அலைகடல்-33.1

IMG-20201101-WA0016-f5d08223

அலைகடல்-33.1

பூங்குழலி நண்பர்கள் என்றதும் ஆரவ் ஆஹா ஓஹோ என்று மகிழ்ந்துவிடவில்லை. மாறாக ஒருவித ஆராய்ச்சியுடன் அவள் முகத்தை கூர்ந்து நோக்கினான். நிச்சியமாக முழுமனதுடன் இதைக் கூறியிருக்க வாய்ப்பில்லை என்று அவனிற்கே தெரிந்தது.

குறைந்தபட்சம் தன் தவறுகளின் பின்னிருக்கும் காரணமும் அவளை மிரட்டி திருமணம் செய்ததற்கான காதலும் தெரியாமல் அவள் சமாதானம் ஆக ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை என்று நம்புபவன் அவன். இப்போதும் உண்மை தெரிந்திருக்கும் என்று நம்பாததால் அவள் வேறு ஏதோ காரணத்திற்காக தன்னுடன் சுமூகமாகப் போக விழைகிறாள் என்றெண்ணிக்கொண்டான். எப்படியோ தான் சொல்வதை காதுகொடுத்து கேட்கும் அளவேனும் அவள் இருந்தால் போதும்.

உள்ளுக்குள் இத்தனை ஓடினாலும் வெளியே எதையும் காண்பிக்காமல் ஒரு புன்னகையுடன் ஆமோதித்தவன், அவளை வீட்டிற்கு கைபிடித்தே அழைத்து வர, வாசலில் அவர்களுக்காக குட்டி போட்ட பூனையாக நடை பயின்ற வேந்தனோ தான் காணும் காட்சியை நம்பமுடியாமல் திகைத்துப் போய் நின்றிருந்தான். பின் சுதாரித்து அவனும் மற்றொரு பக்கம் சென்று தமக்கையைத் தாங்க,

அதற்குள் தகவல் அறிந்து பாட்டியும் அங்கு வந்துவிட்டார். லாவகமாய் அவர் சுளுக்கை எடுத்து விடவும் உச்சந்தலை ஏறிய வலியை பல்லைக்கடித்து கடித்து பொறுத்துக்கொண்டாள். வலிக்கிறது என்று ஒரு அனத்தல் இல்லை முகச்சுணக்கம் இல்லை. ஆரவ்தான் மனம் கேட்காமல் சரியாகிவிடுமா… ஹாஸ்பிடல் செல்ல வேண்டுமா என்று ஒவ்வொன்றாக பாட்டியிடம் சந்தேகம் கேடுக்கொண்டிருந்தான். ஒருநாள் ஓய்வு கொடுத்தால் சரியாகிவிடும் என்றுவிட்டு அவர் செல்ல, அதன் பின் மூவருமே வீட்டில்தான் இருந்தனர்.

“சென்னைக்குச் சென்று விடுவோமா?” என்று ஆரவ் கேட்க, “இங்க எனக்கு பிடிச்சிருக்கு கால் வலி முன்ன மாதிரி இல்லை. இங்கேயே இருப்போம்” என்றுவிட்டாள் பூங்குழலி.

சாதாரணமாய் பேசும் இருவரையும் கண்டு அதற்கு மேல் பொறுமையாக இருக்கமுடியாமல், “எப்படி இந்த மிராக்கில் நடந்தது… ரெண்டு பெரும் சண்டை போடாம பேசிக்குறீங்க. எனக்கு மயக்கம் மயக்கமா வருதே!” என்று மயங்குவதுபோல் நடித்து ஆனந்தமாய் அங்கலாய்த்தான் வேந்தன்.

மதிய உணவுக்காக மேசையில் அமர்ந்திருந்தனர் மூவரும். முழுக்க முழுக்க அசைவ உணவுகள் சுட சுட மேசையில் இடம்பிடித்திருக்க, அதில் மீன் வறுவலை முதலில் எடுத்து பூங்குழலிக்கு வைத்தான் ஆரவ்.

