியே சிலிர்க்குதுடி ஈசு. நான் குளத்துக்கிட்டப் போனப்போ, அவன் பாரம் நம்ம புள்ளயே உள்ள இழுக்குதுன்னு, புடிச்சிட்டு இருந்த பாவாடைத் துணிய பட்டுன்னு விட்டுட்டான். இந்த வயசுல, நம்ம உசுரு போனாலும் பரவாயில்ல நம்மால இன்னொரு உசுரு போயிட கூடாதுன்னு நெனைக்குற பக்குவம் எத்தனைப் பேருக்குடி இருக்கு! அந்த மாதிரி பக்குவமெல்லாம் பெரியவங்க நமக்கு கூட இல்லடி! நான் போக கொஞ்ச நேரமாயிருந்தாலும் உசுர விட்டுருப்பான். ஒத்த பையன்டி அவங்க ஆத்தா அப்பனுக்கு! வீட்டுல விடறப்ப அவன் அம்மாத்தான் இருந்தாங்க! நான் விஷயத்த சொன்னதும் கண்ணு கலங்க பையனக் கட்டிக்கிட்டாங்க! ஒத்த வார்த்தை, உங்கள நம்பித்தானே அவன அனுப்பனேன், என் புள்ளய எனக்கில்லாம பண்ணப் பார்த்தீங்களேன்னு கேக்கலடி! ரஹ்மான நல்லபடி கொண்டு வந்து சேர்த்ததுக்கு நன்றிண்ணான்னு சொல்லுது அந்த மலாய் பொண்ணு!” என்றவருக்கு குரல் கரகரத்திருந்தது.

இதுவரை குளத்தில் விழப் போனவளை ரஹ்மான் காப்பாற்ற போய் அவன் குளத்தில் விழுந்து விட்டான் எனத்தான் தெரியும் ஈஸ்வரிக்கு. தன் உயிரை விடப் போனான் ரஹ்மான் என தெரிந்ததும், கண்கள் கலங்கிப் போனது அவருக்கு. மெல்ல விசும்பியவர்,

“நம்ம புள்ளைக்கு நாம உசுர் குடுத்தோம். அவளுக்கு ரெண்டாவதா அந்தப் பையன் உசுர் குடுத்துருக்கான். அவனை எந்தத் துன்பமும் நெருங்காம கடவுள் நல்லா வச்சிருக்கட்டும்!” என குரல் தளுதளுக்க சொன்னார்.

“ரஹ்மானு சாகல” என தூக்கத்தில் விசும்பினாள் மீனாட்சி. மகளைத் தட்டிக் கொடுத்து தூங்க வைத்தனர் அழகுவும் ஈஸ்வரியும்.

அங்கே ரஹ்மானின் வீட்டில்,

“அந்த டைம்முல மூச்சு கூட விட முடியல ஆயா. ஆறு தங்கச்சி துணிய தூக்கிப் போட்டு புடுச்சிக்க சொல்லிக் கத்துனா! நானும் புடிச்சுக்கிட்டேன். அவளே இத்துணூண்டுத்தான் இருப்பா! என் பாரத்த அவளால இழுக்க முடியல. அப்பவும் அவ துணிய விடவேயில்ல. நான் மூழ்கி மேல வரப்பல்லாம் ரஹ்மானு, ரஹ்மானுன்னு அவ அழுதுட்டே கத்துனதுதான் ஈபூ கேட்டுச்சு! அவளும் கொஞ்சம் கொஞ்சமா இழுபட்டு குளத்துக்குள்ள விழ பார்த்த சமயம் நான் துணிய விட்டுட்டேன். சின்னப்புள்ள ஈபூ அவ. ஆறுவோட செல்லம்! எனக்கே அந்த குளத்துல கால் தட்டுப்படல! அவ விழுந்தா என்னாகும். பாவம்ல!” என கதையாய் சொன்ன மகனைக் கட்டிக் கொண்டார் அப்துல்லா.

அவர் அருகே விசும்பியபடியே அமர்ந்திருந்தார் அமீனா.

“என் மகன் தைரியமானவனா, தன் சுகத்தை மட்டுமே நெனைக்காதவனா வளர்ந்திருக்கான்னு நெனைக்கிறப்போ எனக்கு ரொம்பவே பெருமையா இருக்கு ரஹ்மான்.” என்றவர் மகனை உச்சி முகர்ந்தார்.

