IV15

IV15

இதய ♥ வேட்கை 15

 

திலா தனது வாழ்வில் வந்தபிறகே ஒரு பற்றுதலோடு வாழத் துவங்கியிருப்பதாக விஷ்வாவின் மனதில் பதிந்திருந்தது.

தாயைப் பற்றிய புரிதல் இல்லாதபோதே, தன்னை தவிக்கவிட்டுப் போன தாயின் மீது, ஏக்கமும், ஏமாற்றமும் மனதோடு இருந்தது விஷ்வாவிற்கு.

நாளடைவில், விபரம் புரியத் துவங்கியபோது மரணத்தை பற்றிய புரிதல் வந்து நிதர்சனம் உணர்ந்து கொண்டவன், தனது நிலையை எண்ணி கழிவிரக்கம் வந்தபோதும், அதை வெளிக்காட்டாது வாழப் பழகியிருந்தான்.

தந்தையோடு சிறுவயது முதலே நெருக்கம் இல்லாது போயிருக்க, தாயின் பிரிவிற்குப் பிறகும் நெருங்க முயலவில்லை. 

சத்யநாதனும் மகனுக்கு வேண்டியவற்றை குறைவின்றிச் செய்தபோதும், குணத்தோடு அரவணைக்கத் தவறியிருந்தார்.

பாசம், பற்று, அரவணைப்பிற்கு பஞ்சமாகிப்போயிருக்க, குறிக்கோளற்ற, குறையில்லா வாழ்வில், மனம்போல வளர்ந்திருந்தான் விஷ்வா.

திருமண வயதை நெருங்கியபோது அனைத்தையும் தந்தையே முன்னின்று செய்வார் என்றெண்ணியிருந்தான். 

எதிர்பாரா தந்தையின் மரணத்தை எதிர்கொண்டவன், தனக்கும் திருமணம், மனைவி, குழந்தை என்கிற அமைப்பில் வாழ வேட்கை இருந்தபோதும் அதற்கான முயற்சியை தானாக மேற்கொள்ள இயலாமல் இருந்தான்.  

தனது குறிக்கோளற்ற, ஒழுங்கற்ற வாழ்வில் தான் விரும்பிய திருமணத்தை நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவென்றெண்ணி இருந்தவனுக்கு, சுந்தரம் மாலினி உருவில் அவற்றிற்கான அரிய வாய்ப்பு கிட்டியபோது, அதை தவிர்க்காமல் தனதாக்கிக் கொள்ளும் முயற்சியில் தீவிரமாக அவனையறியாமலேயே இறங்கியிருந்தான்.

திருமணம் கைகூடியதும் இனி எல்லாம் சுகமே என்று இறுமாந்திருந்தவனுக்கு, பெண்ணின் ஒதுக்கம் துயரை உண்டு செய்தபோதும், அதைச் செரிசெய்துவிடும் நோக்கில் தனியொருவனாகவே முயன்றான்.

திலா தன்னைவிட்டு ஒதுங்கி இருந்தபோதும், வாழ்நாள் முழுமைக்கும் அப்டியே இருந்தாலும் ஏற்புடையதே என்கிற நிலைக்கு வந்திருந்தான்.

பெண் விவாகரத்து எனும் விவகாரத்தைக் கேட்டு வலியுறுத்தியபோதும், அதைக் கொடுக்காமல் தட்டிக் கழித்து தள்ளிப்போடும் எண்ணத்திலேயே இருந்தான்.

தற்போது வாழும் வாழ்வு முறையே தனக்குப் போதும் என்றே தனக்குத்தானே சமாதானம் கூறி, ஆளுக்கொரு திசையில் வாழ தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தான்!

ஆனால் பெண்ணை தன்னிடமிருந்து விலகிச் செல்லாமல் இருக்கவேண்டிய வழிமுறைகளைப் பெண் அறியாது பின்பற்றினான் என்பதும் உண்மை.

அத்தகைய நிலையையும் மாற்றி, பெண் தன்னோடு இசைந்து வாழும் வாழ்க்கைக்கு, உரிய வழியை மாலினி தம்பதியர் வகுத்துக் கொடுத்தபோது, மிகுந்த சிரத்தையோடு தன் குறைகள் களைந்து, தன்னை முறையாகச் செதுக்கிக் கொள்வதில் ஈடுபட்டான் விஷ்வா.

எல்லாம் சரியாகி, பெண்ணும் தன்னோடு வாழ இசைந்து வாயில் வந்தபோது, உண்டான இறுமாப்பும், மகிழ்ச்சியும் அளவிடற்கரியதாகவே, விஷ்வாவின் உள்ளத்து வேட்கையை உவகையோடு மாற்றியிருந்தது.

அத்துணை நெஞ்சுரம் மனதில் வந்து குடியேறிட, இனி தனக்கு எள்ளளவும் குறையில்லை என்கிற இறுமாப்பும் ஆழ்மனதில் வந்திருந்தது என்னவோ அவனறியாதது!

