RR 9
RR 9
ரௌத்திரமாய் ரகசியமாய்-9
“நோ மம்மீ.. எனக்கு இது வேண்டாம்.” என் மறுப்பாக தலையசைத்தவாறு அடம்பிடித்துக் கொண்டிருந்தாள் அனன்யா.
“அனும்மா. அடம்பிடிக்காம சாப்பிடு” அவளை ரோஷினி கட்டாயப்படுத்த, அவளோ பிடிவாதமாக உணவுத்தட்டை தட்டி விட்டாள்.
கீழே விழுந்த தட்டைக் கூட ரோஷினியால் எடுக்க முடியவில்லை. அவளது இயலாமையை அறவே வெறுக்கிறாள்.
இத்தனை அவமானங்கள், வலிகளின் பின்னும் உயிர்துடிப்புடன் இருக்கும் ஒரே காரணம் அனன்யா. அவளுக்காக தானே அவள் உயிர் வாழ்கிறாள். இந்த வாழ்க்கையில் அவளுக்கிருக்கும் ஒரே பிடிப்பு.
தான் பெற்ற குழந்தை கூட தன்னை புரிந்து கொள்ள மறுக்கிறதே. அதே பிடிவாதம். அதே திமிர். அனன்யா ஓர் சின்னக் குழந்தை என்பதையும் மறந்து போனாள்.
அத்தனை நேரம் கனிவைக் காட்டிய அவள் முகம் கோபத்தில் சிவக்க, “ஏன்டீ இப்படி பிடிவாதம் பிடிக்குற? அப்படியே அப்பன் குணம். நீயும் உன் அப்பனும் என்னை நிம்மதியாவே இருக்க விட மாட்டீங்களா?” குழந்தையை தாறுமாறாக அடிக்கலானாள்.
அங்கிருந்த வீட்டுப் பணியாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் அழும் குழந்தையை பரிதாபமாக பார்த்திருந்தனர். வீட்டு எஜமானியை மீறி அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.
ரோஷினி அடிப்பதை நிறுத்தவில்லை. அவளை பார்ப்பவர்கள் அவளுக்கு வைத்தியம் பிடித்து விட்டதோ என்று அஞ்சும் அளவுக்கு நடந்து கொண்டாள்.
“ரோஷினி”
அந்தக் குரலில் அதிர்ந்தவள் மிரட்சி அப்பிய விழிகளுடன், நெஞ்சுக் கூடு தடக் தடக் என அடிக்க, அவள் குழந்தையை அடிப்பதை நிறுத்தி விட்டாள்.
மெல்லத் திரும்பினாள். மாடிப்படிகளில் கீழ் தளத்தை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தவரை கண்டதும் உள்ளே தடதடத்தது. அவர் தான் அவளது அத்தை ஷோபா.
‘டக் டக்’ என்ற ஹீல்ஸின் ஒலி அவளை நெருங்கியது. இராணியின் கம்பீரத்துடன் வந்தவரது முகத்தில் அப்படியொரு அடக்கப்பட்ட ஆத்திரம் தெரிந்தது.
அந்த ஹாலை சுற்றிலும் இருந்த பணியாளர்களை ஒரு பார்வை பார்க்க, தப்பினோம் பிழைத்தோம் என் அவ்விடத்தை விட்டும் மளமளவென ஓடினர். அந்த வீட்டைச் சார்ந்தவர்கள் ஒன்று கூடி இருக்கையில் வேலைக்காரர்கள் அந்த இடத்திலேயே இருக்கக் கூடாது என்பது எழுதப்படாத விதி.
“ஆண்ட்டி அது வந்து..” என அவள் திணற
எதிர்ப்பாரதா நேரத்தில் ‘பளார்’ அவளை அறைந்தார்.
“பைத்தியம் மாதிரி சில்லியா பிஹேவ் பண்றதை இத்தோட விட்டுடு ரோஷினி. அதுவும் சர்வண்ட்ஸ் முன்னாடி.” அவரது குரல் ஓங்கி ஒலித்தது.
அவள் கன்னம் தீப்பிடித்தது போல் எரிந்தது என்றால் அவள் மனம் அதைவிட இருமடங்கு எரிந்தது. வாய்திறந்து பேச முடியாதவளாய் கன்னத்தை தாங்கியவாறு அமர்ந்திருந்தாள்.
