அவளுக்கென்ன…!-10

அவளுக்கென்ன…!-10

அத்தியாயம்
10

கிஷோர் கைலாஷ் விபத்துக்குப்பின் வீடு திரும்பிய போதே, ‘ஈஸ்வரன் அங்கிள் பொண்ணை, என்னை அட்மிட் பண்ணிருந்த ஹாஸ்பிடல்ல பாத்தேன்மா… அவளுக்கு என்னை அடையாளம் தெரியல! எனக்கு அவளை நல்லாவே அடையாளம் தெரிஞ்சது’, என்று கூறிய மகனின் வார்த்தைகளைக் கேட்டிருந்த தாயின் வித்தியாசமான முகபாவனையை பார்த்தவன் சிரித்தபடியே, ‘சின்ன வயசுல நம்ம வீட்டுக்கு வருவாள்ல… அப்ப பாத்திருக்கேன். அதவச்சு என்னால அவள அடையாளம் கண்டுபிடிக்க முடிஞ்சுது’, என தனது தந்தை, தாய் இருவரிடமும் கூறியிருந்தான்.

ஆனாலும், அவனது மனதைச் சொல்லியிருக்கவில்லை.

கோயம்பத்தூரில் ஓரளவு தனது விட்டுப்போன பணிகளை முடித்து, அனன்யாவிடம் கூறியபடி சென்னை வந்திருந்தான்.

அனன்யாவிடம் தனது மனதை கூறும் முன்பு ஆயிரம் முறைகள் யோசித்திருந்தான். அவளின் பெரும்பான்மை நடவடிக்கைகள் அவனுக்கு சாதகமாகத் தோன்றியிருந்தாலும், அனன்யாவிடமே நேரடியாகக் கேட்டு, அவளின் பதிலால் தனது மனம் தெளிந்திருந்தான்.

தனது எதிர்பார்ப்பைச் சொல்லி, அவளிடம் தன்னை மணக்க அனுமதி வாங்கி, அவளின் சம்மதத்தோடு சந்தோசமாக கோவை திரும்பியிருந்தான், கைலாஷ்.

கோவை வந்தவுடன், தன் தாயிடம் அனன்யாவை பெண் கேட்குமாறு கூற, கோமதி

“உன் விளையாட்டுக்கு அளவே இல்லையா கிஷோர். இன்னும் சின்னப்பிள்ளை மாதிரியே எங்கிட்ட வந்து எதாவது சொல்லுற. இது கல்யாண விசயம் கண்ணு!”, என்று தனது நம்பிக்கையின்மையை மகனிடம் கூறியிருந்தார்.

கிஷோர் தனது பொங்கிய சிரிப்பைக் கட்டுப்படுத்தியவாறே, “அதத்தான்மா நானும் சொல்றேன்”, என்று உறுதியாகக் கூறினான்.

“என்ன கிஷோர், ஏற்கனவே அண்ணான்னு கூப்டவன எப்டி கல்யாணம் பண்றதுனு கேட்டவ தான அவ! இப்ப போயி திரும்ப என்னத்த கல்யாணத்துக்கு அவள பேச சொல்ற கண்ணு!!!”, வருத்தத்தோடு கேட்ட தாயை தோளோடு அணைத்தவன்

“அது… இந்த அய்யாவை நேருல பாக்குமுன்ன!”, என்று தன் நெஞ்சில் கை வைத்துக் கூறியவன், “இப்ப போயி கேளுங்க… என்னை மறுக்க மாட்டா…!”, என்று தனது சட்டைக் காலரை தூக்கிக் காட்டியவாறே தாயைப் பார்க்க, இன்னும் நம்பிக்கையில்லாத பார்வையை மகனிடம் வீசினார் கோமதி.

“நிஜமாத்தான் மாதாஜி, அவங்க வீட்லயும் எதுவும் மறுத்துப் பேச மாட்டாங்க, அவங்க வீட்ல சரின்னு சொன்னவுடனே, மேற்கொண்டு ஆகவேண்டியத பாருங்கம்மா!”, என நம்பிக்கை வார்த்தை கூறி தனது தாயை தேற்றியிருந்தான்.

“என்ன கண்ணு சொல்ற, அவ மனசு மாறிட்டாளா! என்னால இன்னும் நம்ப முடியல!”, ஆச்சர்யத்தில் வாயெல்லாம் பல்லாக கேட்டிருந்தார், கோமதி.

“என்னை நம்புங்கம்மா!”, என்று மகன் கூறுவதைக் கேட்டவர்

மகனைத் தொட்டு பார்த்து, நல்லா இருக்கியா மகனே, இல்லை உடம்பு முடியாம எதுவும் பினாத்துறியோ என்பது போல மகனை ஒரு பார்வை பார்த்தபடியே நின்றிருந்தார்.

“அவளாவது மாறுறதாவது…! அது நடக்கிற விசயமே கிடையாது”, என்ற கிஷோரின் பதிலில் ‘அடப் படுவா… அதானே… நான் நினைச்சமாதிரி தான் ஏமாத்திருக்கான்’, என எண்ணியவாறே மகனைப் பார்த்திருந்தார், கோமதி.

“அம்மா இது வேற லைன்… இன்னும் சொல்லப் போனா, நான் உங்க பையன்னு இன்னிக்கு வர அவளுக்குத் தெரியாது”, கிஷோர்.

