ISSAI,IYARKAI & IRUVAR 9

ISSAI,IYARKAI & IRUVAR 9

இசை… இயற்கை மற்றும் இருவர்


அத்தியாயம் – 9


“என்ன வேணும்?” எனக் கேட்டவனிடம்…

“இதுதான் வேணும்னு சொன்னா, உடனே அதைச் செய்யப் போறீங்களா? இல்லை-ல? அப்புறம் ஏன் கேட்கிறீங்க?” என்று கேள்வி கேட்டு, அவனின் எரிச்சலை அதிகப்படுத்தினாள்.

“அப்படி என்ன செய்யலை?” என்று கேட்டான்.

“எதுவுமே!” என்றாள் உடனடியாக! பின், “எனக்காக அட்ஜஸ்ட் பண்ணலை… கொஞ்சம் கூட உங்களை மாத்திக்கலை” என்று அடுக்கினாள்.

“மாறணுமா? எதுக்கு…” என்று சிவா விளக்கம் கொடுக்கத் தொடங்கும் போதே,

“அண்ணா, என்ன அட்ஜஸ்ட் பண்ணலை?” என்று பாவையைக் கேள்வி கேட்டு… நளினி, அண்ணனிற்காகப் பரிந்து பேச வந்தாள்.

“நளினி! நீ ஏன் பேசுற?” என்று கண்டித்த செண்பகம், “அவங்க ரெண்டு பேரும் பேசிக்கட்டுமே??” என்றார்.

“ம்மா! மேரேஜ்-க்கு சாரீ எடுக்கிறதுலருந்து… ரெண்டு பேரும் சேர்ந்து வெளியே போகிறது… சாப்பிடுறது வரைக்கும்… அவளுக்காகத்தான் பார்த்து பார்த்து அண்ணா செய்றான். இதைக்கூட இவளால புரிஞ்சிக்க முடியாதா?? இதுக்குக் கூட டைம் வேணுமா?” என்று கேள்விகள் கேட்டாள்.

“ஏன் செண்பா, நளினி கேட்கிறது சரிதான?” என்று கேள்வி கேட்டு மதி, நளினிக்குப் பரிந்து பேசினார்.

“சரி, தப்பு-ன்னு… நான் எதுவும் சொல்லலை-ங்க! இப்போ இதைப் பத்தி இவ பேசணுமா-ன்னு கேட்கிறேன்? அவ்வளவுதான்!” என்றார்.

“அண்ணா, அவளுக்காக அட்ஜஸ்ட் பண்ணவே இல்லை-ன்னு, சொல்றா! அவளை எதுவும் கேட்க மாட்டிக்கிறீங்க?? என்னை மட்டும் கேட்கிறீங்க?” என்றாள் நளினி!

அப்பா-பெண் இருவருக்கும், தான் சொல்லவருவது புரியவில்லை என்று தெரிந்தது. ‘தான் பேசாமல் இருப்பதே நல்லது’ என நினைத்து, அமைதியயாகிவிட்டார், செண்பகம்!

அம்மாவின் வாதங்கள் சிவாவிற்குப் புரிந்தது. இங்கே வைத்துப் பேசுவது ‘சரியல்ல’ என்றும் தோன்றியது. உடனே, “வா, நாம உள்ளே போகலாம்” என்று பாவையிடம் சொன்னான்.

நளினியின் பேச்சுக்கள் பாவையைக் கோப மூட்டி இருந்தன! அன்று, ‘மகனைப் புரிந்து நடந்து கொள்’ என்று மாமனார் சொன்னார்.  இன்று இவள் சொல்கிறாள். தினமும், இவன் சொல்லிக் கொண்டே இருக்கின்றான்.

தனக்கென்று பேச யாருமில்லை என்ற எண்ணம் வந்தது! ஆதலால் கோபம்!!

அந்தக் கோபத்துடனே, “நான் வரலை” என்றாள் வெடுக்கென்று!

‘ஏன், இந்தப் பொண்ணு இப்படிச் செய்றா?’ என்று செண்பகமும் முகத்தைச் சுழித்தார்.

“கோபப்படுத்தாத பாவை! எதுனாலும் உள்ளே போய் பேசலாம்!!” என்றவன் குரல் உயர ஆரம்பித்தது.