“நானே வச்சிக்குறேன்…” என்றவளை கணக்கில் எடுக்காதவன்

“இந்த மீன் பேர் என்ன தெரியுமா?” என்றான் கேள்வியாய்

“அண்ணா எனக்கு தெரியும்” என்ற வேந்தனை வாய் மேல் சுட்டு விரல் வைத்து அமைதியாய் இருக்கும்படி சொன்னவன்

“நீ சொல்லு பூங்குழலி…” என்று அவளை கேட்க,

“மீன் பேரெல்லாம் எனக்கு எப்படி தெரியும்? நான் என்ன கடல்ல மீன் பிடிச்சா வித்துட்டு இருந்தேன்” என துடுக்காக கேட்டாள்.

மற்ற இருவருக்கும் அவள் சொன்ன தொனியில் சிரிப்பு அடக்கமாட்டாமல் வந்தது.

அதே சிரிப்புடன், “பூங்குழலி மீன்” என்றான் ஆரவ்.

“என்ன…” என்று புரியாமல் வினவியவளிடம்

“பூமா மீன் பேரே பூங்குழலி மீன்தான்” என்று வேந்தன் தெளிவுபடுத்த, நம்பாமல் இருவரையும் சந்தேகமாய் நோக்கினாள் பூங்குழலி… தன்னை வைத்து ஏதோ விளையாடுகிறார்களோ என்பதுபோல்.

“நம்பலை தானே… வருஷத்துக்கு ஒருமுறை தான் இந்த மீன் கிடைக்கும். சீசன் மாதிரி… சாப்பிட்டு பார் டேஸ்ட்டாவும் இருக்கும்” என

வேந்தன், “ஆமா ஆமா… அண்ணா சொல்லிதான் எனக்கே டேஸ்ட்டா இருக்கும்ன்னு தெரியும்” என்றான் நக்கலாய்.

ஏனென்றால் முன்பு ஒருமுறை இந்த மீனை சாப்பிடுகையில், “உங்க அக்கா மட்டும் என் கைல சிக்கட்டும் அவளையும் இதே மாதிரி பீஸ் பீஸா வெட்டி நல்லா வறுத்து எடுக்குறேன்” என்று அவள் கிடைக்காத கடுப்பில் வேந்தனிடம் கடித்துத் துப்பியிருந்தானே தவிர ருசியாக இருக்கிறது என்றெல்லாம் சொன்னதே இல்லை.

வேந்தனின் நக்கலை தூசு போல் தள்ளியவன், “அதானே பூங்குழலின்னா எனக்கு ரொம்ப இஷ்டம் சொல்லிருக்கேன்ல்ல” என்றான் கண்களை சிமிட்டி.

நடக்கட்டும் நடக்கட்டும் என்பதுபோல் தலையாட்டி வேந்தன் உண்ண, மீன் பற்றி அவர்கள் கூறியது உண்மைதான் போலும் என்றெண்ணிய பூங்குழலிக்கு கடைசியாக அவன் கூறியது மீனை அல்ல தன்னைதான் என்று புரியாதா?

அவனின் பேச்சில், சிரிப்பில் தனியானதொரு உற்சாகம் மிளிர, ஏதோ நினைவில் நண்பர்கள் என்று கூறிவிட்டவளுக்கு இப்போது ஏனோ அவன் உணர்வுகளோடு தான் விளையாடிக்கொண்டிருப்பது போல் தோன்றியது.

ருசியான மீன் முள்ளின்றியே பூங்குழலியின் தொண்டையில் முள்ளென சிக்க, முயன்று உள்ளே தள்ளினாள் அவள்.

அதன் பின் அவளால் இயல்பாக அவர்களுடன் ஒன்ற முடியவில்லை. நத்தை தன் ஓட்டுக்குள் சுருங்குவது போல் தனக்குள் சுருங்கி ஓய்வெடுப்பதாகப் பேர் செய்து தனியாகிக் கொண்டாள்.

