IV1

ithaya-vetgai-cover

IV1

இதய வேட்கை – 1

 

படுக்கையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனின் தோலைத் தொட்டு, தோலின் வழியே அவன் மூளையை எட்டி அலாரம் இல்லாமலேயே எழுப்பியது, அதிகாலைச் சூரியன்.

புரண்டவன், ஃபோம் மெத்தையில் இருந்தவாறே கண்விழித்து தான் இருந்த அறையை, வழமைபோல நோட்டம் விட்டான்.

ஒதுக்க நினைக்காதவளின், ஒதுங்கிய செயல்களையும் மீறி, அவளால் அவ்வறையில் விட்டுச் சென்ற பொருள்களும் சில இடங்களில் மிச்சமிருந்ததோ!

மனதில் வந்து போனதென்னவோ உண்மை!

ஆனாலும், எதனால் தன்னை விட்டுச் சென்றாள் என்பதை இன்றுவரை வாயைத் திறவாதவளின் செயல்களை மீறி. அவனால் அவளை ஒதுக்கவும் முடியாமல், விட்டு ஒதுங்கவும் முடியாத நிலை!

முந்தைய நாளின் பிந்தைய இரவு நேரத்தில் செய்த செயலின் வீரியம் இன்னும் மிச்சம் இருந்தது. நண்பர்களுடன் இணைந்து, சமூக அந்தஸ்தின் அடையாளமாக இன்றைய சமூகம் எண்ணும் பாரில், தனது நண்பர்களுடன் அருந்தியிருந்த தீர்த்தத்தின்(மதுவின்) அளவு சற்றே வழக்கத்தைவிட அவனுக்குக் கூடியிருந்தது.

அக்கவுண்ட் வைத்து மது அருந்துவது மேல்தட்ட மக்களின் அந்தஸ்தாக இன்று எண்ணப்படுகிறது.  அதனை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் சிலர் அவ்வப்போது பாருக்குள் தனது வரவை உறுதிசெய்ய சென்று வருகின்றனர்.

அருந்தியது அதன் விளைவை அவனுக்குள் திணித்திருந்தது. போதை சிறுமூளையை சிறையிட்டிருந்ததை அவனது சிவந்த கண்கள் நிரூபணம் செய்தது. போதையின் எச்சம் இன்னும் உடம்பில் மிச்சம் இருந்தது.

பீனியலின் தாக்கத்தால் புத்தியின் விழிப்புநிலை, போதையின் தாக்கத்தை உடம்பில்  குறைக்க எண்ணி பிட்யூட்டரியுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தது.

போதையின் ஊக்கம் கல்லீரலைக் தாக்கியதால், அழன்று, உழன்று போன கல்லீரல் கலங்கிய தன்னிலையை கண்கள் மூலம் சிவப்பேற்றி எரிச்சலை தந்திருந்தது.

தினசரி மொடாக் குடி என்றில்லாமல், ஏதாவது ஒரு நாள் மொரட்டுக் குடியாக, நண்பர்களின் சேர்க்கையைப் பொருத்து அளவீட்டை நிர்ணயம் செய்து கொள்வான், விஷ்வா.   மதுவோடான அவனின் பழக்கவழக்கம் மற்றும் கொண்டாட்டம் மாறுதலுக்குட்பட்டது.

தானிருக்கும் இடம் உணர்ந்தவன், நிதானமாக எழும்பி காலைக் கடன்களை கடனே என்று இல்லாமல், சில நினைவுகளோடு நேர்த்தியாக முடித்துக் கிளம்பினான்.

குளியல் தந்த இதத்தால், குடித்த சுவடுகள் இல்லாமல், சுறுசுறுப்பான மது அறியா மனிதனாக, சொர்க்கத்தின் இளவரசனாக புத்துணர்வோடு பார்வைக்கு கம்பீரமாகக் கிளம்பியிருந்தான்.

கண்ணாடியை துணைக்கழைக்கும் சாமான்யன் அல்ல.  கண்ணாடி சொல்லாத பதிலை, அவனே அறிந்திருந்தமையால் அதன் தயவை எதிர்நோக்காமல் கிளம்பியிருந்தான்.

மாநிறத்திற்கும் சற்று கூடிய நிறம், வலிய தேகம். கூர்நாசி. வயது வித்தியாசமின்றி அனைத்துப் பெண்களும் திரும்பிப் பார்க்க எண்ணும் கம்பீர முகவெட்டு. 

நீச்சலின் மேல் கொண்ட தனது ஆர்வத்தால், வளர்ந்து கெட்ட உயரம். ஆறடிக்கும் மேல் உயரமாக இருந்தாலும், போதிய உடல் பருமன் காரணமாக வளர்த்தி வித்தியாசம் தெரியாமல் சாதாரணமாக இருந்தான்.

நேரம் காலம் இன்றி தன்னை புதுப்பித்து, புத்துணர்வு கொள்வதற்காகவும், அவ்வப்போது எழும் மனஅழுத்தத்திலிருந்து விடுபடவும், அவனின் உதடுகளுடன் அவ்வப்போது உறவாடிச் செல்லும் சிகரெட்டினால் கருத்திருந்த அழுத்தமான உதடுகள்.

