ithayamnanaikirathey-8

IN_profile pic

ithayamnanaikirathey-8

இதயம் நனைகிறதே…

அத்தியாயம் – 8

“என்ன ஞாபகம் இதயா?” அவன் குரல் ரசனையோடு, எதிர்பார்ப்போடு அவள் காதில் கிசுகிசுப்பாக ஒலிக்க, அவள் கண்கள் படபடக்க  அவனை பதட்டத்தோடு பார்த்தாள்.

மறுக்க நினைத்தும், மறக்க நினைத்தும் அவள் முன் பழைய நினைவுகள் காட்சியாக விரிய தான் செய்தது.

    இதே போல், பல வருடங்களுக்கு முன்…

 விஷ்வா அவள் முன் கன்னத்தை நீட்டிக்கொண்டு நின்றான்.

         “நீ கொடு. நீ என்ன கொடுத்தாலும், வாங்கிக்க நான் தயார்.”  அவன் வார்த்தைகள் மட்டுமே என்ன கொடுத்தாலும், என்று கூறியது. அவன் பார்வையோ, அவள் உதட்டின் மீது இருந்தது.

    அவன் நின்ற நெருக்கத்தில், அவன் சுவாசக் காற்று அவளை தீண்ட, அவன் நீட்டிக் கொண்டு நின்ற கன்னமோ அவளை உரசி கொண்டு நின்றது.

   அந்த அருகாமை, அவளை செங்கொழுந்தாய் சிவக்க செய்தது.

அவள் இமைகள் படபடக்க, உடல் சிலிர்க்க நின்று கொண்டிருக்க, “சீக்கிரம்… சீக்கிரம்…” அவள் அவனை அவசரப் படுத்தினான்.

           “கண்ணை மூடேன் விஷ்வா.” அவள் கூற, “ஏன்?” அவன் கிஞ்சித்தும் விலகாமல், இடைவெளியை குறைத்து கொண்டு கேட்டான்.

    “அது…” அவள் தடுமாற, “அது…” அவனும் அவளை போல் பேசினான்.

“எனக்கு ஒரு மாதிரி இருக்குமில்லை.” அவள் தலையை சில்லுப்ப, “எது என்ன ஒரு மாதிரி?” அவன் விடாக்கொண்டனாய் நின்றான்.

 

“ஒரு மாதிரின்னா, ஒரு மாதிரி தான்…” அவள் சினம் போல் நடித்து, முணுமுணுக்க, அவன் அவள் பக்கம் வாகாக சாய்த்து கொண்டு கண்களை மூடிக்கொண்டு, நின்றான் தன் மனைவியின் சொல்லிற்கிணங்கி.

அவன் கொடுத்திருந்த இடைவெளியில், மெல்ல நகர்ந்தாள் இதயா.

அவள் அருகே வரத்தான், இந்த அசைவு என்று அவன் கண்களை மூடி கொண்டு நிற்க, அவள் சற்று விலகி நின்று கொண்டு, பட்டென்று அவன் கன்னத்தில் தட்டிவிட்டு சிட்டாக பறக்க, “ஒய்…” அவன் அவளை பின்னே தொடர, அவள் குடும்ப உறுப்பினர்களோடு இணைந்து கொண்டாள்.

   அன்று முழுதும், அவன் கன்னத்தை நீட்டிக் கொண்டு இருக்க, அவள் கண்ணாம்பூச்சி ஆட, அன்றைய நாள் அவள் கண்முன் விரிவதை அவளால் தடுக்க முடியவில்லை.

   அதன் பின், அவன் வட்டியும், முதலுமாக  பல பெற்றுக்கொண்டதும். தண்டனை என்ற பெயரில், அவளை அவன் அன்பெனும் மழையில் மூழ்கடித்து அவளுக்கு திருப்பி கொடுத்ததும் தனி கதை.

ஆம்,

தனி கதை!

அன்பின் கதை!

இனிய கதை!

அழகான கதை!