“முடியாது” என்று ஸ்திரமாக நின்று, அவளும் குரலை உயர்த்தி சொன்னாள்!

“ஏன் சொல்றேன்னு புரியாம பேசிக்கிட்டே இருக்காத?” என்று சொன்னவன், “வா” என்று அவள் கைகளைப் பிடித்து இழுக்கையில்,

“ஏன்?” என்று கேட்டு, அவன் கைகளை உதறினாள்.

சிவாவிற்கு மட்டுமல்ல, அங்கிருந்த மற்ற மூவருக்குமே அவளின் செயலில் எரிச்சல் வந்தது.

“முதல்-ல பேசக்கூடாதுன்னு சொன்னீங்க! அப்புறம் அமைதியா பேசு! இப்போ, இங்கே நின்னு பேசாத-ன்னு சொல்றீங்க! ஏன் இப்படி? எனக்கு இந்த வீட்ல பேசறதுக்கு உரிமை இல்லையா?” என்றாள்.

இப்படி ஒரு கேள்வி, வளர்ந்த வீட்டில் மறுக்கப்பட்டவைகளை நினைத்துக் கேட்டாள்! ஆனால், இந்தக் கேள்வி இந்த வீட்டிற்கு… இந்த இடத்திற்கு… இவனுக்குப் பொருந்துமா? என்று சற்றும் யோசிக்காமல் கேட்டுவிட்டாள்!!

‘எதற்காகச் சொல்கிறோம்?’ என்றுகூட புரிந்து கொள்ளாமல், வீம்பாகப் பேசுகிறாளே என நினைத்தவன், “ஆமா! உனக்கு இந்த வீட்ல எந்த உரிமையும் இல்லை! அதேமாதிரி எனக்கும் உன்மேல அன்பு இல்லை! அக்கறை இல்லை! போதுமா?” என்று பொறுமை இழந்தான். தன் பொறுப்பையும் மறந்தான்.

இருவரிடம் ஓர் அமைதி! எப்பொழுதும் அவர்களது மௌனங்களில் பிரியங்கள் அதிகமாக இருக்கும். இன்று அதில் பிரிவின் சாயல்கள் தெரிய ஆரம்பித்தன!

இந்த நேரத்தில், தற்செயலாக செண்பகத்தின் பார்வை வாசலை நோக்கிச் சென்றது. அங்கே அதிர்ச்சியுடன் நின்று கொண்டிருந்தார், வேணிம்மா! அவரின் பக்கத்தில் கலை மற்றும் கௌசி!!

மூவருமே சிவாவின் கடைசி வாக்கியத்தைக் கேட்டிருந்தனர்.

‘அம்மா ஏன் இப்படி நிற்கிறார்?’ என்ற கேள்வி வந்து, சிவாவும் வாசலைப் பார்த்தான். ‘இந்த நேரத்தில் இவர்கள் ஏன் இங்கே?’ என்ற கேள்வியுடன் கூடிய அதிர்ச்சி, சிவாவிற்கு!

அக்கணத்தின் அதிர்ச்சியை மேலும் கூட்டும் வண்ணம், பிரவீன் மற்றும் அவனது பெற்றோர்கள் வந்தனர்.

அவர்களைக் கண்டதும், ‘வாங்க மாப்பிள்ளை… வாங்க சம்பந்தி’ என்று சொல்லி, செண்பகம் மற்றும் மதி வரவேற்றனர்.

பிரவீன் அம்மா-அப்பா சோஃபாவில் வந்து அமர்ந்தனர். மதியும் அவர்களுடன் வந்து அமர்ந்து கொண்டார்.

எல்லோரும் நிற்கும் நிலையைப் பார்த்த பிரவீன், “என்னாச்சு?” என்று கேட்டுக் கொண்டே, நளினியின் அருகில் வந்து நின்றான் பிரவீன்.

“கொஞ்ச நேரம் பேசாம இரு! உனக்கே புரியும்” என்று, கணவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் நளினி சொன்னாள்.

இதே கணத்தில்… நிலைமையை இப்படியே சகஜமாக்கிவிடுவோம் என்று நினைத்தார், செண்பகம். எனவே, “வாங்கம்மா… வா கலை… கௌசி வா வந்து உட்காருங்க” என்று சாதரணமாக, அவர்களையும் வரவேற்றார்.