ஆனால் அது விடியலில் நிறம் மாறி, அனைத்தும் கையை விட்டுச் சென்றதாக அவனது மதியை வந்தடைந்தபோது, அதாவது அவன் யூகித்தபோது உண்டான வலி வார்த்தைகளால் சொல்லி மாளாது!

கைக்குக் கிட்டியது, வாயிற்கு அகப்படாத நிலைதான் எனும்போது அதை இலகுவாக ஏற்றுக்கொள்ள இயலாமல், இறுகியிருந்தான் விஷ்வா.

அத்தனை வலியிலும் பெண்ணை எப்படி தன்னோடு அழைத்துக் கொள்வது என்று வழிதெரியாமல் அமர்ந்திருந்தவனுக்கு, மனைவி இருக்கும் இடம் அறிந்துபோது உலகமே அவன் வசமாகி இருந்ததுபோல உணர்ந்தான்.

பெண் தன்னைத் தவிர்க்க வேண்டிச் சென்றிருக்கிறாளோ என்கிற எண்ணமே விஷ்வாவை வதைத்திருந்தது.

ஆனாலும் தனது எண்ணத்தை செயலாக்கியதோடு, வீட்டில் வந்து மனைவியை விட்டுச் சென்றவன், அதன்பின் அலுவலகப் பணியில் தன்னை மூழ்கடித்துக் கொண்டிருந்தான்.

மாலை திரும்பியபோதும் மனைவியைக் காணும் நோக்கோடு வீடு வந்தவனுக்கு, மீண்டும் ஏமாற்றமே மிஞ்ச, மறைந்திருந்த துயரம் மனதில் மலைபோல வந்தமர்ந்து கொண்டிருந்தது.

விஷ்வா வளர்ந்த சூழல், பெண்ணைப் பற்றிய இலக்கண, இலக்கிய வரைவுகளை அறியாததாகவே இருந்தது.

குறிப்பாக இன்னும் திலாவைத் தெளிவாக உணராத நிலை.

தன்னை இதற்குமுன் பல நிலைகளில், சீராட்டி, தோள் தட்டி, அரவணைத்துக் கொண்டவள் அடுத்த கட்ட உறவைப் புதுப்பித்த பிறகு, இன்னும் நெருக்கம் காட்டாமல், விட்டேற்றியாக விலகியபோது மனதில் நெருஞ்சில் முள் குத்திய உணர்வை உணரப் பெற்றிருந்தான் விஷ்வா.

அதனால் தன் உள்ளத்தினை உறுத்தி, வறுத்திய வினாவை, பெண்ணை அந்த அதிகாலை வேளையில் எழுப்பிக் கேட்டிருந்தான்.

சிறந்த வியாபாரிக்கு, தனது குறிக்கோளைத் தவிர வேறு இலக்கு இருக்காதல்லவா!

எப்படிப் பேசினால் தனது வியாபாரம் சிறக்கும் என்கிற நோக்கத்தை அன்றி, வேறு எதையும் பெரிதுபடுத்தாத வியாபாரியைப்போல விஷ்வாவும் மாறியிருந்தான்.

பெண் உறக்க கலக்கத்தோடு புரியாமல், “தூங்கத்தானே செஞ்சேன்!  உங்களை விட்டுட்டு எங்க போனேன்!”, என்று உறக்கத்தினிடையே விஷ்வா எழுப்பியதால், எழுந்த எரிச்சலோடு பதில் கூற

“எஸ்டர்டே ஈவினிங் கேட்டேன்!”, என்று பெண்ணது கேள்விக்கு தெளிவான விளக்கம் கூறினான் விஷ்வா.

‘இப்ப எதுக்கு அதெல்லாம்!’, என்ற நினைப்பு வந்தபோதும், பதில் கூறினாள் திலா.

“கோயிலுக்கு போனேன்!”, என்று தனது எரிச்சல் தோய்ந்த குரலை மாற்றாது அதே தொனியில் கூறிய திலாவின் பதிலைக் கேட்டு ‘அங்கே எதற்குப் போனாள்?’, என்கிற எண்ணம் எழுந்தது விஷ்வாவிற்கு.

குழப்பமான உணர்வு எழுந்திட, “என்ன! கோயிலுக்கா?”, என்று பெண்ணை நோக்கி மீண்டும் கேட்க

பெண்ணும் ஆமோதித்து கண்களாலேயே ‘ஆம்’ என பதில் கூறினாள்.

பெண்ணின் பதில் தனக்கு பாதகமில்லாமல் இருப்பதை உணர்ந்தவன், அசடு வழிய பெண்ணையே பார்த்திருந்தான்.

