கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 14
கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 14
கண்ணாடி மாளிகை – அத்தியாயம் 14
“நீ பாடினா தான் உங்க வீட்டுக்கு…” என்று கூறி, மெத்தையில் சாவதானமாக தன் கைகளை பின்னே ஊன்றியபடி விஜயேந்திரன் கால்களை ஆட்டியபடி அமர்ந்திருந்தான்.
‘மொத்து மொத்துன்னு மொத்தனும் பாட்டு…
குத்து குத்துன்னு குத்தனும் பாட்டு…’ என்று மனதிற்குள் அவள் பாடிய வரிகளை நினைத்துப் பார்த்தாள் கீர்த்தனா.
‘இவங்க முன்னாடி பாடலாம் தான். ஆனால், இதை பாடினா என்னவாகும்?’ என்று அவள் மனம் நிதானமாக அசை போட, அவள் மூளை வேகமாக வேலை செய்தது.
கீர்த்தனாவின் முகத்தில் குறும்பு புன்னகை தோன்ற, “மொ” என்னும் எழுத்தை “மு” வாக மாற்றி அவள் பாடக் கேலி புன்னகையோடு அமர்ந்திருந்த விஜயேந்திரன் பதறி எழுந்தான்.
“ஏய்! என்ன பண்ற?” என்று தன் பற்களைக் கடிக்க, “நீங்க தான் பாட சொன்னீங்க. அது தான் பாடுறேன்.” என்று அவனைப் போல் மெத்தையில் அமர்ந்து, விஜயேந்திரனை பார்த்துக் கூற, “நீ என் போட்டோ பார்த்து என்ன பாடினையோ, அதைத் தான் பாடச் சொன்னேன்.” என்று விஜயேந்திரன் அவளிடம் கண் மூடி கூற, “இதைத் தான் பாடினேன்.” என்று கண் சிமிட்டி கூறிய கீர்த்தனா மீண்டும் பாட ஆரம்பித்தாள்.
“பாடாதா!” என்று விஜயேந்திரன் அழுத்தமாகக் கூற, “சரி… நீங்கச் சாப்பிடலை. வாங்க சாப்பிடுங்க. நீங்கச் சாப்பிட்ட பிறகு கிளம்புவோம்.” என்று கீர்த்தனா சமாதான உடன்படிக்கையில் இறங்க, “ஒன்னும் வேண்டாம். வா கிளம்பு.” என்று கோபமாகக் கூறிவிட்டு கார் சாவியைச் சுழற்றியபடி படிகளில் வேகமாக இறங்கினான் விஜயேந்திரன்.
உயரம் தான். வேகம் தான். ஆனால், அதற்குச் சிறிதும் சளைத்தவள் இல்லையென்று படியிறங்கினாள் கீர்த்தனா.
பூமா, நவநீதன் இருவரும் உடன் செல்வதாக இருக்க, பூமா உடல்நிலை சரியில்லைன்னு என கிளம்ப முடியாமல் போக, விஜயேந்திரன், கீர்த்தனா இருவரும் கீர்த்தனாவின் வீட்டை நோக்கிப் பயணித்தனர்.
விஜயேந்திரன் முன்னே நடந்து செல்ல, கீர்த்தனா பின்னே நடந்து வர, வீட்டுப் பணிப்பெண்கள் எதையோ ரசித்தபடி வைத்த கண் வாங்காமல் பார்க்க, விஜயேந்திரன் அவர்கள் ரசிக்கும் காட்சியை அறிய முற்பட்டு பின்னே திரும்பினான்.
மயில் கழுத்து நிறுத்தில், ஆங்காங்கே தங்க நட்சத்திரம் மின்ன, அதே நிறத்தில் ஆபரணங்கள் அழகு கூட்ட, அவள் ஜிமிக்கி அசைந்தாட… வெள்ளை கற்கள் கொண்ட கிளிப் வைத்துப் பின்னப்பட்ட கூந்தல் அங்குமிங்கும் அவள் நடையின் அசைவுக்கு ஏற்ப நெளிய, இவை எதுவும் தனக்கு சொந்தமில்லை என்பது போல் சிந்தனை வயப்பட்டவளாக நடந்து வந்த கீர்த்தனாவைப் பார்த்தான் விஜயேந்திரன்.
