வில்லனின் வீணையவள் அத்தியாயம் 13

வில்லனின் வீணையவள் அத்தியாயம் 13
13.
வீணா மித்ரனின் பொறுப்பின் கீழே இருந்த ஆடையகம் வந்து ஐந்து மாதங்களைக் கடந்திருக்க,
வீணா இங்கு வந்த மறுநாளே மித்ரன் அவர்களின் வர்த்தகம் தொடர்பிலான மாநாடு ஒன்றில் கலந்துக்கொள்ள சென்றான். சென்றவன் தன் தொழில் துறை ஒரு மாத அளவுக்கொண்ட கற்கைநெறி ஒன்றினை தொடர்ந்து சிறப்பாய் முடித்துக்கொண்டே திரும்பினான்…
இது இவன் வழக்கம், தெரியாத துறையில் நுழைந்துவிட்டோம் என்று தன்னை யாரும் கை நீட்டி பேசிட சந்தர்ப்பம் அளித்திட விரும்பாதவன்.தான் செல்லும் இடங்களில் அது தொடர்பான சிறந்த கல்விகளை தன்னுள் ஏற்றிக்கொண்டு அதனை சிறப்பாய் தன் தொழிலிலும் சேர்த்துக்கொள்ளும் வித்தைக்காரன்.
திரும்பி அவன் இங்கே வர அவனை திரும்பி பார்த்திட வேண்டியவளோ அங்கே அப்படியொருவன் இருப்பதாய் கண்டுகொள்ளவே இல்லை. மித்ரன் வெளிநாடு சென்றது இவளுக்கு அங்கே பொருந்திக்கொள்ள இலகுவாய் அமைந்துவிட்டது. மித்ரன் வர அவனுக்கே ஆச்சர்யம்…
ஆடையகம் முற்றுமுழுதாய் புதுப்பிக்கப்பட்டிருந்தது. புதுரக நுணுக்கங்களை கையாண்டு வாடிக்கையாளர்களை குவித்திருந்தாள். அதை கண்களில் காட்டியவன் வார்த்தையில் சொல்லிடவில்லை. காரணம் ஏனென்றும் அவனால் உணர்ந்திட முடியவும் இல்லை. அவளோடு பேசிட நினைக்கும் பொழுதுகள் எல்லாம் ஏதோ ஓர் தயக்கம் தன்னை சூழ்வதை உணர்ந்தான்.
தன்னால் அவளை நெருங்க ஏதோ தடுப்பதை உணர்ந்தவன், அது தான் ஏற்கனவே ஓர் பெண்ணை காதலித்திருக்க, மீண்டும் ஒரு முறை எப்படி இன்னுமொரு பெண் தன்னுள் நுழையலாம் என்பதே காரணமாய் ஏற்றிருந்தான்.
வீணாவோ அவன் வந்தது முதல் தன்னை அழைத்து பேசுவான், பாராட்டுவான் என்று அவன் கண்ணெதிரேயே நடமாடிக் கொண்டிருக்க அவனோ அவள் அங்கிருப்பதாய் கண்டுக் கொள்ளவே இல்லை.
கண்டுக்கொள்ளவும் நேரம் வந்தது.
பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் தம் மாடல் பெண்களுடன் ஆடைத்தெரிவுக்காக வந்திருக்க அவர்களுடன் வீணாவே நேரடியாக உடைத்தெரிவு செய்திட உதவிக்கிகொண்டிருக்க, தன் அறையில் அமர்ந்திருந்தவாரே கணினித் திரை ஊடாக பார்த்துக்கொண்டிருந்தான் மித்ரன்.
“உங்களுக்கு எப்படியான துணி வச்சு செய்யணும்னாலும் நம்ம கிட்டயே அதுக்கான ஆட்கள் இருக்காங்க. உங்களுக்கு ஏதுவா பண்ணித்தரலாம்.”
