Pidi kaadu 21
Pidi kaadu 21
பிடி காடு – 21
நீண்ட நெடியதொரு மௌனம் எல்லோரிடமும் குடிக் கொண்டிருந்தது. பழைய நினைவுகள், தற்போதையச் சிக்கல், இனி வரும் காலமென சிந்தனை முன்னும் பின்னும் ஊசலாடியது. பெருமூச்சொன்றுடன் பேச்சை ஆரம்பித்தார் பரசுராமன்.
“நா சண்முகம் ஐயாகிட்டப் பேசுறேன் செந்திலு. எனக்குப் பரிச்சயம் இருந்தாலும் நம்பர் எங்கிட்ட இல்லப்பா. வீடு தெரியும். ஆனா போறதுக்கு முன்னாடி ஒரு வார்த்தக் கேட்டுக்கிட்டு போவோம். அதா மொற. வீட்டுக்குப் போயி… இல்ல… கொஞ்சம் இரு… எனக்குத் தெரிஞ்ச வேற ஒருத்தர்டக் கேட்டு நம்பர் வாங்கி இப்பவே பேசிடுறேன். மணி என்னாவுது?”
“ஏழாகப் போகுதுப்பா”
“ம்ம்… இன்னும் கொஞ்சம் தண்ணி வேணும்”
கௌரி அடுக்களை அருகில் சென்று திரும்பிப் பார்த்தாள்.
“ஒங்களுக்குப் பசிக்குதா??”
“பாஸ்கர் வந்து மத்தியானம் கடையப் பாத்துக்குவான். இன்னைக்கு அவன் வரலையா… வீட்டுக்குப் போகல. வெளில சாப்பிட்டுக்குறேன்னு சொன்னேன். அதுக்குள்ள செந்தில் போன் பண்ணானா… அதுக்கு மேல எனக்கு கையும் ஓடல காலும் ஓடல. எப்படா பொழுது சாயும்னுப் பாத்துட்டே ஒக்காந்துட்டேன்”
“இல்லப்பா… நா… இங்க இருந்த பிரச்சனையில மறந்துட்டேன்பா”
“பரவால்ல பாஸ்கரு”
“வீட்டுக்குப் போறேன்னு கெளம்புனவன நாந்தான் இங்கயே இருன்னு நிறுத்தி வெச்சேன்”
“விடு செந்திலு. ஒரு நாள் தான?”
“ரெண்டுப் பேரும் அப்பறம் காரணம் சொல்வீக… போயி ஏதாவது வாங்கிட்டு வந்து தருவீயளா…”
“நா போறேன்”
செந்தில் போன பிறகு கண்மணி பரசுராமன் அருகில் வந்தாள்.
“மாமாவ ஒங்களுக்கு இவ்ளோ புடிக்கும்னு இன்னைக்குதாம்பாத் தெரியுது”
“சின்னதுலேந்தே ரொம்பப் புடிக்கும் கண்மணி. என்னைக்கும் அவன் உண்டு அவன் வேல உண்டுன்னு இருப்பான். ஒரு வம்புதும்புக்கும் போனதில்ல”
“இப்ப என்னால தான இந்தப் பிரசச்சனையெல்லாம்…”
“நீ என்னம்மா கௌரி பண்ண? போய் வம்பு வளத்துட்டு வந்தியா? சில நேரத்துல இப்டிதான். நமக்கு வரக் கஷ்டமெல்லாம் நம்மக் கேட்டு வாங்குறதுமில்ல. தேடிப் போறதுமில்ல. இத்தோட வாழ்க்கையே முடிஞ்சுப் போச்சுன்னு நெனைக்குற அளவுக்கு எந்தப் பிரச்சனையும் பெருசுக் கெடயாது. முடிஞ்ச வரைக்கும் முட்டி மோதிப் பாப்போம்”
‘என் தப்பு எதுவுமில்ல’
தவறு செய்துவிட்டோமோ என்ற சந்தேகம் கொடுமையானது. பரசுராமன் சொன்னப் பிறகு கௌரிக்கு நிம்மதியாக இருந்தது. அவர் அவளிடம் பேசியதும் அவளுக்காகப் பேசுகிறேன் என்று சொன்னதும் ஆச்சரியமே.