‘அடப்பாவி…’, என்பது போல முகம் வைத்திருந்த தாயிடம் இன்னும் நெருங்கி அமர்ந்தவன்,

“அவங்க பேரண்ட்ஸூக்கு அவ போன் பண்ணியிருப்பா. அதோட நீங்க போயி பேசினா… அவங்க மறுக்க மாட்டாங்க. அதனால சைலண்டா போயி இப்போவே பேசி முடிங்க, தாலி கட்டிட்டு அப்றம் நான் யாருங்றத சொல்லிக்குவோம். இப்போ வீணா தேவையில்லாத விசயங்களை அவக்கிட்ட சொன்னா திரும்பவும் வேதாளம் முருங்கை மரம் ஏறினாலும் ஏறிரும். அதனால மெதுவாவே அவளோட பெஸ்டீ கோமதி அத்தையோட பையன் நான் தாங்கற விசயத்தை அவளுக்கு விளக்கிக்குவோம்!”, என தாயிக்கு விளக்கம் கொடுத்தான்.

“என்ன கண்ணு சொல்ற!”, என மகனின் வார்த்தையைக் கேட்டு அதிர்ந்தார்.

நடந்த விடயங்கள் அனைத்தையும், தாயிடம் பகிர்ந்து கொண்டான் கைலாஷ். அதன்பின், “அனன்யாவுக்கு நான் கோயம்பத்தூர்காரன்னு மட்டும் தான் தெரியும். அம்மிணிக்கு எம்மேல ஒரு நல்ல அபிப்ராயம் இருக்கு.

நல்ல அபிப்ராயங்கறது, அவளுக்கு என்னைய கல்யாணம் பண்ணிக்கற விருப்பத்தைச் சொல்றேன்மா… அவள இந்தளவு நானே எதிர்பாக்கல. அவளே உண்மை தெரிஞ்சு, குழப்பத்தோட மனசு மாறுறதுக்குள்ள நீங்க எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்ளோ சீக்கிரமா போயி பேசி முடிச்சிருங்க… இல்லைனா காலத்துக்கும் நீங்க பேரன் பேத்திய கண்ணால பாக்கமுடியாது. கனவு மட்டுமே கண்டுக்கலாம்”, என்று அனன்யாவைத் தவிர வேறோருத்தியை மணவாட்டியாக ஏற்க தான் தயாராக இல்லை என்பதை மறைமுகமாகக் கூறி தாயை மிரட்டினான்.

“ரொம்பத்தான் பயமுறுத்தற கண்ணு”, என்றவர் மகனை செல்லமாக தோளில் தட்டினார்.

அத்தோடு தாயின் சிலபல வினாக்களுக்கு சிரத்தையோடு பதிலளித்தவன், மேற்கொண்டு அகல்யாவைப் பற்றி விசாரித்து கூறுமாறு அதிகப்படியான ஒரு வேலையையும், தாயின் தலையில் கட்டிவிட்டு அலுவலகம் சென்றுவிட்டான்.

மகன் கூறியதில் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டவர், கணவரை அழைத்து விடயம் பகிர்ந்தார்.

இருவரும் அதற்குமேல் வீட்டில் இருப்பு கொள்ளாமல் கிளம்ப எத்தனித்தனர்.

அலைபேசியில் தனது தந்தை, தாய் இருவரிடமும் அன்று இரவே பேசிய அனன்யா, கைலாஷை சந்தித்த தருணத்தைக் கூறினாள். அதன்பிறகு, தன்னை அவன் திருமணம் முடிக்க கேட்டதையும் கூறினாள்.

கைலாஷ் குடும்பத்தில் இருந்து வந்து பெண் கேட்பார்கள் எனவும், தனக்கும் கைலாஷை திருமணம் செய்வதில் விருப்பமே என்றும் பெற்றோரிடம் மனம் திறந்து கூறியிருந்தாள்.

இதுநாள் வரை தனது எதிர்காலம் பற்றி எந்தப் பேச்சு எடுத்தாலும் மறுத்தவள், அவளாகவே வந்து தனக்கு திருமணப் பேச்சை எடுக்க, வரப்போகும் வரனின் பெற்றோர், குடும்பம், இன்னும் பிற விடயங்களைப் பற்றி அறியாததால், வரப்போகும் புதிய சம்பந்தத்தை எண்ணி மனம் பின்வாங்கினாலும், தனது மகளின் மனமாற்றத்தில் மகிழ்ந்து, ‘வரட்டும், பார்க்கலாம்…’, என்று இருவரும் தங்களைத் தேற்றியிருந்தனர்.

அடுத்த நாளே, திருக்குமரன், கோமதி இருவரும் அனன்யாவின் வீட்டிற்கு சென்றிருந்தனர்.

கோமதி, தனது மகன் கூறியவற்றை எதையும் மறக்காமல் அனன்யாவின் பெற்றோரிடம் பகிர்ந்து கொண்டார்.

