SY10
SY10
சரி © 10
அலைபேசியை எடுத்த ரிது அழைத்தது யாஷிகாவை. மதிய உணவு வேளை என்பதால் யாஷிகா தன் அலுவலகத்தில் அதிக வேலை பளுவின்றி இருந்தாள்.
“ஹாய் யாஷிகா, வேலை அதிகமா? பேசுவோமா?” என்றாள் மெதுவாக ரிது.
“சில நாள் அதிகமாத்தான் இருக்கும். பட் டுடே நோ ப்ராப்ளம். சொல்லுடீ”, என்றாள் யாஷிகா.
“ஏய், அம்மா திடீர்னு குண்டத் தூக்கி போட்றாங்கடீ! சம்யுவோட அம்மா ஏதோ பேசிருப்பாங்க போல, நேத்து என்ன நடந்துச்சுன்னு எங்கிட்ட கேட்டாங்க, நா வாயத் தெறக்கல்ல”
“ம், அப்பறம்”
“அப்பாட்ட சொல்லி விசாரிச்சுக்கிறேன்னு சொல்லிட்டாங்க”
“இதுல ஒங்கப்பா என்னத்த விசாரிக்க முடியும்? சம்மந்தப்பட்ட ரெண்டும் வேற வேற எடத்துல சம்மந்தமே இல்லாம இருக்குதுங்க. நீ ஏன்டீ கவலப்பட்ற?”
“அடப்போடீ, எங்கப்பாவப் பத்தி ஒனக்குத் தெரியாது. அவர்கிட்டதான யோகி வேல பாக்குறாரு! அவரத்தொட்டு, அப்படியே சித்துவப் பத்தி விசாரிச்சு, சம்யு மேட்ர ஈஸிய ஸ்மெல் பண்ணிருவாரு”
“ஓ! நீ அப்படி ஒரு வழி இருக்குன்னு யோசிக்கிறியோ?”
“ஆமா! அம்மா, அப்பாட்ட சொன்னா, ஒடனே அம்மாட்டயே ஒனக்கு எப்படி யோகியத் தெரியும்னு கேட்டா, அம்மா எல்லாத்தையுமே சொல்லிருவாங்கல்ல!”
“அப்ப, அம்மாவத்தான் நீ கொஞ்சம் சமாளிக்கணும். நீ எதுக்கும் சம்யுட்ட சொல்லிரு. நா ஃப்ரீயாயிட்டா, நானும் கால் பண்றேன்”
“ஆமா, அதுதான் சரின்னு எனக்கும் தோனுச்சு. அவ, அவங்கம்மாப்பாட்ட எப்படி சொல்றதுன்னு டிசைட் பண்ணி வச்சுருக்காளோ நமக்குத் தெரியலயே?”
“நேத்தே நா உன்ன ஒன்னு கேக்கனும்னு நெனச்சேன் ரிது”
“என்ன சீக்கிரம் கேளு”
“ஏய், நாந்தானடீ கம்பெனில இருக்கேன்? உனக்கென்ன! நீ ஏன் அவசரப்பட்ற?”
“என்னமோ தெரியலடீ. அம்மா கேட்டதுல இருந்து எனக்கு கொஞ்சம் பயமாவே இருக்கு”, ரிது கவலைப்படுவதுபோல் சொன்னாள்.
“இன்னக்கி இவ்ளோ கவலைப்படுற நீ நேத்து என்ன தைரியத்துல கமிங் சண்டே பார்ட்டி அரேஞ்ச் பண்ணச் சொன்ன? அதுவும் யோகிக்கே கால் பண்ணி சொல்ற!”
“ஏய், யோகி விசயத்துல எனக்கு பயமே இல்ல. ஏன்னா அவர் எங்க அப்பாவோட செலக்ஷன்டீ. அப்பாவப் பத்தி ஒனக்குத் தெரியாது. சரியான ஒரு ஆளுக்குத்தான் அவர் தன் வீடு வரைக்கும் வர அலோப் பண்ணுவார்”
“ஓ! அவர் ஒங்காளுன்னுதான் அவ்ளோ சகஜமா பேசுறியா?”
