Kandeepanin Kanavu-15
Kandeepanin Kanavu-15
காண்டீபனின் கனவு 15
“ராட்ஷசனின் கண்களைத் திறந்தது காண்டீபனா!? சரி அப்படியே இருந்தாலும் திடீரென எங்கிருந்து முளைத்தான் இந்த ராட்ஷசன்? இந்தக் கேள்விக்கு பதில் தா….” கட்டளை இட்டார் வல்லையா.
“இதற்கு பதில் என்னிடம் இல்லை. கண்டுபிடி. ஏகாதசி அன்று தமயந்தி வருவாள். அவளிடம் பதில் இருக்கும்.”
அத்துடன் தன் கேள்விகளை முடித்துக் கொண்டார். இனி என்ன கேட்டு என்ன ஆகப் போகிறது. தமயந்தியிடம் தான் கேட்க வேண்டும் என சமாதானப் படுத்திக் கொண்டார்.
விடியல் பிறந்து தாத்தா வெளியே வந்தார். வல்லய்யா பூஜையறையில் இருப்பதைக் கண்டு அங்கே வர,
கண்களில் மையும், கையில் கற்பூரம் ஏற்றிய சுவடும் அவருக்கு வல்லையா என்ன செய்திருக்கிறார் என்பதை உணர்த்தியது.
“என்ன வல்லா? காலையிலேயே ஆரம்பிச்சிருக்க. என்னையும் எழுப்பியிருக்கலாமே!” ஆதங்கமாகக் கேட்க,
“இல்லங்க ஐயா. நேத்து ராத்திரி ஒரே அனத்தல் சத்தம் கேட்டது.” சற்று தயங்க,
“இனிக்கு ஏகாதசி இல்லையே!” தாத்தா உடனே மறுத்துக் கூறினார்.
“இது வேற.” சொல்லுவதா வேண்டாமா எனத் தயங்க,
“வேறன்னா?”
“பிரம்ம ராட்ஷசன்.. நேத்து ராத்திரி பூரா பசில அனத்தி இருக்கான். அவனுக்கு என்ன வேணும்னு தெரியல. அதே சமயம், இத்தனை நாள் இப்படி ஒரு ராட்ஷசன் இதுல சம்மந்தப் பட்டிருக்கறது தெரியாதே! அதுனால தான் அதிகாலைல எழுந்து பூஜை பண்ணி குறி கேட்டுப் பார்த்தேன்.”
“என்ன பதில் கிடச்சுது?” தாத்தா பதட்டப் பட்டார்.
“காண்டீபன் தான் ராட்ஷசனின் கண்ணை திறந்துட்டான்னு பதில் வந்துச்சு. அதுமட்டுமில்ல, அந்த வருணுக்கு வெள்ளி மான்கள் காவலாம். அவன் உங்க குலதெய்வத்த கொண்டு போக வந்திருக்கான்னும் பதில் வந்தது.” அனைத்து விவரங்களையும் கூறினார்.
தாத்தாவுக்கு குழப்பமாக இருந்தது. இது வரை அவர் அறிந்த தங்களின் குடும்ப விவரங்களில் ராட்ஷசன் என்ற ஒன்றைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை.
“எனக்கும் ரொம்ப குழப்பமா இருக்கு. அப்போ அந்த வருண் கிட்ட காண்டீபன ஜாக்கிரதையா இருக்க சொல்லனுமா? அவன் எதுக்கு நம்ம குல தெயவத்த கொண்டு போகணும்? கடவுளே! எங்களுக்கு நல்ல வழி காட்டு.” தலையில் கை வைத்தபடி அமர்ந்துவிட்டார்.
“கவலைப் படாதீங்க ஐயா. எல்லாத்துக்கும் ஒரு தீர்வு கண்டிப்பா இருக்கும். நாம சரியான பாதையில போனா எல்லாமே கிடைக்கும். வர ஏகாதசி அன்னிக்கு தமயந்தி கிட்ட கேட்டா பதில் கிடைக்குமாம்.” வல்லையா கூற,
“என்னது…!!? தமா கிட்டயா? சரி கேட்டுப் பார்ப்போம். ஆனா அதுக்கு இன்னும் நாட்கள் இருக்கு. வேற வழில இந்த ராட்ஷசன பத்தி தெரிஞ்சுக்க முடியுமா?” கலக்கமுற்றார் தாத்தா.
“நான் முயற்சி பண்றேங்க. பட்ஷிகளும் மற்ற சாஸ்த்திரங்களும் கண்டிப்பா உதவும்.” நம்பிக்கையாகக் கூறினார்.
***
அன்று மாலை இருள் தொடங்கும்முன் தங்களின் டெண்டுக்கு வந்து சேர்ந்திருந்தனர் மூவரும்.