“நல்ல வேளை… நீங்க வந்து எங்க நெஞ்சுல பால வார்த்திங்க… ரொம்ப யோசனையா இருந்தது”, தேவகி

“நல்லவங்களுக்கு நல்லது தான் நடக்கும். அதான் அப்டி இப்டினு கொஞ்சம் லேட்டானாலும், கடைசியில சம்பந்தியாகப் போறோம். என்னவொன்னு அவளுக்கு இன்னும் கைலாஷ் என் பையன்னு தெரியாம இருக்கா… தெரிஞ்சு எதுவும் குழப்பம் வந்துராம பாத்துக்கங்க!”, கோமதி.

“அதுதானே அண்ணி. நானும் அதப்பத்தித்தான் யோசிக்கிறேன். சரி முதல்ல கல்யாணத்தைப் பண்ணிட்டு அப்புறம் அவளுக்கு விசயம் தெரிஞ்சபின்ன வேப்பிலை அடிச்சிக்கலாம். அதுக்கு முன்னே எதுக்கு நம்மை நாமே குழப்பிக்கணும்”, என்று தேவகி சிரித்தவாறே கூறி முடித்துவிட்டார்.

திருக்குமரன், கோமதி, ஈஸ்வரன், தேவகி நால்வரும் அனன்யாவின் மனநிலையை நன்கு உணர்ந்திருந்தனர்.

நால்வரும், அனன்யா கிஷோருடனான திருமணத்திற்கு சம்மதித்ததை எண்ணி மகிழ்ந்திருந்தனர். ஆனாலும், அனன்யாவின் ஆசைக்கிணங்க, கிஷோரின் வார்த்தையை ஏற்று அகல்யாவைப் பற்றி அறிய விழைந்தனர்.
—————
அகல்யா தற்போது கோவை மாவட்டத்தில் எங்கும் பணியில் இல்லை என்பது வரை தங்களுக்கு பரிட்சயமானவர்களை வைத்து விசாரித்து அறிந்து கொண்டார்கள்.

அதன்பின், அவளது அலுவலகம் சென்று நேரில் விசாரித்த போது, முதலில் தகவல் எதுவும் கொடுக்க மறுத்திருந்தனர்.

பணியில் சேர்ந்தபோது அனன்யாவின் வீட்டு முகவரியை தனது தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிக்காக கொடுத்திருந்தாள். மேலும் கார்டியனாக ஈஸ்வரன் பெயரைக் கொடுத்திருந்தாள்.

அதை அனன்யா நினைவில் வைத்திருந்து கூறியிருந்ததை வைத்து, ‘கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடு சென்று தங்கிவிட்டதால், அவளின் புதிய முகவரியை தந்து உதவிடுமாறு’, தபால் மூலம் விண்ணப்பித்து அவள் தற்போது பணிபுரியும் முகவரியைக் கேட்டு அறிந்து கொண்டனர்.

தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள யூனியனில் பணி புரிந்து வருவதாக அறிந்திருந்தனர்.

அகல்யாவைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள டிடெக்டிவ்வின் துணையை நாடினர்.

அகல்யா தற்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் தனது இரண்டு வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தையுடன் வசித்து வருவதாக அறிந்து கொண்டனர்.

அகல்யாவின் கணவர் பற்றிய தகவல் எதுவும் அதில் கொடுக்கப்படவில்லை. அகல்யாவின் திருமணம் நடந்ததற்கான எந்த ஒரு சான்றும் அதில் இல்லாமல் போயிருந்தது. தற்போது, க்ரெஷ் ஒன்றில் அகல்யா தனது குழந்தையை விட்டுவிட்டு பணிக்கு செல்வதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அகல்யா தங்கியிருக்கும் இடத்தின் முகவரியை பெற்றுக் கொண்டு, வார விடுமுறை நாளில் ஈஸ்வரன், தேவகி, திருக்குமரன், கோமதி ஆகிய நால்வரும் நேரில் சென்றனர்.
////////////////

பெரியவர்களை அங்கு எதிர்பார்க்காத அகல்யா, முதலில் சற்றுத் தயங்கினாலும், தன்னை இந்தளவிற்கு வளர்த்து ஆளாக்கியவர்கள் வாசல் வரை வந்திருக்கிறார்கள் என்ற நன்றியுணர்வு ஒரு புறம், தான் கடந்து வந்த கரடு முரடான பாதையில் எதிர்கொண்ட சமூக அவலங்களைக் கண்டும், தனியொருத்தியாக சந்தித்த துன்பங்களை எதிர்கொண்டு தெளிந்திருந்த விழிப்பு நிலையாலும் வந்தவர்களை இன்முகத்துடனேயே வரவேற்றாள்.

“வாங்கம்மா , வாங்க அப்பா, வாங்க… வாங்க…”, என அனைவரையும் வரவேற்று தங்களது வீட்டினுள் அழைத்து சென்று அமரச் செய்தாள்.

திருக்குமரன், கோமதி இருவரையும் நன்கு அறிந்திருந்ததால் அவர்களையும் அழைத்து அமரச் செய்திருந்தாள்.

அகல்யாவின் கையில் இருந்த குழந்தையை வாங்கி, தனது மடியில் வைத்துக் கொண்டார் தேவகி.

குழந்தையும் தேவகியின் மேல் நன்று சாய்ந்து அமர்ந்து கொண்டு வந்திருந்தவர்கள் தன் தாயுடன் பேசுவதைப் பார்த்தபடியே அமைதியாக இருந்தான்.

