Aval throwpathi alla – 22

Aval throwpathi alla – 22

காழ்புணர்ச்சி

“என்ன க்கா?… அதிசயமா வீட்டுக்கு சீக்கிரம் வந்துட்ட”  நதியா தமக்கையின் வருகையை பார்த்து வினவ,

“அக்கா!!!” என்று அமலா ஆனந்தமாய் ஓடிவந்து வீராவை கட்டிக் கொண்டாள்.

அவர்கள் இருவரையும் பார்த்து இயந்திரத்தனமாய் ஓர் புன்னகையை உதிர்த்தவள் நேராய் வீட்டிற்குள் நுழைந்து தரையில் யோசனையோடு அமர்ந்து கொள்ள,

“ஆமா க்கா! அந்த சர்வாதிகாரி எப்படி உன்னை சீக்கிரம் உட்டான்?!” என்று கேட்க அவள் எண்ணஅலைகள் அங்கே இல்லை.

சாரதி வீட்டில் தங்கி கொள்ள சொன்னதை எண்ணி குழப்பமுற்றிருந்தாள்.

“அக்க்க்க்க்க்கா” என்று அமலா அவள் தோள்களை குலுக்க

வீராவின் பார்வை அவர்கள் இருவரையும் அதிர்ச்சியாய் ஏறிட்டது.

“என்ன க்கா? எதுவும் பேச மாட்டிற? ஏதாச்சும் பிரச்சனையா?!” நதியா வினவ,

“ஆமா! நமக்கெல்லாம் பிரச்சனை வரலன்னாதானடி ஆச்சர்யம்” என்று சலித்து கொண்டாள் வீரா!

“அப்படி இன்னா பிரச்சனை? அதைதான் சொல்லேன்” அமலா ஆவலாய் கேட்க,

“அந்த சாரதி இல்ல” என்ற வீரா ஆரம்பிக்கவும்

“ஆமா… உன் சர்வாதிகாரி” என்று சொல்லி நதியாவும் அமலாவும் சிரித்தனர்.

“அய்யோ சிரிக்காதங்கடி… நானே அவன்கிட்ட மாட்டிக்கின்னு  படாதபாடு படிறேன்”

“அப்படி இன்னா மேட்டரு” என்று இருவரையும் கோரஸாக கேட்க,

“இருங்கடி சொல்றேன்” என்று வீரா அவர்களிடம் சாரதி அவுட் ஹவுஸில் தங்கி கொள்ள சொன்னதை தெரிவித்தாள்.

இவள் சொல்லி முடிக்கவும் அமலாவும் நதியாவும் அதிர்ச்சியும் ஆச்சர்யமாய் ஒருவர் முகத்தை ஒருவர்  பார்த்து கொள்ள வீரா மேலும்,

“எனக்கு இன்னா சொல்றதுன்னே தெரியல… நான் எப்படியோ சமாளிச்சி அவன்கிட்ட வேணான்னு சொன்னாலும் கேட்க மாட்டிறான்” என்றவள் கவலை தோய்ந்த முகத்தோடு தன் ஒற்றை கையால் தலையை தாங்கி பிடித்து கொண்டாள்.

அமலா அப்போது,

“ஏன்க்கா வேணான்னு சொன்ன… நல்ல சேன்ஸ்… இந்த கலீஜுல இருந்து எஸ்கேப் ஆயிடலாம்ல” என்று உரைக்க,

வீரா அதிர்ந்து,

“லூசாடி நீ! அங்க போனா நான் புஃல் டைம் ஆம்பள வேஷத்திலயே சுத்திக்கின்னு இருக்கனும்… இதுல முக்கால் வாசி நேரம் ஆம்பிள குரலில் பேசி பேசி எனக்கு என் குரலே மறந்து போச்சு” என்ற அழமாட்டாத குறையாக சொல்லி முடித்தாள்.

“ஓ!! இதுல இப்படி ஒரு மேட்டரு இருக்கோ?!” என்று அமலா யோசனையாய் பார்க்க,

“ஹ்ம்ம்ம்” என்றபடி வீராவின் முகம் சுணங்கியது.