“ஆமா யாஷிகா. நல்ல நம்பிக்கைதான். வேற ஒன்னும் இல்ல. ஆனா நா பாஸோட பொண்ணுன்னு லீக் பண்ணீறாத! சம்யுகிட்டயும் சொல்லி வைக்கணும்”
“ஏன்டீ, சொன்னா என்ன?”
“ஆனா, அப்பறம் இந்த மாதிரி ஃபன்னியா பேசுவாரான்றது டவுட்டுதான். அதுனால கொஞ்ச நாள் சஸ்பென்சாவே இருக்கட்டும்”
“நானுந்தான பாக்கப் போறேன், இந்த படம் நம்ம தியேட்டர்ல எத்தனை நாள் வெற்றிகரமா ஓடும்னு”
“சரி, கட் பண்ணிட்டு, அப்பறம் கூப்டுறேன். பை”
©©¨©©
ராஜசிம்மன், யோகி கொடுத்த ஃபைலைப் பார்த்துவிட்டு, திருப்தியாய் அவனை நோக்கினார். தனது புதிய நிறுவனத்தை எங்கு ஆரம்பிக்கலாம் என்பதைப் பற்றி ஆலோசிக்க ஆரம்பித்தார்.
“தேர் ஆர் ஸோமெனி கஃபே இன் தி சிட்டி. பட் நாமளும் அதோட போட்டியா வளர்ந்து நமக்குன்னு ஒரு எடத்தப் புடிக்கணும். நாம ஜெயிச்சுருவோம்னு வச்சுக்குவோம். ஆனா, எந்த லொக்கேஷன்ல இருந்து இத ஆரம்பிக்கலாம்?”
“நா ஒரு ஏரியாவ மைன்ட்ல வச்சிருக்கேன் சார்! பாக்கலாமா சார்?”, என்று யோகி சற்று தயங்கியவாறே கேட்டான்.
“ஓ! ஷ்யூர்”
யோகி தன் அலைபேசியை எடுத்து உயிர்ப்பித்தான். அதில் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த புகைப்படங்களில் சிலவற்றை தேர்வு செய்துவைத்துக்கொண்டு, அவற்றை மட்டும் காண்பித்தான்.
“இதெல்லாமே டி-நகர் லொக்கேஷன் சார். இது வேளச்சேரி லொக்கேஷன் சார். எக்மோர் போற வழில இந்த லொக்கேஷன் இருக்கு சார்”, என்று அடுத்தடுத்து காண்பித்துக்கொண்டே போனான்.
“போதும், போதும் யோகி! நா என்ன எதிர்பார்க்கிறேன்னா, இவ்ளோ செலக்ட் பண்ணிருக்கீங்க. ஆனா உங்களுக்குன்னு ஒரு சாய்ஸ் இருக்கும்ல, நல்ல ஹோப்பா, அதச் சொல்லுங்க!”
“எனக்கு டி-நகர் லொக்கேஷன்தான் ஃப்யூச்சர்ல ஈசிய நல்லா டெவலப் பண்ண முடியும்னு தோனுது சார்”
“அங்கதான் ஏற்கனவே நிறைய இருக்கே! நீங்க எப்டி ஃப்பீல் பண்றீங்க?”
“அங்க ஏன் அவ்ளோ இருக்குன்னு யோசிச்சேன் சார்! அத்தன பேரும் அந்த லொக்கேஷன்ல ஈசியா டெவலப் பண்ண முடியும்னு யோசிச்சதுனாலதான சார் ஆரம்பிச்சுருக்காங்க. இப்பவும் எல்லாமே நல்லாத்தான் ஓடிகிட்டு இருக்கு”
“ஆனா நாம ஏன் யாருமே ஆரம்பிக்காத எடத்துல ஆரம்பிக்கக் கூடாது?”, ஐயத்தை தெளிவாகக் கேட்டார் ராஜசிம்மன்.