குழந்தை அசப்பில் அகல்யா சிறு வயதில் இருந்ததைப் போன்ற சாயலில் இருக்க,

“அப்டியே நீ சின்னப் புள்ளையா இருக்கும் போது இருந்த மாதிரியே உன் பையனும் இருக்கான் அகல்யா”, என்று குழந்தையை தூக்கிக் கொஞ்சினார், தேவகி.

சற்றுநேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள், அகல்யாவிடம் தங்களது பேச்சினூடே, “தம்பி இப்ப எங்க இருக்காப்புலம்மா?”, என்று அகல்யாவின் கணவனைப் பற்றிக் கேட்டிருந்தார் கோமதி.

கேட்டதைக் காதில் வாங்காதது போல திசைதிருப்பி பேசியவளிடம் அதற்கு மேல் கேட்க தயங்கினார், கோமதி.

“அகல்யா, நாங்க உன்னைய பாக்க வந்தது, நீ இப்ப எப்டி இருக்கணு பாத்துட்டு மட்டும் போறதுக்கு இல்ல கண்ணு.

உன்னோட கல்யாணத்துக்குப் பின்னதான், தான் கல்யாணம் பண்ணிக்குவேனு அடம்புடிக்கிற அனிக்கு, உனக்கு கல்யாணம் ஆகி குழந்தை குட்டினு சந்தோசமா இருக்குறதை சொன்னாதான், அவள கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க முடியும்னுதான் இவ்ளோ தூரம் உன்னைய தேடி வந்திருக்கோம்.

உலகமே சுயநலத்தால தான் ஓடுது. நாங்களும் அப்டித்தான்… இவ்ளோ நாள் இருந்துட்டோம். இப்பவும் அனன்யாவோட வற்புறுத்தலால தான் உன்னையத் தேடி வந்தோம்”, என்று நீண்டதாக தங்களின் வருகைக்கான காரணத்தை விளக்கிக் கூறியிருந்தார், தேவகி.

முகம் சிறுத்து அமர்ந்திருந்தவளை அதற்குமேல் வற்புறுத்தி குழந்தையின் தந்தை பற்றி விசாரித்திருந்தனர்.

முதலில் கூற மறுத்தவள், நவீன் தான் குழந்தையின் தந்தை என்று பெரியவர்களின் நீண்ட நேர மன்றாடலுக்குப் பின் கூறினாள்.

கூறியவளுக்கு, தனது தோழி கூறிச் சென்ற வார்த்தைகள் நினைவில் வர, தனது தவறை எண்ணியவளாய் மன வருத்தத்துடன் அமர்ந்திருந்தாள்.

அகல்யாவின் பேச்சைக் கேட்டு அதிர்ந்த நால்வரும், தங்களின் அதிர்ச்சிக்கு காரணமான நிகழ்வினை எண்ணிப் பார்த்திருந்தனர்.

ஆம், அனன்யா சென்னை சென்று ஆறு மாதங்களில் நவீனுக்கும், ஈரோட்டைச் சேர்ந்த வேறு பெண்ணுக்கும் திருமணம் ஆகியிருந்ததை அனைவரும் அறிந்தே இருந்தனர்.

அப்படியிருக்க, நவீனின் குழந்தை அகல்யாவிடம் எப்படி? என்ன நடந்தது? என்று அறிந்து கொள்ளவேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாகியிருந்ததோடு, உள்ளமெங்கும் ரணமாக உணர்ந்திருந்தனர்.

இரு குடும்பத்துப் பெரியவர்களும் அகல்யாவின் நிலையை நினைத்து வருந்தி அமைதியாகி இருந்தனர்.

“எவ்வளவோ அனி எடுத்துச் சொல்லிட்டுப் போயும், நானா போயி பாழுங்கிணத்துல விழுந்ததுக்கு, நீங்க எல்லாம் வருத்தப்படாதீங்க”, என்று வருத்தத்துடன் அமர்ந்திருந்தவர்களை மீட்க உண்மை கூறினாள், அகி.

அகல்யாவின் வார்த்தைகள் நால்வரையுமே சற்று அசைந்திருந்தது.

சிறு பெண் செய்த தவற்றிற்கு அதிகபட்ச தண்டனையாக பிரிவினைக் கொடுத்து ஒதுங்கியது தவறோ என்ற தங்களின் மீதான பொறுப்பற்ற தன்மையை எண்ணி ஈஸ்வரன், தேவகி இருவரும் வெட்கியிருந்தனர்.

எந்த ஆதரவுமில்லாமல் தனியொருத்தியாக இருந்த தருணத்தை தவறாகப் பயன்படுத்திக் கொண்ட நவீனின் நயவஞ்சகத் தனத்தையும், உலக ஞானம் இல்லாத அகல்யா நவீனின் வார்த்தையைக் கேட்டு மகுடிக்கு அசைந்தாடும் சர்ப்பம் போல நடந்து கொண்ட தனது விழிப்பற்ற நிலையையும் எடுத்துக் கூற ஆரம்பித்திருந்தாள்.

“ஊரு இரண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு சொல்ற மாதிரி, அனிக்கும் எனக்கும் மிஸ்அண்டர்ஸ்டாண்ட் ஆனது, அப்புறம் பெரியவங்க யாரும் சப்போர்ட் இல்லைங்கற விசயத்தை என் வாயில இருந்தே வாங்கி, அதையே நல்லா பயன்படுத்திட்டாரு, நவீன்.