செந்தில் அமைதியாக இருந்தான். அடுத்த நாள் சண்முகம் வீட்டிற்குச் செல்லும் வரை யாரிடமும் எதுவும் பேசவில்லை.
சண்முகத்தினுடையது கல்லுக்குழியில் பழைய மச்சு வீடு. கேட் அருகிலும் வீட்டின் உள்ளிலும் நின்றிருந்த ஆட்களின் எண்ணிக்கை அந்த வீட்டின் அளவிற்குச் சற்றுக் கூடுதலானது. செந்திலும் பரசுராமனும் உள்ளே நுழைந்தனர்.
“வாங்க. நல்லாயிருக்கீங்களா?”
“நீங்க எப்படியிருக்கீங்க?”
“ஒக்காருங்க. ஒக்காரு தம்பி. பாத்து நாளாச்சு. வியாபாரமெல்லாம் எப்படிப் போகுது?”
“நல்லா போகுதுங்க. இப்போ பையன் பாத்துக்குறான்”
“ஆமா ஒருநாள் ஒங்கக்கூடப் பாத்திருக்கேன். நல்லபடியாப் பாத்துக்குறாப்டியா?”
“ஒரு கொறையும் இல்லைங்க. வந்து… என் அக்கா மவன். செந்தில். இவனுக்குத் தெரிஞ்சப் பொண்ணு ஒண்ணு நம்ம ஜங்க்ஷன் பாலம் தாண்டி இருக்க ரவுண்டானா கிட்ட கடப் போட்டுதுங்க. தள்ளுவண்டிதான்… ஒங்களப் பத்தி சொல்லிருக்கணும். நியாபகம் இல்லாமப் போச்சு”
“அது எப்படிங்க நியாபகம் இல்லாமப் போகும்?”
கெளரியிடம் இடத்தை காலி செய்யச் சொல்லியவன். சண்முகத்தின் பின்னால் நின்றிருந்தான்.
“வேற எப்படி சொல்லணும்?”
“செந்தில் இருப்பா”
“முருகா பாத்துப் பேசு. அவங்க சொல்லிட்டுப் போகதான் வந்திருக்காங்க”
“இல்லைங்கையா…”
“நா பேசிக்குறேன். நீங்க சொல்லுங்க”
“கடப் போடுறதுக்கு…”
“போட்டுக்கலாம். ஒரு பிரச்சனையும் இல்ல. யாருப்பா… தெரிஞ்சப் பொண்ணுன்னு சொல்லுற… தெரிஞ்சப் பொண்ணுன்னா…”
“என்ன மாதிரிக் கஷ்டப்படுறப் பொண்ணு. அதுக்குன்னு ஒரு கடப் போட்டுக் குடுத்துடணும்னு நெனைக்குறேன்”
“சரி சரி… ஆரம்பிக்கட்டும்”
“என்னய்யா இப்படி சொல்லிட்டீங்க? முன்னாடி வந்து அனுமதிக் கேக்காம…”
“தெரியாது. கேக்கல. இப்போ தெரிஞ்சுக்கிட்டோம். வந்து கேக்குறோம். வேற என்ன பண்ணணும்?”
“செந்தில் பொறுமையா…”
“முருகா நீ உள்ளப் போ. வீடு தேடி வந்து கேக்குறாங்கல்ல?”
“அப்போ நாங்க…”
“போயிட்டு வாங்க. எல்லாம் நல்லபடியா அமையும்”
“வரோம்ங்க”
செந்தில் காரை எடுக்கும் வரை முருகனை திரும்பிப் பார்த்துக் கொண்டே இருந்தான். பரசுராமனுக்கு பேச்சு சுமூகமாய் முடிந்ததில் திருப்தி.