‘இவளுக்கு நான் தகுதி இல்லாதவன்.’ என்று மனசாட்சியின் குரல் அவனை இடிக்க, அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் விஜயேந்திரன். அவன் பார்வையைக் கண்டுகொண்ட கீர்த்தனா, அவன் அருகே வந்து, “டிவோர்ஸ் கேட்டிருக்கீங்க. சைட் அடிக்க கூடாதுன்னு சொல்லிருக்கேன்.” என்று கிசுகிசுப்பாக கூற, அவளிடம் சண்டையிட மனம் வராமல், அவள் நகைச்சுவை உணர்வை ரசித்துச் சிரித்தபடி கார் கதவை திறந்தான் விஜயேந்திரன்.
ஏதோ, அவர்கள் காதல் பாஷை பேசிக் கொள்வது போல் அனைவரும் வெட்கப்பட்டு முகத்தைத் திருப்பிக் கொள்ள, பல வித ஏக்கத்தோடு கீர்த்தனா முகத்தில் ஓர் விரக்தி புன்னகை தோன்றியது.
“முகுந்தன் எப்படி இருக்காங்க?” என்று கீர்த்தனா கேட்க, ‘எப்படித் தெரியும்?’ என்று விழி மலர்த்தி பார்த்தான் விஜயேந்திரன். ‘ம்… க்கும். இவங்க அப்படியே காலையிலே ராணுவ ரகசியம் தெரிஞ்சிக்கவா போயிருக்க போறாங்க.’ என்று மனதில் எண்ணியபடி, மௌனமாக அவனைப் பார்த்தாள் கீர்த்தனா.
“கேள்வி கேட்டா பதில் சொல்லணும்.” என்று அவன் அழுத்தமாகக் கூறியபடி காரை திருப்ப, “நீங்க கேட்கலை.என்னை பார்த்தீங்க.” என்று அதே அழுத்தத்தோடு கூறினாள் கீர்த்தனா.
“நான் என்ன கேட்க வந்தேன்னு உனக்கு புரிஞ்சிது. உனக்கு புரிஞ்சிதுன்னு எனக்கு தெரிஞ்சிது.” என்று சாலையில் கவனத்தை வைத்தபடி கூறினான் விஜயேந்திரன்.
“அட… சூப்பர். ஒரு நாள்ல எப்படி இப்படி மனம் ஒத்த தம்பதியர் ஆனோம்?” என்று கீர்த்தனா தன் நாடியில் கை வைத்து சத்தமாக யோசிக்க, “நீ எதுவும் சொல்ல வேண்டாம்.” என்று கடுப்பாக கார் ஸ்டியரிங்கை குத்தினான் விஜயேந்திரன். “நான் பேசினாலே உங்களுக்கு பிடிக்கலைன்னா, நான் பேசலை.” என்று கீர்த்தனா முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
கீர்த்தனாவின் சொல், அவனுக்குச் சலிப்பைத் தர, “அப்படி நான் சொல்லலை.” என்று கூறி சிறிது இடைவெளி விட்டு, “நான் தம்பியை பார்க்க போனது எப்படித் தெரியும்?” என்று நேரடியாகக் கேட்டான் விஜயேந்திரன்.
“நேத்து நீங்க முகுந்தன் கிட்ட நல்லா பேசலை. அது தான்…” என்று கீர்த்தனா பதில் கூற, ‘இந்த பெண்கள் எல்லாத்தயும் கவனிப்பாங்க போல? ஆனால், லீலா இப்படி இல்லை…’ என்று எண்ண ஆரம்பித்து, அவன் எண்ணம் லீலாவை சுற்ற எதுவும் பேசாமல் காரை செலுத்தினான்.