அதெல்லாம் மறுநாள் தொலைக்காட்சியை இயக்கிய ஆரவ், இவள் மீது இருந்த குற்றசாட்டு நீங்கி உண்மையான குற்றவாளிகளை காவல்துறை கைது செய்ததாக வந்த செய்தியைக் காண்பிக்கும் வரைதான். அவளின் விலகலை தவிடுபொடியாக்கவே அமுதன் பிறப்பெடுத்து இருந்தான் போலும்!

“ஹாப்பியா?” என்ற கேள்வியுடன் முன்னால் வந்து நிற்க, அவளோ அவனை முறைத்து, “இவங்கதான் உண்மையான குற்றவாளியா?” என்றாள்.

வேந்தன் அருகில் இருப்பதால் பூங்குழலியை நெருங்கி அவனிற்கு கேட்காத குரலில், “அப்புறம்… பி எம் தூக்கி உள்ள போட சொல்ல சொல்றியா? ஆதாரம் வேணாமா?” என்றான் கிண்டலுடன்.

இவனிடம் இல்லாத ஆதாரமா? அதான் கொட்டை எழுத்தில் கொத்து கொத்தாக துருப்புச் சீட்டை கூடவே வைத்துக்கொண்டு சுத்துகிறானே. அதைச் சொன்னால் அடுத்த கேள்வியே உனக்கு எப்படி தெரியும் என்று வருமென்பதால், “அப்போ கம்பெனிகாரங்களை அரஸ்ட் பண்ணலாமே… எதுக்கு சம்பந்தம் இல்லாதவங்களை உள்ள இழுத்து விடுறீங்க?” அவன் நெருக்கம் உணராமல் மேலும் நிற்க வைத்து கேள்வி கேட்கவும் சலித்து போனான் ஆரவ்.

“முடியலடி உன்னோட… கேஸ் முடிஞ்ச பிறகு சந்தோஷப்படுவ என்று பார்த்தால் இப்படி நிற்க வச்சு கேள்வி கேட்டுட்டு இருக்க” என

அவன் டி போட்டதை கூட கண்டுக்கொள்ளாமல், “நேர்மையான வழில நான் வெளிய வரலையே அப்புறம் எப்படி சந்தோஷப்பட?” என்றவளிடம்

“உன் நேர்மை குப்பைக்குப் போக… அப்படிலாம் கைது செய்தா அடுத்த நாளே வெளிய வந்துருவாங்க. என் எதிரி யாருன்னு உலகத்துக்கே தெரிஞ்சா அவங்களுக்கு ஏதாவது என்றால் என்னைதான சந்தேகமா பார்க்கும்… இதே இப்போ ஏதாவது அவங்களுக்கு ஆனா” என்றுவிட்டு மௌனமாய் குலுங்கிச் சிரிக்க,

“சோ நீ திருப்பி அடிக்கப் போற… இவ்ளோ பட்டும் திருந்தவே மாட்டியா அமுதன்? அவங்களை நீ அடி. திருப்பி அவங்க உன்னை அடிக்கட்டும். அடிச்சிகிட்டு எப்படியோ நாசமா போங்க” என்று கத்திவிட்டு செல்ல, பின்னால் அவனின் குரல் கேட்டது.

பதிலுக்கு, “இந்த ஆரவ் அடிச்சா அவன் திரும்ப அடிக்குற அளவுக்குலாம் அடிக்க மாட்டான் பூங்குழலி” என்று சிரிப்புடன் கத்தினான் இவன்.

இந்த வஞ்சம்… பழிவாங்கல் எல்லாம் அவளிடம் இருந்து என்றோ விலகியிருக்க, அவன் அதைச் செய்து வம்பை விலைகொடுத்து வாங்குவது பூங்குழலிக்கு பிடிக்கவே இல்லை. கோபம் கோபமாக வந்து தொலைத்தது.

