KD – 4

0374984770914c439c785881b40536c1

இனியாவின் மாற்றங்கள்

இனியாவை அனுப்பிவிட்டு ஊர் வந்து சேர்ந்த மூவரும் தங்களின் இயல்பான வாழ்க்கையில் தங்களின் மனதை திசை திருப்பினர். எத்தனை நிகழ்வுகளை கடந்து வந்தாலும் மனம் வெகு சீக்கிரத்தில் இயல்பான வாழ்க்கை சூழலுக்கு பழகிவிடும். செழியன் கடையைத் திறந்து வியாபாரம் பார்க்க சுப்பு அதற்கு உதவியாக இருந்தார்.

தென்றல் இனியாவை மறக்க மெல்ல தன் கவனத்தை படிப்பில் திருப்பினாள். அவள் அன்று வழக்கம்போல கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டிருக்கும்பொது ஒரு முக்கியமான புத்தகத்தை தன்னறையில் காணாமல், “அம்மா என் புத்தகம் ஒன்னு காணோம் நீங்க பார்த்தீங்களா” என்றவள் அறைக்குள் அங்கும் இங்கும் தேடினாள்.

அவளுக்கு காலை டிப்பன் தாயார் செய்த சுப்புவோ, “இனியா அறையில் பாரு இருக்கும்” என்றார் வேலையில் கவனத்தை செலுத்தியபடி.

அவள் கடிகாரத்தில் மணி ஆவதை உணர்ந்து வேகமாக இனியாவின் அறைக்குள் நுழைந்து தேடிட டேபிளின் மீது அவள் தேடிய புத்தகம் இருந்தது. அதை எடுத்துகொண்டு அவள் நகர அதன் கீழே டைரிமில்க் சாக்லேட் கவருடன் ஒரு கடிதமும் அவளின் கவனத்தை ஈர்த்தது.

அவள் சாக்லேட்டைக் கையில் எடுத்துகொண்டு கடிதத்தை பிரித்துப் பார்க்க, “உன்னோட மனசுக்கு எது சரின்னு படுதோ அதை மட்டும் செய், அது தவறாக தோணுச்சுன்னா அவனிடம் தெளிவாக சொல்லிவிடு” என்று இரண்டு வழியில் வாக்கியத்தை முடித்திருந்தாள்.

அந்த வரிகள் யாரைக் குறித்து எழுதியவளின் முகத்தில் பளிச்சென்ற புன்னகை மலர, “சரி இனி” என்று குஷியாக கல்லூரி கிளம்பிய மகளை விநோதமாக பார்த்த சுப்பு மகளிடம் இதுவும் கேட்கவில்லை.

சென்னையிலிருந்து திரும்பிய நாளில் இருந்தே இருண்டுபோன முகத்துடன் வலம்வரும் மகள் இன்று சிரித்தபடியே கல்லூரிக்கு செல்வது அவரின் மனதிற்கு நிறைவாக இருந்தபோதும், ஒருபக்கம் லேசாக உறுத்தியது. அதை ஒதுக்கிவிட்டு அவர் மற்ற வேலைகளைக் கவனித்தார்.

அவள் கல்லூரிக்குள் நுழையும்போது அவளின் எதிரே வந்து நின்றவனை ஏறெடுத்தும் பாராமல் வேகமாக நடந்தவளின் கையைப்பிடித்து நிற்க வைத்தான்.

அவள் நிமிர்ந்து பார்க்க, “உன் மனசில் என்ன நினைச்சிட்டு இருக்கிற” என்றான் அவன் கோபத்துடன்.

இருபது வயதில் ஆள் பார்க்க அழகாக இருந்தவனிற்கு வலைவீசாத பெண்கள் அந்த கல்லூரியில் இல்லை. ஆனால் அவனின் மனம் ஏனோ தென்றலின் மீது படர்ந்தது. அந்த கல்லூரியில் படித்த அவளின் சீனியர் தான் இந்த சஞ்சீவ்.

தென்றலை ராகிங் செய்வதற்கு அவன் முயற்சிக்கும்போதெல்லாம் இனியா வந்து அவனை தடுத்துவிடுவாள். அப்படி ஒருநாள் அவள் இல்லாதபோது தென்றலை அவன் வேண்டுமென்றே வம்பிற்கு இழுக்க அவளோ அழுதபடி விலகிச்சென்றதில் அவனின் மனம் அவளின் மீது படரத்தொடங்கியது.

