AnthaMaalaiPozhuthil-34

 அந்த மாலை பொழுதில்…

அத்தியாயம் – 34

  “அக்கா என்ன ஆச்சு?” என்று ரகுநந்தன் பொறுமையாக வினவ, “நான் கேட்குற கேள்விக்கு பதில் சொல்ல சொல்லு உன் பொண்டாட்டியை.” கீச்சிட்டது ரேவதியின் குரல்.

   தன் மனைவியின் குரலில், “ரேவதி…” என்று அவளை தடுக்க முற்பட்டான் சுரேஷ்.

    அபிநயாவிற்கு தான் செய்த தவறுகள் தெரியும். அது இப்பொழுது, ரகுநந்தனுக்கும் முழுதாக தெரியும் என்பதை ரகுநந்தன் நடந்து கொண்ட முறையில், சுரேஷ் கணித்து விட்டான்.

       ‘தன் வாழ்க்கையும், தன் தங்கையின் வாழ்க்கையும் ஏதோ பிரச்சனை இல்லமால், இப்படியே சென்றால் போதும்.என்ற மனநிலையில் சுரேஷ் இருக்க, தன் மனைவியின் செயல் அவனை குழப்பத்தில் ஆழ்த்தியது.

    ‘இவ, ஏன் இப்படி நடந்துகிறா?’ என்று சுரேஷ் தன் மனைவியை அடக்க முற்பட, “நீங்க சும்மா இருங்க. நாம , அடங்கி அடங்கி போறதால தான் இவ இந்த ஆட்டம் போடுறா.” ரேவதி, அபிநயாவை பார்த்து குற்றம் சாட்டும் குரலில்  கூறினாள்.

     “அக்கா” என்று கண்டிக்கும் விதமாக அழைத்தான் ரகுநந்தன்.

  “என்னடா, உன் பொண்டாட்டிக்கு வரிஞ்சி கட்டிக்கிட்டு வக்காலத்து வாங்க வரியா? கேட்ட கேள்விக்கு, பதில் சொல்லாமல் எப்படி திண்ணக்கமா நிக்குறா பாரு” என்று அபிநயாவை குரோதமாக பார்த்தாள் ரேவதி.

 

  ‘யார் வேணும்ன்னாலும், என்ன வேணும்ன்னாலும் பேசிக்கோங்க.என்பது போல் வேலை செய்யும் அலமேலுவை அழைத்து கவினை தோட்டத்துக்கு அழைத்து செல்ல சொன்னாள் அபிநயா.

   ‘பேச்சு செல்லும் திசை சரி இல்லை. குழந்தை முன் சண்டை வேண்டாம்.என்பது அபிநயாவின் எண்ணம்.

    “அக்கா, அவ பதில் சொல்றதுக்கு என்ன இருக்கு? கவினுக்கு, அவ அம்மா ஆக முடியுமா? நீ தான் அம்மா. இதெல்லாம் ஒரு கேள்வியா?” என்று ரகுநந்தன் சலிப்பாக கூற, பவானியம்மாள் பதட்டமாக பார்த்து கொண்டிருந்தார்.

       அபிநயாவுக்கு, சற்று சோர்வாக இருந்தது. இவர்கள் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும்.என்பது போல் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து, கன்னத்தில் கை வைத்து இவர்களை பார்த்து கொண்டிருந்தாள்.

   ‘அத்தனை பேரும் நிக்கறோம். திமிர் பிடிச்சவ, எப்படி உட்காந்திருக்கா?’ ரேவதி அவளை பார்த்தபடி, தன் பேச்சை தொடர்ந்தாள்.

   “இவ, என்ன பண்ணி வச்சிருக்கா தெரியுமா? நம்ம பையனுக்கு ஏதோ குறையாம். அவனுக்கு ஸ்பெஷல் டீச்சர் போட்டா, படிச்சிருவான்னு இவ சொல்லிருக்கா கவின் மிஸ் கிட்ட. அவங்களும் சரின்னு சொல்ல, இவளே ஸ்பெஷல் டீச்சரா போறா.” என்று ரேவதி கூற, சுரேஷ் தன் மனைவியை அதிர்ச்சியாக பார்த்தான்.

   அவனுக்கும் இது செய்தி.