மகிழ்வான கதை!

பழைய கதை!

முடிந்துபோன கதை!         

மொத்தமும் பொய்ப்பித்து போன கதை!

 

அவள் எண்ணங்கள் வேகமாக ஓடி, அன்றைய நாள் முதல் இன்றைய நினைவில் வந்து நிற்க, அவன் எண்ணமோ அந்த நாளிலே நின்றிருந்தது.

அந்த நாளின் நினைவோடு, “ஞாபகம் தானே?” அவன் குரலில் கேலி வழிந்தோட,  அவள் இமைகள் இப்பொழுது இமைக்க மறந்து, அவனை கோபத்தோடு உறுத்து விழித்தது.

அவளின் மௌனம் அவனுக்கு சாதகமாக, “நான் சொல்வது சரி தானே?“அவனின் எள்ளல் இப்பொழுது சற்று அதிகமாகியது.

“அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே” அவன் உல்லாசமாக பாடினான்.

“ஞாபகமே தான்.” அவள் குரல் இப்பொழுது அழுத்தமாக ஒலித்தது.

அந்த குரலில், சற்று முன் படபடத்த இமைகளின் வெளிப்பாடு இல்லை.

 அவள் குரலில் அவன் விலகி நின்று கொண்டு, தன் கண்களை சுருக்கி அவளை கூர்மையாக பார்த்தான்.

அவன் விலகலில், அவள் சற்று நிமிர்வாக நின்று கொண்டாள்.

“ஞாபகம் தான்” அவள் உதடுகள் ஏளனமாக வளைந்தது.

“என்ன ஞாபகமுன்னு நான் சொல்லட்டுமா?” அவள் ஒற்றை புருவம் ஏறி இறங்கியது.

‘இவள் எதையோ வில்லங்கமா சொல்ல போறா?’ அவன் அறிவு எச்சரிக்க, “வெளிய போ விஷ்வா.” அவள் அழுத்தமாக கூறினாள்.

“நீ இதை நினைக்கலை. பொய் சொல்ற.” அவன் கூற, “நான் என் மனசில் என்ன நினைக்குறேன்னு உனக்கு என்ன தெரியும்?” அவள் இடக்காகவே பேசினாள்.

‘உன் மனசில் நான் இருக்கேன். என் மனசில் நீ இருக்க விஷ்வா. நான் மனசில் நினைக்குறதெல்லாம் உனக்கு தெரியும். நீ நினைக்குறதெல்லாம் எனக்கு தெரியும்.’ அவன் நெஞ்சோடு, அவள் கைவைத்து பேசிய காதல் வசனங்கள் எல்லாம் இப்பொழுது இருவருக்கும் நினைவு வந்து இம்சித்தது.

பழைய நினைவில், அவன் உதடுகள் புன்னகையில் மடிந்து, “எனக்கு தெரியும் இதயா” அவன் உல்லாசமாகவே பதிலளித்தான்.

“உனக்கு தெரியாது விஷ்வா. நான் இதை தான் நினைத்தேன். வெளிய போ. என் பிள்ளையை என்கிட்டே குடுத்திட்டு வெளிய போ. என் பிள்ளையை பார்க்கும் யோக்கியதை உன்கிட்ட இல்லை. நான் உன்னை பார்கணும்முன்னும், உனக்கு சமைத்து போடணுமுன்னு எனக்கு அவசியமில்லை.” அவள் அழுத்தமாக கூற, அவன் அவள் சங்கை பிடித்திருந்தான்.

“யாரை பார்த்து என்ன வார்த்தை சொல்ற? யாருக்கு யோக்கியதை இல்லை?” அவன் அவள் கழுத்தை நெறிக்க, மூச்சு திணறிய பொழுதும் அவள் உதடுகள் அவனை பார்த்து ஏளனமாக  வளைந்தது.

