Pidikaadu 22

Pidikaadu 22

பிடி காடு – 22

காவல் நிலையத்திற்குச் செல்வதாக செந்தில் சொன்னதும் கௌரி ஆயிரம் கேட்டாள். அவன் சொல்லும் பதில்களைக் கேட்கும் பொறுமை அவளுக்கில்லை. கொஞ்சம் திணறித்தான் போனான்.

“இன்னுமா செந்திலு இங்க நிக்குற? ஆளக் காணும்னுப் பாக்க வந்தேன். மாமா நேரா ஸ்டேஷன் வந்துடுறேன்னு சொன்னாரு”

“இப்போ எதுக்கு நீங்க போலிஸ் ஸ்டேஷன் போறீங்க?”

“நீ திரும்ப மொதல்லேந்து ஆரம்பிக்காத. சொல்லுற ஒண்ணுத்தையும் காதுல வாங்காம… பயப்படாம இரு. போலிஸ் ஸ்டேஷன் போனா என்ன?”

“அதுக்கில்லையா…”

“போலிஸ் ஸ்டேஷன் போனா என்னன்னேன்?”

“பயமா… சரி பாத்துப் போ. பொறுமையாப் பேசு. வெளி எடத்துலப் பேசுற மாதிரி அங்க பேசாத. யோசிச்சு பதில் சொல்லு. போயிட்டு வா”

“இப்டி சொன்னா முடிஞ்சுப் போச்சு. அத விட்டுட்டு… இந்தா வீட்டு சாவி. போலாண்ணா”

“நீ பத்திரமா இரும்மா”

காவல் நிலைய வாசலில் நின்றிருந்த பரசுராமனின் முகத்திலும் குழப்ப முடிச்சுகள். சேகர் ஆட்டோவை ஓரமாய் நிறுத்தி வந்தார்.

“என்னண்ணே எல்லாம் பேசியாச்சுன்னு சொன்னீங்க? இப்போ இப்படி சொல்லுறாங்க?”

“சண்முகம் ஐயா அப்படிப்பட்ட ஆள் இல்ல சேகரு. உள்ளப் போவோம்”

கட்டிடத்திற்குள் நுழைந்ததும் கேள்விக் கேட்கும் படலம் ஆரம்பமாயிற்று.

“யார் நீங்க? என்ன வேணும்?”

“கூப்பிட்டு விட்டிருந்தாங்க”

“ஒரு நாளைக்கு பத்துப் பேத்தக் கூப்பிட்டுப் பஞ்சாயத்துப் பண்ணிக்கிட்டுதான் இருக்கு. ஒங்கள எதுக்குக் கூப்பிட்டாங்கன்னு சொன்னாதானத் தெரியும்”

“சண்முகம் ஐயா…”

“ஓஹ் அந்த கம்ப்ளயின்டா… இங்கயே வெயிட் பண்ணுங்க. வரேன்”

“என்ன சேகரு ஒரு வெவரமும் சொல்லாம உள்ளேயும் விடாம இப்படி வாசல்லயே நிக்க வெச்சுட்டாங்க?”

“பின்ன உள்ளக் கூப்பிட்டு ஒக்கார வெப்பாங்கன்னு நெனச்சீங்களாண்ணே? இங்கல்லாம் இப்டிதான். எவ்வளோ அதிகமா காது குடுத்துக் கேக்குறோமோ… எவ்வளோ கம்மியா வாயத் தொறந்துப் பேசுறோமோ அவ்ளோ நல்லது. நிக்க சொன்னா நிப்போம். கூப்டாப் போவோம்”

அரை மணி நேரமானது அவர்களை உள்ளே கூப்பிட. பரசுராமன் அமர்ந்த இருக்கையின் பக்கத்தில் முருகன் அமர்ந்திருந்தான்.

“என்ன பண்ணீங்க?”

“நாங்க ஒண்ணும் பண்ணல”

பரசுராமனுக்குப் பின்னால் நின்றிருந்த செந்தில் பதில் சொல்ல “செந்திலு பொறுமையா” என்று மெதுவாகக் கூறினார் அவனருகில் நின்ற சேகர்.

“ஒண்ணும் பண்ணலையா? அப்பறம் எதுக்கு கம்ப்ளயின்ட் வருது?”