அடர்ந்து கருத்து காண்பவரை ரசிக்கத் தூண்டும் அளவாக ட்ரிம் செய்யப்பட்ட மீசை.

எதையும் அலட்டிக் கொள்ளாதவன்.  நடந்ததை, நடப்பதை, நடக்க இருப்பதை எதிலும் எதிர்பார்ப்போ, கவலையோ, அழுத்தமோ இல்லாமல் இருப்பதால், தேஜஸ் அவன் தேகத்தில் தேங்கியிருந்தது.

முகவசியம் சொன்னது, அவனது இழப்பீடில்லாத ஆற்றலின் அளவை!  கவலை கொள்ளாதவன்! ஆனால் சினம் அவனைச் சுற்றிலும் நடக்கும் நிகழ்வின் வீரியம் பொறுத்து எப்போதாவது விருந்தாளிபோல வந்து செல்லும்.

******

குளித்து வந்தவன், அலுவலகம் செல்லக் கிளம்பி டைனிங்கில் வந்து அமர்ந்தான். விஷ்வாவின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்த வீட்டின் சமையலறை பொறுப்புகளை கவனித்துக் கொள்ளும் நாகம்மாள், காலை ஆகாரங்களைக் கொண்டு வந்து மேஜையின்மீது வைத்திருந்தார்.

“ஏம்பாட்டி, இன்னும் நீங்க ஏன் வேலை பாத்துட்டு இருக்கீங்க, உங்களுக்கு உதவியா வேற யாரையாது கூட்டிட்டு வந்து வச்சுக்கங்கனு நானும் பல முறை சொல்லிட்டேன்.  ஏன் கேக்கமாட்டிங்கறீங்க?”, வயோதிகம் காரணமாக தளர்ந்து நின்றிருந்தவரை நோக்கி கேள்வி எழுப்பியதோடு உண்ணத் துவங்கியிருந்தான்.

சில மாதங்களாகவே, நாகம்மாளின் வயோதிகத்தில் வந்த தடுமாற்றத்தை நேரில் கண்டு, மாற்று யோசனை கூறிவருகிறான்.

சிரித்தபடியே பரிமாறி நின்றிருந்த நாகம்மாள், “ஐயா, நான் என்னத்த வேல பாக்குறேன்.  சும்மா மேல்பார்வைதான…! ஒத்தாசைக்கு ராசாத்தியும் வந்து நிக்கும். நீங்க, நம்ம அம்மாவை இங்க கூட்டிட்டு வந்திருங்களேன், அவங்க வந்துட்டா எனக்குப் போதும்”, என்று தயவாக ஆனால் ஸ்திரமாக அந்த வீட்டின் விசுவாசியாகக் கூறினார் நாகம்மாள்.

“ம்…”, என்று யோசித்தவன், “அவ வரும்போது வரட்டும்.  அதுக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம்!  நீங்க உங்களோட ஹெல்புக்கு வீட்டோட ஒரு ஆளு வச்சுக்கங்க!”, என்றான்.

“எனக்கும் ஆசைதான்.  காடு கூப்பிடற வர வேலை வேலைன்னு திரியாம… கொஞ்ச நாளுக்கு… போகப் போற இந்தக் கட்டைக்கு ரெஸ்டு கொடுக்கணும்னு. 

ஆனாலும் மத்திம வயசில, குடும்பத்துல இருக்குறவங்களா யாரும் கிடைச்சா நல்லாயிருக்கும்னு நானும் தெரிஞ்சவங்ககிட்ட எல்லாம் சொல்லத்தான் செய்யிறேன்.  நம்பிக்கையான ஆளு தான் அமையவே மாட்டுது”, என்று கூறியவர்,

“என்னடா வேலைக்காரியெல்லாம் நம்மகிட்ட வந்து சொல்றாங்கனு நினைச்சாலும் பரவாயில்லயா!  கல்யாணம் பண்ணி மூனே மாசத்துல ஆளுக்கொரு பக்கமா இருந்தா நல்லா இல்ல சின்னய்யா…! அம்மா நம்பரு தந்தா நாங்கூட பேசுறேன், அவங்க போயி கிட்டத்தட்ட வருசமாகப் போகுது!”, என்று விடாமல் பேசியவாறே அவனுக்கு வேண்டியவற்றை எடுத்து கொடுத்தபடியே கவனித்திருந்தார்.

விஷ்வா இந்த அளவிற்கு மரியாதை தெரிந்தவனாக வளர்ந்தமைக்கு நாகம்மாளும் ஒரு காரணம்.

விஷ்வாவின் தாய் சரஸ்வதியின் மறைவிற்குப் பிறகு, ஏனோ தானோ என்றில்லாமல், ஒரு தாயாகவே மாறி விஷ்வாவின் வயிற்றை வாடாமல் பார்த்துக் கொண்டவர்.

சிறுவயதில் குழந்தைகளுக்கு உண்டாகும் மரியாதை குறைந்த பேச்சுக்களை, உடனே அதட்டிச் சரி செய்துவிடுவார்.  தன் கண்ணெதிரே விஷ்வா தவறு செய்ய இதுவரை பார்த்துக் கொண்டு சும்மா இருந்தவரல்ல.

ஆனாலும், ஒருபோதும் விஷ்வா என்று பெயரைக் கொண்டு அழைக்க மாட்டார்.  சிறுவயது முதலே ‘சின்ன ஐயா’ என்றே அழைத்துப் பழகியிருந்தார், நாகம்மாள்.

