AnthaMaalaiPozhuthil8
AnthaMaalaiPozhuthil8
அந்த மாலை பொழுதில்…
அத்தியாயம் – 8
‘கவின் சின்ன பையன் தான். ஆனால், இந்த வீட்ல யாரு நல்லவக? எல்லாரும் ஒரு மார்க்கம் தானோ? ஒரு பேரனை அதட்டி, ஒரு பாட்டியால் இங்க இருந்து கூட்டிட்டு போக முடியாதா? இல்லை இந்த சின்ன பையன், அவங்க அம்மா, அப்பா கூட தூங்க மாட்டானா? இவுக வெளிநாட்டில் இத்தனை வருஷமா இருந்ததாத் தானே எல்லாரும் சொன்னாக? கொஞ்சம் மாசமா தானே இங்கன இருக்காக?’ என்று பல கேள்விகள் வரிசையாக அபிநயாவின் மனதில் எழுந்தது.
‘கொஞ்ச நாளில் இவ்வளவு நெருக்கமா? இல்லை என்னைத் தவிர்க்க, இது இவுக ஏற்பாடோ?’ என்று கண்களைச் சுருக்கி, தன் மாமன் மேல் கால் போட்டுப் படுத்திருக்கும் கவினையும், ரகுநந்தனையும் ஆராயும் விதமாகப் பார்த்தாள் அபிநயா.
அபிநயாவின் பார்வை அவனைத் துளைக்க, ரகுநந்தன் தன் கண்களை இறுக மூடிக்கொண்டான்.
‘இன்னைக்கு பிரச்சனை இல்லை. ஆனால், என்னைக்கோ ஒரு நாள், நான் பேசித்தான் ஆகணும்.‘ ரகுநந்தனின் கண்கள் மூடி இருந்தாலும், அவன் மனக்குரல் விழித்துக் கொண்டு பேசியது.
‘இருந்தாலும் வாத்தியார் அம்மாவுக்கு அழுத்தம் ஜாஸ்தி. இன்னும் படுக்கலியே? தலையில் அடிபட்டப்பவே இவ்வளவு தலைக்கனம்.‘ என்று எண்ணிக்கொண்டு மௌனமாகப் படுத்திருந்தான் ரகுநந்தன்.
அவர்கள் இருவருக்கும் மௌனம் மட்டுமே இணைப்பு பாலமாக!
அதே வேளையில், மண்டபத்தில் வேலைகளை முடித்துக் கொண்டு பசுபதி வீட்டிற்குத் திரும்பினான்.
பசுபதி வீட்டிற்குள் நுழைய, “ஏலே, அங்கனையே நில்லு. இல்லைனா உன்னை வெட்டி சாச்சிபுடுவேன்.” என்று உக்கிரமாகக் கத்தினார் வடிவம்மாள்.
“ஆத்தா!” என்று கம்மலான குரலில் அழைத்தான் பசுபதி.
“நமக்கு வர வேண்டிய சொத்து, நம்ம மான மரியாதை, பொண்ணு இப்படி எல்லாத்தயும் தாராவார்த்துட்டு வந்திருக்கியேல? நான் கூட, நீ போன வேகத்துக்கு, அவ அப்பன் மேல அரிவாளை வீசி அவளைத் தாலி கட்டி கூட்டியாருவேன்னு நினச்சேன்ல. அத்தனை பேரு முன்னாடி என் மூஞ்சியில் கரிய பூசிட்டு போனவளை நீர் வாழ்த்திட்டு வந்திருகீர்.” என்று கடுங்கோபத்தில் கர்ஜித்தார் வடிவம்மாள்.
“ஆத்தா!” என்று மீண்டும் தன்மையாக அழைத்தான் பசுபதி.
“அது எப்புடில? காதல் கமரக்கட்டுக்கு மட்டும் அப்புடியே, இதயம் முரளி, சூர்யவம்சம் சரத்குமார் மாதிரி ஆகிடுதிக?” வடிவம்மாள், நக்கலாக தன் இயலாமையை வெளிப்படுத்த, கோபத்திலும் வெளிவந்த அவர் நகைச்சுவையை ரசித்தான் பசுபதி.
அவன் முகத்தில் மெல்லிய புன்னகை கீற்று.