‘ஒன்னுமே இல்லாததை ஏதோ இருக்கறதா நினைச்சு நேரங்காலத்தை மட்டுமல்லாம, நிம்மதியையும் இழந்திருக்கேனே!’, என்று உணர்ந்தவனுக்குள், தன்மீதே வெறுப்பு உண்டாகியிருந்தது.

இருப்பினும், அத்தோடு விட்டுவிடும் எண்ணமில்லாமல் தொடர்ந்திருந்தான் விஷ்வா.

உறக்கக் கலக்கத்தோடு உம்மென்று முகத்தைக் தூக்கி வைத்தநிலையில் பேசியவளைப் பொருட்படுத்தாது, முந்தைய நாள் நடந்ததைப் பற்றி அறிந்துகொள்ள எண்ணி, திலாவிடம் இயல்பாகக் கேட்பதுபோல ஆரம்பம் முதலே கூறுமாறு வினவினான் விஷ்வா.

“இப்ப அதெல்லாம் எதுக்கு திரும்பக் கேக்குறீங்க?”, என்று கேட்டவாறு கணவனைப் புரியாமல் பார்த்தாள் திலா.

“காலையிலே சொல்லாம கிளம்பிப் போயி டென்சன் பண்ணிட்ட! சாயந்திரம் வந்து வீட்டுக்குள்ள நுழைஞ்சா அப்பவும் ஆளைக் காணோம். அப்பவும் டென்சன்!”, என்று கூறிய வார்த்தை விஷ்வாவின் உச்சரிப்பிலேயே, அவனது முந்தைய தின மனநிலையைக் கண்டு கொண்டவள்

விஷ்வா தொடருமுன் இடைமறித்துப் பேச்சைத் துவங்கியிருந்தாள் பெண்.

“சாரிங்க!  நீங்க ரொம்ப டயர்டா தூங்கிட்டுருந்ததால காலையில எழுப்பல! நேருல சொல்லவும் ஒரு மாதிரி இருந்தது”, என்று தனது வெட்கத்தை அந்த வேளையிலும் முகத்தில் காட்டியவள்,

“போயி போன்ல சொல்லிக்கலாம்னு நினைச்சு போனேன்.  ஆனா போனை பதட்டத்திலே இங்கேயே வச்சிட்டுப் போயிருந்துருக்கேன்!  அதான் கண்ணனாகிட்ட வாங்கிப் பேசினேன். ஆனா ஈவினிங் உங்களோட கோவிலுக்குப் போகலாம்னுதான் போன் பண்ணேன்.  நீங்கதான் எடுக்கலை!  நான் என்ன செய்ய?”, என்று காலையில் தான் செய்தமைக்கு மன்னிப்பு கோரியவள், மாலையில் விஷ்வா அழைப்பை எடுக்காததற்கு தான் என்ன செய்ய என்கிற நோக்கில் வினவியிருந்தாள் திலா.

விளக்கம் ஓரளவு கூறி முடித்து தெளிவானதும், அமைதியாக தன்னையே பார்த்திருந்தவனை நோக்கி, “இதுக்குத்தான் காலையிலேயே, ஸ்ட்ராபெர்ரி கூஸ்பெர்ரினு கூப்பிட்டு எந்தூக்கத்தைக் கலைச்சீங்களா?”, என்று அந்நியள்(அந்நியன் எதிர்பதம்) நடையில் விசாரித்தாள் திலா.

பெண்ணுக்கு தான் கூறாமல் சென்றதைத் தவிர, வேறு எதுவும் தவறாகத் தோன்றவில்லை.

மேலும் தனது உறக்கத்தைக் கெடுத்து விசயத்தைக் கேட்டறிந்தவனின் மீது இருந்த வருத்தத்தில் கணவனை அந்த முறையில் விசாரித்தாள் பெண்.

தலையை ஆட்டி ஆமோதித்தவனை விட்டு விலகி எழுந்தவள், “அதை நேத்தே கேக்கறதுக்கென்ன? நேத்து முழுக்க வீட்லதான இருந்தேன்.  அப்போலாம் கேக்காம இப்ப வந்து தூங்கிட்டுருந்தவளை எழுப்பி உக்கார வச்சி கேட்டிட்டு இருக்கீங்க?”, என்று குமுறியவள் அத்தோடு விடவில்லை.

“நானே வந்து கேட்டப்பவாவது என்ன விசயம்னு சொல்லியிருக்கலாம்.  அப்ப எங்கிட்ட பேசறதுக்கு வீம்பு பண்ணிட்டு, வெளிய கிளம்பி போயாச்சு!

என்னமோ பாழுங்கிணத்தில விழுந்த உங்க வாழ்க்கையை பாட்டில்ல இருக்கற சரக்கு வந்து தூக்கி நிறுத்திரும்னு குடிச்சிட்டு வேற வரீங்க!”, என்று கோபமாக முந்தைய இரவு விஷ்வா வந்த நிலையினைக் குறித்துப் பேசி வினவியவள்

“நீங்க பண்ற டென்சன்ல, உங்களை மாதிரி நானும் மாறுனா நான் பாட்டிலோட தான் காலத்துக்கும் குடும்பம் நடத்தனும்போல!”, என்று கணவனின் செயலை நக்கல் கலந்த குரலில் குற்றம் சாட்டிப் பேசினாள்.

