UMUV8

UMUV8
8
பால்கனி கதவைத் திறந்து மழைச்சாரல் முகத்தில் பட்டுத் தெறிப்பதை ரசித்தபடி நின்றிருந்தாள் வர்ஷா.
“என்ன இன்னிக்கி ஆஃபீஸ் போலையா” அறைக்குள்ளே வந்த மது, “இன்னிக்கி கேம்பஸ் இன்டெர்வியூல, நான் உன்னோட பிறந்தநாளைக்கு வாங்கின அரக்கு குர்தாவை போட்டுக்கவா?”
“என்னோட புது ப்ளூ சல்வார் எடுத்துக்கோயேன், இன்னும் டிரெண்டியா நல்லா இருக்கும்ல”
“மேடம் நல்ல மூட்ல இருக்கீங்களோ? லாஸ்ட் டைம் அதை கேட்டப்போ காஸ்டலி டிரஸ், காலேஜுக்கெல்லாம் போட்டுக்க வேணாம்னு சொன்ன?” வர்ஷாவின் அலமாரியைத் திறந்தபடி கேட்டாள்.
“இது முக்கியமான விஷயம்ல, எடுத்துக்கோ” என்றவள் தங்கையின் புறம் திரும்பிப் பார்க்க, அவளோ சல்வாரை தன்மீது வைத்துக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்தாள்.
புன்னகையுடன் அவளை நெருங்கிய வர்ஷா, டிராயரிலிருந்து ஒரு கவரை மதுவிடம் கொடுக்க, என்னவென்று கேட்டபடி அதைத் திறந்தவளின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது.
“ஹே புது மொபைல்! எனக்கா? வாவ்! என்னடி சர்ப்ரைஸ் மேல சர்ப்ரைஸ்!”
“ஆல் தி பெஸ்ட்.! அட்வான்ஸ்ட் கிஃப்ட்” என்ற வர்ஷா மென்மையாகத் தங்கையை அணைத்துவிட்டு விலகினாள்.
“தேங்க்ஸ் டா” என்ற மது, “இரு நான் போயி தாத்தா பாட்டிகிட்ட காட்டிட்டு வரேன்” கையில் புது மொபைலையும், வர்ஷாவின் சல்வாரையும் எடுத்துக்கொண்டு வெளியே ஓடினாள் மது.
‘இப்போ என்ன போட்டுக்கறது’ அலமாரியைத் துழாவியவள், வழக்கம்போல காட்டன் குர்தாவையும் ஜீன்ஸையும் எடுத்துக்கொண்டாள்.
‘இன்னிக்கி அவனை பாக்க போறோமே சல்வார் போட்டுக்கலாமா?’ ஒரு நொடி தயங்கியவள், ‘நோ நோ எப்போதும் போல இரு, தேவையில்லாம அவன் கவனத்தை ஈர்க்கிற மாதிரி எதுவும் செய்யக் கூடாது’
‘டிரஸ்ல என்ன இருக்கு’
‘ஒன்னும் தேவையில்லை குர்த்தாவே போதும்’ நெற்றியை அலமாரி கதவில் முட்டியபடி யோசித்திருந்த வர்ஷாவை, வினோதமாகப் பார்த்திருந்தார் அறைக்குள் நுழைந்த பாட்டி.
“என்னடி பண்ணிக்கிட்டு இருக்க?” என்றவர், “மழை பெய்யுது துணியை கொடிலேந்து எடுத்துவைனு சொல்லித்தானே அனுப்பினேன்?” அவளை முறைதவர்,
“இப்படி இருந்தா கல்யாணம் செஞ்சுகிட்டு போற இடத்துல எங்களைத்தான் சொல்லுவாங்க பாரு பொண்ணை எப்படி வளத்துருக்காங்கன்னு. கொஞ்சமும் பொறுப்பே இல்ல., எல்லாம் தாத்தாவ கொண்டிருக்கு” முணுமுணுத்தபடி கொடியிலிருந்த துணிகளை எடுத்தவர், எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் இருந்த வர்ஷாவிடம்,
“போயி குளிடி” என்று குரலுயர்த்த, அதில் யோசனை கலைந்தவள் மலங்க மலங்க விழிக்க,
“முழிக்காத, போயி குளி” என்றபடி வெளியேறியவர், “கண்ட நேரத்துல மழை பெஞ்சு படுத்தது” தாத்தாவின் முன்னே மேஜையில் துணிகளைப் போட்டார்.
