Ennai Ko(Ve)llum Vennailavei – 17
Ennai Ko(Ve)llum Vennailavei – 17
-
~18~
திருமணத்தை எதிர்கொள்ள மதி தயாராகி விட்டாளா? அல்லது அன்னையின் பேச்சில் வாயடைத்து நின்றுவிட்டாளா? அவளே அறியாத கேள்விக்கு விடைக் கண்டுபிடிப்பது சிரமம் தானே..?
மதியின் போன் அழைப்பைத் துண்டித்த ஆதிக், அவளது பேச்சினை அசைபோட அவளது மனம் அவனுக்குத் தெளிவாய் புரியாவிட்டாலும், இத்திருமணத்தில் அவளுக்கு உடன்பாடு இல்லை என்பதை உணர்ந்தவனுக்குக் காரணம் தெரிந்து வைக்க ஆர்வம் இல்லை.
பெற்றவர்களுக்காகச் செய்து கொள்ளும் திருமணம் தானே? என ஒரு மனம் விட்டேற்றியாக இருந்தாலும்..இன்னொரு மனமோ தான் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என சுய அலசலில் இறங்கியது.
புரியாத கேள்விக்கு விடை கண்டுபிடித்து விடலாம்…புரிந்துகொள்ள விரும்பாத கேள்விக்கு மனம் எப்படி விடையளிக்கும் என்கிற ரீதியில் மூளையும் மனமும் அவனை அலைக்கழிக்க சோர்ந்து தான் போனான்.
நடுச்சாமத்தை கடந்து வீட்டிற்குள் நுழைந்தவன் உறங்க முற்பட, காலையில் மனமும் உடலும் மகிழ்வுற வீட்டுக்கு வந்து சேர்ந்தார் வேணி.
அத்தனை நாடகம் ஆடி, திருமணத்தை முடிக்கப் போகும் சந்தோஷமும், இரு மகன்களின் திருமண வேலையும் அவரை இன்னும் இளமை ஆக்கியிருந்தது.
நேற்று நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறிய ராஜ், இன்னும் வீடு வந்து சேராமல் இருக்க, மாலையில் நடக்கவிருந்த நிச்சயதார்த்தத்தின் வேலையிலும் வேணியின் விழி வாசல் பக்கமே இருந்தது.
ஒருவன் வீட்டிற்கே வராமல் இருந்தான் என்றால் மற்றொருவனோ, அறையின் கதவைத் திறக்க மனம் இல்லாமல் உள்ளே அடைந்து கிடந்தான்..
இருவரின் இப்பரிமாணம் புதிது, கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் வீட்டில் தங்காத ஆதிக் அறையில் இருக்க, வீட்டின் வாசத்தை விரும்பும் ராஜ் வீட்டிற்கு வரவேயில்லை.
தர்மர் ஒருபுறம் அமர்ந்து ராஜின் செல்லுக்கு அழைப்பு விடுக்க, வேணியோ ஆதிக்கின் அறைக் கதவை தட்டித் தட்டி ஓய்ந்து போனார்.
ஐந்து மணிக்கு வீட்டில் இருந்து கிளம்ப வேண்டுமே என வேணியின் மனம் பரிதவிக்க, சரியாய் நாலரை மணிக்கு கதவைத் திறந்து ஆதிக் வர, வீட்டிற்குள் நுழைந்தான் ராஜ்..
இருவரிடமும் ஏகபோக அமைதி, “ராஜ் கிளம்பி வா..” ஆதிக்கின் அழைப்பில்
“சரிங்க பாஸ்..” எனச் சொன்னவன் மறந்தும் வேணி தர்மரை நிமிர்ந்து பார்க்கவில்லை..
ஏதோ கம்பெனி மீட்டிங் போகிறவர்கள் போல கிளம்பி வந்த ஆதிக்கும் ராஜும் தனியாக காரில் வர, அவர்களைப் பின் தொடர்ந்து மூன்று கார்களில் சொந்த பந்தங்கள் புடைசூழ வேணியும் தர்மரும் கிளம்பினர்.