“கம்ப்ளயின்ட் குடுத்தவங்க தான் சொல்லணும்”

“என்ன? எங்க வந்து பேசிக்கிட்ருக்கன்னுத் தெரியுமா?”

“செந்தில் நீ இருப்பா. சார் நாங்கப் போய் பேசப் போனோம். அமைதியாத் திரும்பி வந்துட்டோம். அங்க எந்தப் பிரச்சனையும் நடக்கல சார்”

“வந்து கத்திக் கூப்பாடுப் போட்டுட்டு ஒங்க முன்னாடி என்னமா நடிக்குறாங்கப் பாருங்க சார்”

“யாரு…”

“செந்தில் இரு. யாரு தம்பி கத்துனது? ஏன் தேவையில்லாமப் பழிப் போடுறீங்க?”

“ஒங்களுக்குள்ளயே பேசிக்குறதுக்கு ஸ்டேஷனுக்கு எதுக்கு வரீங்க? அதான் விசாரிக்குதுல்ல? எதுக்கு அங்க போனீங்க?”

“கடப் போடணும்…. சொல்லிட்டு வரதுக்காகப் போனோம் சார்”

“கடப் போட்டதுக்கப்பறமில்ல வந்தீங்க?”

“இப்ப அதான் பிரச்சனையா தம்பி? நாங்கதான் தெரியாம நடந்து போச்சுன்னு சொன்னோமேப்பா?”

“சொன்னீங்களா? கத்துனீங்களா?”

கேள்விக் கேட்ட அதிகாரி உடனேயே எழுந்து நின்றார். சண்முகம் வந்திருந்தார். எழ முயன்ற முருகனை அவர் விட்ட அரை மீண்டும் உட்கார வைத்திருந்தது.

“ஒன்ன வீட்டுலயே வாயத் தொறக்காதன்னு சொன்னேன். நீ ஸ்டேஷன் வரைக்கும் வந்திருக்க… நீங்க என்ன சார்? கம்ப்ளயின்ட் வந்தா விசாரிக்க ஆரம்பிச்சுடுறதா? தகவல் சொல்லுறப் பழக்கமெல்லாம் மறந்துப் போச்சா?”

“இல்லைங்கையா… முருகன் சொன்னான்…”

“ஆமா முருகன் பெரிய இவரு… அவரு சொல்லிட்டாரு இவரு பஞ்சாயத்துப் பண்ணுறாரு…”

“இனிமே இப்படி நடக்காமப் பாத்துக்குறேன்யா”

“காலையில வீடு தேடி வந்த ஒங்கள இப்படி ஸ்டேஷன் வர வெச்சதுக்…”

“பரவாயில்லைங்க. ஒங்களப் பத்தித் தெரியாதுங்களா? ரொம்ப நன்றிங்க”

“என்ன ஒதவி வேணும்னாலும் தயங்காமக் கேளுங்க. வரேன்”

சண்முகம் பின்னால் அமைதியாக எழுந்து சென்றான் முருகன். பார்வைப் பரிமாற்றங்கள்; தொண்டைச் செருமல்கள் என சில நொடிகள் கடந்து போயின.

“அப்போ நாங்க…”

“ஸ்டேஷன் வரைக்கும் வந்துட்டீங்கள்ல? பேரு அட்ரெஸ் எல்லாம் எழுதிக் குடுத்துட்டுப் போங்க”

“அதெல்லாம்… சரிங்க சார்”

“ஒங்கடையா? அதான் அந்தப் பேச்சுப் பேசுனியா?”

“இல்ல. தெரிஞ்சப் பொண்ணோட கடை”

“என்ன தெரிஞ்சப் பொண்ணு? அப்போ அவளையுமில்லக் கூட்டிட்டு வந்திருக்கணும்? அவளும்தான் ஐயா வீட்டுலப் பிரச்சனப் பண்ணாளா?”

“அங்க ஏதும் நடக்கலன்னு அவரே வந்து சொல்லிட்டுப் போயிட்டாரு. தேவையில்லாமப் பேசாதீங்க”

“சார் இப்போ எதுக்கு…”

“எது தேவையில்ல? அந்தப் பொண்ணு ஒனக்கு என்ன வேணும்? எதுக்கு இப்டித் துள்ளுற நீ? என்ன அவ…”

“கட்டிக்கப் போறப் பொண்ணு”

“செந்திலு என்னப்பா…”

“என்ன சமாளிக்குறியா? எப்படா கல்யாணம்?”