வரும் போதே இதைப் பற்றி எதுவும் கில்பர்ட்டிடம் கூற வேண்டாமென தங்களுக்குள் பேசி முடிவு செய்திருந்தனர்.
அவர் கேட்டபோது கூட பொதுவாக ‘இத்தனை குகைகள், பெரிய நீண்ட பாதை, உள்ளே இருந்த ஹால் போன்ற இடத்தைப் பற்றி மட்டுமே சொல்லி அவரை திருப்தி படுத்தினர்.
மேற்கொண்டு வேறு எதுவும் கில்-லும் கேட்கவில்லை. அவர்களின் களைப்பைப் பார்த்து அவர்களுக்கு செய்து வைத்திருந்த உணவைக் கொடுத்தார்.
“நாளைக்கு நாம வேற பக்கம் உள்ள மலை மேல ஏறனும்” முன்கூட்டியே கில்பர்ட்டிடம் கூறி வைத்தான் வீரா.
சாப்பிட்டு உடனே சம்ரக்க்ஷா உறங்கி விட, வீராவும் வருணும் அந்த நீரோடையில் குளிக்க நினைத்தனர். வீரா தனது சட்டையைக் கழட்டிவிட்டு நீரில் இறங்கினான். வருணும் சற்று நேரம் நீந்தி களைப்பைப் போக்கிக் கொள்ள,
நீரிலிருந்து வெளியே வந்த வீராவை கில் பார்த்து,
“உன்னோட டாட்டூ நல்லா இருக்கு” என்றார்.
“டாட்டூவா?!” ஆச்சரியப் பட்டு குனிந்து தன் உடலைப் பார்க்க, அவனது நெஞ்சில் அந்த முக்கோண ஒளி போல ஒரு சிறு முக்கோணம் பதிந்திருந்தது.
‘இது எப்படி வந்தது!’ வியந்தவன், அதை கில்லிடம் காட்டிக் கொள்ளாமல்,
“ஒ! ஆமா. தேங்க்ஸ்” என சிரித்துவிட்டு உடையை மாற்றினான்.
கில் உறங்கச் சென்றபின் வருண் வீராவிடம், “அந்த ஒளி உன் மேலப் பட்டதுனால தான் இது உருவாகி இருக்கும்னு நினைக்கறேன்.” என்றான்.
“ஆமா. எனக்கும் அப்படித் தான் தோணுது. ஆனா அப்போ வலி இருந்தது.இப்போ இல்ல.” வீரா சொல்ல,
“சரி எல்லாமே ஒரு இலக்கை நோக்கித் தான்.நாளைக்கு அந்த மலை மேல ஏறனுமே, சாம் தேவையா? இன்பாஃக்ட் நாம அடுத்த மூணு நாளுமே ஒவ்வொரு மலையா ஏறப் போறோம். அதுனால கேட்டேன்.”
“கரெக்ட் தான் வருண். அவ கிட்ட கேட்டுப் பார்க்கறேன். கில் கூட இங்கயே இருக்கட்டும்.கொஞ்சம் பயப்படறா.” வீரா யோசிக்க,
“அதுவும் உனக்குன்னா ரொம்பவே துடிச்சு போறா..” சிரித்துக் கொண்டே கூறினான்.
“ஹே!! நீ நினைக்கற மாதிரி இல்ல வருண்.”வாய் சொன்னாலும் இன்று அவள் கட்டிப்பிடித்த போது உணர்ந்தது வேறு என அவன் மனம் வலியுறுத்தியது.
“நேத்து வரை அப்படி இருக்கலாம். ஆனா இன்னிக்கு நான் ரெண்டு பேர் கிட்டயும் மாற்றங்கள பாத்தேன்.உண்மை தானே!” வீரா அவனை விடுவதாக இல்லை.
“உன்கிட்ட சொல்றதுல என்ன! எனக்கு சில மாற்றங்கள் வந்தது உண்மை தான்.அதுவும் நேத்து நீ கேட்ட பிறகு, எனக்கு ..” வீரா தயங்க,
“என்ன சொல்லு..”
“நான் இன்னிக்கு கனவைப் பத்தி சொல்லாம விட்டதுக்கும் இதே தான் காரணம். நேத்து நீ பேசுன பிறகு எனக்கு கனவு வந்துச்சு. நான் சாம்-அ அடிக்கடி கிஸ் பண்ற மாதிரி. அவளுக்கு விருப்பம் இருக்கா இல்லையா என்பதெல்லாம் கனவுல என்னால உணர முடியல. ஆனா அவள நான் வெறித் தனமா கிஸ் பண்றது மட்டும் தான் என்னோட நோக்கமா இருந்துச்சு.” சிறிது இடைவெளி விட்டான்.