“ஓஹ் அது ரொம்ப இலகுவாக்கிடும் நம்ம வேலையை. ஆனா நம்ம கிட்ட இருக்க மாடல் தான் இதுக்கு சரியா வருவாங்கலானு தெரில. அந்த வாடிக்கையாளர் கையில் வைத்திருந்த சில ஆடைகளை வீணாவின் மேல் போட்டுப்பார்க்க, அவனுடன் இருந்த மற்ற பெண்களும் அதைக்கண்டு அவளுக்கு மிகப் பொருந்துவதாய் கூற, வீணாவுக்கு சங்கடமாகிப்போக,
“யூ கைஸ் கேரி ஓன்…”
அவ்விடம் விட்டு வெளிவரப்பார்க்க,
அங்கு வந்திருந்த பெண் ஒருர்த்தி,
“அச்சோ சாரி மேம்,பிலீஸ் பி வித் அஸ், நீங்க இருந்தது ரொம்ப உதவியா இருந்தது எங்களுக்கு.”
“சாரி நான் சும்மாதான், நீங்க தப்பா நினைச்சுக்க வேணாம்.” என்று அந்த வடிவமைப்பாளரும் கூறிட, வீணாவுக்கு சங்கடமாகிப்போனது. இருக்கவும் முடியாமல் போகவும் இயலாமல் இருக்கும் படியாயிற்று.
இப்படியே இன்னும் ஓர் பத்து நிமிடங்கள் கடந்திருக்கும், ஒருமணி நேரமாக இவர்களையே கண்காணித்துக் கொண்டிருந்த மித்ரனுக்கோ கோபம் எக்கச்சக்கமாய்…
அந்த வடிவமைப்பாளர் இடையே இவளையும் பேச்சோடு இணைத்துக்கொள்ள இவளும் சிரித்து பேசும் பாடியாயிற்று.தன் இருக்கையில் இருந்து எழுந்தவன் நேராக வீணா இருக்குமிடம் சென்று,
வாடிக்கையாளர்களைப் பார்த்தவன் திரும்பி வீணாவை ஓர் பார்வை பார்க்க அவளோ அவனை பார்க்க முன்னமே திரும்பியவன் அவளை கையோடு இழுத்துக்கொண்டு அவனறைக்குள் நுழைந்தான். நுழைந்தவன் அவளின் மணிக்கட்டோடு பிடித்திருந்த கையை இழுக்க அவன் நெஞ்சோடு மோதி நின்றிடத் தடுமாற, அவளை இடையோடு சேர்த்துக்கொண்டவன் தன்னோடு அருகிழுத்து,
“நானும் எவ்வளவு நேரம் பார்த்திட்டு இருக்கேன். நீ என்னன்னா அவனோட
சிரிச்சிட்டே அவன் குடுக்குற உடையெல்லாம் போட்டு காமிச்சிட்டே இருக்க…’
‘ஹ்ம்ம்.. என்னதான் நினைச்சிட்டு இருக்க உன் மனசுல, காலைல இருந்து ஒரு வார்த்த என்கிட்ட பேச நேரமில்லை மேடம்க்கு அவன் கூட ஒரு மணிநேரம் நின்னுட்டு இருக்க நேரமிருக்கோ…”
மித்ரன் அவன் அறியாது அவன் உள்ளக் குமுரல்களை அவளிடம் கொட்டிக்கொண்டிருக்க, வீணாவின் நிலை…
அவன் கைவளைவில் அத்தனை உரிமையோடு தன்னை பேசிக்கொண்டிருக்க, கனவெல்லாம் தினம் நடக்கும் நிகழ்வுகள் மனதோடு வந்துச் செல்ல அவனை விழி அகலாது பார்திருந்தாள்…
அவளிடையில் மித்ரன் சற்று அழுத்தி தன்னோடு இன்னும் சேர்த்துக்கொள்ள, இவளைறியாது பேசினாள்.
