உருகிடும் உயிர்மெய்கள் 6

உருகிடும் உயிர்மெய்கள் 6
அத்தியாயம் – 6
நீலாங்கரையைத் தாண்டி ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பிரிந்த கிளைச்சாலையில் வண்டியைத் திருப்பினான் ரவீந்தர்.
கடற்கரையை ஒட்டிய பகுதியென்பதால் காற்று பலமாய் தழுவிச் சென்றது.
சுற்றுப்புறத்தை பார்வையால் அளந்தபடியே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.
மீனவ மக்களின் கடலோர கிராமமான இந்த இடத்திற்கு எதற்காக வரச் சொன்னார் புகழ் என்ற எண்ணமே மனதில் ஓடிக்கொண்டிருந்தது அவனுக்கு.
காற்றில் உப்பின் வாசமும் உலர்ந்த மீன்களின் வாசமும் கலவையாய் பரவிக் கிடந்தது.
குடிசை வீடுகளாய் தென்பட்ட பகுதியைத் தாண்டிச் சென்றவன் சற்று தொலைவில் எதிர்ப்பட்ட போலீஸ் வாகனத்தைக் கண்டதும் தனது வண்டியின் வேகத்தைக் குறைத்தான்.
அவனோடு உடன் வந்திருந்த ஜெகனும், “புகழ் சார் எதுக்குடா இங்க வர சொல்லியிருக்காரு. போலீஸ் ஜீப் வேற நிக்குது.”
“தெரியலயே.”
நின்றிருந்த போலீஸ் வாகனம் அருகே தன்னுடைய வாகனத்தை நிறுத்தியவர்களை கான்ஸ்டபிள் ஒருவர் எதிர்கொண்டார்.
“வாங்க, ஐயா அங்க இருக்காரு.” என்றபடி அவர் கடலை நோக்கி நடக்கத் துவங்க ஏதும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அந்த கான்ஸ்டபிளை பின்தொடர்ந்தனர்.
கால் புதையப் புதைய கடற்கரை மணலில் சில நிமிட நடைக்குப் பிறகு சிறு கும்பலாய் தென்பட்ட மக்களும், அங்கே குவிந்திருந்த காக்கி உடைகளும் ஏதோ விரும்பத்தகாத நிகழ்வு அங்கே நிகழ்ந்துள்ளது என்பதை புரிய வைத்தது.
சற்று தூரத்தில் ரவியைப் பார்த்ததுமே வேகமாய் நெருங்கி வந்த புகழின் முகமே நடப்பவற்றை காட்டிக் கொடுக்க,
“சா… சார் என்ன சார் இதெல்லாம்?”
“ரவி இது ஜஸ்ட் ஃபார்மாலிட்டிதான். ஓகேவா.”
“…”
“இன்னைக்கு காலையில இந்த குப்பத்து மக்கள்கிட்ட இருந்து கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் வந்தது. மூனு வயசு மதிக்கத்தக்க குழந்தையோட சடலம் கரை ஒதுங்கி இருக்கறதா…”
“சா…ர்” உதடுகள் சுத்தமாய் உலர்ந்து போக காற்றாய் வந்தது குரல்.
“உடனே நான் ஸ்பாட்டுக்கு வந்துட்டேன். குழந்தையோட முகம் சரியா அடையாளம் தெரியல.”
அடிவயிற்றில் புரியாத அவஸ்தை ஓவெனக் கிளம்ப, உள்ளே தடதடத்த பயத்தில் ரவிக்கு அவ்வளவு காற்றிலும் வியர்க்க ஆரம்பித்தது.
நிற்கவே முடியாமல் தள்ளாடியவனை ஜெகன் தாங்கிக் கொள்ள,
“ரவி டோன்ட் கெட் பானிக். இது ஜஸ்ட் ஃபார்மாலிட்டிதான் ஓகேவா. காணமப் போன உங்க குழந்தை இது இல்லைன்னு நாங்க உறுதிப் படுத்திக்கிட்டுதான் அடுத்த நடவடிக்கை எடுக்க முடியும்.”