வீட்டின் பணியாளர் என்ற நிலையைத் தவிர, வேறு எந்த உரிமையையும் யாரிடமும் எடுத்துக் கொள்ளாத நியாயமான மனிதாபிமானி.

விஷ்வாவின் தந்த சத்யநாதன் இருந்தவரையிலும், “ஐயா, நம்ம சின்ன ஐயாவுக்கு ஒரு கல்யாணங்காச்சி பண்ணற வயசு வந்துருச்சுங்களே… பொண்ணு பாக்குறீங்களா?”, என்று அவர் இறப்பதற்கு ஓராண்டு முன்பிருந்தே கேட்டிருந்தார்.

“இருபத்தியஞ்சு வயசே விஷ்வாவுக்கு இன்னும் முடியலயே நாகம்மா…  இன்னும் ரெண்டு வருசம் போகட்டும்.  பொறுப்பு அவனுக்கு வந்துட்டா பொண்ணு பாத்துரலாம்.  இன்னும் ஊரு சுத்துற புத்திதான இருக்கு. வந்து நம்ம கடைகள்ல உள்ள வேலையப் பாருன்னு சொல்லியாச்சு… ஆனா இன்னும் வந்து உக்கார முடியாத நிலையில மனசும் அவன் வயசும் இருக்கு.  பொண்ணு கொடுக்கறவங்களும் சிலது யோசிப்பாங்கல்ல!”, என்று கூறியிருந்தவர் அவசரப்பட்டு தனது பொறுப்பை பாதியிலேயே விட்டுச் சென்றிருந்தார்.

விஷ்வா பற்றி நாகம்மாள் ஓரளவு யூகித்திருந்தாலும், பெண்களை வீட்டிற்கு அழைத்து வரும் பழக்கம் இதுவரை இல்லாதவன்.

தனது பருவத் தீனிக்கான இரையை, நம்பத் தகுந்த தனது கெஸ்ட் ஹவுஸிற்கு வரவழைத்து, வேலையை முடித்து அனுப்பிய பிறகு, எவ்வளவு நேரமானாலும் வீட்டிற்குத் திரும்பும் பழக்கத்தை திருமணம்வரை கடைபிடித்துக் கொண்டிருந்தவன், திடீரென்று திருமணம் செய்ததே அனைவருக்கும் ஆச்சர்யம்.

சென்னையில் இருந்தால், எவ்வளவு நேரமானாலும் வீட்டிற்கு வந்து விடுவான்.

சரஸ்வதியின் மறைவிற்குப் பிறகு, பெண்கள் என்று பார்த்தால், நாகம்மாள், ராசாத்தி இருவரைத் தவிர வீட்டில் வேறு யாருமில்லை.

ராசாத்தி வெளிவேலைகள் செய்பவள்.  அவ்வப்போது நாகம்மாளுக்கு வந்து எடுபிடி வேலைகள் செய்து கொடுப்பாள்.  மற்றபடி அனைவருமே ஆண்கள்தான்.

உண்டு முடித்தவன், அலுவலகத்திற்கு கிளம்பியவாறே தனது வலது கையாகச் செயல்படுபவனுக்கு அழைத்து, “கண்ணா, இன்னிக்கு நைட் செங்கோட்டைக்கு கிளம்பணும்.  நாம போறதுக்குள்ள மேடத்திட்ட பேசிரு. வேற…”, என தனது இடது கைவிரல் கொண்டு நெற்றியில் தேய்த்து யோசித்தவன்,

“நாலு கொட்டேசன் ரெடி பண்ணணும்.  ஹார்பர்ல போன் போட்டு கேளு.  நேத்திக்கு தூத்துக்குடியில இருந்து சரக்கு செங்கோட்டைக்கு அனுப்பிட்டாங்களானு.  வேற அங்க என்னென்ன வேலை இருக்குனு லிஸ்ட் ஒன்னு ரெடி பண்ணிரு”, என விஷ்வா போனில் பேசப்பேச எதிர்முனை ‘சரி சார், சரி சார்’ என்பதைத் தவிர வேறு எதுவும் பேசவில்லை.

“கண்ணா… ரூம் எப்பவும்போல அவுட்டர்லயே புக் பண்ணு. இந்த ட்ரிப்லயாது நமக்கு ஃபேவரா எதாவது நடக்குதானு பாப்போம்”, என புன்னகைத்தபடியே தனது கைபேசியை வைத்திருந்தான் விஷ்வா.

செங்கோட்டைக்கு அடிக்கொரு முறை வந்து போவதால், பழைய தங்களது வீட்டை சற்று புதுப்பித்து பயன்படுத்திக் கொண்டிருந்தார் சத்யநாதன்.  பழமை மாறாத, ஆனால் இன்னும் நூறு ஆண்டுகள் தாங்கும் வல்லமையிலான பழங்காலத்து ஒன்றரையடிச் சுவற்றாலான வீடு அது.

சத்யநாதனின் மறைவிற்குப்பின், வியாபார நிமித்தம் செங்கோட்டை வரும்போதெல்லாம், அந்த வீட்டில்தான் தங்கிச் செல்வான் விஷ்வா. 

