Thenmazhai – Epiosde 2 – Akila kannan

Thenmazhai – Epiosde 2 – Akila kannan

 

தேன் மழை அத்தியாயம் – 2

ஆதித்த கரிகாலனின் பார்வை மதியெனப் பிரகாசிக்கும் அவள் முகத்தைத் தீண்ட, எதிரிகளை அளவிடும் விதமாக நோக்கும் கரிகாலனின் கூர்மையான விழிகள், தன் செயல் மறந்து அந்த காரிகையைக் காதலோடு ரசித்துக் கொண்டு அவள் செவ்விதழ்களில் நிலைத்தது. முத்து முத்தாக அவள் முகத்தில் உருளும் நீர்த் துளிகள் கரிகாலனை கிறங்க செய்தது.

கரிகாலனின் பார்வையை  வில் என வளைந்திருக்கும் தன் புருவத்தை உயர்த்தி, தன் மயக்கும் விழிகளால் கரிகாலனைக்  கண்டிக்கும் விதமாகப் பார்க்க முயன்று தோற்றாள் அந்த காரிகை. கரிகாலனின் கூரிய கண்கள் அவள் விழிகளைப் பார்க்க… அவள் காந்த விழிகள் அவன் தேஜஸ் நிறைந்த கண்களைப் பார்க்க.. கரிகாலனின் கண்களிலிருந்த ஆளுமையில் அவள் மயங்க… அவள் கண்களிலிருந்த தீச்சன்யத்தில் அவன் கிறங்க…  இரு கண்களும் உறவு கொண்டாட இந்த உலகம் அவர்களுக்காக ஸ்தம்பித்து நின்றது.

எத்தனை வினாடிகளோ, அவர்கள் அருகே சற்று அழுத்தமான நிறம் கொண்ட தேனீ ஒன்று ரிங்காரமிட… அந்த ரிங்கார ஒலி கானமெங்கும் காதல் கானமாய் ஒலிக்க  இருவரும் சுயநினைவு பெற்றனர்.

முதலில் சுதாரித்த காரிகை, தன் காதல் உணர்வுகளை மறைத்து அந்த பாறையின் மீது கம்பீரமாக அமர்ந்து ,  “தங்களைப் பார்த்தால் என் நாட்டவர் போல் தெரியவில்லையே? தாங்கள் யார்?” என்று தன் சங்கு கழுத்தை ஒய்யாரமாகத் திருப்பி, தன் வலது கைகளை மேலே தூக்கி வினவினாள் அந்த காரிகை.

தாமரைத் தண்டு போல் நீண்ட கைகளை, அழகு படுத்திய அவள் வளையல்கள் அவள் கையசைவில் கிண்கிணியாய் ஓசை எழுப்பி கரிகாலனின் பதிலுக்காகக் காத்திருந்தது.

“நான் ஒரு வழிப்போக்கன்.” என்று கரிகாலன் பதிலளிக்க, அந்த காரிகையின் பார்வை எந்த வித உணர்ச்சியையும் வெளிக்காட்டவில்லை என்றாலும் அவள் கண்கள் சிந்தனை வாய்ப்பட்டிருப்பதை அறிந்து கொண்டது கரிகாலனின் தேஜஸ் நிறைந்த கண்கள்.

அந்த பேரழகியின் சிந்தனையைத் தடுக்கும் விதமாக, “என் பயணத்தில் அதிசய ஆறொன்று கண்டேன். நீரை மட்டுமே அடித்துவரும் ஆறு என்ற என் எண்ணத்தைப் பொய்ப்பிப்பது போல்  மல்லிகை சரம் சூடிய சுந்தர தேகம் கொண்ட பொற்சிலையைத்  தாங்கி வரும் ஆறும் தங்கள் நாட்டில் மட்டுமே  உள்ளது என்ற அதிசயத்தை இன்று தான் நான் கண்டேன்.” என்று கரிகாலன் உரைக்க, அந்த காரிகையின் முகம் அந்திவானமாக சிவந்தது.

‘இவன் பார்வை, இவன் உதிர்க்கும் சொற்கள் என்னை மயக்கத்தில் ஆழ்த்துகிறது.’ என்ற எண்ணத்தோடு, கரிகாலனின் சம்பாஷணை செல்லும் திசையை திசை திருப்ப முயன்றாள் அந்த காரிகை.