   ரகுநந்தன் மௌனிக்க, “உனக்கு இது தெரியுமா தம்பி, உன்கிட்ட ஏதோ கிளாஸ்க்கு போறேன்னு தானே சொன்னா? இவ பண்ணி வச்சிருக்கிற வேலைய பார்த்தியா?” என்று ரேவதி புகாரளிக்கும் குரலில் கூறினாள்.

        ‘ஓ! இது தான் விஷயமா?’ என்று அபிநயா சோபாவில் சற்று சாய்ந்து அமர்ந்தாள்.

   அவள் எண்ணத்தை பிரதிபலிப்பது போல், “ஓ! அக்காஇது தான் விஷயமா. என் கிட்ட சொல்லிட்டு தான்  போறா.” என்று ரகுநந்தன் முடித்துவிட, “என்னடா இவ்வளவு சாதரணமா சொல்லிட்ட?” என்று ரேவதி அதிர்ச்சியாக கேட்டாள்.

    “கவின் கூட படிக்குறவனோட அம்மா எல்லாரும், கவினுக்கு என்ன பிரச்சனை? அவனுக்கு எதுவும் குறையான்னு என்கிட்ட கேட்குறங்கா. இவ எதுக்கு போறா? நாம ஃபீஸ் கட்டி, படிக்க வைக்கிறோம். அவங்க பார்க்காததையா, இவ பார்க்க போறா? இவ  யாருங்கிறேன்? எனக்கு அவனை பார்க்க தெரியாதா?” என்று ரேவதி கேள்வியாக நிறுத்தினாள்.

   சுரேஷிற்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. பவானியம்மாளுக்கு சற்று, பயம் தொற்றி கொண்டது.  ரகு, எவ்வளவு நேரம் இப்படி பொறுமையா பேசுவான்னு சொல்ல முடியாது.

அவர் எண்ணம் ரகுவிடமிருந்து, மருமகளிடம் திரும்பியது.

   ‘அபிநயா அமைதி தான். ஆனால், பேச ஆரம்பித்தால்…என்ற சந்தேகம் அவருள் எழுந்தது.

   “உனக்கு தான் புரியலை அக்கா.” ரகுநந்தனின் குரல் இப்பொழுது தீர்க்கமாக ஒலித்தது.

  “நீ விஷயத்தை மறைக்க நினைக்குற. கவினுக்கு, பிரச்சனை இருக்கு. முதலில் அதை ஏத்துக்கோ அக்கா. பெரிய பிரச்சனை எல்லாம் இல்லை. சரி பண்ணிடலாம். நாம, அவனுக்கு தனி கேர் எடுக்கணும். நானும், அபிநயா கூட ஸ்கூலுக்கு போனேன். அவங்க, இதை உன் கிட்ட சொல்ல முயற்சி பண்ணிருக்காங்க. நீ, புரிஞ்சிக்கவே ட்ரை பண்ணலை போல.” என்று ரகுநந்தன் பேச்சை நிறுத்தினான்.

   ரேவதி, கண்களை சுருக்கி தன் தம்பியை பார்த்தாள்.

         “கவின் மாதிரி குழந்தைகளுக்குனு ஸ்பெஷல் டீச்சர்ஸ் இருக்காங்க. அவங்களுக்கு தனியா பணம் கொடுத்து அப்பாய்ண்ட் பண்ணனும். அபிநயா, தான் அவளே பாத்துக்கறேன்னு சொன்னா. கவினை பத்தி அபிநயாவுக்கு நல்லா தெரியும், அப்படிங்கிறதால அவங்களும் சந்தோஷமா சரின்னு சொல்லிட்டாங்க. கவின் கஷ்டப்பட மாட்டான் இல்லையா?” என்று ரகுநந்தன் புரிய வைக்கும் நோக்கோடு பொறுமையாக பேசினான்.

   “ஆக, என் பையன் நோயாளி.  நான் ஒரு அறிவு இல்லாத அம்மா. நான் ஒரு பொறுப்பில்லாத அம்மா. இவர் ஒரு பொறுப்பில்லாத அப்பா. உன் மனைவி, மகா புத்திசாலி. அவ எல்லா விஷயத்தையும் சரி பண்ணிருவா? அப்படித்தானே?” ரேவதி நக்கலாக கேட்க, ரகுநந்தன் என்ன பதில் சொல்லவது என்று தெரியமால் விழித்தான்.