“நீ மாறவே இல்லை இதயா. இன்னைக்கு இல்லை ஒரு நாளும் மாறவே மாட்ட?” அவன் கைகளை உதறி, சோபாவில் மொந்தென்று அமர, அவன் முன் சொடக்கிட்டாள் இதயா.

“நான் ஏன் மாறனும் விஷ்வா?” அவள் தலை அசைத்து கேட்க, “நான் அப்படி என்ன பெருசா கேட்டுட்டேன்? எங்க அம்மா பண்ணதை, உங்க அம்மா பண்ணதை தானே கேட்டேன்?” அவன் குரலில் சலிப்பு.

“உங்க அம்மா அப்படி இருந்தா? எங்க அம்மா அப்படி இருந்தா? நான் அப்படி தான் இருக்கனும்ன்னு சட்டமா? காலம் மாறாது? நாங்க மாற மாட்டோம்?” அவள் அவனை கேள்வி கொண்டு தாக்கினாள்.

அவனிடம் பதில் இல்லாமல் போக, “அதை விடு. வெளிய போன்னு சொன்னா வலிக்குதா விஷ்வா? பிள்ளையை பார்க்க யோக்கியதை இல்லை, பிள்ளையை கொடுத்திட்டு வெளிய போன்னு சொன்னா கழுத்தை பிடிக்கிற? உனக்காக சமைக்க முடியாதுன்னு சொன்னா இவ்வளவு கோபப்படுற? யாருமே இல்லாத இந்த ரூமில், உன்கிட்ட தனியா சொன்னதுக்கு  மட்டுமே உனக்கு இவ்வளவு வலிக்குதே?” அவள் இடைவெளிவிட்டாள். 

அவள் குரலில் இப்பொழுது, நக்கல் மிதமிஞ்சி வழிந்தது.

அவள் குற்றச்சாட்டில், அவன் முகம் திருப்பி கொள்ள, அவனை முகத்தை  தன் பக்கம் திருப்பினாள் இதயா.

“எல்லார் முன்னாடியும் என்னை எவ்வளவு அவமான படுத்திருக்க? எதுவும் மாறாது. மாத்தவும் முடியாது.” அவள் உறுதியாக கூறினாள்.

“இப்ப தன்மையா சொல்றேன். நீ எனக்கு காட்டின வலி அதிகம். அதை விட அதீத வலியை யாரும் கொடுக்க முடியாது. நான் எதையும் தங்கிப்பேன். நீ வெளிய போ.” அவள் கூற, “ஏய், என்ன சும்மா சும்மா வெளிய போ வெளிய போன்னு சொல்ற? வாழ வழி இல்லாம சாப்பாட்டுக்கு வழி இல்லாம நான் இங்க வரலை. குழந்தைக்காக வந்தேன்.” அவன் கடுப்பாக கூறினான்.

“குழந்தை…” இந்த சொல்லில் மொத்த கோபமும் வடிந்து தரையில் மொந்தென்று அமர்ந்தாள் இதயா.

“என்ன பண்ணி வச்சிருக்கன்னு பார்த்தியா விஷ்வா?” இப்பொழுது இதயாவின் கேள்வியில் கோபம் இல்லை வருத்தம் மட்டுமே குடி கொண்டிருந்தது.

“அஜய்… அஜய்…” என்று கதறிக்கொண்டு, அவள் தலையில் படார் படார் என்று அடித்து கொண்டாள் இதயா.

   அந்த அடியின் வலி, அவன் நெஞ்சை தாக்கியது. அவள் கைபிடித்து அவன் தடுக்க, அவள் வெறுப்பாக தன்  கைகளை உருவிக் கொண்டாள்.

அவள் தன் மகனின் மீது கொண்ட பாசம், ஏக்கம் கண்ணீராய் முத்துமுத்தாக உருண்டு ஓடியது.

அவள் கண்ணீரை துடைக்க, அவன் மனம் விரும்ப, காலத்தின் கோலம் அவன் விருப்பத்திற்கு எதிராக இருக்க, தன் கைகளை த்ன் மார்பின் குறுக்கே கட்டிக் கொண்டான் விஷ்வா.

