AnthaMaalaiPozhuthil-33
AnthaMaalaiPozhuthil-33
அந்த மாலை பொழுதில்…
அத்தியாயம் – 33
“ஏன், என் அண்ணனை மிரட்டி என்னை கல்யாணம் பண்ண?” அவனை பார்த்து கூர்மையாக கேட்டாள் இந்திரா.
பசுபதியின் கண்கள் இடுங்கி அவளை கூர்மையாக பார்த்தது.
“என் அண்ணன், உன் அளவுக்கு, பலம் இல்லாதவன்னு தானே?” என்று அவள் கோபமாக கேட்க, ‘நான் மிரட்டலைன்னு சொன்னா… உன் அண்ணன் சொன்னது பொய்ன்னு சொன்னா… இவள் தாங்குவாளா?’ என்ற கேள்வி அவனை இம்சித்தது.
‘தன் மனைவியின், வருத்தத்தை பற்றி தான் ஏன் யோசிக்கிறோம்’ என்று அவனும் சிந்திக்கவில்லை.
தான் செய்த தவறெல்லாம் மறந்து, ‘தன் கணவனின் தவறை உரிமையோடு, கண்டித்து கொண்டிருக்கிறோம்’ என்று அவளும் உணரவில்லை.
அவளை ஒதுக்கி விட்டு, “நான் தான் அத்தனை நல்லவன் இல்லைனு சொல்றேனே.” என்று அவன் கடுகடுக்க, அவளும் விலகி கொண்டாள்.
“நீ உன் வேலையை பார்க்க கிளம்பு.” அவள் கூற, “விடிய காலையில், என் சோலியை கெடுத்துட்டு இப்ப என்ன?” என்று அவன் புன்னகைக்க, அவளும் புன்னகைத்து கொண்டாள்.
“நான் உன் கூட தான் இருக்க போறேன்.” அவன் முடித்துவிட, மேலும் என்ன பேசுவது என்று தெரியாமல் இந்திரா, அமைதியாக தன்னுள் மூழ்கி கொண்டாள்.
டார்ஜிலிங்கில், விடியற்காலையில் நேரம் சற்று கடந்திருந்தாலும், இன்னும் முழுதாக விடியவில்லை.
ரகுநந்தன், தன் கைவளைவில் உறங்கி கொண்டிருக்கும் மனைவியை பார்த்தான்.
அவன் முகத்தில், ஒரு புன்னகை.
அபிநயாவின் முகத்தில், படர்ந்திருக்கும், அந்த சுருண்ட முடியை அவன் விலக்க அவளும் விழித்துக் கொண்டாள்.
அவன் புன்னகை, அவளையும் தொற்றி கொண்டது.
“என் வாழ்வில் எனக்கு ஒரு பெண்ணை இவ்வளவு பிடிக்குமுன்னு நான் நினைச்சி பார்ததில்லை.” அவன் அவள் முகத்தில் கோலமிட்டபடி கூற, அவள் உரிமையோடு, அவன் மார்பில் சாய்ந்து கொண்டு, அண்ணாந்து அவன் முகம் பார்த்தாள்.
“என் அம்மா கிட்ட கூட பார்க்காத நேர்மையை நான் உன் கிட்ட பார்த்தேன். அம்மா, அக்கா விஷயதில் நேர்மையா நடந்துகில்லை. எனக்கு, அதில் அம்மா மேல் வருத்தம். அக்காவை பத்தி, அப்பா கிட்ட முன்னமே சொல்லிருகனும்.” அவன் நிறுத்தினான்.
“பொண்ணூ வாழ்க்கைன்னு…” அவள் இழுக்க, “பொண்ணுனா, செய்றது தப்பில்லைன்னு ஆகிருமா?” அவன் குரலில் கோபம்.
“என் கனவு? இன்னும் அதுக்கான, வேலையை நாம் ஆரம்பிக்கலை.” அவன் சற்று ஏமாற்றமாக கூற, “எல்லாம் சரியாகிரும்.” அவள் சமாதானமாக கூறினாள்.