யாருமில்லா தனிமை. கணவனுடனான முதல் கார் பயணம். எத்தனை இனிமையான தருணம். ஆனால், அங்கு நிலவிய மௌனம், விலகல் என அனைத்தும் கீர்த்தனாவை அழுத்த, கீர்த்தனா மௌனமாக சாலையை பார்த்தபடி பயணித்தாள்.
அவர்கள் வீட்டை அடைந்ததும், அத்தனை நேரம் இருந்த மௌனம் மறைந்து, சோகம் தெளிந்து, “அப்பா….” என்று சத்தம் செய்து கொண்டு வேகமாக ஓடினாள் கீர்த்தனா.
‘ஒரு நாளைக்கு இந்த ஆர்ப்பாட்டம் கொஞ்சம் ஓவர்.’ என்று விஜயேந்திரன் எண்ணிக் கொண்டிருக்க, “பாப்பா… நில்லு.” என்று கூறினார் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் முதிய பெண்மணி. கீர்த்தனாவின் தந்தை சத்தியமூர்த்தி அவர்களை, வரவேற்றார்.
“மாப்பிள்ளையோடு நில்லு. ஆரத்தி எடுக்கணும்.” என்று கூறி அந்த பெண்மணி ஆரத்தி எடுக்க, விஜயேந்திரனின் முகத்தில் குறும்பு புன்னகை எட்டி பார்த்தது. மெதுவாக அவள் அருகே, சென்று, “என்ன அவசரம்? மேடம்க்கு வாய் தான் நீளம். பழக்கவழக்கம் தெரியாது போல?” என்று நக்கலாக கீர்த்தனாவின் காதில் கிசுகிசுத்தான் விஜயேந்திரன்.
விஜயேந்திரனை மேலும், கீழும் பார்த்தாள் கீர்த்தனா. “உங்களோட இந்த கேலிக்கு எனக்குப் பதில் சொல்லத் தெரியும். நான் சொன்னால், வருத்தப்படுவீங்க. எங்க வீட்டுக்கு வந்தவங்களை, சந்தோஷப்படுத்தித் தான் எனக்குப் பழக்கம். விரோதியா இருந்தால் கூட, காயப்படுத்தி இல்லை.” என்று கீர்த்தனா அகம் நெகிழ்ந்து, உணர்ச்சி பெருகக் கூறினாள்.
கீர்த்தனாவை யோசனையாகப் பார்த்தான் விஜயேந்திரன்.
“அப்பா…” என்றழைத்துக் கொண்டு அவரை கட்டிக் கொள்ள, விஜயேந்திரன் அவர்களைப் பார்க்க, தன் கண்களை இறுக மூடி, தன் கண்ணீரை மறைத்துக் கொண்டு “இன்னைக்கும் நீ தான் சமைக்கணுமா?” என்று குரலில் கோபத்தோடும், முகத்தில் சிடுசிடுப்போடும் கேட்க முயற்சித்து, தோற்று பாசப்பெருக்கோடு கேட்டார் சத்தியமூர்த்தி.
‘ஓ! இதுக்கு தான் சீக்கிரம் வர சொன்னாளா?’ என்றெண்ணி கீர்த்தனாவை விஜயேந்திரன் பார்க்க, “அப்பா… இன்னைக்கு ஒரு நாள் தான் நான் சமைக்க முடியும். நாளைக்கு வர முடியுமா?” என்று கேட்டு வேகமாக வீட்டிற்குள் நுழைந்தாள் கீர்த்தனா.
“வாங்க மாப்பிள்ளை. உங்களை உள்ள கூப்பிடாமல், உள்ள போய்ட்டா பாருங்க.” என்று கூறிக்கொண்டே, விஜயேந்திரனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார் சத்தியமூர்த்தி.