கடந்த ஓராண்டாக மேடம் என சற்றுமுன் அழைக்கப்பட்ட பெண்ணிற்கு அவ்வீடு ஒதுக்கப்பட்டது முதல், வெளியே தங்குவதை வாடிக்கையாக்கியிருந்தான் விஷ்வா.

எல்லாம் மேடத்தின் வழிகாட்டல் என்பதைவிட, கட்டளையாக மாறியது.  அதில் விஷ்வாவிற்கு வருத்தமில்லை.  தன்னை ஆளவும், ஆட்டிப் படைக்கவும் ஒருத்தி இருப்பதே இதயத்திற்கு இதமாகத்தான் தோன்றுகிறது எனும் நிலைக்கு மாறியிருந்தான்.

கல்லூரி பயிலும் காலத்திலேயே, குற்றால சீசனுக்கு நண்பர்களுடன் ஒரு வாரம் வந்து செங்கோட்டையில் தங்கியிருந்து செல்வான். தனது மனம்போல சுற்றிலும் உள்ள அருவிகளில் நீராடிக் களைத்து, நண்பர்களுக்கு வேண்டிய அனைத்தையும் குறைவின்றிச் செய்து அழகு பார்த்தவன்.

தற்போது நண்பர்களின் வரவினை வீடுவரை கொண்டு வர இயலாமையால், வெளியில் பார்ட்டி என ஏற்பாடு செய்து கவனிப்பதை வாடிக்கையாக்கியிருந்தான்.

வீட்டில் வேலை பார்த்துவரும் அனைவரது நன்மதிப்பையும் பெற்றிருந்தவனால், அங்கு செல்வதால் உண்டாகும் சில அசௌகரியங்கள், வீண் பேச்சுகள், மற்றும் நடவடிக்கைகளால் இறந்துபோன பெற்றோருக்கு தலையிறக்கம் ஏற்படுவதை அவனது மனம் ஏற்கத் துணியவில்லை.

சென்னையில் இயங்கும் நாதன் ஃபர்னிச்சர், இரண்டு கிளைகளில் செயல்பட்டு வந்தாலும், அனைத்தையும் விஷ்வாவுடன் இருந்து மேற்பார்வை பார்ப்பது கண்ணன் மட்டுமே.

ஒவ்வொரு செங்கோட்டை பயணத்திலும், உடன்வரும் கண்ணனையும் தங்களது வீட்டிலேயே தங்கச் செய்வான்.

சத்யநாதன், விஷ்வாவிற்காக நியமித்திருந்த வலதுகை கண்ணன். செங்கோட்டையை பூர்விகமாகக் கொண்டு சென்னைக்கு இடம்பெயர்ந்திருந்த குடும்பத்தைச் சேர்ந்தவன் என்கிற ஒரே ஒரு தகுதியால் மட்டுமே சத்யநாதனால் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தான்.

அங்கங்கு தனித்தனியாக நிர்வாகப் பொறுப்புகளுக்கு வேண்டி ஆட்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும், விஷ்வா பெரும்பாலும் இருப்பது தியாகராய நகரில் இயங்கும் ஷோரூமில்தான்.

காலை எட்டரை மணி முதல் இரவு எட்டரை மணி வரை தொழில் தவிர வேறு எதையும் சிந்திக்காத சிந்தனையாளன், விஷ்வா.

இடையில் சிந்தனையை சிதறச் செய்யும், சில்வண்டுகளைச் சந்தித்தாலும், தனது மூளையின் ஓரத்தில் அவளை மட்டுமே கடந்த ஓராண்டாக வைத்திருந்து, இரவு எட்டரை மணிக்கு மேல் அதைப்பற்றி அசைபோடுவதை வழக்கமாக்கியிருந்தான், விஷ்வா.

ஆட்டம், கொண்டாட்டம் துவங்கிய வயதில் இருந்தே, யாரையும் வற்புறுத்தி அழைப்பது என்பது அவனது அகராதியிலேயே கிடையாது.

அந்த வகையில் மனைவியே ஆனாலும், ஒதுங்கி நிற்க தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தான்.

////////////

காலை டி.நகரில் இயங்கும் தனது ஷோரூமிற்குச் சென்று பணியைத் துவங்கியிருந்தான்.

பணிகள் அவனது பயணத்திற்கு தடையாகாத வண்ணம் கண்ணன் முன்பே பணிகளை இலகுவாக்கும் பொருட்டு துரிதப்படுத்தியிருந்தான்.

இடைவிடாத பணிகளுடன் பயணித்து, இரவு பத்து மணிக்கு செங்கோட்டைக்கு வந்து, அன்றைய நாளின் பணியை அன்று நிறைவு செய்திருந்தான் விஷ்வா.

தனது அறைக்குள் வந்து குளித்து பயணக் களைப்பை விரட்டினான். தனியே கிளம்பி கீழே இயங்கும் உணவகம் சென்று இரவு உணவை முடித்துக் கொண்டு திரும்பியிருந்தான், விஷ்வா.

அங்கு தங்கும் வாடிக்கையாளர்களுக்கு, எந்த நேரத்திலும், துரிதமாக இரவு உணவை உடனே தயார் செய்து கொடுக்கும் வகையில் ஆட்களை நியமித்து இருப்பர்.