“வீரா, என்ன பண்றீங்க?” இடையில் இருந்த மித்ரனின் கையினை விலக்கியவாறே கூற, அவனோ அவளருகே இன்னும் நெருங்கி,
“வீணா நான் பார்க்காதப்ப பார்த்துட்டே இருக்க, நான் பார்க்கணும்னு நினைக்கிறப்ப ரொம்ப தள்ளிப் போற, உன் பார்வை என்கிட்டே ஏதோ சொல்லிட்டே இருக்கு எனக்கு புரிய மாட்டேங்குது, எதுக்கு இப்டி பண்ற? “
அவன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தவள், அவன் அப்படிக் கேட்கவும் கண்கள் கலங்கிவிட, ‘எனக்கான காதல் உங்ககிட்ட இருக்கான்னு தெரில வீரா, உங்களுக்கானது மொத்தமா என்கிட்ட வச்சிருக்கேன்… அது என்னோடவே இருக்கட்டும். அதைக்கொண்டு உங்களை வருத்த வேணாம்னு நினைக்கிறேன் ‘ மனத்தில் கூற அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன்,
‘இப்பவும் ஏதோ சொல்ல வர,ஆனா சொல்ல மாற்ற… “
“அப்டில்லாம் ஏதும் இல்ல. ப்ளீஸ் விடுங்க நான் போகணும்…”
“நீ என்னனு சொல்லு விடுறேன்.”
“ஒன்னுமில்லை விடுங்க யாரும் வந்துரப்போறாங்க.”
“இல்ல சொல்லு அப்போதான் விடுவேன்…”
அவளை தன்னோடு சேர்த்துக்கொள்ள மூன்னொருமுறை தன்னை சேர்த்தணைத்தது நினைவு வந்துவிடும் என்ற பதட்டத்தில்,
“மித்ரன்… யூ கிராஸ்ஸிங் யூர் லிமிட்ஸ்… உங்ககிட்ட வேலை பார்க்குறவங்க கிட்ட இப்படித்தான் நடந்துப்பீங்களா? “
அவனை பின் தள்ளியவாரே கேட்டுவிட,
சட்டென்று எதிலிருந்தோ விடுபட்டவன் போல மித்ரன் சுய உணர்வை அடைந்தான். தான் செய்யும் செயல் கொஞ்சமும் தன் சுயத்துடன் செய்தது அல்லவே. எனக்கென்ன ஆயிற்று, மனம் நிலையில்லாமல் தவிக்க,
“அம் எக்ஸ்ட்ரீம்லி சாரி வீணா. ஏதோ நினைப்புல அம் சாரி.” தன் இரு கைகளை உயர்த்தி மன்னிப்பு கேட்க, இவளுக்கு அவனை வாரி அணைத்துக்கொள்ளவே துடித்தது…
அந்தபக்கம் திரும்பி மித்ரன் நின்றுக்கொள்ள இவளோ,
” வீரா… ” என்று அழைத்திட அவன் திரும்ப வில்லை. அவளுக்கும் அதற்கு மேல் அங்கிருக்க துணிவில்லாமல் அவன் அறைக்குள்ளே அவளுக்காய் ஒதுக்கப்பட்ட இடத்தில் போய் அமர்ந்துத்துக்கொண்டவள் இவனை திரும்பியும் பார்க்கவில்லை.இவள் ‘வீரா’என்று அலைக்க அவன் மனதில் ஏதோ சொல்லொண்ணா நினைவு வருகிறது, ஆனாலும் என்னவென்று உணரும் முன்னே மறையும் நினைவுகளை எண்ணி குழம்பிப்போனான்…
சிறிது நேரத்தில் மித்ரன் அவ்விடம் விட்டு சென்றிட வீணா அதன் பிறகே தன்னை வேலையில் ஈடுப்பிடுத்திக்கொண்டாள். மாலை வரை வேலைகள் இருக்க பகல் உண்ணாததை வாசுகி அழைத்து கேட்கவுமே உணர்ந்தாள்.
“ம்மா பசிக்கவே இல்லம்மா,அதான்.”
“நீ பசிச்சு எப்போ சாப்டிருக்க பட்டு… சாப்பிடு முதல்ல, உடம்பு என்னத்துக்காகுறது?”
“ம்மா நான் இப்போது கிளம்பப் போறேன். வீட்டுக்கு வந்தே சாப்பிடறேன் ஓகேவா. அப்பா வந்துட்டாங்களா?”
“ஹ்ம்ம் இப்போதான் வந்தாங்க. கிச்சாவும் இப்போதான் பேசுனான். சண்டே ஈவினிங் வந்துருவார்களாம் டா.”