“இதெல்லாம் ஃபேன் காத்துல உலர்த்திடுங்க. அப்புறம் பெரியவளோட போயி மார்க்கெட்ல இறங்கிக்கோங்க, மழைல நடந்து வழுக்கி விழுந்து வாராதிங்க, வரும் போது ஆட்டோல வாங்க, நான் போயி இஸ்திரி கொடுத்த துணிய வாங்கிகிட்டு வரேன்” என்று சென்றுவிட, தாத்தாவோ தோளைக்குலுக்கிவிட்டு நாளிதழின் பின்னே மீண்டும் ஒளிந்துகொண்டார்.
வர்ஷா கிளம்பி வெளியே வர, “தாத்தா” அவரைச் சீண்டி அழைத்தவள், “துணிய உலர்த்தவே இல்லையா? பாட்டி கத்த போறா”
அலட்சியமாக நாக்கை துருத்தி, “அவ கெடக்கா கிழவி, நீ கிளம்பு நாம இன்னிக்கி வெளில சாப்பிடுவோம், புதுசா ஒரு இட்லி கடை தொறந்துருக்கான்” என்றபடி எழுந்தவர், “உன் பாட்டிக்காரி வரதுக்குள்ள நாம கிளம்பிடுவோம், இல்லைனா அந்த கஞ்சியை குடின்னு வதைப்பா” என்றவர் குடையை எடுத்துக்கொண்டவர், “மது குட்டி கதவை லாக் பண்ணிக்கோ நானும் உன் அக்காவும் களம்பறோம்” என்றபடி வர்ஷாவுடன் புறப்பட்டார்.
லிஃப்ட்டில் அவர் வர்ஷாவிடம், “உன் வண்டி ரிப்பேர்க்கு கொடுத்ததை உன் பாட்டி கிட்ட சொல்லலையா?” என்று கேட்க,
உதட்டைப்பிதுக்கி மறுப்பாகத் தலையசைத்தவள், “அப்புறம் அம்மா அப்பா கிட்ட போட்டு குடுத்துடுவாங்க , அதான் எப்படியும் இன்னிக்கி ஈவினிங் கொடுத்துடுவாங்க. சரி நாம இப்போ எப்படி போலாம்?” என்று கேட்க, தாத்தாவோ ஆர்வமானார்.
“மழைல ஜாலியா நடந்து போகலாம், பின்னாடி கேட்ல பாட்டி இருக்காளானு பாத்துக்கோ இல்ல அதுக்கும் அர்ச்சனை பண்ணுவா” என்றவர், பதுங்கிப் பதுங்கியே வர்ஷாவுடன் அவர்கள் குடியிருப்பு பகுதியைக் கடந்தார்.
தாத்தாவுடன் சாப்பிட்டுவிட்டு அவரை ஆட்டோவில் ஏற்றியவள், “நீ வீட்டுக்கு போயிட்டு மெசேஜ் பண்ணு, நான் மளிகை கடைக்கு லிஸ்ட்டும் காசும் குடுத்துட்டு ஆஃபீஸ் கிளம்புறேன் ” என்றவள், ஆட்டோ காரரிடம், “அண்ணா கொஞ்சம் பார்த்து டிராப் பண்ணிடுங்க” என்றுவிட்டுக் கிளம்பினாள்.
மதியம் எதிர்பாராத மீட்டிங் ஒன்றினால் தாமதமாக, “கொஞ்சம் அவரச வேலை. ஒன்னு முப்பதுக்கு லஞ்சுக்கு வந்துடறேன். சாரி!” என்று விஷ்ணுவிற்கு வாட்ஸாப்ப் செய்தாள்.
ரிஷியுடன் உணவகத்திற்குள்ளே நுழைந்த விஷ்ணு வர்ஷாவின் மெசேஜை தாமதமாகவே பார்த்திருந்தான்.
‘ஆஹா இதை மறந்தே போயிட்டேன்! இவனை எப்படி சமாளிப்பேன்’ தன் முன்னே ஆர்டர் கொடுக்கச் சென்று கொண்டிருந்த ரிஷியை நோக்கி, “ஒரு நிமிஷம்” என்றபடி ஓடிய விஷ்ணு, “கொஞ்சம் வாயேன்” அவனை மேஜைக்கு அழைத்துச் சென்றான்.