அவள் மீது அழுத்தமான பார்வையை செலுத்தியவர் , மாயாவை அழைத்து குழந்தைக்கு உணவூட்டுமாறு கூறிக் கொண்டிருக்கையில் தான் புயல் போல உள்ளே நுழைந்தான் அவன்.
“பரத்”
அவனைக் கண்டதுமே ஷோபா, ரோஷினி இருவரும் ஒரே நேரத்தில் அவனது பெயரை உச்சரிக்க, அவனை இந்நேரத்தில் இங்கு எதிர்ப்பார்க்கவில்லை என அவர்களது முகத்திலேயே தெரிந்தது.
ஆடம்பரமான அந்த மாளிகையில் குண்டூசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் அளவுக்கு அப்படி ஒரு அமைதி நிலவியது. பரத் ரோஷினியை தான் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். பதிலுக்கு அவளும் முறைக்கத் தவறவில்லை.
“இப்போ எதுக்கு இங்கே வந்திருக்க?” வேண்டா வெறுப்பாய் ஷோபா கேட்டார்.
“நான் ஒன்னும் கொஞ்சிக் குழாவ வரவில்லை மாம்.” அந்த ‘மாம்’ என்ற வார்த்தையில் சற்று அழுத்தம் கொடுக்க அவரது பார்வை ஒரு கனம் அவனை பார்த்து மீண்டது.
“பின்னே எதுக்கு வந்திருக்க?” பொறுமையின்றி வினவ,
அவரது கேள்விக்கு பதில் கூறாமல் ரோஷினியின் பக்கம் திரும்பி அவளை முறைத்தான்.
“உனக்கு ரொம்பவும் திமிர்டி. என் குழந்தைய அடிக்கிற அளவுக்கு தைரியம் வந்துருச்சா?” என்றவனைக் கண்டு கோபம் கொண்டவளாய்
“அது என்னோட குழந்தை அதை எப்படி வளர்க்கனும்னு எனக்கு தெரியும். இதில் நீ தலையிடாதே.” கோபம் கொண்டு கத்தினாள்.
அவளது இந்தப் பேச்சு பரத்தை ஆத்திரப்படுத்தியது. வேகமாய் அவள் அருகில் நெருங்கியவன் அவள் தாடையை அழுத்தமாக பற்றினான்.
“நான் தான் அவளுக்கு அப்பா அதை மறந்துடாதே. எனக்கு எல்லா உரிமையும் இருக்கு புரிஞ்சதா?” வார்த்தைகள் கோபமாய் வெளிவந்ததன.
“ஓ.. அனன்யாவுக்கு நீ தான் அப்பாவா?” அவள் உதடுகள் இகழ்ச்சியாக வளைந்தன.
“நீ சொன்னதை எல்லதை நீயே மறந்துட்டியே பரத். குழந்தைக்கு அப்பா ருத்…”அவள் கூறி முடிக்கும் முன்னரே,
“ஏய்..” அவன் கையை ஓங்கி விட்டான்.
“பரத்” என்று பல்லவியும் ஏக நேரத்தில் சத்தமிட, ஓங்கிய கையை கீழிறக்கினான்.
அதற்கு மேல் அவனுக்கு வார்த்தை வரவில்லை. தலையை அழுந்தக் கோதிக் கொண்டான். அவளது இளக்கார பார்வை வேறு அவனை ஆத்திரப்படுத்தியது.
மாயாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்த குழந்தையின் பக்கம் திரும்ப, குழந்தையோ அவனை யாரோ? என்பதை போல் பார்த்துக் கொண்டிருந்தது. இதை அவன் என்ன மாதிரி உணர்ந்தான் என்பது அவனுக்கே தெரியவில்லை.
அந்நேரம் “பரத்” என உரிமைக் குரலில் அவனை அழைத்தவாறு அரைகுறை ஆடையுடன் உள்ளே வந்தாள் அல்ட்ரா மாடர்ன் பெண்ணொருத்தி. அவளை கண்டதும் ரோஷினியின் கண்கள் வெறுப்பை சிந்தின.
ஷோபாவுக்கோ வந்தவளை கண்டதும் ‘ இவள் எதற்கு இங்கே வந்தாள்?’ அவளை வெளிப்படையாகவே முறைந்தார்.
