Un Vizhigalil Vizhuntha Naatkalil – 22
Un Vizhigalil Vizhuntha Naatkalil – 22
“ திருமண மலர்கள் தருவாயா தோட்டத்தில் நான் வைத்த பூச் செடியே!!…..
தினம் ஒரு கனியைத் தருவாயா…வீட்டுக்குள்….” கதவு திறக்கப் படும் சத்தம் கேட்டு அமைதியானாள் வாணி.
“ அம்மா… புடவை வாங்கியாச்சா… என்ன கலர்…!” உற்சாகமாக வந்து ரேகாவைக் கேட்க,
ஆச்சரியமாக அவளையே பார்த்தபடி இருந்தனர் ரேகாவும் வெற்றியும்.
“ என்னம்மா ஏன் அப்படி பாக்றீங்க ரெண்டு பேரும்!!”
“ ஒண்ணுமில்ல வாணி, ரொம்ப நாள் கழிச்சு என் பழைய பொண்ண பாக்கற மாதிரி இருக்கு. நீ எப்பவும் இப்படியே சந்தோஷமா இருக்கணும் டா…” அவளின் கன்னம் வருடி சொல்ல,
‘ இது தன் தங்கைக்கு நிலைக்க வேண்டுமே அந்த ஜீவா நல்லபடியாக தன் குடும்பத்துடன் ஏமாற்றாமல் வர வேண்டுமே’ என்று வெற்றி நினைத்துக் கொண்டான்.
பின்பு அவளிடம் வாங்கி வந்தவற்றைக் காட்டிக் கொண்டிருந்தார் ரேகா.
மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்க, வெற்றி தான் சென்று பார்த்தான்.
வாணியின் தோழி கண்மணி நின்றிருந்தாள்.
“வா கண்மணி! உள்ள வா. ரொம்ப நாள் ஆச்சு பார்த்து எப்படி இருக்க?” அன்புடன் விசாரித்தான்.
“ நல்லா இருக்கேன் அண்ணா, வாணி எப்படி இருக்கா, ஏன் காலேஜ்க்கு வரல? அதான் அவள பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்” காலேஜிலிருந்து நேராக வாணியைக் காண வந்திருந்தாள்.
“ நல்லா இருக்கா, உள்ள வா, அவளே சொல்லுவா” அவளுக்கு வழி விட்டு தன் அறைக்குள் சென்றான்.
கண்மணியைப் பார்த்ததும் மிகவும் சந்தோஷப் பட்டாள் வாணி.
“ என்னடி என்ன ஆச்சு ? ஏன் வரல காலேஜுக்கு? அடுத்த வாரம் டெஸ்ட் இருக்கு, அதான் உனக்கு நோட்ஸ் குடுத்துட்டு உனக்கு என்ன ஆச்சுன்னு பாக்க வந்தேன்” அக்கறையாக விசாரிக்க,
“ ஜீவா வீட்டுல இருந்து வெள்ளிக் கிழமை பொண்ணு பார்க்க வராங்க டி. அந்த டென்ஷன் அதான் காலேஜுக்கு வரல. “ வெட்கத்துடனே சொல்ல,
“ அட ! கங்க்ராட்ஸ் டி.. சொல்லவே இல்ல பாத்தியா” பொய் கோபம் கொண்டாள் கண்மணி.
“ எனக்கே நேத்து தான் டி தெரியும். திடீர்னு முடிவாச்சு”
“ ம்ம்ம்.. எப்படியோ ஜீவாவும் நீயும் ஹாப்பியா இருந்தா சரி.. எங்க அந்த வில்லியமால பிரச்சனை வருமோன்னு நெனச்சேன்” மனதில் இருப்பதை சொல்லிவிட்டு பின் நாக்கைக் கடித்துக் கொண்டாள்.
“ என்ன சொல்ற கண்மணி! வில்லி யால பிரச்சனையா ?” குழப்பமாகப் பார்த்ததாள் வாணி.
அவள் சத்தமாகப் பேசவும் உள்ளிருந்து வெற்றியும் வெளியே வந்தான்.
“ என்ன கண்மணி? என்ன பிரச்சனை “ அவனும் சற்று கோபமாகக் கேட்க,
“ அது.. ஒன்னுமில்ல அண்ணா…” வெற்றியின் முகத்தைப் பார்த்து சற்று பயந்தாள் கண்மணி.