வீட்டில் இருந்து மண்டபத்தை அடைய எடுத்துக் கொண்டு சில மணி நேரங்களில் வேணியின் மனம் அவசரப்படுகிறோமோ எனப் பதைபதைத்து நிற்க, தர்மரோ ஊரில் உள்ள அனைத்துத் தெய்வங்களுக்கும் வேண்டுதலை வைத்தார்.
மண்டபத்தில் மாப்பிள்ளை வீட்டார் நுழைந்த சில நிமிடங்களில் பெண் வீட்டாரும் வந்து சேர, வேணியும் தர்மரும் வாசலில் நின்று அழைப்பு விடுத்தனர்.
நிமிர்ந்து பார்க்காமல் ரேகா வர அவளின் தோலில் தட்டிக் கொடுத்து வேணி உள்ளழைத்து செல்ல, பின்னே வந்த மதியோ நிமிர்ந்த நடையுடன், கண்களால் சுற்றத்தை தழுவி வர, அவளின் தோலையும் மென்மையாய் தட்டி வரவேற்றார் வேணி..
ஆதிக்கின் குடும்பத்தையும் தனது குடும்பத்தையும் தவிர்த்து நிற்கும் மதியின் குடும்பம் தான் தனது மாப்பிள்ளை வீட்டார் என ரேகா நினைத்திருந்தாள் என்றால், மாடியில் தமையனுடன் அறைக்குச் சென்ற ராஜ் கட்டிலில் படுத்துவிட்டான்.
ஆதிக் இருந்த மனநிலையில் முதலில் ராஜை கவனிக்காதவன் பின் கவனித்து எழுப்ப, அப்பட்டமாய் அவனது முகத்தில் தெரிந்த சோர்வும் விரக்தியும் ஆதிக்கின் முகத்திலும் பிரதிபலித்தது.
இதுவரை அண்ணன் என அவன் அழைக்காவிட்டாலும் ராஜை தனது தம்பியாய் பாவித்த ஆதிக்கு அவனது வருத்தம் கவலையை கொடுக்க, தனது முகத்தைச் சீராக்கியவன், “ராஜ், வாழ்க்கைய அதோட ஓட்டத்துக்கு வாழ ஆரம்பிச்சிட்டா நமக்கு பிரச்சனை இல்ல, எப்போ நாம அதோட பாதைய மாத்தனும்னு நினைக்கிறோமோ அப்போ தான் போராட்டமும் வேதனையும் அதிகம் ஆகும்..” என்றவன் நிறுத்தி
“உன்கிட்ட சொல்ல தேவையில்லை இருந்தும் சொல்றேன்..எதையும் குழப்பிக்காம இந்த நிமிஷத்தை மட்டும் மனசுல நிறுத்திட்டு கிளம்பு, நல்ல படியா எல்லாம் நடக்கும்…நான் எப்பவும் உன்கூட தான் இருப்பேன்..கிளம்பி வா..” தனக்குச் சேர்த்தே சொல்லிக் கொள்ள, ஆதிக்கின் பேச்சில் தனது சிந்தனையை ஒதுக்கி வைத்தவன் கிளம்பச் சென்றான்.
கிளம்பும் சமயத்திலும், ராஜின் எண்ணம் முழுவதும், ரேகாவிற்கு எப்போது திருமணம் எனத் தெரியவில்லையே என்பதில் தொடங்கி, தான் செய்வது தவறு என்பதில் தொங்கி நிற்க, மருந்துக்கும் புன்னகை இல்லாமல் கிளம்பி வந்தனர் மணமகன்கள் இருவரும்..
மதியின் பேரமைதியை குழலி கல்யாண கலை என நினைத்திருக்க, செழியன் அடுத்து வரப்போகும் சுனாமியை எதிர்பார்த்தே காத்திருந்தார்.
ரேகாவின் மனமோ அடிக்கண்ணால் ராஜ் வந்திருக்கிறானா என ஆதிக்கின் குடும்பத்தினுள் நோட்டம் விட மனதைக் கண்ணையும் தனது கட்டுக்குள் கொண்டு வந்தவள் அவனை எதிர்பார்க்கக் கூடாது என்பதைப் புத்தியில் ஏற்றிக் கொண்டு சபையில் அன்னமாய் நடந்து மேடையேறினாள்.
