Poo02

நல்ல தூக்கத்தில் இருந்தாள் பல்லவி. நேற்றைய இடைவிடாத நிகழ்வுகளால் உடம்பில் சோர்வு மேலிட கட்டிலில் சாய்ந்தவுடனேயே தூங்கிப் போயிருந்தாள். நிம்மதியான உறக்கம் மட்டுமே இப்போது அவளுக்குப் புத்துணர்ச்சியை அளிக்கும்.

 

தன் கன்னத்தில் உணர்ந்த குளிர்ந்த ஸ்பரிசத்தில் லேசாகக் கண்களைத் திறந்தாள். எதிரில் மாதவன் நின்று கொண்டிருந்தான். சட்டென எழுந்து அமர்ந்துவிட்டாள்.

 

ஏழு மணி.”

 

ஓ… ஸாரி. இவ்வளவு நேரம் தூங்க மாட்டேன்.‌ என்னன்னு தெரியல்லை…” அவள் குரலில் குற்றவுணர்ச்சி.

 

பரவாயில்லை… இன்னைக்கு ஒரு நாள்தானே.”

 

அப்படி யாரு சொன்னா?’ வாய்வரை வந்த வார்த்தைகளை விழுங்கிக் கொண்டாள் பெண். நேற்று இரவு பேசியது அதிகமோ என்று இப்போது எண்ணம் வந்தது. 

 

அவன் தரப்பு தவறே என்றாலும் முதலிரவில் ஒரு மனைவி போலத் தான் நடந்து கொள்ளவில்லை என்று அவள் மனசாட்சியே அடித்துச் சொன்னது. 

 

ப்ரஷ் பண்ணுற ஐடியா இல்லையா?” அவளையே பார்த்திருந்த மாதவன் கேட்டான்.

 

இதோ…” சட்டென்று எழுந்து விட்டாள் பல்லவி. எதிரில் நிற்பவனை நிமிர்ந்து பார்க்கச் சங்கடமாக இருந்தது. தப்பு செய்தது அவன். நான் எதற்குக் குழம்பிப் போகிறேன்? குளியலறைக்குள் அவள் போக நிதானமாக நாற்காலியில் அமர்ந்தான் மாதவன்.

 

முகத்திலிருந்து எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. பெண் குளித்து முடித்துவிட்டு வெளியே வந்தபோது கையில் புத்தகத்தோடு அமர்ந்திருந்தான் கணவன். தலையைத் துவட்டி பின்னல் போட்டுக் கொண்டவள் மேலே என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே நின்றிருந்தாள்.

 

கீழே போகலாமே.” இது மாதவன். பெண்ணும் தலையாட்டிக் கொண்டாள். சொல்லப்போனால் மாதவன் ஐந்து மணிக்கே எழுந்து உடற்பயிற்சியை முடித்துவிட்டுக் குளித்துவிட்டான். இருந்தாலும் கீழே போகவில்லை.

 

திருமணமான அடுத்த நாளே தன் மனைவி தூங்கிக் கொண்டிருக்க அவன் கீழே போவது அத்தனை அழகாகத் தெரியவில்லை அவனுக்கு. அதை அந்த கிராமத்து மனிதர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

 

ஆனால் இவற்றையெல்லாம் இவளிடம் எப்படிச் சொல்வது? இப்போதே இந்தக் கல்யாணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்று அத்தனை ஆணித்தரமாகச் சொல்கிறாள். இப்போது இதையும் சொன்னால் இதற்குத்தான் உன் பட்டிக்காடே வேண்டாமென்றேன் என்று சொன்னாலும் சொல்லுவாளே!

 

புத்தகத்தை மூடி வைத்தவன் இப்போது கீழே இறங்கி வந்தான். சமையற்கட்டில் பல்லவி தன் அம்மாவோடு நிற்பது தெரிந்தது. மகனின் தலைத் தெரியவும் மருமகளிடம் காஃபியைக் கொடுத்துவிட்டார் பவானி. 