“நாளன்னைக்கு. காலையில 9 – 10.30 முஹூர்த்தம்”

“செந்திலு அது கடைக்காக…”

“எங்க கல்யாணம்?”

“சமயபுரம் கோவில்ல”

“சொன்னது மட்டும் பொய்யின்னுத் தெரிஞ்சுது… கெளம்பு. ஆள் வெச்சு விசாரிப்பேன். ஞாபகம் இருக்கட்டும்”

சேகரின் ஆட்டோவில் மூவரும் செந்தில் வீட்டிற்கு வந்தனர். வழியில் அவனை எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. கேட் திறக்கும் சத்தம் கேட்டதும் வேகமாக செந்தில் வீட்டுச் சாவியுடன் வந்தாள் கௌரி.

“என்னாச்சு?”

“ஒண்ணும் பிரச்சன இல்ல. நீ வீட்டுக்குப் போம்மா” என்ற சேகர் பூட்டைத் திறந்தார். உள்ளே நுழைந்ததும் பரசுராமன் ஆரம்பித்தார்.

“புரிஞ்சுதான் பேசுனியா?”

“அண்ணே கொஞ்சம் பொறுமையா…”

“என்ன பொறுமை சேகரு? இவனுக்கு இருக்கா? எல்லா எடத்துலயும் எடுத்தெறிஞ்சுப் பேசுறதா? காலையில அவரு வீட்டுல ஒழுங்காப் பேசியிருந்தா இப்போ ஸ்டேஷன் போக வேண்டி வந்திருக்குமா?”

“நா ஒழுங்காதான் பேசுனேன்”

“கிழிச்ச… அப்பறம் எதுக்கு என்னைய கூப்பிட்ட? நீயே பேசிக்க வேண்டியதுதான? அவ்வளோ சொல்லிதான உள்ளக் கூட்டிட்டுப் போனோம்? எதையாவது கேட்டியா? போலிஸ்காரன்டப் போயி மொறைக்குற? கொஞ்சமாவது அறிவு… ஒன்ன இப்படித் திட்டி எனக்குப் பழக்கமில்ல செந்தில். ஆனா நீ…”

“ஏன் செந்தில் அப்படி சொன்ன? இப்போ அந்தாளு விசாரிக்குறேன்னு வேற சொல்லுறாரு… என்ன செய்யப் போற?”

“கல்யாணம் பண்ணிக்கப் போறேன்”

“கல்… சேகரு இவன் தெளிவாதான் இருக்கானா?”

“செந்தில் இது வெளையாட்டில்ல. யோசிச்சுப் பேசு”

“யோசிச்சுட்டேன்”

“எப்ப யோசிச்ச? என்ன யோசிச்ச? சின்ன விஷயமில்லபா”

“எனக்கும் கௌரிக்கும் நீங்கதான் மாமா முன்ன நின்னுக் கல்யாணம் பண்ணி வெக்கணும்”

“நா… என்ன… நீ மாமான்னுக் கூப்பிடல என்கிட்ட எதுவும் கேக்கலன்னு எவ்வளவோ வருத்தப்பட்டிருக்கேன்டா. அதுக்காக இப்படியா? சும்மா அங்க சொன்னதுக்காக…”

“பண்ணி வெப்பீங்களா மாட்டீங்களா மாமா?”

“உண்மையிலதாக் கேக்குறியா? என்னண்ணே இவன்?”

“அவன் முடிவுப் பண்ணிட்டான் சேகரு. இனி கேள்விக் கேட்டுப் பிரயோஜனம் இல்ல. பண்ணி வெக்குறேன்பா. நா கெளம்புறேன். நாளைக்குப் பேசுறேன்”

“நானும் கெளம்புறேன். நீ நைட் இன்னும் நல்லா யோசி”

“நாளைக்கு வீட்டுக்கு வரேண்ணே. பத்திரிகை இல்லன்னாலும் நேருல அழைக்கணும்ல?”