ரஹ்மானுக்கு லேசாய் காய்ச்சல் ஆரம்பித்திருக்க, மந்திரித்த நீரைக் கொடுத்து மருந்தும் கொடுத்து அவனைப் படுக்க வைத்தார் அமீனா. அன்றிரவு பெற்றவர்கள் இருவருமே பாய் போட்டு மகனின் அறையிலேயே படுத்துக் கொண்டனர்.

“அவ அம்மா கூட பாவாடை சட்டைத் தைக்க வருவா அந்தப் பொண்ணு”

“எந்தப் பொண்ணுமா?”

“ஆறுமுகம் தங்கச்சி மீனாட்சி! துருதுருன்னு, ஒரு இடத்துல நிக்க மாட்டா! விளையாட்டுக் குழந்தை! அவள காப்பாத்த இவன் விழுந்திருந்தாலும், இவன அவ காப்பாத்திருக்காளே! சட்டுன்னு யோசிச்சு அவ உடுத்துனத கலட்டி இவனுக்குப் புடிச்சுக்க குடுத்துருக்காளே! நான் பாடுபட்டு பெத்து சீராட்டி வளத்தப் புள்ளயே எனக்குத் திருப்பிக் குடுத்துட்டாளே! அந்தக் குழந்தை எந்தத் துன்பமும் அண்டாம நீடூழி வாழட்டும்” என்றவர் அவளுக்காக தங்கள் கடவுளிடம் மனமுருக வேண்டிக் கொண்டார்.  

அந்த சம்பவமே இரு குடும்பத்தையும் பிணைத்தது. எப்பொழுதும் போல மீனாட்சி ரஹ்மானை வம்பிழுத்து வைத்தாலும், ரஹ்மான் அவளிடம் மல்லுக் கட்டுவதை அறவே நிறுத்தி இருந்தான். தனக்காக கண்ணீர் சிந்திய அவளது முகம் பசுமரத்தாணி போல அவன் நெஞ்சில் பதிந்துப் போனதுதான் காரணம். மீனாட்சி அம்மன் எனும் அவள் பெயரை சுருக்கி மீனாம்மா என அழைக்க ஆரம்பித்தான். அவர்களின் விளையாட்டில் அவளை சேர்த்துக் கொண்டான். அவன் ஆயா பென்சில் ரப்பர் என புதிதாக எது வாங்கித் தந்தாலும் அதை அவளுக்கு தானாகவே மனமுவந்துக் கொடுத்தான்.

ராயா(மலாய் நோன்புப் பெருநாள்) வந்தால் இவர்களுக்காக மாட்டிறைச்சி சமைக்காமல், விருந்துக்கு அழைத்தார்கள் அப்துல்லாவின் குடும்பத்தினர். ஆனாலும் தீபாவளி அன்று அவர்களை இவர்கள் வீட்டுக்கு அழைக்க முடியாமல் தவித்தார் அழகு. ராக்கு இன்னும் ராக்குவாகவே இருக்க, தீபாவளியின் மாலை நேரம் ராக்குவைத் தவிர மற்றவர்களுக்கு அப்துல்லாவின் வீட்டில் என ஆனது. இவர்கள் பலகாரம் எடுத்துப் போய் அங்கே கொண்டாடினார்கள். ராக்கு செய்யும் கல்லுருண்டைக்கு அப்துல்லா அடிமை என கூட சொல்லலாம். அப்துல்லாவின் வீட்டின் முன்புறம் இருந்த பரந்த நிலத்தில் பட்டாசு கொளுத்தி மகிழ்ந்தனர் பிள்ளைகள் அனைவரும்.

இப்படி போய் கொண்டிருக்க, ஆறுமுகமும் ரஹ்மானும் ஆரம்பப்பள்ளியை முடித்தார்கள். ஒரே இடைநிலைப்பள்ளிக்குப் போனாலும் ரஹ்மான் மலாயில் இன்னொரு பேப்பர் எழுதி பாஸ் ஆனதில் நேரிடையாக படிவம் ஒன்றுக்குக் போனான். ஆறுமுகம் அந்தப் பேப்பரில் பெயில் ஆனதால் புதுமுக வகுப்புக்கு சென்றான்.(தமிழ், சீன பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இடைநிலைப் பள்ளிக்குப் போகும் போது புதுமுக வகுப்புக்கு ஒரு வருடம் செல்ல வேண்டும். அதற்கு பிறகுதான் படிவம் ஒன்றுக்கு செல்ல முடியும். இடைநிலைப் பள்ளியில் எல்லாமே மலாயில் போதிக்கப் படுவதால், இது வரை தாய்மொழியில் கற்றவர்களுக்கு அட்ஜஸ்ட் செய்து கொள்ள அந்த ஒரு வருடம் உதவும்)   