அதை இனியா உணர்ந்து கேட்டபோது அவளிடமும் தன் காதலை மறைக்காமல் சொல்ல, “தென்றல் விருப்பம்தான் என் விருப்பம். அவளை என்னைக்கும் நான் கட்டாயப்படுத்தி பார்க்க மாட்டேன். உனக்கு அவள் வேண்டுமென்றால் நீதான் காதலை சொல்லணும் அதற்கான தகுதியுடன்” என்று முடித்துவிட்டாள்.

அதன்பிறகு சஞ்சீவ் தனக்கு ஒரு வேலை கிடைக்கும் வரை அவளிடம் காதலை சொல்ல வேண்டாம் என்று முடிவெடுக்க நாட்கள் விரைந்தோடிச் செல்ல கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆனபிறகு ஒரு நிலையான முடிவெடுத்தான்.

தென்றலின் குழந்தைத்தனம் பார்த்து காதலிக்க தொடங்கியவன் அவளிடம் தன் காதலை வெளியாக சொல்ல நேரம் வந்துவிட்டத்தை உணர்ந்து அவனும் மனதை வெளிபடுத்தினான்.

அதன்பிறகு வந்த நாட்களில் அவள் பதிலேதும் தினமும் தன்னைக் கடந்து செல்லும்போது அவனுக்கு வருத்தமாக இருந்தது. அவளே வந்து பேசுவாள் என்றவன் எதிர்பார்க்க அவளோ அவனை கண்டும் காணாமல் செல்வதில் குறியாக இருந்தாள்.

அந்த நாளுக்குப்பிறகு தென்றல் அவனைக் கண்டாலே பேயைக் கண்டதுபோல பயந்து ஓடிவிடுவாள். அது ஏனோ தெரியவில்லை சஞ்சீவைக் நேரில் கண்டாளே அவளும் மனம் படபடவென்று அடித்துகொள்ளும். அவள் இவனைத் தவிர்ப்பது நாளுக்கு நாள் அதிகமாக இனியாவும் மேல்படிப்பு சென்றுவிட சஞ்சீவ் வேலையில் சென்றபிறகு இவளை பார்க்க வந்தான்.

அன்றும் அவள் கண்டுகொள்ளாமல் செல்வது அவனுக்கு எரிச்சலைக் கொடுக்க அவளின் கரம்பிடித்து நிற்க வைத்திருக்கிறான். இருவரின் பார்வையும் பின்னி பிணைந்து இருக்க, “இன்னைக்கு பிடித்த கரத்தை யாருக்காகவும், எதுக்காகவும் எந்த சூழ்நிலையிலும் விடமாட்டேன்னு சொல்ல முடியுமா” என்றாள் தென்றல் நேர்கொண்ட பார்வையுடன்.

அடுத்த நிமிடமே அவளின் கரத்தை விட்டுவிட்டு சிலநொடிகள் தன் உணர்வுகளைக் கட்டுபடுத்த வெகுவாக போராடினான். அவனின் கை முறுக்கேறி அவனின் முகம் மாறுவதை வைத்தே அவனின் உணர்வுகளை துல்லியமாக கணித்தாள் தென்றல்.

 “அது முடியாது தென்றல். நான் ஊர்பேர் தெரியாத அநாதை. ஆசரமத்தின் பணத்தில் படித்து இப்போ ஒரு நல்ல வேலையில் இருக்கேன். நாளைக்கே நான் வந்து உன்னைப் பொண்ணு கேட்டாலும் உங்கப்பா கொடுப்பாங்களான்னு தெரியல. அதுக்காக என் காதலை நான் மறைக்கல. எந்தவிதமான உறுதியும் கொடுத்து கடைசியில் உன்னை நான் ஏமாற்ற விரும்பல” என்றான் தெளிவான குரலில்.

அவனுக்கு குடும்பம் ரொம்ப பிடிக்கும். அதுவும் குழந்தை முகமாக வலம்வரும் இனியாவின் உயிர் தோழி என்ற காரணத்தினால் தென்றலுடன் பழகியவன் பின்னாளில் காதலிக்க ஆரம்பித்தான். அவர்களின் குடும்பம் அவனுக்கு ஒரு தூக்கணாங்குருவி கூடுபோல தோன்றியது. அதில் தனக்கும் ஒரு இடம்வேண்டும் என்று முடிவெடுத்தான். அதனால் அவளிடம் காதலை சொன்ன பிறகும் அவளின் குடும்பம் பற்றி யோசிக்கிறான்.

“அப்புறம்” என்றவள் எடுத்துகொடுக்க, “இதுக்குமேல் சொல்வதற்கு ஒண்ணும் இல்லை” என்றான் அவளின் மீது பார்வையை பதித்தபடி.