ஆனால்… சிவாவின் வார்த்தைகளைக் கேட்டதால், செண்பகத்தின் வரவேற்பைக் கவனிக்கும் நிலையில் வேணிம்மா இல்லை.

கணவன் பேசிய வார்த்தைகளில் காயமடைந்த மனதுடன், பாவையும் வாசலை நோக்கினாள்.

வேணிம்மா-பாவை… இருவரின் கண்களும் சங்கடப்பட்டுப் போய் இருந்தன, சந்தித்துக் கொண்ட தருணத்தில்!

“வேணிம்மா” என்று வலியின் முனங்கலுடன் அவளது உதடுகள் முணுமுணுத்தன! சங்கடத்துடனே, “பாவை” என்று வேணிம்மா அழைத்தார்!!

“வேணிம்மா, எனக்கு இங்கே இருக்கவே பிடிக்கலை” என்று சொல்லி, வேணிம்மாவின் நம்பிக்கையைப் பொய்யாக்கினாள், பாவை!

பாவை சொல்லியதைக் கேட்ட ஒவ்வொருவரும், ஒவ்வொரு உணர்வை வெளிப்படுத்தினர்!

செண்பகம், அவள் சொல்லிய வார்த்தைகளை ஜீரணிக்க கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்.

மதியும் நளினியும், பாவையைக் கோபத்துடன் பார்த்தனர்.

பிரவீன் மற்றும் அவனது பெற்றோர், ‘ஏன் இப்படி?’ என்று அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சிவபாண்டியன்??

வாசலைப் பார்த்துக் கொண்டிருந்தவன், அப்படியே திரும்பி வாழ்க்கைத் துணையைப் பார்த்தான்.

அத்தனை பேர் முன்பும், இப்படிப் பேசுகின்ற அளவிற்கு ‘என்ன செய்துவிட்டேன்?’ என்று கோபம் கொண்டு கேள்வி கேட்டது, சிவாவின் மூளை!

மேலும், ‘உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு’ என்று சொன்னவளிடமிருந்து, ‘இன்று இதுபோன்ற வார்த்தைகளா?’ என்று வருத்தம் கொண்டு கேள்வி கேட்டது, பாண்டியனின் மனம்!!

இதே கணத்தில் வேணிம்மா…

‘யாருமே இவளை நன்றாகப் பார்த்துக் கொள்ளமாட்டார்களா?’ என்ற ஆதங்கம் வந்தது. அது, சிவாவின் மீது ஆத்திரமாக மாறியது.

‘அக்கறை இல்லை’, ‘பாவையின் அலைபேசி பேச்சு’, இதோ இன்று ‘உரிமையில்லை’ என்ற வார்த்தை… எல்லாம் சேர்ந்து, சிவாவின் மீது இருந்த ஆத்திரத்தை கடுங்கோபமாக மாற்றியது.

அந்தக் கோபத்தில், “என்னடா நீயும் இப்படிச் சொல்ற?” என்று வேகமாக வந்தவர், சிவாவின் சட்டையை பிடித்துக் கொண்டு… ‘ஏன்டா இப்படிப் பேசின?’ என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டு, அவனை உலுக்கிக் கொண்டிருந்தார்.

சுற்றி இருந்த அனைவரும், ‘ஏன் இப்படிச் செய்கிறார்?’ என்று ஒரு அரைநொடிக்கு அதிர்ந்து போய் நின்றிருந்தனர்.

அந்த அரைநொடியில்…

‘உன்னால்தான் இப்படி’, ‘இந்த நிலைமைக்கு நீதான் காரணம்’ போன்ற அர்த்தங்களுடன்… பாவையைப் பார்த்துக் கொண்டிருந்தான், பாண்டியன்.

“கோயிலுக்குப் போகலை, மனசு கஷ்டமா இருக்குன்னு… சொல்லும் போதே, நான் புரிஞ்சிருக்கணும் … அவ இங்கே சந்தோஷமா இல்லைன்னு…. நீ அவளை சந்தோஷமா பார்த்துக்கல” என்று வேணிம்மா புலம்பினார்.