“நீ இப்படி பல்லை காட்டிகிட்டே இரு. பத்து மாசத்துல, உன் கையில அவ ஒரு ஆம்பிளை புள்ளையையோ, பொம்பிள்ளை பிள்ளையையோ பெத்து கொடுப்பா? அது உன்னை பெரியப்பான்னு கூப்பிடும். நீயும் அதைத் தோளில் போட்டு கொஞ்சு.” என்று அவர் எகிற, “அதுல, என்ன தப்பு ஆத்தா?” என்று பசுபதி அசட்டையாகக் கேட்டான்.
“எடு வாரியல. என்ன தப்பா? அவ இந்த வீட்டு பக்கம் வந்தா கைய காலை உடைச்சி புடுவேன். அவளுக்குப் பிள்ளை எல்லாம் பிறக்காதுல்ல. அவ நாசமா தான் போவா.” என்று வடிவம்மாள் நிந்திக்க ஆரம்பிக்க, “ஆத்தா…” இப்பொழுது பசுபதி மீசையை முறுக்கிக் கொண்டு, அருகே கிடந்த அரிவாளை கைகளில் எடுத்து கொண்டு கண்களை விரித்து அலறினான் பசுபதி.
அவன் நின்று கொண்டிருந்த கோலம், அவர்கள் குலசாமி அய்யனாரை நினைவு படுத்த, வடிவம்மாள் சற்று மௌனம் காத்தார்.
“வெட்டி சாச்சிருவேன். ஆத்தா, உன்னை இல்லை. என்னை. உனக்குக் கொள்ளி போட நான் வேணுமா, வேண்டாம்மான்னு முடிவு பண்ணிக்கோ. அம்முக்குட்டி விஷயத்துல, இனி நீ நான் சொல்றதைத்தேன் கேட்கணும். உன் சோலியை இங்ஙன காமிக்கணுமுன்னு நினைச்ச. அப்புறம் நான் இருக்க மாட்டேன்.” என்று கோபமாக கூறினான் பசுபதி.
“என்னை தனியா பார்க்க வர கூட, அம்முக்குட்டி அஞ்சுற அளவுக்கு பண்ணிட்டேன்னேனு, நானே குற்ற உணர்ச்சியில் இருக்கேன். அவ, என்னை பழைய மாதிரி உரிமையா, எந்த மன சுணக்கமுமில்லாம அத்தான்னு கூப்பிடுவாளான்னு நான் நினைச்சுகிட்டு இருக்கேன்.” புலம்பிக் கொண்டு, அரிவாளை வேகமாக வீசிவிட்டு, வீட்டிற்குள் செல்லாமல் பின்கட்டுக்கு சென்றான் பசுபதி.
தன் மகனை யோசனையாக பார்த்தார் வடிவம்மாள்.
தோட்டத்திலிருந்த கயிற்றுக் கட்டிலில் வானத்தை வெறித்துப் பார்த்தபடி படுத்திருந்தான் பசுபதி. நினைவுகள் அவனை ஆள முயற்சிக்க, நினைவுகளின் ஆளுமையைப் பெருமூச்சு எடுத்து தன் ஆளுகைக்குள் கொண்டு வந்தான் பசுபதி.
“நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா
உயிரே விலகத் தெரியாதா
மயங்கத் தெரிந்த கண்ணே உனக்கு உறங்கத் தெரியாதா
மலரத் தெரிந்த அன்பே உனக்கு மறையத் தெரியாதா
அன்பே மறையத் தெரியாதா…”
எங்கோ பாடல் ஒலிக்க, அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது.
அதே நேரத்தில், அபிநயா ஜன்னல் வழியாக வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
நிலவும், நட்சத்திரங்களும் மேகத்திற்குள் மறைந்து கொள்ள, அந்த வானம் இருளோடு காட்சி அளித்தது.
‘என் வாழ்க்கையும் இப்படி தான் இருண்டு போச்சா? அப்பா எனக்கு அவசர அவசரமா கல்யாணத்தைப் பேசி முடிச்சாக. மாப்பிள்ளை குடும்பம் தெரிஞ்ச குடும்பமுன்னு சொன்னாக. ஆனால், இங்க என்ன நடக்குது? யாருக்குமே இந்த கல்யாணத்தில் உடன்பாடு இருக்கிற மாதிரி தெரியலியே. அப்பா எல்லாத்தயும் சொல்லிட்டாகளா?’ என்று சிந்தித்தாள்.