வீட்டு வாசலில் மகனுக்கு நடைப் பழக்கிக் கொண்டிருந்தாள் கௌரி. கடைப் போட்டது ஒரு வாரமே என்றாலும் வாழ்க்கைப் பரப்பரப்பாக மாறியிருந்தது. இன்று வீட்டில் அடைந்துக் கிடப்பதில் சலிப்படைந்திருந்தாள்.
ஆட்டோவின் சத்தத்தில் திரும்பியவள் சேகர் இறங்கவும் “வாங்க” என்றாள்.
“செந்தில் இல்லம்மா?”
“அவக மாமாகூடப் போனாக”
“பாஸ்கர் சொன்னான். போன் பண்ணா வேற எடுக்கல. வீட்டுக்குப் போற வழியிலப் பாத்துட்டுப் போலாம்னா… சரி நா அப்பறம் வரேன்”
“அவகப் போய் ரொம்ப நேரமாவுது. எப்படியும் இப்ப வந்திடுவாக. எதுக்கு இன்னொரு வாட்டி அலையப் போறீக? நா சாவி எடுத்துட்டு வரேன். உள்ள ஒக்காருக”
“அதுவும் சரிதான். திரும்ப இவ்வளோ தூரம் வரணும். நா இங்கயே படியில உக்காந்துக்குறேன். முன்னல்லாம் காத்தாடத் தெருவுல உக்காருவோம்னு சொல்லுவாங்க. இப்போ ஒரு எல அசையுதாப் பாரு”
“காத்தெல்லாம் கொறஞ்சுப் போச்சு. ஒங்க வீடு எங்க இருக்கு?”
“நீ வந்ததே இல்லல்ல? ஒரு நாள் செந்திலக் கூட்டிட்டு வர சொல்லுறேன். இங்கேந்து ஒரு கிலோமீட்டர் இருக்கும்”
“நா ஒண்ணுக் கேக்கட்டா?”
“கேளும்மா”
“ஒங்களுக்கு அவகள எப்படித் தெரியும்?”
“செந்திலையா? எனக்கு பரசுராமன் அண்ணே பதினஞ்சு வருஷமாத் தெரியும். ஒரே தெருவுலக் குடியிருந்தோம். அப்பறம் அவரு இப்போ இருக்க வீட்ட வாங்கிட்டு மாறிட்டாரு. நானும் வேற வீட்டுக்குப் போயிட்டேன். செந்தில்… ஒரு பத்து வருஷமாத் தெரியும்னு வெச்சுக்கோயேன்… அவங்க அம்மா அப்பா போய் சேந்தன்னைக்குப் பாத்தேன். ஒதவிக்காக அண்ணே கூப்பிட்டாரு.
எழவு வீட்டுல அப்படியொரு நெலமையில ஒரு சின்னப் பையனப் பாத்தா பரிதாபம் வரும் பாத்தியா? அவனப் பாத்து அன்னைக்கு எனக்கு பரிதாபம் வரல. அவன் அழவேயில்லன்னு சொல்ல முடியாது. கதறி அழல. அப்பப்போ கண்ணத் தொடச்சுக்கிட்டான். அவங்க மாமா எப்போலாம் பணம் எடுத்துக் குடுத்தாரோ நா சேத்து வெச்சக் காசு இருக்கு மாமான்னு உள்ள ஓடிப் போயிக் காசக் கொண்டு வந்து நீட்டுனான். அசந்து போயிட்டேன்.
அண்ணே வேண்டாம்னு சொல்லிப் பாத்தாரு. ஒண்ணு ரெண்டு வாட்டிப் பிடிவாதமா வாங்க மாட்டேன்னு திட்ட கூட செஞ்சாரு. என் அப்பா அம்மாவுக்கு நா இத கூட செய்யலன்னா உறுத்திட்டே இருக்கும் மாமான்னுத் தீர்மானமா சொல்லிட்டான். அண்ணே பாவம்… செத்துப் போனவங்களுக்காக அழுதத விட இவன நெனச்சு நெறைய அழுதாரு.