“இ…இல்ல அது என் குழந்தை இல்ல.” அரற்றியபடி இரண்டு எட்டுகள் பின்னே வைத்தவனை தாங்கிக் கொண்ட புகழ்,
“நிச்சயமா அது உங்க குழந்தை இல்ல ரவி. ஆனா அதை ஒருதடவை நீங்க பார்த்து உறுதியா சொல்லிடுங்க ப்ளீஸ்.”
“இல்ல என்னால முடியாது. என்னால நிச்சயமா முடியாது சார்.” முகத்தை மூடிக் கொண்டு கதற அவனது கைகால்களோ வெளிப்படையாகவே நடுங்கியது.
“ரவி, ப்ளீஸ் கன்ட்ரோல் யுவர் செல்ஃப். இப்ப கிடைச்சிருக்க குழந்தையோட சடலத்தை அடையாளம் கண்டுபிடிக்கறதுக்கான ஃபார்மாலிட்டி இது.
தொலைந்து போன குழந்தை இது இல்லனு நாங்க உறுதிபடுத்திக்கனும். அதுக்காகதான் உங்களை வரச் சொன்னேன். ப்ளீஸ் கோவாப்ரேட் பண்ணுங்க.”
“என்னால எப்படி சார் முடியும்?” கதறி அழுதவனை ஒருவாறு தேற்றிய புகழ், ரவியை அழைத்துச் சென்று வெள்ளைத் துணியால் மூடி வைக்கப் பட்டிருந்த குழந்தையின் சடலத்தைக் காட்டினார்.
தடதடக்கும் இதயத்தோடு பார்த்தவனுக்கு பார்த்த நொடியிலேயே அது தன் பிள்ளை இல்லை என்பது புரிந்துவிட, மறுப்பாய் தலையசைத்தவன் விரைவாய் விலகி வந்து கடற்கரை மணலில் மண்டியிட்டு அமர்ந்து கதறத் துவங்கினான்.
எங்கோ ஓரிடத்தில் குழந்தை நலமாய் இருக்கும் விரைவில் நம்மிடம் வந்துவிடும் என்று பலமாய் உள்ளிருந்த நினைவு லேசாய் ஆட்டம் கண்டது.
சற்று முன் பார்த்த உயிரற்ற குழந்தையின் உடல், வெகுவாய் உயிரை உலுக்க வாய்விட்டு அழுதவனை தேற்ற முடியவில்லை ஜெகனால்.
“ரவி, ப்ளீஸ் ரவி. நம்ப பாப்பா நல்லா இருக்கும் டா. சீக்கிரம் நம்மகிட்ட வந்துடும். தைரியமா இரு ரவி. நம்பிக்கைய கைவிடாத.”
“நாளுக்கு நாள் நம்பிக்கை குறைஞ்சுகிட்டேதான் போகுது ஜெகன். பூஜா மட்டும் நல்லபடியா எங்களுக்கு கிடைக்கலன்னா நாங்க உயிரோட இருக்கறதுல அர்த்தமே இல்ல.
ஹைய்யோ! என் குழந்தை எங்க எப்படி கஷ்டப்படுதோங்கற நினைப்பே என்னை உயிரோட கொல்லுது ஜெகன்.”
மேலும் மேலும் அழுது புலம்பியவனை தேற்றி வீட்டுக்கு அழைத்து வருவதற்குள் பெரும்பாடாய் போனது ஜெகனுக்கு.
வீட்டினுள் நுழைந்ததுமே புகழ் எதற்காக வரச்சொன்னார் என்று கேள்வி எழுப்பிய தாய் தந்தையிடம் எதையுமே சொல்லாமல் மௌனமாய் உள்ளே சென்றான் ரவி.
இறுகிக் கருத்திருந்த அவன் முகமே விரும்பத்தகாத ஏதோ ஒன்று நிகழ்ந்திருப்பதை பறைசாற்ற, கலக்கமாய் ஏறிட்டவர்களுக்கு நடந்ததை மெல்ல விளக்கினான் ஜெகன்.