ரிஷி “ஆர்டர் பண்ணிட்டு உட்காரலாம்டா. டைம் சேவ் ஆகும்ல?” அவனைக் கேள்வியாய் பார்க்க,
விஷ்ணுவோ “இல்ல உட்காரு ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்” என்று அசடு வழிந்தான்.
“ஏதாவது சீரியஸ்?”
‘சொன்ன அப்புறம் தான், நான் சீரியஸ் ஆயிடுவேன் போலயிருக்கு’
“வர்ஷா…” என்று துவங்க, நிமிர்ந்து அமர்ந்த ரிஷி பதற்றமாக “எங்கடா?” கேட்டான்.
“இல்ல, வர்ஷாவை லஞ்சுக்கு கூப்ட்ருக்கேன்”
“வாட்? டேய் ஏண்டா?” கண்கள் விரிந்த ரிஷி, நெற்றியைச் சுருக்கி தலையைப் பிடித்துக்கொண்டான்.
“இல்லடா பாவம் வண்டியை இடிச்சுட்டேன், மன்னிப்பு கேட்கலாமேன்னு…”
“அடேய்! சாரி கேட்க தனியா போவேண்டிது தானே, நான் கிளம்பறேன்” வேகமாக எழுந்தவனைக் கைப்பற்றி அமர வைத்தான் விஷ்ணு.
“ப்ளீஸ் உன்ன காரணம் காட்டித்தான் வரவே சம்மதிக்க வச்சேன், நீ கிளம்பினா எப்படி” என்று விழிக்க
“என்னடா சொல்ற? ஐயோ நான் யாருன்னு சொல்லிட்டியா? எப்போடா? முந்திரிகொட்டைடா நீ” அவன் கத்த துவங்கினான்.
“ஒரு நிமிஷம் என்னை பேசவிடேன்!” விஷ்ணு குறுக்கிட, ‘பேசு’ என்பதுபோல் தலையசைத்த ரிஷி அவனை முறைத்தபடி கையைக் கட்டிக்கொண்டான்.
“நீ இடிச்சதால சாரி கேட்க நினைக்கிறேன்னு சொன்னேன், நீ யாருன்னு சொல்லல, பேரை கூட சொல்லல டா. சாரி!”
“நான் எப்போடா இடிச்சேன்?” ரிஷி முறைத்ததில்,
“நான் அப்படி சொன்னேன்னு சொன்னேன்ல” விஷ்ணு அசடு வழிந்தபடி, “நீ அவளை பார்க்க ஆசை படுறியோன்னு தான் செஞ்சேன்”
“ஆசையா? நான் சொன்னேனா?” ரிஷி முறைக்க, கலவரமான விஷ்ணு ரிஷியின் கண்களைப் பார்க்காமல் வெளியே பார்த்தவன், “வர்ஷா….வந்துட்டா” விழிகள் விரித்து ரிஷியைப் பார்க்க, அவனோ மூச்சை இழுத்து சுவாசப் பையில் நிரப்பி, கண்களை மூடிப் பதட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்றுகொண்டிருந்தான்.
வேகமாக உணவகத்தின் வாயில்வரை வந்த வர்ஷா, கதவின் கைப்பிடியைப் பிடித்த படி நின்றுவிட்டாள்.
‘அவனை பார்த்ததும் ஒரு ஸ்மைல் பண்றோம்! தயங்காம எப்போவும் போல படபடன்னு பேசறோம்! ஆனா மறந்தும் கண்ணைப் பார்க்கவே கூடாது! உன்னால முடியும்!’ தீர்மானமாகத் தலையை ஆட்டிகொண்டவள், நீண்ட மூச்சொன்றை இழுத்து கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றாள்.
சற்று தொலைவில் கண்ணாடிச் சுவரை ஒட்டியிருந்த மேஜையில் அமர்ந்திருந்த விஷ்ணு, “ஹாய் இங்க” என்று கையசைக்க, மற்றவனோ அவளுக்கு முதுகு காட்டியபடி அமர்ந்திருந்தான்.
தயக்கத்துடன் வர்ஷா அவர்களை நெருங்க, ரிஷி முகத்தை இன்னும் கடுமையாக்கிக் கொண்டான். எந்த நொடியும் அவளைப் பார்க்கலாம் என்ற பதற்றம் அவனைத் தொற்றிக்கொள்ள, வாயால் மூச்சை வெளியேற்றியவன். ‘ரிலேக்ஸ், அவ ஃபிரென்ட் தானே. இட்ஸ் ஓகே’ என்று சமாதானம் சொல்லிக்கொண்டான்.