வேடிக்க என்னன்னா… எழவு வீட்டுல ஒத்தாசப் பண்ணணும் மருமவனுக்கு ஆறுதல் சொல்லணும்னுக் கூப்பிட்டாரு. கடைசியில அவருக்கு ஆறுதல் சொல்லித் தேத்துறதுக்குள்ள… ஹ்ம்ம்…”
“அப்பயிலேந்து இந்த வீட்டுலதா இருக்காகளா?”
“ஆமா. ஒங்கக்கூட வர மாட்டேன் தனியா இருக்கேன்னு சொன்னான். சரி இதும் என் வீடுதான் இங்க இருன்னு சொல்லிட்டாரு”
“அவங்க மாமாவுக்கு வருத்தம் போலருக்கு… அவகளுக்கு ஒண்ணுமே செய்யலன்னு…”
“இருக்கதான செய்யும்?”
“எப்படி எறந்தாங்க?”
“செந்தில் அப்பா டிரைவரா இருந்தவராம். நா அதிகம் பாத்ததில்ல. அண்ணே வீட்டுக்கு வந்ததில்ல. அவ…”
“ஏன்? சண்டையா?”
“சண்டையெல்லாம் இல்லம்மா. அண்ணே சம்சாரம் யாரையும் கிட்ட சேத்துக்க மாட்டாங்க. அவங்களுக்கு அவங்க புருஷன் புள்ள மட்டும் போதும்னு நெனைக்குறவங்க. தப்பு இல்ல. அதுக்காக அடுத்தவங்கள ஒதுக்கித் தள்ளக் கூடாதுல்ல? அவங்க சுபாவம் அப்படி…
வெளியூருக்குப் போகக் கெளம்பியிருக்காங்க. தூக்கமா இல்ல என்ன நடந்துதோ… வண்டிய பள்ளத்துலக் கொண்டு விட்டுட்டாரு போல. அவங்கப்பா வேல பாத்தா வீட்டுல கோவிலுக்குப் போறதுக்காக செந்தில் அப்பாவையும் குடும்பத்தோட கூப்பிட்டிருக்காங்க. நல்லவேள எடம் பத்தாதுன்னு செந்தில அழைச்சுட்டுப் போகலையாம்”
“அப்போ ஓனர்?”
“ம்ம்ச்ச்… ஓனரு, அவர் சம்சாரம், மூணு வயசுப் புள்ள… செந்தில் அப்பா அம்மா… எல்லாம் ஸ்பாட் அவுட்டு. அவன்ட எப்பயும் கேட்டுடாத… இந்த வீட்டுலயும் ரெண்டு உசுருப் போயிருக்குன்னு கூடப் பாக்காம… அவங்க சொந்தக்காரங்க வந்து கண்ணாபின்னான்னுக் கத்திட்டாங்க. அவ்வளோத்துக்கும் அந்தப் புள்ள ஒரு வார்த்தப் பேசலம்மா. அவங்கப் போற வரைக்கும் அமைதியா இருந்தான். ஆறுதல் சொல்ல கிட்ட வந்தவங்கள அவங்க துக்கத்துலக் கத்திட்டுப் போறாங்க, எங்கப்பா ஒண்ணும் தப்புப் பண்ணியிருக்க மாட்டாங்கன்னு சொல்லி வாயடச்சுட்டான்”
“இம்புட்டு நடந்திருக்கு… அப்பறமும் ஏன் இவக காரு ஓட்டுறாக?”
“அவங்கப்பா கார் ஓட்டக் கத்துக் குடுத்தாங்களாம் அவனே சொல்லியிருக்கான். அவனுக்கு காருன்னா ரொம்பப் புடிக்கும்னு அண்ணே சொல்லிருக்காரு. வேற எதுவும் நா கேட்டதில்லம்மா. வந்துட்டாங்கப் போலருக்கு”
செந்திலும் பரசுராமனும் காரிலிருந்து இறங்க “என்னாச்சு?” என்றார் சேகர்.