‘இதையெல்லாம் சொல்லியிருக்கியா?’ என்பது போல், பாண்டியன் பார்வையின் அர்த்தங்கள் மாறின. ‘என்ன சொல்ல?’ என்று தெரியாமல், அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள், பாவை

அரைநொடியின் முடிவில்…

“கையெடுங்க” என்ற ஓர் அழுத்தமான குரல், செண்பகத்திடமிருந்து!

சிவாவின் சட்டையிலிருந்து கையை எடுக்காமலே, வேணிம்மா செண்பகத்தைப் பார்த்தார்.

“என் பையனும்தான் சந்தோஷமா இல்லை!” என்று அழுத்தமாகச் சொன்னவர், “முதல கையை எடுங்க!!” என்று கோபமாகச் சொன்னார்.

சிவாவின் சட்டையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கையை எடுத்தார், வேணிம்மா.

“வீட்டு மாப்பிள்ளை-ன்னு கொஞ்சமாவது மரியாதைக் கொடுங்க” என்று பேசிய செண்பகம், “என்னைக்கு நீங்க மரியாதைக் கொடுத்திருக்கீங்க… இன்னைக்கு கொடுக்க??” என்றும் கேட்டார்.

தன்னை எதிர்த்து யார் பேசியும் கேட்டிறாதவருக்கு, செண்பகத்தின் எதிர்ப்பு குரல் ஒருவித தடுமாற்றத்தைக் கொண்டு வந்தது.

அவ்வளவுதான்! செண்பகம் அமைதியாகிவிட்டார்!!

சுற்றி நிற்கும் சுற்றத்தின் முன், சுயமரியாதைச் சுட்டதைப் போல் உணர்ந்தான், சிவபாண்டியன்!

உடனே, அருகில் நின்ற மனைவியைப் பார்த்தான். சரியாக, அந்த நொடியில் அவளும் அவனைப் பார்த்தாள்.

“சாரி பாண்டியன்” என்று அவள் உதடுகள் அசைந்து, மன்னிப்பை வேண்டின!

“அப்படி இனிமே கூப்பிடாத” என்று அவனின் உதடுகளும் அசைந்து, மனக்கசப்பை உமிழ்ந்தன!

மேலும், எதிரில் நிற்கும் வேணிம்மாவைப் பார்த்து, “நீங்க போங்க” என்று வாசலைக் காட்டினான்.

அவனது குடும்பத்தினர் யாருக்கும்… நடந்த நிகழ்வுகளில் உடன்பாடு இல்லை என்பதால், அவன் அப்படிப் பேசுவதைக் கேட்டும்… ஏதும் சொல்லாமல் நின்றார்கள்.

வேணிம்மா நிறையவே உடைந்து போயிருந்தார். அவனின் அந்த வார்த்தையில் மேலும் உடைந்து, நிற்க முடியாமல் தடுமாறினார். கௌசியும் கலையும் பிடித்துக் கொண்டனர்.

“இது உங்களுக்குத் தேவையா?” என்று கௌசி கோபத்துடன் கேட்டாள்.

கலை, “உன்னால பாட்டிக்கு நல்ல மரியாதை!” என்று பாவையைப் பார்த்துச் சொன்னான்.

அதையெல்லாம் சிவா கவனிக்கவே இல்லை. பாவையைப் பார்த்தான். வேணிம்மாவை வெளியே போகச் சொன்னதில் கோபம் கொண்டு, “ஏன்…” என்று பாவை தொடங்கும் போதே,

“எப்படி ‘இங்கே இருக்கவே பிடிக்கலைன்னு’ உன்னால சொல்ல முடிஞ்சது?” என்று அழும் குரலில் கேட்டவன், “பிடிக்காம இங்கே இருக்க வேண்டாம்! நீயும் கிளம்பு!” என்று அழுத்தமான குரலில் சொல்லி, அவள் வாக்கியத்தையும்… அவனுடனான வாழ்க்கையையும் முடித்துவிட்டான்.

“என்ன சொல்றீங்க?” என்று கேட்டாள்.

“புரியலையா? என்னைக்குமே நான் சொல்றது, உனக்குப் புரியாது-ல??” என்றவன், “சரி!! புரியிற மாதிரியே சொல்றேன். வெளியே போ” என்றான்.