நதியா தீவிரமாய் யோசித்த பின் தன் தமக்கையை பார்த்து,

“நீ சொல்றதெல்லாம் சரிதான் க்கா… ஆனா நம்ம அங்க போனா சேஃபா இருப்போம்ல… என்ன ஒரே பிரச்சனை?  அக்கான்னு கூப்பிடிறதுக்கு பதிலா உன்னை அண்ணான்னு கூப்பிட வேண்டியிருக்கும்” என்று சொல்லி அவள் வாயை மூடி சிரிக்க,

“உனக்கு நான் சொல்றது விளையாட்டா இருக்குல?” என்று கடுப்பானாள் வீரா!

“எனக்கு உன் பிரச்சனை புரியுதுக்கா… ஆனா நான் அப்படி சொல்றதுக்கும் ஒரு காரணம் இருக்கு” நதியா சொல்ல,

“இன்னாடி அது? ” புரியாமல் கேட்டாள் வீரா!

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வீட்டு ஓனரம்மா வந்து சாமியாடிட்டு போச்சு தெரியுமா?!”

“இன்னாவாம் அதுக்கு… நம்ம வாடகையெல்லாம் கரெக்டா கொடுக்கிறோம்ல” என்று வீரா கோபமாய் கேட்க,

“அந்த கிழவிக்கு நம்ம வீட்டை காலி பண்ணனுமா… இன்னாத்துக்குன்னு கேட்டதுக்கு உன்னை பத்தி தப்பு தப்பா பேசுது… நாங்க வுடுவோமா… நானும் அமலாவும் அந்த கிழவியை நல்லா பதிலுக்கு கத்திவுட்டோம்” என்று நதியா வீரதீரமாய் சொல்லிவிட்டு சட்டென்று ஸ்வரம் இறங்கி அமலாவை பார்க்க,

“அப்புறம் என்னாச்சு? மேலே சொல்லுங்கடி?!”  என்று கேட்டு வீரா படபடத்தாள்.

“அப்புறம் என்ன?அந்த கிழவி காண்டாகி இன்னும் ஒரு வாரத்தில வீட்டை காலி பண்ணனும்னு கறாரா சொல்லிட்டு போயிடுச்சு” என்று அமலா சொல்லி முடிக்க,

“ஆமா க்கா” என்று நதியா  தலையசைத்தாள்.

“கடவுளே!!!” என்று வீரா மீண்டும் தலையில் கை வைத்து கொள்ள,

“நீதானக்கா இன்னா பிரச்சனை வந்தாலும் தில்லா சமாளிக்கனும்னு சொன்ன” என்று அமலாவும் நதியாவும் ஒரு சேர பதிலளிக்க,

“நான் எதை சொன்ன.. நீங்க இரண்டு பேரும் இன்னா பண்ணி வைச்சிக்கீறீங்க” என்று அவஸ்த்தையோடு மூச்சை இழுத்துவிட்டவள்,

“எங்கிருந்துதான் நமக்கும் மட்டும் டிஸைன் டிஸைனா பிரச்சனை வருமோ” என்று தனக்குத்தானே புலம்பி கொண்டாள்.

“சாரி க்கா… அவசரபட்டுட்டோமோ?!” என்று இருவரும் குற்றவுணர்வோடு கேட்க,

“பின்ன… ஒரு வாரத்தில எப்படி வேற வீடு பார்க்க முடியும்… நமக்கு என்ன தெரியும்… அதுவும் எந்த ஏரியால போய் எங்கன்னு பார்க்கிறது… அப்படியே பார்த்தாலும் நம்ம மூணு பேருக்கு  வூடு எவன்டி கொடுப்பான்? அய்யோ!! யோசிக்க யோசிக்க… எனக்கு பையத்தியமே பிடிக்குது” என்று இருகரத்தையும் அவள் தலையை பிடித்து கொள்ள,

“அதான் உன் முதலாளி சொல்லி இருக்காருல்ல… இப்போதைக்கு அந்த ஆளோட அவுட் ஹவுஸுக்கு போயிருவோம்… அப்புறமா மத்த பிரச்சனையை பார்த்துப்போம்” நதியா சொல்ல,

“புரியாம பேசாதுங்கடி… அந்த ஹவுட் ஹவுஸ்ல ஒரு மாமி இருக்கு… அது சரியான மடிசார் கட்டின கேடி… அதுக்கு மட்டும் நம்ம மேட்டர் தெரிஞ்சிது… நம்மல கண்டம்மாக்கிடோம்…அதுவுமில்லாம அந்த சாரதியை பத்தி உங்களுக்கு தெரியாது… அவன் பொண்ணுங்க விஷயத்தில ரொம்ப விவகாரமானவன்… அவன் வீட்டில போய் உங்க இரண்டு பேரையும்… வேண்டவே வேண்டாம் சாமி” என்று திட்டவட்டமாய் சொல்லியவள் அவர்கள் இருவரையும் பார்த்து,

