குறும்பு பார்வையிலே – 18
ஸ்ருதி ஆகாஷை பற்றிச் சிந்தித்தபடியே சாலையில் காரை செலுத்திக் கொண்டிருந்தாள்.
ஆகாஷின் உதடுகள் குறும்போடு வளைந்தது. ‘என்ன ஆச்சு நம்ம டாலிக்கு? பயங்கரமா சண்டைக்கு வருவா சும்மா கிக்கா சமாதானம் படுத்தலாமுன்னு பார்த்தா இப்படி உம்முனு போய்ட்டா?’ என்று சிந்தித்தான்.
‘இந்த சீண்டலும் நல்லாத்தான் இருக்கு. அது தான் இன்னைக்கு நைட் பார்க்க போறோமே!’ என்று புன்னகைத்துக்கொண்டான்.
ஆகாஷால் வேலையில் மூழ்க முடியவில்லை. ஸ்ருதிக்கு அழைத்தான்.
‘பேசவா, வேண்டாமா?’ என்று ஒரு நொடி யோசித்தாள் ஸ்ருதி. ‘ஒருவேளை ஆகாஷ் என்னை சீண்டி விளையாடிருப்பானோ? கோபம் வந்திருச்சுன்னு தெரிஞ்சி கூப்பிடறானோ?’ என்ற எண்ணத்தோடு, பச்சை நிறத்தைத் தொட, ப்ளூடூத் அதன் பணியை செவ்வனே செய்ய ஆரம்பித்தது.
அங்கு மௌனம், மௌனத்தை கலைக்கும் விதமாக, “ம்…” கொட்டினாள் ஸ்ருதி.
‘அட! நம்ம டாலிக்கு கோபத்தை பாரு. அப்படி என்ன சொல்லிட்டோமுன்னு இவ்வுளவு கோபம். ஊருக்கு போயிட்டு வந்திருக்கோம். நான் என் டாலிக்கிட்ட விளையாட கூடாதா? நான் லேப்டாப்பை பார்த்தா இவளுக்கு என்ன? அப்படியே குறும்பான்னு எனக்கு ஒரு கிஸ் குடுத்தா இவ குறைஞ்சா போயிருவா?’ என்று அவன் யோசனை ஓடியது.
“ம்… க்கும்…” என்று ஸ்ருதியின் குரல் மீண்டும் ஒலித்தது.
‘இன்னைக்கு டாலியை கடுப்பேத்தி பாத்திர வேண்டியது தான்.’ என்ற எண்ணத்தோடு, “ஸ்ருதி… ஜெர்மனியில் பொண்ணுங்க செம அழகு.” என்றான் அவளை சீண்டும் விதமாக.
“ஓ…” என்றாள் சுருக்கமாக.
“உன் ஞாபகமே வரலைனா பார்த்துக்கோயேன்.” என்றான் கேலி தொனிக்கும் குரலில்.
“இதை சொல்ல தான் கூப்பிட்டிங்களா?” நறுக்கு தெறித்தார் போல் ஒலித்தது அவள் குரல்.
“இல்லை… இல்லை… உனக்கு கிபிட் வாங்கணுமுன்னு நினைச்சேன். ஆனால், ஊர் சுத்தி பார்த்ததில் மறந்துட்டேன். அதை சொல்லி சின்னதா ஒரு சாரி சொல்லலாமுன்னு…” என்று அவன் தன் சிரிப்பை அடக்கிக் கொண்டு பேசினான்.
“பரவால்லை…” அவள் குரலில் பெருந்தன்மை இல்லை. கடுப்பே மிதமிஞ்சி இருந்தது.
“சரி… அதை விடு. கல்யாணம் ஒரு வாரத்தில். இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாமா? இல்லை கொஞ்ச நாள் ஜாலியா இருப்போமா?” என்று அவன் கேட்க, ஸ்ருதி தன் கார் பிரேக்கை அழுந்த பிடிக்க, கார் சடாரென்று நின்றது.
“நாம என்ன பிரெஷ் பீஸா அவசரப்பட்டு கல்யாணம் பண்ண?” அவன் கல்யாணம் நெருங்கி விட்ட உற்சாகத்திலும், ஸ்ருதியை பார்த்து விட்ட சந்தோஷத்திலும் கேலி பேசினான்.
ஸ்ருதி அந்த சிவப்பு பட்டனை அழுத்தினாள்.
ஆகாஷ் அலுவலகத்தில், ‘மேடம் செம்ம கடுப்பாகிட்டாங்க. சூப்பர். இன்னைக்கு நைட் சஸ்பென்ஸா அவ வீட்டுக்கு போறோம். திட்டப்படி ஸ்ருதிக்கு பிறந்தநாள் கொண்டாடுறோம்.’ என்று எண்ணிக்கொடு அவளுக்காக தன் அருகே வைத்திருந்த கிப்ட்டை ஆசையாக தடவினான்.