அதைக் கேட்டு, “என்னடா இப்படிச் சொல்ற?” என்று கோபம் கொண்டு, மீண்டும் அவனை நோக்கி வந்த வேணிம்மாவை, பிரவீன் தடுத்து நிறுத்தினான்.

மேலும், “என்ன பாட்டி நீங்க? அவனை என்னென்னு நினைச்சீங்க? பிரச்சனையை கூட்டிக்கிட்டே போறீங்க?” என்று, இதுவரை அவரின் செயல்களுக்கான அதிருப்தியைத் தெரிவித்தான்.

வேணிம்மா பின்வாங்கிக்கொண்டார்!

அடுத்ததாக… பிரவீன், தன் வீட்டுச் சாவியைத் தாயிடம் தந்து, “வீட்ல போய் இருங்க. நான் வர்றேன்” என்று சொன்னதும், அவனது அம்மா-அப்பா கிளம்பினார்கள்.

மகன் சங்கடப்படுவதைக் காண முடியாமல்… மதி, தன் அறைக்குள் சென்றார். அவருக்குத் துணையாக, நளினியும் சென்றாள்.

“சிவா…??” என்று செண்பகம் ஆரம்பிக்கும் போதே, “எனக்கு ஒரு மாதிரி இருக்கு-ம்மா. எதுவுமே பிடிக்கலை!!” என்று வெறுப்பின் குரலில் சொல்லி… சிவா, தன் அறைக்குள் செல்லப் பார்த்தான்.

வாசலில்தான் பாவை நின்று கொண்டிருந்தாள்.

“ப்ச்” என்று சலிப்புடன் சொல்லி… சிவா, தன் அப்பாவின் அறைக்குச் சென்றுவிட்டான்.          

அவ்வளவுதான்!

வேணிம்மாவும் செண்பகமும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். இருவர் முகத்திலும் அதீத பாசம் வைத்தவர்களின் வாழ்க்கை ‘இப்படி ஆயிற்றே?’ என்ற வருத்தம் இருந்தது.

பின்… வேணிம்மா, பாவையைப் பார்த்தார். அவளும் பார்த்தாள்.  

இனி இவள் வாழ்க்கை? என்ற கேள்வி வந்தது. ஆனால், தான் இப்போது இருக்கும் மனநிலையில், யாரிடமும் போய் எதுவும் பேச முடியாது என்றும் தோன்றியது.

எனவே, ‘கீழே வா’ என்று பாவையிடம் சைகை காட்டிவிட்டு… கௌசி மற்றும் கலையுடன், கிளம்பிவிட்டார்.

அதன் பின்… அங்கிருந்தது பாவை, பிரவீன் மற்றும் செண்பகம் மட்டும்தான்!

மூன்று பேருமே, ‘என்ன பேசவென்று?’ தெரியாமல், ஒரு முழு நிமிடத்திற்கு அமைதியாக இருந்தனர்.

அந்த நிமிடம் முடிந்ததும், “செண்பாம்மா” என்று மெல்ல அழைத்தாள்.

“அப்படிக் கூப்பிடாத!” என்றவர் குரல் கூட, அவள் அழைக்கும் விதத்தை விரும்பவில்லை என்பதைக் காட்டியது.

‘நீங்களுமா?’ என்ற ஓர் கேள்வி பாவையின் நெஞ்சுக்குள் வந்து போனது!

“உன்னை நல்லாத்தான பார்த்துக்கிட்டேன். ஏன் இப்படிப் பண்ண?” என்றவர் குரல் கரகரக்கத் தொடங்கியது.

அமைதியாக நின்றாள்.

” ‘நீ சிவாவைப் புரிஞ்சிக்க, கொஞ்சம் டைம் எடுக்கும்’-ன்னு நினைச்சி, என் பொண்ணுகிட்ட, அவ அப்பாகிட்ட-ன்னு… உனக்காக சப்போர்ட் பண்ணேன் தெரியுமா?” என்று நிறுத்தினார்.

அமைதியாக நின்றாள்.

“இன்னைக்கு சிவா இப்படிப் பேசிட்டுப் போறான்னா, அதுக்கு காரணமே நீதான்!”

