Kathiruntha kathaladi 10
Kathiruntha kathaladi 10
10
அழுகையில் கரைந்துக் கொண்டிருந்த ஹர்ஷி, இப்போது தனக்கு தந்தைதான் உதவக் கூடும் என உரைக்க அவரிடம் சென்றாள்.
“ப்பா ப்ளீஸ்ப்பா, ஹெல்ப் பண்ணுங்க … ரொம்ப நல்லவங்கப்பா ஆருஷ்… ” என கதற
“யாரோ ஒரு …… பையன் அவனுக்காக என்கிட்ட ஹெல்ப் கேக்கறயா…முதல்ல இந்த கன்றாவி காதல உதறிட்டு வா என்கூட” எனக் கூறிய தந்தையை அன்னையும் ஆதரிக்க, வழிகள் அனைத்தும் அடைபட்டு மூச்சு விடத் திணறினாள் ஹர்ஷி.
“அப்பா ப்ளிஸ்ப்பா” என அவர் காலில் விழ, அந்தக் கல் நெஞ்சம் கொண்டவரோ செவி சாய்க்கவில்லை. ஹர்ஷி கதறுவதைப் பார்த்த தர்ஷிக்கே அழுகை வந்தது. ஹர்ஷியைத் தூக்கி, “டேட் அக்காக்காக” என சிபாரிசுக்கு செல்ல அதுவும் பொய்த்துப் போனது.
“மரியாதையா ரெண்டு பேரும் கிளம்புங்க…” என தந்தை ஹர்ஷியின் கையைப் பிடிக்க, ஹர்ஷி அவர் கையை உதறினாள். அவர் திகைத்து நோக்க
“நா வரலப்பா. ஆருஷ் குணமாகாம நான் வர மாட்டேன். ஐ லவ் ஹிம் பா! ப்ளீஸ் எனக்காக உதவி செய்ங்கப்பா, உங்களால முடியும் ப்….ளீஸ்” எனக் இரு கை கூப்பி கெஞ்ச, யாரெனத் தெரியாதவர்களே உள்ளம் பதறுவர் ஆனால் அந்த பணக்கார தகப்பனோ கரையாமல் நின்றிருந்தார்.
இவ்வளவு கெஞ்சியும் மனமிரங்காத தாய், தந்தையை நினைத்து ஆத்திரம் கொண்ட தர்ஷி, “ஹர்ஷி விடு வேற யார்ட்டயாவது நம்ம ஃபிரண்ட்ஸ்கிட்ட கேக்கலாம்…நிச்சயம் ஹெல்ப் பண்ணுவாங்க”
“இல்ல தர்ஷ் இப்ப அதுக்கு நேரமில்ல…கேட்டல்ல பதினெட்டு மணி நேரம்….. என்னோட ஆருஷ்க்கு ஆப்ரேஷன் பண்ணனும். இல்லைன்னா அவர்..அவர்” என முகத்தை மூடிக் கொண்டு அழ,
தர்ஷிக்கே ஆருஷைக் காண வேண்டும் போல இருந்தது. இவ்வளவு அன்பை கொட்டுகிறாள் என்றால் அவன் எப்படிப் பட்டவனாக இருக்க வேண்டும்.
அழுது…அழுது ஓய்ந்து போனவள் மீண்டும் தந்தையை நோக்கி வந்து, “ப்பா ப்ளீஸ் நீங்க என்ன சொன்னாலும் கேக்கறேன்பா, அவர காப்பாத்துங்க” என வேண்ட, பெற்றோர் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பணக்கார மூளை அவசரமாக சில கணக்குகளைப் போட்டது.
“சரி, நான் உதவி பண்றேன்.ஆனா ஒருகன்டிஷன்” என நிறுத்த, “என்ன கண்டிஷன்னாலும் ஒத்துக்கறேன்பா…” என அவசரப்பட்டு ஒப்புக் கொடுத்தாள்.