உள்ளே நுழைந்தவள் நேரே பரத்தின் அருகில் சென்று,
“பரத் எவ்வளவு நேரமா காரிலேயே வெயிட் பண்றது. டாட் வேற கால் பண்ணிட்டே இருக்காரு. பார்ட்டிக்கு நேரமாச்சு.” என அவள் கைகளை கட்டிக் கொண்டாள் நிரூபமா.
இப்படி அவள் உள்ளே நுழைவாள் என அவனும் எதிர்ப்பார்க்கவில்லை. ரோஷினிக்கும் ஷோபாவுக்கு அவளை ஏற்கனவே தெரிந்திருந்தாலும் அவள் இப்படி வீட்டினுள் நுழைந்தது பரத்திற்கு பிடிக்கவில்லை. அதுவும் அவன் தற்போதிருக்கும் மனநிலையில் அவனது குழந்தையின் முன் அவள் இவ்வாறு நடந்து கொள்வது அவனை எரிச்சல் படுத்தியது.
அவள் பிடித்திருந்த தன் கையை உதறிவிட்டு, அவளை முறைத்தான்.
ஷோபாவால் இதை சகித்துக் கொள்ள முடியவில்லை. பொறுமையிழந்தவராய்,
“பரத் கண்டவளையெல்லாம் இந்த வீட்டுக்குள்ள அனுமதிக்க முடியாது. இன்னொரு தடவை இவ இந்த வீட்டுக்குள்ள வரக் கூடாது.” கட்டளையாக வெளியே வந்தது ஷோபாவின் வார்த்தைகள். அவரது குரலில் கம்பீரம் குறையவில்லை.
அவனுக்குமே அவள் வந்தது பிடிக்கவில்லை.
“நிரூபமா இங்கே ஏன் வந்த? காருக்கு போ.” மெதுவாக கூறினாலும் அதில் அழுத்தம், கோபம் நிறைந்திருந்தது. நிரூபமாவோ அவமானத்தில் முகம் கறுக்க, ரோஷினியையும் பல்லவியையும் கண்களாலே குதறி விடுபவள் போல முறைத்துக் கொண்டு வெளியேறினாள்.
அவள் வெளியே சென்றதும் அவர்களை பார்த்தான்.
“உங்களுக்கு பயந்து தான் இதை செஞ்சேன்னு நெனைக்காதீங்க. என் பொண்ணு பார்த்துட்டு இருக்கா அந்த ஒரே காரணத்துக்காக மைண்ட் இட்.” என்றவன் வாயிலை நோக்கி நடந்தவன் திரும்பி ரோஷினி அருகில் வந்து,
“இனியொரு தடவை என் குழந்தை மேல் கை வச்ச நடக்க முடியாம இருக்குற உன்னை மூச்சு விட முடியாம பண்ணிடுவேன்” எச்சரித்தவன் மாயாவின் கைகளிலிருந்த குழந்தையை வாங்கி முத்தமிட்டவன் திரும்பியும் பாராது சென்று விட்டான்.
***
தனது வேலைகளை முடித்துக் கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியே வந்தாள் சிந்து. மழை வேறு பலமாக பெய்து கொண்டிருக்க, மழை குறைந்ததும் வருவதாக குறுந்தகவல் அனுப்பி விட்டு தெருவோரமாக இருந்த பஸ் நிறுத்தத்தின் பெஞ்சில் அமர்ந்து கொண்டாள்.
அந்த ரௌடியுடன் தாமிரா என்ன பாடு படுகிறாளோ? என தோழியை பற்றிய சிந்தனையில் மூழ்கியிருந்தவளை கலைத்தது அவளுடன் பணிபுரியும் சக மருத்துவனான அன்பரசனின் குரல்.
“ஹாய் டாக்டர் வீட்டுக்கு கிளம்பாம என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்று உற்சாகமாக அவள் அமர்ந்திருந்த பெஞ்சின் மறு ஓரத்தில் அமர்ந்து கொண்டான். ஜாடிக்கேத்த மூடி என்பார்களே அது போல தான் இவனும் சிந்துவுக்கேற்ற ஜோடியும் கூட.
இந்த இருவரும் சேர்ந்தால் போதும் வாய் மூடாமல் எதையாது பேசிக் கொண்டே இருப்பார்கள். அப்படியொரு பொருத்தம். இந்த இருவருக்கும் நடுவில் அடிக்கடி சிக்கிக் கொள்வது இந்த தாமிரா தான். சிந்துவும் அன்பரசனும் ஒன்றாக இருப்பதை கண்டாலே காத தூரம் ஓடி விடுவாள். ‘லொட லொட’ என்று கதைப்பதில் இவர்களுக்கு நிகர் இவர்கள் இருவருமே தான்.