“ எதுவா இருந்தாலும் சொல்லு கண்மணி. உன் ப்ரென்ட் லைஃப் நல்லா இருக்க வேண்டாமா !” வாணியைப் பற்றிய கவலை அவனிடம் அப்பட்டமாகத் தெரிய,
கண்மணி அன்று வில்லியமிடம் பேசியதைப் பற்றிக் கூறினாள்.
“ அவன் வாணிய விரும்பறான் அண்ணா. ஆனா , ஜீவா பத்தி சொல்லி நான் அவன ஒதுங்கிப் போக சொன்னேன். என் மேலையும் கொஞ்சம் தப்பிருக்கு வாணி. ஐ அம் சாரி டி. ப்ளீஸ்.. ஆனா அதுக்கப்றம் அவனால எதுவும் பிரச்சனை வரலையே!??” அவளும் அனைத்தையும் வாணியிடம் சொல்ல,
வெற்றி நொடியில் வில்லியமின் மனநிலையை அறிந்தான்.
“ இப்போ வரைக்கும் அவனால எதுவும் பிரச்சன இல்லை. ஆனா கண்டிப்பா அவன் எதுவோ ப்ளான் பண்றான்னு தோணுது. “ வெற்றி யோசனையுடன் சொல்ல,
வாணிக்கு உள்ளுக்குள் பயப்பந்து உருண்டது.
“ அண்ணா, என்ன சொல்ற? “ வாணி பதற,
“ ஆமா வாணி. முதல்ல இருந்தே அவன் உன் விஷயத்துல அடிக்கடி என்கிட்ட பேசியிருக்கான். உன்னையும் ஜீவாவும் பத்தி முதல்ல அவன் தான் என்கிட்ட சொன்னான். அதுக்கப்பறம் அன்னிக்கு ஜீவா அவங்க வீட்டுல கல்யாணத்துக்கு சம்மதம்னு சொல்ல நம்ம வீட்டுக்கு வந்திருக்கான். ஆனா வீடு தெரியாம இருந்தப்ப , வில்லியம் தான் நாம வீட்டுல இல்ல ன்னு அனுப்பிட்டான். ஆனா ஜீவா அவன் கிட்ட நம்பர் வாங்கி எனக்கு கால் பண்ணப்ப தான் வில்லியம் நம்ம வீட்டுக்கு வந்தான்.
நான் இது புரியாம அவனையும் கூட்டிட்டு ஜீவாவ பார்க்கப் போனேன். ஜீவா விஷயத்தை சொல்லிட்டுக் கிளம்பிப் போனதும் , மறுபடியும் ஜீவா வ பத்தி தப்பா சொல்லி என்னைக் குழப்பினான். “ வாணியிடம் விஷயத்தை சொல்ல,
அங்கிருந்த ரேகாவிற்கு ஒன்றும் விளங்காமல் இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
“ நான் வேணும்ன்னா வில்லியமோட அம்மா கிட்டப் பேசட்டா?” ரேகா கேட்க,
“ அதெல்லாம் வேணாம். நானே பாத்துக்கறேன். நீங்க இது வெளில தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதீங்க. வாணி நீயும் அவன் கிட்ட கொஞ்சம் ஜாக்கரதையா இரு.
அவன் போக்கே சரியில்லை. இனிக்கு நாலஞ்சு பொறுக்கிப்பசங்க கூட அவன் பேசிட்டு இருந்தத பாத்தேன். ஒரு வேளை அவன் சொன்ன மாதிரி ஜீவாவ வர விடாம தடுக்க எதாவது செஞ்சாலும் செய்வான்.
நான் ஜீவாக்கும் போன் பண்ணி சொல்றேன்.” மிகவும் குழப்பமாக இருந்தான் வெற்றி.
“ ரொம்ப தேங்க்ஸ் கண்மணி. உன்னால தான் இப்போ தெரிஞ்சுது. நான் நாளைக்கும் காலேஜ்க்கு வர மாட்டேன். நீ ஒரு வேளை யமுனாவைப் பார்த்தா , அவ கிட்டயும் சொல்லி வை. “ வாணி சற்று உருக்கமாகக் கூற,
“ சரி வாணி. டேக் கேர்… நான் வரேன். வரேன் ம்மா” ரேகாவிடமும் வாணியிடமும் விடைப் பெற்றுச் சென்றாள்.