“நா சொல்லல? அவன் முடிவுப் பண்ணிட்டான்னு. ஹ்ம்ம்… சரிப்பா… ஒன் இஷ்டம் போலப் பண்ணு. வரோம்”

அவர்கள் சென்ற பிறகு கதவடைத்தான். அப்படியே சுவரில் சாய்ந்தமர்ந்தான். எவ்வளவு நேரமாகியதோ தெரியாது. கதவு தட்டப்பட்டது. எழுந்து திறந்தான். பாஸ்கர் வந்திருந்தான்.

“அப்பா என்னென்னமோ சொல்லுறாரு?”

“உள்ள வா. ஒக்காரு”

“நாங்க அத்தனப் பேருக் கேட்டோம்… இல்ல இல்லைன்னுட்டு… இப்போ எதுக்கு போலிஸ்காரனுக்கு பயந்து…”

“யாருக்கும் பயப்படல”

“எதுக்குத் திடீருன்னு இந்த முடிவு?”

“திடீருன்னான்னுத் தெரியல… நம்ம பக்கத்துலயே ஒரு பொருள் இருக்கு. அது உன்னுதா உன்னுதான்னுப் பாக்குறவங்கல்லாம் கேக்குறாங்க. இல்லன்னு சொன்னாலும் ஒரு நாள் தோணும்ல… ஆமா என்னுதுதான்னு சொல்லி எடுத்து வெச்சுக்கிட்டா என்னன்னு…”

“நீ பேசுறது ஒனக்கே புரியுதா? இதுக்கும் நீ கௌரிய கல்யாணம் பண்ணுறேன்னு சொன்னதுக்கும் என்ன சம்பந்தம்?”

“கட்டிக்கிட்டா என்ன தப்பு?”

“கட்டிக்கிட்டாத் தப்பில்ல. ஏன் கட்டிக்குறங்குறதுக்குக் காரணம் இருக்கணும்”

“…”

“அவக்கிட்ட சொல்லிட்டியா?”

“இல்ல”

“சொல்லும்போது என்னன்னு சொல்லுவ? அத யோசி. போதும்”

“நா சொல்லிக்குறேன்”

“கெளம்புறேன். அப்பா சொன்னதும் ஒன்னப் பாக்கணும்னுத் தோணுச்சு. நாளைக்குப் பேசுறேன்”

“எல்லாரும் நாளைக்குப் பேசுறேன்னு சொல்லிட்டுதான் கெளம்புறீங்க”

“ஏன்னா எங்களால நம்ப முடியல. நீ தெளிவா வேற பேசுற. இதுக்குமேல ஒங்கிட்ட என்ன கேக்குறதுன்னும் புரியல. நீ யோசிக்குறியோ இல்லையோ… ஒங்கிட்ட என்ன பேசுறதுன்னு நாங்க யோசிக்க வேண்டியிருக்கும் போலருக்கு. வரேன்…”

‘என்னன்னு சொல்லுவ?’ அதே இடத்தில் அமர்ந்தான். பாஸ்கர் கேட்டக் கேள்விக்கு விடை தேட முயன்றான்.

மீண்டும் கதவு தட்டப்பட்டது. இம்முறை அவன் திறக்க அவசியமிருக்கவில்லை. கௌரி தானே திறந்து கொண்டு உள்ளே வந்தாள்.

“அவங்கல்லாம் போயிட்டாங்களா? எனக்கு அங்க இருப்புக் கொள்ளல. ஸ்டேஷன்ல என்ன நடந்துது?”

“ராஜா எங்க?”

“இன்னைக்கெல்லாம் ஒரே ஆட்டம். நேரமே தூங்கிடுச்சு”

“ஒக்காரு”

“எதும் பிரச்சனையா?”

“அங்க இல்ல. எம்முன்னாடி இங்க வந்து ஒக்காரு”

“என்னய்யா? பெரிய பிரச்சனையா? விஷயத்த சொல்லு… எனக்கு ரொம்ப பயமா இருக்கு”

“அங்க ஒரு பிரச்சனையுமில்ல. ஒங்கிட்டப் பேசணும்”

“சொல்லுய்யா”

“நா ஒன்ன கல்யாணம் கட்டிக்கணும்னு நெனைக்குறேன்”

“என்ன பேசுற? பைத்தியமா? நா…”

“எனக்கு ஆசையா இருக்கு. ஒனக்கு சம்மதமா?”