“செண்பாம்மா நான் என்ன… ” என்ற கேள்வியை முடிக்கும் முன்பே,

“அப்படிக் கூப்பிடாத-ன்னு சொல்லிட்டேன்! ” என்று கோபப்பட்டவர், “அம்மா-அப்பா இல்லாத பொண்ணு நல்லா பார்த்துக்கிடணும்னு நினைச்சேன். ஆனா, நீ?” என்று இடைவெளி விட்டவர், “எதையும் புரிஞ்சிக்கவே இல்லை” என்றார் வெறுப்புடன்!

மீண்டும் அமைதி, பாவையிடம்!

“நீ வர்றதுக்கு முன்னாடி, சிவா எவ்வளவு சந்தோஷமா இருந்தான் தெரியுமா? நீ வந்தப்புறம், அவன் சந்தோஷமாவே இல்லை”

செண்பகத்தின் இந்த வார்த்தைகளில் பிரவீனுக்கு உடன்பாடு இல்லை. உடனே, “அத்தை” என்றான்.

அதைக் கவனிக்காமல், “சிவா நல்ல பையன். அவனுக்கு இன்னும் கொஞ்சம் நல்ல பொண்ணா பார்த்திருந்துக்கலாம்” என்றார்.

“அத்தை போதும்” என்றான் பிரவீன்.

“இல்லை மாப்பிள்ளை…”

“அத்தை! கோபமா இருக்கீங்க! இப்போ எதுவம் பேச வேண்டாம். ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க” என்கின்ற போது… மதியின் அறையிலிருந்து வெளியே வந்த நளினி, “ம்மா! அண்ணா கூப்பிடுறான். வாங்க” என்றாள்.

உடனே, செண்பகம் சென்றுவிட்டார்.

அந்த அறையில் பிரவீனும் பாவையும்…

பாவையின் அருகில் வந்து நின்றான்.

“பிரவீன் அண்ணா” என்றவள் குரலிலே சோர்வு தெரிந்தது.

“ம்ம் சொல்லு”

“அவங்ககிட்ட பேசிப் பாருங்களேன்” என்றாள் வேதனையாக!

“கண்டிப்பா பேசறேன்! ஆனா, இப்ப வேண்டாம். எல்லோரும் ரொம்ப கோபமா இருக்காங்க. நம்ம என்ன பேசினாலும் கேட்கிற மனநிலையில இருக்க மாட்டாங்க”

“அப்போ எப்போ பேசுவீங்க??” என்றாள் ஏக்கமாக!

“இன்னொருநாள் பேசுறேன்!” என்றவன், “நீ ரெண்டு நாள் பாட்டி வீட்டுல இருந்திட்டு வா! அவங்க கோபம் குறைஞ்சிடும். அதுக்கப்புறம் நானே அவங்ககிட்ட பேசுறேன்”

அமைதியாக இருந்தாள்.

“பாவை! வீட்ல அம்மா அப்பா இருக்காங்க. நான் கிளம்பட்டுமா??” என்று கேட்டான்.

‘ம்ம்ம்’ என்று தலையாட்டினாள். அவனும் கிளம்பிவிட்டான். 

தனியாக நின்றாள்!

சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், ‘இங்கேயே இருக்கவா? அங்கே செல்லவா?’ என்ற தவிப்பில் நின்று கொண்டிருந்தாள்!!

மதியின் அறையைப் பார்த்தாள். கதவு திறந்துதான் கிடந்தது.

‘போய் பேசிப் பார்க்கலாமே?’ என்ற எண்ணம் வந்தது. மெதுவாக நடந்து சென்று எட்டிப் பார்த்தாள்.

சிவாவிற்கு, மூன்று பேரும் சேர்ந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தனர்.

தான், இந்தக் குடும்பத்து உறுப்பினர் இல்லை என்பதை தெளிவாக உணர்த்திய காட்சி, அது!

அப்படியே திரும்பி விட்டாள்.

வரவேற்பறை வந்தாள். கௌசி நின்றுகொண்டிருந்தாள்.

“இங்கேயே இருக்கப் போறியா!?? அவங்கதான் ‘வெளியே போ’-ன்னு சொல்லிட்டாங்கள?! பாட்டி உனக்காக வெயிட் பண்ணறாங்க. கீழே வா” என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.