அறைக்குள் வந்து, அடுத்த நாளின் தொழில்முறை சார்ந்த முக்கிய நினைவுபடுத்துதல்களை குறுஞ்செய்திகள், இமெயில் மூலம் அனுப்பி முடித்தவன் இறுக்கையில் அமர்ந்தான். மன இறுக்கத்தை உணர்ந்தான். உதடு, உரசிப்பார்த்து உற்சாகம் கொள்ள ஒவ்வொரு செல்லும் எதிர்பார்ப்போடு கேட்டது.

எடுத்து வந்திருந்ததை எடுத்து, நிதானமாக லைட்டரின் உதவியோடு பற்றவைத்து, தனது இறுக்கத்தை எரிக்க நினைத்தான்.  மனஇறுக்கம் சற்று மறைந்தாற் போன்றிருந்தது.

ஆழ்ந்து இழுத்து, நுரையீரலுக்குள் நிரப்பினான்.  ஆக்சிஜனோடு புகையையும் செல்களுக்கு வழங்கியதால், உடலின் செல்கள் அனைத்தும் புத்துணர்வு பெற்றது போன்ற உணர்வை, ஒவ்வொரு இழுப்பிலும் உணர்ந்தான்.

நாசியை நிறைத்த புகை, வேறு யோசிக்கச் சொன்னது.

யோசனை வந்தவுடன், ‘எதனால் என்னுடன் வாழப் பிடிக்கவில்லை என்று போனாள்? என்ன குறை என்னிடம் கண்டாள்?”, என்ற சிந்தனையோடு…

அவளைப் பற்றிய நினைவுகள் மேலோங்க… உறக்கம் வருமா?

—————–

விஷ்வாவின் மாளிகை போன்ற செங்கோட்டை வீட்டில், வேலைக்காரர்களோடு தனியாக இருப்பவளும், விஷ்வாவைத்தான் நினைத்துக் கொண்டிருந்தாள்.

தங்களது முதல் சந்திப்பை அந்த இரவு நேரத்திலும், எத்தனையாவது முறையாக நினைத்துப் பார்க்கிறாள் என்று அவளுக்கே தெரியாது!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு,

பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை, செங்கோட்டை வந்து செல்வது விஷ்வாவின் இயல்பான தொழில்முறை சார்ந்து நடக்கும் பயணம். 

செங்கோட்டை வந்தவன், தங்களது பயன்பாட்டிற்காக வைத்திருக்கும் இனோவாவை தங்களது டிரைவரைக் கொண்டு முந்தைய தினமே, தங்கியிருந்த லாட்ஜிற்கே எடுத்துவரச் செய்திருந்தான் விஷ்வா.

சில நேரங்களில் உடன் பெண்களை அழைத்து வந்தால் மட்டும், விடுதியில் தங்கிக் கொள்வதை வாடிக்கையாக்கியிருந்தான்.

தனித்து வரும்போது மட்டுமே வீட்டிற்கு செல்வதை விரும்புவான்.

தங்கியிருந்த விடுதியில் இருந்து வெளியில் வந்தபோது, இரவில் பெய்த மழையால் குளிர்ந்து காணப்பட்ட வானிலை இதமாக இருப்பதை ரசித்தபடியே நடந்து வந்து வண்டியை எடுத்தான்.

கண்ணன் எட்டு மணிக்கெல்லாம் கிளம்பி இம்போர்டர்ஸ் அலுவலகம் சென்று, தனது முதலாளி வருவதற்குள் பணிகளைத் துரிதப்படுத்தியிருந்தான்.

ஆகையால், தனித்து காலை ஒன்பது மணியளவில் தனது இம்போர்டர்ஸ் நிறுவனம் நோக்கி கிளம்பியிருந்தான், விஷ்வா.

முந்தைய தினத்தின் தகவலின்படி, அன்று பதினோரு மணிக்குள், இந்தோனேசியா, சுமித்திரா தீவுகளில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் வந்திறங்கிய மரங்களை தங்களது இறக்குமதி நிறுவனத்தில் சேர்ப்பித்து விடுவார்கள் என்பதுதான். அப்படி வரும் மரங்களின் தரம் அறிய வேண்டி நேரில் வந்திருந்தான், விஷ்வா.

மரங்களின் தன்மை, வயது, தரம் அறிந்து அதற்கேற்றாற் போல ஃபர்னிச்சர் செய்வதற்கு வேண்டிய பணிகளைத் திட்டமிட வேண்டி இந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறான்.

வேறு சிந்தனையில்லாமல் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் தனது இறக்குமதி நிறுவனத்தை நோக்கி வண்டியைச் செலுத்தினான்.  ஊருக்கு வெளியே இருந்த நிறுவனத்தின் பாதை மிகவும் குறுகியதாக இருந்தது. 

மழை நேரத்தில் சாலையை விட்டு சற்று இறங்கினாலும், வண்டிச் சக்கரம் மாட்டி இன்றைய தினத்தின் நோக்கத்தை பாழடிக்கும்.  அதனால், வண்டியை எந்தச் சமாதானமும் இன்றி தார்சாலையை விட்டு இறக்காமலேயே ஓட்டி வந்திருந்தான். சில இடங்களில் தார் சாலையை, மழை நீர் காவு வாங்கியிருந்தது. நேராக தனது இறக்குமதி நிறுவன வாயிலில் வந்து காரை நிறுத்தி இறங்கினான்.

