💕நெஞ்சம் மறப்பதில்லை.💕16.

💕நெஞ்சம் மறப்பதில்லை.💕16.

நெஞ்சம் மறப்பதில்லை.16.

 

காருண்யா மருத்துவமனை. காத்திருப்போர் வரிசையில் சண்முகம்,கண்ணன் மற்றும் ஆதியா

அமர்ந்திருந்தனர். அந்த அறைக்கு வெளியே டாக்டர் நாராயணன் நியூராலஜிஸ்ட் எனும் பெயர்ப்பலகை ஒட்டப்பட்டிருந்தது.

அவர் என்ன கூறப்போகிறார் என்ற பதற்றம் சண்முகம் முகத்தை விட, மற்ற இருவர் முகத்திலும் அதிகமாகத் தெரிந்தது. 

 

ஏற்கனவே அவரை சந்தித்து, அவரது பரிந்துரையின் பேரில், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ரிப்போர்ட்டோடு, அவரை சந்திக்க இப்பொழுது காத்திருக்கின்றனர்.

 

“கண்ணன்!” மணியடித்து பெயர் அழைக்கப்பட, மூவரும் உள்ளே சென்றனர்.

 

டாக்டர் நாராயணன் அறுபதுகளைக்கடந்த… படிப்பும் அனுபவமும் கற்றுத்தந்த, நிதானம் நிறைந்த முகம். 

 

மூவருக்கும் இருக்கையைக் காட்டியவர், ரிப்போர்ட்டை வாங்கி பார்க்க ஆரம்பித்தார். சில நிமிட பார்வையிடலுக்கு பிறகு நிமிர்ந்தவர், 

 

“இன்னும் கண்ணனோட குடும்ப விபரம் எதுவும் தெரியலையா சண்முகம்,” அவனின் முந்தைய விபத்து விபரம் தெரிந்தவராக கேட்க,

 

“இன்னும்‌ எதுவும் தெரியல டாக்டர்! ஏன் எதுவும் பிரச்சினையா? ரிப்போர்ட்ல‌ என்ன இருக்கு டாக்டர்?,” சண்முகம் சற்று பதற்றபபட,

 

ஆதியாவின் நிலைமையோ அதற்கு மேல். ஏதாவது விபரீதமாக இருக்குமோ என்ற பயம். 

 

“அதெல்லாம் ஒன்னுமில்லப்பா. சின்னதா ஒரு ஆப்ரேஷன் செய்யவேண்டியிருக்கும். பிரைன்ல சின்னதா ஒரு ப்ளட்க்ளாட் இருக்கு. சீக்கிரம் பண்ணிட்டா நல்லது,”எனக்கூற,

 

“சர்ஜரி பண்ணிட்டா பழையஞாபகம் வந்திருமா டாக்டர்,” என ஆதியா ஆர்வமுடன் கேட்க,

 

“சான்சஸ் இருக்குமா! ஆனா அது சர்ஜரி பண்ணினாதான் தெரியும். மூளைங்கறது ரொம்ப சென்சிடிவ் பார்ட்மா! மருத்துவ உலகத்துல இன்னுமே நிறைய விஷயங்கள் விடைதெரியாத மர்மங்கள். அதுல மூளைசம்பந்தபட்டதும் ஒன்னு,” என்று அவர் கூற,

 

“புரியுது டாக்டர்!” என்றாள்.

இவ்வளவுக்கும் கண்ணன் அமைதியாகவே இருந்தான். 

 

“அம்னீஷியாவுக்கு தெரபி ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கலாம். அது கொஞ்சம் பழைய ஞாபகங்களை மீட்டெடுக்க யூஸாகும். அதுக்கு சைக்யாட்ரிஸ்ட்ட கன்சல்ட் பண்ணனும் என்று மேலும் அவர் கூற, மேலும் பல விபரங்களை கலந்தாலோசித்துவிட்டு வெளியே வந்தனர்.