அடுத்த இரண்டு வருடங்களில் பதிமூன்று வயதில் மீனாட்சியும் புதுமுக வகுப்புக்கு வந்தாள். அங்குதான் பிரச்சனை ஆரம்பமானது. அவளுக்கும் ரஹ்மானுக்கும் காலை வகுப்பு வர, ஆறுமுகத்துக்கும் முருகனுக்கு மாலை வகுப்பு வந்தது. காலையில் மகளைத் தனியாக பஸ் ஏற்றி அனுப்ப பயந்தார் அழகு. மற்ற பிள்ளைகள் அவளோடு போனாலும், இவள் விளையாட்டுத்தனமாய் பள்ளி முடிந்து வரும் போது பஸ்சை தவற விட்டு விடுவாளோ என கலங்கினார்கள் பெற்றவர்கள் இருவரும். அண்ணன்கள் இருந்தாலாவது கவனமாய் தங்களோடு அழைத்து வருவார்கள், அவர்களுக்கோ வேறு பள்ளி நேரம்.

அந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கொடுத்தார் அப்துல்லா.

“காலை ஸ்கூல் தானே மீனாவுக்கு, நான் கார்ல ரஹ்மான ஸ்கூல்ல விடறப்போ சேர்த்து கொண்டு போய் விட்டுடறேன். பள்ளி முடிஞ்சு அவன வீட்டுல விடறப்ப கூடவே கூட்டிட்டு வந்துடறேன். கவலைய விடு” என உதவிக்கரம் நீட்டினார்.

அன்றிலிருந்து மீனாட்சி பள்ளிக்கு ரஹ்மானோடு காரில் செல்ல ஆரம்பித்தாள். ராக்கு அதை ஆட்சேபித்தும், மகளை டீச்சராக்க வேண்டும் எனும் கனவில் தன் ஆத்தாவை சரிக்கட்டினார் அழகு. அந்தக் காலகட்டத்தில் தங்களது குழந்தைகளை ஆசிரியப் பணியில் அமர்த்தி அழகு பார்க்க வேண்டும் என்பது பல தமிழர்களின் கனவாய் இருந்தது. நிலையான கவர்மேண்ட் உத்தியோகம், பள்ளி விடுமுறை, பாதி நாள் வேலை என பல சௌகரியங்கள் இருக்க, திருமண மார்க்கேட்டிலும் ஆசிரியைகளுக்கு நல்ல டிமாண்ட் இருந்தது.(இது அந்த காலகட்டத்தின் நிலவரம். இப்பொழுது உள்ள ஆசிரியர்களின் வேலைப் பளுவை சொல்லி மாளாது! இதைப் படிக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் என் சார்பாக ஒரு சல்யூட்)

காரில் செல்லும் போதே தனக்குத் தெரியாத கணக்குப் பாடத்தை ரஹ்மானிடம் கேட்டுத் தெளிவுப் படுத்திக் கொள்வாள் மீனாட்சி. என்னவோ கணக்கு அவளுக்குப் பிடித்தப் பாடமாக இருந்தாலும், அது மட்டும் வரமாட்டேன் என மக்கர் செய்து அவளை மண்டைக் காய வைத்தது.

“ரஹ்மானு! நான் நல்லா படிச்சு கணக்கு டீச்சரா ஆவேன்”

“ஐயோ பாவம்! உன்கிட்ட வாய்ப்பாடே நாய்ப்பாடு படுது! நீ படிச்சுக் குடுக்கப் போற பிள்ளைங்க என்ன பாடு படுமோ!” என கிண்டலடிப்பான் ரஹ்மான்.

“ச்சீ பே!” என முகத்தைத் திருப்பிக் கொள்வாள் மீனாட்சி.

சின்னவர்கள் இருவரின் சண்டையை சிரிப்போடு பார்த்திருப்பார் கார் ஓட்டிக் கொண்டிருக்கும் அப்துல்லா. அப்படியே அப்பா மகனிடம் மலாயில் பேசி தனது மலாய் மொழியையும் வளப்படுத்திக் கொண்டாள் மீனாட்சி.