“அது ஒரு மெத்தட், நா சொல்றது ஒரு மெத்தட் சார்”
“கொஞ்சம் புரியும்படியா சொல்லுங்களேன்”
“நாம ஏற்கனவே ஸ்டடி பண்ணி வச்சிருக்கிற இன்க்கன்வினியன்ட்ஸ ரெக்டிஃபைப் பண்ணி நாம அதே லொக்கேஷன்ல ஆரம்பிக்கும்போது பிஸினஸ ஈஸியா ஸ்டான்ட் பண்ணிறலாம். அப்பறம் டெவலப் பண்ற புது ப்ரான்ச்ல நீங்க சொல்ற மாதிரி லொக்கேஷன்ல வச்சா ஈசியா பூஸ்ட்டப் ஆகிறலாம் சார்”, தெளிவாக விளக்கினான்.
“பரவாயில்ல, ஆனா…”, என்று இழுத்தார் ராஜசிம்மன்.
“உங்களுக்கு நிறைய, நல்ல எக்ஸ்பீரியன்ஸ் இருக்கும் சார். நா என்னோட நாலேஜுக்கு எட்னதச் சொன்னேன் சார்”, என்று சற்று பின்வாங்கினான் யோகி.
“நீங்க சொல்றதும் சரியாத்தான் தோனுது. பட் கட்டாயம் இன்கன்வினியன்ட ஃபுல்லா ரெக்டிஃபை பண்ணிறனும்”
“ஷ்யூர் சார். அப்பறம் இன்னொரு சஜசன்”
“என்ன சொல்லுங்க யோகி”
“மொதல்ல ரென்டல் பில்டிங்ல ஸ்டார்ட் பண்ணாலும், அப்பறம் போகப் போக சொந்த எடத்துல டெவலப் பண்ணா நல்லாருக்கும்னு தோனுது சார்”
“இத நா பல வருஷங்களுக்கு முன்னாடியே யோசிச்சிட்டேன் யோகி. யூ நோ ஒன் திங்? நாம இப்ப இருக்கற, இந்த பில்டிங்கோட ஈஎம்ஐ இன்னும் ஒரு வருஷத்துல முடிஞ்சி நம்ம கைக்கு வந்துரும், தெரியுமா!”, என்று கூறி,‘உனக்கு நா அப்பன்டா’ என்பதுபோல பார்த்தார்.
“ஓ! வெல் டன் சார்! ரொம்ப சந்தோஷமா இருக்கு”, யோகி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.
“ஓக்கே யோகி. நாம மறுபடியும் டிஸ்கஸ் பண்ணுவோம். நேரமாச்சு நா கிளம்பறேன். ஒங்க இன்டீரியர் டீமாடுலேட் வொர்க் எல்லாம் முடிஞ்சிருச்சா”, என்று கிளம்பிக்கொண்டே கேட்டார்.
“லிட்டில் பிட் பென்டிங் சார். நாளைக்கு முடிஞ்சிரும் சார்”
“ஓக்கே, பாத்துப் பண்ணுங்க. எதுவும் வேணும்னா கால் பண்ணுங்க. டோன்ட் ஃபீல் ஷை”
“எஸ் சார்!”, என்று யோகி, அவர் கார் வரை வந்து வழி அனுப்பிவைத்துவிட்டு வேலையைத் தொடர்ந்தான்.
©©¨©©
அன்று அவர்கள் குறித்துவைத்திருந்த ஞாயிறு. மாலை மணி மூன்று. ரிது யோகியை அலைபேசியில் அழைத்தாள், எதிர்முனையில் அலைபேசி எடுக்கப்பட்டவுடன் “என்ன கிளம்பியாச்சா?”, என்று ஒரே அதட்டில் கேட்டாள்.
“ரொம்பத்தான் ஃபாஸ்ட்டா இருக்கீங்களே! நா இன்னும் கம்பெனில பர்மிஷனே கேக்கல. பாஸ் வேற வரேன்னு சொல்லிருக்காரு. ஸோ ஐம் வெயிட்டிங்”
“இன்னமும் என்ன ‘வெயிட்டிங்’! நா வேணா ஒங்க பாஸ்கிட்ட பேசவா?”, ரிது.
“ஏன் அவரும் ஒங்கப்பாவோட ஃப்ரண்டா?”, வம்பாக கேட்டான் யோகி.