“எங்கள் நாட்டின் அதிசயமும், சிறப்பும் நான் அறியாததில்லை. அதை தாங்கள் எனக்கு கூற வேண்டாம்.” என்று அந்த காரிகை மிடுக்காகக் கூற, “தாங்கள் நீரில் அடித்து வருகையில் உங்களைக் காப்பற்ற தங்கள் நாட்டில் வீரம் மிகுந்த ஆடவர்கள் இருப்பது போல் தெரியவில்லையே.” என்று கேலி தொனிக்கும் குரலில் பேசி அந்த காரிகையின் சீற்றமான முகத்தைக் காண விரும்பினான் ஆதித்த கரிகாலன்.

தன் இடுப்பு கச்சையிலிருந்து சடாரென்று கைப்பிடியில் மீனின் உருவம் பதிக்கப்பட்டு  வேலைப்பாடு நிறைந்திருந்த தன் கூர்மையான கத்தியை உருவி, வேகமாக எழுந்து கரிகாலனின் கழுத்தருகே  கத்திய  நீட்டினாள் அந்த காரிகை.

முத்தழகன், ‘இளவரசே!’ என்று பதட்டமாக அழைக்க, நினைத்து, சூழ்நிலை கருதி மௌனம் காத்தான்.

அவள் மெல்லிய கைகளில் உள்ள அழுத்தம், அவள் கண்களில் தெரிந்த ரௌத்திரம் இவை அனைத்தையும் பதட்டமின்றி பார்த்தான் கரிகாலன். கரிகாலனின் கழுத்து கத்தி நுனியில் இருக்க, இத்தனை நேரம் அமர்ந்திருந்த அவள் எழுந்து நின்றதும் அவள் உடல் வடிவம் அழகாய் தெரிய அதை ரசனையோடு பார்த்தான் கரிகாலன்.

அவள் முத்து மாலை இடை வரை தொங்கிக்கொண்டிருக்க, அவள் இடை தன் உடலின் மேலழகில் வெட்கப்பட்டு நாணி வளைந்திருப்பது தெளிவாகத் தெரிய தன்  கண்களைத் தாழ்த்தி கீழே பார்த்தான் கரிகாலன்.

மெல்லிய வாழைத்தண்டு போல் வழுவழுவென்ற கால்கள், அதை அலங்கரித்த பாத தண்டை, அதைத் தாங்கி நிற்கும்  சிறு சிறு புஷ்ப மொட்டுக்கள் போன்ற விரல்களைக் கொண்ட அழகிய பாதம்… அவள் அழகில் கரிகாலனின் கம்பீர தோள்கள் சிலிர்த்தது.

“கத்தி முனையில் வாழ்வை ரசிக்கும் நீர் மாவீரன் தான்.” என்று அவனைப் பாராட்டினாள் அந்த காரிகை.

அவள் கத்தி மெல்ல இறங்கி அவன் மார்பைத்  தழுவியது. அந்த கத்தியின் தொடுகை கரிகாலனுக்குச் சினத்தை ஏற்றாமல், காதல் எண்ணத்தை ஏற்றியது.

அவன் மார்பிலிருந்த தழும்புகளைப் பார்த்து, “நீர் மாவீரனாய் இருக்கலாம். ஆனால், எந்நாட்டு ஆடவரைக் குறைவாக மதிப்பிட  வேண்டாம். இந்த பாண்டிய மண்ணில் என்னைப் போல் சராசரி பெண்களிடமும் வீரம் நிறைந்திருக்கும். மேலும் நீர் இது போல் ஒரு வார்த்தை பேசினால், இவ்விடத்தில் கத்தியைச் செலுத்த எனக்கு அரை நொடி போதும்.” என்று அவன் மார்பில் கத்தியை அழுத்தமாகப் பிடித்தபடி கரிகாலனைச் சீற்றத்தோடு  மிரட்டினாள் அந்த காரிகை.

“உயிரைக் காப்பாற்றியவர்களுக்கு நன்றி செலுத்தும் நாட்டினரைப் பார்த்திருக்கிறேன். உயிரைக் காப்பாற்றியதற்குப் பரிசாக உயிரைப் பறிக்கும்  நாட்டினரை இப்பொழுது தான் பார்க்கிறேன். அதிசய ஆறு போல், அதிசய மனிதர்களையும் கொண்ட நாடு போலும்?” என்று கேள்வியாக நிறுத்தினான் கரிகாலன்.