மணமேடையில் நடுநாயகமாய் போட்டிருந்த இருக்கையில் ஆதிக்கும், ராஜும் அமர்ந்திருக்க, வேண்டாவெறுப்பாய் பார்வையைச் சுழல விட்ட ராஜின் கண்கள் நிலைகுத்தி நின்றது ரேகாவின் வரவில்.
போன நிமிடம் வரை அலைக்கழித்த மனம் ஒரு நிமிடம் அமைதியாய் இருக்க, மூளை கூட வேலை நிறுத்தம் செய்திருந்தது.
பிரமை பிடித்தவனைப் போல் நின்றிருந்த ராஜின் விளாவில் மெல்லமாய் குத்திய ஆதிக், “என்னடா..?” கேள்வியாய் கேட்டவன் சுற்றத்தைப் பார்வையால் சுட்டிக் காட்ட..
அவனின் விழியசைவைப் புரிந்து கொண்டவனின் முகம் முன்பிருந்ததைவிட இப்போது இறுகி இருந்தது. அவனின் மனதையும் முக மாற்றத்தையும் புரிந்து கொள்ளாத வேணி அவர்களின் அருகே வந்து திருஷ்டி கழித்து
மணப்பெண்களுக்கு வழிவிட, அப்போது தான் நிமிர்ந்து பார்த்தாள் ரேகா..
குழப்பம், ஆசுவாசம், வெறுப்பு என அனைத்தும் அவளது முகத்தினில் வந்து சேர, இப்போது ராஜின் எண்ணமோ தனது காதலை புரிந்து கொண்டு தன்னைத் தேடி வந்து விட்டாளோ எனச் சிந்திக்க தொடங்கியிருந்த வேளையில் அவனை அழைத்தார் வேணி..
நிமிர்ந்து பார்த்தவனின் அருகில் ரேகா ஒட்டி வைத்த சிரிப்புடன் நின்றிருக்க, வேணியோ, “டேய் எப்படி எங்க சர்ப்ரைஸ்..?இப்போ சொல்லு டா பொண்ணை பிடிச்சிருக்கா..?” என்றார்..
அவரது கேள்விக்கு பதில் அளிக்க விரும்பாதவன் போன்று, “ம்ம்..” என்றவன், வந்தவர்கள் மீது தனது கவனத்தைச் செலுத்த, வேணியும் சுற்றம் கருதி அங்கிருந்து விலகி விட்டார்..
இருவருக்கும் சொல்ல முடியா கோபமும், துயரமும் இருப்பினும் அதைமீறிய ஒரு அமைதி குடி கொண்டது என்னவோ உண்மை தான்..
அங்கே ஆதிக் இயந்தர கதியில் வந்தவர்களை மதிக்கு அறிமுகம் செய்து வைக்க, அவளுக்கு அது ஒருவித எரிச்சலைக் கொடுத்த போதும், நாகரீகம் கருதி ஒப்புக்குச் சிரித்து வைத்தாள்..
தொடர்ந்து மூன்று மணி நேரம் நின்றதில் இரு ஜோடியுமே சோர்ந்து போயிருக்க, இன்னும் கூட்டம் குறைந்த பாடில்லை..
அடுத்தடுத்து வந்தவர்களைச் சளைக்காமல் அறிமுகம் செய்து வைக்கும் ஆதிக்கை முறைத்த மதி, அவனது முகத்தைப் பார்க்க, அவளது பார்வையை கவனியாதவன் அடுத்து வந்த சொந்தங்களின் மீது தனது பார்வையைச் செலுத்தினான்..
அணிந்திருந்த மாலையின் நடுவே தனது கரத்தை அவனை நோக்கி நீட்டியவள், அவனது கோட்டை பிடித்து இழுக்க, அவளது தொடுகையில் திரும்பியவன் அவளை நோக்கிக் குனிய,
“நீ எதுக்கு எல்லோரையும் இன்ட்ரோ கொடுத்துட்டே இருக்க, எனக்கு நினைவுல வச்சுக்க கஷ்டமாயிருக்கு..” என்றவளின் கிசுகிசுக்கும் குரலில்,
என்னவென்பது போல் புரியாத பார்வை செலுத்தி, புரிந்த பின், “அது சும்மா தான்..நீ நினைவுல வச்சிக்கணும்னு ஒண்ணுமில்லை” என்றான் லேசான சிரிப்புடன்.