“என் பையனை நான் நெருங்க முடியலை. எனக்கு அவனை கட்டி பிடிச்சி முத்தம் கொடுக்கணுமுன்னு ஆசையா இருக்கு. ஆனால், பக்கத்துல போக பயமா இருக்கு. குழந்தை என்ன நினைச்சிப்பானோன்னு? அவனுக்கு நான் யாருனாவது தெரியுமா? ஆறு மாசமா இங்க படிக்கறான். தியாவுக்கே, நான் அவளை ரொம்ப கொஞ்சினா  பிடிக்காது. இதுல அஜய்க்கு எப்படியோ?”அவள் பரிதவிப்போடு கேட்டாள்.

அவள் பரிதவிப்பில், அவன் கரைந்து போனான்.

 “இதயா, நீ அவசரப்படாத, அவனுக்கு கொஞ்சம் டைம் குடு. அவனே உன்கிட்ட வருவான். அவன் உன்னை தேடினான். அவன் உனக்காக ஏங்கினான்.” அவளை  சமாதானம் செய்ய, அவன் கூறிய வார்த்தைகள், அவனுக்கு எதிராகவே திரும்பியது.

“எனக்காக ஏங்கினானா?” அவள் கேட்க, அவன் கண்கள் தியாவின் பக்கம் திரும்பி, அவளை குற்றம் சாட்டியது.

“நீ என்ன பண்ணிருக்க? அஜய்க்காவது, நீ யாருனு தெரியும். தியாவுக்கு நான் யாருன்னே தெரியாதே?” அவன் அவளை கேள்வியோடு நிந்திக்க, “நானா எதையும் பண்ணலை விஷ்வா. நீ செய்ததை தான் நான் செய்தேன்.” எந்த குற்ற உணர்ச்சியுமின்றி அவள் கூற, அவன் ஏதோ பேச வாய் எடுக்க, அவன் தொலைபேசி ஒலித்தது.

‘இந்த நேரத்தில் யார்?’ என்று இருவரும் ஒரு சேர அலைபேசியை பார்த்தபடி, அவர்கள் சண்டையை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டார்கள்.

அவன், “ம்…” கொட்டியபடி வேறு அறைக்கு சென்று தொலைபேசி பேச்சை முடித்து கொண்டு வந்தான்.

“யாரு?” இதயா பட்டென்று கேட்க, அவன் முகத்தில் சண்டையை மறந்து புன்னகை எட்டி பார்த்தது.

“உரிமையில் கேட்கறியா இதயா?” அவன் நமட்டு சிரிப்போடு கேட்டான்.

‘ஏன் கேட்டோம்?’ என்ற எண்ணத்தோடு, அவள் அவனை பார்க்க, “ஏன் கேட்டோம்ன்னு நினக்குறியா இதயா? சொல்ல வேண்டாம் போன்னு சொல்ல போறியா?” அவன் அவளை வம்பிழுத்தான்.

இதயா தன்னிடம் கேட்க வேண்டும் என்ற அவா அவனுள்.

தோற்று போகவோ, அவனிடம் விட்டு கொடுக்கவோ அவளுக்கு விருப்பமில்லை.

“என் வீட்டில் இருந்தா, என் கிட்ட சொல்லித்தான் ஆகணும்.” அவள் ஆணையாகவே கூற, “உத்தரவு மகாராணியாரே” அவன் அவள் இடை வரை குனிந்து, ராஜ பாணியில் கூற, அவன் செய்கையில் புன்னகை தோன்றினாலும், அதை மறைக்க அவள் இப்பொழுது முகத்தை திருப்பி கொண்டாள்.

அவன் அவள் முகத்தை தன் பக்கம் திருப்பினான். அவள் மறுக்க நினைத்தும், அவன் மறுக்க நினைத்தும் அவர்கள் விழிகள் மோதிக்கொண்டன.