இறங்கி கார் கதவை லாக் செய்துவிட்டுத் திரும்புமுன், “டிப் டாப்பா நீங்க மட்டும் வெளிய கிளம்புவீங்க, நாங்க மட்டும் சேத்துல குளிச்சுட்டு அழுக்கு உடையோட வேலைக்குப் போகணுமாக்கும். நல்லா இருக்குதே உங்க நியாயம்! 

ரோட்டுல ரெண்டு பக்கமும் பாத்து வண்டிய ஓட்டிட்டு வரமாட்டீங்களா? வண்டில ஏறி உக்காந்துட்டா பெரிய வெள்ளைக்கார துரைன்னு நினைப்பு! மழைக்கு தேங்கிக் கிடக்கிற தண்ணி ரோட்டோரமா போறவங்க மேல அடிக்காம… வண்டிய சுளுவா ஓட்டணும்னு கூட தெரியாம எங்கிருந்து தான் வரீங்களோ தெரியல!

ரோட்டுல நடந்து போறவங்களப் பத்தி யோசிக்கறதே இல்லை”, என்ற இதமான இனிய குற்றம் சாட்டும் கணீரென்று, சிவகாசி பட்டாசை நினைவுறுத்தியவளின் குரல் அவனருகில் ஒலிக்க, அக்குரலாளுக்கு சொந்தமானவளைக் காண வேண்டி, பேச்சு வந்த திசையை நோக்கி தனது தவறு புரியாமல் திரும்பினான், விஷ்வா.

மஞ்சள் நிற சுரிதாரில், ஆடையின் ஒரு புறம் முழுமைக்கும் சேறு தெறித்து மஞ்சள் நிறம் மாறியிருந்தது. 

சேறு அதிகம் கலவாத நீராகையால் நனைந்திருந்த ஆடை உடலோடு ஒருபுறம் முழுமைக்கும் ஒட்டி அழகோவியமாக்கி எதிரில் நின்றிருந்தவளை திரும்பியனுக்குக் காட்டியது.

அங்கங்கே அழகிய வதனத்திலும் சேறு தனது சேதியைச் செம்மையாகிச் சொல்லியபடி இருந்தது.  அவளின் அழகு கூடியிருந்ததைப் போல சேறு தெளித்து நின்றிருந்தவளைப் பார்த்திருந்தான் விஷ்வா.

ஐந்தரையடி உயரத்தில், மாநிறத்திற்கு சற்று மேல் காண்பவரின் கருத்தைக் கவரும் அடர்ந்த புருவத்துடன் கூடிய அழகிய கருவிழியுடன் அம்சமாகத் தனது முன்னின்று தன்னைக் குற்றவாளியாக்கிப் பேசுபவளை மட்டுமே கவனித்திருந்தான்.

காணும்முன் வார்த்தைகளைக் கவனித்தவன், கண்டபின் அவளின் வார்த்தைகளைக் கவனிக்க மறந்து, அவளின் வெளிப்புறத் தோற்றத்தைக் கவனித்தவாறே நின்றிருந்தான்.

தான்படிக்கும் காலத்தில் மட்டுமல்லாது, மேற்படிப்பிற்காக வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த போதும், உடன் படிக்கும் மாணவியர்கள் அவனுடன் இணக்கமாகப் பேச முயன்றால் கூட, முகம் சுளித்து தள்ளி நிறுத்துபவன், தன்னை மறந்து எதிரில் குறைகூறி தன்னை வசைபாடுபவளை வைத்த கண் எடுக்காமல் கவனித்திருந்தான்.

ஸ்ட்ராபெர்ரியை நினைவுறுத்தும், சாயம் பூசாத இயற்கையான உதடுகள் சொன்ன சேதி, விஷ்வாவின் காதில் விழவில்லை. 

அதன் அசைவுகளை, நளினங்களை மட்டுமே கருத்தினில் நிறைத்தபடியே நின்றிருந்தான்.

அப்படிப் பார்க்கும் பழக்கம் இதுவரை இல்லாதபோதும், இன்று ஏனோ தன்னை மறந்து எதிரில் நின்றிருந்தவளின் உதடுகளைக் கவனித்திருந்தான்.

“உங்ககிட்டத்தானே சொல்லிக்கிட்டு நிக்கேன்.  காதுல விழாதமாதிரி நின்னாக்கா என்ன அர்த்தம்?”, ஸ்ட்ராபெர்ரி உதட்டுக்காரி.

“…”, தன்னை மறந்த நிலையில் நிற்கும் விஷ்வா.

“ஹலோ… ஊருக்குப் புதுசா சார் நீங்க?  வேலைக்கின்னு நான் கிளம்பி வர்ற வழியில எம்மேல இப்படி சேறு அடிச்சா… எப்ப வீட்டுக்குப் போயி நான் வேற டிரெஸ் மாத்தி வேலைக்குத் திரும்பி வரது?”, ஸ்ட்ராபெர்ரி உதடு பேசியது.

விட்டால் அழுதுவிடும் நிலைக்கு வந்திருந்தது.