“இப்ப இன்ன? வேற வூடு பார்க்கனும் அவ்வளவுதானே! பார்த்துக்கலாம்… நீங்க இரண்டு பேரும் இதுக்கு மேல இதை பத்தி பேசாதீங்க” என்று சொல்லி கையெடுத்து கும்பிட்டாள்.

அமலாவும் நதியாவும் தமக்கையின் சொல்படி மேலே எதுவும் பேசாமல் விவாதத்தை முடித்து கொள்ள,

இரவு உணவு முடிந்த பின் வீரா உறக்கம் வராமல் வாசலுக்கும் வீட்டிற்கும் யோசனையோடு நடந்து கொண்டிருந்தாள்.

அந்த சமயம் சுகுமார் தன் வீட்டின் பூட்டை திறந்து உள்ளே நுழைவதை பார்த்தவளுக்கு மின்னலடித்தது போல் ஓர் யோசனை தோன்ற,

“சுகுமாரு” என்று அவன் வீட்டின் வாசல் கதவை தட்டினாள்.

அவளை குழப்பமாய் பார்த்தவன் தான் வாங்கி வந்து உணவு பொட்டலத்தை பிரித்து சாப்பிட அமர்ந்திருந்தான்.

“அட வீரா! வா சாப்பிடு” என்றவன் முறுவலிக்க,

“அதெல்லாம் வேண்டாம்… நீயே துன்னு… நான் உன்கிட்ட ஒரு விஷயம் பேசனும்” என்றாள்.

“காசா பணமா… பேசு… பேசு” என்றான் உணவருந்தி கொண்டே!

“என்ன நக்கலா?”

“ம்ச்… மேட்டரை சொல்லு” என்றவன் சாப்பிட்டு கொண்டே கேட்க,

“வாடகைக்கு பக்கத்தில எங்கேயாச்சும் ஒரு வூடு பார்த்து கொடு சுகுமாரு”  என்றாள்.

“ஏன்? என்னாச்சு?”

“உனக்கு தெரியாதா? நம்ம ஏரியால நடக்கிற பிரச்சனையெல்லாம்”

“ஏன் தெரியாம? அல்லாம் தெரியும்… நான் சொல்ல சொல்ல கேட்காம நீதானே அந்த வேலைக்கு போனோம்னு அடம்பிடிச்ச… அப்புறம் குத்துதே குடையேதேன்னா”

“என் நிலைமை புரிஞ்சும் நீயும் இப்படி பேசிற பார்த்தியா?!” அவள் முகம் தொங்கி போக,

சில நொடிகள் மௌனமாய் யோசித்தவன் அவளை நிமிர்ந்து நோக்கி,

“யாரோ எப்படியோ பேசிட்டு போறாங்க… அதுக்கு இன்னாத்துக்கு நீ வூடு காலி பன்ற” என்றான்.

“அய்யோ சுகுமார்! அந்த ஓனர் கிழவி ஒரு வாரத்தில வீட்டை காலி பண்ண சொல்லிடுச்சு… அதான்!” என்றாள்.

“அய்யய்யோ… ” சுகுமார் அதிர்ந்தான்.

“ஹ்ம்ம்… எனக்கு இன்னா பன்றதுன்னே புரியல… ப்ளீஸ் சுகுமாரு… பக்கத்தில எங்கேயாச்சும் வூடு பார்த்து கொடேன்”

“ஒரு வாரத்தில… எப்படி வீரா? நீ பேசாம அந்த கிழவிக்கிட்ட ஒரு மாசம் டைம் கேளேன்”

“உனக்கு தெரியாதா?… அந்த கிழவி சொன்னபடி காலி பண்ணலன்னா என்ன அல்லாம் பண்ணும்னு”

அவனுக்கும் அவள் நிலைமை புரிந்தது.

“சரி விடு! அடுத்த இரண்டு நாளைக்கு வேலை ஒண்ணும் கிடையாது… கடை லீவுதான்… நான் பார்க்கிறேன்” என்க,

“லீவா ? இன்னாத்துக்கு” என்று புருவத்தை நெறித்தாள்.