நீங்க போயி கல்யாணத்தை நிறுத்தி ஒரு வாரத்தில… என்னைய அவரு, நான் வேல பாக்கற இடத்தில பாக்க வந்திருந்தாரு. முதல்ல நான் பாக்க மறுத்து திட்டி அனுப்பிட்டேன்.

ஆனாலும், மனசு அவரைத் தான் தேடுச்சு. அதை அவரு சாதகமாக பயன்படுத்திக்க, சாதூர்யமா வந்து எங்கிட்ட பேச்சுக் கொடுத்தாரு.

முதல்ல பிடி கொடுக்காம இருந்த நான், நாள் ஆக ஆக, அவரை நம்ப… ஒரு பக்கம் பயமா இருந்தாலும், என்னையே அறியாம அதுக்கு இடம் கொடுத்திட்டேன்.

சலிக்காம மனுசன் அடிக்கடி வந்து, என்னைய பாத்தாரு… ஆரம்பத்தில வார்த்தையால சாடுன நான்… போகப் போக அவரு மேல இரக்கப்பட்டு மனசு மாறிட்டேன். அவரு சொல்றத எல்லாம் நம்பினேன்.

அவங்க வீட்ல கல்யாணத்துக்கு ஒத்துக்கிற வர, இதுதான் நமக்கு பாதுகாப்புன்னு சொல்லி கோயில்ல கூட்டிப் போயி தாலி கட்டினாரு. உங்க மேலல்லாம் இருந்த கோபம் அப்ப என் கண்ண மறச்சிருச்சு…

கல்யாணம்கிற பேச்சை எடுக்காம, அவரு எங்கிட்ட தப்பா அணுகியிருந்தாக் கூட சுதாரிச்சு இருந்திருப்பேன்னு… என்னைய சரியா கணிச்சு… முதல்ல கல்யாணம்னு பேச்சைத் தொடங்கி என்னைய சம்மதிக்க வச்சாரு.

எனக்கு தாலியும் கட்டினவுடனே, அவரு தான் உண்மை. நீங்க எல்லாம் எனக்கு துரோகம் பண்ணிட்டீங்கனு என்னைய நம்ப வச்சு, உங்களோட பேசறதையோ, பாக்குறதையோ அறவே நிறுத்தும்படி என்னை மோல்ட் பண்ணிட்டார்.

நானும் அவரை ரொம்பவே நம்பினேன். அவரு பேருக்குக் கட்டுன தாலிய நான் ஊரறிய கட்டுன நிஜத் தாலியா நினைச்சு அவருகூட சந்தோசமா வாழ ஆரம்பிச்சிட்டேன்.

எந்த சந்தர்ப்பத்திலயும் அவரு மேல சந்தேகம் வராதபடி நடந்துகிட்டாரு…

தனக்கு தொழில் சார்ந்த வேலைக்காக தினம் மேட்டுப்பாளையம் போயி வந்துன்னு அலைஞ்சவரப் பாத்து, ‘எதுக்குங்க அங்கயும், இங்கயும் அலைஞ்சுகிட்டு இருக்கீங்க… இந்த ஊருல கூட நீங்க ஆட்டோமொபைல்ஸ் ஒன்னு ஸ்டார் பண்ணலாமேன்னு’, கேட்டேன்

அப்போ அவரு ‘எங்க அம்மா அப்பாவுக்கு சந்தேகம் வந்தா நம்ம பிரிக்க நினைச்சு பிரச்சனை ஆகிரும். நேரம் பாத்து நானே இத அவங்ககிட்ட சொன்னா உன்னையக் கண்டிப்பா ஏத்துக்குவாங்க… அப்புறம் ஊரறிய பெத்தவங்க சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கலாம். இப்போ கட்டினது நம்ம மன திருப்திக்கு’ அப்டினு சொல்லி என்னை நம்ப வச்சிருந்தார்.

நானும் அதுக்குமேல அவரை ரொம்ப சந்தேகக் கண்ணோட பாக்கத் தோணாம என் வேலையில பிஸியாகிட்டேன்.

சில நாட்கள் அங்கேயே கூட தங்கிருவாறு. வாரக் கணக்குல ஸ்பேர்ஸ் வாங்க அங்க போனேன். இங்கே போனேன்னு போனுல கூப்பிட்டு சொல்றதையும் நான் நம்பிட்டு என் வேலயில பொழுதைக் கழிச்சேன்.

அப்போ எங்கூடவும் வாழ்ந்துட்டு, அவங்க அம்மா அப்பா பாத்து கல்யாணம் பண்ணி வச்சதையும் எங்கிட்ட மறைச்சிட்டாரு.

வெளியூருக்கு ஒரு வேலையா போறேன். அதனால ஒரு மாசம்போல ஆகும் நான் வரன்னு எங்கிட்ட சொல்லிட்டு அப்போ போயிருந்தாரு.

நானும் அது உண்மைனு நம்பி காத்திருந்தேன். ஆனா அவருக்கு வேற பொண்ணுகூட அப்போ கல்யாணம் ஆகியிருந்திருக்கு.