“…”,ஸ்ட்ராபெர்ரி உதடுகள் பேசும்போது அசையும் வடிவழகை மட்டுமே இதுவரைக் கவனித்திருந்தவன், அவளின் அழுகைக்கான குரலைக் கேட்டு மனம் வருந்தினான் விஷ்வா.

“இன்னிக்குன்னு எங்க முதலாளி பையன் கடைக்கு வரானு வேற… அந்த மேனேஜரு ஆஃபீஸ்கு சீக்கிரமா வரச் சொன்னாரு”, ஸ்ட்ராபெர்ரி வந்த அழுகையை அடக்கி, கீழே குனிந்தவாறு தனக்குள் புலம்பியது எதிரில் நிற்பவனுக்கும் கேட்டது.

“…”, எதுவும் பேசத் தோன்றவில்லை.  ஆனாலும் ஏதோ யோசனைகள் வந்துபோனவனாய் சுற்றிலும் பார்வையை விட்டான்.

“செவிடா இல்லை நீங்க ஊமையா?”, என்று விஷ்வாவின் முகத்திற்கு முன்பு தனது கைகளைச் சுண்டிச் சத்தம் செய்ய, அவளைத் திரும்பிப் பார்த்ததோடு உணர்வுக்கு வந்தவன்

“என்ன வேணும்?”, விஷ்வா.  எதுவும் நடவாதது போல, நாட்டாமை ரேஞ்சில் அடுத்தவர் மேல் பிராது போல அவன் மேல் பிராது கூறி நிற்பவளிடமே கேள்வி கேட்டிருந்தான்.

“ம்… ஒரு செட்டு சுரிதார்தான்…”, ஸ்ட்ராபெர்ரி

“அது போதுமா?”, எதனால் கேட்கிறாள் என்பது புரிந்திருந்தாலும், ஏனோ பேச்சை வளர்க்க அவனறியாமல் கேட்டிருந்தான்.

“வேற என்ன… இப்ப வாங்கிக் குடுக்க போறீங்களாக்கும்?”, முகத்தைக் கடுகடுவென வைத்தபடி பேசியவளை, சிரித்தபடியே பார்த்திருந்தான்.

“இப்ப திரும்பி எங்க வீட்டுக்குப் போயி டிரெஸ் மாத்தி எங்க ஆஃபீஸ்கு வர எப்டியும் இன்னும் ஒரு மணி நேரம் ஆகிடும்.  அதுக்குள்ள அங்க முதலாளி பையன் வந்திருவான்.  இந்த மேனேஜர் வேற அவரு வந்திட்டு போனபின்ன என்னைய திட்டியே கொல்லுவாரு”, ஸ்ட்ராபெர்ரி புலம்பியபடியே தான் வந்த திசையை நோக்கினாள்.

“உங்க ஆஃபீஸ்ல நான் வேணா வந்து பர்மிசன் கேக்கறேன்.  எனக்கு இப்ப வேல இருக்கு. நீ இப்ப கிளம்பறியா?”, இது விஷ்வா

“கிளம்பறதா?  உங்ககிட்ட போயி இவ்ளோ நேரம் பேசின என் மடத்தனத்த சொல்லணும்.  நான் எங்க வேலை பாக்கேன்னு தெரியாமலேயே வந்து எங்க மேனேஜருகிட்ட பர்மிசன் சொல்லுவீங்களோ? நீங்க யாருன்னே தெரியாம அவரும் சரி போகட்டும்னு அப்டியே என்னைய விட்ருவாறா?  எங்க மேனேஜர் ரொம்ப கறாரு.  நீங்க வேற காலையிலேயே சேத்தோட வந்து தகராறு பண்ணிட்டு…”, என்றவள்

அங்கிருந்து அகன்றவாறே, “எனக்குன்னு வந்து காலையிலேயே வந்து நின்னு, வச்சு செய்யுதுங்க”, என்றபடியே கையில் பிடித்திருந்த சைக்கிளை திருப்பியபடி முனகிக் கொண்டே அங்கிருந்து நகர

“உன் ஆஃபீஸ் எங்கனு சொன்னாத்தானே, நான் வந்த பர்மிசன் கேக்க முடியும்?”, தூரம் சென்றவளிடம் தனது கேள்வி சென்றடைய வேண்டி சத்தமாகச் சொன்னான், விஷ்வா

“எதையும் கோக்கவெல்லாம் வேணாம்.  ஒழுங்கா ரோட்டப்பாத்து வண்டிய ஓட்டுங்க…, கண்ணு தெரியலன்னா சீக்கிரமா போயி நல்ல டாக்டர பாருங்க…! அப்டியும் ஒழுங்கா ரோட்டுல வண்டிய ஓட்டத் தெரியலனா… நல்ல டிரைவர போட்டு ஓட்டுங்க…!”, என்று சினத்தோடே பேசியவள்,

“நமக்குன்னு வந்து காலையிலேயே சேருதுங்க…!”, என்று அவனுக்குக் கேட்கும் வண்ணம் சத்தமாகச் சொன்னபடியே சைக்கிளில் ஏறிக் கிளம்பியிருந்தாள்.

இருபத்து ஆறு ஆண்டுகளில் எந்தப் பெண்ணும் இப்படி நிற்க வைத்து, அவனைக் கேள்வி கேட்டதில்லை.  கேள்வி கேட்கும் வண்ணம் அவன் நடந்து கொண்டதுமில்லை.

