UUU–EPI 1
UUU–EPI 1
அத்தியாயம் 1
சாக்லேட், பண்டைய மாயன் நாகரிகத்தின் போதே பயன்பாட்டில் இருந்திருக்கிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. கொக்கோ பழத்தில் இருந்தே சாக்லேட் செய்யப்படுகிறது. கொக்கோ மரங்களின் தாயகம் அமெரிக்காவாகும்.
மலேசியா
ஓம் எனும் எழுத்தின் நடுவில் கதிர்காமனின் வேலாயுதம் நியான் லைட்டில் மிளிர, அழகாய் காட்சியளித்தது கேமரன் ஹைலண்டின் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம். ‘வேலவா வடிவேலவா’ எனும் பாடல் காற்றில் மிதந்து வர, சாம்பிராணி வாசம் வந்திருந்தவர்களின் நாசியை நிறைத்தது.
கோயிலின் மூலஸ்தானம் மேல் மாடியில் இருக்க, பல படிகள் ஏறித்தான் தண்டாயுதபாணியை தரிசிக்கப் போக முடியும். மேலே நின்றபடி தன் சகோதரனின் வருகைக்காக காத்திருந்தாள் ரதி நந்தனா. அவளின் மூன்று வயது மகள் ரோஷினியோ தாயின் கையில் இருந்து விடுபட தன்னால் ஆன மட்டும் முயன்றுக் கொண்டிருந்தாள்.
“ம்மா! சீனிபாப்பா ச்சாமி கும்புடு!” என மழலையில் மிழற்றியபடி கடவுளின் சந்நிதானத்தைக் காட்டி சிணுங்கினாள் சின்னவள்.
“யாரு நீ? சாமிய கும்புட போற? கைய விட்டா குடுகுடுன்னு கோயில சுத்தி சுத்தி ஓடுவ! உன்னைப் பிடிக்கறதுக்குள்ள எனக்கு அசந்துப் போயிடும்! மாமா வந்துட்டு இருக்காங்க! அதுக்கு அப்புறம் சுத்தி சுத்தி ஓடு, அவங்க உன்னை ஓடி ஓடி பிடிப்பாங்க!”
“மாமா, சீனி மாமா!”
“ஆமாடி சீனியோட மாமாதான்!”
ரோஷினியை சீனி எனத்தான் அழைப்பான் நந்தனாவின் அண்ணன். மாமன் வைத்த செல்லப் பெயரையே தனக்கு அடையாளமாக்கிக் கொண்ட சின்னவள் தன்னை சீனி எனவே கூப்பிட்டுக் கொள்வாள். அழகு குட்டிக்கு தாய்க்குப் பின் தாய் மாமனே எல்லாமுமாக இருந்தான்.
அண்ணன் என்றால் வருடங்களில் மூத்தவன் அல்ல, நிமிடங்களில் இளையவன். அதாவது இவர்கள் இருவரும் இரட்டையர்கள். முதலில் நந்தனா வெளி வர அடுத்து வந்தவனே அவளின் சகோதரன். சின்ன வயதில் இரட்டையர்களில் பிந்தி வந்தவர்களே மூத்தவர் என இவன் சண்டைப் பிடிக்க முதலில் வந்தவரே மூத்தவர் என இவள் சண்டைப் பிடிக்க, நடந்தது முடியைப் பிடித்து இழுத்து பெரிய போர். கடைசியில் பேப்பர் சீஷர் ஸ்டோன் விளையாடி அதில் வென்றதால் அண்ணன் என பிரகடனப்படுத்தப்பட்டான் சகோதரன். அது மட்டுமே அவளிடம், அவன் வென்ற ஒற்றைப் போர்! அதன் பிறகு அண்ணா என குழையடித்து தன் காரியத்தை அழகாய் சாதித்துக் கொள்வாள் ரதி நந்தனா.
இவள் திருமணமாகி கையில் ஒன்றும், வயிற்றில் ஒன்றுமாக நிற்க, அண்ணனோ இன்னும் சிங்கிள் சிங்கமாக சுற்றிக் கொண்டிருக்கிறான்.