“உங்களுக்கு என்னதான் பிரச்சனை?  எதுனாலும் எங்கிட்ட மறைக்காம சொல்லுங்க!  நீங்க இத்தனை வருசம் ஒரு மாதிரி வளர்ந்திருப்பீங்க.  நான் வேற இடத்தில வேற மாதிரி வளந்து வந்திருக்கேன்.  எனக்கு சரினு பட்டது உங்களுக்கு தப்புனு படலாம்.  எதையும் சொன்னாதான் என்னால சரி பண்ணிக்க முடியும்.  அதைவிட்டுட்டு முகத்தைத் தூக்கி மூஞ்சுறு கணக்கா வச்சிட்டுத் தெரிஞ்சா இது நமக்கு நல்லதில்லை.  ஆமா! இங்க வீட்ல இருக்கிறது ரெண்டு பேரு.  அப்பப்ப பேசி ஒரு முடிவுக்கு வந்திட்டா ரெண்டு பேருக்குமே நல்லது.  அதைவிட்டுட்டு இனி குடிச்சிட்டு வீட்டுக்கு வந்தா குழப்பமெல்லாம் தீராது.  கூடத்தான் செய்யும்.  அதை எப்டிக் கூட்டறேன்னு மட்டும் இனிப்பாருங்க”, என்று தன்மீதான குறையாக இருப்பினும், கூறினால் தன்னால் சரிசெய்து கொள்ளமுடியும் என்கிற ரீதியில் பெண் பேசியதோடு மட்டுமல்லாது, இனிக் குடித்துவிட்டு வந்தால் தானும் பதிலுக்கு தன்னால் இயன்ற வகையில் உனக்கு பிரச்சனை தருவேன் என்கிற தினுசில் பேசியிருந்தாள் திலா.

இறுதியாக திலா பேசிய விசயத்திற்கே செல்லாமல், முதலில் கூறிய விசயத்தை மட்டுமே கருத்தில் எடுத்துக் கொண்டிருந்தான் விஷ்வா.  அதனால் உள்ளத்தில் உத்வேகம் உண்டாகியிருக்க, துணிச்சலோடு மனதில் உள்ளதை திலாவிடம் கூறத் துவங்கியிருந்தான்.

சில விசயங்களை பெண்ணிடம் கேட்டறிந்தவன், அதன்பின் நேரடியாகவே தனது மனத்தோன்றலை எடுத்துரைத்தான்.

“உன்னை எங்கேயும் போக வேணானு தடுக்கலை. காலையில அவசரமா நீ கிளம்பினதையும் நான் தப்பா சொல்லலை.  நீ சொன்ன மாதிரி,  என்னைப் பாக்க ஷையா இருந்தாலும் ஒரு பேப்பர்ல எழுதி இந்த டேபிள்ல வச்சிட்டுப் போயிருக்கலாம்.  இல்லைனா வாட்சப்ல மெசேஜ் பண்ணிட்டு கிளம்பிப் போயிருக்கலாம்.  வீட்ல வேற ஆளு இல்லைனா வெளியே இருக்கிற செக்யூரிட்டகிட்டயாவது சொல்லிட்டுப் போயிருக்கலாம்.  எதுவும் சொல்லாம நீ இப்டிக் கிளம்பிப் போனா, வீட்ல இல்லாத உன்னைப் பத்தி எதுவும் தெரியாத நான் என்னனு எடுத்துக்கறது?”, என்கிற விஷ்வாவின் வினாவில் விக்கித்து அமர்ந்திருந்தாள் திலா.

“என்னைப் பிடிக்காம விட்டுட்டுப் போயிட்டனு எடுத்துக்கறதா? இல்லை என்னனு எடுத்துக்க நீயே சொல்லு”, என்றவன்

அத்தோடு தொடர்ந்திருந்தான், “முட்டி மோதிக்கிட்டு ஆளுக்கொரு பக்கமா இதுநாள்வரை இருந்துட்டு, முந்தின நாளு நடந்த நம்ம விசயத்துக்குப் பின்ன நீ வீட்ல இல்லைனா, என்னோட நிலைமையில இருந்த யாரா இருந்தாலும் இப்டிதான் யோசிச்சிருப்பாங்க”, என்று ஆணித்தரமாகப் பேசி பெண்ணை அயர வைத்தான் விஷ்வா.

பிறகு பெண்ணை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்து விட்டுச் சென்றதையும், அதுசார்ந்த தனது மனநிலையையும் விளக்கினான் விஷ்வா.