அவர்கள் இருவரையும் கடந்து சென்ற சிலர் அவர்களைப் பார்த்துக்கொண்டே தங்களுக்குள் பேசி சிரித்தபடியே கல்லூரிக்குள் சென்று மறைந்தனர். அதை பொறுமையாக பார்த்தபடி நின்ற தென்றல் நிமிர்ந்தாள்.

“நான் சொல்றதுக்கு ஒன்னு இருக்கு” என்று கண்களில் குறும்பு மின்னிட கூறியவளை அவன் கேள்வியாக நோக்கினான்.

“எனக்கு உன்னை பிடிச்சிருக்கு சஞ்சீவ். இங்கே இல்லாதவங்க யாருமில்ல. சோ இனிமேல் நீங்க வாழ்க்கையில் முன்னேற பாருங்க நான் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன். தகுந்த நேரம் பார்த்து நானே என் அண்ணாகிட்ட உண்மையை சொல்றேன்..” அவள் நிற்காமல் சென்றுவிட இவனோ குழப்பத்துடன் செல்லும் அவளையே பார்த்தான்.

பிறகுதான் அவள் கூறிய வாக்கியத்தின் முழு அர்த்தம் புரிய, “மக்கு மறைமுகமாக காதலிக்கிறேன் என்று சொல்லிட்டு போகுது” அவனின் உதடுகளில் புன்னகை அரும்புவதை தூரத்தில் நின்று பார்த்துவிட்டு மனநிறைவுடன் வகுப்பறைக்கு சென்றாள் தென்றல்.

அதே நேரத்தில் இனியாவை அந்த நாட்டின் பழக்க வழக்கங்களுக்கு தகுந்த பெண்ணாக மாற்றுவதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தாள் ஷர்மிளா. இந்த ஒரு வாரத்தில் அவளுக்கென்று தனியாக செல்போன் மற்றும் அவளுக்கு தேவையானவற்றை வாங்கவே ஷர்மிளாவிற்கு நேரம் சரியாக இருந்தது.

அடுத்த வாரத்தில் யுனிவர்சிட்டியில் வகுப்புகள் தொடங்கிவிடும் என்பதால் அவளை ஷாப்பிங் அழைத்து வந்திருந்தாள். அவளுக்கு பொருத்தமான உடைகளை ஷர்மிளா தேர்வு செய்ய அந்த இடத்தைப் பார்த்து அதிர்ந்து நின்றாள் இனியா.

இந்தியாவில் இருக்கும் கடைகளைவிட பலமடங்கு பெரிதாக இருந்த கடையைப் பார்த்து, “ஐயோ என்ன ஊருடா சாமி, நம்ம எல்லாம் இந்தியாவில் இருக்கும் குட்டி ஜவுளி கடைக்கே போனதில்லை. என்னை இங்கே கூட்டிட்டு வந்திருக்கே இந்த அக்கா..” என்று புலம்பியபடி அவளை பின் தொடர்ந்தாள்.

“இனியா இந்தா இந்த ஜீன்ஸ் அண்ட் இந்த டாப் போட்டு பாரு” என்று அவள் உடையைத் தேர்வு செய்து கொடுக்க இரண்டும் இருந்த சைஸை பார்த்து, “அக்கா உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி” என்றாள் இனியா கடுப்புடன்.

அந்த மால் முழுவதும் இருந்த உடைகளை இவளின் அளவிற்கு தகுந்த சிலவற்றை தேர்வு செய்த ஷர்மிளா இவளின் கேள்வியில் நிமிர்ந்து, “இப்போ உனக்கு என்ன பிரச்சனை” என்றாள்.

தன் கையில் இருந்த டாப் ஒன்றை தன்மேல் வைத்துக் காட்டி, “பத்து வயசு பாப்பாவுக்குதான் இதெல்லாம் சரியா இருக்கும்” என்றாள் கோபத்துடன்.

அவளின் செயலில் சிரிப்பு வந்தபோதும், “இங்கே இப்படிதான் உடை போடணும் அது மட்டும் இல்ல இந்த உடை போடாட்டி நீ குளிர் தாங்காமல் சாகவேண்டியதுதான்” அவளுக்கு புரியும்படி கூற அவள் கோபத்துடன் ஷர்மிளாவை முறைத்தபடி நின்றிருந்தாள்.

இது சரிபட்டு வராது என்றதும் தன் செல்லை எடுத்து யாருக்கோ போன் போட மறுப்பக்கம் அழைப்பு எடுக்கபட்டதும் இங்கே நடப்பதை சொல்லிமுடித்து இனியாவிடம் போனை நீட்டினாள்.