“ஒருத்தர சீண்டி பார்த்துட்டு, அவங்கள சமாதானப்படுத்தி, அவங்களை ஆச்சரியப்படுத்துற விதமா பிறந்தநாள் கொண்டாடுறது ஒரு தனி சுகம்.” என்று கண்களில் காதல் வழிய முணுமுணுத்துக் கொண்டான் ஆகாஷ். அவன் எண்ணங்கள் முழுவதும், ஸ்ருதியை சுற்றியே இருந்தது.
‘நாம என்ன பிரெஷ் பீஸா?’ அந்த வார்த்தைகள் அவள் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்தது.
திக் பிரமை பிடித்தவள் போல் சாலையின் நடுவில் காருக்குள் அமர்ந்திருந்தாள்.
எத்தனை நிமிடங்கள் அப்படி அமர்ந்திருந்தாளோ, பின்னால் வந்த அதீத ஹாரன் சத்தம் அவளைச் சுயநினைவுக்கு அழைத்துவர, மீண்டும் காரை செலுத்தினாள்.
‘ஆக, இவனது கேலி பேச்சு தொடரத்தான் போகுது. நான் ஆயுசுக்கும் இதைக் கேட்டுக்கொண்டு தான் வாழ வேண்டுமா? இப்படி ஒரு வாழ்க்கை எனக்கு தேவையா?’ என்ற கேள்வி அவள் மனதில் பூதாகரமாக எழுந்தது.
“ஒரு மண்ணும் தேவை இல்லை.” அவள் உதடுகள் அழுத்தமாக இன்னும் இன்னும் அழுத்தமாக ஒலித்தது.
தன் கார் ஸ்டேரிங்கை கோபமாக குத்தினாள் ஸ்ருதி. ‘பெண் என்றால் இளக்காரமா? நடந்த தப்பில் எனக்கு எத்தனை பங்கு இருக்கிறதோ? அதே பங்கும் அவனுக்கும் இருக்கிறது.’ ஆக்சிலேட்டரை சர்ரென்று அழுத்தினாள்.
ஆண்ணென்ன, பெண்ணென்ன அழுத்திய வேகத்தில் கார் பறந்தது.
லாரிக்கு இடையில், பேருந்துக்கு இடையில் லாவகமாகக் காரை திருப்பினாள் ஸ்ருதி.
‘என்னை என்ன நினைச்சிகிட்டான்?’ அவள் சிந்தனை ஓட்டம் படு வேகத்தில் இருந்தது.
ஸ்ருதி ஒரு முடிவோடு வீட்டிற்குள் நுழைந்தாள். அலுவலகத்துக்குச் செல்லாமல், வீட்டிற்கு வந்த மகளை ஈஸ்வரன், பார்வதி இருவரும் மேலும் கீழும் பார்த்தனர்.
ஸ்ருதி தன் நிலையையும், கல்யாணம் வேண்டாம் என்றும் சுருக்கமாகக் கூறி முடித்தாள். பார்வதி எகிறுவார், என்று எதிர்பார்த்திருக்க ஈஸ்வரனின் கைகள் ஸ்ருதியின் கன்னத்தை பளார் பளார் என்று பலமுறை பதம் பார்த்தது.
பாரவ்தி குறுக்கே வந்தார். “இப்படி அறஞ்சிக்கறதா இருந்தா, என்னை அறையனும். இல்லை உங்களை நீங்களே அறஞ்சிக்கணும்.” என்று ஓங்கி ஒலித்தது பார்வதியின் குரல்.
ஸ்ருதி சோர்வாக சோபாவில் சாய்ந்தாள். அவள் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வெளிவரவில்லை. மாறாக நிம்மதியாக உணர்ந்தாள்.
“அவ எத்தனை பசங்களோட படிச்சிருப்பா? எத்தனை பேரோட வேலை பார்த்திருக்கா? என்னைக்காவது நாம கண்டிக்குற அளவுக்கு நடந்திருக்காளா?” என்று கேள்வியாக நிறுத்தினார் பார்வதி.
“நான் ஸ்ருதி செய்தது சரின்னு சொல்லலை. ஆனால், அந்த தப்பில் நமக்கும் பங்கு இருக்குன்னு சொல்றேன். நிச்சயம் பண்ண மாப்பிளை. நாம கல்யாணம் முடிஞ்சி கூட, இப்படி போட்டோ எடுக்கலியே. இவங்க நிச்சயம் முடிஞ்சவுடனேயே ரொம்ப நாள் வாழ்ந்த புருஷன் பொண்டாட்டி மாதிரி போட்டோ எடுக்குறாங்க.” என்று பார்வதி கடுப்பாகக் கூறினார்.