விஜயேந்திரன் கண்களால் வீட்டை அளந்தான். கீர்த்தனாவின் தாயாரின் புகைப்படம் பெரிதாக மாட்டப்பட்டிருந்தது. எங்கும், கலைநயத்தோடு செய்யப்பட்ட கண்ணாடி பொம்மைகள், கைவினைப் பொருள்கள் அழகாக, நேர்த்தியாக அடுக்க பட்டிருந்தன.
விஜயேந்திரனின் பார்வையைப் புரிந்து கொண்டு, “எல்லாம் கீர்த்தனா செய்தது தான்.” என்று கூற, தலை அசைத்துக் கேட்டுக்கொண்டான் விஜயேந்திரன்.
கீர்த்தனா சமையலறையில் இருப்பதைப் பார்த்துவிட்டு, குரலைத் தாழ்த்தி பேச ஆரம்பித்தார் கீர்த்தனாவின் தந்தை. “அம்மா, இல்லாம வளர்ந்த பொண்ணு. ஆனால், நான் அவளுக்கு எல்லாமே சொல்லி கொடுத்திருக்கேன்.” என்று சற்று பெருமிதத்தோடு கூறினார். அவர் முகத்தில் கீர்த்தனாவைப் பற்றிய பெருமை வழிய, அதை விஜயேந்திரன் தன் கண்களைச் சுருக்கி பார்த்தான்.
“என் பெண்ணைப் பத்தி, நானே பெருமையா சொல்லக் கூடாது.” என்று அவர் சிரிக்க, “உண்மையை சொல்றதில் என்ன தப்பு?” என்று புன்னகைத்தான் விஜயேந்திரன். அந்த சொல்லில் மகிழ்ந்து, மேலும் பேச ஆரம்பித்தார் சத்யமூர்த்தி கீர்த்தனாவின் தந்தையாக!
“பொறுமை தான். கோபப்பட மாட்டா. ரொம்ப பேச மாட்டா.” என்று கூற, அதிர்ச்சியில் விழி விரித்து அவரை பார்த்தான் விஜயேந்திரன். “ஆனால், அவ மனசுக்கு பிடிச்சவங்க கிட்ட ரொம்ப கோபப்படுவா. அதிகமா குறும்பு பண்ணுவா. இதுவரைக்கும் இந்த உலகத்தில் அவளுக்குச் சொந்தம், நெருக்கம் எல்லாம் நான் மட்டும் தான். என் கிட்ட மட்டும் தான் கோபப்படுவா. என் கிட்ட மட்டும் தான் குறும்பு பண்ணுவா.” என்று குரலில் தழுதழுப்போடு சத்தியமூர்த்தி கூற, முன்பைவிட அவரை அதீத அதிர்ச்சியாகப் பார்த்தான் விஜயேந்திரன்.
‘இதற்கு என்ன அர்த்தம்?’ என்ற கேள்வி விஜயேந்திரனின் மனதில் எழ, அவன் சிந்தனையை கலைத்து மேலும் பேசினார் கீர்த்தனாவின் தந்தை.
“அவ எதாவது தப்பு பண்ணா, நீங்க சொன்னா புரிஞ்சிப்பா. அம்மா, அப்பாவுக்கு கீர்த்தனாவைப் பத்தி நல்லா தெரியும். கீர்த்தனாவும் பதவிசமா நடந்துப்பா. முன்னாடி எல்லாத்தையும் என் கிட்ட சொல்லுவா. இப்ப தான், அவளுக்கு அம்மாவோ, கூட பிறந்தவங்கன்னு யாருமே இல்லையேன்னு எனக்கு அதிகமா வருத்தமா இருக்கு. ” என்று அவர் கண்கலங்க, “ஐயோ! நீங்க ஏன் இப்படி வருத்தப்படுறீங்க. அதெல்லாம் ஒரு பிரச்சனையும் வராது.” என்று விஜயேந்திரன் கூறினான்.
“தெரியும் மாப்பிள்ளை. அதுக்கு தானே, தெரிஞ்ச குடும்பத்தில் பெண்ணை கொடுக்கிறது.” என்று நம்பிக்கை என்னும் பேரிடியை அவன் தலையில் அவரறியாமல் இறக்கினார் சத்தியமூர்த்தி.