“ஓஹ்…எனக்கு கால் வலிக்குது..” என்றாள் அடுத்ததாக
விழா நடந்து கொண்டிருக்கும் போதே இப்படிச் சொல்கிறாளே என்றவன் அவளை நோக்கி பார்வையை திருப்ப, உண்மையாகக் களைத்து தான் போயிருந்தாள்..
கொஞ்சமும் இடைவேளை இல்லாமல் கூட்டம் வந்த வண்ணமாய் இருக்க, இப்போது இங்கிருந்து அகல முடியாது என்பது அவளுக்குப் புரிந்தாலும், பாவமாய் அவனது முகம் பார்க்க
அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்..
அவனது பார்வையை எதிர்கொண்டவள் உதட்டைப் பிதுக்கி அடுத்து வந்தவர் நோக்கி இருகரம் கூப்பியவள், அவன் நோக்கி, “நீ ஆரம்பி..” என்றாள் சோர்வு மிகுந்த குரலில்.
அவளிடம் ஏதும் சொல்லாதவன் விகாஷின் மனைவி மித்ராவை தனது அருகே அழைத்து காதில் ஏதோ சொல்ல, மதியையும் ரேகாவையும் உடன் அழைத்துக் கொண்டு மணமகள் அறைக்குள் நுழைந்துவிட்டாள்..
ரேகாவை மித்ரா அழைத்ததும் அவள் ராஜின் முகம் பார்க்க, அவனோ மருந்துக்கும் அவளது முகம் காணாமல் வந்தவர்கள் மீது தனது கவனத்தைச் செலுத்தினான்..
அவளும் அவனை விடுத்து மித்ரா மற்றும் மதியழகியுடன் சென்றுவிட்டாள்..
பெண்கள் இருவரும் கிளம்பியதும் தம்பியின் அருகே சென்றவன், “ராஜ்..” என்று அழைக்க
“சொல்லுங்க பாஸ்..” என்றான் அவனது முகம் ஏறிட்டு
“வா..நாம கீழ இறங்கலாம்..” என்றவனை சின்னவன் புரியாமல் பார்க்க
“அவங்க ரெண்டு பேரும் ரொம்ப டயர்ட் ஆகிட்டாங்க டா…அதான் ஒரு ஒன் ஹவர் ரெஸ்ட் எடுத்துட்டு அவங்க சாப்பிட வரட்டும்..வா நாம அதுவரைக்கும் கெஸ்ட் கிட்ட பேசிட்டு இருக்கலாம்..” என்றவன் அவனையும்
அழைத்துக் கொண்டு விகாஷ் இருந்த பக்கம் நோக்கி நகர்ந்தான்..
ரேகாவிற்கு மதியை அறிமுகம் செய்து வைத்த மித்ராளினி, மூவருமாய் பேசிக் கொண்டிருந்தனர்..
மேடையில் இருந்து ஆதிக் இறங்கி வந்ததும் அவனது தோளைத் தட்டிய விகாஷ், “பிடிக்கல…பிடிக்கலன்னு சொல்லிட்டு என்னமா ரொமான்ஸ் பண்ணுறாங்கன்னு பார்த்தியா டா ராஜ்…” பார்வை ஆதிக்கிடமும் கேள்வி ராஜிடமும் தொங்கி நிற்க
அதையெல்லாம் கவனிக்கும் அளவிற்கா ராஜின் மனநிலை இருந்தது, அவனே கடனுக்கு நின்றான்.
விகாஷின் கேள்விக்கு ஆதிக், “டேய் கால் வலிக்கிதுன்னு சொன்னா அதான் போக சொன்னேன்..இதுல என்ன ரொமான்ஸ நீ கண்ட..”
