விழிகள் 01

விழிகள் 01
இத்தாலி நகரத்தின் அந்த விழா அரங்கம் ஏகப்பட்ட பாதுகாவலர்கள், அதிகாரிகள் சூழ நிறைந்திருக்க, அந்த அரங்கத்தின் சிவப்பு நிற சிம்மாசனங்களில் ஒய்யாரமாக வீற்றிருந்தனர் தொழிலதிபர்கள் மற்றும் ஹோலிவூட் திரைப்பட நடிகர், நடிகைகள்.
சரியாக, ஒரு விருதுக்கான அறிவிப்பு!
“சிறந்த தொழிலதிபருக்கான விருது”
சில விழிகள் பொறாமையுடன் அங்கு அமர்ந்திருந்த ஒரு பெண்மணியின் மேல் படிய, இன்னும் சில விழிகள் ஆர்வமாக அவர் மேல் படிந்திருந்தன. சரியாக அவர்களுடைய இதழ்கள் அவருடைய பெயரை முணுமுணுக்க, இங்கு மேடையில் “த அவார்ட் கோஸ் டூ மிஸஸ்.மாயா மஹேஷ்வரி ரோஹன், மேனேஜிங் டிரெக்டர் ஆஃப் ஐரா கம்பனீஸ்.” என்று அவருடைய பெயர் அறிவிக்கப்பட்டது.
தன் இருக்கையிலிருந்து எழுந்து ஒருவித கம்பீரத்தோடு மேடையை நோக்கிச் சென்றவரைப் பார்ப்பவர்களுக்கு வியக்காமல் இருக்க முடியாது. இருபத்தியைந்து வயதில் தன் குழுமத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்று இப்போது வரை திறம்பட நடத்திவரும் அவருடைய திறமையில் எல்லோருக்குமே வியப்புண்டு.
சேலையில், கொண்டையிட்டு அதைச் சுற்றி மல்லிகைச்சரம் சூடி மிதமான ஒப்பனையில் வசீகரமாக மேடையில் ஏறி தனக்கான விருதை வாங்கிய மாயாவின் பார்வையோ அங்கு தன்னிருக்கைக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த தன் கணவனின் மேல்தான் முதலில் படிந்தது. அங்கு மேடையில் நின்றிருந்த தன் காதல்மனைவியைப் பார்த்திருந்த திரைப்பட நடனக் கலைஞரான ரோஹன் சைத்தன்யாவின் விழிகளில் அத்தனை பெருமை!
அன்று இவர்களின் இளம் வயதில் இதே மேடையில் இதே விருதை மாயா வாங்கிய தருணம்தான் அவருடைய சிந்தனை முழுவதும். இன்று அவருடைய கனவும் நிஜமாகியதற்கு காரணமே அவரவள் தானே! ஒரு தொழிலதிபராக, ஒரு மனைவியாக, ஒரு அம்மாவாக என்றும் தன் கடமைகளில் தவறாத தன் மனைவியைப் பற்றி அவரிடத்தில் ஒரு கர்வம் இருக்கத்தான் செய்யும்.
இங்கு மேடையில் விருதை வாங்கிய மாயா, “ஐ டெடிகேட் திஸ் அவார்ட் டூ மை வர்கர்ஸ்.” என்று புன்னகையுடன் சொல்ல, அதிலேயே பல பேருக்கு புரிந்துப் போனது தொழிலாளர்கள் மீது மாயாவிற்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும்.
விழா முடித்து கேளிக்கை விருந்தில் கூட கலந்துக்கொள்ளாது தம் உயர்ரக காரின் பின்சீட்டில் வெளியே பார்வையைப் பதித்தவாறு வந்த மாயாவின் புருவ முடிச்சுகள் அவர் ஏதோ தீவிர யோசனையில் இருப்பதை உணர்த்த, சிறிதுநேரம் தன் மனைவியை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்த ரோஹனுக்கு பொறுமை காற்றில் பறந்துப் போனது.
“அம்மு…” அவரின் அழைப்பில் சட்டென திரும்பிய மாயா, “ஆங் ரூஹி.” என்று மலங்க மலங்க விழித்தவாறுக் கேட்க, அவள் கன்னத்தை தாங்கியவர், “என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று கேட்டார் தணிந்த குரலில்.