“உனக்கு மேட்டரே தெரியாதா?”

“உம்ஹும்… இன்னா மேட்டரு?”

“அடிப்பாவி! எம்மா பெரிய விஷயம் நடந்திருக்கு தெரியாதுங்கிற”

“அப்படி என்னதான்டா மேட்டரு?”

“நம்ம சார் கடைக்கு பக்கத்தில இருக்கே… மங்களம் சில்க்ஸ்”

“ஆமா… செம பெரிய கடை” என்றவள் பிரம்மிப்பாய் புருவத்தை உயர்த்த,

“அது பத்துக்கின்னு எரிஞ்சி போச்சு” என்றான்.

“அய்யய்யோ அப்புறம்!”  என்றவள் அதிர்ச்சியுற,

“எம்மா நேரம் தண்ணி ஊத்தி அணைச்சாங்க தெரியுமா? ப்பா… டிநகரே   இருட்டிக்கின்னு ஒரே புகையாயிடுச்சு… எங்கே நம்ம கடைக்கும் நெருப்பு பரவிடுமோன்னு அல்லாரும் பேஜாராயிட்டோம்… நல்ல வேளை! அப்படியெல்லாம் எதுவும் ஆகல… என்ன? மங்களம் சில்க்ஸ் கடைதான் கண்டமாயிருச்சு.” என்க,

“நிஜமாவா சுகுமாரு?!” என்று வியப்பும் அதிர்ச்சியுமாய் கேட்டாள்.

“பின்ன… போய் டிவியை போட்டு பாரு” என்றவன் சொல்ல,

அவளுக்கு அவன் சொன்னதை கேட்க கேட்க விழிகள் இரண்டு மடங்கு பெரிதாகின. உடனடியாக வீட்டிற்கு சென்றவள் தொலைக்காட்சியை இயக்கி,

அந்த செய்திகளின் காட்சிகளை பார்த்து அதிர்வுற்றாள்.

அவளுடைய குழப்பமே இன்று காலையில் சாரதி இருந்த மனநிலைதான்!

இயல்பை விடவும் இன்று அவன் அதீத சந்தோஷமாய் இருந்தான். அதெப்படி சாத்தியம் ? நடந்தேறிய இந்த பயங்கர தீ விபத்தை  பார்த்து எப்படி அவனால் துளிகூட பதட்டமில்லாமல் இருக்க முடிந்தது. அதுவும் அவனுக்கு விஷயம் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை.

அவன் கடையில் வேலை செய்பவர்களுக்கே நெருப்பு அடுத்ததாய்  அவர்கள் கடைக்கு பரவிவிடுமோ என்ற அச்சமிருக்கும் போது அவன் எப்படி அத்தனை சாதாரணமாய் இருந்தான்.
அவள் உள்ளுணர்வு கேள்விகளை அடுக்க,

  அப்படி ஒரு சூழ்நிலையில் அவன் ரிஸார்ட்டுக்கு புறப்பட்டு சென்றதுதான் அவளுக்கு உச்சபட்ச அதிர்ச்சி!

நல்ல வேளையாக அவள் சொன்னவற்றை கேட்டு அவளை ரிஸாட்டுக்கு அழைத்து செல்லாமல் விட்டு சென்றுவிட்டான்.

வீரா தலையை பிய்த்து கொண்டாள். ஆனால் சாரதியின் செயல்களுக்கான காரணகாரியங்களை குறித்து அவளால் யூகிக்க கூட முடியவில்லை.

இவையெல்லாம் வியாபார முதலைகளால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
இந்த உலகம் முழுக்க நடைபெறும்  எல்லா சம்பவங்களுக்கும் ஓர் வியாபார பிண்ணனி இருக்கிறது. அதில் காரண காரியமே இல்லாம் பாதிக்கப்படுபவர்கள் அடித்தட்டு மக்கள்தான்!

அத்தகைய அடித்தட்டு வாழ்கை வாழும் வீராவும் இதில் விதிவிலக்கல்ல. அவளால் இந்த வியாபார தந்திரங்களை பற்றியெல்லாம் புரிந்து கொள்ள முடியவில்லை. சில நொடிகள் இவற்றை குறித்து சிந்தித்தவள் பின்னர் அதனை பற்றிய பெரிய ஆராய்ச்சி எல்லாம் செய்யாமல் மறந்துவிட்டிருந்தாள்.