வேறு வழின்றி, விஜயேந்திரன் பரிதாபமாகத் தலை அசைக்க, “இந்தாங்க.” என்று கீர்த்தனா ஒரு அழகிய கண்ணாடி பாத்திரத்தை நீட்டினாள்.
“இப்ப எதுக்கு?” என்று விஜயேந்திரன் வினவ, கீர்த்தனா புன்னகையோடு, தன் தந்தையிடம் திரும்பி, “என் பொண்ணு இப்படி, என் பொண்ணு அப்படின்னு பிளேடு போட ஆரம்பிச்சிடீங்களா?” என்று கீர்த்தனா தன் தந்தையிடம் கண்டிப்போடு கேட்டாள்.
“ஹா… ஹா…” என்று சத்தியமூர்த்தி பெருங்குரலில் சிரிக்க, ‘எல்லாரையும் மிரட்ட வேண்டியது? இதுல பொறுமைன்னு பேரு வேற?’ என்ற எண்ணத்தோடு விஜயேந்திரன் அவளைப் பார்க்க, “இந்திரன்… எஸ்கேப் ஆகிருங்க.” என்று கண்சிமிட்டிக் கூறினாள் கீர்த்தனா.
“என்ன மாப்பிள்ளையைப் பெயர் சொல்லி கூப்பிடுற?” என்று சத்யமூர்த்தி தன் மகளைக் கண்டிக்க, அகப்பட்டுக் கொண்டவளாய் ஒரு நொடி விழிக்க, விஜயேந்திரன் அவள் அகப்பட்டுக் கொண்டு விழிப்பதை ஆனந்தமாகப் பார்த்தான்.
ஒரு நொடி தான், “அப்பா… நானா கூப்பிடலை. அவங்க இப்படிக் கூப்பிட சொன்னாங்க.” என்று கூறிவிட்டு, சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள் கீர்த்தனா.
‘கிராதாகி.’ என்று எண்ணியபடி அவளைப் பார்க்க, கீர்த்தனா சமையல் வேலையில் மூழ்கினாள். ‘அவங்க, அப்பா கிட்ட எதுவும் அவங்க விஷயத்தை சொல்லிருவாங்களோ?’ என்றெண்ணம் தோன்ற, ‘சொல்லமாட்டாங்க.’ என்று அவள் அறிவு அடித்துக் கூறினாலும், மனம் பதட்டமடைந்தது.
‘இவ்வுளவு நேரம் என்ன பேசுறாங்க?’ என்ற கேள்வியோடு அவள் மௌனமாகச் சமைக்க, “என்ன கீர்த்தனா, சமைக்கும் பொது பாடிகிட்டே சமைப்ப? இன்னைக்கு என்ன ஆச்சு? எதுவும் பிரச்சனையா?” என்று அவள் தந்தை கீர்த்தனாவிடம் அனுசரணையாகக் கேட்டார்.
‘கீர்த்தனா அப்பா, எதோ யோசனையா கிட்சேன்க்கு போறாங்களே? என்ன கேட்டிருப்பாங்க? கீர்த்தனா எதுவும் சொல்லிருவாளோ?’ என்ற பதட்டம் அவனுக்குள் சூழ, விஜயேந்திரன் தன் பார்வையைச் சமையலறை பக்கம் செலுத்தினான்.
விஜயேந்திரனின் பார்வையின் நோக்கம் புரிந்தவளாக, கீர்த்தனா சத்தமாகப் பேச ஆரம்பித்தாள்.
“அப்பா. நான் எப்பவும் உங்களுக்கும், எனக்கும் மட்டும் சமைப்பேன். இன்னைக்கு உங்க மாப்பிள்ளைக்கும் சமைக்கணுமில்லை. பதட்டம் இருக்காதா?” என்று கண்களை உருட்டிக் கேட்டாள் கீர்த்தனா.