‘அத்தான்… அத்தான் என்ன செஞ்சிட்டு இருப்பாக? அத்தை வேற பயங்கர பிரச்சனை பண்ணிருப்பாக. அத்தான் அத்தையை எப்படி சமாளிச்சிருப்பாக? அத்தானுக்கு சீக்கிரம் ஒரு கல்யாணத்தைப் பேசி முடிக்கணும்.‘ அவள் எண்ணங்கள் தறிகெட்டு ஓடியது.
கவின் ஆழ்ந்த நித்திரைக்குச் சென்று விட்டான். ரகுநந்தன் தூக்கம் வராமல் புரண்டு படுத்தான்.
அவன் கவனம் முழுவதும் அபிநயா மீதே இருந்தது. ‘நான் இவளை தாங்கணுமா? வந்து படுக்க வேண்டியது தானே?’ அவன் மனம் முரண்டு பிடித்தாலும் , நேரம் செல்ல செல்ல அவன் மனம் இளகியது.
‘எவ்வளவு நேரம் நிக்குறா? இன்னைக்கு தலையில் வேற அடிபட்டிருக்கு. மாத்திரை வேற போட்டிருக்கா?’ என்று பல கேள்விகள் தொடர்ந்து எழ, “வாத்தியரம்மா…” என்று அழைத்தான் ரகுநந்தன்.
“படுகல்லையா?” என்று அவன் கண்களை சுருக்கி கேட்டான். “நான் உங்க கிட்ட பேசணும்.” அவள் உறுதியாக கூறினாள்.
ரகுநந்தன் புன்னகைத்து கொண்டான். “கடந்த காலத்தை பற்றி பேசணுமுன்னா, எனக்கு தேவை இல்லை. நான் உங்க நிகழ் காலமும், எதிர் காலமும் மட்டும் தான்.” என்று அவன் நிதானமாகக் கூறினான்.
‘இவுகளுக்கு எதோ தெரியும். ஆனால், எந்த அளவுக்குத் தெரியும்.‘ அவள் அறிவு எடுத்துரைக்க, அபிநயா அவனை யோசனையாகப் பார்த்தாள்.
“எதிர் காலத்தை பற்றி பேச நிறைய நேரம் இருக்கு. இந்த அர்த்த ராத்திரியில் பேச வேண்டாமுன்னு நான் நினைக்குறேன்.” என்று அவன் கேலி போல கூறினான்.
‘எல்லாமே இவுக நினைச்ச மாதிரி தான் நடக்கணுமா? பேச கூட முடியாத மாதிரி சின்ன புள்ளையை ரூமில் கூட்டி வச்சிக்கிட்டு… என்ன நினைச்சுகிட்டு இருக்காக?’ அபிநயாவின் கோபம் கனன்று, “நிகழ் காலம்?” என்று புருவம் உயர்த்தி வினவினாள் அபிநயா.
ரகுநந்தன், அவளைப் புரியாமல் பார்க்க… அவனுக்கு தானாக விளக்கம் கூற மனமில்லாமல், “கவின் இங்க இன்னைக்கு தூங்க கூடாது.” உறுதியாக ஒலித்தது அவள் குரல்.
கவினை கூறவும், ரகுநந்தனின் பொறுமை பறந்து, அவன் கைமுஷ்ட்டி இறுகியது.
“ஏய்!” அவன் கர்ஜிக்க, “குழந்தை தூங்கறான். முழிச்சிக்க போறான்.” கன அக்கறையாகக் கூறினாள் அவள்.
“உன் அக்கறை யாருக்கும் இங்க தேவை இல்லை.” முனங்கினான் அவன்.
‘என்னமும் செய்து தொலை.‘ என்பது போல், அவன் பேசாமல் படுத்துவிட, ‘ஏன் சொல்றேன்னு கேட்க மாட்டாகளா?’ என்ற கேள்வியோடு அவனை ஏமாற்றமாக பார்த்தாள் அபிநயா.