“அவன் ஆப்ரேஷனுக்கு பணம் நான் தரேன்…ஆனா அதுக்கு பதிலா நீ அவன மறந்துடனும்…இனி நீ அவனையோ, இல்ல அவன் உன்னையோ பார்க்க கூடாது… நான் சொல்ற பையன நீ கல்யாணம் பண்ணிக்கனும்..இதுக்கெல்லாம் சம்மதம்னா நான் பணம் கொடுக்கறேன்.”
ஹர்ஷியின் கண்ணீர் ஒரு கணம் நின்றது. அடுத்த நொடி ஒருவித இயலாமையில் வாய்மூடி அழத் தொடங்கியவள் “ஏம்ம்பா” எனக் கை நீட்டி கேட்ட விதம் யாராக இருந்தாலும் கலங்கியிருப்பர்.
சிறிது நேரம் அழுதவள்… உயிரா? காதலா? என யோசிக்க உயிர்தான் வென்றது. “சரிப்பா நா…ன் ஒத்….துக்….கறேன். ” அந்த நொடி! தான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறோம்? எனத்தான் தோன்றியது. அடுத்த நிமிடமே இல்லை! நான் இல்லைனா ஆருஷ யார் காப்பாத்துவா? எனத் தோன்ற கண்களைத் துடைத்தவள் அமைதியாக அமர்ந்து விட்டாள்.
மகளின் மனதைக் கொன்றுவிட்டு ஏதோ சாதித்ததாய் முகத்தை வைத்தவர், அடுத்த பத்து நிமிடத்தில் ஆருஷிற்காக பணம் கட்டிவிட, ஆப்ரேஷனுக்காக ஏற்பாடுகள் நடந்தன. இவருக்கு இதெல்லாம் ஒரு தொகையே இல்லைதான். மனைவியின் மாத செலவுக்குள் அடங்கும் தொகை. ஆனால் அந்தஸ்து வெறி மகளை விட பெரிதாய் தோன்றியதோ!
“அதான் பணம் கட்டியாச்சில்ல… வா போகலாம்” எனத் தந்தை அழைக்க, “நான் ஆப்ரேஷன் முடிஞ்சு வரேன்..” என ஹர்ஷி மறுத்துவிட, தர்ஷியும் “நான் இவகூட இருக்கேன்” என்றுவிட்டாள். ஏதோ பெரிய மனது வைத்து அதற்கு மட்டும் சம்மதித்தார் அந்த பெரிய மனிதர்.
ஆப்ரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்லும் முன் ஆருஷை பார்க்க அனுமதி பெற்று உள்ளே சென்றாள் ஹர்ஷி. தலையில் ஒரு பெரிய கட்டு, அதில் ரத்த கரைகள். கை கால்களில் கூட கட்டு போட்டிருந்தார்கள். பார்க்கப் பார்க்க அழுகை வந்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டு அருகில் சென்றாள். இன்று மாலைகூட அவ்வளவு சந்தோஷமா இருந்தோமே! நினைக்க நினைக்க நெஞ்சம் வலித்தது.
ஆருஷின் கட்டுப்போட்ட கை மீது கை வைத்துக்கொண்டவள்…. அவன் கழுத்தோரமாய்ச் சாய்ந்து முகத்தருகில் தலை வைத்து ஒரு கை கொண்டு அணைத்துக் கொண்டாள்.
“சாரி ஆருஷ்… நான் போறேன். போய்த்தான் ஆகனும். நம்ம உயிருக்காக நம்ம காதல பணயம் வச்சிட்டேன். ‘நம்ம உயிர்தான்’ ஏன்னா, நீங்க இல்லனா அடுத்த நொடி நானும் இருக்க மாட்டேன்.
என்னோட உயிர் மட்டும்னா உயிர விட்றுப்பேன் . ஆனா உங்கள இழக்கற தைரியம் எனக்கில்ல. அதான் இந்த முடிவு. நீங்க கண்முழிக்கறப்ப நான் இங்க இருக்க மாட்டேன்.