அனைவருக்குமே மிகுந்த அதிர்ச்சியாய் போனது. கற்பனையில் அப்படி ஒரு நிகழ்வை நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. நேரே பார்த்துவிட்டு வந்த ரவியின் மனநிலை நன்கு புரிந்தது அவர்களுக்கு.
ஜெகன் சொன்னதைக் கேட்டு உயிரற்ற பார்வையை ரவியின் மீது செலுத்திய நேத்ராவும் எதுவுமே பேசாமல் மௌனமாய் படுத்துக் கண்ணீர் விட, அவளது பேசாத மௌனமே அவனை வெகுவாய் வதைத்தது.
குழந்தையின் நிலை என்னவோ என்று கலங்கி சொர்ணம் வாய்விட்டு அழுக, அங்கு சூழ்நிலையின் கணம் தாள முடியாததாய் இருந்தது.
எங்கள் இருவரின் பாலமே குழந்தைதான். குழந்தை மட்டும் இல்லையென்றால் தனக்குத் தன் குடும்பமும் இல்லை வாழ்வும் இல்லை என்பது நன்கு புரிய, அசைவற்று படுத்திருந்த நேத்ராவின் அருகே சென்று மண்டியிட்டு அமர்ந்தவன் அவளது கால்களைப் பற்றிக் கொண்டு கதறத் துவங்கினான்.
“என்னை மன்னிச்சிடு நேத்ரா. என்னால்தான் எல்லாமே. என்னோட சபலம் என்னோட அலட்சியம், என்னோட திமிர் இதெல்லாம்தான் நம்ம குழந்தைய நம்மகிட்ட இருந்து பிரிச்சிடுச்சி.
நான் பாவி நேத்ரா பெரிய பாவி. பெத்தவங்க செய்யற பாவம் பிள்ளையச் சேரும்னு சொல்லுவாங்களே… என் பிள்ளை என்னல்லாம் கஷ்டப்படறாளோ?
எனக்கு ரொம்ப பயமா இருக்கு. பாப்பா மட்டும் கிடைக்கலன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன். குற்றவுணர்ச்சியே என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக் கொன்னுடும் நேத்ரா.”
தன் கால்களைப் பற்றிக் கொண்டு கதறும் கணவனைப் பார்க்கையில் தாங்க முடியாத அளவுக்குக் கோபம் அவன்மீது இருந்தாலும் அவளுக்குமே அழுகை பெருகி வர,
“என்னை மன்னிச்சிடு நேத்ரா… என்னை மன்னிச்சிடு நேத்ரா…” என்று மீண்டும் மீண்டும் விடாமல் புலம்பியவனைக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு நோக்கியவள்,
“நம்ம பாப்பாவுக்கு எதுவுமே ஆகியிருக்காது. எனக்கு நம்பிக்கை இருக்கு. பூஜா எங்க இருக்கான்னு கட்டாயம் நமக்குத் தெரிய வரும் ரவி. நான் கும்பிடுற கடவுள் நம்மைக் கைவிட மாட்டார். தைரியமா இருங்க ரவி.”
“நம்ப பாப்பா எங்க இருக்கான்னு தெரிஞ்சா போதும் என் உயிரைக் குடுத்தாவது பூஜாவை மீட்டுடுவேன் நேத்ரா.”
“கட்டாயம் கிடைச்சிடுவா ரவி. என் உள்ளுணர்வு சொல்லுது நம்ப பாப்பாவுக்கு எதுவுமே ஆகியிருக்காது. தைரியமா இருங்க ரவி.”
“நம்ம குலதெய்வம் நம்மை கைவிட மாட்டா ரவி. புள்ள கிடைச்சிடுவா. கலங்காதடா!” சொர்ணமும் ரவியைத் தேற்ற, கண்ணுக்குத் தெரியாத கடவுளை மட்டுமே ஆதாரமாய் நம்பி அன்றைய நாள் கழிந்தது.
—தொடரும்…