“இந்தியாவுல இருந்து வந்து பத்து வருஷத்துக்கு மேலாகுது. ஆரம்பத்துல எந்த பிரச்சினையும் இல்லை, ஆனா இப்போ மங்ளூர் பிரான்ச்ல ஏகப்பட்ட குழப்பம். புதுசா வந்த சில கம்பனீஸ் நம்ம கோஸ்மெடிக் ஃபோர்மியூலாவ திருட ட்ரை பண்றாங்க. இதுல அட்மினிஸ்ட்ரேஷன் வேற…” மாயா பேசிக்கொண்டேச் செல்ல, அவரை இடைவெட்டி “அதான் கீர்த்தியும் அலைஸும் இருக்காங்களே! தென் வாட்?” என்று கேட்டார் ரோஹன்.
“கீர்த்திக்கு இப்போ அடிக்கடி உடம்புக்கு முடியாம போகுது. அலைஸ்ஸால தனியாளா இருந்து சமாளிக்க முடியல ரூஹி, ஏதோ ஆத்விதான் அப்பப்போ அலைஸுக்கு ஹெல்ப்பா இருக்கா.” மாயா சொன்னதுமே, “ஆத்விகா…” அந்த பெயரைப் புன்னகையுடன் முணுமுணுத்தன ரோஹனின் இதழ்கள்.
“கொலேஜ் படிக்கும் போது கீர்த்தி எப்படியிருந்தான்னு உனக்கு நியாபகம் இருக்கா அம்மு? கொழுக்கு மொளுக்குன்னு பப்ளியா…” அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே தன்னவனை குறிக்கிட்டு, “அப்படியே டெடிபெயார் மாதிரி” என்று சொல்லி சிரித்த மாயா, “பட், அவ பொண்ணு ஆத்வி அப்படி கிடையாது. ஷீ இஸ் வெர்ரி ஃபேமஸ் மொடெல் இன் மங்ளூர். இன்பேக்ட், நெக்ஸ்ட் எங்க ப்ரோடெக்ட் அட்வடைஸ்மென்ட்டுக்கு அவளையே மொடலா வைக்கலாம்னு என் ஐடியா.” என்று சொல்ல, புன்னகைத்தார் ரோஹன்.
“ம்ம்… சின்னவயசுலயிருந்து ஐரா கோஸ்மெடிக்ஸ் மேல அவளுக்கு ஒரு தனி ஆர்வம் இருக்கு. பட், கீர்த்தியோட குணத்துல கொஞ்சமும் அவக்கிட்ட கிடையாது. அப்படியே அவ அப்பா தருண் மாதிரின்னுதான் சொல்லணும். எதுலேயும் முதலாவதா இருக்கணும்னு ரொம்ப யோசிப்பான்னு அடிக்கடி தருண் சொல்வான்.” ரோஹன் சொல்ல,
“ரூஹி, மங்ளூர் பிரான்ச்ச நம்ம ஆளுங்க யாராச்சும் பொறுப்பெடுத்துக்கணும். என்னால இங்கயிருந்து வர முடியாது. இப்போ நான் மெய்ன் பிரான்ச்ச விட்டுப் போனா கழுகு மாதிரி நம்மள அடிக்க காத்துக்கிட்டு இருக்குறவங்களுக்கு சாதகமாயிரும். நம்ம பசங்கள்ல யாரையாச்சும்…” என்று இழுத்த மாயா, “மஹி.” என்று நிறுத்த, இப்போது யோசனையில் புருவத்தை நெறிப்பது ரோஹனின் முறையானது.