  பவானியம்மாள் அமைதியாக நிற்க, “உனக்கு உதவியா உன் மருமகள் எல்லா வேலையும் செய்யுறா. உன் மகன் உன்னை பார்த்துகிறான். அதனால, அவங்க கெட்டிகாரங்களா ஆகிட்டாங்கல்ல?” என்று ரேவதி தன் தாயிடம் சண்டைக்கு செல்ல, நியாயம் இல்லாத ரேவதியின் பேச்சுக்கு பதில் கூற முடியாமல், பவானியம்மாள் தன் கைகளை பிசைந்தார்.

         அங்கு அசாத்திய அமைதி நிலவ, “கவின் நோயாளி இல்லை. சின்ன குறை தான். அவனால், பேச முடியும். சிரிக்க முடியும். அழ முடியும். நம்மளை மாதிரி அவனால் எல்லாம் செய்ய  முடியும். ஆனால், அவன் சிரிக்கறதில்லை. நான் கூட அவனால சிரிக்க முடியலையோன்னு தான் முதலில் பயந்தேன். இப்ப, அவன் கூட ஸ்கூலுக்கு போற இந்த சில மாசத்துல தான் அவனுக்கு என்ன பிரச்சனைன்னு கண்டு பிடிச்சோம். அவனால, நம் உணர்வுகளை உள் வாங்க முடியலை. அது தான் அவன் பிரச்சனை. அதை சரி பண்ண, தீர்வு இருக்கு.” என்று அபிநயா நம்பிக்கையோடு பேசினாள்.

   “ஓ… எங்களுக்கு அறிவில்லை. பொறுப்பில்லை. உனக்கு எல்லாம் இருக்கு?” என்று ரேவதி இடக்காகவே நிற்க, அபிநயாவின் கோபம் அதிகரித்தது.

    ரகுநந்தன் இப்பொழுது தன் தமக்கையை சலிப்பாக பார்க்க, “உங்களுக்கு அறிவிருக்கா இல்லையான்னு நீங்க தான் முடிவு பண்ணனும். ஆனால், பொறுப்பில்லை.” என்று அழுத்தமாக கூறினாள் அபிநயா.

 இப்பொழுது அனைவரும் அதிர்ச்சியாக பார்க்க, “நீங்க ஒரு அம்மாவா, இதை எப்பவோ கண்டுபிடிச்சிருக்கலாம். நீங்க பண்ணலை.” என்று ரேவதியிடம் குற்றம் சாட்டினாள்.

    “அவ்வளவு ஏன், நான் சில மாசமா, கவின் கிளாஸ்க்கு போறேன். அது இவ்வளவு நாளா உங்களுக்கு தெரியாது. நான் சொல்லலைன்னு சொல்றீங்களே? கவின் ஏன் உங்க கிட்ட சொல்லலை . நீங்க, அவன் பேசுறதுக்கே இடம் கொடுக்கிறதில்லை. அவன் பேசறதை கவனிக்கறதில்லை. உங்களுக்கு பொறுப்பு இல்லை தான்.” என்று அபிநயா சற்று கடுப்பாக கூறினாள்.

   “அப்பா, இவங்க என்ன பண்ணிருக்காங்க? வாரத்தில் எல்லா நாளும் குடிச்சிட்டு வர வேண்டியது.” அபிநயா, சுரேஷை பார்த்து ஏளனமாக கூற, இப்பொழுது பவானியம்மாள் அபிநயாவை பதட்டத்தோடு பார்த்தார்.

   ‘வாத்தியரம்மா, பேசாமல் இருக்கிற வரைக்கும் தான் நல்லது. இப்ப, இவளை எப்படி நிறுத்தறது?’ என்று ரகுநந்தன் யோசனையாக தன் மனைவியை பார்த்தான்.

    “ஏய், என்ன ரொம்ப பேசுற? அவரை சொல்ல நீ யாரு?” என்று ரேவதி எகிற, “நீங்க சொல்லிருக்கணும்.” என்று கூறி தன் கண்களை இறுக மூடினாள் அபிநயா.

   “கவினுக்கு இப்படி ஆனதுக்கு நீங்க கூட காரணமா இருக்கலாம்.” அபிநயா கூற வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால், சூழ்நிலை அப்படி அமைந்து விட்டது.