சாரி! எப்பவும் கூடவே இருப்பேன்னு சொல்லிட்டு இப்படி விட்டுட்டு போறேன். ஆனா வேற வழி இல்ல. நீங்க பழையபடி நல்லாகனும். நல்ல பொண்ணா பாத்து …. க…ல்யாணம் பண்ணிக்கோங்க… சந்தோஷமா இருங்க… எனக்கு ஒரே ஆசைதான்! இனி எப்பவும் உங்கள பாக்க கூடாது, எப்பவும்!” என மனதில் இருந்தவற்றை கொட்டியவள், “கடைசியா ஒரு தடவ ” என்று அவன் நெற்றியில் கன்னங்களில் முத்தத்தை பதித்து முகத்தோடு முகம் வைத்து அழுது தீர்த்தாள். அதன் பிறகு ஹர்ஷி அழவில்லை.
ஆப்ரேஷன் நடந்தது. பலமணிநேர போராட்டம். ஆருஷ் காப்பாற்றப் பட்டான். அவனுக்கு ஆபத்து இல்லை எனக் கூறியதும்தான் நிம்மதியாக இருந்தது. மருத்துவருக்கு நன்றி கூறியவள் தந்தை அங்கு வரவும் ஆச்சர்யம் அடைந்தாள்.
ஆனால் அடுத்த நொடி ஒரு இகழ்ச்சிப் புன்னகை தோன்றாமல் இல்லை. தர்ஷியோ அவரை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
வந்தவரோ மருத்துவரைத் தனியேச் சந்தித்து பேசிவிட்டு வர, “என்ன சொன்னீங்க அவர்கிட்ட” என தர்ஷி பிடித்துக் கொண்டாள்.
“ம், கண்ணு முழிச்சதும் அவன்கிட்ட கூட வந்த பொண்ணு இறந்துட்டதா சொல்லச் சொன்னேன். ” என அலட்டிக் கொள்ளாமல் கூறியவரைக் கண்டு பலமாக அதிர்ந்தாள் தர்ஷி. ஹர்ஷியோ, “அது இப்ப இல்லைனாலும் கூடிய சீக்கிரம் நடக்கும்” என மனதோடு கூறிக் கொண்டாள்.
“உங்க பொண்ணு அவ…. ஹௌ டேர் யு டு திஸ் டூ ஹெர்” என தர்ஷி வெடிக்க அதை அலட்சியம் செய்தவர் அவர்களை அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.
ஹர்ஷி பிணம் போல நடந்து வந்தாளென்றால் தர்ஷிக்கு மனதே ஆறவில்லை. காரில் ஏறி அமரவும்தான் தன்னுடைய பர்ஸ் இல்லாததைக் கவனித்த தர்ஷி, “என்னோட பர்ஸ் அங்கயே விட்டுட்டேன் போல எடுத்துட்டு வரேன்” என மீண்டும் உள்ளே ஓடினாள்.
பர்ஸை எடுத்தவளுக்கு அப்படியேச் செல்ல மனதில்லை. ஆருஷ் இருக்கும் ஐ.சி.யு அறையை எட்டிப் பார்த்தாள். இப்போதுதான் அறைக்கு,மாற்றியிருப்பார்கள் போல.. ஆருஷை முதன்முறையாக பார்க்கிறாள். அந்த முகத்தை மனதில் பதிந்துக் கொண்டாள்.
இவர்கள் இப்படி பிரிய வேண்டுமா எதாவது செய் தர்ஷி என யோசிக்க அவ்வழியாக ஐ.சி.யு ப்ளாக்கிற்குள் வந்த ஒருத்தனைப் பிடித்து, “சார் ப்ளீஸ் ஒரு ஹெல்ப் வேணும்”
அவன் முகம் முழுக்க தாடி வளர்த்து, காதில் கடுக்கன் அணிந்து, கூலிங் கிளாஸ் வேறு அணிந்திருந்தான். என்னவோ பப்புக்கு போறவன் மாதிரி இருக்கான் என மனதில் எண்ணினாலும் உதவிக்காக அவனிடம் நின்றாள்.