அழகுவைப் போலவே அமைதியாய் அன்பாய் சாந்தமாய் இருக்கும் அப்துல்லாவை மீனாட்சிக்கு ரொம்பவேப் பிடிக்கும். அதுவும் பாசமாய் அவர் அழைக்கும் ‘சி கெச்சிக்’(சின்னவளே) எனும் அடைமொழி இவளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. அன்பு காட்டுபவர்களிடம் நம்மை அறியாமலே உரிமை உணர்வு எழுமில்லையா, அது போலத்தான் இவளுக்கும் அப்துல்லாவின் மீதும் அவர் பெற்ற ரஹ்மானின் மீதும் உரிமை உணர்வு பொங்கி வழிந்தது. அமீனாவிடம் பேசி சிரித்தாலும், கிட்டத்தட்ட வாரத்தில் ஐந்து நாட்கள் பார்த்துப் பழகும் அப்துல்லாவிடமும் ரஹ்மானிடமும்தான் அவளுக்கு அன்பு அதிகம் இருந்தது.   

பள்ளியில் அழகு சாப்பாட்டுக்குக் கொடுத்தப் பணத்தைத் தொலைத்து விட்டாலோ, திடீரென ஆசிரியை புதிய புத்தகம் வாங்க வேண்டும் என சொன்னாலோ, அல்லது அவளுக்கே அன்று பாட்டிலில் விற்கும் கொக்கோ கோலா குடிக்க வேண்டும் என தோன்றினாலோ ரஹ்மானிடம் தான் போய் நிற்பாள் மீனாட்சி. அழகு கொடுக்கும் பணம் உணவுக்கு மட்டுமே வரும். ஒரு ரிங்கிட் இருபது காசு கொடுத்து பாட்டில் பானங்கள் குடிக்கும் அளவுக்கு வராது. என்னதான் ஓடாய் தேய்ந்து உழைத்தாலும், விலைவாசி அது பாட்டிற்கு ஏறிக் கொண்டிருக்க, மூன்று படிக்கும் பிள்ளைகளை வைத்துக் கொண்டு அவராலும் மகளுக்கு நினைத்ததையெல்லாம் கொடுக்க முடியாமல்தான் போனது.

இவளோ என்னவோ கொடுத்து வைத்தது போல உரிமையாய்,

“ரஹ்மானு! காசு குடு!” என வாரத்துக்கு ஒரு முறையாவது அவனிடம் கை நீட்டியபடி நிற்பாள். அவனும் மறுக்காமல் கொடுப்பான்.  

வயதுக்கு வந்ததில் இருந்து மீனாட்சி கொஞ்சமாய் அடக்க ஒடுக்கமாகி இருந்ததைத் தவிர இவர்களின் வாழ்க்கை சீராய் சென்றுக் கொண்டிருந்தது. மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்கிணங்க எஸ்டேட் வாழ்க்கையில் பல மாற்றங்கள் வர ஆரம்பித்தன.

‘இயற்கை மணம் வீசும் பால் மரக் காட்டிலே, வாழ்க்கை தேயுது செம்மண்ணு ரோட்டிலே’ என வரும் உள்ளூர் பாட்டுக்குப் பொருத்தமாய் சம்பள உயர்வு இல்லாமல், முன்னேறி வரும் மற்ற இனத்தவர்களில் இருந்துப் பின் தங்கி, விலைவாசி உயர்வால் வெந்து நொந்துப் போனார்கள் தமிழ் மக்கள். 90களின் தொடக்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் எஸ்டேட்களை விட்டு வெளியேறி வேறு வேலைகள் பார்த்து தங்கள் குடும்பத்தை முன்னேற்றப் போராடினார்கள்.

சேமிப்பு இல்லாமல் வாய்க்கும் வயிற்றுக்கும் மட்டும் கட்டி வரும் சம்பளத்தை வைத்துக் கொண்டு அழகுவுக்கும் மூச்சு முட்டிப் போனது. எவ்வளவு காலத்துக்குத்தான் குடும்பமே முழு மூச்சாய் உழைப்பது! பிள்ளைகள் எதிர்காலத்துக்காக, பினாங்கில்(இன்னொரு மாநிலம்) இருந்த சீன தொழிற்சாலையில் லாரி ஓட்டும் வேலைக்கு அழைத்த தனது மச்சானின் அழைப்பை ஏற்றுக் கொள்வது என முடிவெடுத்தார் அழகு. ஆடு, மாடுகளை எல்லாம் விற்று, காபி தோட்டத்தை இன்னொருவருக்கு கை மாற்றி விட்டு பிழைப்பைத் தேடி குடும்பத்தோடு கிளம்பிவிட்டார் பினாங்குக்கு.