 

தேங்க்ஸ்.‌ நீ சிரமப்படுத்திக்காத பல்லவி. எப்பவும் இதையெல்லாம் யார் பண்ணுவாங்களோ அவங்களையே பண்ணச் சொல்லி அம்மாக்கிட்டச் சொல்லு.” காஃபியை வாங்கிப் பருகியபடி சொன்னான் மாதவன்.

 

எனக்கு இது சிரமம்னு எப்ப உங்ககிட்ட நான் சொன்னேன்?” கேள்வி சட்டென்று வந்துவிட்டது.

 

ஓஹ்… சொல்லலியோ?”

 

இல்லை.”

 

அப்போச் சரி.” அவன் முகத்தில் இப்போது புன்னகை. இவன் எதற்கு இப்போது சிரிக்கிறான்? நான் காஃபி குடுத்தால் ஐயா குடிக்கமாட்டாராமா? அவள் மனம் எல்லாவற்றிற்கும் சண்டித்தனம் பண்ணியது. சிறுபிள்ளைப் போல நடந்து கொள்கிறோமோ!? எண்ணத்தைத் துடைத்தெறிந்தவள் அவன் வைத்த காலிக் கோப்பையை எடுக்கப் போனாள்.

 

பல்லவி!” அவன் அழைக்கவும் அண்ணார்ந்தாள். பெயர் வைத்தவன் போல அவன் குரலில் அத்தனை உரிமை.

 

அதை மத்தவங்க செய்வாங்க. நீ எங்கூட வா. அப்பாவைப் பார்த்துட்டு வந்தர்லாம்.” தலையாட்டியவள் அவனோடு கூட நடந்தாள். வீட்டின் கீழ்ப்பகுதியில் இருந்த அறைகளில் ஒன்றில் சோமசுந்தரம் தங்கி இருந்தார். 

 

உடம்பிற்கு முடியாமல் போனதிலிருந்து மனிதரை யாரும் எந்த வேலையும் செய்யவிடவில்லை. அதற்காகப் படுத்த படுக்கையாக எல்லாம் இருக்கவில்லை. ஓய்வாக ஒரு நாற்காலியில் புத்தகமொன்றைப் படித்தபடி இருந்தார். பல்லவியைப் பார்த்தபோது அவர் முகம் மலர்ந்து போனது.

 

பல்லவிம்மா…”

 

மாமா…” வாஞ்சையாக அழைத்த மனைவியைச் சட்டென்று திரும்பிப் பார்த்தான் மாதவன். அவனொருவன் இருப்பதையே மறந்தவள் போல சோமசுந்தரத்திடம் போனவள் அவர் கையைப் பற்றிக் கொண்டாள். மாதவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

 

எப்படி இருக்கீங்க மாமா?”

 

நல்லா இருக்கேம்மா. உனக்கு எல்லாம் இங்கே சௌகரியமா இருக்கா?” அந்த ஆதரவான கேள்வியில் பெண்ணிற்கு லேசாகக் கண்கள் பனித்தது.

 

ஒன்னுமில்லைம்மா… புதிய இடமில்லையா. கொஞ்சம் ஆரம்பத்துல கஷ்டமாத்தான் இருக்கும். போகப்போக எல்லாம் சரியாப் போயிடும்.” மருமகளின் தலையைத் தடவிக் கொடுத்தபடி மனிதர் பேச தலையை உருட்டியபடி நின்றிருந்தாள் பெண். 

 

ஏதோ பள்ளிக்கூடத்திற்கு முதல் முதலாகப் போகும் சின்னப் பிள்ளைப் போல அவள் நின்றிருந்த கோலம் மாதவனுக்கு வியப்பாக இருந்தது. அவளை அள்ளியணைத்து ஆறுதல் வார்த்தைகள் சொல்ல அவன் மனது தவித்தது. ஆனால் குறுக்கே வேலி போடுபவளை என்ன செய்வது?

 

தம்பீ…”

 

அப்பா.”

 

நல்லாப் பார்த்துக்கணும்பா. தியாகராஜனுக்கு பல்லவிமேல அவ்வளவு பாசம். பார்த்துப் பார்த்து வளர்த்தான்.”