“அவங்களை தனியா அனுப்பினது நம்ம தப்பு.” என்று கறாராகக் கூறினார் பார்வதி.
“பார்வதி… தப்பு பண்ண மகளுக்கு வக்காலத்து வாங்குறியா?” என்று கர்ஜித்தார் ஈஸ்வரன்.
“வக்காலத்து வாங்கலைங்க. நிஜத்தை சொல்றேன். தாலி கட்டுற வரைக்கும் எதுவும் நிஜம் இல்லைன்னு காலம் காலமா ஏன் சொல்லுறோம்? காலம் மாறி போச்சு. ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் போகணும்னு சொன்னது யாரு. நீங்க தானே?” என்று நேரடியாகக் கேட்டார் பார்வதி.
“காலத்தில் என்ன மாறி போச்சு? ஆண் தான் தாலி கட்டுறான், பொண்ணு தானே வாங்கிக்குறா? காலம் மாறி போச்சுன்னு, பொண்ணு தாலி கட்ட, ஆண் வாங்கிப்பானா? பிள்ளையை ஆம்பிளைங்க சுமக்கலையே பொண்ணு தானே சுமக்குறா? கல்யாணம் முடிஞ்சி எந்த ஆணும் பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டுக்கு போகலியே? பொண்ணு தானே பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டுக்கு போறா? என்ன காலம் மாறி போச்சு?” என்று கிடுக்கு பிடியாகக் கேட்டார் பார்வதி.
“காலமும் மாறலை, மனிதர்களும் மாறலை.” என்று அழுத்தத் திருத்தமாகக் கூறினான் பார்வதி.
மனைவியின் நிதர்சன பேச்சில், ஈஸ்வரன் சோர்வாக அமர்ந்தார்.
“ஸ்ருதி பண்ண தப்புக்கு தண்டனை. பிடிச்சிருக்கோ, பிடிக்கலையா ஆகாஷ் தான் மாப்பிள்ளை. சொன்ன தேதியில் கல்யாணம்.” என்று உறுதியாகக் கூறினார் பார்வதி.
“நடக்காது. நடந்தால், என் உயிர் இருக்காது. என்னை மாதிரி நீங்களும் மிரட்டணுமுன்னு நினச்சா, கல்யாணத்தை பண்ணிட்டு டிவோர்ஸ் பண்ணுவேன்.” என்று ஸ்ருதி உறுதியாக கூற, இப்பொழுது பார்வதியின் கை உயர்ந்தது.
ஈஸ்வரன் தன் மனைவியை தடுத்து, மறுப்பாக தலை அசைத்தார். ஸ்ருதி உறுதியாக எழுந்து கொள்ள, “அப்ப, இந்த குழந்தை வேண்டாம்.” பார்வதி அவர் முதலும், கடைசியுமான ஆயுதத்தை வீசி பார்த்தார்.
‘தப்பு தான். நான் செய்தது தப்பு தான். ஆனால், ஸ்ருதி எதையும், தைரியமா, நிமிர்வா எதிர்கொள்ளுவா? அது தண்டனையா இருந்தாலும் சரி.’ என்று தனக்கு தானே எண்ணிக்கொண்டாள்.
ஸ்ருதியின் முகத்தில் ஏளன புன்னகை. அவள் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டாள்.
‘நாமே நம் மகளின் வாழ்க்கைக்கு வினையாக அமைந்து விட்டோமோ?’ என்ற குற்ற உணர்ச்சியோடு ஈஸ்வரன் மற்றும் பார்வதி இருவரும் குழப்பத்தில் இருந்தனர்.
மணி இரவு பதினொன்று ஐம்பத்தைந்து.
சீட்டியடித்தபடி காரை ஸ்ருதியின் வீட்டின் முன் நிறுத்தினான் ஆகாஷ். அவன் கைகளில் இதய வடிவில் பிரமாண்டமான வைட் போரெஸ்ட் வெள்ளை நிற கேக். அதன் ஓரத்தில் பிங்க் நிற ரோஜாக்கள். சிவப்பு நிற முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டு… “டாலி… என் உயிரே… எனதுயிரே! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!” என்ற வாசகத்தோடு.
காரில் அவன் சீட் அருகே சற்று பெரிய கிபிட் பாக்ஸ்.
‘இப்படி ஒரு பிறந்தநாள் பரிசை உலகத்தில் எந்த காதலனும், காதலிக்குக் கொடுத்திருக்க முடியாது.’ என்ற கர்வம் அவன் முகத்தில்.