 

அங்கேயே உள்ள மருந்தகத்தில் அவர் எழுதிக் கொடுத்த மருந்துகளை வாங்கிக் கொண்டனர். அதுவே ஆயிரத்தைத் தாண்டியது. மருத்துவர் கட்டணம், ஸ்கேனிங் மற்றும் மருந்து செலவு என்று கணிசமானதொரு தொகை செலவழிந்திருந்தது.

 

கண்ணனுக்கு அதுவே உறுத்தலாக இருந்தது. ஆதியா பெற்றோரை இழந்து, அவர்களது சேமிப்பே அவளுக்கு ஆதாரம். சண்முகமும் அத்தனை பிள்ளைகளின் பொறுப்போடு, கொசுறாக சொத்துவழக்கு செலவும். இதில் தானும் அவர்களுக்கு சுமையாக இருப்பதாக எண்ணினான். 

 

அவனது தெளிவற்ற முகத்தைப் பார்த்தவள்,”என்ன கண்ணன் யோசனை பலமாயிருக்கு,” எனக் கேட்க, தன் மனதில் தோன்றியதை  கூற,

 

“அட! இதுதான் உங்க கவலையா? இப்ப உங்களை ஒவ்வொரு டாக்டரா கூட்டிட்டுப் போறது எதுக்குனு நினைச்சிங்க?”

 

“எதுக்கு…எனக்கு நான் யார்னு தெரியனும்னுதான?”

 

“அதுமட்டுமில்ல… அப்பதான உங்க சொந்தகாரங்களையும் கண்டுபிடிச்சு, உங்களுக்கு செலவு பண்ணின காசெல்லாம் வட்டியோடு வசூல் பண்ண முடியும். அதுவும் மீட்டர் வட்டி. நோட்டு போட்டு எழுதிவச்சுட்டு வர்றோம். நயாபைசா விடாம வசூல் பண்ணிருவோமாக்கும்,” என்று கூற, அதைக்கேட்டு சண்முகம் சிரித்து விட்டார்.

 

“என்னம்மா இப்படி சொல்ற?”

 

“அப்புறம் என்ன அங்கிள்? இவரைக்காணாம யார் யார் வருத்தத்துல இருக்காங்களோ? இவங்க என்னடான்னா காசு கணக்கு பாக்குறாங்க!” என்று கூற அதைக்கேட்டவனோ,

 

“யாரெல்லாம் என்னை காணாம தவிக்கறாங்கனு தெரிஞ்சுக்கறதுல ரொம்ப ஆர்வமாக இருக்கிற மாதிரி தெரியுதே!” என்று புருவத்தை உயர்த்திக் கேட்டான், அவளது எண்ண ஓட்டத்தை அளவிட்டுக் கொண்டே.

 

அவளுக்கும் அதுதான் மனதில் உறுத்திக் கொண்டிருப்பதும். அவளுக்கு அடுத்தவர் உடைமைமேல் ஆர்வம் வைப்பதாக ஒரு எண்ணம். அவன்மீது வரும் ஈடுபாட்டை விலக்கவும் முடியாமல், விலகவும் முடியாமல், இருதலைக்கொல்லி எறும்பாக அவளது நிலைமை.

 

அதே எண்ணத்தோடு மூவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

 

லஷ்மியிடம் சென்றுவந்த விபரம் கூறிக்கொண்டே சாப்பாட்டு வேலையை முடித்தனர்.

 

சாப்பிட்டு முடிக்க, அவனது மாத்திரைகளை எடுத்துக் கொடுத்தாள்.

“என்னம்மா…இவ்வளவு மாத்திரையா?” என‌ லஷ்மி‌ கேட்க, 

 

“ஆமா ஆன்ட்டி! ஆப்ரேஷன் செய்றவரைக்கும் சாப்பிடனும்னு டாக்டர் சொன்னார்.”