அப்பவும் எனக்கு தெரியல… பொண்ணு வீட்ல அவரு காரணமில்லாம நான் வேலை பாத்த ஊருப்பக்கம் வரது போறதைப் பாத்து, அவரு மேல சந்தேகப்பட்டு கண்காணிச்சப்ப… அவரு இங்க வந்து எங்கூட வாழறது தெரிஞ்சிருக்கு.

ஒரு வாரம்போல கண்காணிச்சிருப்பாங்க போல. அதோட அந்தப் பொண்ணு வீட்ல இருந்து பெரியவங்க வந்து எங்கிட்ட நேரில பேசினாங்க…

எனக்கு அவங்க யாரு என்னனு தெரியாததால, நான் முதல்ல பேசவே பிரியப்படல. ஆனாலும் , இதுல பாதிக்கப்படற தன்னோட பொண்ணு வாழ்க்கைய மீட்க வேண்டி, அடிக்கடி வந்து என்னைய தொந்திரவு பண்ணாங்க.

அப்போ, இதபத்தி நான் நவீன்கிட்ட கேட்டப்ப… ‘கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது உங்கூடத்தான்’னு எங்கிட்ட சொன்னாரு. அப்பகூட நான் வெகுளியா நம்பினேன்.

நவீன் இங்க வந்து போறத தடை செய்ய பொண்ணு வீட்டுக்காரங்க கடைசி முயற்சியா நவீன் அம்மா, அப்பாட்ட பேசிருக்காங்க. அவங்க அப்பாவோட சில ஆளுங்க வந்து என்ன மிரட்ட ஆரம்பிச்சாங்க.

அப்போ நவீன் கல்யாண போட்டோஸ் எல்லாம் எடுத்து வந்து எங்கிட்ட காமிச்சாங்க. அப்பதான் நவீன் பத்தி எனக்கு உண்மை தெரிய வந்தது.

நவீன் பத்தின விசயம் தெரிய வந்ததும், அவரோட கல்யாண போட்டோவைக் காட்டி, ‘இது என்னதுன்னு’ கேட்டேன்.

அதுக்கு மேல எதுவும் பேசாம அமைதியாவே இருந்தாரு.

அவரை அதன்பிறகு இங்க வர வேணாம்னு சொன்னேன். ஆனா, அவரு யாரு பேச்சயும் கேக்கல.

‘கால சுத்துன பாம்பு விடாதுங்கற’ மாதிரி இவரு என்னைய விடமாட்டாருன்னு எனக்கு புரிஞ்சது. ஆனா வேறொருத்தியோட புருசனோட நான் இவ்ளோ நாள் வாழ்ந்தேன்னு நினைச்சு என் மேலயே எனக்கு அருவெருப்பு வந்திருச்சு.

நான் கன்சீவ் ஆகிறந்த சமயம். அதனால, எனக்கு டெலிவர ஆகற வர வந்துட்டு… அப்புறம் இங்க வரமாட்டேன்னு சொன்னாரு. ஆனா அவரு என்னைய பாக்க வரது எனக்கு சுத்தமா பிடிக்கல.

அப்பதான் நானும் அவர்கிட்ட சண்டை போட்டேன். ஆனாலும் வந்தாரு. இதுக்கு மேல நாம அவரு கண்ணுல படாத தூரத்துக்கு போயிறணும்னு, அப்றம் தான் இந்த ஊருக்கு மாத்திட்டு எதுவும் சொல்லாம கொள்ளாம வந்திட்டேன்.

அவரை, அவங்கம்மா, அப்பா, வயிஃப் வீட்ல உள்ளவங்கன்னு எல்லாரும் ரொம்ப கண்காணிச்சிட்டே இருக்கறதால, நான் எங்க இருக்கேன்னு தெரிஞ்சுகிட்டும் அவரால இங்க வர முடியாத சூழ்நிலைக்கு போயிட்டாரு.

ஆனாலும் என் நம்பருக்கு இன்னும் அப்பப்போ கால் பண்ணுவாரு. நான் தான் ரெஸ்பான்ஸ் பண்றதில்ல.

இது நானா தேடிக்கிட்டது! அதனால… அத நான் தான் அனுபவிக்கணும். இதுக்காக நீங்க யாரும் வருத்தப்படாதீங்க!”,என அகல்யா கடந்த கால தனது தவறை உணர்ந்தவளாய் கூற

“அப்ப எங்கள தேடி நீ வந்திருந்தா, எங்களால ஆனத செய்திருப்போமே, இப்போ வாழ்க்கையையே விட்டுட்டுயே!”, என தேவகி பதற

“அம்மா, அனி சொன்னப்ப கூட நவீன பத்தி நான் நம்பல! அதுக்கப்புறமும் அவன நம்பி நான் கஷ்டப்படுறதுக்கு, நீங்க யாரும் காரணம் இல்ல! அதனால இதபத்தி பேசி இனி ஒன்னும் ஆகப் போறதில்ல!”, என தெளிவாகப் பேசிய அகல்யாவை ஆச்சர்யமாக இரு பெண்களும் பார்த்திருந்தனர்.