“மஹி கம்பனியோட முழுப்பொறுப்பை ஏத்துக்கிட்டே ஆகணும். சீக்கிரம் அவன மங்ளூருக்கு அனுப்பலாம். நீ என்ன சொல்ற ரூஹி?” மாயா தயக்கமாக கேட்க, “எப்போவும் உன் வார்த்தைகள்ல தடுமாற்றம் இருக்காது. இப்போ நீ திணறும் போதே புரிஞ்சிக்க! நீ சொல்றது நியாயம் இல்லை. மஹிக்கு எதுல ஆர்வம் இருக்குன்னு உனக்கு தெரியும்.” என்றவர் தாடையை நீவி விட்டவாறு, “ஆனா, எனக்கு ஒரு டவுட்டு. யாருக்கிட்டயிருந்து மஹிக்கு இந்த பழக்கம் உருவாகிச்சு? நம்ம இரண்டு பேருக்கும் அதுக்கும் சம்மந்தமே இல்லையே!” என்று கேலியாக கேட்டார்.
“என் அம்மாக்கிட்டயிருந்து.” பெருமையாக வந்தன மாயாவின் வார்த்தைகள்.
“அவங்களுக்கு இந்த மாதிரி கலைப் பொருட்கள் வடிவமைக்குறதுல ஆர்வம் அதிகம். மஹி பண்ற மாதிரி மெழுகு பொம்மைகள் கூட கையால பண்ணுவாங்க. அப்படியே பாட்டி மாதிரியே இருக்கான்.” மாயா தன் தாயின் நினைவில் மென்புன்னகையோடுச் சொன்னவாறு தன்னவனின் தோளில் சாய்ந்துக்கொள்ள, “அவனுக்கு பிடிச்ச மாதிரி இருக்கட்டும் பேபி, மாயா யாரையும் எதுக்காகவும் ஃபோர்ஸ் பண்ண மாட்டா.” தன்னவளின் நெற்றியில் முத்தமிட்டவாறு காதலாகச் சொன்னார் அவர்.
“அப்போ…” என்று இழுத்த மாயாவிற்கு சரியாக நியாபகத்திற்கு வந்தது அந்த ஒருவனுடைய முகம்.
சட்டென்று நிமிர்ந்து அமர்ந்தவர், “வேணா அவன அனுப்பலாமா?” என்று கேட்டு எங்கோ பார்ப்பது போல் பாவனைச் செய்ய, தன்னவளின் பாவனையிலேயே அது யாரென்று புரிந்துக்கொண்ட ரோஹனுக்கு பிபி எகிறத் தொடங்கியது.
“அகஸ்டின்” பற்களைக் கடித்துக்கொண்டுச் சொன்னவர், “அவன பத்தி மட்டும் பேசாத!” என்று கத்திவிட, “என்ன ரூஹி இது? அலைஸ், சஞ்சய் அண்ணா அவன பெத்தவங்களா இருந்தாலும் சின்னவயசுலயிருந்து அவன வளர்த்தது நான்தான்.” என்றார் மாயா சிலிப்பிக்கொண்டு.
சட்டென திரும்பிப் பார்த்து, “இப்போ அது இல்லைன்னு நான் சொன்னேனா? ஆனா அவன், வயசுக்கு தகுந்த மாதிரியா நடந்துக்குறான்? அலைஸ்கிட்ட இருக்குற பொறுப்பு, சஞ்சய்கிட்ட இருக்குற நிதானம் எதுவுமே அவன்கிட்ட இல்லை. இந்த வயசுலயே அம்புட்டு திமிர்! ஆணவம்! மஹியாச்சும் அப்பப்போ கம்பனி பக்கம் எட்டி பார்ப்பான். ஆனா இவன்? முதல்ல இவனோட பாக்கெட் மணிய கட் பண்ணணும். அதுதான் என்னோட அடுத்தகட்ட நடவடிக்கை.” பொறிந்துக்கொண்டேச் சென்ற ரோஹனுக்கு, “அகியோட வயசு அப்படி! அதெல்லாம் போக போக சரியாகிடும்.” என்ற தன் மனைவியை ‘என்ன செய்தால் தகும்?’ என்றிருந்தது.
“இன்னைக்கு நீ வாங்கின அதே விருதை அவன் வயசுல நீ லண்டன்ல வாங்கின. அவனோட இதே வயசுலதான் நான், தருண், சஞ்சய் மூனு பேரும் வளர்ந்து வரும் இளம் தொழிலதிபர் விருதை வாங்கினோம். ஆனா அவன், இதுவரைக்கும் ஒரு சொம்பு கூட கிஃப்ட்டா வாங்கினதில்லை.” ரோஹன் சொல்ல, மாயாவோ திருதிருவென விழித்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.