   “ஒரு தாய் கர்ப்ப காலத்தில் குடிக்கறது, எப்படி குழந்தையை பாதிக்குமோ? அதே மாதிரி, ஒரு தந்தையின் குடிப்பழக்கமும் உருவாகுற குழந்தையை பாதிக்கும். போதையில், தண்ணி அடிக்கிற ஸ்டைலில் கதையிலும், சினிமாவிலும் வேணா மாஸ் ஹீரோ உருவாகலாம். நிஜத்தில் ஒரு குடிகாரன், மோசமான சந்ததியை மட்டும் தான் உருவாக்குறான்.” அபிநயா முகத்தை சுழித்துக் கூறினாள்.

  “இந்த பார், நீ பிரச்னையை திசை திருப்ப பாக்குற. ஊர் உலகத்தில், எவன் குடிக்கறதில்லை? உன் புருஷன் கூட குடிச்சிருக்கான்.” ரேவதி தன் கணவனை காப்பற்ற முயல, “அவர் இப்ப குடிக்கறதில்லை.” அபிநயா அழுத்தமாக கூறினாள்.

   அபிநயா கூறியதில், சுரேஷுள் குற்ற உணர்ச்சி. நான் தான் கவின் பிரச்சனைக்கு காரணமா?’

   ‘அபிநயா சொல்வதெல்லாம் உண்மையா?’ என்பது போல் ரகுநந்தன், பவானியம்மாள் இருவரும் குழப்ப மனநிலையில் இருந்தனர்.

    “ஊரு உலகத்தில், குடிக்கிற எல்லாருக்கும் இப்படியா குழந்தை பிறக்குது?” என்று ரேவதி கேட்க, “குடிக்குற எல்லாரும் குடல் வெந்து சாகுறதில்லை. ஒரு சிலருக்கு இப்படி ஆகும். இது தான் காரணமுன்னு நான் சொல்லலை. இப்படியும் இருக்கலாமுன்னு சொல்றேன்.” என்று அபிநயா தோளை குலுக்கினாள்.

             “புருஷன் குடிக்குறது தப்புன்னு சொல்லாம, யார் குடிக்கலைன்னு வக்காலத்து வாங்குறது. இது சோசியல் ட்ரீக்கிங்க்ன்னு குடிக்கறதை நியாய படுத்தறது, குழந்தையை சரியா புரிஞ்சிக்காம இருக்கறது, எல்லாம் பொறுப்பின்மை தான். இதுல, அம்மாவுக்கு சரியான பொறுப்பு அப்பாவுக்கும் இருக்கு.” என்று அபிநயா தன் வார்த்தைகளை சாட்டையாக இறக்கினாள்.

பல மாலை பொழுதில் அரங்கேறும் குடிப்பழக்கம்ங்குற தப்பான செயலும், பல குழந்தைகளின் பாதிப்புக்கு காரணம் ஆகுது. இதில் அப்பாவுக்கும் பங்கு இருக்கு. இதை தடுக்காத அம்மாவுக்கும் பங்கு இருக்கு.” அபிநயா நிதானமாக கூறினாள்.

     மருமகள் சொல்வதில் நியாயம் இருக்க, ‘அபிநயா பேசியது அதிகப்படி…என்று தோன்றினாலும், ‘யாரவது இதை சொல்லித்தானே ஆக வேண்டும்.என்ற எண்ணத்தில் மௌனமாக நின்று கொண்டார் பவானியம்மாள்.

   சுரேஷிடமும், தன் அக்காவிடம் கேட்க வேண்டியதை எல்லாம் கேட்க முடியாமல் போன ரகுநந்தனின் மனமோ, மனைவி இன்று பேசியதை சரி என்று ஒத்துக்கொண்டது.

   அபிநயா பேசியது, ரேவதியின் கோபத்தை கிளப்ப, தன் தாயின் மௌனமும், தம்பியின் அழுத்தமும் அவளை வெறி கொண்டு தாக்கியது.

    “என்னை அவமதிக்கணும்னு இத்தனை நாள் நினைச்சிருக்கீங்க. அதை இவளை வச்சி செஞ்சிட்டிங்கள்ல?” ரேவதி பரிதாபம் போல் பேசி எகிறினாள்.