 

“வயிரு என்னத்துக்கும்மா ஆகுறது? புண்ணாகாது!”

 

“ஓ!அதுதான் சாப்பிட்டவுடனே வயிரு வலிக்குதா?” என்றான்.ஏற்கனவே உட்கொண்ட மாத்திரைகளின் விளைவாக வயிறு புண்ணாகியிருந்தது.

 

இதைக் கேட்டவள்,”இதை ஏன் முதல்லயே சொல்லல? காரம் கம்மியா சமைச்சிருக்கலாமே! என்று கேட்க,

 

“அதனால்தான் சொல்லலை. ஒருத்தனுக்காக எல்லோரும்‌ ஏன் உப்புசப்பில்லாம சாப்பிடனும்.”

 

“ஏன் எல்லோரும் சாப்பிடபோறோம்? உங்களுக்கு மட்டும் தனியா செஞ்சுட்டா போச்சு,”என்றவள்,

“ஆன்ட்டி நீங்க எப்படி சமைக்கறதுனு சொல்லுங்க. உள்கிட்சன்ல இவருக்குமட்டும் கொஞ்சமா செஞ்சுக்கலாம்.”

 

“அதெல்லாம் ‌ஒன்னும் வேண்டாம்.”

 

“இவங்க இப்படிதான் சொல்லுவாங்க ஆன்ட்டி. நீங்க சொல்லுங்க,” என்று கேட்டவள் அவனுக்காக எளிமையாக, காரமில்லா உணவுகளையும், வயிற்றுப்புண்ணுக்கான கீரைவகைகளையும் கேட்டு சிறுகசிறுக சமைக்க ஆரம்பித்தாள்.

 

“எப்படி இருக்கு என்சமையல்?” புருவம் உயர்த்தி அவள் கேட்க,

 

“அதுதான் நான் வான்டடா வந்து சிக்கின எலியாச்சே! ஆதியா… இதுல‌ ஒருவிஷயம் கவனிச்சியா? உப்பில்லை, உரப்பில்லைனு சொல்லவே முடியாது. எப்படி வந்து சிக்கியிருக்கேன் பாரேன்.”என்று அப்பாவியாய்க் கேட்க, ஆதியா சிரித்துவிட்டாள்.

 

எனினும் அதில் தெரிந்த அவளது அக்கரையில் பத்தியச் சாப்பாடும் அவனுக்கு  நாவின்ருசியாக இல்லாமல் வேறுவகையாக ருசித்தது. இது நிரந்தரமாக வேண்டுமென மனதும் ஏங்கியது. ஏனெனில் இங்கு அவள்‌ சமையலின்ருசி வயிற்றுக்கு வஞ்சனை செய்துவிட்டு நெஞ்சத்தை நிறைத்தது.

                   ******************

கடையிலிருந்த சண்முகத்தின் அலைபேசி அழைக்க, எடுத்துப் பேசியவர், உடனே‌ கண்ணனை அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார். அழுதமுகமாக இருந்த லஷ்மி சண்முகத்தைக் கட்டிக்கொள்ள, சண்முகமும் அவரை அணைத்து ஆறுதல்படுத்தினார்.

எத்தனை வயதானாலும் தாயின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்றல்லவ்வா? ஏற்கனவே படுக்கையில் கிடந்த, லஷ்மியின் தாயாருக்கு, மகளின் கவலையும் சேர்ந்துகொள்ள நிம்மதியைத்தேடி, மரணத்தை துணைக்கழைத்துக் கொண்டார்.