‘எங்கப்பாவே அவர்தான்னு சீக்கிரத்துல தெரியும் மச்சி’ என்று மனதுள் நினைத்தவளாய், “ம், அதெல்லாம் ஒன்னுமில்ல! முடிவா என்ன சொல்றீங்க?”
“சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லி பர்மிஷன் வாங்கியாச்சு. நானும், சித்துவும் ரெடி. நீங்க?”, யோகி.
“நாங்களும் ரெடிதான். நீங்க அப்டியே வந்து பீச்சுக்கு முன்னாடி மெயின் ரோட்ல வெயிட் பண்ணுங்க. நாங்க சீக்கிரம் வந்தா, நாங்க வெயிட் பண்றோம் சரியா?”
“ஓக்கே டன்! வரும்போது ஸ்நாக்ஸ் ஏதும் வாங்கிட்டு வரவா? மால்லயே நிறைய வெரைட்டி இருக்கும்”
“வாங்கிட்டு வரீங்களா? எடுத்துட்டு வரீங்களா?”, நக்கலாக ரிது.
“வாங்கி, எடுத்துட்டு வரோம். எனி டவுட்?”, புன்னகையுடன் யோகி.
“நோ டவுட். பட் கொஞ்சமா கொண்டு வாங்க. அப்பத்தான் ரெஸ்ட்டாரென்ட்ல நிறைய சாப்பிட முடியும்”
“ஓ! நீங்க அப்டி யோசிக்கிறீங்களா? கட்டிக்கப்போறவன் நல்லா இருக்கனும்”
“அதெல்லாம் கட்னாவுட்டு பாக்கலாம். ஆனா, இப்ப ஸ்நாக்ஸ் கம்மியா கொண்டுவரச் சொன்னது யாஷிகா”
“ஓ! எல்லாம் ஒன்னாக் கூடி கும்மியடிச்சுகிட்டு இருக்கீங்களா?”
“கும்மியும் அடிக்கல, அம்மியும் அடிக்கல! நாங்க கிளம்பறோம். ஃபோனை வக்கிறேன்”
“வந்துட்டா கால் பண்ணுங்க. பை”, என்று முடித்தான் யோகி.
©©¨©©
மெயின் ரோட்டிலிருந்து விலகி, திருவான்மியூர் பீச்சை நோக்கி இரண்டு டூவீலர்களும் போய்க்கொண்டிருந்தன. பின்னால் மிதமான வேகத்தில் காரும் வந்துகொண்டிருந்தது.
அவர்கள் ஏற்கனவே குறிப்பிட்ட ரெஸ்ட்டாரன்ட் வந்தவுடன், யோகியும், சித்துவும் தங்கள் வண்டிகளை நிறுத்திவிட்டு. காரை பார்க் செய்வதற்கு ஏதுவான இடத்தை தேர்வு செய்து, அவர்களை அங்கே நிறுத்தும்படி கூறிவிட்டு, காத்திருந்தனர்.
மூவரும் காரைவிட்டு இறங்கினர். ஐவரும் சேர்ந்து ரெஸ்ட்டாரென்ட்டின் உள்ளே சென்று, தங்களுக்கு வேண்டியவற்றை கூறிவிட்டு, பேசிக்கொண்டே கடற்கரையை நோக்கி நடந்தனர்.
மூன்று பெண்களும் வந்து இறங்கியதிலிருந்து, சற்று தொலைவில் ஆறு ஜோடிக் கண்கள் அவர்களையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தன.
கரையோரம் ஒர் இடத்தை தேர்வு செய்து சம்யுக்தா, ரிதுவந்திகா, யாஷிகா மூவரும் (சரியா) ஒரு அணியில் அமர்ந்தனர். எதிரில் யோகிதாஸ், சித்தார்த் (யோசி) இருவரும் ஒரு அணியாக அமர்ந்தனர்.
சித்துவைப் பற்றிய பேச்சே பெரும்பாலும் இருந்தது. மூன்று தோழிகளும் மாறிமாறி சித்துவின், வேலை மற்றும் குடும்ப சூழல் பற்றி நன்கு தெரிந்துகொண்டனர்.