“ஒளராத. நீ…”

“சம்மதம் இல்லங்குறதுக்கு உருப்படியா ஒரு காரணம் சொல்லு. ஒன்னால ஒழுங்கானக் காரணம் சொல்ல முடியலன்னா அதையே உன் சம்மதமா எடுத்துப்பேன்”

“என்ன பேசுறோம்னு… நா ஏற்கனவே கல்யாணமானவ”

“புருஷன் உயிரோட இல்ல”

“இல்லன்னா? எனக்கு ஒரு புள்ள இருக்கு”

“எம்புள்ளையாப் பாத்துப்பேன்”

“என்னைய தயவுசெஞ்சு விட்டுருய்யா”

“இது காரணமில்ல”

“என்னைய பாத்தா ஒனக்கு எப்படித் தெரியுது? கேக்க ஆள் இல்லன்னா என்ன வேணா பேசுவியா? நா போறேன்”

“கௌரி நில்லு. தப்பா எதும் பேசல. உனக்காக் கேக்க ஆள் இல்ல? இத நா சொன்னதுலேந்து மாமா, சேகர், பாஸ்கர்னு எல்லாரும் கேள்விக் கேக்குறாங்க”

“அவங்கட்டலாம் சொன்னியா?”

“அனேகமா ஒங்கிட்டதான் கடைசியா சொல்லுறேன்”

“ஏன்? அதையும் எதுக்கு சொல்லுற? எனக்காக எல்லாம் பண்ணுறேங்குறதுக்காக ஒன் இஷ்டத்துக்கு என்ன வேணாப் பண்ணுவேன்னு நெனப்பா? இங்க வந்ததே என் தப்பு”

“ஏன் பயந்து ஓடுற. ஒரு எடமா நின்னு பேசு. காரணம் சொல்லத் தெரியாம சும்மா கத்திக்கிட்டு இருக்காத. அக்கம் பக்கத்துல இருக்கவங்களுக்கு நாளன்னைக்கு கல்யாணம்னு நாளைக்கு நா போய் சொல்லணும்னு நெனைக்குறேன். நீயா இப்போ தெரிய வெக்காத”

“நாளன்னைக்கா? வெளையாடுறியா? நீ பேசுறதப் பாத்தா எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு ஒப்புக்கு எங்கிட்டக் கேக்குறியா? என் அப்பனும் ஆத்தாளும் உசுரோட இருந்திருந்தா இப்படி நடக்க விடுவாகளா? யாரும் இல்லாம…”

“எல்லாமா நா இருக்கணும்னு நெனைக்குறேன். இப்போ நீ எனக்கு செய்யுற எல்லாம்… சாப்பாடு போடுறது… என் வீட்டப் பாத்துக்குறது… என்ன பாத்துக்குறது… எல்லாமே எம்பக்கத்துல இருந்து உரிமையோட பண்ணணும்னு ஆசப் படுறேன்.

யாருமே வேணாம் யார நம்பியும் நா வாழ மாட்டேன்னு எல்லாரையும் ஒதுக்கி வெச்சவன்… ஒங்கூடவே இருக்கணும்னுத் தோணுது.

வெளில எவ்வளோ சுத்துனாலும் வீடுன்னு ஒண்ணு இருக்குறது நியாபகம் வருது. வீட்டுக்கு வந்தா வான்னு சொல்லி ஒக்கார வெச்சு சோறு போட ஆள் இருக்குன்னு நெனச்சாலே… ஒனக்கு அதெல்லாம் புரியாது.

கட்டாயப்படுத்தல. யாருமே இல்ல… கேக்குறதுக்கு ஆள் இல்லன்னு நெனச்சு உன் சம்மதம் இல்லன்னாக்கூடப் பரவாயில்லன்னு… அப்படிப் பண்ணா இப்போ இருக்க மாதிரி இந்த வீடு இருக்காது. நா சந்தோஷமா இருக்க முடியாது. எனக்கும்தான் யாருமே இல்ல. கட்டிக்குவியா?”