 

சரிப்பா.” அப்பா மகனின் உரையாடல் நறுக்குத் தெறித்தாற்போல இருந்தது. பல்லவி அதிசயமாக அதைக் கவனித்துக் கொண்டாள். அவர்கள் வீடு இப்படியில்லை. அவள் அப்பா பிள்ளைகளிடம் அவ்வளவு குதூகலமாகப் பழகுவார். ஞாயிறு வந்துவிட்டால் வீடு அமர்க்களப்படும்.

 

வீட்டுக்குப் போகணும்போல இருந்தாத் தயங்காமச் சொல்லணும் பல்லவி. நேரா மாமா ரூமுக்கு வந்து என்ன வேணுமோப் பேசலாம் கேக்கலாம், புரியுதா?”

 

சரி மாமா. ஏன் மாமா? கொஞ்ச நாள் வீட்டுப் பக்கமே வரலியே நீங்க. என்னாச்சு?”

 

நான் வரும்போதெல்லாம் நீ வீட்டுல இருக்கலைம்மா. வேலைக்குப் போக ஆரம்பிச்சிருந்தே இல்லை?”

 

இருந்தாலும் கொஞ்ச நேரம் அதிகமா இருந்திருந்தா எங்களையெல்லாம் பார்த்திருக்கலாம் இல்லை?”

 

வாஸ்தவம்தான். உடம்பு நல்லா இருந்தப்போ கடைசி பஸ்ஸைப் பிடிப்பேன். போகப்போக முடியலைம்மா. அதால வேலை முடிஞ்சுதுன்னா உடனேயே கிளம்பிடுவேன்.”

 

அப்பா சொன்னாங்க. ஒரு நாள் மாமாவை எங்க இந்தப் பக்கம் காணலேன்னு கேட்டேன். அப்போதான் உடம்புக்கு முடியலைன்னு சொன்னாங்க.”

 

அடப் பரவாயில்லையே! அப்போப் பல்லவி இந்தக் கிழவனைத் தேடி இருக்கா.” சோமசுந்தரம் வாய்விட்டுச் சிரிக்க அவரோடு பற்கள் தெரியப் புன்னகைக்கும் தன் இளம் மனைவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் மாதவன்.

 

அப்பா… கோயிலுக்குப் போகணும்.”

 

சரி தம்பி, போயிட்டு வாங்க. சாப்பிட்டீங்களாம்மா?”

 

இன்னும் இல்லை மாமா.”

 

சரி, சாப்பிட்டுட்டுக் கிளம்புங்க.” இருவரும் அந்த ரூமை விட்டு வெளியே வர டைனிங் டேபிளில் காலை ஆகாரம் வைக்கப்பட்டிருந்தது.

 

வாணி!” உள்நோக்கிக் குரல் கொடுத்தான் மாதவன்.

 

ஐயா!” சமையற்கட்டிலிருந்து ஒரு பெண் வெளியே ஓடி வந்தாள். பல்லவியை விடக் கொஞ்சம் பெரியவளாக இருப்பாள். அவர்கள் வீட்டில் வேலைப் பார்க்கும் பெண்.

 

நானும் சின்னம்மாவும் கோயிலுக்குப் போகப் போறோம். நீ பரிமாறு.”

 

சரிங்கய்யா… உக்காருங்கம்மா.” அந்தப் பெண் சொல்லவும் பல்லவியும் ஒரு நாற்காலியில் அமர்ந்தாள். கடகடவென்று அவன் ஆறு இட்லியை உள்ளே தள்ள இவள் இரண்டோடு முடித்துக் கொண்டாள்.

 

இவ்வளவுதானா?” இது மாதவன்.

 

இல்லை…‌ போதும்.”

 

சீக்கிரம் ரெடியாகு பல்லவி.”

 

ஓ… ரெடியாகணுமா?”

 

அம்மாக்கிட்டக் கேளு.” சொன்னவன் அவர்கள் வீட்டின் முன் அறைக்குள் போய்விட்டான். பல்லவி கிச்சனுக்குள் போக அங்கே சிரிந்தபடி நின்றிருந்தார் பவானி.