அவளுக்கு தெரியாது!

வருங்காலத்தில் இந்த சம்பவங்கள் யாவும் அவளை பெரும் இன்னலுக்கு ஆளாக்க போகிறது என்று!

  இரு ஆண்களின்  காழ்புணர்ச்சிக்கு  சம்பந்தமில்லாத பாதிக்கப்படுகிறவள் ஓர் பெண்தான்!

அன்றிலிருந்து இன்றுவரை! துரியோதனனுக்கும் தர்மனுக்கும் இடையில் நிகழ்ந்த பழி தீர்க்கும் விளையாட்டில் பகடையாய் உருண்டது திரௌபதிதானே!

இங்கேயும் அப்படி ஒரு ஆட்டம் அரங்கேறி கொண்டிருக்க,

சாரதி கொடுத்த பதிலடியில் அரவிந்த் நிலைகுலைந்து போயிருந்தான் என்றே சொல்ல வேண்டும். அதே நேரம்
சாரதி மீதான பழிவுணர்ச்சி அடங்காத காட்டு தீ மேலும் மேலும் விஸ்வரூபம் எடுத்து கொண்டிருந்தது.

அரவிந்த் கட்டுக்கடங்காத கோபத்தில் இருக்க பேசியில் அவன் தாய் சாரதாவின் அழைப்பு!

“எனக்கு ரொம்ப பயமா இருக்கு… சீக்கிரம் கிளம்பு வா கண்ணா! டாக்டர் வேற அப்பாவுக்கு ரொம்ப ஷாக் ஸ்ட்ரெஸெல்லாம் கொடுக்க கூடாதுன்னு சொல்லி இருக்காரு… ஆனா இப்ப நடக்கிறதெல்லாம் பார்த்தா” என்று அவர்
மேலே பேச முடியாமல் திக்கி அழ,

“ம்மா அழாதீங்க ம்மா… நான் புறப்பட்டேன்… டிக்கெட்ஸ் கன்பாஃர்ம் ஆனதும் கிளம்பி வந்திருவேன்” என்று சமாதானம் உரைத்து தன் அம்மாவை தேற்றிவிட்டு

அன்றே பிரயாணத்திற்கான ஏற்பாடெல்லாம் செய்துவிட்டு புறப்பட்டு மறுநாள் இரவே சென்னையை தன் மூத்த தமக்கை அக்ஷயாவோடு வந்தடைந்தான்.

அவன் வீட்டை வந்து சேர்ந்த போது ஓர் மயான அமைதி சூழ்ந்திருந்தது. சாரதா அவன் வருகைக்காக முகப்பு அறையிலேயே காத்திருந்தவர்,

மகனும் மகளும் உள்ளே நுழைந்ததும் அவர்களை கட்டி கொண்டு அழ ஆரம்பித்தார். அவரை பெரும்பாடுபட்டு தேற்றியவர்கள் நடந்த விஷயங்கள் குறித்தும் தந்தையின் உடல்நிலை குறித்தும் விசாரித்தனர்.

நாராயணசுவாமியின் உடல்நிலை கொஞ்சம் கவலைகிடமாகதான் இருந்தது. வீட்டிலேயே கைதேர்ந்த மருத்துவரையும் நர்ஸையும் கொண்டு அவர் உடல் நிலையை கவனிக்க ஏற்பாடு செய்திருந்தார் சாரதா!

இந்த சமயம் பார்த்து மகள்கள் மகன் என எல்லோரும் வெளிநாட்டில் இருக்க, அவர் துணைக்கு யாரும் இல்லாமல் ரொம்பவும் கலங்கி போயிருந்தார்.

மூத்த மகள் அக்ஷயா தன் அம்மாவை தேற்றி அழைத்து செல்ல,

அரவிந்த் தன் தந்தையின் அறை வாசலில் தயக்கத்தோடு நுழைந்தான். 

அவர் உறங்கி கொண்டிருப்பதை பார்த்து லேசாக அவனுக்கு மனஅமைதி ஏற்பட அங்கிருந்த நர்ஸிடம் அவர் உடல் நிலை குறித்து விசாரித்தான்.