“என்னப்பா ஒன்ன வர வரப் பாக்கவே முடியுறதில்ல? எல்லாம் பேசி முடிச்சாச்சு”
“பாத்து ரெண்டு வாரம்தான ஆவுது? நீங்க வீட்டுக்கு வரலாம்ல?”
“கண்டிப்பா வரேன் சேகரு. அப்போ நா கெளம்புறேன்பா”
“உள்ள வாங்க”
“இல்லம்மா. பாஸ்கர் பாவம் காலையிலிருந்து தனியா கடையப் பாத்திருப்பான். கெளம்புறேன்”
கௌரி செந்தில் வீட்டுச் சாவியை எடுக்க அவள் வீட்டிற்குச் சென்றாள்.
“புடிக்கலன்னாலும் எனக்காக வந்து பேசுனதுக்கு தேங்க்ஸ்…”
“கௌரியவா? புடிக்கலன்னு நீயா முடிவுப் பண்ணிட்டியா? பாக்குறவங்க ஒன்னத் தப்பாப் பேசிடக் கூடாதுன்னு கோவப்பட்டேன். ஒரு தொழிலு ஆரம்பிச்சு எல்லாத் தடையையும் தாண்டி நெலச்சு நிக்குறது எவ்ளோ கஷ்டம்னு எனக்கும் தெரியும்பா. அதுவும் பாவம்தான? வரேன்”
கௌரி சாவியைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட கதவைத் திறந்து சேகருடன் உள்ளே நுழைந்தான் செந்தில்.
“நாளைக்கே ஆரம்பிச்சுடணும்ணே”
“இரு செந்திலு… நம்ம நேரம் சரியில்ல. எடுத்ததும் ஏதோவொரு தடங்கலாயிப் போச்சு. திரும்ப நல்ல நாள் பாத்தே ஆரம்பிக்கலாம்”
“அதெல்லாம் வேணாம்ணே”
“பாருப்பா”
சாமி படங்களுக்கருகே இருந்த நாட்காட்டியை எடுத்துத் தாள்களைப் புரட்டினான்.
“நாளன்னைக்கு வெள்ளிக் கிழம. 9 – 10.30 நல்ல நேரம்”
“அப்பவே ஆரம்பிக்க சொல்லு. நானும் கெளம்புறேன் செந்திலு”
“வீட்டுல யாருங்க?”
இருவரும் வெளியே எட்டிப் பார்த்தனர். உடை சொல்லிற்று காவல்துறையைச் சேர்ந்தவரென்று.
“யாருங்க வேணும்?”
“இங்க செந்தில் யாரு?”
“நாந்தா”
“ஸ்டேஷனுக்கு வர சொன்னாங்க. வா”
“இவரு நம்ம புதூர் ஸ்டேஷன் கான்ஸ்டபில் செந்திலு. என்னங்கய்யா விஷயம்?”
“அவரு ஏதோ போய் சண்முகம் ஐய்யா வீட்டுல கலாட்டாப் பண்ணாறாம்ல… கம்ப்ளயின்ட் வந்திருக்கு”
“நா எந்தப் பிரச்சனையும் பண்ணல”
“இன்னும் பத்து நிமிஷத்துல நம்ம ஸ்டேஷனுக்கு வந்து இத சொல்லு”
சொன்னவர் பைக்கில் சென்றுவிட்டார்.
“வா செந்திலு”
“எங்கண்ணே? எதுக்குப் போகணும்?”
“நீ போய் பேசுனவரு வீடு கல்லுக்குழியில இருக்கு. புதூர் போலிஸ் ஸ்டேஷன்லேந்து வந்து ஒன்னக் கூப்பிடுறாங்க. கொஞ்சம் பொறுமையா இரு. போய்ப் பாப்போம். நா உங்க மாமாவையும் கூப்பிடுறேன். கௌரிகிட்ட சொல்லிட்டு வா. பயந்துடப் போகுது. பாத்து…”
சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ செந்திலிற்கு முருகனின் முகம் நினைவு வந்தது. கூடவே அளவுக்கடந்த எரிச்சலும்.