 

அத்தை…”

 

தம்பி சொன்னது கேட்டுச்சும்மா. இந்தப் புடவை நல்லாத்தான் இருக்கு. ஆனாலும் புதுப்பொண்ணு இல்லையா? பட்டுப்புடவை கட்டிக் கொஞ்சம் நகையும் போட்டுக்கோ பல்லவி.” மாமியார் சொல்ல பல்லவிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இன்னும் அலங்காரம் செய்வதென்றால் எப்படி?

 

வாணீ…”

 

அம்மா.”

 

சின்னம்மாக்கூட மேல ரூமுக்குப் போயி அவங்களுக்குக் கொஞ்சம் ஒத்தாசைப் பண்ணு.”

 

சரிங்கம்மா.” விசுவாசமான பெண் என்பதால் அந்த வீட்டில் வாணிக்கு சலுகைகள் உண்டு. வாணியோடு மாடிக்குப் போன பல்லவி திரும்பி வந்தபோது நல்ல அலங்கார பொம்மைப் போல இருந்தாள். இங்கு இதுதான் வழக்கமாம்.

 

போய்ட்டு வாங்க.” மாமியாரின் கண்களில் ஒரு நிறைவு தெரிந்தது. மாதவன் போன அந்த முன் அறையை எட்டிப் பார்த்தாள் பல்லவி. ஏதோ கணக்கு வழக்கில் ஈடுபட்டிருந்தான் கணவன். இவள் அரவம் கேட்கவும் திரும்பிப் பார்த்தான்.

 

நான் ரெடி.”

 

ஓ… இதோ வந்தர்றேன்.” சொன்னவன் ஒரு இரண்டு நிமிடத்தில் வேலையை முடித்துக்கொண்டு வந்துவிட்டான். அவன் அவனது ஹோண்டாவை எடுக்க பல்லவி அப்படியே நின்றுவிட்டாள். புடவைக் கட்டிக்கொண்டு மோட்டர்பைக்கா?!

 

ஊருக்குள்ள போறதுக்கு காரை எடுத்தா நல்லா இருக்காது பல்லவி.” மனைவியின் முகத்தைப் பார்த்தவன் அவனாகவே விளக்கம் சொன்னான்.

 

புடவைக் கட்டியேப் பெருசாப் பழக்கம் இல்லை. இதுல மோட்டர்பைக்கா?” வாயைப் பிளந்த மனைவியைப் பாரத்த போது சிரிப்பு வந்தது மாதவனுக்கு. உதடு லேசாகப் பிரிய அந்தக் கண்களும் சிரித்த போது பல்லவி அவனை உற்றுப் பார்த்தாள்.

 

நிறம் குறைவாக இருந்த போதும் அந்த முகத்தில் ஆண்மை வழிந்தது. கிராமத்து உடம்பு. ஜிம் போகாமலேயே முறுக்கேறி இருந்தது. அந்தக் கண்களில் அத்தனைக் கம்பீரம்.

 

போகலாமா?”

 

ம்…” அப்போதும் அவள் திணற,

 

வாணீ…” குரல் கொடுத்தான் மாதவன். பெண் ஓடி வந்தது.

 

கொஞ்சம் சின்னம்மாக்கு ஹெல்ப் பண்ணு. அவங்களுக்கு பைக் பழக்கமில்லைப் போல.” 

 

சரிங்கய்யா.” அந்தப் பெண்ணும் புன்னகையக் கஷ்டப்பட்டு அடக்க பல்லவிக்கு வெட்கமாகப் போய்விட்டது. 

 

புடவையை இப்படிப் பிடிச்சுக்கோங்கம்மா.” வாணி சொல்லிக் கொடுக்க வேறு வழியில்லாமல் கணவனின் தோளை ஒரு கையால் பிடித்துக் கொண்டாள். சட்டென்று மாதவனின் தலை மனைவியை நோக்கித் திரும்பியது. ஆனால் அவள் புடவையோடு மல்லுக்கட்டிக் கொண்டு நின்றிருந்தாள்.