விஷ்ணுவைப் பார்த்தபடி வர்ஷா அவர்கள் மேசையை நெருங்க, “வெல்கம்! மழைல நினைஞ்சுடீங்க போல இருக்கே” என்றபடி தன் அருகேயிருந்த நாற்காலியை அவள் உட்கார வாகாய் கொஞ்சம் பின்னே இழுத்தான் விஷ்ணு.
“தேங்க்ஸ்! கிளம்பும்போது இல்ல, வர வழியில தான்” என்ற படி நாற்காலியில் அமர்ந்தவள், தயக்கத்துடன் ரிஷியை பார்க்க, அதே நொடி சடாரென்று திறந்த அவன் விழிகள் அவளை பார்த்ததும் ஆச்சரியத்தில் விரிந்து, அவன் பார்வை அவள் மீதே நிலைகொண்டது.
ஏதோ ஒன்று அவளை நோக்கித் தன்னை ஈர்ப்பதைபோல உணர்ந்தவன், அது என்னவென்று அவள் கண்களில் தேடிடத் துவங்கினான்.
அவன் பார்வையின் கூர்மை தாங்காதது போலச் சட்டென்று விஷ்ணுவின் புறம் திரும்பியவள்,
“சாரி ஒரு க்ளைண்ட் மீட்டிங் லேட் ஆயிடுச்சு” என்று சொல்ல,
விஷ்ணுவோ, “பரவால்ல நாங்க கூட இப்போதான் வந்தோம் இல்லடா” என்று ரிஷியைப் பார்க்க, அவனோ வர்ஷவாயே வெறித்திருந்தான்.
அவள் மனமோ ‘வந்துருக்கவே கூடாது, ஆர்டர் கொடுக்கறேன்னு நழுவிடலாமா? இல்ல சாக்கு எதாவது சொல்லிட்டு ஓடிடுவோமா? அப்படி பண்ணா நல்லா இருக்குமா?’
குனிந்தபடி இருந்த வர்ஷவை கண் இமைக்காது பார்த்திருந்த ரிஷியின் மூளையோ வேலை நிறுத்தம் செய்திருந்தது.
சிலநொடிகள் அமைதியாகக் கழிய, மின்சாரம் தாக்கியதுபோல் ஒரு மெல்லிய சிலிர்ப்பில் உடல் நடுங்கி சுய நினைவிற்கு வந்தவன்,
‘நீ தான் நீயா? எப்படி உணராம போனேன்!’ மானசீகமாகத் தலையில் அடித்துக்கொண்டான்.
‘ச்சே இவ்ளோ நாளா உன்ன ஒழுங்கா கவனிக்கக் கூட இல்ல பாறேன். ஹேய் வர்ஷா என்னை நிமிர்ந்து பாக்கமாட்டியா? நான் ரிஷி, உனக்கு என்னை தெரியலையா? நேத்துகூட ஃபோன்ல பேசினோமே?’ தன்னெதிரே இருந்தவளிடம் மனசுக்குள்ளே பேசிக்கொண்டிருந்தவன், புன்னகைத்துக்கொண்டான்,
‘இல்ல உனக்கு நான் யாருன்னே தெரியல, தெரிஞ்சிருந்தா இப்படியா அமைதியா இருப்ப?’ புருவம் சுருக்கியவன்,
‘உனக்கு இந்த ரெட் டாப்ஸ், நல்லா இருக்கு. இதென்ன கொசு முட்டை மாதிரி தம்மாத்தூண்டு பொட்டு. பரவால்ல இதுவும் உனக்கு நல்லாதான் இருக்கு.
போன தடவை பார்த்தப்ப போனிடெய்ல் இப்போ லூஸ் ஹேரா….ஹே என்னடா இது தலையெல்லாம் இவ்ளோ ஈரம்? ’ மனதுள் அவளுடன் உரையாடிக் கொண்டிருந்தவன் டிஷ்யு டப்பாவை அவள் முன்னே நகர்த்தினான்.
அதில் நிமிர்ந்தவள் அவனை ஒரு நொடி பார்க்க, புன்னகைத்தவன் “ஹாய்” என்று சொல்ல,
அவன் புன்னகையில் உறைந்துவிட்டவளோ, தலையை மட்டும் அசைக்க, “தலைல ஈரம்” என்றான்.