கௌசி போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள், பாவை.

அந்தப் பார்வையின் அர்த்தம், ‘ஏன் கௌசிக்கு கிடைக்கும் எதுவும் தனக்கு கிடைக்கவில்லை?’ என்பதுதான்!

ஆக! அவளின் எதிர்பார்புகள் எல்லாம் கௌசி என்ற ஒற்றைப் புள்ளியிலிருந்தே ஆரம்பிக்கின்றன!!

ஆறு வயதிலிருந்து பார்த்து வருகிறாள் அல்லவா? அதனால்!!

மேலும்… ஒரு கட்டத்தில் வீட்டிலுள்ள அனைவருமே, அவளை ஒதுக்கத் தொடங்கிய நாட்கள்… அதே நேரத்தில்… இசைக்காக என்று, கௌசியுடன் மட்டும் பேசத் தொடங்கிய நாட்கள்… அன்றிலிருந்து-இன்று வரை… பாவைக்குள் ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறாள், கௌசி! 

சுருக்கமாக… அடைக்கும் தாழில்லாமல் அன்பு வேண்டும் என்று கேட்பவள், அந்த அன்பிற்கு ஒரு வடிவம் வைத்திருக்கிறாள்!!

விரிவாக… இன்னும் தெளிவாக, அவள்தான் சொல்ல வேண்டும். நிச்சயம் சொல்வாள்! தன் பாதிப்பின் பாதகத்தை உணர்ந்த பின்!!

சிவா அறைக்குள் சென்றாள்.

பெட்டியை எடுத்து, புடவைகளை அடுக்க ஆரம்பித்தாள். கண்கள் கரித்தது.

தீடிரென, ‘பாண்டியனை அலைபேசியில் அழைத்துப் பார்க்கலாமே?’ எனத் தோன்றியது.

அதையும் செய்தாள்!

ம்கூம்! சிவா அழைப்பை ஏற்கவேயில்லை! ஏமாற்றமாக இருந்தது!!

மீண்டும் எடுத்து வைக்க ஆரம்பித்தாள். ஆனால்… அறையின் வாசலைப் பார்த்துக் கொண்டே, மெதுவாக எடுத்து வைத்தாள்.  ஒருவேளை… சிவா வந்தால், ஒருமுறை பேசிப் பார்க்கலாமே என்ற எண்ணம்!

ஆதலால் இப்படி!!

அந்தோ பரிதாபம்! இதுவும் ஏமாற்றத்தில்தான் முடிந்தது!!

தன் மீது அக்கறை இருந்திருந்தால், ‘வெளியே போ’ என்று சொல்லிவிட்டு, எப்படி இப்படி இருக்க முடியும்? முதலில் உண்மையான அன்பு இருந்தால் எப்படி அந்த வார்த்தையைச் சொல்ல முடியும்? – இப்படியான கேள்விகள் வந்தன! ‘இங்கே இருக்கவே பிடிக்கவில்லை’ என்ற, தன் வார்த்தையை மறந்துவிட்ட வந்த கேள்விகள்!!

பாதிக்கப்பட்ட மனதின் கேள்விகள், எதிர்பார்ப்புகள்!! புரிதலின்மையின் கீழ் வர வாய்பில்லையோ?!

இதுவரை, தனக்கு ‘உரிமையில்லை’ என்று சொன்னவர்கள் யாருக்கும் தன்னைப் பிடித்ததில்லை! இவனுக்கும் அப்படித்தான் என்று நினைத்துக் கொண்டாள்!!

அவன்தான், ‘எதுவுமே பிடிக்கலை’ என்று சொன்னானே? அதில் தானும் அடக்கம் என்று தன் நினைப்பை நியாபப் படுத்திக் கொண்டாள்.

அவ்வளவுதான்! அதற்கு மேல் தாமதிக்கவில்லை!!

கடகடவென எடுத்து வைத்தாள்.

கிளம்பிவிட்டாள், மீண்டும் உரிமையில்லாத இடத்திற்கே!

வேணிம்மா வீடு

வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தனர்.

பாவை, அவளது அறைக்குள் சென்றிருந்தாள்.