“ஒரு வேளை என் கனவெல்லாம் பலிக்கும்னா இதுவும் நடந்துடுமோன்னு பயமா இருக்கு!” வருணைப் பார்க்க,
“இதுக்கு எதுக்கு பயம்? அவ உன் அத்தைப் பொண்ணு. அவள கல்யாணம் பண்ணிக்கற முறை உனக்கு இருக்குல்ல.” எதார்த்தமாகக் கூற,
“முறை எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இத்தனை நாள் நான் அப்படிப் பழகல. இப்போ திடீர்னு இப்படி ஒரு ஃபீல் இருக்குன்னு அவகிட்ட சொன்னா, அவ என்னைப் பத்தி என்ன நினைப்பா? இவ்வளோ நாள் பழக்கமே அசிங்கப் படுத்தின மாதிரி ஆகாதா.”
“அவளுக்கும் உன் மேல விருப்பம் இருந்தா இது ஒரு விஷயமே இல்லையே வீர். எனக்கு நீங்க ரெண்டு பேரும் ஒன்னு சேருவீங்கன்னு தான் ஆரம்பத்துலேந்தே தோணிட்டு இருக்கு. கண்டிப்பா நடக்கும் பாரு.” தைரியம் சொல்ல,
“எனக்கு அதப் பத்தி யோசிக்கவே முடியல வருண். வேற மாதிரி அவள பாக்கக் கூடாதுன்னு தான் நினைக்கறேன்.” வருத்தப் பட்டான் வீரா.
“இங்க பாரு. நடக்கறது நடக்கும். நம்ம கையில ஒண்ணுமே இல்ல. நீ இதெல்லாம் யோசிக்காம தூங்கு. காலைல சீக்கிரம் கிளம்பனும்.” அவனையும் கிளப்பி, தானும் கிளம்பினான் வருண்.
வீரா டென்ட்க்கு உள்ளே செல்ல எத்தனிக்க, பளிச்சென ஒரு ஒளி நகர்ந்தது போலத் தோன்ற உடனே அந்த இடத்தைப் பார்த்தான் வீரா. சாம் கூறிய அந்த வெள்ளி மான்களை அவனும் கண்டான்.
விரைந்து அந்த இடத்தை நோக்கி ஓட நினைக்க, அந்த மான்கள் சென்ற இடமே தெரியவில்லை. மிகவும் ஒளி பொருந்தியவை எங்கிருந்தாலும் தெரிந்துவிடும் என சுற்றும் முற்றும் சென்று தேடினான். கண்களில் அகப் படவில்லை. சிறிது நேரர்த்திற்குப் பிறகு
‘நிச்சயம் அது மறைந்து தான் போயிருக்க வேண்டும். இங்கே ஓடிக் கொண்டிருந்தால், அதன் ஒளியே காட்டிக் கொடுத்துவிடும்.இங்கு நிறைய அமானுஷ்யமான விஷயங்கள் நடக்கிறது. இதைப் பற்றிக் கூட ஒரு வேளை நாளை செல்லும் அந்த மலைகளில் எதிலாவது தெரியலாம்.’ யோசித்துக் கொண்டே டெண்ட்டுக்கு சென்றான்.
குழந்தை போல கால்களை குறுக்கிக் கொண்டு படுத்திருக்கும் சம்ரக்க்ஷா அவன் கண்களில் பட, ‘இவள நான் கட்டிக்கனுமா..ஆண்டவா!!’ தனக்குள் சிரித்துக் கொண்டான். தனது படுக்கையில் விழுந்தவன், அடுத்த சில நொடிகளிலேயே உறங்கி விட்டான்.
கனவுகள் அவனை ஆட்கொண்டன. பழைய குகைக்குள் மீண்டும் செல்ல, அந்த முனிவரின் சிலை அருகே நின்றிருந்தான் வீரா. அங்கிருந்த ஒவ்வொரு மம்மீக்களும் இப்போது அவனையே பார்ப்பது போலத் தோன்றியது.
முனிவர் சிலை அடியில் கிடைத்த அந்த ஓலைகளை அவன் மீண்டும் எடுத்துப் பார்க்க நினைத்துக் குனிய, இப்போது சிலை மறைந்து முனிவரே அமர்ந்திருந்தார்.
நிஜமான அவரது கால்களை அவன் ஸ்பரிசித்ததும் உடலில் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.
“காண்டீபா! நான் சொன்ன அடையாளங்களை வைத்துக் கொண்டு நீ செல்லப் போகும் இடம், ஒவ்வொன்றும் உனக்கு முக்கியமானவை. நீ எதற்காகப் பிறந்தாயோ அது நிறைவேறும் காலம் பக்கத்தில் நெருங்கிவிட்டது. நிறைய எதிரிகளை சந்திக்கத் தயாராகு.” கட்டளை போல அவர் சொன்னதும் வீரா வேறு ஏதும் கேட்காமல்,
“உத்தரவு!” அவரின் அடி பணிந்தான்.