அவள் கேள்வியாக நோக்கிட, “இந்தா நீயே பேசு” என்ற ஷர்மி மற்ற உடைகள் எடுக்கும் சாக்கில் அங்கிருந்து நகர்ந்துவிட, “ஹலோ” என்றாள்.

“ஏய் ஸ்வீட்டி சொன்னா ஒரு பேச்சு கேட்கமாட்டியா? உனக்கு தினமும் கிளாஸ் எடுக்கணுமா?” என்ற கதிரின் குரல்கேட்டு அவள் உள்ளம் குளிர்ந்தபோதும், “அந்தக்கா பத்து வயசு பாப்பாவுக்கு போடும் துணியெடுத்து போட சொல்றாங்க மாமா” என்று சிணுங்கினாள்.

அவளின் சிணுங்கள் மொழிகேட்டு, ‘இவளை என்ன பண்றதுன்னு தெரியல’ என்ற எண்ணத்துடன்.

“இப்போ என்னதான் பிரச்சனை” என்று எரிந்து விழுந்தான் கதிர்.

“நான் இதெல்லாம் போட மாட்டேன்” என்றாள் அவள் முடிவாக.

“அப்போ அங்கேயே இருந்துக்கோ இந்தியா பக்கம் வந்த மகளே கொன்னுடுவேன். எப்போ பாரு அடம்பிடிச்சு மனுஷனை உயிரை வாங்குது குரங்கு” என்றவன் அவளின் பதிலை எதிர்ப்பார்க்காமல் பட்டென்று அழைப்பைத் துண்டிக்க இவளுக்கோ முகத்தில் அறைந்தார்போல் ஆனது.

தன் கண்களில் கண்ணீர் ததும்ப அந்த உடையை வேண்டாவெறுப்பாக பார்த்துவிட்டு அங்கிருந்த ட்ரையல் ரூம் சென்று உடையை மாற்றிவிட்டு வெளியே வந்தாள். அப்போது இனியாவிற்கு சில உடைகள் தேர்வு செய்து எடுத்து வந்த ஷர்மிளா அந்த உடையில் அவளைப் பார்த்தும்,“வாவ்” என்றாள்

புளூ ஜீன்ஸ், ரெட் கலர் டாப் அவளின் உடலிற்கு சரியாக பொருந்திருக்க கண்டு, “என்னதான் சொல்லு சொல்றவங்க சொன்னதான் சிலருக்கு மண்டையில் ஏறுது” என்று சத்தமாக முணுமுணுத்த ஷர்மிளா மற்ற உடைகளையும் வரியாக அவளை போட வைத்து உடையைத் தேர்வு செய்தாள்.

அதன்பிறகு இருவரும் வீடு வந்து சேர தன் பிளாட்டின் கதவை திறந்து வாங்கி வந்த உடையை மாற்றிவிட்டு வேகமாக கதிருக்கு வீடியோ கால் போட்ட இனியாவின் அழைப்பில் சட்டென்று அவனின் கவனம் அதில் திரும்பியது.

அவன் வீடியோவில் அவளின் முகம் பார்க்க, “எருமை பாரு ஜீன்ஸ் டாப் இதில் நான் நல்லாவா இருக்கேன். பக்கி பக்கி சுடிதார்போட கூட ஆயிரம் முறை யோசிக்கும் என்னை இன்னைக்கு அந்த கடையில் இதை போட வெச்சிட்ட இல்ல” என்றாள் கோபத்துடன்.

அவனின் பார்வையோ இன்ச் பை இன்ச்சாக அவளை அளவெடுத்தது. தலையில் எண்ணெய் போட்டு ஜடை போடும் பெண்ணோ இன்று கூந்தல் மொத்தத்தை விரியவிட்டு சைடில் இரண்டு கிளிப் மட்டும் போட்டிருந்தாள். அவள் உடையோ அவளின் அங்க வளைவுகளை அவனுக்கு படம்பிடித்து காட்டியது.

நெற்றியில் போட்டு இல்லாமல் இயற்கை அழகுடன் மிளிர்ந்த தன் காதலியை மெய்மறந்து பார்த்தவன், “ஸ்வீட்டி இப்போதான் நீ ரொம்ப அழகாக இருக்கிற” என்றவன் குறும்புடன் கண்சிமிட்ட, “அப்படியா” என்று விழிவிரிய கேட்டாள்.

“ஆமா இந்தியா பொண்ணுங்க அழகோ அழகுதான். ஆனா நம்ம இருக்கும் இடத்திற்கு தகுந்தமாதிரி சில விஷயங்களை மாற்றிக்கணும் சரியா?” என்றான் அவளுக்கு புரியும்படி.