வரவேற்பறையில்…

வரும் வழியிலே… கிரியை அலைபேசியில் அழைத்து, கௌசி அனைத்தையும் சொல்லியிருந்தாள். தாங்கள் மதிக்கும் ஒருவரை வெளியே அனுப்பினான் என்று சிவா மீது அப்படியொரு கோபம் அனைவர்க்கும்! அதே அளவு கோபம் அவன் மனைவி மீதும் வந்தது!!

குடும்பத்தின் அத்தனை உறுப்பினரும் இருந்தனர். வேணிம்மா சோஃபாவில் அமர்ந்திருந்தார். அவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு, கிரியும் மீனாட்சியும் உட்கார்ந்திருந்தனர்.

நடந்ததை, திரும்பத் திரும்ப கௌசி சொல்லிக் கொண்டிருந்தாள். ‘அங்கே ஏன் போகணும்?’ என்று கிரி கலையைத் திட்டிக் கொண்டிருந்தார்.

கொஞ்சம் கொஞ்சமாக பேச்சு பாவையின் பக்கம் சென்றது. ‘பாவையால்தான் இதெல்லாம்’ என்ற ரீதியில், அனைவரின் பேச்சு இருந்தது. சற்று நேரத்தில், அவளைத் திட்டத் தொடங்கினார்கள்.

உடனே, “அவளைப் பத்தி யாரும் ஒரு வார்த்தை பேசக் கூடாது” என்றார் வேணிம்மா.

அவ்வளவுதான்! அதன் பிறகு யாரும் வாய் திறக்கவில்லை!!

அனைவரும் தூங்கச் சென்றனர்.

வேணிம்மா அறை

வேணிம்மா, பாவை… இருவரும் ஒருவருக்கொருவர் முதுகுகாட்டி படுத்திருந்தனர்.

வேணிம்மா…

‘சிவா ஏதோ பேசணும்’ என்று சொன்னானே, ‘அது என்னவாக இருக்கும்?’ என்று யோசித்து மனம் குழம்பியது. ‘இவளுக்கு ஏன் இப்படி?’ என்ற கேள்வி கேட்டு மனம் பாரமானது. ‘கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டோமோ?’ என்ற நினைத்து மனம் வருந்தியது.

வருத்தம் மிகுதியானதில்… கண்களை மூடினதும், கண்ணீர் வடிய ஆரம்பித்தது.

தேன்பாவை….

‘நீயா இப்படி?’ என்பதை விட, ‘நீயுமா இப்படி?’ என்ற வார்த்தைகள் மிகுந்த வலியைத் தரும் அல்லவா?!

தேன்பாவைக்கும் வலித்தது! நிரம்ப வலித்தது!!

கண்கள் மீண்டும் மீண்டும் கரித்தது.

தன் தவிப்புகளை இறக்கி வைக்க தாயின் மடியில்லை! ஆதலால், தலையணையில் இறக்கினாள்! இது இன்று நேற்றல்ல… இங்கு வந்ததிலிருந்தே இப்படித்தான்!!

மனக் கடலில் ஆர்ப்பரிக்கும் கவலைகள் அனைத்தும்… விழிக் கரையில், கண்ணீர் அலைகளாக மாறின!!

பாவையின் அகராதியில், உணர்ச்சிக் குவியல்!! பாண்டியனின் அகராதியில், உப்புக் கரைசல்!!!

இதே நேரத்தில் சிவா வீடு…

மதி உறங்கியிருந்தார். நளினி, அவளது வீட்டுக்குச் சென்றிருந்தாள்.

செண்பகம் அமர்ந்திருந்தார்.

‘வேணிம்மாவின் வயதிற்கு மரியாதை தராமல் விட்டுவிட்டோமோ?’ என்ற கேள்வி கேட்டு மனம் பாரமானது. ‘செண்பாம்மா…’ என்று அழைத்தவளிடம், அவசரப்பட்டு அதிகப்படியாக பேசிவிட்டோமோ என்று மனம் வருந்தியது.

வருத்தம் மிகுதியானதில்… கண்களை மூடினதும், கண்ணீர் வடிய ஆரம்பித்தது.

சிவபாண்டியன்??

அவன் தவிப்புகளை இறக்கி வைப்பதற்கு, தாயின் மடி இருந்தது!!

வேறென்ன சொல்ல??


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!