சித்துவும், யோகியும் எதையும் மறைக்காமல், பொய்யுரைக்காமல் பேசினர். நண்பர்கள் இருவரும் தங்குதடையின்றி பேசியதிலேயே தோழிகள் மூவரும் திருப்தியாய் உணர்ந்தனர்.
யோகி கொண்டு வந்த நொறுக்குத் தீனிகள் (யாஷிகாவின் விருப்பப்படி) சிறிதளவே இருந்ததால் அவை பேச்சின் ஊடே நிறைவடைந்திருந்தன.
யோகியும், சம்யுக்தாவின் குடும்பம், குறிப்பாக அவள் தந்தை, அவரது வேலை பற்றி நிறைய கேட்டான். சித்து அருகில் அமைதியாக அமர்ந்து, சம்யுவையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
அந்த அமைதியைக் கெடுப்பதாக திடீரென ஒரு கரகரப்பான குரல் கேட்டது, “அசையாம அப்டியே இரு, தொகுர்னா, அர்த்துப் போட்டு போய்ட்டே இருப்போம்!”
அப்பொழுதுதான் அனைவரும் பார்த்தனர். அவர்களை ஆறு பேர்கொண்ட ஒரு ரவுடி கும்பல் சுற்றி வளைத்திருந்தது. வந்தவர்களில் ஒருவன் மட்டும் ஆறடியில், ஆஜானுபாகுவாய், கையில் கத்தியுடன் மிரட்டினான். மற்றவர்கள் அவ்வளவு சொல்லும்படியாக இல்லை.
உடனே, பெண்களுக்கு யோகியிடமிருந்து ஒரு எச்சரிக்கை வந்தது, “யாரும் எந்திரிக்காதீங்க” என்று கூறிவிட்டு, சித்துவைப் பார்த்தான்.
சரேலென இருவரும் எழுந்து ஆளுக்கு மூவராகப் பிரித்துக்கொண்டு சரமாரியாக தாக்கினர். வந்தவர்கள் இதை எதிர்பார்க்கவில்ல, கலங்கினர். ஏனென்றால், இவர்களின் தாக்குதல்கள் எல்லாம் நன்கு பயிற்சிபெற்றவர்களின் அடியாக விழுந்தன.
ஒரு நிலையில் கையில் கத்தியுடன் வந்த உயர்ந்த மனிதன், யோகியை நோக்கி, கத்தியை நீட்டிப் பாய்ந்தான். அவனுடைய குறியிலிருந்து லாவகமாக விலகிய யோகி, கத்தியுடன் கையைப் பிடித்து, அவன் முதுகுப் பக்கம் முறுக்கி, அதே வினாடிக்குள் அவன் முழங்காலை பின்னால் ஓங்கி மிதித்தான். கையையும் விடவில்லை.
‘மடக்’ என ஒரு சப்தம். மிதி வாங்கியவன் அலறிவிட்டான். அதைக் கண்ட மற்றவர்கள் தாக்குதலை நிறுத்தி, அச்சத்துடன் பார்த்தவாறு பின்வாங்கத் துவங்கினர்.
அலறியவன் விட்டால் போதும் என்று யோகியின் பிடியில் இருந்து விடுபட்டு, கையை பிடித்துக் கொண்டு, காலை தாங்கியவாறு ஓட ஆரம்பித்தான்.
தோழிகள் மூவரும் போட்டிருந்த மெல்லிய துப்பட்டாவை தலையில் போர்த்திக்கொண்டு, அதன் வழியே நடந்ததை எல்லாம் பிரம்மிப்போடு பார்த்த வண்ணம் இருந்தனர். எல்லாம் ஒரு சில நிமிடங்கள்தான்.
ஓடியவர்களை பார்த்துக்கொண்டே சிரித்தவாறு இரு நண்பர்களும் பழைய நிலையில் அமர்ந்தனர். மிரட்சியில் இருந்து மீளாத மங்கையர்களைப் பார்த்து சித்து பேச ஆரம்பித்தான்.