“அம்மா விடு! சீனி பாப்பா விடு! அழுவேன், மாமா அடி”
கையை விடாவிட்டால் அழுவேன், மாமா உன்னை அடிப்பார்கள் என மிரட்டிய மகளைப் பார்த்து சிரிப்பு வந்தது அவளுக்கு. சிரித்தால் இன்னும் அடம் பிடிப்பாள் என முறைப்பது போல முகத்தை வைத்திருந்தவள் கையை மட்டும் விடவில்லை. அக்காவின் குரல் கேட்டு வயிற்றின் உள்ளே உள்ளதும் தன் சேட்டையைத் தொடங்கி இருந்தது. அது அடித்த பல்டியில் மூச்சிரைக்க, கையால் வயிற்றைத் தடவிக் கொண்டே,
“எல்லாம் உன் மாமன் குடுக்கற செல்லம்டி! அவன ரெண்டு போட்டா எல்லாம் சரியாகும்! பகல்ல கூட நீ தூங்கல! ஆனாலும் எப்படித்தான் உனக்கு இவ்ளோ எனர்ஜி உடம்புல நிக்குதோ தெரியல போ! உன் கூட சேர்ந்து சின்னதும் இப்பவே என்னைப் படுத்தி வைக்குது! உன் மாமன் ஆடி அசைஞ்சி வரதுக்குள்ள பூஜையை முடிச்சு பிரசாத பானையைக் காலி பண்ணிடுவாங்க” என புலம்பினாள்.
“மாமா கமிங்” என்ற மகளின் குதூகல குரலில் படிகளை ஏறிட்டவளின் கண்கள், மேலே ஏறி வந்துக் கொண்டிருக்கும் தம்பியின் மேல் நிலைத்தது. அவனைப் பார்த்ததும் தாய்க்கும் மகளுக்கும் ஒருங்கே முகம் மலர்ந்துப் போனது.
தமக்கையையும் மருமகளையும் கண்டவனின் அதரங்கள் தானாக புன்னகையைப் பூசிக் கொண்டன. அவன் ரிஷி நந்தன். விஷ்ணுவின் பெயரான நந்தனை அவனுக்கும் பார்வதியின் பெயரான நந்தனாவை இவளுக்கும் வைத்த பெற்றவர்களின் ஆசையெல்லாம் இருவரும் பாச பயிரை வளர்த்து ‘கண்ணில் மணி போல மணியின் நிழல் போல கலந்து பிறந்தோமடா’ என பாட வேண்டும் என்பதே. அவர்கள் நினைப்பை பொய்யாக்கவில்லை இருவரும்.
இரண்டு இரண்டு படிகளாய் தாவி ஏறி வருபவனை நாமும் கொஞ்சம் அவதானித்துப் பார்ப்போம். சராசரி உயரம், உயரத்துக்கேற்ற உடற்கட்டு, ரோஜா வண்ணம் (பெண்களுக்கு மட்டும்தான் இவ்வண்ணம் இருக்க வேண்டுமா என்ன!), தாடையை மறைத்த தாடி, அளவாக ட்ரீம் செய்யப்பட்ட மீசை, தோள் வரை புரளும் கேசம் (பல வண்ண ரப்பர் பேண்ட்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது அவனது சீனி பாப்பாவால்) என மூக்கும் முழியுமாய் அழகாய் இருந்தான். எந்நேரமும் முகத்தில் தவழும் புன்னகை அவனை ஆணழகனாய் காட்டியது.
அவர்களை நெருங்கியவன்,
“சுகர் பேபி” என அழைத்தவாறே குட்டியை அலேக்காய் தூக்கித் தன் தோளில் அமர வைத்துக் கொண்டான்.
கிளுக்கி சிரித்தவள்,
“மாமா, அம்மா அடி” என போட்டுக் கொடுக்கவும் தவறவில்லை.
என்ன ஏது என்று கூட கேட்காமல், மெல்ல தன் தமக்கையின் கையை அடிப்பது போல தட்டியவன்,
“அடிச்சாச்சுடா சீனி! சாமி கும்பிட போலாமா இப்போ?” என கேட்டான்.
“வந்ததே லேட்டு! எவ்ளோ நேரம்டா வேய்ட் பண்ணறது! அதுவும் இவள வச்சிக்கிட்டு!” என முகத்தைத் தூக்கிய நந்தனாவை லேசாக அணைத்து விடுவித்தவன்,
“ஷோப்ல லாஸ்ட் மினிட் ஆர்டர்! கஸ்டமர் ஆல்வேய்ஸ் ஃபர்ஸ்ட்னு தெரியாதா நந்து! அதான் அவங்க செலெக்ட் பண்ணி முடிக்கற வரைக்கும் பொறுமையா ஹேண்டில் பண்ணிட்டு வரேன். சரி வா” என சந்திதானத்துக்கு நகர்ந்தவன் கையைப் பற்றினாள் நந்தனா.
“என்ன?”
“சின்னதுக்கு நீ ஹாய் சொல்லலியாம்! உதைக்குது!”