அவளோ சாவி கொடுத்த பொம்மைபோல் சில டிஷ்ஷியுக்களை உருவி தலையை ஒற்றி ஈரத்தை எடுக்கத் துவங்கினாள்.
விஷ்ணு ரிஷியை ‘என்னடா பண்றே’ என்று செய்கையில் கேட்க, ரிஷியோ அவனைப் பார்த்து, என்னவென்று புருவம் உயர்த்த, விஷ்ணு அவனை முடிந்த மட்டும் முறைதான்.
ரிஷியை நிமிர்ந்து பார்த்த வர்ஷா, “த்…த்…ஸ்…” என்று திணற, “வெல்கம்” என்ற ரிஷி, மௌனமாகிவிட மீண்டும் சிலநொடிகள் மௌனமாகவே கழிந்தது.
விஷ்ணு, “வர்ஷா என்ன சாப்படறீங்க?” என்று கேட்க, அவள் விழித்ததில், மென்மையாகப் புன்னகைத்த ரிஷி மெனு கார்டை அவள் முன்னே நகர்த்தினான்.
அதை எடுத்துக்கொண்டவள், மெனுவை படிக்கும் சாக்கில் குனிந்துகொண்டாள். ‘ஆண்டவா என்ன இப்படி காலெல்லாம் நடுங்குது, ஐயோ இவ்ளோ அழகா இருக்கானே. ஸ்மைல் பண்ணா பாத்துகிட்டே இருக்கணும் போல இருக்கு’ கண்கள் மெனுவில் இருந்தாலும், கவனம் அங்கில்லை.
“அதென்ன பரீட்சை கொஸ்டின் பேப்பரா இவ்ளோ நேரம் படிக்கிறீங்க?” விஷ்ணுவின் கிண்டலில் நிமிர்ந்தவள், அசடு வழிந்தபடி, “தயிர் சாதம்” என்றாள்.
“என்ன சாப்படறீங்கன்னு கேட்டதுக்கு தயிர் சாதம்ன்னு என்னை கிண்டல் பண்றீங்களா?” விஷ்ணு போலியாக முறைக்க,
“ஐயோ இல்ல…தயிர் சாதம் எடுத்துக்கறேன்னு சொன்னேன்” பாவமாகச் சொல்ல,
“கிண்டல் பண்ணாலும் விளக்கம் கொடுப்பீங்களா? நீங்க தான் தயிர் சாதம்” விஷ்ணு சிரிக்க, மேசையின் கீழே அவன் காலை எட்டி உதைத்தான் ரிஷி.
“அம்மா” என்றபடி விஷ்ணு காலை இழுத்துக்கொள்ள, “என்னாச்சு” வர்ஷா கேட்டதில்,
“ஒண்ணுமில்ல அம்மாவை கூப்பிட்டேன்” என்று சமாளித்தான் விஷ்ணு.
“அவங்களும் வந்துருக்காங்களா?” வர்ஷா பார்வையை உணவகத்தைச் சுற்றி ஓடவிட, அதற்குள் விஷ்ணுவை முறைத்திருந்தான் ரிஷி.
“அவங்க இங்க எங்க இருக்காங்க?” என்ற விஷ்ணு, “சரி மீல்ஸ் சொல்லவா மூணு பேருக்கும்” என்று வர்ஷாவை பார்க்க, “ம்ம்” என்று தலையசைத்தவள் மௌனமாக, விஷ்ணு ஆர்டர் செய்ய எழுந்து சென்றான்.
“வர்ஷா!” ரிஷியின் குரலில் உலகமே நின்றுவிட்டதைப் போல் உறைந்தவள், அவனைப் பார்த்தபடி சிலையாகிவிட, முகம் இறுகியவன், “விஷ்ணுகிட்ட அவன் அம்மா பத்தி கேட்காதே” என்றான் கடுமையாக.
“ஏ…”
“அவங்க இல்ல, என் அம்மாதான் அவன் அம்மா” என்றவன், வேறெதுவும் சொல்லாது எழுந்து விஷ்ணுவிடம் சென்றுவிட்டான்.
‘அப்படினா?’ யோசித்தவள், விஷ்ணுவைப் பார்க்க, அவனோ ரிஷியிடம் ஸெல்ஃப் சர்வீஸ் கவுண்டர் அருகே சிரித்தபடி எதையோ பேசிக்கொண்டிருந்தான்.