அன்பரசனை கண்டதும் அவனது உற்சாகம் அவளையும் தொற்றிக் கொள்ள,
“மகாராணியை அழைச்சிட்டு போக பல்லக்கு கொண்டு வர சொல்லியிருக்கேன்.” என்று சீரியஸ் போல தெருவை நோட்டமிடுவது போல் பாவ்லா செய்ய,
“உனக்கு மகாராணின்னு வேற நெனைப்போ? நெனைப்பு தான் பொழைப்பை கெடுக்குமாம்” என சிரித்துக் கொண்டே அவள் தலையில் கொட்ட அவளும் சிரித்தாள்.
அவர்கள் சிரித்துக் கதைத்துக் கொண்டிருந்த அதே நேரம் அந்த பஸ் நிறுத்தத்தின் முன் வேகமாக வந்து நின்றது ஒரு. அது வந்து நின்ற வேகத்திலேயே சிந்துவும் அன்பரசனும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர்.
“ஒரு உன் மகாராஜா பல்லக்குக்கு பதிலா இந்த காரை அனுப்பி இருப்பாரோ?” என் அவளை கேலி செய்ய,
“என் மேல் இருக்குற லவ்வுல இந்தக் காரை அனுப்பியிருந்தாலும் அனுப்பியிருக்கலாம்.” அவளும் கேலி போல் அவனிடம் கூறிக் கொண்டிருந்தவள், அதிலிருந்து இறங்கியவனை கண்டதும் அவளது கண்கள் அகல விரிந்தன.
“ஆத்தி அண்டர்டேக்கர்.” என்றாள் பதற்றத்துடன். அது அன்பரசனது காதுகளுக்கும் நன்றாக கேட்டது. வந்தவன் நேரே சிந்துவிடம் சென்றான்.
“வா போகலாம்” என்றான். அவள் குழப்பத்துடன் அவனை பார்த்து விட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“உன்னை தான் சொன்னேன்.” என்றான் அழுத்தமாக.
தான் காண்பது கனவா? நனவா? அவளுக்கே புரியவில்லை. இவன் என்ன தன்னை அழைக்கிறான்? அவளுக்கு ஒரே குழப்பம்.
சிந்துவின் மிரண்ட விழிகளை கண்டு,
“இவர் யார் சிந்து?” என புரியாமல் வினவ,
“நீ இப்போ வர போறீயா இல்லையா?” எரிச்சலுடன் கத்தியவன், அவளை நெருங்கினான். யார் கண்களுக்கும் உறுத்தாத வண்ணம் தன் துப்பாக்கியை எடுத்தவன் அவள் முதுகுக்கு பின்னே சென்று இடையில் அழுத்தி வைத்தான். அவள் அதிர்ந்தாள். மங்கலான வீதி விளக்கொளியின் காரணமாக முன்னால் நின்ற அன்பரசன் கண்களுக்கு கூட தெரியவில்லை.
“வீணா சீன் க்ரியேட் பண்ண ட்ரை பண்ணாத. வாயை மூடிக்கிட்டு வந்து வண்டியில ஏறு.” அவள் காதருகே குனிந்து அவளுக்கு மட்டுமே கேட்கும் குரலில் கூற அவள் உடல் வெடுவெடுத்தது.
“நோ நான் வர மாட்டேன் போடா” என்றாள் தன் பயத்தை வெளிக்காட்டாமல். மெல்லிய குரலில்.
துப்பாக்கியை காட்டி மிரட்டினாலும் இவளது வாய் நீளம் குறையவில்லையே. இவளை இப்படியே சுட்டுத் தள்ளினால் தான் என்ன? இவளை பாதுகாப்பாக வேற அழைத்து வர வேண்டுமாமே. எல்லாம் இந்த ருத்ரனால் வந்தது.
“நீ உன் ஃபிரண்டை உயிரோட பார்க்கனும்னு ஆசையிருந்தா வா.” கடித்த பற்களுக்கிடையில் அமரின் வார்த்தைகள் வெளிவந்தன.
அவ்வளவு தான் அவனது வார்த்தையில் அவள் உண்மையிலேயே பயந்து போனாள்.