முகம் மலர மெல்ல குனிந்து,
“சாரிடா குட்டி! மாமா லேட்டா வந்துட்டனா, அதான் அம்மா களைப்பா இருப்பாங்களே சீக்கிரமா சாமி கும்பிட்டுட்டு கிளம்பலாம்னு யோசனையில உங்கள மறந்துட்டேன்! சாரி, சாரி, சாரி” என சொல்ல, ஒவ்வொரு சாரிக்கும் உள்ளே ஃபுட்பால் மேட்சே நடந்தது.
ஒரு வழியாக கடவுளை தரிசித்து விட்டு அர்ச்சனையையும் முடித்து விட்டு ஓரிடத்தில் அமர்ந்தார்கள். சின்னவள் சுற்றி சுற்றி ஓட, அவள் மேல் ஒரு கண்ணை வைத்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தனர் இருவரும்.
“அண்ணா டேய்!”
“வாட்?”
“மெல்ல திரும்பி பாரேன்! அந்த ரெட் டாப்ஸ், மொத புடிச்சு உன்னையே லுக் விட்டுட்டு இருக்கு!”
“நானும் கவனிச்சேன்”
“எப்படிடா? எங்க கூடத்தான் சுத்திட்டு இருக்க, அந்தப் பொண்ணு கவனிச்சத நீ எப்போ கவனிச்ச?”
“ஏன் உங்களுக்கு மட்டும்தான் நுண்ணிய உணர்வு, இன்ஸ்டிங்க்ட் எல்லாம் வேலை செய்யுமா சிஸ்டர்? எங்களுக்கும் வேலை செய்யும்! எங்களுக்கும் யாராச்சும் உத்து உத்து பார்த்தா, அதை உணர்ந்துக்க முடியும்” என சொல்லியவன், ரோஷினியை அள்ளிக் கொண்டு ரெட் டாப்ஸை நாடிப் போனான்.
“போச்சு! போய்ட்டான் கடலை வறுக்க! கோயில்னு கூட பார்க்க மாட்டறானே இவன்! கல்யாணம் பண்ணிக்கடான்னு எத்தனை பொண்ண காட்டுனாலும், பே ரேய்ஸ்(pay rise) கேக்கறப்போ டீம் மேனேஜர் சொல்ற மாதிரியே நாட் நவ்னு சொல்ல வேண்டியது!” என வாய்விட்டே புலம்பினாள் நந்தனா.
சிரித்து சிரித்து ரெட் டாப்ஸிடம் பேசி கொண்டிருந்த ரிஷியை அமர்ந்தவாறே பார்த்திருந்தாள் நந்தனா. ரோஷினியை கொஞ்சுவதற்காக ரெட் டாப்ஸ் அவனை நெருங்க அனிச்சையாய் இரண்டடி பின்னால் நகர்ந்த சகோதரனைப் பார்த்து புன்னகை வந்தது இவளுக்கு.
“வெறும் வாய் மட்டும்தான்டா உனக்கு!” முணுமுணுத்தாள் ரதி நந்தனா.
பத்து நிமிடம் கழித்து அருகில் வந்து அமர்ந்தவனை,
“செட்டாகுமா?” என கிண்டலாக கேட்டாள் இவள்.
“வாட் நான்சேன்ஸ் யூ ஆர் டால்க்கிங் அபோட் மீ? ஒரு ஜெண்டில்மேனா பார்த்து கேட்கற கேள்வியா இது?”
வாய் விட்டு சிரித்தவள்,
“நீ ஜெண்டில்மேன்தான்னு எனக்குத் தெரியும்! ஆனா அந்தப் பொண்ணுக்குத் தெரியுமா? நீ எதார்த்தமா பேசறத அது பதார்த்தமா எடுத்துக்கிச்சுன்னா? பெண் பாவம் பொல்லாததுடா நந்தா! நாம என்ன பாவம் செஞ்சமோ லைப் எப்டி எப்டியோ நம்மள பொரட்டிப் போட்டுருச்சு! இன்னும் எதுக்குடா தெரிஞ்சே பாவத்த சேர்க்கனும்!” என கேட்டவளின் குரலில் மெல்லிய நடுக்கம் இருந்தது.