ஒருநொடி ரிஷியின் பார்வை தன்மேல் வீழ்ந்து நகர்ந்ததைப் போல் உணர்ந்தவள், வேறு புறம் திரும்பிக்கொண்டாள்.
‘அவன் குரலை எங்கயோ கேட்ட மாதிரியே இருக்கு, எங்கன்னு தான் புரியல’ நெற்றியைத் தட்டிக்கொண்டாள். ‘ரிஷி!’ வேகமாக நிமிர்ந்தவள், ‘ரிஷியே தான்! ஆனா அவர் இப்படி சிடுமூஞ்சியா இருக்க வாய்ப்பே இல்ல. எவ்ளோ பிரெண்ட்லீ அவர்’
அவள் முன்னே ட்ரேயை வைத்த ரிஷி, அவள் எதிரே அமர்ந்துகொண்டான். விஷ்ணு வர்ஷாவின் பக்கத்தில் அமர்ந்துகொண்டான்.
“முதல் தடவ மீட் பண்றோம்னு அண்ணா ஸ்வீட் ஆர்டர் பண்ணான்” என்றபடி அவள் முன்னே கேசரியை வைத்தான். மீண்டும் ரிஷி உதைக்க விஷ்ணு, ‘ஸ்ஸ்’ என்றபடி காலை இழுத்துக்கொண்டான்.
ரிஷியைப் பார்த்தவள், மெல்லிய புன்னகையுடன், “த்…தேங்…” என்று திணற, இப்பொழுதும் இறுகிய முகத்துடனே, “வெல்கம்” என்று குனிந்துகொண்டான்.
மௌனமாக மூவரும் சாப்பிட, குனிந்து கொண்டிருந்த வர்ஷா பார்த்திராமல் ரிஷியிடம் விஷ்ணு, ‘பேசுடா’ என்று ஜாடை செய்ய, அவனோ வேகமாக முடியாதென்றான் தலையசைப்பில்.
“அண்ணா என்னமோ சொல்லணுமாம்” என்ற விஷ்ணு, “நான் சுடுதண்ணி கொண்டு வரேன் பேசிட்டு இருங்க” என்றபடி வேகமாக நழுவி விட, ரிஷியின் மூன்றாவது உதையிலிருந்து நூலிழையில் தப்பினான்.
கேள்வியாய் வர்ஷா ரிஷியின் முகம் பார்க்க அவனோ தாடையை இறுக்கிக்கொண்டது அப்பட்டமாகவே தெரிந்தது,
‘ உஃப்! எப்படிடா இப்படி செதுக்கி வச்சமாதிரி இருக்கு உன் முகம்’ அவள் நினைக்கும் பொழுதே, வேகமாக, “சாரி” என்றவன் நெற்றியைப் பற்றிக்கொள்ள,
‘சாரியா…எதுக்கு? ஓஹ் வண்டியை இடிச்சதுக்கோ’ தாமாகப் புரிந்து கொண்டவள், பரவாயில்லை என்ற சொல்ல வாயெடுத்து, “ப…ப…” தடுமாற, கையை விலக்கி அவள் முகம் பார்த்தவனோ புருவம் சுருக்கியபடி அவளை உற்றுப் பார்க்க, பார்வையைத் தாழ்த்திக்கொண்டவள், மூச்சுவிடுவதை நிறுத்தியே விட்டாள்.
“இந்தாங்க உங்களுக்கு சுக்கு காஃபி ஆர்டர் பண்ணான், நான் அப்போ எடுத்துட்டு வர மறந்துட்டேன்” என்றபடி அமர்ந்தான் விஷ்ணு.
‘பார்த்தா மட்டும் முறைக்கிறான், மழைல நனைச்சுட்டேன்னு சுக்கு காபியும் சொல்றான், என்னதான்டா உன் பிரச்சனை’ ரிஷியைப் பார்க்காமல், விஷ்ணுவிடம் மட்டும் “தேங்க்ஸ்” என்றவள் அதை மெல்லச் சுவை பார்த்து, “கொஞ்சம் சக்கரை வேணும், போட்டுட்டு வரேன்” என்று அவ்விடத்தை விட்டு நழுவினாள்.
விஷ்ணு ஆர்வமாக ரிஷியிடம், “ஹே பேசினியா இல்லையா?” என்று கேட்க ,
“இல்லடா! என்னன்னு பேச சொல்ற?” என்று அவனை முறைதான்.