அவளும் சரியென்று தலையசைக்க, “ம்ம் சரிடா நீ போய் ரெஸ்ட் எடு நான் போய் வேலையைப் பார்க்கிறேன்” அவன் போனை வைக்கும்போது, “மாமா இந்த மாற்றம் இருந்தால் தான் நீ என்னை காதலிப்பாயா?” என்றவளின் குரலில் ஏக்கம் வழிந்தோடியது.

தன் கையில் இருந்த செல்லின் திரையில் அவளின் முகம் பார்த்தவன், “நீ களிமண் மாதிரி இருக்கிறடா. நீ மாறனும் எனக்காக இல்ல உன்னை நம்பி இன்னும் எத்தனை குடும்பம் வருமோ? ஒரு கம்பெனியை நிர்வாகம் பண்ண பொண்ணுக்கு தெரியனும். பெண்கள் எல்லாம் ஆணைவிட குறைந்தவங்க இல்லடா. வீட்டை நிர்வாகம் பண்ற பெண் கையில் நாட்டைக் கொடுத்தாலும் அவள் சரியாக செய்வாள் என்று நம்புகிறவன் நான். அப்படி இருக்கும் போது உன் திறமைகளை உனக்குள் புதைக்க நான் விரும்பல. நான் சொல்றது உனக்கு கோபம் வரலாம் ஆனா அதெல்லாம் நல்லதுக்கு என்று நீயே ஒருநாள் புரிஞ்சிக்குவ” என்று பேசியவனை அவள் கண்கலங்க பார்த்துக்கொண்டிருக்க போனை வைத்துவிட்டான். 

அவன் வைத்தப்பிறகு இனியா ஒரு விஷயத்தை தெளிவாக உணர்ந்தாள். அவன் தன்னை உயிராக நேசிக்கிறான் ஆனால் தன் முன்னேற்றதை மனதில் வைத்து சொல்லாமல் இருக்கிறான் என்று புரிய அவளின் செல்போன் மீண்டும் சிணுங்கியது.

தன் போன் திரையில் தெரிந்த இந்தியா இலக்க எண்ணைப் பார்த்ததும் சந்தோஷத்தில் வேகமாக போனை எடுத்தாள்.

“ஹலோ சஞ்சீவ்” என்றதும், “இனியா தென்றல் காதலை ஏத்துகிட்டா” என்று சந்தோஷத்தில் வானத்திற்கும் பூமிக்கும் குதித்தவனை நினைத்து இவளின் மனமும் நிம்மதியடைந்தது.

“எங்க குருவிக்கூட்டில் உனக்குமொரு இடமா? ரொம்ப சந்தோஷம் சஞ்சீவ்” என்றாள் மனநிறைவுடன்.

“இனியா தென்றல் என்ன சொன்ன தெரியுமா? இங்கே இல்லாதவங்க என்று யாருமே இல்லையாம். எல்லோருக்கும் பாசத்தை பகிரும் எண்ணம் இருந்தா போதும் எல்லாம் இருக்கிறவங்க என்ற மாதிரி ஏதோ சொன்னா” என்றான் குஷியாக.

“அதுவா உறவுகள் இல்லையென்று ஏங்கும் நபர்களுக்கு உண்மையான பாசத்தை கொடுத்தாலே போதும் அவங்களும் இருக்கிறவங்கதான் இதை என் கதிர் மாமா அடிக்கடி சொல்லும்” என்றாள் இவள் கதிரின் நினைவாக.

“கதிர் காதலை சொன்னாரா?” என்றான் இவன் கேள்வியாக.

“இல்ல சஞ்சீவ் நான் படிப்பு முடிச்சிட்டு இந்தியா வந்தாதான் எல்லாமே தெரியும்” என்றவள் சிறிதுநேரம் அவனோடு பேசிவிட்டு போனை வைத்தாள். தன் கையருகே இருந்த டைரியை எடுத்து,

பெண்ணிற்கு சம உரிமை தரும்

என் காதலனே நீ அறியாயோ?

நான் உன்னில் சரிபாதி என்று

ராமன் எவ்வழியோ சீதையும் அவ்வழியே.

நீ செல்லும் பாதையில் உன்

காலடி சுவடுகளை பின்தொடர்ந்து

நானும் வருவேன் கண்ணா.

உன் வழித்துணையாக அல்ல

வாழ்க்கைத் துணையாக!” என்ற வரிகளை எழுதுவிட்டு புன்னகையுடன் அமர்ந்திருந்தாள்.