அவரும் என்னதான் செய்வார்? எதைப் பற்றியும் கவலைப்படாமல் வெளிநாட்டு கேளிக்கைகளில் மூழ்கியிருக்கும் அகஸ்டினிடம் பொறுமையாக பேசுவதென்பதே நடக்காத காரியம்தான்.
சரியாக, ரோஹனுக்கு ஒரு அழைப்பு வர, அதை ஏற்று பேசியவருக்கோ கோபம் புசுபுசுவென்று எகிற, பற்களை நரநரவென கடித்துக்கொண்டார். ஆனால், இதைப் பக்கத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த மாயாவுக்குதான் ஒன்றும் புரியவில்லை.
அழைப்பைத் துண்டித்தவர், “மஹிய அனுப்புறோமோ, இல்லையோ? அந்த அடங்காதவனை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்தாச்சு.” என்று சொல்லி, ஒரு இடத்திற்குச் செல்லுமாறு ஓட்டுனரிடம் சொல்ல, மாயாதான் ‘ஆத்தீ! என்ன பண்ணி வச்சிருக்கான்னு தெரியல்லையே… போச்சு போச்சு!’ என்று உள்ளுக்குள் புலம்பித் தள்ளிவிட்டார்.
அதேசமயம் அந்த காவல் நிலையத்தில், இருவேறு முகபாவனைகளில் நின்றிருந்தனர் அந்த ஆடவர்கள் இருவர். அதுவும், சிறைக்கம்பிகளுக்கு பின்னால்.
“சார் ப்ளீஸ், லீவ் அஸ்! நாங்க எதுவுமே பண்ணல்ல. சொனோ லா ராஜோனே (அவர்கள்தான் காரணம்)” பதட்டத்தில் ஆங்கிலம், தமிழ், இத்தாலியன் என மூன்று மொழிகளிலும் குளறியபடி மஹி என்ற மஹேந்திரன் சைதன்யா கம்பிகளைப் இறுகப்பற்றி கெஞ்சிக்கொண்டிருந்தான் என்றால், சுவற்றில் ஒற்றைக்காலை மடக்கி விசிலடித்தவாறு சாய்ந்து நின்றிருந்தான் அகஸ்டின் அலட்சிய முகபாவனையுடன்.
அப்படியே வெளிநாட்டவன் போலிருக்கும் அகஸ்டின் தமிழ்ப்பையன்தான் என்று சூடத்தில் அடித்து சத்தியம் செய்தால் கூட யாரும் நம்ப மாட்டார்கள். இவனுடைய அலட்சியப்பாவனையால் மஹியின் கத்தல்கள் அனைத்தும் காற்றில் கரைந்த கற்பூரமாகித்தான் போனது போலிஸ் அதிகாரிகளிடம்.
“இப்போ எதுக்கு நொய்நொய்னு சும்மா கத்திக்கிட்டு இருக்க சைத்து? அதான், த க்ரேட் ரோஹன் சைதன்யா நம்மள பத்தி தெரிஞ்சிக்க ஒரு உழவுத்துறை அமைச்சு வச்சிருக்காரே! இந்நேரம் எப்படியும் நியூஸ் போயிருக்கும். மஹேஷ்வரி குடும்ப கௌரவத்துக்காகவாச்சும் இங்கதான் வந்துக்கிட்டு இருப்பாங்க.” அலட்சியமாக வந்த அவனுடைய வார்த்தைகளில் மஹிக்கோ ஏகத்துக்கும் கோபம் எகிறியது.
அகஸ்டினை முறைத்துப் பார்த்தவன், “நீயெல்லாம் திருந்தவே மாட்ட, ச்சே! உன்னை யாருடா போய் அவன் மண்டைய சரக்கு போத்தலால பொழக்க சொன்னது? உன்னாலதான்டா இப்போ நான் போலிஸ் ஸ்டேஷன் வாசலை மிதிக்க வேண்டியதா போச்சு!” கடுகடுவென பொரிய,
“அவன் உன்னை வேணும்னு இடிச்சிட்டு போவான், என்னை பார்த்துக்கிட்டு இருக்க சொல்றியா?” அதே கடுப்போடு பதில் கேள்வி கேட்டான் அகஸ்டின்.