“எத்தனை உயர்வான உறவா உனக்கு அவங்க இருந்தாலும், இனி எனக்குப் பின்னாடிதான் மத்தவங்கனு நீ நினைக்கலை!  ஆனா அப்டி என்னால உன்னோட செயலைப் பாத்துட்டு சும்மா இருக்க முடியலை!  அதனால வேற ஆளை அரேன்ஞ்ச் பண்ணிட்டு கையோட உன்னைக் கூட்டிட்டு வந்திட்டேன்!”, என்று கூறியவனின் பேச்சில் இருந்து கண்டு கொண்ட விசயம் பெண்ணிற்கு ஏனோ அத்தனை ஏற்புடையதாக இல்லை.

‘சொல்லாமப் போனது வேணா தப்பா இருக்கலாம்.  ஆனா என்னை அங்கே இருக்க விடாம கூட்டிட்டி வந்தது எப்டி சரியாகும்’, என்கிற மனநிலை பெண்ணிற்குள் இருந்தது.

மாலையில் வீடு திரும்பியபோதும் திலா வீட்டில் இல்லை என்றதும், தனது வருத்தம் பலமடங்கு உயர்ந்ததையும், முந்தைய நாள் பெண்ணுடன் இணக்கமாக நடந்ததாக தான் எண்ணியிருந்த தனது செயலுக்காகவும், தன்னைத்தானே நொந்து கொண்டதையும் விஷ்வா கூறினான்.

விஷ்வாவின் பேச்சைக் கேட்டவளுக்கு முதலில் இதென்ன இப்டியெல்லாமா யோசிப்பாங்க என்று தோன்றியதென்னவோ உண்மை.

“ஈவினிங் வந்தவுடனே நான் பேசுனனே!  அப்போகூட ஏன் அவாய்ட் பண்ணிட்டு வெளியே கிளம்பிப் போனீங்க?”, என்று பெண் சரியாக பாயிண்டைப் பிடித்துக் கேட்க

“கல்யாணம் ஆனதிலேருந்து வந்து பாக்காத மனுசங்களை முக்கியம்னு நினைச்சு எந்த தகவலுமில்லாம கிளம்பி போயிருக்க! அவங்களை விட நான் முக்கியமில்லைனு எங்கிட்டயே சொல்லிட்டா…! இந்த முகத்தை நான் எங்க கொண்டு போயி வச்சிக்க! அதைத் தாங்கிக்கறதை விட, ஏத்துக்கற சக்தி எனக்கில்லை.  அதனாலதான் அதைப் பத்திப் பேசவே யோசிச்சேன்”, என்று தனது மனதை பகிர்ந்திருந்தான் விஷ்வா.

அதன்பிறகு, மனைவியிடம் தனது சில எதிர்பார்ப்புகளைப் பற்றியும் மனந் திறந்திருந்தான்.

என்னதான் நன்றியுணர்வு இருந்தாலும், விஷ்வாவின் மனைவி என்கிற நிலையில், தனது எல்லாமுமாக இருப்பவளை, இனி இருக்கப் போகின்றவளை, தனது ஊழியரின் தாயிற்கு சேவகம் செய்ய அனுப்பி வைக்கும் அளவிற்கு பரந்த மனது தன்னிடம் இல்லை என்பதையும் மறையாது கூறியிருந்தான் விஷ்வா.

அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டவளுக்கு, மனம் முரண்டாலும் அந்நேரத்தில் எதுவும் பதில் பேசாது, பேசி முடித்தவனிடமிருந்து விலகி தனது அன்றையப் பணியில் கவனம் செலுத்த அறையைவிட்டு வெளியே வந்திருந்தாள்.

மனதில் உள்ளதையெல்லாம் மனைவியிடம் இறக்கிவிட்டு இலகுவாகியிருந்தான் விஷ்வா.

தனது மனபாரம் நீங்கப் பெற்றவனாக, விஷ்வா வழமைபோல கிளம்பி டைனிங்கில் வந்து அமர்ந்திருந்தான்.

உண்டு கிளம்பிய பிறகும், கணவனின் வார்த்தைகளை மனதில் ரீவைண்ட் செய்தபோது, தனது பக்கத் தவறும் பெண்ணிற்கு லேசாகப் புரியத் துவங்கியது.

ஆனாலும் சிலவற்றை ஏற்க இயலாமல் மனம் முரண்டியது.

வீட்டில் யாருமில்லாதபோது, தானாக யாரிடமும் கூறாது, அதுவும் நீண்டநாள் இருவருக்கிடையே நிலவிய பிரச்சனைக்குப்பின் நிகழ்ந்த, முந்தைய தின கூடலுக்குப்பின் யாரிடமும் கூறாமல் கிளம்பிச் சென்ற, தனது முட்டாள்தனத்தை எண்ணி வருந்தினாள் திலா.