“எல்லாரும் போயாச்சு! துப்பட்டாவை எடுங்க”
துப்பட்டாவை எடுத்துக்கொண்டே சம்யு,“வாங்க நாம இங்க இருக்க வேண்டாம். போயிருவோம்”, உண்மையில் பதறினாள். மூவரும் எழ முற்பட்டனர்.
“இருங்க, இருங்க எங்க போறீங்க?”, என்று யோகி உட்காருமாறு கையைக் காண்பித்தான்.
“போனவங்க மறுபடியும் வந்துட்டா?”, ரிது.
“வரமாட்டாங்க”, யோகி.
“எப்படிச் சொல்றீங்க”, யாஷிகா.
“விழுந்த அடிக்கு அவன் இந்நேரம் ஹாஸ்பிட்டல் போயிருப்பான். அனேகமா ஷோல்டர் எறங்கிருக்கும்னு நெனக்கிறேன்”, யோகி நிதானமாக பதிலளித்தான்.
“இந்த மாதிரி ஆளுங்க பெரும்பாலும் அஞ்சாறு பேராத்தான் இருப்பானுக. அதுல ஒருத்தனுக்கு நல்லா அடி வேற பட்ருக்கு. அவனப் பாக்குறதுக்கே இன்னக்கிப் பொழுது போயிரும். அதுனால மறுபடியும் ஆளக் கூட்டிகிட்டு சண்டைக்கெல்லாம் வர மாட்டாங்க”, சித்துவும் தன் பங்குக்கு அவர்களுக்கு விளக்கினான்.
“எப்டி இப்டில்லாம் அடிக்கிறீங்க? பயமா இருக்கே!”, என்றாள் சம்யு யோகியைப் பார்த்து.
யோகி புன்முறுவலுடன்“நா மட்டுமா அடிச்சேன்! ஒங்காளுந்தான் அடி பின்னிட்டான்”, என்றான்.
“ரெண்டு பேருமே சண்டெல்லாம் கத்துகிட்டு இருக்கீங்களா?”, ரிது சந்தேகமாய் கேட்டாள்.
“ஆமா, சந்தேகமா இருக்கா?”, என்று கேட்டான் யோகி.
“ஒங்க ஸ்போட்ஸ் லைஃப் பத்தி சொல்லுங்களேன்”, யாஷிகா ஆர்வமானாள்.
“ரெண்டு பேருக்குமே ஸ்போர்ட்ஸ்ல நல்ல இன்ட்ரஸ்ட். நாங்க படிச்ச காலேஜ்லயே ரெகுலரா கராத்தேல சேர்ந்தோம். நா அதுல நிறைய பெல்ட் வாங்கியிருக்கேன். ஆனா, சித்து இன்டோர் கேம்ஸ்ல நிறைய மெடல் வாங்கியிருக்கான், லைக்… டேபிள் டென்னிஸ் அன்ட் செஸ். அந்த ரெண்டுலயும் அவன அடிச்சுக்க ஆளே இல்ல”, யோகி சொல்ல ஆரம்பித்தான்.
“அது ஏன் சித்து மட்டும் இன்டோர் கேம்ஸ்ல இன்ட்ரஸ்ட் காட்டிட்டாரு. நீங்க அவுட்டோர் கேம்ஸ்ல கான்சென்ட்ரேட் பண்ணிட்டீங்க?”, சம்யு.
சித்து குறுக்கிட்டு,“அதுக்காக யோகிக்கு அவுட்டோர் கேம்ஸ்தான் தெரியும்னு நெனச்சிராதீங்க. அவனுக்கு இன்டோர் கேம்சும் நல்லாத் தெரியும். அதே மாதிரி, எனக்கு கராத்தேல ஒன்னுமே தெரியாதுன்னு நெனச்சிராதீங்க. அவன் அளவுக்கு என்னாலயும் டஃப் கொடுக்க முடியும்”
“ம், இன்ட்ரஸ்ட்டிங். அப்பறம்?”, ரிது.