    “இதுல யாரும் உங்களை அவமானப்படுத்தலை. நடப்பை தான் சொல்றேன்.” என்று அபிநயா விளக்க, “மகராசி, நீ பேசாத. நீ வந்தன்னைக்கே, நான் வீட்டை விட்டு கிளம்பிருக்கணும். இங்க இருக்கேன் பாரு, என் புத்தியை செருப்பால அடிக்கணும்.” ரேவதி அவள் அறை நோக்கி திரும்ப, “ரேவதி…” என்று பதறினார் பவானியம்மாள்.

   “என்ன அம்மா, அந்த செருப்படியையும் உன் மருமக கொடுத்து நான் வாங்கணுமா?” ரேவதி தன் தாயிடம் குரோதத்தோடு கேட்க, பவானியம்மாள் சோபாவில் செய்வதறியாமல் சாய்ந்து அமர்ந்தார்.

        “நீங்க ஏன் நிக்கறீங்க? கவினை கூப்பிட்டு கிளம்புவோம்.” ரேவதி தன் கணவனிடம் சிடுசிடுத்தாள்.

    “கொஞ்சம் நில்லுங்க.” என்று அபிநயா, ஒரு எட்டு எடுத்து வைக்க, “ஏன், கவின் உனக்கு வேணுமா?” என்று ரேவதி நக்கலாக கேட்டாள்.

   “கவின் உங்க குழந்தை. அவன் நல்லாருக்கணுமுன்னு தானே…” என்று அபிநயா பேச, “அவன் என் குழந்தைன்னு உனக்கு தெரியுதில்லை. அவன் நலனில் எனக்கு அக்கறை இருக்கு.” என்று ரேவதி அவர்கள் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

   இப்பொழுது அபிநயா, ரகுநந்தன் முன் நின்றாள். “நந்தன், கவினுக்கு ட்ரீட்மெண்ட் போயிட்டு இருக்கு. இப்ப, அவனை இவங்க கூட்டிட்டு போனா, எல்லாம் வீணா போய்டும். அவங்களை நிறுத்துங்களேன்.” என்று கெஞ்சினாள் அபிநயா.

   ரேவதி பெட்டியோடு வெளியே வந்து, “கவின்… கவின்…” என்று சத்தம் செய்தாள்.

ரகுநந்தன், நடப்பதை வேடிக்கை பார்த்தபடி அமைதியாக நின்றான். சிறிதும் அசையவில்லை.

   “இப்ப என்ன ஆச்சுன்னு வெளிய போறீங்க. ஒரு பேச்சு வார்த்தை அவ்வளவு தான். பேசி தீர்த்துக்கலாம்.” அபிநயா, ரேவதியிடம் இப்பொழுது சற்று கெஞ்சினாள்.

   “அபி, அவ போகட்டும் விடு” என்று ரகுநந்தன் அழுத்தமாக கூறினான்.

   “நந்தன், நீங்களும் புரியாமல்…” அபிநயா பேச, “அடேங்கப்பா, என்ன நடிப்புடா இது. பிள்ளையையும் கிள்ளிவிட்டுட்டு, தொட்டிலையும் ஆட்டுற கதை. என் தம்பியையே, என்னை போகட்டுமுன்னு சொல்ல வச்சிட்டல்ல?” என்று ரேவதி ரகுநந்தனை பார்த்தபடி பேசினாள்.

   கவின், நடப்பது புரியாமல், “ஓ…” என்று கதறி  உருண்டு அழுதான்.

 ரேவதி, அவனை சமாளிக்க முடியாமல், அவன் கைகளை பிடித்து தூக்கினாள்.

   சுரேஷ் செய்வது அறியாமல், இவர்களை பார்த்து கொண்டிருந்தான். இப்ப வெளிய போனா, எங்க தங்குறது. இவ, என்ன இன்னிக்கு இப்படி பிரச்சனை பண்ணுறா?’ என்று யார் பக்கமும் பேச முடியாமல் தவித்தான்.

        “அத்தை” என்று அபிநயா பதட்டமாக அவர் பக்கம் செல்ல, “அபிநயா, அவளை நான் போகட்டுமுன்னு சொல்லிட்டேன். நீ அமைதியா இரு” என்று ரகுநந்தன் கர்ஜித்தான்.

    கவினின் அழுகையை பார்த்தபடி, “நான் பேசினது தான் தப்புன்னா, சொல்லுங்க. நான் என்ன பண்ணனும்?” அபிநயா இப்பொழுது ரேவதியிடம் இறங்கி பேசினாள்.

  “அபி…” ரகுநந்தன் கர்ஜித்தான்.