“தோடா! ராவெல்லாம் பேசிகிட்டு இருந்தீங்க இப்போ என்னவாம் கேடு? அதான் தேடி கண்டுபிடிச்சு உன் முன்னாடி நிறுத்தியிருக்கேன்ல? நீ என்னடான்னா இப்படி கேக்கற”
“நான் பேசக் கூப்பிட சொன்னேனா? யார் என்னனு கேட்டுட்டு சும்மா விட்டா என்னவாம்?”
“என்னடா என்னிக்கும் இல்லாத திருநாளா அண்ணனுக்குக் காதல் வந்துருச்சோன்னு நினைச்சு, என் பெயர் கெட்டாலும் பரவால்லைனு அவ வண்டியை இடுச்சு இப்படியொரு வாய்ப்பு கொடுத்தா என்னையே முறைக்கிற, அது போதாதுன்னு எட்டி எட்டி உதைக்கிற, வலிக்குது தெரியுமா?” உதட்டைப் பிதுக்கினான் விஷ்ணு.
“மொதல்ல ஒண்ணு தெரிஞ்சுக்கோ எனக்கு அவ மேல காதலெல்லாம் இல்ல, அவளை பார்க்க ஆசை ஒத்துக்கறேன், நீயா மீதியெல்லாம் கற்பனை பண்ணாத அவ்ளோ தான்”
“உன்னை பார்த்தா எனக்கு அப்படி தெரியல”
“நான் என்ன பண்ணிட்டேன் அப்படி” ரிஷி முறைக்க,
“அவ வந்தவுடனே என்னடா பண்ண? மைண்ட் வாய்ஸ்லதானே பேசிகிட்டு கெடந்த?” அவன் கேட்க, ஒருநொடி அதிர்ந்த ரிஷி மௌனமாகவே இருந்தான்.
“அதைக் கூட விடு பரவால்ல பதற்றம்னு எடுத்துக்கறேன். சளி பிடிக்கக் கூடாதுன்னு அவளுக்கு சுக்கு காப்பி சொல்லற, தயிர் சாதம் வேண்டாம் மழையா இருக்குன்னு ரசம் சாதம் வாங்குற, அதுவும் நெய் எக்ஸ்டரா! எவ்ளோ நாளா நான் உன்கூட வரேன், ஒரு வாட்டியாவது இப்படி எக்ஸ்டரா நெய் வாங்கி தந்தியா ?” விஷ்ணு குற்றம் சாட்ட,
“இப்போ இதெல்லாம் ஒரு விஷயம்னு எதுக்கு பேசிகிட்டு இருக்க? தெரிஞ்ச பொண்ணு பாவம்னு…”என்றவன் வர்ஷாவின் வருகையை உணர்ந்து மௌனமானான்.
விஷ்ணுவின் பக்கத்தில் அமர்ந்தவள், அவன் கேள்விகளுக்குச் சிரித்தபடி பதில் தந்துகொண்டே காப்பியைக் குடிக்க,
ரிஷி, “வண்டி, என்ன சொன்னாங்க?” வர்ஷாவை கேட்க, என்னையா என்பதுபோல் அவள் அவனைப் பார்க்க,
ரிஷி, “சர்வீஸ் சென்டர்ல என்ன சொன்னாங்க” முடிந்தவரைக் குரலை இயல்பாக்கிக் கொண்டான்.
“கீ ….பெயின்…போ…பட்…டிங்…டிங் …கிங்…” வார்த்தைகள் மீண்டும் வர மறுத்தன.
“ஓஹ் சரி” என்று ரிஷி தலையாட்ட,
விஷ்ணு, “வண்டியில என்னன்னு கேட்டா டிங் டிங் ன்னு மணியடிக்கிறீங்க?” வர்ஷாவை கிண்டல் செய்தவன், ரிஷியிடம், “என்ன புரிஞ்சுதுன்னு நீ தலையாட்டற?”
ரிஷியோ, “அதுல என்ன புரியல?”
“உன்னக்கு என்ன புரிஞ்சுது? சொல்லு பாப்போம் என்ன சொன்னான்னு?”
“கீறல் விழுந்ததால பெயிண்ட் போச்சாம், கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்க்கணுமாம். இதுகூட புரியாம” என்று சிரித்த ரிஷி, அதே சிரிப்புடன் வர்ஷாவிடம், “என்ன வர்ஷா சரிதானே நான் சொன்னது” என்று கேட்க,
முதல் முறை புன்னகையுடன் தன்னை அவன் அழைத்ததாலோ என்னவோ, பதற்றத்தில் சூடான காஃபியை குடித்தவள் நாக்கு பொரிந்துவிட, கண்கள் கலங்கக் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள்.