“முன்னே இருந்ததுக்கு இப்போ கொஞ்சம் பரவாயில்ல” என்று மெலிதான குரலில் உரைத்த

அந்த நர்ஸ் மேலும்,

“ஆனா பிபிதான் நார்மலை விட ஜாஸ்தியா இருக்கு” என்றாள்.

அவன் கவலையோடு முகப்பு அறையில் சோபாவில் வந்து அமர்ந்து கொண்டு யோசனையில் ஆழ்ந்தான். உறக்கம் வராமல் அவன் இரவெல்லாம் அப்படியே அமர்ந்திருக்க
சாரதா அவனை பார்த்து அதிர்ந்து,
“என்னடா கண்ணா… நீ தூங்கலயா?” என்று சாரதா அவன் தலையை வருடி கொடுக்க,

“உம்ஹூம்” என்று தலையை மட்டும் அசைத்தான்.

“நமக்கு ஏன்டா இப்படியெல்லாம் நடக்குது… ” என்று சாரதா சொல்லி கொண்டே கண்ணீர் வடிக்க

அரவிந்த் அப்போது தன் தாயின் தோள்களை ஆதரவாய் அணைத்து கொண்டு, “நீங்க டென்ஷனாகதீங்க ம்மா… எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்” என்றான்.

“நீ மட்டும் எப்படி கண்ணா தனியா இவ்வளவு பிரச்சனையும்”

“ம்ச் பார்த்துக்கிறேன்னு சொல்றேன்ல… நீங்க ரிலேக்ஸா இருங்க…  அப்பாவையும் டென்ஷனாகம பார்த்துக்கோங்க” என்றான்.

சாரதாவிற்கு மகனின் வார்த்தைகள் ஆறுதலாக இருந்த அதே சமயம் அவன்  நிலைமை உணர்ந்து பொறுப்பாக பேசியதை கேட்டு வியப்பாகவும் இருந்தது.

அரவிந்த்.

சாரதாவிற்கும் நாராயணசுவாமிக்கும்  மூன்றாவது பிள்ளை என்பது எல்லோருக்கும் தெரிந்த கதை. ஆனால் அவன் அவர்களின் இரண்டு பெண் வாரிசுகளுக்கு பிறகு ஐந்து ஆறு வருடங்கள் தாமதமாக பிறந்தவன்.

வீட்டின் கடைகுட்டி. அதனாலேயே படுசெல்லம். ஓரே ஆண் மகனென்ற தனி பிரியமும் கவனிப்பும் வேறு! செல்வசெழிப்பாய் வளர்ந்தவன்!

பிறந்ததிலிருந்து சொகுசாகவே  வளர்ந்ததினால் கஷ்டம் நஷ்டமென்று இதுவரையில் எதையும் பார்த்ததேயில்லை. அவனுக்கு பணம் என்பது ஆடம்பரத்திற்கானது. அத்தியாவசியமானதில்லை!

  இவ்வளவும் பணமும் செல்வாக்கும் இருந்தாலும் சாரதா நாரயாணசுவாமியின் வளர்ப்பில் அவன் ஒழுக்கமாகவே வளர்ந்திருந்தான்.

ஆனால் அவனிடம் ஓரே நெருடலான விஷயம். அவன் ஆசைப்படும் எதுவுமே அடுத்த நொடியே அவனுக்கு  சொந்தமானதாக மாறிவிட வேண்டும். சிறுவயதிலிருந்தே அத்தகைய பிடிவாதம் அவனுக்கு!

ஆனால் அந்த விஷயத்தில் வீரா மட்டும் விதிவிலக்கானாள்.

பணம் அந்தஸ்து அழகு என எல்லாமே நிறைவாய் இருந்தாலும் அரவிந்த் காதல் கொண்டு ஈர்க்கப்பட்டது வீராவின் மீது மட்டும்தான். அவளை உண்மையாகவே காதிலித்திருந்தாலும் அதன் ஆழத்தை அவளுக்கு அவன் சரியாக புரிய வைக்கவுமில்லை. அதே நேரம் அவள் சூழ்நிலையும் அவன் காதலை புரிந்து கொள்ள ஏதுவாக இல்லை.

அவனின் வாழ்கையில் இப்படி ஓர் சிக்கலான சூழ்நிலையை எதிர்கொள்வது இதுவே முதல்முறை!