வேகமாக குகையில் வெளியே வந்தவன், அவர் யார் என்பதைக் கேட்க மறந்து மீண்டும் அந்தக் குகையைத் திரும்பிப் பார்க்க, இப்போது அந்தக் குகையே தீப்பிழம்புக்கு இரையாகி, குகையின் வாசலில் குழம்பாக வழிந்து கொண்டிருந்தது.
ஒரு அருவி போல நெருப்பு கொட்டிக் கொண்டிருந்தது. அதைக் கண்டு பயந்தே போனான் வீரா. அதைக் கண்டு நிற்காமல் ஓடினான்.
முனிவரின் சொல்லைக் கேட்டு, மலை மேல் ஏறத் துவங்க, பல சறுக்கல்கள் அவனை தடுத்தது. கை கால்களில் ரத்தம் வழிய ஆரம்பித்தது. ஒரு வழியாக உச்சி வெயில் நேரத்தில் மலையின் உச்சியை அடைய, அதுவோ மேகங்களுக்கு இடையில் மிதந்து கொண்டிருந்தது.
அத்தனை நேரம் அவன் ஏறி வந்த களைப்பு தீர்க்க அந்த மலையில் ஒரு இடத்திலிருந்து நீர் வழிந்து வந்தது. ஆசையாக அதைப் பருக அமிர்தமாக அவன் தொண்டைக்குள் இறங்கியது. பின் நிம்மதியாக அவன் அடுத்த அடி எடுத்து வைக்க, அவன் தொண்டை எரிய ஆரம்பித்தது.
அவன் குடித்த தண்ணீர் விஷம் போலத் தோன்றியது.
“ஆற்ர்ரர்ர்ர்…. ஆர்ர்ர்ரர்ர்ர்ரர்…” எனத் தொண்டைய காரினான். கையிலிருந்த பாட்டில் நீர் தீர்ந்து அவதிப் பட்டான். எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல அவன் அங்கிருந்த செடி ஒன்றைப் பிடுங்கி எரிச்சலை அடக்க வாயில் போட்டுத் திணித்தான்.
நன்றாக மென்று துப்பிய பிறகு அங்கேயே ஆசுவாசமாக விழுந்தான். விழுந்த இடம் பாறை. முதலில் ஒன்றும் தெரியாமல் போனாலும் , இப்போது பாறை நழுவுவது போல இருக்க, வேகமாக எழுந்தான். எங்கு செல்வது எனத் தெரியாமல் காலின் கீழ் நழுவும் பாறையை விட்டு வேறு ஒரு திடமான பாறை மேல் நிற்க அங்கிருந்து தாவினான்.
தாவியதும் காலின் கீழ் இருந்த பாறை நழுவ ஒரு கால் தவறி மறு பாறையில் ஒரு கால் வைக்கக், கீழே சரிந்தான்.
தூக்கத்திலிருந்து எழுந்தான்.
அந்தரத்தில் இன்னும் தொங்கிக் கொண்டு இருப்பது போன்ற உணர்வு அவனுக்கு மறையவில்லை.
‘என்ன பயங்கரமான கனவு இது! ஒரு வேளை நாளை இது தான் நடக்கப் போகிறதா?’ மனம் பதைபதைத்தது.
இது தனக்கான எச்சரிக்கை என்பதை மெல்ல உணர்ந்தான்.
அருகில் உறங்கிக் கொண்டிருக்கும் சம்ரக்ஷாவைப் பார்த்தவன்,
‘இப்படிப் பட்ட இடத்திற்கு நிச்சயம் உன்னைக் கூட்டிச் செல்ல மாட்டேன்.’ என அவளது தலையை வருடினான்.
காலையில் அவள் எழுந்திருக்கும் முன்னமே வீரா எழுந்து வருணையும் அழைத்துக் கொண்டு கிளம்பினான்.
நேற்று அவன் கண்ட கனவைப் பற்றிச் சொன்னான் வீரா.
கனவில் வந்தவை உண்மையா என்பதை உணர்ந்து கொள்ள முதலில் நேற்று சென்ற அந்தக் குகையைச் சென்று பார்த்தனர்.
அது அப்படியே உண்மையாக ஆனது. அந்த குகைகுள் செல்லும் பாதை முழுதும் இப்போது தீப்பிழம்பு ஆறாக வழிந்து ஓடியது.
“அப்போ அந்த மலை நிச்சயமா டேன்ஜர் தான் வருண்.” வீரா தயங்க,
“நாம தண்ணி நிறைய எடுத்துப்போம். அங்க போனா எப்படி நடந்துக்கணும்னு சொல்லத் தான் உனக்கு அந்த கனவு வந்தது, சோ நாம கேர்புல்லா போவோம்.” அவனை எப்படியும் அழைத்துச் செல்வது என தீர்மானமாக இருந்தான் வருண்.