Oh Papa Laali–Epi 8

அத்தியாயம் 8

சிங்கப்பூர் ரிவர் என அழைக்கப்படும் ஆறு அழகாக அந்த நாட்டினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த ஆற்றில் டிக்கெட் வாங்கி படகு சவாரி செய்யலாம். ஆற்றில் பயணித்தப்படியே ஒரு பக்கம் வானுயர நிற்கும் மாடர்ன் கட்டிடங்களையும், மறுபக்கம் இன்னும் பழமையைக் கட்டிக் காட்டும் பழைய கட்டிடங்களையும் கண்டு களிக்கலாம்.

 

“ஏன்டா குண்டா அந்தப் பொண்ண ரிஜேக்ட் பண்ண?” என நண்பனை பார்த்துக் கடுப்புடன் கேட்டான் சிவா.

நண்பர்கள் இருவரும் பூமெராங் பிஸ்ட்ரோவுக்கு பீர் அண்ட் பர்கர் நைட்டுக்கு வந்திருந்தார்கள். புதன் அன்று அங்கே பீரும் பர்கரும் செட்டாக கொஞ்சம் மலிவு விலையில் கிடைக்கும். மாதம் ஒரு முறை இங்கே வந்து தொலைக்காட்சியில் பந்து விளையாட்டைப் பார்த்தப்படி பீர் அடிப்பதை வழமையாக கொண்டிருந்தனர் இருவரும்.

“சிவா டேய்! நான் ஒரு கேள்வி கேக்கறேன், அதுக்கு முதல்ல பதில் சொல்லு! அப்புறம் அந்த ஏஞ்சல நான் ஏன் ரிஜேக்ட் பண்ணேன்னு சொல்லறேன்!”

“கேளும், கேட்டுத் தொலையும்!”

“என்னை நண்பனா பார்க்காம ஒரு ஸ்ட்ரேஞ்சரா பார்த்து கொஞ்சம் வர்ணிச்சு சொல்லேன்!”

“நண்பனா பார்த்தாலும் சரி, ஸ்ட்ரேஞ்சரா பார்த்தாலும் சரி குண்டன குண்டன்னு தான் சொல்லுவாங்க மைக்”

“அடேய்! பீ சீரியஸ்”

“சரி சரி சொல்லுறேன்! காக்காவையும் உன்னையும் பக்கத்துல நிப்பாட்டுனா நீ கலரா தெரிவ! யோகி பாபுவையும் உன்னையும் பக்கத்துல நிப்பாட்டுனா நீ ஒல்லியா தெரிவ! பச்சன் மகனையும் உன்னையும் பக்கத்துல நிப்பாட்டுனா நீ கட்டையா தெரிவ”

“எக்ஷாக்ட்லி! இப்ப புரியுதா நான் ஏன் அவள வேணாம்னு சொன்னேன்னு! அவ ஏஞ்சல் மாதிரி ரொம்ப அழகா இருக்காடா! நீளமா நெளி நெளியான முடி, செக்சியான கண்கள், பால் கலர்ல ஸ்கின், கூரான மூக்கு, ஆப்ரிகோட் கலர்ல உதடுன்னு அவ ஒரு கும்தாதாடா! நானோ ஒரு கருப்பு அண்டாடா! சரிப்பட்டு வருமா சொல்லு?”

“ஆமாடா சரிப்பட்டு வராதுதான்”

“பாவி, நீயெல்லாம் ஒரு நண்பனாடா!”

“என்ன மைக், திடீர்னு இப்படி ஒரு சந்தேகம்? ஸ்கூல் படிக்கறப்போவே நாம என்னைக்குமே இணை பிரிய கூடாதுன்னு கையில எச்சி துப்பி ஹை பை பண்ணிக்கிட்டோமே மறந்துப் போச்சா? மூனு டின் பீர் உள்ள போனதும் என்னைப் பார்த்து நண்பனானு கேக்கற! ஓ மை கடவுளே!”

“அப்படித்தாண்டா கேப்பேன் என் வெண்ட்ரு! ஒரு உண்மையான நண்பனா இருந்தா, நான் பொலம்பனதுக்கு என்ன பதில் சொல்லிருக்கனும்?”

“அதையும் நீயே சொல்லு மைக்!”

“நீ கருப்பு அண்டா மாதிரி இருந்தாலும், குணத்துல குங்பூ பண்டா! அன்பானவன், குணமானவன், பாசக்காரன், மொத்தத்துல கடைஞ்செடுத்த சொக்கத்தங்கம். உன்னை விட அவள வேற யாருடா நல்லாப் பார்த்துப்பான்னு சொல்லனும் மச்சி! அதுதான் ஒரு நண்பனுக்கு அழகு! நீயெல்லாம் நண்பன் இல்லடா, கண்ணுல தண்ணி வர வைக்கற ஆனியன்”

“ஓகே, ஓகே! வெங்காயம் மாதிரி விலைமதிப்பற்றவன்னு சொல்லற! தேங்க்ஸ் மைக்”

“போடா வெண்ணெய்! எனக்கு அந்த வான்மதிய ரொம்ப புடிச்சிருக்குடா சிவா! ரொம்ப, ரொம்ப, ரொம்ப புடிச்சிருக்கு! புடிச்சிருந்தும் புடிக்கலன்னு சொல்ற கொடுமை இருக்கே! அது சாவ விட கொடுமைடா! எனக்கு வான்மதி வேணும்டா சிவா! வாங்கிக் குடு”

“மச்சி அதுக்குள்ள மப்பாயிட்டியா? வான்மதிய என்ன தகாஷிமாயாவலயா (ஷோப்பிங் மால்) விக்கறாங்க, காசு குடுத்து வாங்க? உன் உடம்புக்கு மூனு பீர்லயே மப்பாவறதுலாம் பீர் கம்பனிக்காரனுக்கே கேவலம்டா!”