ஜீவாவிடம் போன் செய்து அனைத்தையும் கூற , ஜீவா வும் சற்று கலக்கமடைந்தான்.
எந்தப் பிரச்சனையும் இன்றி அனைத்தும் நடக்கப் போவதாக நினைத்துக் கொண்டிருக்க, எங்கிருந்து முளைத்தான் இந்த வில்லியம் என்று எரிச்சலுற்றான்.
“ சரிங்க வெற்றி. ரொம்ப தேங்க்ஸ். “
“ எதுக்கு இப்போ தேங்க்ஸ் சொல்றீங்க ஜீவா. “ வெற்றி கேட்க,
“ இல்ல, அவனப் பத்தி நீங்க சொன்னதுல, உங்களுக்கு என் மேல கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்குன்னு நெனைக்கறேன். அதுக்குத் தான்.” லேசாக புன்னகைத்தான்.
“ உண்மை தான் ஜீவா. எனக்கு யாரை நம்புறதுன்னு தெரியல. சாரி. உங்ககிட்ட கொஞ்சம் கடுமையா பேசிருக்கேன். “ மனசார வருந்தினான்.
“ பரவாயில்ல வெற்றி. நானும் ரெண்டு தங்கச்சிங்களுக்கு அண்ணன் தான். உங்க நிலைமை எனக்குப் புரியாதா!”
“ தேங்க்ஸ் ஜீவா. கொஞ்சம் கவனமா இருங்க. அவன் என்கிட்டே சொன்னதைக் காப்பாத்த, உங்கள வரவிடாம தடுப்பான். அதுதான் அவனோட ப்ளானா இருக்கும். அதுனால பாத்துகோங்க. “ வெற்றி மீண்டும் மீண்டும் சொல்ல,
“ நீங்க கவலைப் படாதீங்க . நான் பாத்துகறேன். வெள்ளிக் கிழமை நிச்சயம் நாங்க வருவோம்!” தைரியம் சொன்னான் ஜீவா.
இன்று புதன் , இன்னும் ஒரு நாள் தான் இருந்தது. வில்லியம் எப்படி முயற்சி செய்வான் என்று ஜீவாவிற்குத் தெரியவில்லை. அதனால் எந்த வழியில் செல்வது என்று தெரியாமல் மீண்டும் மீண்டும் ஒரே தெருவில் சுற்றிக் கொண்டிருப்பதைப் போல உணர்ந்தான்.
வீட்டில் இருப்பவர்களிடம் எப்படிச் சொல்வது எதைச் சொல்வது என்று ஒன்றும் புரியவில்லை. அவர்கள் ஆரம்பத்திலேயே ஏதோ தடங்கலாக நினைத்தாலும் அது இதயாவிற்குத் தான் சங்கடமாகும் என்று யாரிடமும் சொல்லவும் இல்லை.
மறு நாள் காலை யமுனாவும் சுபத்ராவும் வழக்கம் போல காலேஜுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தனர்.
“ என்ன சுபி , காலேஜ் தான் நீ போகலையே , அப்பறம் ஏன் இவ்ளோ சீக்கிரம் கெளம்பற?” நக்கலாகக் கேட்க,
“ இருந்தாலும் அம்மாவுக்குத் தெரியாதே , அதுனால எப்பயும் போல கிளம்பறேன். யாருக்கும் சொல்லிடாத..முதல்ல தோப்புக்குத் தான் வரேன்னு சொன்னார் ஆனந்த்.. ”
“ முதல்ல தோப்புக்கா… அதுக்கப்பறம் எங்க?” அவளது தோளில் கைபோட்டுக் கொண்டு யமுனா கேட்க,
“ அப்பறம் சினிமாக்கு போலான்னு இருக்கோம்.” கண்ணடித்துக் கூற,
“ ம்ம்ம்.. வாழ்வு தான்… என்ஜாய் பண்ணும்மா.. எனக்கும் வாச்சிருக்கே !” அலுத்துக் கொண்டு அவளை அனுப்பி வைத்தாள்.
அவள் கிளம்பி ஒரு ஐந்து நிமிடத்திற்கு மேல் ஆனதும் , வீட்டில் போன் அடித்தது.