“என்னை அடிச்சா உனக்கென்னடா? மைன்ட் யூவர் ஆன் பிஸ்னஸ் அகஸ்த்து.” மஹி அழுத்தமாகச் சொல்ல, “அப்படியெல்லாம் எனக்கென்னன்னு விட முடியாது. உன் மேல கை வைச்சா, ஐ வில் ஸ்லேஷ் ஹிம்.” விழிகள் சிவக்க சொன்னவனுக்கு தன் மேல் இருக்கும் முரட்டுப் பாசத்தில் தவித்துப் போனது என்னவோ மஹிதான்.
கொஞ்சமும் நிதானமில்லாத கோபம் அகஸ்டினுடையது. மஹேந்திரன் பொறுமையாக யோசித்து நிதானமாக ஒரு அடியெடுத்து வைப்பான் என்றால், ஒருவித வேகத்தில் எதையாவது செய்து பிரச்சினையில் சிக்கி அதையும் ஊதி பெரிதாக்குவான் அகி என்றுதான் சொல்ல வேண்டும்.
இவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போதே புயல் வேகத்தில் ரோஹன் உள்ளே நுழைய, தன் தந்தையை பார்க்க முடியாமல் மஹி முகத்தை திருப்பிக்கொண்டான் என்றால், “சீக்கிரம் சீக்கிரம்! வளவள கொழகொழன்னு பேசாம விஷயத்தை சொல்லி வீட்டுக்கு அழைச்சிட்டு போங்க. பசிக்குது.” என்ற அகியின் வார்த்தைகளில் ரோஹனுக்கு பிபி எகிறத் தொடங்க, “அரே பகவான், என்னை காப்பாத்து!” பயத்தில் வாய்விட்டே முணுமுணுத்தான் மஹி.
அடுத்த சில நிமிடங்களில் அந்த அரண்மனை போன்ற வீட்டின் நடு ஹோலில் கைகளை கட்டி தரையை வெறித்தவாறு மஹி நின்றிருக்க, சுவற்றில் மாட்டியிருந்த கண்ணாடியில் தலைமுடியை சிலுப்பிவிட்டு சரி செய்தவாறு நின்றிருந்தான் அகி.
ஆனால், அடுத்தகணம் மஹிக்கு கன்னத்தில் விழுந்த அறையில் தன்னெதிரே நரம்புகள் புடைத்து ஆத்திரத்துடன் நின்றிருந்த ரோஹனை திடுக்கிட்டு நோக்கிய அகஸ்டின், “மாமா, நீங்க எப்படி சைத்துவ…” என்று கோபமாக ஏதோ சொல்ல வர, அடுத்து அவனுடைய கன்னத்தில் ரோஹன் விட்ட அறையில் அதிர்ந்துவிட்டான் அவன்.
“ரூஹி…” மாயா பதட்டமாக அழைக்க, “சஞ்சய்யோட பையன் எனக்கும் பையன்தான். அடிக்க எல்லா உரிமையும் இருக்கு.” அழுத்தமாக உரைத்தவர், விழிகளை அழுந்த மூடித் திறந்து அகஸ்டின் பார்த்த பார்வையில் கொஞ்சமும் பதறவில்லை.
“நான் ரோஹன் சைதன்யா. உன் முறைப்பையெல்லாம் என்கிட்ட வச்சிக்காத!” என்று கூர்மையான விழிகளுடன் சொன்னவர், “உங்க இரண்டு பேருக்கும் நான் ரொம்பவே இடம் கொடுத்துட்டேன். நாளுக்கு நாள் இரண்டு பேரோட நடவடிக்கையும் சரியில்லை. அதுவும் நீ…” என்று அகஸ்டினை நோக்கி விரலை நீட்டி “இல்லாத கெட்ட பழக்கமே இல்லை.” பற்களை கடித்தவாறுச் சொல்ல, “ஐயா என் வயசுல பண்ணாததை ஒன்னும் நான் பண்ணல்ல.” ஏளனமாகச் சொன்னான் அகஸ்டின்.