‘நான் யார்? இவுக தாலி கட்டிட்டு கூட்டியாந்துட்டா, நான் என்ன அடிமை சாசனமா எழுதி கொடுத்திருக்கேன்.‘ அவள் வீம்பாக நின்றாள்.
‘தாலி கட்டிட்டா நான் என்ன இவளுக்கு அடிமையா? இவ சொல்றதை தான் நான் கேட்கணுமா? இந்த கண்ராவிக்குத்தான் இந்த கல்யாணம் கச்சேரி எல்லாம் வேணாமுன்னு சொன்னேன்.‘ கடுப்பாக எண்ணியபடி படுத்திருந்தான் ரகுநந்தன்.
நேரம் சென்று கொண்டே இருந்தது. சுவரில் சாய்ந்தபடி ஜன்னல் வழியாக வானத்தை பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள் அபிநயா. அவள் சிறிதும் அசையவில்லை.
கணவன் என்ற அக்கறை இல்லை என்றாலும், அவன் மனதில் மண்டி கிடந்த மனிதாபிமானம் அவனை உறங்க அனுமதிக்கவில்லை.
‘இவளுக்கு இத்தனை பிடிவாதமா? சின்ன குழந்தையைப் பொறுத்துக் கொள்ள மாட்டாளா?’ அவன் கடுப்பாக எண்ணினான்.
வேறு வழியின்றி, கவினை தூக்கி கொண்டு அவன் தமக்கையின் அறைக் கதவைத் தட்டினான் ரகுநந்தன். அவனுக்குச் சற்று சங்கடமாகத் தான் இருந்தது.
“இந்த நேரத்தில் யார் நம்மை தொந்திரவு பண்ணறாக.” சுரேஷின் குரல் கடுப்பாக ஒலிக்க, இப்பொழுது ரகுநந்தனின் சங்கடம் மறைந்து. கடுப்பு குடிகொண்டது.
ரேவதி வெளிய வர, தூங்கி கொண்டிருந்த கவினை, அவள் கைகளில் ரகுநந்தன் கொடுக்க, “என்னடா, உன் பொண்டாட்டி, என் புள்ளையை உங்க ரூமுக்கு வர கூடாதுன்னு சொல்லிட்டாளா? அவுங்க அம்மா அப்பா கிட்ட குடுன்னு சொல்லிட்டாளா?” என்று ரேவதி கழுத்தை நொடித்தாள்.
“இந்திரவா இருந்தா இப்படி சொல்லுவாளா?” ரேவதி மேலும் முணுமுணுக்க, ‘அம்மா, அப்பா கிட்ட கொடுன்னு சொல்றது. அவ்வளவு பெரிய தப்பு இல்லையே?’ என்ற எண்ணம் தன் தமக்கை அவனிடம் பேசும் விதத்தில் ரகுநந்தன் மனதில் அமர்ந்து கொண்டது.
“இல்ல அக்கா. நான் தான் கொண்டு வந்து கொடுக்கறேன்.” என்று ரகுநந்தன் சிரித்த முகமாக கூற, ரேவதி மேலும் பேச்சைத் தொடர எத்தனிக்க, “கவினை படுக்க போடு அக்கா.” என்று கூறிவிட்டு, படி ஏறி, அவன் அறைக்குள் நுழைந்து கொண்டான் ரகுநந்தன்.
வேகமாக அறைக்குள் சென்று கதவை தாழிடும் தம்பியை யோசனையாகப் பார்த்தாள் ரேவதி. அவளால் எதையும் கண்டு பிடிக்க முடியவில்லை.
அபிநயா படுத்து கொண்டு, தன் கண்களை இறுக மூடி கொண்டாள்.
‘ஒரு பொண்ணுக்கு இத்தனை பிடிவாதமா? என்னை விட பிடிவாதக்காரியா இருப்பா போலியே?’ அவன் சிந்தை சிந்திக்க ஆரம்பித்து, நிந்தித்து சற்று அச்சத்தோடு அவளைப் பார்த்தது.
‘அது என்ன இவ இஷ்டப்பட்டு தூங்குறது?’ என்ற கேள்வியோடு, “வாத்தியாரம்மா” என்று மெத்தை அருகே நின்று கொண்டு அழைத்தான் ரகுநந்தன்.