 

விபரம் அறிந்த கண்ணனும், அங்கு கிளம்புவதற்கான ஏற்பாடுகளைக் கவனித்தான். டாக்ஸி வரவழைத்தவன் தானும் வருவதாகக் கூற,

“வேண்டாங்கண்ணா! அங்க என்அண்ணன் பிள்ளைக தேவையில்லாம ஏதாவது பேசுவாங்க. பிரச்சினை வேண்டாம். அப்புறம் பிள்ளைகளும் ஸ்கூல்ல இருந்து வந்துருவாங்க. பாக்க ஆளுவேணும்,” என்று கூறியவர்கள் பொறுப்பை கண்ணணனிடமும் ஆதியாவிடமும் ஒப்படைத்துவிட்டுக் கிளம்பினர்.

“எப்படிப்பா… எல்லாபிள்ளைகளையும் சமாளிச்சிறுவிங்களா?”என்று லஷ்மி கேட்க,

“அதுக்கு நான் ஒரு ஐடியா வச்சிருக்கேன்மா! நீங்க கவலைப்படாம கிளம்புங்க என்று கூறினான்.

 

லஷ்மிதான் ஒரே பெண்வாரிசு. மச்சான் முறையெல்லாம் சண்முகம்தான் செய்யவேண்டியிருக்கும். அதனால் திரும்பிவர எப்படியும் மூன்று நாட்களாவது ஆகும் எனக்கூறிச்சென்றனர்.

 

பள்ளிவிட்டு வீடுதிரும்பிய பிள்ளைகள் தத்தமது வேலைகளைப்பார்க்க, லஷ்மியைத் தேடிய சிறு பிள்ளைகளை ஆதியா கவனித்துக் கொண்டாள். விபரம் தெளிந்த பெரிய பிள்ளைகள் சூழ்நிலை புரிந்து சமத்தாக நடந்து கொண்டனர்.

 

இரவு சாப்பாடுமுடித்து விட்டு கண்ணன் பிள்ளைகளை ஒன்றுகூட்டினான். 

“குட்டீஸ்! சின்னதா ஒரு கேம். நாம இப்ப மூனுடீமா பிரியப்போறோம். ஒவ்வொரு டீமுக்கும் ஒரு லீடர். எந்தடீம் அவங்கவங்க வேலைய ஒழுங்கா செய்றாங்களோ அவங்களுக்கு சன்டே அன்னிக்கி ஒரு பரிசுஇருக்கு,” என்று கூற,

 

“ஹேய் ஜாலி…! என்று பிள்ளைகள் குதூகலமாயினர். வயதில் பெரிய பிள்ளைகள் மூவரைக் தேர்ந்தெடுத்தவன், ஒவ்வொருத்தரின் பொறுப்பில் நான்குபிள்ளைகள் எனப் பிரித்து விட்டான். அவர்கள் கவனிக்க வேண்டிய வேலைகளை பட்டியலிட்டான். இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு அமைதியாக நின்றிருந்தாள் ஆதியா.

 

பிள்ளைகளை படுக்கைக்கு அனுப்பியவன்… அவள்புறம் திரும்பி,”என்ன கேட்க நினைச்சியோ இப்ப கேளு,” என்று கூறினான் அவளது யோசனையான முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவன்.

 

“இல்ல…கேம்னு சொன்னிங்க. இதுல கேம் எங்கேயிருக்கு?”

 

“ஏன் ஆதியா? பிள்ளைகளே ஒத்துகிட்டு போயிட்டாங்கள்ல. அவங்களப் பொறுத்தவரைக்கும் சேந்து எதுசெஞ்சாலும் விளையாட்டுதான்.”

“அதெப்படி வின்பண்ற ஒரு டீம்க்கு பரிசுனா பிள்ளைகமத்தியில போட்டியும், அதைத்தொடர்ந்து பொறாமையும் வராதா?”

 

“ஒருடீம்க்கு மட்டும் பரிசு கொடுத்தாதானே அந்தபிரச்சினை வரும்.”

 

அவள் புரியாமல் பார்க்க,” இப்ப நமக்குதேவை பிள்ளைகளெல்லாம் சமத்தா அவங்கவங்க வேலையப்பாக்குறததுதான?”

 

“ஆமா!”