“ஏன்டா நாயே..என் ரிஷப்ஷன்ல என் பொண்டாட்டிக்கு கால் வலிக்குதுன்னு நான் போக சொன்னதுக்கு என்னை எவனோ ஒருத்தன் முறைச்சான்…அதுவும் வந்தவங்க சிஸ்ட்டர என்ன நினைப்பாங்கன்னு குதிச்சான்..அந்த நல்லவன் எங்கடா போனான் இப்போ..?” விகாஷ் சொல்லி முடிக்கும் முன் அவனைவிட்டு வேகமாய் விலகியிருந்தான் ஆதிக்..
அவனது விலகலைத் தொடர்ந்து அருகே பார்க்க, அப்பாவியாய் முகத்தை வைத்து பேக்க பேக்க முழித்து கொண்டு ராஜ் நிற்க
“இவன் ஒருத்தன் லவ் பண்ணும் போதும் இப்படி தான் நிற்கிறான்..கல்யாணம் முடிவானாலும் இப்படி தான் நிற்கிறான்..” சன்னமாய் முணுமுணுத்தவன் ராஜை அழைத்து மற்றவர்களுடன் பேசத் தொடங்கினான்..
அதிகாலையில் ஆறு மணிக்கெல்லாம் மண்டபம் களைக்கெட்ட காணும் இடமெல்லாம் பட்டுப்புடவை சலசலப்பு தான்..
அன்னமாய் குனிந்த தலை நிமிராமல் ரேகா நடந்து வந்து ராஜின் அருகே அமர, ஆர அமர நிமிர்ந்து தலையை சுத்தி கூட்டத்தை வெறிக்க பார்த்துக் கொண்டு சேலையை லேசாக தூக்கிப் பிடித்து கொண்டு நடந்து வர அவளது புறம் லேசாய் சரிந்த குழலி, “மதி கீழ குனிந்து நடந்து வா..” என்க
அன்னையை புரியாமல் பார்த்து, “கீழ குனிந்தா எப்படி மா நடக்க முடியும்..” என்றவள் இப்போது ஆதிக்கின் அருகே வந்திருந்தாள்..
அவளின் பதிலில் ஆதிக்கின் இதழில் இலேசாக புன்னகையை தோற்றுவிக்க, குழலியோ, “வந்தவங்க எல்லோரையும் விஷ் பண்ணிக்கோ..” என்றார் அதே மெல்லிய குரலில்
ஆனால் அதுவோ தவறாமல் அவனது செவியை வந்தடைந்தது.
பிடிக்காத திருமணத்திற்கு எவ்வளவு கண்டிஷன் தான்..அன்னையை முறைத்தவள், “ஏன் நான் விஷ் பண்ணலன்னா எல்லோரும் போயிடப்போறாங்களா..?” திமிர் திமிர் உடம்பெல்லாம் திமிர் என்று அவனுக்கு நினைக்கத் தோன்றாமல் இல்லை..
அமைதியாய் அவனது அருகே அமர்ந்தவள் ஐயரையும், ஆதிக்கையும் மாறி மாறி வேடிக்கை பார்க்க, அவளது பார்வையை உணர்ந்தாலும் அவளை நிமிர்ந்தும் பார்க்காமல் கடமையே கண் என அனைத்தையும் செய்து கொண்டிருந்தான்..
தன்னை நிமிர்ந்து பார்க்காதது அவளுக்குச் சின்னதாய் ஒரு ஏமாற்றத்தைக் கொடுத்தாலும், அதை அவள் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இதழ் மட்டும் அழகாய் எதிரில் எடுத்துக் கொண்டிருந்த புகைப்படத்துக்கு ஏதுவாய் சிரித்தும் பார்த்தும் கொண்டிருந்தது..(பயபுள்ள இதுல எல்லாம் விவரமா தான் இருக்குது)
இதற்கு நேரெதிராய் ராஜின் முகத்திலும் ரேகாவின் முகத்திலும் மருந்துக்கும் சிரிப்பு..
பெற்றவர்களின் ஆசீர்வாதத்திலும் காலத்தின் கட்டளையாலும் திருமணம் இனிதே நடந்து முடிந்த சொற்ப மணி நேரத்தில் மதியின் அலைபேசி அலறியது..
இனி கொல்வாள் மதி…
ஆதியும் மதியும் இணைவார்கள்..