அதில் “மாயா…” என்று ரோஹன் கத்த, “நீங்க ஏத்துக்கலன்னாலும் அதான் நெசம்.” அகஸ்டினும் பதிலடிக் கொடுக்க, “வாய மூடுடா குரங்கு!” திட்டியவாறு முழங்கையால் தன் நண்பனுக்கு மஹி அடித்தான் என்றால், “ஐயோ முருகா!” என்று இருபக்கமும் சலிப்பாக தலையாட்டினார் மாயா.
ரோஹனோ அகஸ்டினை முறைத்துப் பார்த்து, “சஞ்சய், அலைஸ் கண்டிப்பா உன்னை மாதிரி இல்லை.” என்று சொல்ல, “வாட்எவர்! சீக்கிரம் பனிஷ்மென்ட் கொடுங்க. தூக்கம் வருது.” என்று வழக்கம் போல் வீட்டில் கிடைக்கும் தண்டனையை எண்ணி சொன்னவன், அடுத்து ஏளனச் சிரிப்போடு ரோஹன் சொன்ன தண்டனையில் அந்த இடமே அதிரும் வண்ணம் “வாட்!” என்று கத்தியேவிட்டான்.
“இது கொஞ்சமும் சரியில்லை. ஐ வில் நொட் அக்செப்ட் திஸ்.” அகி காட்டுக்கத்து கத்த, “பனிஷ்மென்ட் ஒன்னும் பர்மிஷன் கேட்டு கொடுக்க மாட்டாங்க. இன்னும் ஒரே வாரத்துல இரண்டு பேரும் இந்தியா கிளம்புறீங்க.” என்றுவிட்டு அவர் அங்கிருந்து அவர் பாட்டிற்கு நகர, இவனால்தான் கொஞ்சமும் அதை ஜீரணிக்க முடியவில்லை.
“என்ன உங்க பாட்டுக்கு போறீங்க. என்னால போக முடியாது அவ்வளவுதான். நான் போக மாட்…” என்று கத்தியவாறு எதேர்ச்சையாக திரும்பியவனின் வார்த்தைகள் தன் பக்கத்தில் நின்றிருந்தவனின் முகத்தில் தெரிந்த தேஜஸில் அப்படியே நின்றன.
ரோஹன் சொன்னதுமே அகஸ்டினுக்கு எதிரான மனநிலையில் உச்சகட்ட ஆனந்தத்தில் அப்பட்டமாக சிரித்தவாறு நின்றிருந்தான் மஹி. அதற்கான காரணம் அவன் மட்டுமல்ல, அகஸ்டினும் அறிந்ததே!
“அகஸ்த்து, நாம இந்தியா போறோம்.” ஒரு மாதிரிச் சிரித்தவாறு மஹி சொல்ல, “நோ சைத்து, அப்படி சிரிக்காத! நீ மட்டும் அப்படி பண்ணேன்னா அப்றம் அவ்வளவுதான். ஐ வில் கில் யூ இடியட்!” என்ற அகஸ்டினின் வார்த்தைகள் எங்கு அவன் காதில் விழுந்தன?
ஒருவாரம் கழிந்த நிலையில், அந்த விமானநிலையத்தில்,
“நான் வர மாட்டேன். முடியாது. என்னை விடுடா துரோகி!” தன்னை தரதரவென இழுத்துச் செல்லும் தன் நண்பனை சமாளிக்க முடியாது மொத்தப் பேரும் தன்னைப் பார்ப்பதை கூட கண்டுக்கொள்ளாது கெட்ட கெட்ட வார்த்தைகளால் தன் தோழனை அர்ச்சித்தவாறு அகஸ்டின் மஹியின் இழுப்பிற்கு காலைத் தரையில் தேய்த்தவாறுச் செல்ல, அந்த முரட்டு ஆண்மகனுடன் போராடி விமானத்தில் ஏறுவதற்குள் மஹிக்கோ போதும் போதுமென்று ஆகிவிட்டது.