தனது ஆருயிர் நண்பன் ஆறு பிரிந்துப் போவதை நினைத்து மனமுடைந்துப் போனான் ரஹ்மான். கட்டிப் பிடித்துக் கொண்ட இருவருக்கும் கண்ணீர் கரைபுரண்டு ஓடியது. அடிக்கடி கடிதத்தின் வாயிலாக தொடர்புக் கொள்ளலாம் என பேசி, அழுது, சமாதானமாகி, மீண்டும் அழுது என பாசப் போராட்டமே நடந்தது. ரஹ்மானை நெருங்கிய மீனாட்சி, அவன் கையில் அவள் போற்றி பாதுகாத்து வரும் நான்கு கலர் குண்டுகளை வைத்தாள். பால் வண்ணத்தில் அங்கங்கே கலர் கலராய் இருக்கும் அந்தக் குண்டுகள்.(மார்பெல்ஸ்—தமிழ்ல இது குண்டுதானே? நாங்க இங்க அப்படித்தான் சொல்வோம்)

“என்ன மறந்திட மாட்டல்ல ரஹ்மானு?” என கேட்டவளின் கண்கள் கலங்கி இருந்தன.

வார்த்தை வராமல், இல்லை என்பது போல தலையை மட்டும் ஆட்டினான் அவன்.

“நான் போய்ட்டு வரேன் ரஹ்மானு!” என தேம்பியபடியே டாக்சியில் ஏறிக் கொண்டாள் அவள்.

டாக்சி கிளம்பிப் போகவும் தான் தன்னிலை அடைந்தான் ரஹ்மான். கையில் இருந்த குண்டைப் பார்த்தவனுக்கு, தான் அவளுக்கு ஒன்றும் கொடுக்கவில்லையே என உறைத்தது. டாக்சியில் பின்னால் ஓடியவனை, பாவமாகப் பார்த்தார் அப்துல்லா.

அவன் ஓடி வருவதைப் பார்த்து டாக்சி நிற்க,

“என்னப்பா?” என கேட்டார் ஈஸ்வரி.

“மீனாம்மாவுக்கு நான் ஒன்னும் திருப்பிக் குடுக்கலையே!” என்றவன் சட்டென தன் கழுத்தில் அணிந்திருக்கும் குட்டி தங்க சங்கிலியைக் கலட்டினான்.

மற்றவர்கள் எதுவும் சொல்லும் முன்னே, மீனாட்சியின் கைப்பிடித்து அவள் உள்ளங்கையில் அதை வைத்தவன்,

“வச்சிக்கோ!” என சொல்லி மடமடவென தனது தகப்பனை நோக்கி நடந்துவிட்டான்.

“என்னடா இவன் பவுன கலட்டிக் குடுத்துட்டுப் போறான்!” என வாயைப் பிளந்தார் ராக்கு.

அழகுவோ முன் சீட்டில் இருந்து இறங்கி அப்துல்லாவைப் பார்க்க, மகனை கட்டிப் பிடித்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தவர், வைத்துக் கொள்ளட்டும் என்பது போல சைகை செய்தார் அழகுவுக்கு.  

மனம் கனக்க, அப்துல்லாவுக்கு கையாட்டி விட்டு டாக்சியில் ஏறி அமர்ந்தார் அழகு.

தன் நண்பனின் உடம்பு சூட்டால், உள்ளங்கையில் வெம்மையாய் இருந்த அந்த சங்கிலியை இறுக்கமாய் பொத்தி வைத்துக் கொண்டாள் மீனாட்சி அம்மன். அவள் வாய்,

“ரஹ்மானு!” என முணுமுணுத்தது.

 

ரஹ்மான் இஸ் எ வொர்ட்

ரஹ்மானு இஸ் என் இமோஷன்!!!!

 

(ஜீவன் துடிக்கும்…)

 

(போன எபிக்கு லைக் கமேண்ட் போட்ட அனைவருக்கும் நன்றி)