‘வேறு வழியில்லை இப்போதைக்கு இவனுடன் சென்று தான் ஆக வேண்டும். அப்படியே வாலாட்டினாலும் இருக்கவும் இருக்கிறதே பெப்பர் ஸ்ப்ரே. இந்த சிந்துவை யார் என்று நினைத்து விட்டான் முட்டாள்.
யாரும் எதிர்பாராத நேரம் அவன் கைகளை தன் கைகளுடன் இறுக்கமாக பிணைத்தவாறு நெருக்கமாக நின்றாள். முயன்று வர வழைத்த புன்னகையுடன் அன்பரசன் பக்கம் திரும்பி,
“இவர் தான் நான் சொன்னேன்ல மகாராஜா மை ராஜா.” என்றாள் இலகுவாக.
அவளது செய்கையில் அமருக்கோ அதிர்ச்சி. கூடவே அன்பரசனுக்கும் தான்.
“என்ன அன்பு இப்படி ஷாக் ஆகிட்ட? எங்களுக்குள்ள சின்ன சண்டை இப்போ சரியாகிருச்சு. இல்லையா அமர்?” பற்கள் மின்ன அமரை திரும்பிப் பார்த்து சிரித்தாள். அவனோ அவளை முறைத்தான்.
‘ஆள் ஒன்னும் அவ்வளவு மோசமில்லை. ஆனா பிரம்மாண்டமா இருக்கானே.” அமரின் தோற்றத்தை கண்டு அவனால் வியக்காமல் இருக்க முடியவில்லை. சிந்துவுடன் நின்றிருந்த அமரை மேலும் கீழுமாக பார்த்தான்.
அதற்குள் சிந்து, “அன்பு உன் போன்ல இந்த லவ் பேர்ட்ஸை ஒரு போட்டோ எடு” என்று அமரை பார்த்து’ ஈ ‘என்று இழித்து வைத்தாள்.
அமருக்கோ பொறுமையில்லை. இழுத்து வைத்த பொறுமையுடன் நின்று கொண்டிருந்தான். வேறு வழியில்லை. இது ருத்ரனது கட்டளை. மருத்துவமனை வளாகம் என்பதால் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் இருக்கக்கூடும். இப்போதைக்கு எந்த பிரச்சினையும் கூடாது. அதனால் தன்னை முயன்று கட்டுப்படுத்தி நின்றிருந்தான். அதற்குள் அன்பரசனது செல்போன் இருவரையும் படம்பிடித்திருந்தது.
சிறிதும் சிரிப்பின்றிய அவன் முகமும், பஞ்சமே இல்லாமல் சிரித்து வைத்திருக்கும் சிந்துவின் முகத்தையும் போட்டோவில் பார்த்ததும் ‘இந்த படபட பட்டாசுக்கு இப்படி ஒரு உம்முனா மூஞ்சி லவ்வரா? எங்கிருந்து பிடிச்சாளோ?’ அவனையும் மீறி அவனுள் அந்த கேள்வி உதிக்கத் தான் செய்தது. அன்பரசனை பார்த்து அறிமுகத்திற்கு கூட சிரிக்கவில்லையே.
“அன்பு அந்த போட்டோவை எனக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிடு. ஓகே சீ யூ.” அவனிடம் விடை பெற அவனும் சிநேகமாய் தலையசைத்து வைத்தான்.
“இப்போ கிளம்புவோமா டார்லிங்.” அமரை பார்த்து கேலியாக சிரித்தவள், அவன் கை கோர்த்தபடியே காரை நோக்கி நடந்தாள். கார் அருகில் சென்றதும் அவளை பிடித்து தள்ளாத குறையாக காரினுள் தள்ளி விட்டான். அவள் மீது அவனுக்கு அத்தனை ஆத்திரமாக வந்தது. இவ்வளவு நேரம் ருத்ரனுக்காக தான் அமைதி காத்தான்.
“இடியட் என்ன நீ உன்னிஷ்டத்துக்கு நடந்துக்குற? உனக்கு என்ன வேணும்? என்னை எங்கேடா கடத்திட்டு போற? ” அவனிடம் கோபமாய் பொங்கினாள்.
ஏற்கனவே அவளது செய்கையில் கடுப்பில் இருந்தான். கடத்திக் கொண்டு போகிறானாமா? அவளது பேச்சில் எரிச்சலடைந்தான். “ஷட் அப்.” சீறியவன் காரை கிளப்பினான் அமர்.