அவனும் இவளைப் பார்த்து நிற்க, “நீங்க இங்கதான் இருப்பீங்களா?” அவன் முறைக்கவும் “சாரி..சாரி..” என சொல்லத் தடுமாறியவளை “பரவால்ல சொல்லுங்க” எனவும் உடனே முகம் மலர்ந்தவள், “இந்த ரூம்ல ஒரு பேஷன்ட் இருக்காங்க அவருக்கு ஆப்ரேஷன் நடந்திருக்கு அவர் கண்முழிச்ச பிறகு அவர்கிட்ட ஒரு விஷயத்தைச் சொல்லனும் அதான் ” என நிறுத்த,
“நீங்களே சொல்லலாமே”
“இல்ல, என்னால இங்க இருக்க முடியாது, நீங்க சொல்லுவீங்களா” என முகம் பார்க்க, அவன் தலை சம்மதமாக ஆடியது.
“தேங்க்ஸ் தேங்க்ஸ் அவர் பேர் ஆருஷ் …அவர் கண்முழிச்சதும் அவர்கிட்ட ஹர்ஷிக்கு ஒன்னுமில்ல..அவ உயிரோடத்தான் இருக்கான்னு சொல்லனும்” அவனும் சரி என்க தந்தை ‘புள்ளி’ வைத்த ஒன்றை தனக்குத் தெரிந்த விதத்தில் ‘கமா’வாக மாற்றிக் கிளம்பினாள் தர்ஷி.
அதன் பிறகு அனைவரும் லண்டன் வந்துவிட, ஹர்ஷிக்கு மனநலன் பாதிக்கப்பட்டது.எந்நேரமும் வெறித்த பார்வை, ஆருஷ் ஆருஷ் என புலம்புவது என ஆருஷை விட்டு வந்தது முதல் மன அழுத்தத்தில் இருந்தவளை தர்ஷிதான் பார்த்துக் கொண்டாள்.
அமைதியாகவே இருப்பாள் திடீரென சத்தமாக அழுவாள். அவள் மனநிலை மாறிக்கொண்டே இருந்தது. இப்படியே விட்டாள் அவள் நிச்சயம் பைத்தியமாகி விடுவாள் என நினைத்து அவளை மனோ தத்துவ நிபுணரிடம் அழைத்துச் சென்றனர்.
அவரிடம் இவளது காதலன் இறந்துவிட்டதாகவும் அதனால் இவளின் மனநிலை பாதிக்கப்பட்டதாகவும் கூற, அவரும் பல வகையில் பரிசோதித்து அவன் நினைவுகளை அழித்தால் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்புகள் உண்டு உங்களுக்கு சம்மதமா எனக் கேட்க,
இது இன்னமும் நல்லதே! என ஒப்புக்கொண்டனர். அதன்படி சிகிச்சையின் பேரில் ஆருஷ் மொத்தமாக ஹர்ஷியின் நினைவுகளில் இருந்து அகற்றப் பட்டான்.
அவளுக்கு மறக்கடிக்கப்பட்ட நினைவுகள் திரும்புமா என்ற கேள்விக்கு நாங்கள் செய்தது ஒரு முயற்சி அவ்வளவே. ஞாபகம் வரலாம் வராமலும் போகலாம். ஆனால் அப்படி நினைவு வந்தால் அவளது மூளை எவ்வாறு அதை ஏற்றுக் கொண்டு செயல்படும் என்பதைக் கூற இயலாது.
அந்த நேர அதிர்ச்சியில் அதன் செயல்பாட்டை நிறுத்தலாம். அதனால் பேஷன்ட் கோமாவிற்கு செல்லக் கூட வாய்ப்புள்ளது எனக் கூறினார். இந்த மருந்துகளை குறிப்பிட்ட வருடம் வரை உட்கொள்ள வேண்டும். இல்லையென்றால் கடும் தலைவலி வரலாம் அதுவும் மூளைக்கு நல்லதல்ல என மாத்திரைகளையும் அளித்தார்.