சகோதரியின் கையைப் பற்றிக் கொண்டவன்,
“கூல் டவுன் நந்து! அம்மா வயித்துக்குள்ள இருந்தே நான் ஒரு பொண்ணோட, ஐ மீன் உன்னோட சேர்ந்து வளந்துருக்கேன்! எனக்கு பொண்ணுங்க கூட எப்படி டீசண்டா லிமிட்டோட பழகனும்னு தெரியும்டா! அந்த ரெட் டாப்ஸ் கிட்ட லீட் ஓன் பண்ணற மாதிரி ஒத்த வார்த்த பேசல நான்! வீட்டுல கல்யாணம், எதாச்சும் பங்க்ஷன்னா நம்ம கடையில சாக்லேட் ஆர்டர் பண்ணுங்கன்னு மார்க்கேட்டிங் தான் செஞ்சுட்டு இருந்தேன். வேற ஒன்னும் இல்ல! நீ கவலைப்படாத, ஓகேவா?” என வாஞ்சையாக மொழிந்தான் ரிஷி நந்தன்.
“சரி அத விடு! நீ எப்போடா கல்யாணத்துக்கு க்ரீன் சிக்னல் குடுக்கப் போற? உன்ன வச்சி வளக்கறது வயித்துல நெருப்பப் கட்டிக்கிட்டு இருக்கற மாதிரி இம்சையா இருக்குடா!”
தமக்கையின் கூற்றில் வாய் விட்டு நகைத்தவன்,
“எப்போ ஒரு பொண்ணு என் மனச பொரட்டிப் போட்டு, துவைச்சு எடுத்து, அலசி புழிஞ்சு காய வைச்சு, தூக்கம் கெடுக்கறாளோ அப்போ கல்யாணத்துக்கு ஒத்துக்கறேன்! அது வரைக்கும் ‘சிங்கிள் தான் கெத்து, மத்தவன்லாம் வாய பொத்து’ சங்கத்தின் தலைவனாவே இருந்துட்டுப் போறேன்” என்றான்.
“அட முருகா! இப்போ டோபி(லாண்டரி) கடை பொண்ணுக்கு நான் எங்கடா போவேன்? நம்ம ஊருல முக்கா வாசி டோபி கடைலாம் மூடிட்டு, செல்ப் லாண்டரி கடைங்கள தொறந்திட்டாங்களே!” என முறுவலித்தாள் நந்தனா.
“புவாட் லாவாக்லா தூ!(ஜோக்கடிக்கிறியா—மலாய்). சரி, கெளம்பலாம். வெளிய சாப்பாடு வாங்கித் தந்துட்டு உங்கள வீட்டுல விட்டுடறேன்!”
ஓடியது களைத்துப் போயிருக்க அப்படியே தரையில் படுத்து புரள ஆரம்பித்த ரோஷினியை இவன் தூக்கிக் கொள்ள, இருவரும் மெல்ல படியிறங்கி கீழே வந்தனர்.
“சீனி பாப்பாக்கு என்ன வேணும் சாப்பிட?”
“மாமா சாத்தே”(சாத்தே— இறைச்சியை குச்சியில் குத்தி வைத்து கீழே கரி தூவிய நெருப்பில் வாட்டி கொடுப்பார்கள். தொட்டுக் கொள்ள அரைத்த வேர்க்கடலை சாஸ் இருக்கும்)
“உனக்கு எதாச்சும் சாப்பிடனும் மாதிரி ஆவலா இருக்கா நந்து?”
“எனக்கு ப்ரைட் ரைஸ் போதும்!”
“டாக்டர் ஹெல்த்தியா சாப்பிட சொல்லிருக்காங்க!” என குரலில் கண்டிப்பைக் காட்டினான் ரிஷி.
“ஓகே சரி! அந்த ப்ரைட் ரைஸ்ல நாலு கீரையை வெட்டி சேர்க்க சொல்லு”
“உன்னோட…” பல்லைக் கடித்தவன், நிறைய காய்கறிகள் சேர்த்து அவளுக்கு ப்ரைட் ரைஸ்சும் சின்னவள் கேட்டதையும் வாங்கி கொடுத்து அவர்கள் வீட்டில் இறக்கி விட்டான்.
கேட்டட் அண்ட் கார்டட்(gated and guarded) வளாகத்தில் இருக்கும் இரட்டை மாடி வீடு அது. மலேசியாவில் பல வீடமைப்புக்கள் இப்படித்தான் இருக்கும். மாதந்தோறும் ஒரு தொகையை சர்விஸ் தொகையாக செலுத்த, இருபத்தி நான்கு மணி நேரமும் அப்பகுதிக்கு செக்குரிட்டி காவல் கொடுக்கப்படும்.
“உள்ள வாடா நந்து! டீ போட்டுத் தரேன்”
“வேணா! நீ சாப்டு தூங்கு. ரொம்ப களைப்பா தெரியற! ஏழு மாச வயித்த வச்சிக்கிட்டு அலையாதே வெளியன்னு சொன்னா கேக்கறியா?”