அபிநயா, எழுந்து சம்மணமிட்டு அமர்ந்து அவனை அண்ணாந்து பார்த்தாள்.
“நான் பேசணும்.” என்று ரகுநந்தன் கூற, “எதிர்காலத்தை பற்றிப் பேச காலமும், பொழுதும் நிறைய இருக்கு.” அவனை போல் அவள் கேலி தொனிக்கும் குரலில் கூற, “நிகழ் காலம்.” அவளை போல் அவன் கூறினான்.
ஆனால், அவன் கண்களில் விஷமம் வழிந்து ஓடியது. அதை கணப்பொழுதில் கண்டுக்கொண்ட அபிநயா முந்தி கொண்டாள்.
“நமக்குள்ள நாம எப்படி வேணா இருக்கலாம். ஆனால், அது ஒரு சின்ன குழந்தை மூலமா நாலு பேருக்கு தெரிய வேண்டாம்ன்னு நினச்சேன். இது தான் நிகழ் காலம்.” அவள் நிதானமாகக் கூற, ரகுநந்தன் அவளை கூர்மையாக பார்த்தான்.
மிக களைப்பாக இருந்தாள். திருமண சோர்வு, அது போதாதென்று அடிபட்ட சோர்வு. மேலும் பேசி அவளை சங்கடப்படுத்த அவன் விரும்பவில்லை.
அவள் கூற்றில் இருக்கும் நியாயம் புரிய, “படுத்து தூங்குங்க வாத்தியரம்மா.” என்று கரிசனமாக கூறிவிட்டு மெத்தையில் அந்த ஓரத்தில் படுத்துக் கொண்டான் ரகுநந்தன்.
அவர்களுக்கு இடையில் இரண்டு கவின் படுக்கலாம். அவ்வளவு இடைவெளி இருந்தது. அந்த எண்ணம் தோன்ற ரகுநந்தனின் முகத்தில் புன்னகை தோன்றியது.
புன்னகையோடு உறங்கிவிட்டான் ரகுநந்தன்.
காலையில் அவளுக்கு முன்னே முழித்து, குளித்து உடை மாற்றிக் கொண்டான். அருகே தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியைப் பார்த்தான்.
‘அழகு தான்….‘ அவன் வயது, அவள் அழகை அவனையும் தாண்டி கணக்கிட்டுக் கொண்டது.
“அழுத்தக்காரி… பிடிவாதக்காரி… நியாவாதியாவும் இருப்பா போல. சட்டம் பேசினாலும் சரியா தான் பேசுறா.” அவன் முணுமுணுத்துக் கொண்டான்.
‘சிலாகிப்பா? இல்லை நிதர்சனமா?’ அவனுக்குத் தெரியவில்லை.
அவன் முணுமுணுப்பு சத்தத்திலும், யாரோ தன்னை பார்க்கும் உணர்விலும், படக்கென்று எழுந்து அமர்ந்தாள் அபிநயா.
“ஈஸி… என்ன இவ்வளவு பதட்டம்?” என்று அவன் கேட்க, ‘இவுக இத்தனை நேரம் என்னை தான் பார்த்திட்டு இருந்தாகளா?’ என்ற கேள்வியோடு அவனை ஆராயும் விதமாகப் பார்த்தாள் அபிநயா.
அவள் பார்வையில், அவள் எண்ண ஓட்டம் புரிந்து அவன் முகத்தில் குறுஞ்சிரிப்பு தோன்றியது.
“நான் அழகை மட்டும்தான் ரசிப்பேன். அது தான் இயற்கையை பார்த்துகிட்டு இருந்தேன். நீங்க எழுந்த சத்தத்தில் திரும்பி பார்த்தேன்.” பச்சை புழுகு புழகினான் ரகுநந்தன்.
‘இவுக என்ன சொல்றாக? நான் அழகு இல்லைன்னு சொல்றாகளா? இல்லை என்னை பார்க்கலைன்னு சொல்றாகளா?’ என்று கேள்வியாகவே அவனைப் பார்த்தாள் அபிநயா.
‘வாத்தியாரம்மாவுக்கு மட்டும் தான் பேச தெரியுமா? நிகழ் காலாமுன்னு என்னையே மடக்குற?’ என்று அவன் சவால் விடும் விதமாக பார்த்தான்.