மோதிக்கொள்ள ஆரம்பித்து, அவைகள் காதல் மொழியே பேசிக்கொண்டன.

அவள் அறிவு, அவள் கருவிழியை திசை திருப்ப முயன்று தோற்று போக, அவன் அறிவும், விழிகளும் அவளிடம் தோற்று கரைந்து போக, அவன் கைகள், அவள் தலை கோதி, ‘எல்லாம் ஒரு நாள் சரி ஆகும்.’ ஆறுதல் கூற, விழைய, திடுக்கிட்டு நிமிர்ந்தான் விஷ்வா.

‘என்ன சரியாகும்? அஜய்க்கு அம்மா வேணும். அதை தாண்டி, எதுவும் மாறலை. இவளும் மாறவில்லை.’ அவன் எண்ண போக்கு, அவனை நிதானிக்க செய்து குழப்பத்தில் ஆழ்த்தியது.

அவளும் சுதாரித்து கொண்டாள்.

‘எனக்கு அஜய் வேணும். ஆனால், இவன். இவன், சிறிதும் மாறவில்லை. இவன் மாறி இருந்தாலும், இவன் செய்ததெல்லாம் இல்லை என்றாகிவிடுமா?’ அவள் கேள்வியோடு அவளும் மௌனித்தாள்.

“நியூயார்க் போக சொல்றாங்க. இங்க இருந்து, ஜஸ்ட் ஃபைவ் ஹவர்ஸ் டிரைவ் தான், கொஞ்சம் நாளைக்கி அங்க ஒரு ப்ராஜெக்ட் ஹாண்டில் பண்ண முடியுமான்னு கேட்கறாங்க.” அவன் கூற, “அது தான் எல்லாமே லாக் டவுன் ஆகிருச்சே? அப்புறம் எங்க இருந்தா என்ன?” அவள் முகத்தை சுழித்தாள்.

“இல்லை, அந்த கிளைண்ட்ஸ் ஆஃபிஸ் வராங்க. லிமிடெட் எம்பலாயீஸ் ஆஃபிஸ் வராங்க.” அவன் கூற, “இப்ப எப்படி போக முடியும்?” அவள் இப்பொழுது கடுப்பாகவே கேட்டாள்.

“அஜயை விட்டுட்டு போறேன்.” அவன் கூற, “லூசா நீ. நீ மட்டும் எப்படி போவ?” அவள் எரிந்து விழுந்தாள்.

அவளின் சிடுசிடுப்பு, அவனுக்கு சுவாரசியத்தை கூட்ட, “ஏன்?” அவளை பார்த்தபடி கேட்டான்.

“ஜப்பான்ல சைனால இருந்தும், கொரியால இருந்தும் வரவங்களை எப்பவோ குவாரன்டைன் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. ஆஸ்திரேலியா, சௌவுத் கொரியால இருந்து யாரும் வர கூடாதுன்னு சொல்லிருக்காங்க.  இத்தாலில, ஸ்கூல்ஸ் கிளோஸ் பண்ணியும், நிலவரம் மோசமாகிட்டு இருக்கு. இப்ப வரைக்கும் ஒரு லட்சம் பேருக்கு கொரோனா வந்திருக்குன்னு நியூஸ் சொல்லுது. நாம மார்ச் மாசத்துல தான் இருக்கோம். இன்னும் நிலைமை எவ்வளவு மோசமா போகுமோ?” அவள் புள்ளி விவரத்தோடு அடுக்கி கொண்டே போனாள்.

அவனோ,’புத்திசாலி’ அவளை மெச்சிக் கொண்டு அவள் கணக்கை விடுத்து, அவள் பதட்டத்தை ரசித்தான்.

“அப்புறம்?” அவன் தலை சாய்த்து கேட்க, “என்ன அப்புறமுன்னு கதையா கேட்கற?” அவள் சிடுசிடுப்பாய் கேட்டாள்.