நாணம் தடுத்தபோதும், விஷ்வாவிடம் கூறாமல் சென்றது தவறு என்பது புரிந்திட, இனி அதுபோன்ற தவறுகளை தான் செய்யக் கூடாது என்கிற முடிவுக்கு பெண் வந்திருந்தாள்.

முந்தைய நாளின் மனவருத்தங்களை எதுவும் மனதோடு வைத்துக் கொள்ளாதவன், மதிய உணவிற்கு வழமைபோல வந்து சென்றிருந்தான்.

திலா கணவனது காலைப் பேச்சினால், விஷ்வாவை இலகுவாக எதிர்கொள்ள இயலாமல் சற்றே தடுமாறினாள். 

விஷ்வா எந்தத் தடுமாற்றமும் இன்றி இயல்பாக இருந்தான். பெண்ணது தயக்கத்தையும், தடுமாற்றத்தையும், விலக்கத்தையும் கண்டும், காணாததுபோல, உண்டதும், கிளம்பிச் சென்றிருந்தான்.

மாலையில் வீடு திரும்பியவன், அவனாகவே பெண்ணை கிளம்பச் செய்து வெளியில் அழைத்துச் சென்றான்.

திலாவின் கூம்பிய முகத்தைக் கண்டே, பெண்ணை வெளியில் அழைத்துக் கொண்டு கிளம்பியிருந்தான் விஷ்வா.

கண்ணனின் தாயாரைக் காண மருத்துவமனைக்கு பெண் கேட்காமலேயே அழைத்துச் சென்றுவிட்டு, பிறகு சுந்தரம், மாலினி இருவரையும் காண அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

கண்ணனது தாயாரைக் கண்ட பிறகும் தெளிவடையாத மனைவியின் முகத்தைக் கண்டு, முடிவாக மாலினியைக் காண அழைத்து வந்திருந்தான் விஷ்வா.

///////////

பெண்ணது முகத்தில் இருந்த ஏதோ யோசனையைக் கண்டும் காணாது வழமைபோல வரவேற்றிருந்தார் மாலினி.

விஷ்வாவின் பளிச் சிரிப்பும், கலகல பேச்சும் எப்போதும் இருப்பதைவிட கூடுதலாக மிளிருவதைக் கண்டவருக்கு, ஏதோ நேர்மறையாக புரிந்தபோதும், பெண்ணின் அமைதி ஏதோ ஒரு நெருடலை உண்டு செய்தது.

திலாவை தனியே அழைத்துச் சென்று சிறிது நேரம் பொது விசயங்கள் பேசிவிட்டு, “என்ன திலா? வந்ததில இருந்து ஒரே யோசனையா இருக்க?”, என்று கேட்டதும்

திலாவிற்கு எதையும் மறைக்கத் தோன்றவில்லை.  அனைத்தையும் கூறிவிட்டு அமைதியாகியிருந்தாள்.

அனைத்தையும் கேட்டறிந்தவர், “இதுக்கா இவ்வளவு மூடியா இருக்க.  ரிலேசன்ஷிப் ரெகவர் ஆகற ஸ்டேஜ்ல விட்டேத்தியா நீ கிளம்பிப் போனா யாருக்குமே டவுட் வரத்தானடா செய்யும்.  இதையே அவன் நிலையில இருந்து யோசி”, என்றவர்,

“இதுவே மாமனார், மாமியார்னு இருக்கிற குடும்பத்தில இருந்து நம்ம நினைச்ச நேரத்துக்கு நம்ம பேரண்டகூட போயி பாக்க முடியாது. நீ என்னடான்னா, மூணாவது மனுசங்களைப் பாக்கறதுனா, முறையா அவங்கிட்ட சொல்லியிருக்கணும்.

நீயானா எதுவும் யாருகிட்டயும் சொல்லாம, நீ பாட்டுக்கு கிளம்பிப் போயிருக்க!

எந்த வீட்லயும் நீ நடந்துட்ட விசயத்தை அக்சப்ட் பண்ண மாட்டாங்க!

கேட்டுட்டுப் போகணும்னாலும் அத்தனை ஈஸியா அலௌவ் பண்ண மாட்டாங்க!

விஷ்வா தனியொருத்தனா இருக்கறதால இந்தப் பிரச்சனை இவ்வளவு சுலபமா முடிஞ்சது.  பெரிய குடும்பத்துல இப்டி நீ கிளம்பிப்போயிருந்தா, ரொம்ப பெரிய இஷ்யூவா வந்திட்டுருந்திருக்கும்!”, என்று நிதர்சனத்தை நிதானமாகவே விளக்கினார் மாலினி.