   அபிநயாவின் கண்முன், அனைத்து பிரச்சனைகளும் மறைந்துவிட்டது. கவின்… கவின்… கவின்…மட்டுமே நிறைந்து நின்றான்.

   “நீங்க சொல்லுங்க. என்னால், நீங்க வெளிய போக கூடாது.” என்று அவள் ரேவதி முன் நின்று பேசினாள்.

   “வெளிய கிளம்புற மாதிரி பிரச்சனை பண்ணிட்டு, என்ன நாடகம் ஆடுற?” ரேவதியின் குரலில் ஏளனம்.

  “அபி, நான் சொல்றதை நீ கேட்க மாட்டியா? அமைதியா இரு.” என்று ரகுநந்தன் தன் மனைவியை கோபமாக மிரட்டினான்.

  “நான், பேசினது தப்புனா, என்னை…” என்று அபிநயா பேசுகையில், ரகுநந்தனின் கைகள் அபிநயாவின் கன்னத்தில், “பளார்…” என்று இறங்கியது.

  பவானியம்மாள், அதிர்ச்சியில் எழுந்து நிற்க, அபிநயா இப்பொழுது ரகுநந்தனை குரோதமாக பார்க்க, “ உன் அருமை இவங்களுக்கு புரியலை. உன்னை இறங்கி போக வைக்குற, எந்த உறவும் எனக்கு வேண்டாம்.” என்று தன் ஆள் காட்டி விரலை உயர்த்தி, தன் மனைவியை எச்சரித்தான் ரகுநந்தன்.

    “சின்ன பிள்ளைக்கு சொல்ற மாதிரி, அவ பிள்ளைக்காக சொல்றன்னு கூட அவளுக்கு புரியலை. நீ இந்த லட்சணத்தில் அவ கிட்ட மன்னிப்பு கேட்க போற. நான், சொல்றதை கேட்க கூடாதுன்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்கியா. உனக்கு என்ன அப்படி ஒரு பிடிவாதம் ” என்று அபிநயாவிடம் கெஞ்சி, கொஞ்சி கடைசியில் எகிறி, “நீ கிளம்பு.” என்று ரேவதியிடம் முடித்துவிட்டான் ரகுநந்தன்.

  அபிநயா, ரகுநந்தனிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.

  “அத்தை, கவின் கொஞ்ச நாளைக்கு இங்க இருக்கனும். என்னால, அவங்க போக வேண்டாம். நீங்க சொல்லுங்க” கூறிவிட்டு, படி ஏறி, அவர்கள் அறைக்குள் நுழைந்து கொண்டாள் அபிநயா.

   “ரேவதி, இன்னைக்கு நீ வெளிய போனால், இனி ஒரு நாளும் இங்க வராத.” என்று கடுமையாக கூறினார் பவானியம்மாள். அவருக்கும் கவினின் நலனே முதன்மையாக தெரிந்தது.

    “அபிநயா சொன்ன விதம் தப்பாக இருக்கலாம். அவ, சொன்ன விஷயம் சரி தானே? உன் பையனுக்காகத் தானே சொல்றா?” பவானியம்மாள் கூற, ரேவதி நிதானித்தாள்.

  ‘எல்லாரும் தடுப்பார்கள்.என்பது தான் ரேவதியின் கணிப்பு. ஆனால், ரகுநந்தன் இப்படி கிளம்பு என்று சொல்லுவான் என்று அவள் நினைக்கவில்லை.

   ரகுநந்தன், அபிநயாவை அடித்ததில் சுரேஷ் பீதியில் இருந்தான். இது மட்டும் பசுபதிக்கு தெரிந்தால். அதுவும், இதற்கு தன் குடும்பம் தான் காரணம் என்று தெரிந்தால்…சுரேஷிடம் தர்மசங்கடம்.

              ரகுநந்தன் எதுவும் பேசவில்லை. சோபாவில் அமர்ந்திருந்தான். என் மனைவிக்கான மதிப்பை யாரிடமும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.என்ற இறுமாப்பு அவன் முகத்தில்.

பவானியம்மாள், தன் அறைக்குள் நுழைந்து கொண்டார். சுரேஷ், தன் மனைவியிடம் பேசி, அவளை உள்ளே அழைத்து சென்றான், கவினை கையோடு தூக்கி கொண்டு.