“இல்லை, இதுக்கும் நான் நியூயார்க் போறதுக்கு என்ன சம்பந்தம்?” அவன் அவள் பதிலை அறியும் ஆர்வத்தோடு கேட்டான் .

மணி நள்ளிரவை தாண்டி இருந்தது. இருவருக்கும் தூங்கும் எண்ணம் இருப்பது போல தெரியவில்லை.

“நியூ யார்க்ல கொரோனா எண்ணிக்கை கூட்டிகிட்டு. போற வழியில் உன்னை எங்கயாவது ப்ளாக் பண்ணிட்டா என்ன பண்ணுவ?” அவள் புருவத்தை வளைக்க, அவள் கைகளை பிடித்து, அவளை அவன் அருகே சோபாவில் அமர வைத்தான் விஷ்வா.

“அப்ப, நான் உன் வீட்டில் இருந்து போக கூடாது. அப்படி தானே?” அவன் தனக்கு வந்த சிரிப்பை அடக்கி கொண்டு கேட்டான்.

“நான் அப்படி எங்க சொன்னேன்? நியூயார்க் போக வேண்டாமுன்னு தான் சொன்னேன்.” அவள் முகத்தை திருப்பி கொண்டாள்.

“சரி, நியூயார்க் போகலை. ஆனால்…” அவன் நிறுத்த,  அவள் அவன் பக்கம் திரும்பினாள்.

 “ஏன்? இந்த கேள்விக்கு பதில் சொல்லு. நீ சொல்ற பதில் நியாயமா இருந்தா, நான் போகலை. ஆனால், பதில் வேணும்.” அவன் பிடிவாதமாக கேட்டான்.

அவள் சுவரை பார்த்தபடி அமர்ந்திக்க, “இதயா, என் மேல அவ்வளவு அக்கறையா?” என்று அவன் அவள் பக்கம் சாய்ந்து கொண்டே கேட்க, “நீ நியூயார்க் போனா எனக்கு என்ன? ஓல்ட்யார்க் போனா எனக்கு என்ன? நான் ஏன் உன் மேல அக்கறை படணும்?” என்று அவள் உதட்டை சுழித்தாள்.

“அப்ப, தியாவுக்கு அப்பா வேணுமா?” அவன் யோசனையோடு கேட்க, “அவளுக்கு அப்பா வேண்டாம்?” அவள் கூற,”அப்ப ஏன்னு சொல்லு” அவன் தோளை குலுகினான்.

“முதலில் தள்ளி உட்காரு நான் சொல்றேன்.” அவள் அவனை மிரட்டினாள்.

அவனும் இடைவேளி விட்டு அமர்வது போல் பாசங்கு செய்தான்.

‘இப்படி தெரியாம பேசி சிக்கிட்டோமோ? என்ன சொல்றது?’ அவள் மூளை வேகமாக சிந்திக்க, ‘வசமா மாட்டினியா?யார்கிட்ட?’ என்று அவன் தன் நமட்டை கடித்தபடி அவளை பார்த்து கொண்டிருந்தான்.

இதயம் நனையும்….

—————————————————————————————————————————————————————-

இனி வரும் பதிவுகளிலிருந்து சில வரிகள்…

        

“டேய்… நீ சொன்னா நான் கேட்கணுமா?” – தியா.

 “பின்ன கேட்க மாட்டியா…” – அஜய்

“நான் தான் பெரியவன். உன் அண்ணன். லிஸன் மீ ” – அஜய்

“ஹல்லோ, திஸ் இஸ் மை ஹவுஸ். லிஸன் மீ” – தியா

    “நான் உன் வீட்டில் இருக்கேன்னு உன் சாப்பாடை சாப்பிடணும்னு அவசியமில்லை.” – விஷ்வா.

 லாக் டவுனில் கலகலப்பு தொடரும்….

   என்னால் முடிந்த அளவுக்கு விரைவாக அடுத்த பதிவோடு வருகிறேன்.

Leave a Reply

error: Content is protected !!