அவன் பேச்சில்  சினத்தால் குவிந்திருந்த அவள் செவ்விதழ்கள் மெல்லிய புன்னகை ஒன்றைப் பூத்து விரிந்து, “எந்நாட்டவரைக் குறை கூறினால், உம் தலையைக் கொய்துவிட்டு, நீங்கள் மீட்டுக் கொடுத்த என் உயிரையும் மாய்த்துக் கொள்வேன்.” என்று அந்த காரிகை உறுதியாகக் கூற,  மறுப்பாகத் தலை அசைத்தான் கரிகாலன்.

‘பாண்டிய நாட்டுப் பெண் உயிரை மாய்த்துக் கொண்டால் ஆதித்த கரிகால சோழனுக்கு ஏன் வலிக்க வேண்டும்?’ என்ற எண்ணம் எதுவுமில்லாமல், “ஐயகோ… வேண்டாம். பாண்டிய நாடு ஓர் பேரழகியை, வீர பெண்ணை இழக்க நான் காரணமாக இருக்க வேண்டாம். நன்மையை மட்டுமே செய்தான் இந்த… வழிப்போக்கன் என்ற பெயர் மட்டுமே மிஞ்சட்டும்.” என்று பணிவாகக் கூறுவது போல் பாவனை காட்டி அவளை உற்று நோக்கினான் கரிகாலன்.

“தங்களைப் பார்த்தால் சாதாரண பெண் போல் தெரியவில்லையே?” என்று கரிகாலன் சந்தேகமாகக் கேட்க, “ஏன் எப்படித் தெரிகிறது? நான் ஓர் பணிப்பெண். பாண்டிய நாட்டின் பணிப்பெண்களும்  வீரம் நிறைந்தவர்கள்.” என்று தன் இடுப்பில் கை வைத்து அந்த காரிகை தலை அசைத்துக் கூற, அவள் கார்மேக கூந்தல் அங்குமிங்கும் அசைந்தாடியது.

அந்த கூந்தலில் மறைக்கப்பட்ட அவள் தேகமும், அந்திமாலை நேரத்துச் சூரிய ஒளியில் பளபளத்து அவள் வீரத்தைக் கூற, கரிகாலன் அவள் முத்துமாலையை நோட்டமிட்டான்.

கரிகாலனின் கண்கள் செல்லும்  திக்கைக் கவனித்து, “பணிப்பெண்களும் செழுமையாக வாழும் நாடு எங்களது…” என்று கூறி அந்த கத்தியை தன் இடுப்பு கச்சைக்குள் மறைத்துக் கொண்டாள்.

அந்த காரிகையின் சொல் உண்மை என்பது போல், அந்த முத்து மாலை ஆமென்பது போல் அசைந்தாடியது.

அப்பொழுது, டொக்… டொக்கென்று சத்தம் அவர்களை நெருங்க, “ஐயோ நான் இங்கு வந்து நாழிகையாகிவிட்டது. இளவரசி என்னைத் தேடி ஆள் அனுப்பிவிட்டார்கள் போல… என்னைப் போல் அழகிய இளம்பெண், இந்த நேரத்தில் உங்களைப் போன்ற ஆடவரிடம் பேசுவது எனக்கு அவ பெயரை உண்டு பண்ணும்.” என்று கூறி புள்ளி மான் போல் குதித்தோடினாள் அந்த காரிகை.

“தங்கள் பெயர் என்னவோ?” என்று கரிகாலன் ஆர்வமாய் வினவ, “தங்கள் நுண்ணறிவு என்பெயரை இந்நேரம் யூகித்திருக்கும் என்றெண்ணினேன்.” என்று கூறிக் கொண்டே சத்தம் வந்த திசை நோக்கி ஓடினாள்.

அவள் புள்ளி மான் போல் துள்ளி ஓடி புள்ளியாய் மறைய, முத்தழகா, “நீ இந்த பெண்ணை பற்றி என்ன நினைக்கிறாய்?” என்று ஆதித்த கரிகாலன் வினவினான்.

“பேரழகி, வீரமும், மதியும் நிறைந்தவர். அவர்கள் பேச்சில் நேர்மை இருந்தாலும், ஏதோ உண்மை மறைக்கப்படுவது போல் இருக்கிறது இளவரசே!” என்று முத்தழகன் பணிவாகக் கூற, “அந்த சித்தினி பெண் என்னிடம் மையல் கொண்டுள்ளாள். என் அன்பைத் தெரிந்து கொள்ள என்னைத்  தேடி மீண்டும் இங்கு வருவாள்.” என்று நவரச பாவனையோடும் கண்களில் எதிர்பார்ப்போடும் கூறினான் ஆதித்த கரிகாலன்.

தேன் மழை பொழியும்…

 

 

error: Content is protected !!