இத்தாலியிலிருந்து இந்தியாவுக்கு பயணம் ஆரம்பமாக, இவனுடைய வாழ்க்கையை புரட்டி போடவென காத்திருக்கும் அவனவளை சந்திக்கப் போவதைக் கூட உணராது இந்தியாவில் பல வருடங்கள் கழித்து தன் முதல் காலடியை வைத்தான் அகஸ்டின்.
ரோஹன், தருண், சஞ்சய் மூன்று பேருமே கல்லூரி நண்பர்கள். ஆர்.டீ.எஸ் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர்கள். அலைஸ் மாயாவின் சிறுவயது நண்பி என்றால், மாயாவுக்கு கல்லூரியில் கிடைத்த தோழியே கீர்த்தி.
பற்பல பிரச்சினைகளை கடந்து ரோஹனும் மாயாவும் கரம் பிடித்திருக்க, திருமணமானதும் தன் சொந்த ஊரான இத்தாலியிலிருந்து மங்ளூருக்கு வந்துவிட்டார் மாயா, அதுவும் இத்தாலியிலுள்ள உலகத்திலேயே முதல்தரத்திலிருக்கும் ஐரா நிறுவனத்தின் முக்கிய கிளையை தனக்கு விசுவாசமானவர்களின் பொறுப்பில்விட்டு.
மஹிக்கு பதினெட்டு வயது வரை மங்ளூரிலேயே இருந்தவருக்கு மீண்டும் பிரதான கிளையை சில போட்டி நிறுவனங்களிடமிருந்து காப்பாற்ற வேண்டிய கட்டாயம். மஹிக்கு பதினெட்டு வயதில் மீண்டும் இத்தாலி செல்வதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்க, சிறுவயதிலிருந்து வெளிநாட்டு வாழ்க்கை மீது மோகம் கொண்டிருக்கும் அகஸ்டினோ தன் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டான்.
என்னதான் அலைஸ் இத்தாலியில் பிறந்து வளர்ந்திருந்தாலும் திருமணமான பின் சஞ்சய்யுடன் மங்ளூரிலிலேயே தங்கிவிட, கிட்டதட்ட இத்தாலியை தலை முழுகியே இருந்தார். ஆனால், ரோஹனும் மாயாவும் மஹியை அழைத்துக்கொண்டு செல்வதாக பேச்சை ஆரம்பித்ததுமே வீட்டில் அலுச்சாட்டியம் செய்ய ஆரம்பித்துவிட்டான் அகஸ்டின்.
“நான் அத்தைய விட்டு இருக்க மாட்டேன். சைத்து இல்லைன்னா சாப்பிட மாட்டேன். நானும் இத்தாலியிலதான் மேல்படிப்பு படிப்பேன்.” மொத்த குடும்பத்துக்கும் மத்தியில் இத்தாலிக்கு செல்வதற்காக அவன் பேசிய பேச்சை இன்றும் யாராலும் மறக்க முடியாது. ஆனால், மஹிக்குதான் இத்தாலி செல்வதில் அப்போதே சற்றும் பிடித்தம் இல்லை.
“நான் வர மட்டேன். ப்ளீஸ் மம்மி, நாம இங்கேயே இருப்போம்.” இன்று அகஸ்டினை மஹி இழுத்துச்சென்றது போல்தான் அன்று விமான நிலையத்தில் மஹி கதறிய கதறல்களை எல்லாம் கண்டுக்கொள்ளாது தூக்கியேச் சென்றான் அகஸ்டின். இப்போது பத்து வருடங்கள் கழித்து மீண்டும் இந்தியாவிற்கு!
படிப்பு முடிந்து இந்தியாவுக்கு அழைத்த போதும் பல சாக்கு போக்குகள் சொல்லி, செல்ல மறுத்து இத்தாலிலேயே டேரா போட்டவன் அவன்! இன்று தண்டனையாக அவனை கதற கதற இந்தியாவுக்கு அனுப்பியிருக்க, விமானத்திலிருந்து முகம் சிவந்து இறுகிய முகமாக இறங்கியவனைப் பார்த்த மஹிக்கே சற்று உள்ளுக்குள் குளிரெடுத்தது.