“அது வேற, நான் சமையல் மோசமா செய்து, அது தான் சாக்குன்னு உங்க மாப்பிள்ளை ஓடிட்டா?” என்று கீர்த்தனா கேலியாகக் கூற, “அப்படியெல்லாம் முட்டாள்தனமா பேசக் கூடாது.” என்று தன் மகளைக் கண்டித்தார் சத்தியமூர்த்தி.
அவர்கள் பேசுவதைக் கேட்டபடி, முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல், சுவரைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் விஜயேந்திரன்.
“பாடு கீர்த்தனா, உன் பாட்டை கேட்காமல் வீடே நிசப்தமா இருக்கு.” என்று வேலை செய்யும் பெண்மணி கூற, “இப்ப என்ன பாட?” என்று கீர்த்தனா விஜயேந்திரன் காலையில் பாடச் சொன்ன நினைவில் தடுமாற, “யமுனை ஆற்றிலே பாடு கீர்த்தனா.” என்று பல வருடமாக அவர்கள் இல்லத்தில் வேலை செய்யும் வயது முதிர்ந்த பெண்மணி கூற, பாடியபடியே வேலையைத் தொடர்ந்தாள் கீர்த்தனா.
கீர்த்தனாவின் கைகள் வேகமாக வேலையில் இறங்க, அவள் உதடுகள் பாடலை முணுமுணுக்க ஆரம்பித்தது.
“யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே
கண்ணனோடுதான் ஆட..
பார்வை பூத்திட பாதைபாத்திட
பாவை ராதயே வாட…” அனைவரும் பாடலில் மூழ்க, அவள் குரலில் கட்டுண்டு, பாட்டின் வரிகளின் வீரியம் அறிந்து கீர்த்தனாவை அதிர்ச்சியாகப் பார்த்தான் விஜயேந்திரன்.
“இரவும் போனது பகலும் போனது மன்னன் இல்லயே கூட..
இளைய கன்னியின் இமை இமைத்திடாத கண்ணெங்கும் இங்கும் தேட….
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ ஆசைவைப்பதே அன்பு தொல்லயோ…
பாவம் ராதா…” என்று கீர்த்தனா கண்களில் வலியோடு விஜயேந்திரனை பார்க்க, விஜயேந்திரன் தடுமாறினான்.
கீர்த்தனாவின் கண்கள் அப்பட்டமாகக் காதலை அவளறியாமல் வெளிப்படுத்த, அவள் குரல் தாபத்தை வெளிப்படுத்த,
“ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ ஆசைவைப்பதே அன்பு தொல்லயோ…
பாவம் ராதா…” என்று ஏக்கத்தோடு கீர்த்தனா பாட, அவள் முகத்தில் பல கேள்விகள் தேங்கி நின்றது. அவள் முகத்தைப் பார்க்கும் தைரியம் இல்லாமல் தன் கண்களை இறுக மூட, அவன் கருவிழியில் இத்தனை நிமிடங்களாகப் பதிந்திருந்த கீர்த்தனாவின் முகம் அவன் ஆழ்மனதைத் தொட, அதை ஏற்றுக் கொள்ள முடியாமல், அவள் பாட்டில் லயிக்க முடியாமல், இசையிலிருந்தும் மீள முடியாமல் தரையில் விழுந்த மீனாய் துடித்தான் விஜயேந்திரன்.
அவனைக் காப்பாற்றுவது போல் விஜயேந்திரனின் அலைப்பேசி ஒலிக்க, யூ.எஸ். நம்பர் எனப் பார்த்துப் பேச அமைதி தேட கீர்த்தனாவின் அறையைக் காட்டினார் கீர்த்தனாவின் தந்தை. அலைப்பேசியைப் பார்த்தபடி, மூடியிருந்த கதவுகளைத் தள்ளி விட்டு உள்ளே சென்ற விஜயேந்திரன், அவன் கண்ட காட்சியில் இமைக்க மறந்து, பேச மறந்து நின்றான்.
கண்ணாடி மாளிகையில் நம் பயணம் தொடரும்…