அவள் வாடிய குரலில், அவன் தன்னை சமன் செய்து கொண்டு, “கிளம்பு, டீ குடிக்க போகனும்.” அவன் அவள் நீளமான முடியை அலைந்தபடியே கண் சிமிட்ட, “என் கிட்ட பிடித்ததை சொன்னீங்க. பிடிக்காததை சொல்லவே இல்லையே?” அவள் வம்பிழுக்க, அவன் பெருங்குரலில் சிரித்தான்.
“கிளம்பு சொல்றேன்.” அவன் கூற, இருவரும் கிளம்பினர்.
அவள் ஜீன்ஸ், வானத்தை ஒட்டிய நிறத்தில் டாப்ஸ் அணிதிருந்தாள். அவனும், அதை ஒட்டிய நிறத்தில் ஜீன்ஸ், டீ- ஷர்ட் அணிந்திருந்தான்.
தூக்கி க்ளிப் மாட்டியிருந்த அவள் தலை முடி, அந்த குளிரில் வெடவெடத்து கொண்டு நின்றது.
அந்த மர வீட்டின், வரண்டாவில் நின்று கொண்டு, அங்கிருக்கும் பசுமையை ரசிக்க ஆரம்பித்தாள் அபிநயா.
அவள் நாசியை, அந்த தேயிலை வாசம் துளைக்க, அருகே இருக்கும் தேயிலை தோட்டத்தின் பக்கம் தன் தலையை திருப்பினாள்.
வரிசையாக இருக்கும் தேயிலை செடிகள். தலையில் துணியை கட்டிக்கொண்டு, கூடையை பின் பக்கமாக தொங்க விட்டுக்கொண்டு சிரித்த முகமாக வேலை செய்து கொண்டிருந்த பெண்கள்.
அவனும் கதவை மூடிக்கொண்டு அவள் அருகெ நின்று கொண்டான்.
“குளிராத மாதிரியே, எப்படி வேலை பாக்குறாங்க.” அவள் விழிகள், அவள் கேள்வியோடு விரிய, “உன் கண்ணுக்கு கண்மை ரொம்ப அழகா இருக்கு.” அவன் கூற, அவள் முகத்தில் ஒரு நாண புன்னகை.
“நான், தினமும் கண்மை போடுவென்.” அவள் கூற, “ஓ! இன்னைக்கு ரொம்ப, அழகா இருக்கே! என்ன காரணமா இருக்கும்?” அவன் முகத்தில் கேலி புன்னகை.
அவள் மனம் அவன் பாஷையை புரிந்து கொண்டு, அவனை மனதோடு, ‘மயக்கும் மன்னவன்…’ என்று திட்டுவது போல் கொஞ்சிக் கொண்டது.
ஏதும் புரியாதவள் போல், “நான் கேட்ட கேள்விக்கு பதில்” என்று அவனை பிடிவாதமாக பார்த்தாள்.
“இதை விட, எப்பவும் இங்க குளிர் அதிகமா இருக்கும். அதனால, இந்த குளிர் இவங்களுக்கு பழக்கம் தான்.” என்று அவன் கூற, இருவரும் மர வீட்டிலிருந்து கிளம்பி காரை நோக்கி நடந்தனர்.
“எது, பிடிகாதுன்னு கேட்டியே, சொல்லட்டுமா? அவன், அவள் காதோரமாக மெல்ல கிசுகிசுத்தான்.
‘என்ன?’ என்பது போல் அவள் விழி உயர்த்த, “உன் பிடிவாதம். சில நேரம் பிடிக்கும். பல நேரம் பிடிக்காது. மத்தவங்க கிட்ட பிடிவாதம் பண்ண பொழுது பிடிக்கும். என் கிட்ட பண்ணும் பொழுது பிடிக்காது.”
அவன் பேசி கொண்டிருப்பது பின் ஒரு நாள், எத்தனை சிக்கலை கொண்டு வர போகிறது என்று தெரியாமல் பேசிவிட்டு கலகவென்று சிரித்தான் ரகுநந்தன்.
அபிநயா, அவனை முறைத்தாலும் அவன் புன்னகையோடு இணைந்து கொண்டாள்.
அவள் இடையை சுற்றி வளைத்து, தன்னோடு சேர்த்து கொண்டு நடக்கலானான் ரகுநந்தன்.