“கராத்தே மட்டும் இல்ல, காலேஜுக்கு வெளில சிலம்பமும் நாங்க கத்துகிட்டோம். இன்னக்கி வரைக்கும், அப்பப்ப பிராக்ட்டிஸ் பண்ணிகிட்டுத்தான் இருக்கோம். ஆனா, ரெண்டுபேரும் ஆவுட்டோர் கேம்ஸ் எடுத்து காம்ப்பட்டீசன் போகும் போது, நாங்க ரெண்டு பேருமே ஒருத்தருக்கொருத்தர் மோதிக்கற மாதிரி சூழல் வந்துச்சு. அதுனால சித்து இன்டோர் கேம்ஸ்ல கான்சன்ட்ரேட் பண்ண ஆரம்பிச்சுட்டான். அதுல அவன் மெடலா வாங்கி வச்சுருக்கான். நானும் அதக் கத்துகிட்டு அவனுக்கு கம்பெனி குடுப்பேன். அவனும் எனக்கு ஈக்வலா கராத்தே, கம்பு சுத்துரதுன்னு ரெண்டுலயும் பயங்கரமா பர்ஃபார்ம் பண்ணுவான்”, யோகி அவர்களின் விளையாட்டு ஆர்வத்தை விளக்கமாகக் கூறினான்.
“இன்னக்கும், ஹாஸ்டல் மாடில அல்லது காரிடார்லனு, கராத்தே, கம்பு சுத்தறதல்லாம் ப்ராக்டீஸ் பண்ணிட்டுதான் இருக்கோம்”, என்றான் சித்து.
“ஆனா, இன்டோர் கேம்ஸ்ல, செஸ் ரெண்டு பேரும் ப்ராக்டீஸ் பண்ண முடியுது. டேபிள் டென்னிஸ்தான் அரேஞ்ச்மென்ட் இல்லாம, பிராக்டீஸ் பண்ண முடியல”, என்று தங்கள் பயிற்சியின் நிறை குறைகளை கூறினான் யோகி.
“அரேஞ் பண்ணிருவோம்”, என்றாள் ரிது தன்னை அறியாமலே.
“எப்படி?”, யோகி.
“அதெல்லாம், அதது நடக்க வேண்டிய நேரத்துல நடக்கும் யோகி, டோன்ட் ஒர்ரீ, பீ ஹேப்பி!”, ரிது.
“நேரமாச்சு, போலாமா!” என்றாள் யாஷிகா.
“ஆமா, இன்னிக்கு சண்டேல்ல. இவ ஹாஸ்டலுக்கு சீக்கிரமா போகனும்”, என்று சம்யுவும் கூறினாள்.
அனைவரும் எழுந்து சிறிது நேரம் அலைகளில் கால்களை நனைத்து விளையாடிவிட்டு, அவர்கள் ஏற்கனவே ஏற்பாடு செய்துவிட்டு வந்த ரெஸ்ட்டாரென்ட்டுக்குள் நுழைந்து உணவை முடித்தனர்.
சம்யுக்தாவே செலவுகளை ஏற்றுக்கொண்டாள். சித்து கொடுப்பதற்கு எவ்வளவோ முயன்றும், அவனை கொடுக்க விடவில்லை மற்ற இரண்டு தோழிகளும். யோகி அவர்கள் அனைவரின் ஒற்றுமையையும் பார்த்து ரசித்தவண்ணம் இருந்தான்.
இரவும், பகலும் சந்திக்கும் அந்தி நேரம் வந்து, கடலின் அழகை மெருகூட்டிக் காண்பித்தாலும், அதையெல்லாம் கண்டு ரசிக்க அவர்களுக்கு நேரமில்லை. அங்கிருந்து கிளம்பிவிட்டார்கள்.
©©¨©©
விடுதி அறைக்குள் வந்த சித்துவும், யோகியும் சண்டை போட்டதால், தங்கள் உடைகளில் ஏதும் கிழிந்திருக்கிறதா என்று பார்த்துக்கொண்டனர். ஒன்றும் இல்லை.
“நம்மளப் பத்தி கேக்குறதுக்குன்னே இன்னக்கி வரச் சொல்லிருக்குங்களோ?”, சித்து.
“நம்மளப் பத்தி இல்ல, ஒன்னப் பத்தி!”, என்று திருத்தினான் யோகி.