“ஓஹ், ஓகே ம்மா நான் வந்துர்றேன் வச்சுறட்டுமா…”
வாசுகியோடு பேசிவிட்டு மித்ரனின் இருக்கையை பார்த்தவள் அவன் வந்தில்லாததை கண்டு அதன் அருகே சென்று இருக்கையை வருடிக்கொடுத்தவரே,
‘இப்படியே எவ்ளோ நாளைக்குன்னு தெரியல வீரா, உங்களுக்கு என் நினைவுகள் வராதுன்னு இருந்தா கண்டிப்பா நானாகவே உங்களை நெருங்கியிருப்பேன்.நான் நெருங்க நீங்க உங்க நினைவுகள் வந்து உங்களை கஷ்டப்படுத்திக் கொள்வீங்களாண்ணு இருக்கு. என்ன பண்றதுன்னே தெரில.’
வாய் விட்டு புலம்பியவள் வீட்டுக்கு கிளம்பினாள். இவள் கீழ் தளம் வர இவர்களது மற்றைய அங்காடியின் முகமையாளர் ஒருவர் அவசரமாக கிருஷ்ணாவை சந்திக்க வேண்டுமென்று கூற இவள் அவன் இல்லாததைக் கூறி விடயம் என்னவென்று கேட்டிட, இவர்களின் ஆடை குடோனில் இன்று காலை கொண்டுவரப்பட்ட பொருட்களின் தரவுகள் சரிவர பார்க்கபடவில்லை, தாமதமானால் ஏதும் மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்க முடியாமல் போகும் என்றும் கூற, மித்ரன் நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று கூறியதாகவும் சொல்ல, வீணாவுக்கு அங்கு செல்லும்படியாயிற்று.
இவளே இவளது வண்டியில் சென்று பார்ப்பதாகக் கூறியவள் வாசுகியிடம் அவசரமாக வேலை வர சற்று தாமதமாகும் என்று கூறி விட்டு வண்டியை செலுத்தினாள் குடோன் நோக்கி.
இதுவரை வந்திராததால் மேனேஜர் வழி கூற அலைபேசியில் வழி பார்த்தப்படி சென்றவள் சென்று நின்ற இடம் காண மனதுக்கு சொல்ல முடியா ஓர் நடுக்கம், பயமா என்னவென்று சொல்லிடமுடியவில்லை…
மித்ரனை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அன்று வழியில் ஓடி வந்தவள் மட்டுமே நினைவில் மீண்டும் மீண்டும் வர மெதுவாக வண்டி விட்டிறங்கினாள்…
இரங்கவும் அங்கு வேலையில் ஈடுபட்டிருத்தோர் அருகே வந்து பேச, அங்கிருந்த பொறுப்புக்களை முடிக்க நேரம் பறந்தோடியது.
மணி எட்டைத் தொட்டிருக்கும்… அவ்விடத்தின் பாதுகாப்பு பொறுப்பில் இருந்த பாதுகாவலர் தான் உணவு உண்ணச் சென்று பத்து மணியளவிலேயே வருவதாக கூறினார்…
“சரி நீங்க போய்ட்டு வாங்க நான் இன்னும் ஒரு பத்து நிமிஷத்துல கிளம்பிருவேன்.” என்று வீணா கூற அவனும் கிளம்பிச் சென்றான். வீணா வண்டியில் ஏறினாலும் ஒருமுறை மேல் தளம் சென்று பார்க்க வேண்டும் என மனம் கெஞ்ச, உணவுண்ணச் சென்றவன் வரநேரமாகுமே, அதனால சீக்கிரமாக போய் விடலாம் என்று நினைத்துக்கொண்டு வண்டியை குடோன் வாயிலை கடந்து பாதை ஓரமாக நிறுத்தி விட்டு உள்ளே சென்றாள்.
உள்ளே சென்றவளுக்கு அன்று தான் இங்கு எப்படி வந்தோம் என நினைவில்லை என்றாலும் இங்கு தனியே மித்ரனுடன் இருந்த நாட்களின் நினைவுகள் மீட்டியப்படியே படிகளில் ஏறி மேல்தளம் சென்றாள். அங்கிருந்த அறைக் கதவு திறந்தே இருக்க இவளும் நுழைய கதவு தானாகவே பூட்டிக்கொண்டது.