அதற்கெல்லாம் அடங்குபவளா அவள். அப்படியெல்லாம் அஞ்சி அடங்கிப் போனால் அது சிந்துவே இல்லையே. தன் கைப்பையிலிருந்த பெப்பர் ஸ்ப்ரேயை தடவிப் பார்த்தாள். அவள் உதட்டில் நமட்டுப் புன்னகை தோன்றி மறைந்தது.
***
மலைப் பகுதியை ஒட்டிய ஆள் அரவமற்ற வனப்பகுதி. வானில் திரண்டிருந்த கார் மேகக் கூட்டங்களும், நெருக்கமாய் வளர்ந்திருந்த காட்டு மரங்களும் அன்றைய பௌர்ணமி நிலவின் ஒளியையும் சுத்தமாக வற்றிப் போக வைத்திருந்தன. மெலிதாக படர ஆரம்பித்திருந்த பனி காற்றின் ஈரத்தை சற்று அதிகரிக்க வைத்திருந்தது.
அடர்ந்த மரங்களுக்கிடையே சென்ற அந்த குறுகலான ஒற்றையடி மலைப்பாதையில் ருத்ரனும் தாமிராவும் மெல்ல நடந்து சென்று கொண்டிருந்தனர். அடர்த்தியாக வளர்ந்திருந்த மரங்கள். ஆங்காங்கே முளைத்திருந்த முட்புதர்கள். அந்த முட்புதர்களை அனிச்சை செயலாய் கை கொண்டு விலக்கியவாறே அந்த மலைச்சரிவில் அவன் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டே இறங்கிக் கொண்டிருந்தாள்.
மசமசப்பான வெளிச்சத்துடன் மரங்களின் பிம்பங்கள் மட்டுமே ஆங்காங்கே அடர்ந்து தெரிந்தன. கையிலிருந்த டார்ச்சால் இருட்டுக்குள் வெளிச்சக் கீற்றை பாய்ச்சியவாறே நடந்தான் முன்னால் ருத்ரன். அவனுடன் பதுங்கிப் பதுங்கி நடந்த தாமிராவின் இருதயமோ ‘திக் திக் திக்’ என்று பதறிக் கொண்டிருந்தது. சூழ்நிலையை சுற்றிலும் ஓர் அமானுஷ்ய நிசப்தம். காய்ந்த சருகுகள் மீது அவர்கள் காலடி பதிகிற சத்தம் மட்டுமே.
அந்த சறுகலான பாதை வழியே கீழிறங்கி சமதரை ஒன்றுக்கு வந்திருந்தனர். ஓடி ஓடி களைத்திருந்த அவள் மனமும் உடலுல் வெகுவாக சோர்ந்து போயிருந்தது. அவள் கால்கள் நகர மறுத்தன. அவளுக்கு ஓய்வு தேவை பட்டது. அவனை பற்றியிருந்த தன் கையை விடுவித்தாள்.
“எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு போலாமே?” என்று அவன் முகத்தையே பார்த்திருந்தாள்.
அதற்கெல்லாம் இப்போது நேரமில்லை. என்று கூறி விட எண்ண அவள் முகத்தில் தெரிந்த சோர்வினை கண்டு ‘சரி’ என்பதாக தலையாட்டினான். அங்கிருந்த ஒரு சிறிய கற்பாறையின் மீது அமர்ந்து கொண்டாள்.
சில மணி நேரங்களுக்கு முன் அந்தத் தடியர்களின் காலடிச் சத்தம் கேட்டு ருத்ரன் இவளை காட்டுப் பகுதிக்குள் இழுத்துச் சென்று மறைந்தான். எவ்வளவு நேரம் தான் இப்படியே ஓடிக் கொண்டிருப்பது. இவனுடன் சேர்ந்து தானும் எதற்கு ஓடுகிறோம் என்று அவளுக்குப் புரியவில்லை.