 

பைக் நேராகச் சென்று கோயில் முன்பாக நின்றது. நல்லப் பெரிய கோயில். கோபுரத்தை அண்ணார்ந்துதான் பார்க்க வேண்டி இருந்தது. உள்ளே போனவர்களை எதிரில் வந்த அனைவரும் ஒரு மரியாதையோடு ஒதுங்கிப் போனார்கள். மாதவனைப் பார்த்தவர்களெல்லாம் ஒரு முறுவலோடு நகர இவளுக்கு இப்போது சிரிப்பு வந்தது.

 

இது என்ன? மகாராஜா நகர்வலம் வருகிறாரா? குடிகளெல்லாம் ஒதுங்கிப் போகிறார்கள்?’ கை மறைவில் சிரிப்பை மறைத்த மனைவியை ஒரு தினுசாகப் பார்த்தான் மாதவன்.

 

வாங்கோ தம்பி.” ஒரு மனிதர் இவர்களை வரவேற்க மாதவன் வணக்கம் சொன்னான். 

 

பல்லவி… இது கோயில் தர்மகர்த்தா.”

 

வணக்கம்மா.”

 

வணக்கம்.”

 

எங்க ஊர் எப்படி இருக்கு?” அவர் சாதாரணமாகப் பேச்சை ஆரம்பித்தார்.

 

நல்லா இருக்கு.” பதில் மனைவியிடமிருந்து தயக்கத்துடன் வந்ததை மாதவன் கவனிக்கத் தவறவில்லை.

 

உள்ளே போங்க.” சொல்லிவிட்டு அவர் கிளம்பிவிட தம்பதி சகிதம் உள்ளே போனவர்கள் தங்களுக்கு இந்த வாழ்க்கையை விதித்த அந்த சக்தியிடம் சில நிமிடங்கள் கண் மூடி நின்றார்கள்.

 

அழகான தெப்பக்குளம் ஒன்று அங்கிருக்க அதன் படிகளில் போய் உட்கார்ந்தான் மாதவன். பக்கத்தில் நின்றிருந்த வேப்பமரத்தின் காற்று இதமாக இருந்தது.

 

தண்ணியில காலை நீட்டு பல்லவி.” அவன் சொல்லவும் காலை லேசாகத் தண்ணிக்குள் விட்டது பெண். சின்னச் சின்ன மீன்கள் அவளை காலை நோக்கி வரப் பயந்து போய் காலை இழுத்துக் கொண்டாள்.

 

ஏய்! சுகமா இருக்கும். காலை நீட்டு.” இப்போது அவன் சிரித்தான்.

 

இல்லை… பரவாயில்லை. எனக்கு பயமா இருக்கு.” மனைவியின் முகத்தையே சிறிது நேரம் பார்த்திருந்தவன் சுற்று முற்றும் ஒரு முறைத் திரும்பிப் பார்த்தான். ஆள் நடமாட்டம் இருக்கவில்லை.

 

இப்போ சொல்லு பல்லவி, என்னப் பிரச்சனை?” திடீரென்று கேள்வி வரத் திடுக்கிட்டுத் திரும்பினாள் பல்லவி. 

 

லவ்வா?” இந்த வார்த்தையில் பல்லவி எழுந்து நின்றே விட்டாள்.

 

உக்காரு பல்லவி. பொது இடத்துல இருக்கோம்.” அவன் கொஞ்சம் கண்டிப்புடன் ஞாபகப் படுத்தப் பெண் அமர்ந்து கொண்டது.

 

கல்யாணம் வேணாம்னு சொன்னா என்ன அர்த்தம்? யாரையாவது காதலிச்சியா?” குனிந்திருந்த தலை இடம் வலமாக ஆடியது. 

 

என்னை நிமிர்ந்து பாரு.” அந்த அதட்டலில் மாதவனை அண்ணார்ந்து பார்த்தாள் பல்லவி.

 

உன்னோடு கடந்த காலத்தைப் பத்தி இப்போ நான் பேசிக்கிட்டு இருக்கேன். அதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதால நீ எங்கிட்ட எதுவா இருந்தாலும் தயங்காமச் சொல்லலாம்.” இப்போதும் அவள் தலை இடம் வலமாகத்தான் ஆடியது. வாய்திறந்து பெண் பேசவில்லை.