இவர்களின் கத்தலில் என்னவென்று வந்த வேந்தனிடம், “சும்மாடா உங்கக்காவுக்கு கத்த காரணமா வேணும்… சும்மா கூட கத்துவா” என்றான் உட்சபட்ச உல்லாசத்தில்.

மாலை சூரியன் மறைய சில மணி நேரங்கள் இருக்கையில், பூங்குழலி மற்றும் பூவேந்தனை அழைத்துக்கொண்டு வீட்டிலிருந்து பத்து நிமிட கார் பயணத்தில் அவன் கட்டியிருக்கும் மலர்கள் சூழ்ந்த சோலைக்கு அழைத்து வந்திருந்தான் ஆரவ்.

கோபத்தில் வரமாட்டேன் என்றவளை மதிக்கதான் ஆளில்லை. அங்குதான் தன்னைக் குறித்த அனைத்தையும் கூறிவிட முடிவு செய்திருந்தான் ஆரவ். அப்படியிருக்க அவள் கோபத்தையெல்லாம் கணக்கில் கொள்வானா என்ன?

வேந்தனிடமும் வீட்டிலேயே கூறியிருக்க, அவன் வாழ்த்து சொல்லி அவர்களை மட்டும் சென்று வரச் சொன்னான். ஆனால் அப்படி விட ஆரவ்விற்கு மனம் வர வேண்டுமே. தனியே இருக்க வேண்டாம் என்று அவனையும் இழுத்து வந்துவிட்டான்.

அது என்ன இடம் என்று ஏற்கனவே அறிந்திருந்த பூவேந்தன் அமைதியாக வர, பூங்குழலியோ கோபம் மறந்து, சுற்றுப்புற அழகில் மெய்மறந்து, ரசித்தபடி நடந்து வந்தாள்.

நடக்கும் பாதை தோட்டத்தின் நடுவே அலங்கார கற்கள் கொண்டு கட்டப்பட்டிருக்க, பாதையின் இருபுறத்தையும் ஒட்டி வரிசையாக இளஞ்சிவப்பு அரளி மலர்கள் தலைக்கு மேல் வளர்ந்து கொத்து கொத்தாக பூத்துக்குலுங்கியது.

மீதம் இருந்த இடத்தில் நடுவில் வெள்ளை ரோஜா மலர்ந்து விகசிக்க, அதை சுற்றி வட்டமாக மஞ்சள் ரோஜாவை ஓரடி இடைவெளியில் வைத்திருந்தனர். பார்க்க பார்க்க தேவிட்டவில்லை. இடப்பக்கம் ரெண்டு வலப்பக்கம் ரெண்டு என்று நான்கு ரோஜா வட்டங்கள்.

அது போக ஆங்காங்கே வித வித செம்பருத்தி பூக்களும் தலை நீட்டி வரவேற்க, பாதை முடியும் இடத்தில் சின்னதா ஓட்டினால் கட்டப்பட்ட கட்டிடத்தைக் கண்டாள் பூங்குழலி. அருகில் நெருங்கி பார்க்கையில்தான் தெரிந்தது அது ஒரு நினைவிடம் என்று.

சற்று திடுக்கிட்டு போய் வேந்தனைப் பார்க்க, “அண்ணாவோட அம்மா…” என்றான் முணுமுணுப்பாய்.

நெஞ்சில் சட்டென்று ஒரு பாரம் ஓட்டிக்கொண்டது அவளுக்கு. காலணிகளை வெளியே விட்டு உள்ளே நுழைய, அவர்களுக்கு முன் வந்து மண்டியிட்டு கால்களின் மேல் அமர்ந்து பத்மாவதி தேவி என்றிருந்த எழுத்துகளை கலங்கிய கண்களோடு பார்த்துக்கொண்டிருந்தான் ஆரவ்.