“ஹே பார்த்து” என்ற ரிஷி வேகமாகச் சென்று ஒரு கிண்ணத்தில் சர்க்கரை எடுத்து வந்து, “நாக்குல வச்சுக்கோ” என்று சொல்ல அவள் அவ்வாறே செய்து, குனிந்து கொள்ள, முகம் இறுகிய ரிஷிக்கோ கோவம் சுறுசுறுவென ஏறியது.
‘உனக்கென்னாச்சு வர்ஷா? என்கிட்டே பேசவே மாட்டியா? அவன் கிட்ட மட்டும் சிரிச்சு சிரிச்சு பேசற, நான் பேசினா முகத்தை இப்படி திருப்பிக்கறே? ஒரு வார்த்தை கூட என்கிட்டே சொல்ல மாட்டேங்கற, நானென்ன பேயா பூதமா இப்படி பேசவே தடுமாற. நீ இவ்ளோ வெறுக்குற அளவுக்கு நான் என்ன செஞ்சுட்டேன் ’ மனதுக்குள்ளே அவளை ஆயிரம் கேள்விகள் கேட்டவன் மௌனமாக, எழுந்து,
பொதுவாக, “நான் கார்க்கு போறேன். மழையா இருக்கு அவங்களையும் டிராப் பண்ணிடலாம்” என்று விட்டுத் திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட்டான்.
வர்ஷா விஷ்ணுவிடம், “நானே போயிக்கறேன்”
“இட்ஸ் ஓகே நானும் அங்க தான போகணும் வாங்க” அவளை அழைத்துக்கொண்டு காருக்குச் சென்றான்.
மௌனமாகவே அவர்கள் பயணம் கழிய, அலுவலக வாயிலில் காரை நிறுத்திய ரிஷி, வர்ஷா இறங்கிய பிறகு, விஷ்ணுவிடம்,
“ஈவினிங் நாமளே சர்வீஸ் சென்டருக்கு கூட்டிகிட்டு போறோம்னு அவ கிட்ட சொல்லிடு” என்று சொல்ல,
“நீயே சொன்னா என்ன? மொதல்ல உனக்கென்ன ஆச்சு? ஏன் இப்படி சிடுசிடுன்னு இருக்க?”
“அவளுக்கு என் கூடவே பேசவே பிடிக்கலடா, பார்த்தாலே தெரியுது. விடு வண்டியை அவ கிட்ட சேர்த்துட்டு அப்புறம் அவளைப் பார்க்காம இருந்தா போதும்” கடுகடுத்தவன் காரை கிளப்பிக்கொண்டு புறப்பட்டான்.
விஷ்ணு திரும்பும் முன்பே வர்ஷா சென்றிருந்தாள்.
தன் இருக்கைக்கு வந்தவள், பதற்றம் குறையாமல் போகவே, ரிஷியை அழைத்தாள்.
அவள் அழைப்பை ஏற்காமல், மொபைல் திரையை வெறித்திருந்தான் ரிஷி. சிலமுறை அவள் விடாமல் முயற்சிக்க, அழைப்பை ஏற்றவன் மௌனமாகவே இருக்க,
“ரிஷி” அவள் குரலில், நொடியில் இளகினான்.
“ம்ம் சொல்லு”
“அவனை பார்த்தேன் ரிஷி. அவனை இப்போ தான் பார்த்துட்டு வரேன். படபடன்னு இருக்கு” அவள் குரலில் அவள் உணர்வுகள் ரிஷிக்கு விளங்கவில்லை.
“யாரை ஆதேஷையா, என்னவாம் அவனுக்கு ?” என்று கடுகடுக்க,
“அய்ய அந்த லூசை இல்ல, அந்த பையன் சொன்னேனே ஒருத்தனைப் பார்த்தாலே ரொம்ப பிடிச்சுருக்குன்னு, அவன் கூடத்தான் லன்ச் சாப்பிட்டு வரேன்” அவள் சந்தோஷமாகச் சொல்ல, ரிஷியோ அவள் குறிப்பிடுவது விஷ்ணுவை என்று புரிந்துகொண்டு, உதட்டைக் கடித்து கோவத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்களை மூடி நாற்காலியில் சாய்ந்து மௌனமானான்.