ஸ்ருதியின் வீட்டின் கதவு மூடப்பட்டிருந்தது. ஆகாஷின் நெற்றி சுருங்கியது. ஸ்ருதியின் அலைபேசிக்கு அழைத்தான். அது சுவிட்ச் ஆப் என வந்தது. ஸ்ருதியின் அலைபேசி மட்டுமில்லை, அவள் தாய், தந்தை என அனைவரின் அலைபேசியும்.
வீட்டின் காவலாளியோ, அவர்கள் வெளியூருக்கு சென்று விட்டதாகக் கூற, ஆகாஷின் குழப்பம் மேலோங்கியது.
ஆகாஷ், கார்த்திக்கு அழைத்தான்.
அவன் அழைப்புக்குக் காத்திருந்தவன் போல, “நல்ல செஞ்சிட்டிங்க ஆகாஷ் சார்.” என்று கூறினான் கார்த்திக்.
“சார்?” ஆக்ஷின் நெற்றி சுருங்கியது.
“நீங்க வேற, நாங்க வேறன்னு நான் தான் முதலிலேயே சொன்னனே?” என்று கார்த்திக் கோபமகா பேச, “கார்த்திக், நீ பேசுறது என்னக்கு ஒண்ணுமே புரியல. நான் ஸ்ருதி வீட்டு வாசலில் நிக்கறேன். இங்க வா.” என்று ஆகாஷ் கூறினான்.
அவன் குரலில் இருந்தது கட்டளையா? இல்லை தவிப்பா? கார்த்திக்கு தெரியவில்லை. இரவு பன்னிரண்டு மணிக்கு ஸ்ருதியின் வீட்டை நோக்கி பயணித்தான்.
கார்த்திக் காரின் கதவை மூடிவிட்டு கோபமாக இறங்கி ஆகாஷை நோக்கி வந்தான். ஆகாஷின் கைகளில் உருகிக்கொண்டிருந்த வைட் போரெஸ்ட் கேக், அவன் அருகே இருந்த கிபிட் பாக்ஸ் கார்த்திக்கின் கணிப்புக்கு நேர்மாறாக இருக்க கார்த்திக்கின் நெற்றி சுருங்கியது.
“ஸ்ருதி எங்க?” அவன் நேரடியாகக் கேட்டான். கார்த்திக் பதில் சொல்லவில்லை.
“கார்த்திக் பதில் சொல்லு. என் வாழ்க்கை.” என்று ஆகாஷின் குரல் கெஞ்சியது.
“இந்த கல்யாணம் வேண்டாமுன்னு சொல்லிட்டு ஸ்ருதி கிளம்பிட்டா. உங்க வீட்டுக்கு நாளைக்கு காலையில் விஷயம் தெரிஞ்சிரும்.” என்று கார்த்திக் கூற, அவளுக்காக அவன் கைகளில் உருகிக்கொண்டிருந்த ரோஜாப்பூக்கள் கொண்ட வைட் போரெஸ்ட் கேக் மண்ணில் சரிந்து விழுந்து அதன் உருவத்தை இழந்தது.
கார்த்திக்கின் சட்டையைக் கொத்தாகப் பிடித்திருந்தான் ஆகாஷ். “ஸ்ருதியால என்னை விட்டுட்டு போக முடியாது. அவ போக மாட்டா.” ஆகாஷின் குரல் உறுதியாக கர்ஜித்தது.
ஆகாஷின் குறும்பு, கேலி அனைத்தும் கோபமாக விஸ்வரூபம் எடுத்துக்கொண்டு இருந்தது.
“விளையாடாத கார்த்திக்.” என்று அவன் ஒரு விரல் உயர்த்தி எச்சரிக்க, “எனக்கு விளையாட தெரியாது ஆகாஷ். அவ போய்ட்டா… உங்களை பிடிக்கலைன்னு சொல்லிட்டு போய்ட்டா. இது தான் நிஜம்.” கண்களில் கண்ணீர் மல்க கூறினான் கார்த்திக்.
தலையில் இடி இறங்கினார் போல் தலை அசைத்து அந்த சாலையில் அமர்ந்தான் ஆகாஷ்.
சில நொடிகளில், வெறி கொண்டார் போல் எழுந்து, கார்த்திக்கின் தோள்களைக் குலுக்கினான். “நான் இல்லைனா அவ செத்துருவா கார்த்திக்.” அவன் குரல் அழுதது.
கார்த்திக் கூறிய பதிலில், அவன் சோகம், கோபமாக மாறியது.
குறும்புகள் தொடரும்…