ஆரவ்வை திமிராக, கோபமாக, மகிழ்ச்சியாக, குறும்பாக என்று பல்வேறு வகையில் பார்த்திருந்தாலும் இப்படி உடைந்து போய் பார்த்ததே இல்லை. அதைவிட அப்படி இருப்பதை பார்க்கவும் முடியவில்லை.

ஆனால் அவளால் இதில் என்ன செய்யமுடியும்? உண்மையில் அவள் நினைத்தால் அதை மாற்றலாம்தான். ஒரு ஆறுதலான தொடுகை போதும் அவனை மீட்டெடுக்க, அதை உணராமல் அமைதியாக சுற்றியும் பார்த்தவளின் கண்ணில் நினைவிடத்தின் மேல் இருக்கும் விளக்கு தென்பட, ஜன்னலில் வைத்திருந்த எண்ணெய்யும் திரியும் எடுத்து வந்து விளக்கை சுத்தம் செய்து ஏற்றினாள்.

பின் வெளியே சென்று வெள்ளை மற்றும் மஞ்சள் ரோஜாக்களை பறித்து வந்து அதன் மேல் வைக்க, அனைத்தையும் சலனமற்ற முகத்தோடு அசையாமல் பார்த்ததிருந்தான் ஆரவ்.

பழைய நினைவுகளில் மூழ்கியிருந்தான் போலும்… அரைமணி நேரம் சென்று எழுந்தவன் வெளியே அமர்வதற்காக அமைத்திருந்த இரும்பு இருக்கையில் அமர, பின்தொடர்ந்து வந்த பூங்குழலியும் அவனருகே அமர்ந்தாள். அவனிற்கு ஆறுதல் கூற வேண்டும் போலவும் இருந்தது வேண்டாம் என்றும் இருந்தது.

வேந்தன் அவர்கள் பேசட்டும் என்று விலகி பூக்களைப் படமெடுக்கச் சென்று விட,

அமைதியை கலைத்த ஆரவ், “இவங்கதான் என் அம்மா” என்றவன் அடுத்து என்ன சொல்வது எங்கிருந்து சொல்வது என்று தெரியாமல் தடுமாற,

அனைத்தும் அறிந்தவளோ, அவனை எண்ணி பரிதாபம் கொண்டாள். ஆனால் காட்டிக்கொள்ளவில்லை.

“எப்படி… என்னாச்சு அவங்களுக்கு?” என்று தயக்கத்துடன் வினவ, அதில் தன்னுணர்வு அடைந்தவன் அவள் கேட்டதிற்கு பதில் கூறினான்.

“ம்ம்ம்… மன அழுத்தம். நிறைய மனசுல வச்சு அழுத்தி அழுத்தியே அதை பாழாக்கிட்டாங்க. அவங்களை சந்தோஷமா வச்சிக்க எவ்ளவோ நான் முயற்சி செஞ்சேன். சந்தோஷமாதான் இருந்தாங்க பட் பொய்யா எனக்காக சிரிச்சு வாழ்ந்திருக்காங்கன்னு தூங்க போனவங்க அடுத்த நாள் எந்திக்காம போனதும்தான் தெரிஞ்சது… ஹ்ம்ம் என்ன வயசுன்னு நினைக்குற ஜஸ்ட் நாற்பத்தாறு வயசு… சாகுற வயசா அது” சொல்லிக்கொண்டே வந்தவன் உணர்ச்சிவசப்பட்டு தொண்டையடைக்கவும் நிறுத்தினான்.

யாரிடமும் தன் பாரத்தை இறக்கி வைக்க முற்பட்டதில்லை… வேந்தனுக்கே ஓரளவுதான் தெரியும். குழந்தையாக வந்தவன் வளர்ந்த பிறகும் குழந்தையாகவே தெரிய, அவனிடம் பகிரத் தோன்றவில்லை.

பூங்குழலியிடமும் தன்னைப் பற்றி விளக்கம் கொடுக்கவே நினைத்தான் ஆனால் மனதில் நிறைந்த காதல் அவளிடம் பாரத்தை இறக்கி வைத்து மடிசாய ஏங்கியது.