கல்லூரிக்குக் கிளம்பி வெளியே வந்தாள் யமுனா. போன் தொடர்ந்து அடிக்கவும் , அவளே அதை எடுத்துப் பேச ,
ஆனந்த் தான் பேசினான்.
“ என்ன அத்தான் , இப்போ போன் பண்ணியிருக்கீங்க..இன்னும் நீங்க கிளம்பலையா?” நக்கலாக பேசினாள்.
“ யம்மு, நான் அதுக்குத் தான் போன் பண்ணேன். அவள வர வேண்டாம்னு சொல்லிடு, அப்பாக்கு திடீர்னு முடியல, அதுனால டவுன் ஹாஸ்பிடல்லுக்கு கூட்டிட்டு வந்திருக்கேன். “ பதட்டமாகப் பேச,
“ அச்சோ , மாமா எப்படி இருக்காரு, நான் அண்ணன வர சொல்லட்டா?” இவளும் பதற,
“ இல்ல நான் பாத்துக்கறேன், இன்னும் டாக்டர்ஸ் உள்ள பாத்துட்டு இருக்காங்க. காலைலையே வந்துட்டோம். சுபி கிட்ட வர வேண்டான்னு சொல்லத் தான் பண்ணேன். சரி நான் அப்பறம் பேசறேன்.” ஆனந்த் வைத்துவிட,
அவள் சத்தமாகப் பேசியதில் தவசியும் ஜீவாவும் வெளியே வந்தனர்.
“ என்ன ஆச்சு யம்மு, ஏன் ஒரு மாதிரி இருக்க, யாரு போன்ல” தவசி கேட்க,
“ முத்து மாமாவுக்கு மறுபடியும் உடம்பு சரியில்லையாம். ஆனந்த் அத்தான் டவுன் ஹாஸ்பிடலுக்கு போயிருக்காங்களாம், அதை சொல்லத் தான் போன் பண்ணாங்க” யமுனா , சுபத்ராவின் ப்ளான் பற்றிச் சொல்லவில்லை.
“ அடக் கடவுளே ! ஜீவா வா நானும் நீயும் போய்ப் பாத்துட்டு வரலாம், சங்கரி…” ஜீவாவிடம் சொல்லிவிட்டு மனைவியைத் தேடிச் சென்றார்.
வேறு எதையும் யோசிக்காமல் ஜீவா , ஆனந்த் தனியாக இருக்கிறான் என்பதால் உடனே கிளம்பத் தயாரானான்.
இவர்கள் இங்கே கிளம்ப, யமுனா அங்கே தோப்பிற்குச் சென்ற சுப்த்ராவைத் தேடிச் சென்றாள்.
இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க,
அங்கே இத்தனை நாள் ஜீவாவைத் திருமணம் செய்து கொள்ள அண்ணன் சம்மதிப்பானா என்று கவலையோடு சுற்றிக் கொண்டிருந்த இதயவாணி, இப்போது வெற்றியும் ஜீவாவின் பக்கம் நிற்பதைக் கண்ட பிறகு , அவளுக்குள் தூங்கிக் கொண்டிருந்த அந்தத் துடுக்குத் தனம் மீண்டும் வெளிய வந்தது.
அவளைப் பொறுத்தவரை வில்லியம் ஒரு ஆளே இல்லை. அவன் என்ன செய்துவிடுவான் பார்க்கிறேன் என்று காலையிலேயே அவனைக் கண்காணிக்கக் கிளம்பி இருந்தாள்.
எப்போதும் போல் இல்லாமல் , பேன்ட் ஷர்ட் அணிந்து கொண்டு, சால்வையை வேறு முகத்தைச் சுற்றி மூடியிருந்தாள்.
அவனது திட்டம் என்னவென்று தெரியாவிட்டாலும் , அவன் எங்கு செல்கிறான் என்று கண்காணித்து பிறகு வெற்றியிடம் சொல்லலாம் என்று சி ஐ டி ஆக மாறியிருந்தாள்.
அவன் எதுவும் செய்யாமல் இருந்தாலும் , அவனை நேருக்கு நேராக நின்று பேசித் தீர்த்துவிடுவது என்று யோசித்திருந்தாள்.
அவனது வீட்டுக்கு அருகில் இருக்கும் கோவில் வாசலில் காத்திருந்தாள்.