‘இவுகளிடம், நான் இன்னும் சில விஷயங்களை சொல்லனும். எப்ப சொல்லுவது?’ என்ற கேள்வியோடு நடந்தாள்.
அவர்கள் பத்மஜா நாயுடு விலங்கியல் பூங்கா சென்றனர். புலி, நரி, போன்ற பயங்கர விலங்குகளோடு, ரெட் பாண்டா போன்ற அழகிய விலங்குகளை கண்டு ரசித்தனர்.
ரகுநந்தன், அவளை ரசித்தானா? இல்லை வந்த இடத்தை ரசித்தானா? என்பது கேள்விக்குறி. அபிநயா, இதை நேரிடையாக கேட்க, “எனக்கு எதை பிடித்திருக்கிறதோ, அதை ரசிக்கிறேன்.” என்று அவன் தெளிவாக கூறிவிட, அவள் தலையில் தட்டிக்கொண்டு இயற்கையை ரசிக்க ஆரம்பித்தாள்.
அவளின் அனைத்து செய்கைக்கும், அவன் திருமண முடிந்த நாள் முதல் ரசிகன் தான். இப்பொழுது பரம ரசிகனாக மாறி இருந்தான்.
கன்செஞ்சுங்கா மலை உயரத்தில் அசந்து தன் கைகளை கன்னத்தில் வைத்து, “ஆ…” வென்று அவள் வாயை பிளக்க, அவன் அவளை படம் பிடித்து கொண்டான்.
அதன் பின், ரோப் கார் பயணம், டைகர் ஹில்ஸ் இயற்கை காட்சி என்று இருவரும் கைவளைவுக்குள் ரசித்தனர்.
ஒருவர் கைவளைக்குள் ஒருவர் வர, இடத்திற்க்கு ஏற்ப அச்சம், குளிர், தனிமை, ஆச்சரியம், மலையில் நடக்க வசதி இல்லை என்று காரணம் மட்டுமே மாறி கொண்டிருந்தது. அவர்கள் நிலை மட்டும் மாறவே இல்லை.
தேனிலவு பயணம் அல்லவா?
மலை அடிவாரத்தில், இயற்கையை ரசித்தபடி, அவள் அமர்த்திருக்க, அவள் மடியில் தலை வைத்து அவன் படுக்க, அவள் அவன் தலையை கோதியபடி “நந்தன்…” என்று மெதுவாக அழைத்தாள்.
“அபி… என்ன விஷயம். குரல் வாத்தியரம்மா மாதிரி இல்லையே? என் அபி போல இருக்கு. விஷயம் பெருசோ?” என்று அண்ணாந்து, தன் மனைவியின் முகம் பார்த்து கேட்டான் ரகுநந்தன்.
அவள் தலை கோதுவது நின்று விட, அவள் கையை தன் கைகளுக்குள் பொதித்து கொண்டான் அவன்.
‘சொல்…‘ என்று தைரியமளிப்பது போல்.
” நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும். நீங்க பொறுமையா கேட்கணும். அதை, யார்கிட்டயும் கேட்க கூடாது. அதை வைத்து யார் கிட்டயும் கோபப்பட கூடாது.” அவள் பெரும் பீடிகையோடு ஆரம்பித்தாள்.
“ம்…” அவள் பேசட்டும், என்றும் அவன் மௌனித்துக் கொண்டான்.
“அத்தானோட அப்பாவும், உங்க அப்பாவும், என் அப்பாவும் நண்பர்கள்.” அவள் கூற, ‘தெரியும்…‘ என்பது போல் ரகுநந்தன் தலை அசைத்தான்.
“பசுபதி அத்தானோட அப்பா, வியாபாரத்துல கொஞ்சம் அகல கால் வைப்பாக. என் அப்பாவுக்கு அது பிடிக்காது. இதை சொல்ல போக தான் முதலில் அப்பாவுக்கும், மாமாவுக்கும் சண்டை ஆரம்பமாச்சு. ” என்று நிறுத்தினாள் அபிநயா.
“அத்தைக்கு, அது தான் அத்தானோட ஆத்தாவுக்கு, எப்பவும் அவுக செய்றதுதேன் சரி. மாமா செய்றதுதேன் சரி. அதனால், என் அப்பாவுக்கும், பசுபதி அத்தான் ஆத்தாவுக்கும் இடையில் சண்டை பெருசாகிருச்சு.” என்று அவள் கூற, அவன் தலை அசைத்து கேட்டு கொண்டான்.