   அவனுள்ளும் ஒரு குற்ற உணர்ச்சி. நூறில் ஒரு சதவீதமாக இருந்தாலும், என் மகனின் நிலைக்கு நானும் ஒரு காரணமா? இத்தனை நாள், விதி என்று நினைத்தேனே.

         அபிநயா, அறையில் கடுங்கோபத்தில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தாள்.

  “என்ன நினைச்சுகிட்டு இருக்காக, இவுக என்னை அடிப்பாகளா?” அவள் உதடுகள் முணுமுணுத்து கொண்டது.

   ‘நான் என்ன தப்பு பண்ணினேன்? நல்லது தானே பண்றேன்.என்ற எண்ணத்தோடு, அவனுக்காக வாங்கி வைத்திருந்த அத்தனை பரிசு பொருட்களையும் கோபமாக அலமாரியில் மறைத்தாள்.

அவன் காலடி சத்தம் அறையை நெருங்க, அபிநயா, படுத்துவிட்டாள்.

அந்த நான், என், எனக்கு என்ற சொல்லில் இப்ப நீயும் அடக்கம். உனக்கு அப்புறம் தான் எந்த உறவும். அது உன் பக்க உறவா இருந்தாலும் சரி.  என் பக்க உறவா இருந்தாலும் சரி.அவன் பேசியது நினைவு வர, ‘இது என்ன பிடிவாதம்?’ என்ற கேள்வி அபிநயாவின் மனதில் எழுந்தது.

அவளுக்கு அவன் மேல் கடுங்கோபம்.

     ‘எனக்கு உறவுகள் முக்கியம். ஒரு உறவை நிலைநிறுத்த, நான் இறங்கி போறதுல, எந்த தப்புமில்லைங்க.‘  அன்று அபிநயா பேசியது அவன் காதில் ஒலித்தது.

      ‘இது என்ன பிடிவாதம். அப்படி, இறங்கி போய் எந்த உறவை இவ, காப்பாத்த போறா?’ அவனுக்கும், அவள் மேல கோபம்.

            ‘பேசுவோமா?’ என்று அவன் சிந்திக்க, ‘சும்மாவே வாத்தியரம்மா, ஏறு ஏறுன்னு ஏறுவாங்க. இப்ப, கையை வேற நீட்டி வச்சிருக்கோம். இப்ப, பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை. இனி, இவ யார் கிட்டயும் இப்படி இறங்கி போக கூடாது. பொறுமையா, பேசிக்கலாம்.

  ரகுநந்தன் வெளியே சென்றுவிட்டான்.

             மாலை மயங்கி, இருள் கவ்வியது.

   ரகுநந்தன், வீட்டிற்குள் நுழைந்தான். வீட்டில் அமைதி, யாரும் உண்ணவில்லை.

ரகுநந்தன் வந்தது அறிந்ததும் தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள் அபிநயா.

    ‘அபி…என்று அழைக்க நினைத்து, “வாத்தியாரம்மா” என்று அழைத்தான் ரகுநந்தன்.

   ‘அடித்துவிட்டோம்என்ற குற்ற உணர்ச்சி இருந்தாலும், அவன் கோபம் கிஞ்சித்தும் குறையவில்லை. 

    அவள் திரும்பவில்லை. “வாத்தியரம்மா…” அவன் அழைக்க அவள் கண்கள் கலங்கியது. ஆனால், அவள் திரும்பவில்லை.

    ‘பிடிவாதக்காரி…அவன் அவளை மனதிற்குள் திட்டி கொண்டான்.

 

   ‘வெளிய வச்சி அடிக்க வேண்டியது. இப்ப ரூமுக்குள்ள என்ன சமாதானம் வேண்டி கிடக்கு?’ அவளும் அவனை திட்டினாள்.

      இருவரும் உடனடியாக சமாதானமாகும் மனநிலையில் இல்லைஅவர்கள் மனநிலையை தாண்டி, சூழ்நிலையும் அவர்களுக்கு எதிராக திரும்பி இந்த பிரச்சனை அத்தனை எளிதாக முடிவதற்கு வாய்ப்பில்லை என்பது போல் அபிநயாவின் அலைபேசி ஒலித்தது.

  அபிநயா, அலைபேசியை எடுக்க, அவள் கேட்ட செய்தியில் அவள் உலகம் தட்டாமாலை சுற்றியது.

பொழுதுகள் விடியும்…