 

எப்படி வேணா இருக்கட்டும் பல்லவி. நான் அதையெல்லாம் பத்தி இப்போ எதுவுமே பேசலை. பிடிக்குதோ பிடிக்கலையோ உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆச்சு. ஆனது ஆனதுதான். அதுல எந்த மாற்றமும் இல்லை. நீ இந்த மாதவனோட பொண்டாட்டி. அவ்வளவுதான். அது என்னைக்கு நான் செத்துப் போறனோ அன்னைக்குத்தான் மாறும்.” உறுதியாகத் தொடர்ந்தான் மாதவன்.

 

அதுக்கப்புறமும் அந்த லேபிள் தொடர்றது உன்னோட நான் வாழப்போற வாழ்க்கையில உனக்கு நான் குடுக்கப்போற மனத் திருப்தியில இருக்கு.” கணவன் மட்டுமே பேசினான். மனைவியின் வாய் எக்காரணம் கொண்டும் திறக்கவில்லை.

 

உனக்கு என்னைப் பிடிக்கலைனா… என்னப் பிடிக்கலைன்னு சொல்லு. அது என்னோட செயலா இருந்தா அதை நான் திருத்திக்கிறேன். மத்தப்படி என்னோட தோற்றத்தையோ இல்லை பிறப்பையோ என்னால மாத்த முடியாது.”

 

இல்லை… அப்படியெல்லாம் இல்லை.”

 

நல்லது… நேத்து ராத்திரி அவ்வளவு கோபப்பட்டே. உங்கிட்ட ஒரு வார்த்தை நான் சம்மதமான்னு கேக்கலைன்னு.”

 

இல்லை… அது…”

 

இரு நான் பேசி முடிச்சர்றேன். உன்னை யாரும் கல்யாணத்துக்குக் கட்டாயப் படுத்தி இருப்பாங்கன்னு எனக்குத் தோணலை.”

 

எங்கப்பா கழுத்துல கத்தியை வெச்சது நீதானே?’ மனதிற்குள் பொறுமினாள் பெண்.

 

ஒரேயொரு ஃபோன் கால். நீ பண்ணி இருக்கலாம் இல்லை. எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்லைன்னு சொல்லி இருக்கலாம் இல்லை. என்னதான் குடுக்கல் வாங்கல் இருந்தாலும் பிடிக்கலைன்னு சொல்லுற பொண்ணை யாரு கட்டிக்குவா?”

 

ஓ… அப்போப் புடிக்கலை. கணக்கை நேர் பண்ணத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா?” இப்போதும் புரிந்து கொள்ளாமல் கோபமாக அவள் கேட்க அவன் கண்கள் சிரித்தன. சுற்றி ஒரு முறைப் பார்த்தவன் மனைவியைப் பார்த்துச் சிரித்தான். பல்லவி அசந்து போனாள். அந்த முகத்திலிருந்து அவளால் கண்களை அகற்ற முடியவில்லை. மனைவியின் பார்வை அவனுக்கும் புரிந்திருக்கும் போல.

 

பார்த்த முதல் நாளே அவ்வளவு புடிச்சுது.” அவன் சொல்ல அவள் திகைத்துப் போனாள்.

 

அன்னைக்கு ஒரு சிவப்புக்கலர் சுடிதார் போட்டுக்கிட்டு இருந்தே. மஞ்சள் துப்பட்டா.” அவன் சரியாகச் சொன்னான். அவளிடம் அப்படியொரு ஆடை இருந்தது. அது அவளுக்கும் மிகவும் பிடிக்கும்.

 

அன்னைக்கே தூக்கிட்டு வந்தர்லாமான்னு தோணிச்சு.” இப்போது பல்லவி ஆச்சரியத்தின் உச்சத்திற்கே போனாள். கல்லுப் போல முகத்தை வைத்துக்கொண்டு இவன் இவ்வளவு பேசுவானா?

 

தன்னையே ஆச்சரியமாக வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்த மனைவியை கொஞ்சம் சங்கடமாகப் பார்த்தான் கணவன். அன்று கூட்டை விட்டுக் கொஞ்சம் வெளியே வந்திருந்தானோ!