தனது தாயிக்கு உதவியவர்களுக்கு தன்னால் உதவ முடியாததை எண்ணி வருந்துவதாகக் கூறியவளுக்கு, “நீ வருத்தப்படற அளவுக்கு எல்லாம் அவங்க வர்த்தா இருந்தாலும் பரவாயில்லை.  அப்டியும் அவங்க இல்லை திலா.  உன் மேரேஜ் விசயத்திலயே அவங்க நடந்திட்டதையெல்லாம் மறந்திட்டியா?”, என்று பழையதை நினைவுறுத்தியதோடு

“ஒரு வீட்டுக்கு வாழப் போன பொண்ணை, அவங்க வீட்டு பெரிய மனுசாளுங்ககிட்டயோ, இல்லை பொறுப்பு யாருக்கோ அவங்ககிட்ட கலந்துக்காம ஹெல்ப்கு கூப்டதே பெரிய தப்பு”, என்று கூறிவிட்டு 

“யாரு அந்த பெரிய மனுசன்தான போன் பண்ணி உங்கிட்ட கேட்டுருக்காரு?  இவங்க வயிஃப்பை யாராவது இந்த மாதிரி எதாவது இக்கட்டு நேரத்தில அவருகிட்ட பர்மிசன் எதுவும் கேக்காம கூப்பிட்டா, ‘சரி நீ போயிட்டு வானு’ சந்தோசமா விட்ருவாராக்கும்”, என்று பொரிந்து தள்ளியவர் 

“அவருக்குத்தான் தெரியலை.  அந்தம்மாவாவது அவங்ககிட்ட உன்னைக் கூப்பிட வேணாணு சொல்லியிருக்கலாம்.  என்னமோ போ”, என்று அலுத்துக் கொண்டார்.

அத்தோடு விஷ்வாவின் செயலைக் காட்டி, “அதுக்கும் தான் கேர்டேக்கரை விஷ்வா அரேன்ஞ் பண்ணிக் குடுத்திருக்கான்ல.  அதுக்குமேல நீயும் போயி அங்க இருந்து என்ன செய்யப் போற?”, என்று வினவ அமைதியாக இருந்தாள் திலா.

“இப்ப நீ சத்யநாதன் சரஸ்வதி அவங்க வீட்டு மருமக!  நீ போயி அங்க நின்னா விஷ்வாவைப் பத்தி மற்றவங்க என்ன நினைப்பாங்கனு கொஞ்சம் யோசிச்சுப் பாரு!

இன்னொரு விசயம் வெளி உறவுகளோட நீ பழகறது, பேசறது எல்லாம் அவனுக்கு புடிச்சா செய்யி!  புடிக்கலைனா விட்ரு!  அதுதான் உங்களுக்கிடையே இருக்கிற அன்னியோன்யத்தைக் கூட்டும்.

ஆரம்பத்திலேயே முரண்பட்டா அன்னியோன்யம் வராது.

ரெண்டு பேரும் டக்ஆஃப்வார் மாதிரி மாத்தி மாத்தி இழுத்து விளையாடனா செய்யலாம்.  ஆனா வாழ முடியாது.  அப்டி வாழறது நல்ல குடும்ப வாழ்க்கையில்லை. 

குடும்ப வாழ்க்கைக்கு இந்த மாதிரி நீயா, நானானு யோசிக்க ஆரம்பிச்சா ஒத்து வராதுடா!”, என்றதோடு

“குடும்பத்துல, யாரு சிறந்த அறிவாளியோ, ரொம்ப பொறுமைசாலியோ அவங்கதான் முதல்ல விட்டுக் கொடுத்து போவாங்களாம்!”, என்று பூடகமாகப் பேசிவிட்டு,

“இனி நீ எப்டி நடந்திக்கறேங்கறதையும் பாப்போம்”, என்று பெண்ணிடம் கூற, திலாவும் அமைதியாக கேட்டுக் கொண்டாள்.

“ஜென்ஸ்கு எப்போவும் வயிஃப்கிட்ட இருக்கிற பொசசிவ்தான் பெரும்பாலும் அவங்க நம்மை ரொம்ப ஃப்ரீயா வெளிய பழக விடாததுக்கும் காரணம்.  முதல்ல அவங்களோட அந்த அன்பை புரிஞ்சிக்க ட்ரை பண்ணா மத்ததெதுவும் நமக்குப் பெரிய குறையா தெரியாது”, என்றவர்

“மத்தவங்களைப் பத்தி நல்லா புரிஞ்சிட்டிருந்தா அவங்களோட மட்டும் நம்மை பழக விட்ருவாங்க.  இல்லைனா ஃப்ரீயாவிட யோசிப்பாங்க! 

இப்ப எங்க வீட்டையே எடுத்துக்கோயேன். இங்க வரதுக்கு எதுவும் சொல்ல மாட்டான்.  ஏன்னா அவனோட முக்கியத்துவத்தை நாங்க எங்கேயும் எப்போயும் ஸ்பாயில் பண்ண மாட்டோங்கற நம்பிக்கைதான்!”, என்று மனித மனங்கள் சார்ந்த பொது விசயங்களையும், இந்தியக் கணவர்களின் சில பொதுவான விசேச குணங்களைப் பற்றியும் கூறி அனுப்பினார் மாலினி.