சிகிச்சை முடிந்து கண்விழித்த ஹர்ஷிக்கு முதலில் யாரையும் அடையாளம் தெரியவில்லை. பிறகு மெல்ல மெல்ல தாய், தந்தை, தர்ஷியை அடையாளம் கண்டு கொண்டாள்.
அவளிடம் அவளுக்கு விபத்து நடந்ததாக கூறி சமாளித்தனர். ஹர்ஷி மெல்லத் தேறினாள். தர்ஷி இதில் வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்தாள். எதாவது செய்து தமக்கை சரியானாள் சரி என்ற நிலை அவளுடையது. ஆனாலும் காதல் என்ன அவ்வளவு பெரும் குற்றமா? என நினைக்காத நாளில்லை.
நடந்ததைக் கூறி முடிக்கவும் பெரும் மௌனம் அங்கு. ஆருஷ் கண்களை மூடி அமர்ந்திருந்தான். கண்களில் இருந்து நீர் வடிந்துக் கொண்டிருந்தது. எத்தனை வேதனைகள் எனைக்கொண்டு…எப்படி தாங்கினாய் ஹர்ஷி!!!! என மனதோடு உடைந்தான்.
இத்தனை துன்பங்கள் அவள் தனியாக அனுபவிக்க நான் எதுவும் தெரியாமல் இருந்தேனே! என மருகினான். சில நிமிடங்களில் ஒருவாறாக சமாளித்து நிமிர்ந்தவன், “சாரி எனக்கு எதுவும் தெரியல” என முகம் கன்ற கூறினான்.
“இட்ஸ் ஓ.கே. எனக்கு ஒரே விஷயம்தான் தோணிச்சு… உங்களப் பிரிஞ்சு இவ்ளோ கஷ்டப்பட்டான்னா நீங்க அவளுக்குள்ள எவ்ளோ பதிஞ்சிருக்கீங்கன்னு. அதான் வேற ஒருத்தரோட அவளோட கல்யாணம் நடக்கறது எனக்கு விருப்பமில்ல. எப்படியாவது உங்கள சேர்த்து வைக்கனும்னு தோணிச்சு. தமிழ்நாடுதான் மாப்பிள்ளை ஊருன்னு சொல்லவும் நானும் சம்மதிச்ச மாதிரி நடந்துக்கிட்டேன்.”
இயல்புக்கு திரும்பியவன் “இவ்ளோ பாசமான தங்கச்சிய பத்தி ஹர்ஷி எங்கிட்ட எதுவுமே சொன்னதில்ல” என புன்னகையோடு கூற,
“என்கிட்டகூடதான் இவ்ளோ ஹேன்ட்ஸம்மான மாமா இருக்கார்னு சொல்லல… இதுல சுயநலமும் இருக்கு.. பிகாஸ் ஐ லவ் மை அக்கா… இப்ப இல்லன்னாலும் எப்பவாவது அவளுக்கு ஞாபகம் வந்தா! உங்கள பிரிஞ்சது வேற… ஆனா வேற ஒருத்தரோட மனைவியா இருக்கற அவள அவளே அழிச்சிப்பா. அதுக்குதான் இத்தன போராட்டம்” என உணர்ந்து கூறினாள்.
அவளது பாசத்தில் நெகிழ்ந்தவன், “எல்லாம் சரி..ஆனா ஆதி…” என நிறுத்த, “அந்த ஆதிக்கு இனி பேதிதான் … ஜோக்கர்னு தெரியாமயே ஆட்டத்துல நுழைஞ்சிட்டான்… வேற என்ன பண்ண?” என கிண்டலாகக் கூறினாள்.
ஆருஷ் “என்ன?” என அதிர்வோடு பக்கவாட்டில் பார்க்க அங்கிருந்த அறையைத் திறந்துக் கொண்டு ஆதி வந்தான்.
அவனைக் கண்ட தர்ஷி, “அட ஆண்டவா இவன் எங்க இங்க வந்தான்” என அதிர்ந்து நின்றாள்.