இங்கு வந்ததிலிருந்தே அவளுக்கு நடந்த அனைத்துமே அவள் இயல்புக்கு சற்றும் பொருந்தாதவை. ஏன் இது போன்ற பிரச்சினைகளிலே அடிக்கடி சிக்கிக் கொள்கிறோம்? அதுவும் இவனிடம். அவளுக்கு சம்பந்தமே இல்லாத விடயங்களில் தான் சம்பந்தப்பட்டிருப்பதை அவள் விரும்பவில்லை. அவனுக்கும் இவளுக்கும் எந்த விதத்திலும் சம்மந்தமே இல்லை. தந்தையை எண்ணி மேலும் கலங்கினாள். அவளையும் மீறி நடந்து கொண்டிருக்கும் இத்தகைய சூழ்நிலையை அவள் அறவே வெறுத்தாள்.
தாமிராவின் சிந்தனையோட்டம் இப்போது வெகுவாக சிதைந்து போயிருந்தது. மூளைக்குள் வெட்டிய குழப்ப மின்னல்களால் அவளது முகம் வெளிரிப் போய் கிடந்தது. அவளுடைய கண்களில் இனம்புரியாத ஒரு பயமும் மிரட்சியும்.
“ஏன் இப்படி இருக்க?” அவள் மிரண்ட விழிகளை கண்டு கேட்டான்.
“ஆங்..எப்படி இருக்கேன்?” பதிலுக்கு கேட்டாள்.
“ஒரு மாதிரி டென்ஷனா பயந்த மாதிரி தெரியுற.”
“வேற எப்படி இருக்க சொல்றீங்க? இந்த சிச்சுவேஷன்ல குதிச்சு குத்தாட்டம் போடணுமா? இங்கே என்ன நடக்குது? எதுக்கு ஓடுறேன்னு தெரியாமலே உங்க கூட ஓடிட்டு இருக்கேன். உங்களை துரத்திட்டு வர்றவங்க இப்போ என்னையும். சம்பந்தமே இல்லாம உயிரைக் கையில் பிடிச்சுட்டு ஓடுறேன். ச்சே” படப்படவென பொறிந்தாள். அதற்குள் அவளுக்கு ‘உஸ் புஸ்’ என்று மூச்சு வாங்கியது.
அவன் அவளையே அமைதியாக பார்த்திருந்தான். அவளது ஒவ்வொரு அசைவையும் உன்னிப்பாக கவனித்து கொண்டு தான் இருந்தான்.
“அவங்க எல்லாம் யாரு? ஏன் உங்களை துரத்துறாங்க? உங்களை கொலை செய்ற அளவுக்கு நீங்க என்ன தப்பு செஞ்சீங்க? ஆளாளுக்கு துப்பாக்கி வச்சிருக்கீங்களே. நீங்க கேங்க்ஸடரா?’ அடுக்கடுக்கான அவள் கேள்விகளில் அவள் இறுதியாக கேட்ட ‘நீங்க கேங்க்ஸ்டரா?’ என்ற கேள்வியில் அவன் நெற்றி சுருங்கி விரிந்தது.
குழப்பத்துடன் ஏறிட்டவளை ஆராய்ச்சியாக பார்த்தான். பின்பு அவளுக்கு எதிராக அமர்ந்தான்.
“தப்பு செஞ்சா தான் துரத்தனுமா? ஒரு வேளை துரத்துறவங்க கூட தப்பானவங்களா இருக்கலாம். நீ ரொம்ப குழம்பி போயிருக்க. எதை பத்தியும் யோசிக்காம ரெஸ்ட் எடு.” என்று அவளது பயத்தை விலக்கிடும் நோக்கில் தன்மையாக எடுத்துக் கூறியவன், கற்பாறையில் சாய்ந்தமர முற்பட அவன் தோள்பட்டையிலிருந்த காயம் பட்டு வலித்தது.
“ஸ்.. ஆஆ..”
“அச்சோ வலிக்குதா?” எதையும் யோசிக்காமல் அவனருகில் வந்து காயத்தை ஆராய முற்பட்டாள். அவளது கேள்விகள் மனக்குழப்பத்தையும் மறந்து.
“நத்திங்” அவளை தடுக்க முயன்றான்.
அதையெல்லாம் அவள் காது கொடுத்து கேட்டாள் தானே. தனது செல்ஃபோன் டார்ச்சை ஒளிர விட்டவள் அவனது காயத்தை பார்த்திட எண்ணி அவசர அவசரமாக அவனது சட்டையின் பட்டனை கழற்றிக் கொண்டே சென்றாள்.
அவன் முகத்துக்கு மிக அருகாமையில் அவளது முகம். அவனது சூடான மூச்சுக் காற்று அவள் மீது மோதியது. அதில் அவள் என்ன மாதிரி உணர்ந்தாளோ சட்டென கைகளை எடுத்து விட்டாள்.