“வாரத்துல ஒரு நாள் கோயில், அதுக்கும் செக்குரிட்டி கார்ட் மாதிரி கூடவே நீ வர! வாரத்துல மூனு நாளு கடைக்கு வரேன்! மத்தப்படி வீட்டுக்குள்ளயே தானே அடஞ்சி கெடக்கேன்!”
“சரி பொலம்பாதே! நாளைக்கு நான் சீனிய ப்ளேஸ்கூல் விட வரப்போ நீயும் கூட வந்துடு. லன்ச் டைம் வரைக்கும் கடையில இரு. எனக்கு ஒரு ஆர்டர் விஷயமா கே.எல்(கோலாலம்பூர்) போகிற வேலை இருக்கு. அதுக்குள்ள யாராச்சும் வேகன்சி சைன் பார்த்து வேலைக்கு கேட்டு வந்தா நீயே ஹேண்டில் பண்ணிடு. சரியா?”
“சரி சரி! கெளம்பு, காத்து வரட்டும்”
சிரித்தப்படியே மருமகளின் கன்னத்தில் முத்தமிட்டு, தமக்கையின் வயிற்றை லேசாய் வருடி அந்தக் குட்டிக்கும் பாய் சொல்லி விட்டு, நந்தனா உள்ளே சென்று கதவைப் பூட்டும் வரை இருந்துவிட்டு காரை கிளப்பினான் ரிஷி.
தன் வீட்டுக்கு போகும் பாதையில், ட்ரபிக் லைட் சிவப்பில் எரிய காரை நியூட்டரலில் நிறுத்தி பச்சை லைட்டுக்காக காத்திருந்தவனுக்கு நந்தனா கேட்ட க்ரீன் சிக்னல் மனதில் வந்து போனது.
“இந்த ஜென்மத்துல, உன்னை நல்லாப் பார்த்துக்கனும், உன் பிள்ளைங்கள அருமையா வளர்த்து விடனும்! அது மட்டும்தான் என் வாழ்க்கை லட்சியம். எனக்குன்னு காதல், கல்யாணம், கன்றாவிலாம் நெனைச்சிக் கூட பார்க்கமாட்டேன்டி நந்து. இந்த வாழ்க்கைக்கு என்னடி குறைச்சல்! ஏன்டா லேட்டுன்னு கேக்க, டாய்லட் சீட்ட மூட மாட்டியன்னு கத்த, ஈர துண்ட பெட்டுல போடாதன்னு கதற, பந்து வெளையாட்ட பார்க்காதன்னு கொதற, வீக்கேண்டுல பீரடிக்காதன்னு எகிற ஒருத்தி இல்லாம இருக்கறதெல்லாம் வரம்டி!” என தனக்குள்ளே சொல்லிக் கொண்டவன், எப்பொழுதும் தான் விரும்பி கேட்கும் பாட்டை ஃபுல் வோலியூமீல் வைத்து கூடவே பாடினான்.
“சங்கு
நாந்தான் கிங்கு
மாதர் தங்கு
ஐ எம் சிங்கிள் அண்ட் ஐம் யங்கு”
(உருகுவான்…)
(ப்ரௌனி கதை சீகுவல் கேட்டவங்களுக்கு எல்லாம் என்னோட சாரிய சொல்லிக்கறேன். நெஜமா தீபா அண்ட் இந்திரக்குமார் சீன்லாம் மைண்ட்கு வரவே மாட்டுது! நானும் எவ்ளவோ ட்ரை செஞ்சேன். போர்ஸ் பண்ணா கதை கந்தலாகிடும்னு அந்த முயற்சிய விட்டுட்டேன். இனிமே சீக்குவல் எழுதுவனான்னு கூட என்னால சொல்ல முடியல. சிலருக்கு சிலது வரும் சிலருக்கு சிலது வராது. எனக்கு சீக்குவல் வரல. நானே ஒத்துக்கறேன். சோ வரத மட்டும் பார்ப்போம்னு கிளம்பிட்டேன்.
இந்த கதை என்ன எப்படினு ஒன்னும் வரையறை வச்சிக்கல. உங்க கூடவே நானும் கதையோட போக்குல பயணிக்கப் போறேன். விஷ் மீ லக் டியர்ஸ். எப்ப எப்ப எபி வரும்னு இன்னும் முடிவு பண்ணல. போக போக முடிவு செஞ்சிக்கலாம். எப்பொழுதும் போல இப்பொழுதும் உங்கள் ஆதரவை நாடும்,
வநிஷா…. )