“அக்கா தம்பி ரெண்டு பேரும் ஒரே மாதிரி பிடிவாதம்.” தன் தந்தையையும், பசுபதி தாயையும் ஒருசேர கூறிக்கொண்டாள்.
“இந்த நேரம், உங்க வீட்டில் சுரேஷ் அத்தான் உங்க வீட்டு பிசினெஸ்ஸை பார்க்க ஆரம்பிச்சிருக்காக.” என்று அபிநயா கூற, ‘தான் படிக்க சென்ற நேரம்.‘ என்று மனதில் எண்ணிக்கொண்டான் ரகுநந்தன்.
“உங்க அப்பா மூலமா, உங்க சுரேஷ் அத்தானுக்கும், பசுபதி அப்பாவுக்கும் அறிமுகம்.” என்று அபிநயா கூற, ரகுநந்தன் என்ன நடந்திருக்கும் என்று சிந்திக்க ஆரம்பித்தான்.
“உங்க சுரேஷ் அத்தான், பசுபதி அத்தானோட அப்பா கிட்ட யாருக்கும் தெரியாமல் பணம் நிறைய வாங்கி, ஏதோ பிசினெஸ் செய்யறதா சொல்லி நிறைய பணத்தை ஏமாத்திட்டாக.” அவள் கூற, ரகுநந்தன் படக்கென்று எழுந்து அமர்ந்தான்.
“பசுபதி அத்தானோட அப்பாவுக்கும் ஆசை… பணத்தை அள்ளி கொடுத்திட்டாக. விசாரிக்காம.” அவள் நிறுத்த, ரகுநந்தனின் விழிகள் அதிர்ச்சியில் விழி பிதுங்கி நின்றது.
“ உங்க சுரேஷ் அத்தானும், எங்கயோ ஏமாந்துட்டாக.” அபிநயா, மென்று விழுங்கினாள்.
“விசாரிக்கம்மா இப்படி ஏமாந்துட்டோமேன்னு, பசுபதி அத்தானோட அப்பா இறந்திட்டாக.” மேலும் சொல்ல முடியாமல், அபிநயா நிறுத்த, அவளுக்கு தண்ணீரை நீட்டினான் ரகுநந்தன்.
நடந்ததை ரகுநந்தனால் யூகிக்க முடிந்தது.
“அத்தை, அது தான் அத்தானோட ஆத்தா… என்னவோ, எங்க அப்பா வேணுமினே இதை தடுக்காத மாதிரி கோபப்பட்டு ஏதோ பேச… சண்டை பெருசாகி, இன்னைக்கு பேச்சு வார்த்தை இல்லாத அளவுக்கு ஆகிருச்சு.” என்று மடமடவென்று கூறி முடித்தாள் அபிநயா.
ரகுநந்தனின் பார்வை கூர்மையாக, அவள் மேலும் தொடர்ந்தாள்.
“இது உங்க அப்பாவுக்கு தெரிய வரத்தான், அவுக தான் காரணமோன்னு உங்க அப்பாவுக்கு உடம்பு சரி இல்லாமல் ஆகிருச்சு.” அபிநயா கூற, அவன் பிடி இறுகியது.
அவன் வலியை ஏற்றுக்கொள்வது போல், அவள் அவன் கையை இறுக பற்றிக் கொண்டாள்.
“அத்தைக்கு இது தெரியும். உங்களுக்கு தெரிஞ்சா…” அவள் தடுமாற, அவன் கண்கள் கோபத்தில் சிவந்தது.
ஏதோ இருக்கிறது என்று அவனுக்கு தெரியும்.
‘ஆனால், இவ்வளவா? இரு மரணம். பசுபதியும், நானும் தந்தையை இழந்திருக்கிறோம்.‘ அவன் சினம் வெளியே தெரியாதவாறு, முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.
அவன் தோள் தொட்டு, “இங்க பாருங்க.” அவள் கூற, அவன் திரும்பவில்லை.