“குழந்தையவும் வச்சுட்டு… தனி ஒருத்தியா எவ்ளோ கஷ்டப்பட்டிருப்ப!, அவங்க வீட்ல நாங்க போயி பேசி நியாயம் கேக்கறோம்!”, தேவகி

“வேண்டாம்மா! எனக்கே வெறுத்துப் போச்சு. அதனால எனக்காக நீங்க யாரும் போயி அவங்க வீட்ல அவமானப்பட வேணாம்! தத்துபித்துனு நானும் அனிகிட்ட கேட்டதுதான்…!

உண்மையில எனக்கு அப்ப அந்த வலி தெரியல. ஆனா இன்னிக்கு எனக்கு உரிமையானத வேற பொண்ணோட ஷேர் பண்ணணும்னு ஒரு நிலை வந்தப்ப தான்… அனியோட அன்னிக்கு நிலைமை எனக்கு புரிஞ்சுது!”, என கடந்த காலம் தந்திருந்த அனுபவத்தால், எடுத்திருந்த தனது தீர்க்கமான முடிவை பெரியவர்களுடன் பகிர்ந்து கொண்டாள், அகல்யா.

“அனி நல்லாயிருக்காளா? அவ இப்ப எப்டி இருக்காம்மா?”, என தன் தோழியைப் பற்றிய ஆவலில் கேட்க

“உன்னப் பாத்து உனக்கு ஒரு கல்யாண வாழ்க்கைய அமைச்சு குடுத்துட்டுதான், அவ மேரேஜ் பண்ணிக்குவேன்னு சொன்னதாலதான், உன்ன தேடி இவ்ளோ தூரம் நாங்க வந்தோம்.

ஆரம்பத்துல இருந்தே அவ உன்னைய போயி பாக்கச் சொல்லிகிட்டேதான் இருந்தா. ஆனா அவ எங்களையெல்லாம் விட்டுட்டு சென்னை போனதுல இருந்த வருத்தம். எங்களுக்கு எதையும் செய்ய பிரியமில்லாம போயிட்டுது. ஆனா இடைப்பட்ட காலத்துல இப்டி ஒரு விசயம் நடந்து உன் வாழ்க்கையவே புரட்டிப் போட்டு இருக்கும்னு நாங்க நினைக்கல!”, என உண்மையான வருத்தத்தோடு இரு பெண்களும் கூறினர்.

“ஏன் இன்னும் அனி கல்யாணம் பண்ணிக்கல?… அவளுக்கு பிடிச்சவரை நான் நினைச்சுட்டேங்கறதால வேணாம்னு இருக்காளா?”, என்று தன்னால்தான் தனது தோழி தனது வாழ்க்கையை இழந்து தனியே நிற்கிறாள் என்கிற எண்ணம் மனதை வாட்ட கேட்டிருந்தாள்.

“எல்லாம் எங்க நேரந்தான், வேற என்னத்தை நான் சொல்ல? ஆனா எங்க முகத்துக்காகத்தான் அந்தப் பையனை கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டா… நீ அந்தப் பையன் மேல பிரியம் வச்சிருக்கேனு தெரிஞ்சவுடனே, எங்ககிட்ட அந்தப் பையனை உனக்குத்தான் பேசி முடிக்கச் சொல்லி எங்ககிட்ட அப்போ கேட்டா”, என்று தனது மகளைப் பற்றி தெளிவாகக் கூறினார் தேவகி.

தேவகியின் பதிலில் அனியை நினைத்து ஒரு புறம் பெருமையாக உணர்ந்தாலும், தனது செயலை எண்ணி அருவெறுப்பு தோன்ற சற்று நேரம் அமைதியாக இருந்தவள், அதன்பின் தனது முட்டாள் தனமான செயல்களை எண்ணி வருந்தியபடியே அதே பேச்சைத் தொடராமல் தனது தோழியைப் பற்றி அறிய ஆர்வம் காட்டினாள்.

“அப்போ இவ்ளா நாளா நம்ம ஆஃபீஸ்கும் போகாம, சென்னையில போயி அங்க என்ன செய்யிறாம்மா!”, என தனது தோழியைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆவலைக் குரலில் காட்டினாள்.

“சென்னைல டயட்டீசியனா தான் இருக்கா. ஊருக்கு வந்து மூனு வருசம் ஆகப்போகுது!”, தேவகி

“என்னம்மா சொல்றீங்க”, அதிர்ச்சியுடன் வினவினாள், அகி.

“ஆமா…, நானும் அப்பாவும் தான் மாசம் ஒருதடவ சென்னைல போயி அவள பாத்துட்டு வரோம்!”, தேவகி கூற

“ஏன்மா அவள சென்னைக்கு அனுப்ப சம்மதிச்சீங்க”, என அகி கேட்க

“நாங்க எங்க கண்ணு போக அனுமதிச்சோம். உங்க ரெண்டு பேரு பிரச்சனைக்கு பின்ன அப்பவே கிளம்பி சென்னை போனவதான். இன்னிவர கோயம்பத்தூர் பக்கமே வரல!”, அகியாலேயே ஜீரணித்துக் கொள்ள முடியாத விடயங்கள் பகிரப்பட…

“ஏம்மா, அவதான் பிடிவாதமா இருந்தான்னா நீங்களும் அவள ஏன் சென்னைக்கு போக விட்டிங்க!”, என தனது தோழியை நினைத்து வருந்தியவாறே வினவினாள்.