“நீ இப்படி கேப்பன்னு நா எதிர்ப்பாக்கல. மத்தவங்கள மாதிரிதான நீயும் யோசிக்குற? ஊரு உலகம்…”

“உன்னையும் என்னையும் யோசி. உன் பையன… நம்ம புள்ளையப் பத்தி யோசி. ஊரு உனக்கு என்ன செஞ்சுச்சு? யார் வந்து உன்னக் கேள்விக் கேக்கப் போறா?”

“யாருக் கேக்க மாட்டா?”

“ஒனக்கு என்ன புடிக்கலையா?”

“நீ இப்படிக் கேட்டா… அப்படியெல்லாம் உன்ன நா யோசிச்சதில்லையா. கல்யாணமாகி புருஷன எழந்துட்டு…”

“உன் புருஷன் பேரென்ன?”

“பேரு…”

“டக்குன்னு கேட்டாப் பேரு கூட நியாபகம் வர மாட்டேங்குது. இது…”

“காளியப்பன்”

“இவ்வளோ யோசிச்சு சொல்லணும்னு அவசியமில்ல. வாழ்க்கப் பூராத் தனியா இருந்துடுவியா?”

“ஏன் முடியாது?”

“என்னால முடியாது”

“ஏன் இப்படியெல்லாம் பேசுற?”

“சரி இன்னும் ஒரு வருஷம் கழிச்சு என்ன செய்யப் போற?”

“ஒரு வருஷமா? உன் கடன…”

“பத்து வருஷம் கழிச்சு?”

“பத்து… ஊருக்கே போயி… அப்பத்தாக் கூட…”

“உங்க அப்பத்தாவுக்கு என்ன வயசாகுது? இன்னும் எத்தன வருஷம் இருப்பாங்க? இப்போ இருக்காங்களான்னுத் தெரியுமா?”

“வாயக் கழுவு. பயங்காட்டுறியா? ஒங்கிட்ட நின்னு பேசுறேன் பாரு…”

“நில்லுன்னு சொல்லுறேன்ல? என்னோட ஆசைய சொல்லிட்டேன். நடக்கப் போறதையும் சொல்லிட்டேன். நீதான் இன்னும் காரணம் சொல்லல”

“என்னால இன்னொரு கல்யாணம் பத்தி…”

அருகில் சென்றான். அவளுடைய கைகளை பிடித்தான். விரல்களை இறுக மூடிக் கொண்டாள்.

“ஒனக்கு எங்கூட இந்த வீட்டுல இருக்கப் பிடிக்கலையா?”

“கைய விடு. ஒனக்கு என்ன ஆச்சு இன்னைக்கு? ஏன் இப்படியெல்லாம் கேக்குற? இந்த வீட்டுல…”

“ஆமா இல்லன்னு மட்டும் சொல்லு”

“அப்படி எப்படி சொல்ல முடியும்? எனக்கு அடைக்கலம் குடுத்த வீடு… சோறு போடுறது நீ. கைய விடுய்யா நா போறேன்”

“போறேன் போறேன்னு சொல்லாத. இந்த உதவி பண்ணுறது… கடன் குடுத்தது… சோறு போடுறது… இதெல்லாம் ரெண்டு நிமிஷத்துக்கு மறந்துடு. நா ஒனக்கு எதுவுமே செய்யலன்னு நெனச்சுக்கோ.

என்ன பத்தி ஒனக்கு எல்லாம் தெரியாட்டியும் கொஞ்சமாவது தெரியும். என்ன சுத்தி இருக்கவங்களத் தெரியும். நா ஒன்ன நல்லாப் பாத்துப்பேன்னு தெரியும். ராஜாவையும் உன்னையும் ஒரே மாதிரிப் பாத்துப்பேன்னும் உனக்குத் தெரியும். என்ன கட்டிப்பியா?”

இத்தனை நேரம் கோபமாக பேசினாள். கெஞ்சினாள். அழவில்லை. கண்களில் கண்ணீர் தேங்கி கன்னங்களில் வழியத் துவங்கியது. உதடு கடித்து பெரிய மூச்சுகளை எடுத்து கண்ணீரை நிறுத்த முயன்றாள். நிற்க மறுத்தது. அவன் தோள் மீதே சாய்ந்து கதறத் துவங்கினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!