“ஆமாடா மச்சி! ஒன்னப் பத்தி ஒரு வார்த்த கூட கேக்கலயே?”, அப்பொழுதுதான் யோசித்தான் சித்து.
“கிட்டத்தட்ட இது அப்பா, அம்மா ஏற்பாடு பண்ணாத எங்கேஜ்மென்ட் மச்சி”, யோகி.
“ஓ! கத அப்புடிப் போகுதா!”, சித்து.
“ஆனா, இந்த ரிதுவோட விஷயம் மட்டும் இன்னும் சஸ்பென்சாவே இருக்கேடா!”, யோகி.
“ஆமா, யாஷிகாவோட ஊரு, ஹாஸ்டல்ல தங்கி இருக்கறதுன்னு, சின்னச் சின்ன விஷயங்கள் தெரியுது. ஆனா, இந்த ரிது, திடீர்னு வருது! போகுது!”, சித்து.
“மத்த ரெண்டு பேரவிட ரிது கொஞ்சம் ரிச்சாத் தெரியுது. அது மட்டும் கன்ஃபார்ம். ஆனா அதுக்கு மேல கேக்கவுடாம டபாய்க்கிறா மச்சி! அவளோட அம்மா, அப்பா பத்தியெல்லம் ஒன்னுமே தெரியலயே.”, யோகி.
“அம்மா, அப்பான்னு சொன்னவுடனேதான் எனக்கு எங்க வீட்டு ஞாபகம் வருது! நல்ல வேல மச்சி ஞாபகப்படுத்துன!”, சித்து கூறிவிட்டு, அலைபேசியை எடுத்து, தன் தாயாரை அழைத்தான்.
“ஹலோ, அம்மா, நலமா?”
“நலம், நலமறிய ஆவல்”, தாயார் பாமா வழக்கம்போல் பதிலும் கேள்வியுமாக பேசினார்.
“இன்னிக்கு என்ன ஸ்பெஷல்? அப்பா தூங்கிட்டாரா?”
“இல்ல மகனே, வெளிய கொஞ்ச நேரம் வாக்கிங் போய்ட்டு வரேன்னுட்டு கிளம்பினார். இன்னும் வரலயே”
“ஏன் சாப்பிட்டது செரிமானம் ஆகலையா? இல்ல இப்பல்லாம் வாக்கிங் போறத ரெகுலராக்கிட்டாரா?”
“இல்லப்பா, இன்னக்கித்தான் போயிருக்காரு. பக்கத்துல ஒரு கல்யாணத்துக்கு போய்ட்டு வந்தோம். அங்க ஹெவி ஃபூட். வேணாம்னு சொன்னாலும் கேக்கல கல்யாண வீட்டுக்காரங்களோட அன்புத் தொல்லை. அதான் இப்ப வாக்கிங் போய்ட்டு இருக்கார்”
“சரி, சரி ஒங்க ஹீரோவை பாத்துக்கங்க! நீங்களும் ஒடம்பப் பாத்துக்கங்க, நா தூங்கப் போறேன்”, சித்து.
“என்னடா அதுக்குள்ள தூங்கற? எப்பவும் ராத்திரி பத்து மணிக்குக்கூட ஃப்ரெஷ்ஆ பேசுவ! இன்னிக்கு என்னாச்சு ஒனக்கு?”
“ஒன்னுமில்லம்மா, ஒரே ஒர்க் டென்ஷன். அதான் அப்படியே ரிலாக்ஸ்ஆ பீச்சுக்குப் போய்ட்டு வந்தோம், அதான் கொஞ்ச அசதி”
“போன வாரந்தான போனதா சொன்னீங்க?”
“ஆமாம்மா, அது பெசன்ட்நகர். இன்னிக்குப் போனது, திருவான்மியூர்”
“ஓ! வாரம் ஒரு பீச்சுன்னு சுத்திரிங்க போல!”
“ஆமா, வார வாரம் ஆரவாரம்!”, என்று விளையாட்டாய் உண்மையையும் கலந்து பேசிக்கொண்டிருந்தான் சித்து.
ஆரவாரம் தொடரும்!
©©|©©