அவன் முகத்தை தன் பக்கம் திருப்பி, “எனக்கு இதெல்லாம் அப்பா, சொல்லி தான் தெரியும். அத்தானுக்கு கூட முழுசா தெரியாது. ஆனால், உங்களுக்கு தெரியணுமுன்னு தான் சொன்னேன். நீங்க, இதெல்லாம் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காதீங்க.” அவள் சமாதனம் செய்ய, “அம்மா, அக்கா, அத்தான் எல்லாருக்கும் எல்லாம் தெரியும் அப்படி தானே?” என்று அவன் காட்டமாக கேட்டான்.
“அத்தை பாவம்.” அவள் கூற, “அம்மாவுக்கு தெரியும். அப்படி தானே?” அவன் பிடிவாதமாக அதே கேள்வியில் நின்றான்.
“அத்தை உங்களை நம்பி தான் இருக்காக. உங்க கிட்ட சொல்ல பயம். நீங்க, அவுகளை வெறுத்துருவீகளோன்னு பயம்.” அவள் கூற, அவன் கண்கள் கலங்கியது.
அவன் கன்னங்களை கைகளில் ஏந்தி, “கவின்! கவின் நமக்கு முக்கியம் இல்லையா? அவனுக்காக எல்லாத்தையும் விட்டிருங்க. நீங்க கோபப்பட்டா, எல்லாம் கெட்டு போய்டும். கவினை, நீங்க தான் பார்க்கணும். அவன் அம்மா, அப்பா ரெண்டும் பெரும் சரி இல்லை. இப்ப, நீங்க கோபப்பட்டு எதுவும் ஆகப்போறதில்லை.” அவள் அவனுக்கு பொறுமையாக கூறினாள்.
அவன் அவள் தோள் சாய்ந்து, அவளை அணைத்து கொண்டான்.
அதில் அவன் ஆறுதல் மட்டும் தேடவில்லை. இது போல் மனைவி அமைந்தது என் வரம் என்ற பெருமையும், அன்பும் கொண்டான் அந்த காதல் கணவன்.
‘நான் இப்ப கூட சொல்லிருக்க மாட்டேன். ஆனால், நீங்க எப்பவும் கவனமா இருக்கனும்முனு தான் சொன்னேன்.‘ என்று மனதோடு எண்ணிக்கொண்டு, அவன் அன்பில் கரைந்து போனாள் அவன் பிடிவாதக்கார அன்பு மனைவி.
நாட்கள் மாதங்களாக அதன் போக்கில் நகர்ந்தது. சுமார் ஐந்து மாதங்கள் கடந்திருந்து.
இரண்டு நாட்களாக, சற்று தலை சுற்றுவது போல் உணர்ந்தாள் அபிநயா.
அன்று, விஷயத்தை கணித்துவிட்ட அபிநயா, ‘இனிப்போடு நந்தனிடம் விஷயத்தை முதலில் கூற வேண்டும்.’ என்று எண்ணி கொண்டாள்.
பல பரிசுப் பொருட்களை வாங்கி ரகுநந்தனிடம், ‘எப்படி விஷயத்தை கூற வேண்டும்?’ என்று கனவு கண்டவளாக, தன் வயிற்றை ஆசையோடு தடவினாள்.
அவள் முகத்தில், வெட்க புன்னகை. ‘அம்மா, கிட்ட சொல்லுவோமா?’ ஒரு நொடி சிந்தித்தாள்.
“இல்லலை, முதலில் நந்தன் கிட்ட தான் சொல்லுனும்.” சந்தோஷமாக தனக்கு தானே முணுமுணுத்துக் கொண்டாள் அபிநயா.
‘என்ன இனிப்பு செய்யலாம்?’ என்று யோசித்தபடி, ‘கவினுக்கு சாக்லேட்ஸ் பிடிக்கும். அவன் ஹைபெர் அக்டிவ்ன்னு நாம வெளிய சாக்லேட்ஸ் வாங்கி கொடுக்கறதில்லை.’ என்று யோசித்தபடி சமையலறைக்குள் நுழைந்தாள்.
கருப்பட்டியை பாகு காய்ச்சி, வருத்த ராகி மாவோடு சேர்த்து சற்று கோக்கோ பவுடர் சேர்த்து கிண்டி இறக்கி, விதவிதமான பொம்மை வடிவம் கொண்ட நெய் தடவிய சாக்லேட் மோல்டில் ஊற்றினாள்.