 

“இந்த டிவிஷோ எல்லாம் பாத்திருக்கியா?”

 

“எதுக்கு? இப்பவே எனக்கு பிபி ஷுகர் எல்லாம் வர்றதுக்கா? அதெல்லாம் நான் பாக்கறதில்லை.”

 

“நான் சீரிஸ்ஸ சொல்லல. அவார்டு ஃபங்ஷன் பாத்திருக்கியா? அவங்க சேனல்ல போடுற நிகழ்ச்சிகளுக்கு அவங்களே அவார்டு கொடுப்பாங்களே! அதுமாதிரிதான் இதுவும்.”

 

அவள் புரியாமல் பார்க்க,

“அதாவது ஏதாவதொரு கேட்டகிரில எல்லா நிகழ்ச்சிகளுக்குமே, ஏதாவது ஒரு அவார்டு கொடுத்திருவாங்க. அது மாதிரி ஒவ்வொரு க்ரூப்க்கும் ஏதாவது ஒரு ப்ரைஸ் போறமாதிரி கொடுத்துட்டா போச்சு.”

 

“சூப்பர் கண்ணன்! பிள்ளைகளும் ஏமாறமாட்டாங்க. வேலையும் ஒழுங்கா நடக்கும்.”

 

“பாராட்டோட எனக்கும் ஏதாவது பரிசு கொடுத்தா நல்லாயிருக்கும்.”

 

“ம்ம்… கீரை சூப் செஞ்சுவச்சிருக்கேன். வந்துகுடிங்க.”

 

“நான் உண்ணாவிரதம்.”

 

“அதை சாப்பிட்டு முடிச்சு ஒன்பது மணிக்கு சொல்லகூடாது.”

 

“நான் நாளையிலிருந்து சொன்னேன்.”

 

“அதை நாளைக்கு பாக்கலாம். இப்பபோய் படுங்க.!”

 

மறுநாள் வழக்கம்போல் வேலைகள் நடக்க, எழுந்து வந்தவளைப் பார்த்தவன், அவளதுமுகத்தில் சிறுவாட்டத்தைக் கண்டான். கல்லூரி கிளம்பும் அறிகுறி அவளிடமில்லை.

 

“ஆதியா! காலேஜ் கிளம்பலியா?”

 

“இல்ல கண்ணன். போர்ஷன் முடிச்சுட்டாங்க. இனி படிக்கிறவேலைதான். அதுதான் பிள்ளைகளுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு லீவு போட்டுட்டேன்.”என்று கூறியவள், சமையலில் உதவ அடுக்களை சென்றுவிட்டாள். எனினும் அவள் முகத்தில் பழைய சுரத்தையில்லை என்பதைக்கவனித்தான்.

 

பிள்ளைகள் பள்ளிக்கு கிளம்பியதும், கண்ணனும் கடைக்குகிளம்பினான்.

அனைவரும் கிளம்பியவுடன், ஆதியாவும் செல்லாத்தாளை உடன் அழைத்துகொண்டு வெளியே சென்று வந்தாள்.

 

மதியம் வீட்டிற்குத்தேவையான சாமான்களை வாங்கி கொண்டு, சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வந்தான்.

பவளமல்லி திட்டில் ஆதியா அமர்ந்திருப்பதை பார்த்தவன், சாமான்களை உள்ளே வைத்துவிட்டு அவ்விடம் வந்தான்.

 

அவள் முகத்தைப் பார்க்க ஏதோவொரு மாற்றம். ஆனால் நன்றாக இருந்தது. உற்றுப்பார்க்க அவள் மூக்கில் மின்னிய ஒற்றைக்கல் மூக்குத்தி, அவளை இன்னும் அழகாகவும், அதேசமயத்தில் கொஞ்சம் குழந்தைதனத்துடன் முதிர்ச்சியாகவும் காட்டியது. ஆனால் சிவந்து சற்று வீங்கியிருந்தது.