மாலினியோடு சற்று நேரம் உரையாடியதில் திலா சற்றே பழைய நிலைக்கு மீண்டிருந்தாள்.

விஷ்வாவும், திலாவும் கிளம்ப எத்தனிக்க, “அடிக்கடி வந்து போங்க! சீக்கிரமே நல்ல செய்தி சொல்லுங்க!”, என்று வாழ்த்தியனுப்பினார் மாலினி.

/////

முழுவதும் பழையவாறு மாறாதபோதும், முன்பிருந்த நிலைக்கு சற்றே முன்னேற்றத்தை திலாவிடம் கண்டிருந்தான் விஷ்வா.

தொலைக்காட்சியில் பார்வையை நீடித்திருந்தவனைப் பார்த்து, “பாலு எடுத்திட்டு வந்தா குடிப்பீங்களா?”, என்று வினவியவளிடம்

முதலில் மறுத்தவன், ‘அடிக்கடி இந்த பாலு விசயம் கிராஸ் ஆகுதே!  எதுவும் முக்கியமான விசயமா இருக்கப் போவுது!’ என்று யோசித்து பெண்ணிடமே விசயத்தைக் கேட்க

“உங்க தத்து மாமியார்தான் உங்களுக்கு டெய்லி குடுக்கச் சொன்னாங்க!  நீங்க என்னடான்னா பாலுன்னாலே காததூரம் ஓடறீங்க!”, என்று சலித்துக் கொண்டாள் திலா.

“அது யாரு தத்து மாமியாரு?”, உண்மையில் புரியாமல் டிவியைப் பார்த்துக் கொண்டே கேட்டான் விஷ்வா.

“ம்..  வேற யாரு! எல்லாம் நம்ம மாலினியம்மா தான்!”, திலா

“ஓஹ்…”, என்றவன், “நான் குடிக்கலைன்னா என்ன?  நீயே அதைக் குடி!”, என்று கூறினான் விஷ்வா.

“நான் குடிச்சிட்டுத்தான் உங்களுக்கு எடுத்திட்டு வரக் கேட்டேன்”, என்ற பெண், “சரி போங்க!  இனி உங்களுக்கு கொண்டு வரலை!”, என்று அங்கிருந்து கிளம்பியவளின் வார்த்தையில் இருந்த தொனியைக் கண்டு பெண்ணையே யோசனையோடு பார்த்தான்.

திலாவை நோக்கியவாறு, “கொஞ்சம் நில்லு திலா”, என்று அழைத்தபடியே, எழுந்து பெண்ணின் அருகில் சென்றவன்

தன்னை வைத்தகண் வாங்காமல் பார்த்தபடியே, தன்னைச் சுற்றி வந்து நின்றவனைப் பார்த்த திலாவிற்கு,  விஷ்வாவின் பார்வையின் தீட்சண்யத்தை தாங்க இயலாது தவித்தாள்.

தனது தவிப்பை மறைக்க எண்ணியவள், “என்ன பார்வை இது! புதுசா இன்னிக்குதான் பாக்கறமாதிரி பாக்கறீங்க?”, என்று தனது நிலையை மறைத்தபடியே துடுக்காக கேட்க

“ஏன் பாக்கக் கூடாதா?”, என்றவன், “எம்பொண்டாட்டிய புதுசா பாக்கற மாதிரியேதான் எப்பவும் பாப்பேன்!”, வீம்பாகக் கூறிவிட்டு, “நீ பாத்தாலும், பாக்கலைனாலும், நான் இப்டி பாத்துக்கிட்டேதான் இருப்பேன்!”, என்று கூறியபடியே பெண்ணை நெருங்க

“என்ன விசயம்”, என்று நெருங்கி நின்றவாறு, தன்னோடு சந்தோச தர்க்கம் செய்பவனை நோக்கிக் கேட்டாள் திலா.

பெண்ணை நெருங்கி வந்தவன், திலாவின் தாடையைப் பிடித்து மிகக் குறைந்த குரலில், “இந்த பாலுக்கும், நைட்டு நடக்கற விசயத்துக்கும் எதாவது சம்பந்தமிருக்கா!”, என்று குறைந்த குரலில் கேட்டான்.

இதை எதிர்பாராதவள் திக்கென்று விழித்தபடியே நின்றிருந்தாள்.

‘இருக்குனு சொன்னா அது என்னானு கேப்பாரு, கேட்டா அதைச் சொல்லனும்! இல்லைனு சொன்னா என்ன செய்வாரு?’ என்ற யோசனையோடு நின்றவளை

என்ன செய்தான் விஷ்வா.

 

அடுத்த அத்தியாயத்தில்.

Leave a Reply

error: Content is protected !!