சிறிது நேரத்தில், அதை எடுத்து தங்க நிற ஃபாயிலில் சுற்ற, “அட! கடையில் கூட இவ்வளவு அழகா இருக்காது.” என்று பவானியம்மாள் ஆச்சரியபட்டார்.
“சாப்பிட்டு பாருங்க அத்தை.” அவள் ஒரு சாக்லேட்டை நீட்ட, “என்ன விஷேஷம்?” அவர் கண்களில் ஆர்வம் மின்ன கேட்டார்.
அபிநயாவின் முகத்தில் தேஜஸோடு கலந்த வெட்க புன்னகை. அவர் கணித்து விட்டார்.
‘நந்தனிடம் தான் முதலில் விஷயத்தை கூற வேண்டும்.’ அவள் மனம் அடித்துக் கொண்டது.
“கவினுக்கு…” அவள் தடுமாற, தன் மருமகளின் மனதை கணித்தவர் போல் மேலும் தோண்டி துருவாமல் புன்னகைத்து கொண்டார்.
நேரம் மாலையை நெருங்க, கவினை அழைத்து கொண்டு கடுகடுத்த முகத்தோடு உள்ளே நுழைந்தாள் ரேவதி.
“கவின்….” அபிநயா அவனை நெருங்க, “அங்கயே நில். இனி நீ கவின் கிட்ட நெருங்க கூடாது.” அதிகாரமாக ரேவதி கூற பவானியம்மாள், அபிநயா இருவரும் அவளை அதிர்ச்சியாக நின்றனர்.
ரேவதியின் குணம் அனைவரும் அறிந்தது தான். ஆனால், இன்றைய பரிமாணம் இவர்களுக்கு சற்று அதீத அதிர்ச்சியாக இருந்தது.
கவின், இவர்கள் பேசும் விதம் புரியாமல், “ஓ…” என்று சத்தமாக அழ ஆரம்பித்தான்.
அவனை சமாளிக்கும் விதமாக, அவனிடம் பெரிய சாக்லேட்டை அவள் நீட்ட, “கவினுக்கு, அதை கொடுக்காதீங்க. அவனுக்கு ஒத்துக்காது.” அபிநயா சற்று பதட்டமாக கூறினாள்.
அப்பொழுது, ரகுநந்தன் வீட்டிற்குள் உள்ளே நுழைந்தான்.
‘இவுக என்ன இந்நேரத்துக்கு வராக?’ என்ற கேள்வியோடு அபிநயா ரகுநந்தனை பார்க்க, பவானியம்மாளும் அதே கேள்வியோடு தன் மகனை பார்த்தார்.
“அக்கா, எதுக்கு என்னை இப்ப வீட்டுக்கு வர, சொன்ன?” என்று ரகுநந்தன் ரேவதியை பார்த்து கேட்க, ரேவதி அபிநயாவை வெறுப்பாக பார்த்து, ரகுநந்தனை பார்த்து பேச ஆரம்பித்தாள்.
“கவினுக்கு நான் அம்மாவா? இவ, அம்மாவா?” தன் தம்பியை பார்த்தபடி, அபிநயாவின் கேள்விக்கும் பதில் போல் ரேவதியின் குரல் சீறியது.
ரகுநந்தன் தன் நெற்றியை சுருக்கி மனைவியை பார்த்தான்.
‘ரேவதி ஏதோ சண்டைக்கு தயாராகுற மாதிரி இருக்கே?’ அவர் சிந்தித்தது போல் தான் நடந்தது.
ஆனால், ரகுநந்தன் அபிநயாவை கைநீட்டி அடிப்பான் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அபிநயாவும், ரகுநந்தனின் இந்த செய்கையை எதிர்பார்க்கவில்லை.
தன் கன்னத்தை பிடித்து கொண்டு, ரகுநந்தனை குரோதமாக பார்த்தாள். அத்தனை, ஆர்வமாக அவள் சொல்ல நினைத்ததை சொல்ல முடியாமல், இந்த நாள் இப்படி முடியும் என்று அவளும் எதிர்பார்க்கவில்லை.
பொழுதுகள் விடியும்…