 

“ஆதியா!” அவன் வந்ததுகூட தெரியாமல் யோசனையில் இருந்தவளை அழைக்க,

 

“ம்ம்…” என்று நிமிர்ந்து பார்த்தாள்.

 

“இப்ப எதுக்கு மூக்கு குத்தியிருக்க? வலிக்கலையா?”

 

“நல்லா கேளு கண்ணு! நாங்கூட வலிதெரியாம குத்தலாம்மானு சொன்னேன். ஆசாரிகிட்ட போயி இன்னைக்கே போடனும்னு குத்திகிருச்சு,” என்று அங்குவந்த செல்லாத்தாள் சொல்ல,

 

“பார்லர் போனா வேற ஸ்டட் வச்சு கன்ஷாட் பண்ணிவிடுவாங்க. இது எங்கம்மாவோட மூக்குத்தி. இன்னைக்கே போடனும்னு தோணிச்சு. அதனாலதான் ஆசாரிகிட்டபோயி போட்டுகிட்டேன்.”

 

பெற்றோரின் ஞாபகம் இன்று அதிகமாக வாட்ட, அவர்களது பொருட்களை எடுத்து பார்த்து கொண்டிருந்தவள், அம்மாவின் நகைகளூடே மின்னிய ஒற்றைக்கல் வைரமூக்குத்தி கண்ணில்பட்டது.

“ஆதியா! மூக்குத்தி போட்டுக்கோயேன். உன்முகத்துக்கு இன்னும் அழகாயிருக்கும்,” எத்தனையோ முறை அம்மா சொல்லியும் கேட்கவில்லை அவள்.

இன்று ஏனோ அதைப்பார்த்தவுடன் அம்மாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் எனத்தோன்ற, செல்லாத்தாவை துணைக்கழைத்து கொண்டுபோய் மூக்குகுத்தி வந்தாள்.

 

லஷ்மிஅம்மாவின், தாயார் இறப்பு இவளுக்கு அன்னையின் நினைவை அதிகபடுத்தியிருப்பதாக எண்ணிக்கொண்டான். 

 

மறுநாள் விடிந்து வெகுநேரமாகியும் ஆதியாவின் அறைக்கதவு திறக்கபடாமலிருக்க, 

 

“தேவி! இங்கே வா!” என்று அழைத்தவன்,

ஆதியாவின் அறைக்கதவை திறக்க சொன்னான். உள்தாழ்ப்பாள் போடாமல் வெறுமனே கதவு சாத்தப்பட்டிருந்தது.

 

கதவை தேவி திறக்க, அங்கே கட்டிலில் போர்வையை இழுத்துப் போர்த்தி தூங்கிக்கொண்டிருந்தாள்.

 

‘கும்பகர்ணி மாதிரி தூக்கத்தைப்பாரு,’ என்று எண்ணியவன்,

 

“அக்காவ எழுப்பு தேவி!” எனக் கூறினான், அறைக்கு வெளியே நின்றுகொண்டே.

 

“ஆதிக்கா…!ஆதிக்கா..!” என்று தேவி எழுப்பியும் அவளிடம் அசைவில்லை.

பதற்றத்துடன் உள்ளே சென்றவன், போர்வையை விளக்கி பார்க்க, முகம் விடியவிடிய அழுது வீங்கிசிவந்திருப்பது தெரிந்தது. தயக்கத்துடன் தலையில் கைவைத்து பார்க்க காய்ச்சல் கொதித்தது. உடம்பில் சிறுநடுக்கமும் தெரிந்தது. 