“அம்மா எங்கேயும் போயிருக்க மாட்டாங்க அமுதன்… உங்க கூடதான் இருப்பாங்க. உங்களை பார்த்துட்டேதான் இருப்பாங்க” என்றாள் அவசரமாய்.

அவன் தாயின் வார்த்தைகள்தான். பத்து வருடங்கள் சென்றும் இன்னமும் கலங்கிக் கொண்டிருப்பவனைக் கண்டதும் அவன் தாயின் வார்த்தைகள் நினைவு வர, சட்டென்று சொல்லிவிட்டாள். மனதின் உறுத்தல் எல்லாம் அந்நொடி மறைந்து பின்னே செல்ல ஆத்மார்த்தமாய் அவளிடமிருந்து வந்தது ஆறுதல் வார்த்தைகள்.

அதில் லேசாய் சிரித்தவன், “எங்கம்மாவும் அதைதான் சொன்னாங்க” என்றான் வானத்தை பார்த்துக்கொண்டு.

பூங்குழலி அத்தோடு நிறுத்தியிருக்கலாம் ஆனால் அந்த இடத்தின் அழகில் மயங்கி இருந்தவளோ, “அதுவும் இவ்ளோ அழகான இடத்துல இருக்கும்போது என்ன குறை? கண்டிப்பா உங்கம்மா நிம்மதியா சந்தோஷமாதான் இருப்பாங்க… இதே மாதிரி எனக்கும் கட்டி தரதா இருந்தா செத்தாலும் நான் அங்கே சந்தோஷமாதான் இருப்பேன்” என்றுவிட்டாள்.

அவளுக்கு அது எப்படியோ… ஆனால் கேட்டிருந்த ஆரவ்விற்கு?

முதலில் தந்தை உயிருடன் விலகி வதைக்க, அடுத்ததாக தாயும் உலகத்தை விட்டு சென்று வதைக்க, இப்போது மனைவி என்று வந்தவளுடன் மகிழ்ச்சியாக வாழ்வோமா மாட்டோமா என்றே தெரியாமல் அல்லாடும் நிலையில் அவளும் இறந்து போவதாகக் கூறி வார்த்தையால் வதைக்க, எவ்வளவுதான் தாங்குவான் அவன்?

இதேபோல் தாய் பேசிய சிறிது நாட்களில் அவர் இறந்தது இன்னமும் அவனிற்கு நன்றாக நினைவிருந்தது. அன்றே அவருக்கு தோன்றியிருக்குமோ என்று கூட பின்னாளில் நினைத்துப் பார்த்திருக்கிறான். இப்போது இவளா? மனம் தாறுமாறாய் தவித்து துடித்தது.

சுருக்கென்று அவன் நெஞ்சை ஆயுதமின்றியே அவளின் வார்த்தைகள் குத்தி கிழித்திருக்க, அதை ஜீரணிக்க முடியாமல் எழுந்து அவளது தோளைப் பற்றி உலுக்கியவன், “எந்த இடத்துல எதை பேசணும் எதை பேசக்கூடாதுன்னு அறிவு இல்ல உனக்கு… என்னை என்னன்னு நினைச்சிட்டு இருக்கீங்க எல்லாரும்… ஆளாளுக்கு விட்டுட்டு போறதுலயே குறியா இருக்கீங்க. நானும் மனுஷன்தானே… எனக்கும் மனசுன்னு ஒன்னு இருக்கும்தானே. அது அடிபட்டா வலிக்கும்தானே… அதை யாரும் நினைச்சே பார்க்க மாட்டீங்களா?” வார்த்தைகள் வலியில் தோய்த்து வந்தாலும், கண்கள் நன்றாக கலங்கி இருந்தாலும் குரல் மட்டும் கர்ஜனையாய் வெளிவந்தது.

Leave a Reply

error: Content is protected !!