மனதிற்குள் ஏதோ ஒன்று வந்து அமர்ந்திருந்தது.  யாரிவள் தன்னை இவ்வளவு மட்டமாக என்னவெல்லாம் பேசிவிட்டு, எதுவும் பேசாதது போல சென்றுவிட்டாள் என்று எண்ணியவன், வந்த வேலையை மறந்து நின்றிருந்தான்.

தனது அவசரம் என்பதை விட, இருக்கிற பழுதடைந்த ரோட்டில் இதற்குமேல் தன்னால் வண்டியை ஓட்ட இயலாது என்பது அவனுக்கு திண்ணம்.  ஸ்ட்ராபெர்ரி உதட்டுக்காரி (பேரு ஹீரோவுக்கு தெரியல) மீது சேறு அடித்த தனது செயலை எண்ணி சற்று வருந்தினாலும், அவள் பேசிச் சென்றது அதிகமோ என்று நினைத்தபடியே இம்போர்டர்ஸ்ஸின் உள்செல்லாது வெளியிலேயே நின்றான்.

விஷ்வா வண்டி வந்ததை உள்ளிருந்தே கவனித்திருந்த கண்ணன், முதலாளி இன்னும் உள்ளே வராததால் வெளியே வந்திருந்தான்.

மஞ்சள் சுரிதார் சைக்கிளில் சென்ற பாதையைப் பார்த்தபடியே நின்றவனிடம், “சார் ஏன் இங்கேயே நின்னுட்டீங்க.  யாரை எதிர்பாத்து நிக்கறீங்க?”, என்று அவனும் விஷ்வா பார்த்திருந்த திசையில் யாரேனும் வருகிறார்களா என்று பார்த்தான்.

“சைக்கிள்ல வந்திட்டு இருந்தவள கவனிக்காம சேறு அடிச்சிட்டேன் போல! கண்ணகிக்கு தங்கச்சி போல… அதான்… நியாயமெல்லாம் கறாரா வந்து எங்கிட்டக் கேட்டுட்டுப் போறா!”, என்று விஷ்வா வெளியில் நிற்கும் காரணத்தை சிரித்தபடியே கூறினான்.

“அப்டியா விசயம்.  முன்னமே என்னைய கூப்பிட்டிருந்தா என்ன விசயம்னு கேட்டு நானே பேசி அனுப்பியிருப்பேனே சார்”, சற்று வருத்தத்தோடு கேட்டிருந்தான் கண்ணன்.

“வண்டி வீல் இந்தப்பக்க சகதியில மாட்டிட்டா இன்னிக்கு முழுக்க அதோட போராடணுமேனு நினைச்சிட்டு, ஹார்பர்ல இருந்து  வண்டி வர நேரத்தைக் கணக்கு போட்டுட்டே ரோட்டுப் பக்கம் வந்தவள கவனிக்கல!  அதான் இப்டி நடந்துருச்சு”, என்று உண்மையில் வருத்தமாக உரைத்தவனை, வித்தியாசமாகப் பார்த்தான், கண்ணன்.

இது விஷ்வா அல்ல. இதுபோல சிரிப்பு, வருத்தம் என்பதை வந்த நாள்முதல் விஷ்வாவிடம் கண்டதில்லை. இன்று புதியதாகத் தோன்றினான். ஆனாலும் என்ன ஆயிற்று முதலாளிக்கு என்று தனது ஆராய்ச்சிப் பார்வையை முதலாளி அறியாமல் பார்த்திருந்தான், கண்ணன்.

அடுத்தடுத்து பணிகள் அவர்களுக்காகக் காத்திருக்க,

சந்தித்தவனை பற்றி அறியாதவளோ, இடைவிடாது விஷ்வாவைத் திட்டியவாறே வீடு சென்று, மாற்றுடை அணிந்து அவசர அவசரமாக அலுவலுகத்திற்கு திரும்பினாள்.

இன்று நினைத்தாலும் பெண்ணுக்கு அவனைச் சந்தித்த முதல் சந்திப்பிற்கும், அவனது சில குணாதிசயங்களுக்கும் தொடர்பு இருக்கும் என்பதை நம்ப இயலவில்லை. 

ஆனாலும் தான் கண்ட மெடிக்கல் ரிப்போர்ட் தவறானது இல்லை என்பதை ஆணித்தரமாக நம்புகிறாள்.

பெருமூச்சோடு படுக்கையில் புரண்டாலும், தன்னை எதற்கும் இதுவரை நிர்பந்திக்காதவனை எண்ணி, வருத்தமும் மேலிடுகிறது.

இன்னும் எவ்வளவு காலம் இந்த நடைமுறை தொடரும் என்பதை அறியாமலேயே மனதில் அதைப்பற்றிய எண்ணத்தோடு உறங்க முயலுகிறாள்.

நாளை அவனைச் சந்திக்க வேண்டுமே?

எந்த மாதிரியான நிகழ்வுகளையெல்லாம் எதிர்கொண்டாக வேண்டுமோ என்ற நினைப்போடு, சலிப்பாக உணர்கிறாள் பெண்.

பெண்ணின் சலிப்பு எதனால் என்பதை அடுத்த அத்தியாயத்தில் காண்போம் தோழமைகளே!

——-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!