 

“ஆத்தா யாரையாவது கூட்டிவா தேவி!” என் அவளை அனுப்பியவன்,

நடுக்கத்தின் காரணமாக கழுத்தடியில் வைத்திருந்த அவளது கையை இழுத்தான் தேய்த்து விடுவதற்காக. கையோடு சேர்த்து பிடித்திருந்த கைபேசியைப் பார்த்தான். அதன்திரையில் தெரிந்த ஃபோட்டோவைப் பார்த்தவன், அதிலிருந்த தேதியை பார்க்க… கண்கள் தானாக அவள் முகம் வருடியது. அவனது கண்களிலும் நீர்த்துளி. 

 

“ஆதியா…!” என்று மென்மையாக கண்ணம் தட்டியெழுப்ப, மெதுவாகக் கண்திறந்தாள்.

 

“ஹேப்பி பெர்த்டே ஆதிமா!” என்றான்.

“தேங்ஸ்ப்பா!” என்றாள் சுரணையற்று, தந்தையின் அழைப்பாக எண்ணிக்கொண்டு.

 

இன்று அவள் பிறந்தநாள். சென்ற வருட பிறந்தநாள் கொண்டாடிய ஃபோட்டோவைதான் அவன் திரையில் பார்த்தது. அவளின் முகவாட்டத்திற்கு காரணம் அதுவே. சென்ற வருடம் பெற்றோர் நள்ளிரவு தன்பிறந்த நாளுக்கு பரிசுகொடுத்து வாழ்த்தியது நினைவில் வந்து அவளை ஏங்கவைத்தது. தனக்கென்று உரிமையாக யாருமில்லை என்ற எண்ணத்தோடு, கண்ணன்பால் தன்மணம் வெகுவாக இழுக்கப்படுவதே அவளின்‌ கலக்கத்திற்கு காரணம். 

அவனை நேசிக்க மனம்ஏங்கியது. ஆனால் வேறுயாராவது உரிமையுடன் வந்து விடுவார்களோ என்றபயம் எச்சரித்தது. அறிவுக்கும், மனதிற்குமிடைப்பட்ட போட்டியில், அவன்தான் வேண்டுமென மனது ஜெயிக்க, அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் துவண்டுவிட்டாள். அடுத்து வரவிருக்கும் அந்தமூன்று நாளுக்கான முன்னறிவிப்பாக மனஉலைச்சலும் சேர்ந்துகொள்ள, கழிவிரக்கத்தில் விடியவிடிய அழுதவளுக்கு காய்ச்சல் வந்துவிட்டது.

 

“என்னாச்சு கண்ணா,” எனக்கேட்டவாறு பாப்பாத்தி வர,

 

“ஆதியாவுக்கு காய்ச்சலடிக்குது ஆத்தா.‌சுடுதண்ணி கொண்டு வாங்க. முகம் கழுவிட்டு ஏதாவது சாப்பிட்டு மாத்திரை போடட்டும்,” எனக் கூறினான்.

 

“இதோ எடுத்துட்டு வர்றேன்,” என்று அவர் சென்றுவிட,

 

அவள்கட்டிலின் அருகில், அறையிலிருந்த நாற்காலியை இழுத்துப் போட்டுஅமர்ந்தவன், அவள் கைகளை எடுத்து தன்கைகளுக்குள் வைத்துக்கொண்டான். 

“ஆதியா,” என்றழைத்தவன், மீண்டும் குரலில் மென்மையைக்குழைத்து,

“தியா,”என்றழைத்தான்.

 

“ம்ம்…”என்ற முனகல் அவளிடம்.

 

“கண்ணு முழிச்சு பாரும்மா! இப்படி பாக்க கஷ்டமாயிருக்கு தியா?”

 

“ப்ளீஸ் கண்ணா! என்னை அப்படி கூப்பிடாத! எல்லாம் உன்னாலதான். என்மனசு எம்பேச்ச கேக்க மாட்டேங்குது. உன்னைத்தான் தேடுது,” என்று அவனது குரலைக்கேட்டவள் காய்ச்சலின் வீரியத்தில் மனதிலுள்ளதை அவனிடம் உளரிக்கொண்டிருந்தால் சுயநினைவின்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!