தான் செய்த முட்டாள்தனத்தால்தான் இவையெல்லாம் என்று அவன் மனசாட்சி அவனை நிந்திக்க, இப்படி ஒரு நிலையில் கொண்டு வந்து நிறுத்திய சாரதியை எண்ணும் போது அவனுக்கு அத்தனை வெறுப்பாய் இருந்தது.

விடிந்ததும் நாராயணசுவாமியின் காரியதரிசி தயாளன் அரவிந்தின் அழைப்பை ஏற்று வீட்டிற்கு வந்திருந்தார்.  நடந்தேறிய தீ விபத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தை குறித்து அவரிடம் கேட்டறிந்தவனுக்கு, எப்படி இந்த மோசமான நிலைமையை சமாளிக்க போகிறோமென்று மலைப்பாய் இருந்தது.

“இன்னும் சரியா கணக்கெடுக்கல தம்பி…! அதுவும் புது ஸ்டாக்கெல்லாம் இரண்டு நாள் முன்னாடி கடையில வந்து இறங்குச்சு… எல்லாமே காஸ்ட்லி மெட்டிரீயல்ஸ்… புது புது டிஸைன்ஸ்” என்று தயாளன் எடுத்துரைக்க,

“அப்போ! எல்லாம் பக்காவா பிளான் பண்ணி பண்ணியிருக்கான் அந்த பாஸ்டட்!” என்றவன் தனக்குத்தானே சொல்லி கொண்டான்.

“யாரை தம்பி சொன்னிங்க?!”

அவர் கேள்விக்கு பதிலுரைக்காமல், “ஆக்ஸிடென்ட் பத்தி போலீஸ் விசாரிக்குதா… ஏதாச்சும் தகவல் கிடைச்சுதா?”

“தம்பி! இப்போ நமக்கு அதுவே பிரச்சனைதான்… ” என்றவர் சொல்ல,

“ஏன்?” என்று குழப்பமாய் கேள்வி எழுப்பினான்.

“அது வந்து தம்பி! நம்ம கடையில சரியான சேஃப்டி இல்லன்னு கேஸ் இப்போ நம்ம பக்கமே திரும்பியிருக்கு…”

“வாட்?” அவன் அதிர்ச்சியாய் பார்க்க,

“டிவில கிழி கிழின்னு கிழிக்கிறாங்க… கஸ்டமர்ஸ் கடையில இருக்கும் போது இந்த ஆக்ஸிடென்டஸ் நடந்திருந்தான்னு கேட்டு நம்மல வைச்சி செய்றானுங்க … ஏதோ நம்ம நல்ல நேரம் நெருப்பு காலையில நாலுமணிக்கு பிடிச்சிது… இதுவே காலையில பத்து பன்னிரெண்டு மணிக்கு பிடிச்சிருந்தது… கஸ்டமர்ஸ் வொர்க்கர்ஸ்னு… அய்யோ! கதை அம்பேல்” என்றவர் சொல்ல,

“இதெல்லாம் அந்த சாரதியோட வேலைதான் அங்கிள்… நம்ம எம்பிளாய்ஸ்  யாரையோ விலைக்கு வாங்கி அவன்தான் இப்படி செஞ்சிருக்கான்” என்றான். அவர் அதிர்ச்சியாகி பின் இயல்பு நிலைக்கு திரும்பி,

“இருக்காது தம்பி… தொழிற் போட்டி இருந்தா கூட இப்படியெல்லாம் செஞ்சிருக்க வாய்ப்பே இல்ல… இது எல்க்டிரிக்கல் பிராப்ளம்… இரண்டு நாளவே இருந்துச்சு…  சரி பண்ண எல்க்டிரீஷ்யனை வரவைக்கிறதுக்குள்ள ஜெனரெட்டர் ரூம்ல நெருப்பு பிடிச்சி கடை முழுக்க பரவிடுச்சு… இதுல நம்ம கேர்லஸ்னஸும் இருக்கு… இந்த விஷயம் வெளியே தெரிஞ்சா கடைக்கு இன்ஸுரன்ஸ் கூட க்ளைம் பண்ண முடியாது. இது தானா நடந்த ஆக்ஸிடென்ட்னு நம்ப வைச்சாதான் நமக்கு நல்லது… இன்ஸுரன்ஸாச்சும் வரும்” என்று தயாளன் விளக்கமளிக்க

சாரதிதான் இதை செய்திருக்க கூடும் என்று தீர்க்கமாய் இருந்த அரவிந்திற்கு  இப்போது குழப்பமாய் இருந்தது.