‘என்னமும் செய்யட்டும். அழகா இருந்தா என்ன? இல்லைனா என்ன?’ என்ற எண்ணத்தோடு தோள்களைக் குலுக்கிக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்து கொள்ள எத்தனித்தாள் அபிநயா.
அவள் முன் வழி மறித்து நின்றான் ரகுநந்தன். அந்த எதிர்பாராத நெருக்கத்தில் அபிநயா தடுமாற, மீண்டும் அவன் முகத்தில் புன்னகை.
‘நேத்து அடிபட்டதும் என் சட்டையை தானே பிடிச்ச? அப்ப, அது உரிமையா? நான் தூக்கிட்டு போகும் பொழுது, என் கைகளில் தானே துவண்டு கிடந்தா?’ போன்ற பல எண்ணங்களோடு அவன் முகத்தில் புன்னகை இன்னும் விரிந்தது.
‘என் வழியை மறிச்சிக்கிட்டு… இம்புட்டு நெருக்கமா நின்னுகிட்டு இவுகளுக்கு என்ன சிரிப்பு?’ என்று அவள் பார்க்க, தலையைச் சிலுப்பி, “காயத்தில் தண்ணீர் படமா பார்த்துக்கோங்க. செப்டிக் ஆகிரும்.” அக்கறையாகக் கூறி விலகினான் ரகுநந்தன்.
‘இவுகளை எந்த கணக்கில் சேர்ப்பது?’ என்ற எண்ணத்தோடு, குளியறைக்குள் நுழைந்து கொண்ட அபிநயா, அங்கிருந்த கண்ணாடியை பார்த்தாள். அடி பட்டதில் அவள் நெற்றி சற்று வீங்கி இருந்தது.
‘என் கடந்த காலம் பத்தி தேவை இல்லைன்னு சொன்னது இவுக நல்ல எண்ணமா? இல்லை இவ பழைய கதை எல்லாம் எனக்கு எதுக்குங்கிற நிராகரிப்பா?’ என்ற சந்தேகம் எழ, “இவுக என் வாழ்க்கையில் ரகுவா? இல்லை ராகுவான்னு தெரியலை?” தண்ணீர் சத்தத்திற்கு இடையில் சத்தமாகவே முணுமுணுத்து கொண்டாள் அபிநயா.
‘ரகு என்ன பண்ணிட்டு இருக்க?’ என்று அவன் தன்னை தானே கேட்டு கொண்டான்.
“லேடீஸ் ஆல்வேஸ் இஞ்சூரியஸ் டு ஹெல்த். ” உறுதியாக கூறி கொண்டான்.
‘முதல்ல, வாத்தியரமா கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லணும். அவங்க நம்மளை புரிஞ்சிக்கணும். அப்புறம் தான் நட்பு கரம் நீட்டனும்.‘ என்று முடிவு எடுத்துக்கொண்டான் ரகுநந்தன்.
குளித்து முடித்து, மெல்லிய மஞ்சள் நிற சில்க் காட்டன் சேலையில் ஓவியமாக இருந்தாள் அபிநயா.
அவன் கண்கள் அவளை அளவிட்டு கொண்டது. ‘நான் ஏன் இவளை இப்படி பார்த்து தொலைக்கிறேன். லைசென்ஸ் கிடைச்ச தைரியமா?’ தன்னை தானே நொந்து கொண்டான் ரகுநந்தன்.
“நான் உங்க கிட்ட பேசணும்.” என்று அவன் கூற, “ஓ… எதிர் காலத்தை பத்தி பேச நேரம் வந்திருச்சா. அருமை. பேசுங்க கேட்கறேன்.” என்று புன்னகையோடு கூறினாள் அபிநயா.
‘நக்கலு…‘ என்று எண்ணியபடி, “எனக்கு இந்த காதல், கல்யாணம் இதுல எல்லாம் விருப்பம் கிடையாது.” என்று அவன் பேச ஆரம்பிக்க, அவனை இடைமறித்து அவள் கேட்ட கேள்வியில், அவளை கடுப்பாக பார்த்தான் ரகுநந்தன்.
பொழுதுகள் விடியும்…