“மைக், அவ கண்ணுல காதல் டன் டன்னா வழியுதுடா! ஐ லவ் யூன்னு அவ சொன்னப்போ கண்ணதான்டா பார்த்தேன்! அதுல எனக்கான காதல் கடலளவு தெரிஞ்சதுடா மச்சி! இந்த சிங்கப்பூர்ல எவ்ளோ ஸ்டைலா, ஹேண்ட்சமா, ட்ரேண்டியா இருக்கானுங்க நம்ம பசங்க! அவனுங்கள எல்லாம் விட்டுட்டு என்னை ஏன்டா லவ் பண்ணுறா? சொல்லு மச்சி, சொல்லு!”

“கொல்லு மச்சி கொல்லுன்னு சொல்லு, இப்பவே இங்கயே உன்னைக் கொன்னுப் போடறேன். அத விட்டுட்டு எனக்கே தெரியாதத சொல்லு சொல்லுன்னா என்னன்னுடா சொல்லறது ராஸ்கல்!”

“மச்சி, அவ அப்பா யாரு தெரியுமாடா?”

“அவ அப்பா யாருன்னா, கண்டிப்பா அவங்க அம்மாவோட புருஷனா தான் இருக்கனும்”

“இந்த மொக்க ஜோக்குக்கு சிரிக்கனுமா மைக்? அவ அப்பா லெபெர்ட் ஏர்வேய்ஸ் ஓனர்டா!”

“என்னடா சொல்லுற நீ? நெஜமாவா?”

“எங்கம்மா மேல சத்தியமா மைக்”

இப்பொழுது நிஜமாகவே வாயைப் பிளந்தான் சிவா. இருவரும் பார் டேபிளில் ஹை சேரில் அமர்ந்திருந்தார்கள். இவன் எழுந்து நின்று, சூர்யாவை சுற்றி சுற்றி வந்தான்.

“என்னடா?”

“இல்ல மைக்! எந்த ஆங்கில்ல பார்த்தாலும் நீ குட்டிப் போட்ட கொரில்லா கொரங்கு மாதிரிதான் இருக்க! அப்புறம் எப்படி மைக் அவளுக்கு அதுவும் லெபெர்ட் ஏர்வேய்ஸ் வாரிசுக்கு உன்னைப் புடிச்சுச்சு! மச்சி, மச்சி எனக்கு ஒரு விஷயம் கேக்கனும்டா”

“கேட்டுத் தொலை!”

“தாய்லண்ட் போனியே, அங்க எதாச்சும் ஸ்ட்ராங்கான சொக்குப் பொடி வாங்கிட்டு வந்துட்டியா? மிச்ச மீதி இருந்தா எனக்கும் கொஞ்சம் குடுடா! உனக்குப் புண்ணியமா போகும்”

“என் வாயில கலர் கலரா வந்துரும்! நானே சோகத்துல இருக்கேன்டா சிவா!”

“எதுக்கு சோகம்? இல்ல எதுக்கு சோகம்ங்கறேன்! காதலுக்கு கண்கள் இல்ல மானேன்னு யாரோ பாட்டு படிச்சாங்க! அது உன் விஷயத்துல கரேக்டா இருக்குடா மைக்! அவ கண்ணுல காதல் வழியுதுன்னு சொல்லுற! உன்னை ரொம்ப நாளா ஃபோலோ பண்ணுறான்னு சொல்லுற! வில் யூ மேரி மீன்னு கேக்கறான்னு சொல்லுற! நீயும் அவ அழகுல மயங்கிக் கிடக்கற! அப்புறம் என்னடா பிரச்சனை? ஓகே பண்ணிட்டு, அவளுக்குப் புருஷனா கம்மிட் ஆகிரு”

“இல்லடா அது சரி வராது! என்னமோ ஒரு வேகத்துல என்னைப் புடிச்சிருக்குன்னு பின்னால சுத்தறாடா! ஆனா எந்தப் பொருத்தமும் இல்லாத இந்த காதல், கல்யாணம் எல்லாம் கதைல கேட்க நல்லாருக்கும் மச்சி! வாழ்க்கைக்கு சரிப்பட்டு வராது. எனக்கு எங்கக்கா மாமா மாதிரி, எங்கப்பா அம்மா மாதிரி கைப்பிடிச்சவங்க கூட எவ்வளவு பிரச்சனை வந்தாலும் கடைசி வரைக்கும் காதலோட சேர்ந்து வாழனும். இப்போ நம்ம நாட்டுல சில்லி ரீசனுக்கு எல்லாம் டிவோர்ஸ் பண்ணுறாங்க! அந்த மாதிரிலாம் என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியாதுடா! சோ, இந்தக் குண்டனுக்கு ஏத்த குண்டு பாப்பா எங்கயாச்சும் பொறந்துருப்பா! அவளயே நான் கட்டிக்கறேன். மச்சி இன்னொரு பீர் சொல்லுடா! நீளமா பேசி போதை இறங்கிருச்சு”

இன்னும் மூன்று டின் பீர் உள்ளே நுழைந்தவுடன்,

“ஆனாலும் மச்சி அந்த ஸ்கைமூன எனக்கு ரொம்ப, ரொம்ப, ரொம்ப புடிச்சிருக்குடா! அவ எவ்ளோ அழகு தெரியுமாடா! ஏஞ்சல்டா அவ! மதி, என் வான்மதி” என முதலில் இருந்து ஆரம்பித்தான் சூர்யா.

அவனை வீடு கொண்டு சேர்ப்பதற்குள் சிவா சின்னாபின்னமாகிப் போனான்.

பாடுவான்…..