அதன் பிறகு தயாளனிடம் சிரத்தையே இல்லாமல் எல்லா விவரங்களையும் கேட்டுவிட்டு அவரை அனுப்பி வைத்தவன் குழப்பமாய் சிந்தித்து கொண்டிருக்க,

அப்போது அவன் பேசியில் வந்த சாரதியின் அழைப்பை பார்த்து கலவரமானான்.
வெகுநேரம் அந்த அழைப்பை ஏற்காமல் தாமதித்தவன் பின் அழைப்பை ஏற்று ரெகார்ட் பட்டனை ஆன் செய்து மௌனமாய் இருக்க,

“ஹெலோ தம்பி… எப்படி இருக்க? சென்னைக்கு வந்திட்டியாமே” என்று  சாரதி எகத்தாளமாய் கேட்க,

“நீ செஞ்சது பெரிய தப்பு” என்றவன் கோபமாய் பொங்கினான்.

“என்னை உயிரோட எரிக்க ஆளு அனுப்பினியே? அது சின்ன தப்பா?!” என்று சாரதி கேட்க,

“அப்போ நீதான் பிளேன் பண்ணி என் கடையை எரிச்ச” என்றான்.

“ஆமா” என்றவன்,

“அப்படின்னு நான் சொல்லுவன்னு நினைச்சியா?” என்க

அரவிந்திற்கு கடுப்பானது.

“பொய் சொல்லாதே… நீதான் இந்த வேலையை செஞ்சன்னு எனக்கு நல்லா தெரியும்டா” என்றவன் கோபமாக,

“அப்படின்னா என் பேர்ல கேஸ் கொடு தம்பி” என்றான்.

“கொடுக்கத்தான்டா போறேன்”

“கொடு கொடு… அப்பதான் உன்னையும் உங்க அப்பனையும் தூக்கி உள்ளே வைப்பாங்க”

“எங்களை எதுக்குடா தூக்கி உள்ளே வைப்பாங்க” என்றவன் பதட்டம் கொள்ள,

“விவரம் பத்தல தம்பி உனக்கு… யாராச்சும் நல்ல தெரிஞ்ச ஆளுங்ககிட்ட விசாரி” என்றவன் சொல்ல அரவிந்திற்கு அவன் ரொம்பவும் முன்னெச்சிரிக்கையோடு பேசிகிறான் என்பது புரிய,

“நீ என்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது.. உன்னை நான் விடமாட்டேன்” என்று அரவிந்த் உணர்ச்சிசப்பட

“இந்த பஞ்செல்லாம் பேசிறதை கொஞ்சம் நிறுத்திட்டு… ஒழுங்கா என் ஆபிஸுக்கு வர… என்கிட்ட நீ பேசினதுக்கெல்லாம் மன்னிப்பு கேட்கிற… இல்லன்னா” என்றவன் அழுத்தம் கொடுக்க

“என்னடா பண்ணுவ?” என்று வெறியானான் அரவிந்த்!

“அதுக்கும் மேல… ” என்றான். அரவிந்த் பீதியோடு தன் நெற்றி வியர்வை துடைத்து கொள்ள,

“நான் போஃனை வைச்சிடுறேன்… நீ சீக்கிரம் என் ஆபிஸீக்கு வந்து சேரு… அப்புறம் ஒரு விஷயம்”

“இந்த  ரெகார்ட் பண்றதெல்லாம் ரொம்ப மொக்க ஐடியா தம்பி… சின்ன பையன்னு அப்பப்போ நிருபிக்கிற?” என்று சொல்லி அழைப்பை துண்டித்துவிட

அரவிந்த் சாரதியின் புத்திகூர்மையை எண்ணி உண்மையிலேயே மிரண்டு போயிருந்தான். அவன் மீது எரிமலையாய் கோபம் இருந்தாலும் பிரச்சனையை எப்படியாவது தீர்க்க வேண்டுமென்று மனநிலைக்கு அரவிந்த் வந்திருந்தான்.

அரவிந்த் சாரதியை சந்திக்க வரபோகும் அந்த தருணம்தான்  வீராவின் வாழ்கையை மொத்தமாய் தடம் புரள செய்ய போகிறது.

error: Content is protected !!