“அப்ப இருந்த அவ மனநிலைக்கு கொஞ்சம் வெளியில போயி வந்தா நல்லா இருக்கும்னு விட்டாச்சு. ஆனா அவளோட அந்த பிடிவாதத்தால தான் இன்னிக்கு உன்னைத் தேடி வந்தோம். உனக்கு ஒரு நல்லது பண்ணாம, அவ கல்யாணம் பண்ணிக்க மாட்டேனு சொன்னதால நிறைய இடங்கள்ல விசாரிச்சு கடைசியா கண்டுபிடிச்சு வந்தோம்!”, எதையும் மறைக்காமல் கூறியிருந்தார், தேவகி.

“எனக்கு இதுவர பண்ண நல்லதுக்கே அவளுக்கு கடன்பட்டிருக்கேன். இன்னும் எனக்குனு யோசிக்க வேணாம்னு சொல்லுங்க அனிகிட்ட..!. இன்னும் என்னை கடனாளியா ஆக்காதிங்க!”, அகல்யா.

“உனக்கு ஒரு நல்ல முடிவு எடுத்தாத்தான், அவ கல்யாணத்துக்கு ஒத்துக்குவா!”

“அம்மா என் மனசார எடுத்த முடிவுப்படி, இப்ப தனியா… நிம்மதியா இந்தக் குழந்தையோட வாழ ஆரம்பிச்சிருக்கேன். அடுத்து வரக்கூடிய நாட்கள்ல எனக்கு நம்பிக்கையானவன பாத்தா நிச்சயமா உங்ககிட்ட வந்து சொல்லுவேன்!”

“அதுவர இங்க புள்ளயோட தனியா எதுக்கு கஷ்டப்படணும், பேசாம நம்ம ஊருப் பக்கமே மாத்திட்டு வந்திறேன்”, வளர்த்த பாசத்தில் தேவகி கூற

“வேணாம்மா. இங்க வந்தபின்ன தான் அவங்க குடும்பத்தோட தொந்திரவு இல்லாம இருக்கேன். கோயம்பத்தூர் வந்து திரும்பவும் என் நிம்மதிய இழக்க நான் விரும்பலம்மா. என்னை வற்புறுத்தாதிங்க!”, என அகி தேவகியிடம் வேண்ட

“சரி அப்ப உன் விருப்பம்”, என்றவர்கள் கோவைக்கு அடிக்கொரு முறை வந்து செல்லுமாறு கூறிவிட்டு கிளம்பியிருந்தனர்.

அனன்யாவிற்கு அழைத்துப் பேசிய ஈஸ்வரன், சம்பந்தகாரவர்கள் வீட்டிற்கு வந்து சென்றதாகவும், திருமணத்தை எப்போது வைத்துக் கொள்ளலாம் என மகளிடமே கேட்டார்.

அனன்யா அகல்யாவைப் பற்றி வினவ, அவள் ஆற்றி வந்த பணியை தற்போது புதுக்கோட்டையில் தொடர்வதாகவும், அவளுக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை இருப்பதையும் கூறியிருந்தார்கள்.

அனன்யாவின் திருமணத்திற்கு அகல்யா தனது குடும்பத்துடன் நேரில் வருவதாகக் கூறியதாகவும் கூறி, நவீனைப் பற்றிக் கூறாது மறைத்திருந்தார்கள்.

பெற்றோரின் தகவலைக் கேட்டறிந்தவள், தோழிக்கு அழைத்திருந்தாள். அனன்யா அழைத்ததும் அழைப்பை தவிர்க்காமல் இந்த முறை பேசியிருந்தாள், அகல்யா.

தோழியின் குணமறிந்தவள், தன்னைப் பற்றிய அனைத்தையும் மறைத்து திருமணத்தன்று சந்திக்கலாம் எனக் கூறி வைத்திருந்தாள், அகல்யா.

தோழி அழைத்துப் பேசியதால், மகிழ்ந்தவள் அடுத்தடுத்த தனது திருமணம் சார்ந்த நிகழ்வுகளுக்கு சரியென்றிருந்தாள், அனன்யா.

அனன்யாவிற்கு வந்திருந்த மனமாற்றங்களால், கைலாஷூடன் விரைவில் திருமணம் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகவே இருந்தது.

இடையில் இரண்டு முறை நேரில் சென்று, அனன்யாவை சந்தித்து திரும்பியிருந்தான், கைலாஷ்.

திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, ஊருக்கு வருவதற்காக கிளம்பினாள், அனன்யா. அனன்யாவின் வருகையை அறிந்திருந்த, அனைவரும் கோவைக்கு அவள் வருவதை மகிழ்ச்சியோடு வரவேற்க ஆயத்தமாகினர்.

தேவகி மூன்றாண்டுகளுக்குப்பின் கோவை வந்திருந்த தனது மகளை தாங்கு தாங்கென்று தாங்கினர்.

வந்தவள் ஒரு நாளை ஓய்வுடன் கழித்தாள். அடுத்த நாள் மணமகன் வீட்டார் பற்றிய வினாக்களை தனது தாயை நோக்கி இயல்பாக வினவியிருந்தாள் அனன்யா.

மகளின் எதிர்பாரா வினாக்களுக்கு என்ன பதிலளித்தார், தேவகி… அடுத்த அத்தியாயத்தில்…

error: Content is protected !!