“சாரி.. நா.. நான் வேணும்னு செய்யலை. உங்க காயத்தை செக் பண்ணலாம்னு தான்..” திக்கித் திணறினாள்.
அவளது திணறல் கூட அவனுக்கு சுவாரஸ்யமாக தெரிந்ததது. “இதுக்கு ஏன் இவ்வளவு டென்ஷன்? வெயிட்” என்று தனது சட்டையின் பட்டன்களை கழற்றினான்.
இத்தனை நாள் அவன் காயத்திற்கு மருந்திடும் போது இல்லாத தயக்கம் ஏனோ இன்று அவளை தொற்றிக் கொண்டது. அவனது கட்டிடப்பட்ட காயத்தை மெதுவாக ஆராய்ந்தாள். லேசான இரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது.
அந்தத் கட்டை மெதுவாக பிரித்தாள். அவள் முதுகோடு மாட்டியிருந்த பையிலிருந்து அதற்கு தேவையான மருந்துகளை எடுத்தாள்
“இந்த பேக் எப்படி வந்துச்சு?” அவனே அப்போது தான் அந்த பையை பார்க்கிறான். இவ்வளவு நேரம் அதை அவன் கவனிக்கவே இல்லை.
“அது வந்து.. நீங்க கிளம்புனு சொல்லிட்டீங்க எங்கே? எதுக்குனு ஒன்னுமே சொல்லலையா? நீங்க கூப்பிட்டதுமே உங்களுக்கு தேவையான மெடிசின்ஸை மட்டும் எடுத்துக்கிட்டேன். அப்படியே வாட்டர் போட்டிலையும்.” மருந்திடுவதில் குறியாக இருந்தாள்.
“அந்த கேப்பிலயும் பிக்னிக் போற மாதிரி வந்து இருக்கியே..” அவளை பார்த்து கேலியாக கூறினாலும் அந்த அவசர நேரத்திலும் அவன் மீதான பற்றிய அவளது கரிசனையை எண்ணி வியக்காமலில்லை.
அந்நேரம் ருத்ரனது செல்போன் ‘கிர் கிர் கிர்’ என்று அதிரந்தது. அவ்விடத்தை விட்டும் சில அடி தூரத்திற்கு நகர்ந்தவன் அழைப்பை ஏற்றான். அவளுக்கிருந்த குழப்பம் மீண்டும் அவளை அலைக்கழிக்க துவங்கியது. அந்த குழப்பத்துடனே கற்பாறையின் ஓரமாக கண்மூடி அமர்ந்திருந்தவளை அறியாமலே உறக்கம் தழுவிக்கொண்டது.
ஃபோனை அணைத்து விட்டு அந்த இடத்திற்கு வர அவள் உறங்கியிருந்தாள். அவளிடமிருந்து சீரான மூச்சு வெளி வந்து கொண்டிருந்தது. குளிரில் சுருண்டு சாய்ந்து உறங்கியிருந்தவளின் தலைக்கு கீழ் அவளது பையை தலையனை போல் வைத்தான். அவனது ஜாக்கெட்டை கழற்றி அவள் மீது போர்த்தி விட்டான். எந்த வித ஒப்பனையுமின்றிய பெண்ணவளின் முகம் அந்த பௌர்ணமி நிலவின் ஒளியில் ஜொலித்தது. அவன் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் உள்ளத்தில் உதித்த ஏதேதோ எண்ணங்களில் சட்டென்று எழுந்து விட்டான். அவன் மனதை கட்டுக்குள் கொண்டு வந்தான். அதெல்லாம் இவனுக்கு சாதாரண விடயம் தான். ஆனால் இது அவன் வாழ்க்கைக்கு பொருந்தாத ஒன்று. அது அவன் லட்சியத்திற்கு தடையாக அமையலாம். அதை அவன் இன்னொரு விதமாகவும் யோசிக்கத் தவறவில்லை. அதை ஏன் தடையாக கருத வேண்டும்? அதையே அவனுக்கு சாதகமாக அமைத்துக் கொண்டால் தான் என்ன?. அவனது மூச்சுக் காற்றின் வெப்பம் கூடிப் போயிருந்தது. புருவங்கள் முடிச்சிட யோசனையில் ஆழ்ந்தான் ருத்ரன்.